காந்தமடி நான் உனக்கு-7

 


அத்தியாயம்-7

ரு வருடத்திற்கு முன்னால்...  

ஒரு நாள் மாலை அந்த கார்மென்ட் பேக்டரியின் வேலை நேரம் முடிந்ததன் அறிகுறியாக சைரன் ஒலிக்க,  உடனே அங்கு வேலை செய்த அனைவரும் துள்ளலுடன் தங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு பேக்டரியிலிருந்து வெளியேற ஆரம்பித்தனர்.

தான் செய்து கொண்டிருந்த வேலையை பாதியில் விட மனம் வராமல் அதை முடித்து விட்டே செல்ல வேண்டும் என்று மும்முரமாக தன் வேலையில் கவனமாக இருந்தாள் சத்யா.

ஒடு வழியாக அதை முடித்ததும் தன் கை விரல்களை நீட்டி சொடக்கு எடுத்தவள் கழுத்தையும் இரு பக்கமும் ஆட்டி நெட்டி முறித்தவள் தன் உடலில் இருந்த சோம்பலை அடுத்த நொடி விரட்டி அடித்தாள்.

அதே நேரம் அவளுடைய தோழி சுகன்யா அவளருகில் வந்து இடுப்பில் கை வைத்து முறைத்துக் கொண்டிருந்தாள்.

“ஏன் டி... எரும...எல்லோரும் எப்படா மணி அடிப்பாங்க... வீட்டுக்கு போலாம்னு காத்துகிட்டு இருந்த ஸ்கூல் பசங்க மாதிரி பெல் அடிச்சதும் பைய தூக்கிட்டு உடனே கிளம்பி போயிட்டாங்க.

நீ மட்டும் என்ன இன்னும் மாங்கு மாங்குனு வேலை பார்த்துகிட்டு இருக்க. எல்லாம் வாங்கின காசுக்கு செஞ்ச வரைக்கும் போதும். வாடி போகலாம்...”  என்று முறைத்தாள் சுகன்யா.

அதைக் கேட்ட சத்யாவும் பெரிதாய் ஒரு புன்னகையை தன் இதழ்களில் தவழவிட்டவள்,

“அவ்வளவு தான் டி... இதோ முடிஞ்சிருச்சு...இந்த தலையணை கவர்க்கு ஒரு சைடு மட்டும் ஓரம் அடிக்காமல் இருந்தது. அதையும் முடித்து விட்டேன்...”  என்றவாறு அந்த மின் தையல் இயந்திரத்தை அனைத்து விட்டு உரை போட்டு மூடி வைத்து விட்டு தன் ஹேன்ட் பேக்கை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள் சத்யா.

தோழிகள் இருவரும் அரட்டை அடித்துக் கொண்டே அந்த பேக்டரியில் இருந்து வெளி வந்து சற்று தூரம் நடந்திருந்தனர்.

அப்பொழுது சாலையின் ஓரமாக சிறியதாய் ஒரு கும்பல் கூடியிருந்தது. அதைக் கண்டதும் சத்யா ஆர்வமாகி

“என்னடி அங்க கும்பலா இருக்கு? “  என்றாள் சத்யா தன் அருகிலிருந்த சுகன்யாயிடம்.

“ஹ்ம்ம்ம் வேறென்ன...எவனாவது தண்ணிய போட்டுகிட்டு நடு ரோட்லயே மட்டையாகி இருப்பான். அதுக்கு இந்த கும்பல் சேர்ந்து அவனை தூக்கி விடுவாங்களா இருக்கும்

இந்த நாட்டில் குடிமகன்களுக்கு வேற வேலையே இல்லை...” என்று முறைத்தபடி தன் கழுத்தை நொடித்துக் கொண்டு சத்யாவை இழுத்துக் கொண்டு சென்றாள் சுகன்யா.

அவர்களும் அந்த கும்பலை வேடிக்கை பார்த்தவாறு கடந்து செல்ல சத்யாவிற்கு ஏனோ அப்படியே செல்ல மனம் வரவில்லை.

அங்கு நின்றிருந்தவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து ஏதோ பேசிக் கொண்டனரே தவிர அங்கு விழுந்து கிடந்தவனுக்கு முதலுதவி என்று எதுவும் செய்யவும் இல்லை.

அடுத்து செய்ய வேண்டியதை செய்யாமல்,  சுற்றி நின்று கும்பலாய் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றனர். அதைக் கண்ட சத்யாவிற்கு ஏனோ அப்படியே விட்டுச் செல்ல மனம் வரவில்லை.

மனதை ஏதோ பிசைய, சற்று தூரம் தன் தோழியுடன் சென்றவள்,  சுகன்யாவின் கையை உதறிவிட்டு வேகமாக அந்த கும்பல் அருகில் ஓடி வந்தாள் சத்யா.

கூடவே அங்கு நின்றவர்களை பார்த்து என்னாச்சு என்றாள் பதற்றத்துடன்...

“தெரியலம்மா...ரோட்டு ஓரமா நடந்துகிட்டு வந்தவர் திடீரென்று மயக்கம் போட்டு ரோட்ல விழுந்து விட்டார். நல்ல வேளையாக ஒருவர் அங்கு  நடந்து கொண்டு இருந்ததால் இவரை பிடிக்க முடிந்தது.

இல்லையென்றால் பிளாட்பார்மில் தலை அடித்திருந்தால்... அவ்வளவு தான்..மேல போயிருப்பார்...

இனிமேல் சாலையில் நடந்து போகிறவர்களும் ஹெல்மெட் போட வேண்டும் என்ற சட்டம் கொண்டு வர வேண்டும். அப்பத்தான் இந்த மாதிரி விபத்துக்கள் எல்லாம் நேராமல் தவிர்க்க முடியும்...”  என்று புலம்பியவாறு கொஞ்சமாய் நகர்ந்து சத்யாவிற்கு வழி விட்டார்...

சத்யாவும் ஒரு வித பதட்டத்துடன் அந்த கும்பலுக்குள் தலையை நுழைத்து எட்டிப்பார்க்க, ஏனோ அவள் மனம் அவளையும் அறியாமல் பதைபதைத்தது.

ஒரு நெடியவன்... நல்ல திடகாத்திரமான உடல் தான்... ஆனால் பல நாட்கள் எண்ணெய் கண்டிராத பறட்டை தலையும்,  அடர்ந்த கேசமும் முகத்தில் பல நாட்கள் சவரம் செய்யாமல் விட்டுவந்த தாடியும்,  சீர் செய்யாமல் ஒழுங்கற்று கிடந்த மீசையும்,  நீளமாக வளர்ந்து அவன் முகமே தெரியாத அளவுக்கு மறைத்திருந்தது.   

அவன்  ஆடையோ அவனை விட இன்னும் மோசமாய் இருந்தது. சாயம் வெளுத்த ஜீன்ஸ்...அதற்கு மேல் வெளுத்துப் போன அழுக்கேறிய ஒரு பழுப்பு கலர் டி-ஷர்ட்டும் அணிந்திருந்தான்.  

அவனுடைய முகம் சரியாக தெரியாவிட்டாலும்,  உடல் அமைப்பை பார்த்து திடகாத்திரமான ஆள் தான் என்று சத்யா அளவெடுத்து கொண்டிருக்க, அவன் அருகில் நின்றிருந்த மற்றொருவரோ

“ஹ்ம்ம்ம் பார்த்தா சிறு வயது போலத்தான் இருக்கு. இந்த காலத்து பசங்கள கொஞ்சமும் கண்டிக்கவே முடியல. பாரு... முப்பது வயது கூட இருக்காது. அதுக்குள்ள இப்படி தண்ணி அடிச்சுட்டு ரோட்டில் விழுந்து கிடக்கிறானே... கொஞ்சம் கூட வெட்கமே பொறுப்போ  இல்லை...”  என்று அருவருப்பாய் முகத்தை சுளித்தார்.  

அதைக் கேட்டதும் ஏனோ மீண்டும் சத்யாவிற்கு மனதை பிசைந்தது.

ஒருவேளை அவர் சொல்ற மாதிரி இவன் ஒரு தண்ணி கேசா? என்று யோசித்தவள் அவசரமாய் அவன் முகத்தை உற்றுப் பார்க்க, அவன் கண்கள் இன்னும் மூடி இருந்தாலும் முகத்தில் எந்த உணர்வும் தெரியவில்லை.

ஏனோ அவன் தோற்றம் அவன் குடித்து விட்டுதான் விழுந்து கிடக்கிறான் என்பது போலவும் இல்லாததால், அதைவிட இப்பொழுது அவனுக்கு முதலுதவி செய்ய வேண்டும்.

பிறகு அவன் எப்படி பட்டவன்... ஏன் அப்படி கிடக்கிறான்...என்று ஆராய்ச்சி பண்ணிக் கொள்ளலாம்... என்று எண்ணியவள்,  உடனே அங்கு சுற்றி இருந்தவர்களை எல்லாம் கொஞ்சமாய் வழிவிட்டு நகர்ந்து  நிற்கச் சொன்னாள்.

“காற்றோட்டம் வரவேண்டும்...  கொஞ்சம் வழி விடுங்க...”  என்று அனைவரையும் தள்ளி நிறுத்தியவள் தன் ஹேன்ட் பேக்கில் இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து அவன் முகத்தில் பளீரென்று தண்ணியை தெளித்தாள்.

அதன் குளிர்ச்சியிலும் அவள் சுளீரென்று அடித்த வேகத்திலும் லேசாக இமைகளை திறக்க முயன்றான். தன் கண்களை சுருக்கி கஷ்டப்பட்டு இமைகளை திறக்க, அடுத்த நொடி அப்படியே ப்ரீஸ் ஆகி போனாள் சத்யா.  

அந்த கண்களில் இருந்து ஒரு வித ஏக்கம்,  சத்யாவை என்னவோ செய்தது.

அதுவும் அந்த கண் அவளையும் அறியாமல் அவளை உள்ளே இழுத்துக் கொள்ளும் ஆழியை போல மெதுமெதுவாய் திறந்த அவன்  கண்களுக்குள் அவளையுமறியாமல் கொஞ்சம் கொஞ்சமாய் தொலைந்து கொண்டிருந்தாள்.

“ப்பா....என்ன கண்ணு டா இவன் கண்ணு....” என்று உள்ளுக்குள் வியந்தவாறு அவனையே குறுகுறுப்போடு பார்த்து கொண்டிருந்தாள்.

பொதுவாக பெண்களின் கண்கள் தான் அழகு...  ஆழமானது என்று கேள்விப்பட்டு இருக்கிறாள்.  ஆனால் இவன் கண்களுக்கும் அதே சக்தி இருந்தது போல.

பார்த்தவுடன் மற்றவர்களை வசீகரிக்கும் அதே காந்த கண்கள்....  ஒரு நொடி அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவள், அவள் உள்ளே ஏதோ ரசாயன மாற்றம் நிகழ்வதை போல இருக்க,  அடுத்த நொடி தன் தலையை உலுக்கிக் கொண்டாள்.

பின் மெதுவாய் அவள் கன்னத்தை தட்டி

“சார்.... சார்.... எழுந்திருங்க....”  என்று அவனை எழுப்பினாள்.

அவளின் மெல்லிய வெண்டை போன்ற நீண்ட பிஞ்சு விரல்கள் அவன் தாடையில் பட்டதும் அவனுக்கும் உடலெல்லாம் சிலிர்த்துப் போனது போல.

ஒரு நொடி அவன் உடல் சிலிர்த்துக் குலுங்கியது. அவனும் கொஞ்சமாய் தன் கண்களை சுருக்கி, கஷ்டப்பட்டு திறந்தவன் அருகில் நின்றிருந்த சத்யாவை கண்டு ஒரு நொடி திகைத்து அடுத்த நொடி அடிபட்ட பார்வை பார்த்தான்.

அந்த பார்வையில் கொஞ்சமும் கள்ளத்தனம் இல்லை...காமவெறி இல்லை... குடித்துவிட்டு விழுந்து கிடக்கும் போதை இல்லை. மாறாக தாயை தேடும் குழந்தையின் பாவம். அன்பை தேடும் ஒரு ஆன்மாவின் பாவம் மட்டுமே...

அதைக் கண்டதும் ஏனோ அவள் மனம் பாகாய் உருகி விட்டது. உடனே அவள்  கையில் இருந்த வாட்டர் பாட்டிலை அவன் வாய்க்கு அருகில் கொண்டு வந்தவள்  

“கொஞ்சம் தண்ணி குடிங்க சார்.... “ என்று அவன் வாயில் புகட்ட,  அவனும் வாயை திறக்க கஷ்டப்படுபவன் போல ரொம்ப கஷ்டப்பட்டு வாயைத் திறந்தான்.  

அவன் முகம் எல்லாம் ரோமத்தால் சூழ்ந்து முகம் தெரியாவிட்டாலும் கொஞ்சமாய் வாய் திறக்க, அப்பொழுது தெரிந்த அவனுடைய வரிசையான முத்துப் பற்கள் இன்னும் அவளை கவர்ந்திழுத்தது.

டூத் பேஸ்ட் விளம்பரத்திற்கு வரும் மாடல் போல அவ்வளவு அழகாய் வெள்ளையாய் வரிசையாய் அடுக்கி  வைக்கப்பட்டதை போல அழகாக வீற்றிருக்க, அதையே ஒரு நொடி ரசித்துப் பார்த்தவள் மீண்டும் தன்னைத் தானே கொட்டிக் கொண்டு தண்ணியை அவனுக்கு புகட்டினாள்.

அதோடு அவன் கண்களிலிருந்து அவன் ஒன்றும் குடித்து விட்டு விழுந்து கிடக்கவில்லை என்பது புரிய, அவளையும் அறியாமல் ஒரு நிம்மதி வந்து சேர்ந்தது.

பின் எதற்காக இப்படி விழுந்து கிடக்கிறான் என்று அவசரமாய் யோசித்தவள்,  அவன் முகத்திலும் கண்களிலும் தெரிந்த பசியை கண்டு கொண்டாள்.  

பல நாட்கள் சாப்பிடாதவன் போல அவன் முகமும் கண்களும் சோர்ந்து போய் வெளுத்து கிடந்தது.

உடனே தன் கைப்பையை எடுத்து,  திறந்து அதில் இருந்த பர்ஸ் ஐ எடுத்தவள்,  அதிலிருந்து ஒரு பத்து ரூபாய் தாளை எடுத்து அருகில் இருந்தவரிடம் கொடுத்தவள்  

“அண்ணே...ஒரு டீ வாங்கி வாங்க... சர்க்கரை கொஞ்சம் தூக்கலா போட சொல்லுங்க. இவர் பசியில் தான் மயக்கம் போட்டு விழுந்து விட்டார். குடிச்சுட்டு எல்லாம் இல்ல...”  என்க,  அவரும் ஒரு வயது பெண் உதவி கேட்க மறுக்க முடியாமல்,  அவளுக்கு உதவும் விதமாய் அருகில் இருந்த கடைக்கு ஓடிச் சென்றார்.

அதே நேரம் மற்றவர்களிடம் சொல்லி அவனை தூக்கி அமர வைக்க சொல்ல,  அடுத்த நொடி ஆளுக்கொரு உதவியாய் செய்ய,  கீழே விழுந்து கிடந்தவனை தூக்கி அந்த சாலையின் ஓரமாக சாய்த்து அமர வைத்தனர்.

அதே நேரம் மற்றொருவர் டீ வாங்கி வந்திருக்க, அதை அவன் கையில் கொடுக்க அவனோ கையை கூட உயர்த்த முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தான்.  

பின் அவளாகவே அவன் வாயில் வைத்து அந்த டீயை குடிக்க வைக்க, அவனும் கொஞ்சம் கொஞ்சமாக கஷ்டப்பட்டு அந்த டீயை அருந்தினான்.

சூடான டீ உள்ளே சென்றதும் கொஞ்சம் தெம்பு வந்தது போல இருக்க,  அவன் கண்களிலோ அவளுக்கு ஒரு பெரிய நன்றி உணர்வு பளிச்சிட்டது.

அவன்  தெளிந்து விட்டான் என்று தெரிந்ததும் அதுவரை சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த  மற்றவர்கள் ஆளுக்கொரு அட்வைஸை அவனுக்கு கொடுத்து விட்டு கிளம்பிச் சென்றனர்.  

சத்யா மட்டும் ஏனோ அங்கிருந்து செல்லாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.  அவள் தோழி சுகன்யாவோ  அவள் அருகில் வந்து

“ஹே... வாடி போகலாம்... அதுதான் அவன்.... சாரி... அவர் எந்திரிச்சு உட்கார்ந்து விட்டார் இல்லை. இனிமேல் அவரை பார்த்துக்குவார். அவர் எப்படி போனால் என்ன? நமக்கு எதுக்கு வம்பு... வா போகலாம்...”  என்று சத்யாவின்  கை பிடித்து இழுக்க, சத்யாவின் கால்களோ அசைய மறுத்தன.

அவளையே பாவமாக, ஏக்கமாக பார்த்து கொண்டிருந்த அவன் கண்களோ,  காந்தம் போல அவளை கட்டி இழுக்க,  அவன் முகத்தில் தெரிந்த அந்த பாவமான லுக்கு வேறு அவனை விட்டு செல்ல அவளால் முடியவில்லை.

ஒரு நொடி அதை நினைத்து அவளுக்கே ஆச்சரியம் தான்.

இந்த மாதிரி எத்தனையோ பேர்க்கு  உதவி செய்திருக்கிறாள்.  ஆனால் அதெல்லாம் ஒரு மனித நேயத்தால்...

அவர்களுக்கு தேவையானதை செய்து முடித்ததும் உடனே விலகி சென்று விடுவாள்.  ஆனால் ஏனோ இவனை அப்படி விட்டுச் செல்ல அவளுக்கு மனம் வரவில்லை. அது ஏன் என்று அவளுக்கும்  புரியவில்லை.

ஆனாலும் தோன்றுகிறது தான் மனதில் ஒரு கரிசனம்...முழு மொத்த அக்கறை...அவன் மீதான ஒரு பாச பிணைப்பு அவளையும் அறியாமல் அங்கே பின்னி கொண்டதுதான்...

ஆனால் அதை மறைத்து கொண்டு சுகன்யாவை  பார்த்தவள்

“ஹே... சுகா....பார்ப்பதற்கு ரொம்ப பாவமாக இருக்கிறார் டி.  இப்படியே எப்படி விட்டுச் செல்வது? “  என்றாள் யோசனையுடன்.

“என்னது? பாவமா இருக்க?  அதற்காக நாம் என்ன செய்ய முடியும்?. ஏதோ ரோட்ல விழுந்து கிடந்தவனை அப்படியே விட்டுப் போகாமல் நீதான் அன்னை தெரசா மாதிரி கருணை கரம் நீட்டி அவரை காப்பாற்றி தூக்கி அமர வைத்து விட்டாயே...

இனி அடுத்தது அவர் பாடு. அவர் பாட்டை அவர் பாத்துக்குவார். நாம வா போகலாம். லேட்டாயிடுச்சு...”  என்று மீண்டும் தன் தோழியின் கைப் பற்றி இழுத்தாள் சுகன்யா.

“ஒரு நிமிசம் இரு டி... ஒரு வேளை அவர் எங்கே போகணும் என்றாவது கேட்டு விட்டு அங்கே ஆட்டோவில் அனுப்பி வைத்து விட்டு வந்து விடுகிறேன்...” என்று தோழியை சமாதானம் செய்தவள் மீண்டும் அவன் அருகில் குனிந்து

“சார் நீங்க யாரு... ?  எங்க போகணும்..?” என்று மெல்லமாய் கரிசனத்துடன் அவனிடம் வினவ,  அவனோ ஒரு வெறித்த பார்வையை  மட்டும் செலுத்தினான்.

அதை கண்டவளுக்கு திக்கென்றது...  

அப்போ அவனுக்கு ஏதோ பிரச்சனை என்பது புரிய,  இன்னுமே அக்கறை பட்டு போனாள்  பெண்ணவள்.

“சரி...நீங்க எங்க போகணும் என்று சொல்லுங்கள். உங்களை அங்கேயே டிராப் பண்ணிடறோம்...  என்க அதைக்கேட்ட சுகன்யாவோ கடுப்பாகி அவளைப் பார்த்து முறைத்தாள்.

சத்யாவும் கண்களால் அவளிடம் கெஞ்சலாய் சமாதானம் சொல்லியவள் மீண்டும் அவன்  புறமாய் திரும்பினாள்

“சார்.... நீங்க எங்கே போகணும்...? “  என்று மீண்டும் கேட்க, அவனோ மீண்டுமாய் அதே வெறித்த பார்வை தான்.

அதை கண்டு யோசனையானவள்,  அவனை பார்த்தால் வாயை திறந்து எதுவும் சொல்பவன் போல இல்லை என புரிய அவசரமாய் யோசித்தவள் அந்த முடிவை எடுத்தாள்.   

“சரி சார்....இப்போதைக்கு எங்க வீட்டுக்கு வாங்க. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு, நல்லா சரியானதும் நீங்க போக வேண்டிய இடத்துக்கு போகலாம்...”  என்க

அதைக்கேட்ட சுகன்யாவோ முழு மொத்தமாய் அதிர்ந்து போனாள். சத்யாவின் காதருகில் குனிந்தவள்

“நீ என்ன லூசா டி... ரோட்ல விழுந்து கிடக்கிறவனை எதுக்கு  வீட்டுக்கு கூட்டிகிட்டு போறேனு சொல்ற... இவன் யாரு , எப்படிபட்டவன் என்று எதுவும் தெரியாது...

சொல்ல முடியாது.. திருடனா கூட இருக்கலாம். இப்பதான் ரூம் போட்டு டைப் டைப்பா யோசித்து வித்தியாசமா திருடறானுங்களே...

இப்படி ரோட்ல விழுந்து கிடக்கிற மாதிரி விழுந்து கிடந்து உன்னை  மாதிரி ஒரு இ.வா வந்து உதவி செய்தால் அதில் இருந்து எதுவும் தேறுமா என்று ப்ளான் போட்டிருப்பான்.

நீ எதுக்கு தேவை இல்லாமல் வெளில போற சனியனை எடுத்து பனியனுக்கு உள்ள விட்டுக்கிற மாதிரி தேவை இல்லாத தலைவலி எல்லாம் இழுத்து உன் மண்டைக்குள்ள விட்டுக்கற.

பேசாமல் இவனை இப்படியே விட்டுவிட்டு வாடி... போகலாம்... “ என்று பல்லை கடித்தவள் சத்யாவை முறைக்க,  சத்யாவோ அதை கண்டு கொள்ளாமல் அங்கு வந்த ஆட்டோவை கை காட்டி நிறுத்தி அந்த ஆட்டோ டிரைவரின் உதவியால் மெல்ல அவனை எழும்ப வைத்து ஆட்டோவில் அமர வைத்தவள் சுகன்யாவையும் அழைத்துக் கொண்டு அருகில் இருந்த தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

அன்று கசங்கிய ஆடையும் முகத்தில் தொங்கிய தாடியுமாய் பார்ப்பதற்கே பஞ்சத்தில் அடிபட்டவனாய் இருந்தவன் தான் இப்பொழுது கம்பீரமாய், ஆணழகனாய்,  பல மில்லியன் டாலர்கள் புரளும் மிகப்பெரிய தொழிலதிபன் ஆரவ் என்றால் எப்படி ஒத்துக் கொள்வாளாம்.

மற்றவர்கள் பார்வைக்கு அந்த ஆரவ், அவளுடைய அமுதன் போல இருந்தாலும் அவளின் அறிவு படி யோசித்தால் கண்டிப்பாக அவர் அவன் இல்லை... என்று மீண்டும் மீண்டும் தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள் சத்யா...

அவனை,  தான் அன்று காப்பாற்றியதும் தைரியமாக மூன்று பெண்கள் இருக்கும் வீட்டிற்கு அழைத்து வந்ததும் ஏன் என்று இன்று வரைக்குமே புரியவில்லை அவளுக்கு.

சில உணர்வுகள் அறிவுக்கு தெரியாவிட்டாலும் நம் மனதிற்கு தெரிந்துவிடும்.

அப்படித்தான்... அவளுடைய எதிர்காலமே அவனாய்,  அவன் மொத்தமாய் அவளுடையவன் என்பதாய் அவள் மனம் அவளையும் அறியாமல் அவனை பார்த்த நொடியிலேயே அவன் மீது படர்ந்து விட்டது.

அதனால் தான் மற்றவர்கள் கண்டு கொள்ளாமல் சென்றவனை அவள் அக்கறையுடன் கவனித்து தன் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தாள் சத்யா....

அப்படி அன்று கண்டு கொண்ட பொக்கிஷத்தை இன்று தொலைத்து விட்டாளே என்று பெண்ணவள் மனம் அடித்து கொண்டது.

“வந்து விட மாட்டானா? என் அமுதன் என்னிடமே வந்துவிட மாட்டானா? “ என்று மீண்டுமாய் அவள் மனம் அடித்து கொண்டது.


 

Comments

  1. Super mam. When will u intro amudhan mam. I am your big fan

    ReplyDelete

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!