காந்தமடி நான் உனக்கு!!-8

 


அத்தியாயம்-8

 

த்யாவைப் பற்றி தெரிந்து இருந்ததால்,  அவள் அன்னை வளர்மதியும் சத்யா புதிதாக ஒரு ஆளை வீட்டிற்கு அழைத்து வந்ததை கண்டு மிரண்டு போகவில்லை.

மாறாக அமுதன் முகத்தை பார்த்ததும் அவருக்குமே பாவமாக இருக்க,  பல நாட்கள் சாப்பிடாத களைப்பு அவன் முகத்தில் தெரிய, ஒரு அன்னையாய் அவர் மனம் உருகி விட்டது.

முழு மொத்த கரிசனத்துடன் அவனை வரவேற்று உள்ளே அழைத்து வந்து அமர வைத்தவனை கண்டதும் இன்னுமே உருகிப் போனார்.

இது மாதிரி வாரம் தோறும் ஏதாவது ஒரு நாய்க்குட்டி அவர் வீட்டிற்கு அடைக்கலம் வந்துவிடும். எங்கேயாவது ஒரு நாயோ பூனையோ போக இடம் தெரியாமல் முழித்துக் கொண்டு நின்றால் உடனே அதை தூக்கிக் கொண்டு வந்து விடுவாள் சத்யா.

இத்தனை நாட்களாக நாய்க் குட்டியை, பூனைக்குட்டியை  அழைத்து வந்தவள் இன்று முதன் முதலாய் ஒரு ஆண் மகனை அழைத்து வந்திருக்க அவர் முகத்திலும் யோசனை படர்ந்தது.

ஆனாலும் அதை பின்னுக்குத் தள்ளி தன் மகளை பார்த்தவர்

“என்னாச்சு சத்யா?  யார் இவர்? “  என்று விசாரிக்க, சத்யாவும் நடந்ததை சொன்னாள்.

உடனே அவரின் தாயுள்ளம் இன்னுமாய் விழித்துக் கொள்ள,  

“கண்டிப்பா இது பசி மயக்கமா தான் இருக்கும். இவரை பார்த்தால் எதுவும் சாப்பிடாத மாதிரி இருக்கு. இரு வர்ரேன்...” என்றவர் சமையலறைக்கு ஓடிச் சென்று அவர் செய்து வைத்திருந்த சிற்றுண்டியை எடுத்து வந்தார்.  

அன்று தன் மூத்த மகளுக்கு பிடிக்கும் என்று பஜ்ஜி செய்திருந்தார். அதை ஒரு தட்டில் வைத்து எடுத்து வந்து அவனிடம் கொடுக்க அவன்  கண்களிலோ அப்படி ஒரு கொலைபசி...

வேண்டாம் என்று மறுக்க கூட தோன்றாமல் ஆவலுடன் அதை வாங்க முயல,  அவன் கரங்களோ அவனுக்கு ஒத்துழைக்க வில்லை.

கைகளை கூட தூக்க முடியாமல் சோர்ந்து போக,  உடனே சத்யா அந்த தட்டை வாங்கி அவனுக்கு ஒரு பஜ்ஜியை எடுத்து ஊட்டினாள்.

அதை கண்டவன்  கண்களோ  பெரிதாக விரிந்தது.

அது பஜ்ஜியின் டேஸ்ட் நன்றாக இருந்ததால் வந்த ஆச்சர்யமா?  இல்லை அவளின் கரிசனமான அக்கறையால்  வந்ததா என்று அவளுக்கும் புரியவில்லை.

எப்படியோ அதை சாப்பிட வைத்தவள் மீண்டும் சூடான டீயை அவனிடம் கொடுத்து குடிக்க வைத்தவள் அவன் கொஞ்சமாய் தெளிந்ததும்  

“சார்.... இப்பொழுது எப்படி இருக்கு? “ என்று வினவ அவனும் வார்த்தை எதுவும் பேசாமல் தலையை மட்டும் பரவாயில்லை என்று அசைத்தவன் கண்களில் மீண்டும் அதே நன்றி உணர்ச்சி.

பார்வையாலயே அவளுக்கு நன்றி உரைத்தான்.

அவன் வாய் திறந்து பேசாததை கண்ட சத்யாவோ யோசனையாக

“ஒரு வேளை இவர் வாய் பேச முடியாதவரோ? அதனால் தான் எதுவும் பேச முடியலையா?”  என்று அவசரமாக யோசித்தவள் அதை எப்படி அவனிடமே கேட்பது என்று சங்கடப் பட்டுக் கொண்டு அமைதியாக நின்று கொண்டாள்.

அடுத்ததாய் அவள் அன்னை தான் அவனை கொஞ்ச நேரம் படுத்து ஓய்வெடுக்க சொல்ல, அங்கிருந்த ஒற்றை சோபாவில் அவனும் கால் நீட்டி படுத்து நன்றாக உறங்கி போனான்.  

மாலை உறங்க ஆரம்பித்தவன் இரவு நேரத்தில் தான் கண் விழித்தான். அடித்து போட்டதை போல அப்படி ஒரு தூக்கம் அவனிடத்தில்.

பல நாட்கள் சாப்பிடாததை போல,  தூங்கியும் பல நாட்கள் ஆனது போல அப்படி உறங்கினான்.

நீண்ட நேரம் கழித்து கண் விழித்தவன்,  அவன் எதிரில் சத்யா கையை பிசைந்து கொண்டு நின்றிருப்பதை பார்த்து யோசனையுடன் பார்வையால் என்ன என்று வினவ,  

அவளோ

“பாருடா...பார்வையாலயே நம்மளை விசாரிக்கிறான்...சரி.. போனால் போகுதுனு பாவம் பார்த்து உதவி செய்தா. இப்ப நமக்கே தலைவலியா இருப்பான் போல... “ என்று மனதுக்குள் திட்டி கொண்டவள் 

“யோவ்...அறிவிருக்கா உனக்கு... நீ பாட்டுக்கு வந்து என்னவோ உன் வீடு மாதிரி சாப்பிட்ட...  அடுத்து நீட்டி படுத்துட்ட... ஆமா... நீ யாரு? உன் பேர் என்ன? உன் ஊர் என்ன? உன் அட்ரஸ் என்ன? சொல்லு...  நானே கொண்டு போய் விட்டு வருகிறேன்... “  என்று பொரிந்தாள் சத்யா.

அதுவரை அக்கறையாக நடந்து கொண்டவள் இப்பொழுது இப்படி முறைப்பதற்கான காரணம் புரியாமல் அவளையே கூர்ந்து பார்த்தான்...

அவனின் கூரான, ஆழ்ந்த பார்வை அவளை என்னவோ செய்தது.

இதுவரை எத்தனையோ ஆண்களிடம் சகஜமாக பழகி இருக்கிறாள். வேலை செய்யும் இடத்தில் கூட அவளுக்கு ஆண் நண்பர்கள் தான் அதிகம்.

அனைவருடனும் ஜாலியாக அரட்டை அடிப்பவள்,  வாய்க்கு வாய் எதிர்த்து பேசுபவள், அனைவர் பார்வையும் நேர்கொண்டு எதிர்கொண்டு திருப்பி பதிலளிப்பவள்...

ஏனோ அவனின் அந்த கூரிய,  ஆழ்ந்த பார்வைக்கு வாயடைத்துப் போனாள்.  அவனின் காந்த பார்வை அவளின் மனதின் அடி ஆழம் வரை சென்று தொடுவதை போல ஒரு பரவசம் அவள் உள்ளே.

ஆனால் ஒரு நொடிதான்...அடுத்த நொடி தன் தலையை உலுக்கி கொண்டவள்

“ப்ப்பா...என்ன பார்வை... இவனோட பார்வை...” என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டவள் வரவழைத்த கோபத்துடன் அவனைப் பார்த்து முறைத்தவள்

“ஹலோ... மிஸ்டர்...இங்க என்ன லுக்கு?  கேள்வி கேட்டா முதலில் பதில் சொல்லனும்.  அதை விட்டுட்டு என் மூஞ்சியில என்ன இருக்குனு இப்படி பார்க்கறீங்க...  

“உங்க பேர் என்ன?  அட்ரஸ் என்ன? “ என்று மீண்டும் அவனை முறைத்தவாறு வினவினாள்.

அவனும் மீண்டுமாய் ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்துவிட்டு வேதனையுடன் அவன் பார்வையை மாற்றிக் கொண்டான்.  ஆனால் வாயைத் திறந்து அவனைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.

அதில் கடுப்பான சத்யா மீண்டும் பொரிய ஆரம்பித்தாள்.

“யோவ்...ஒரு மனுஷி...இப்படி காட்டு கத்தல் கத்திகிட்டு இருக்கேன்.  நீ பாட்டுக்கு வாயை திறக்காமல் கம் போட்டு ஒட்டின மாதிரி உட்கார்ந்து இருக்க.

வாயைத் திறந்து பதில் சொல்லுயா?  ஒருவேளை அந்த சுகா சொன்னது தான் உண்மையோ?”  என்று சந்தேகமாக மேலிருந்து கீழாக அவனை அளவெடுத்து ஆராய்ச்சி பார்வை பார்க்க,  அவனும் பார்வையாலேயே அந்த சுகா என்ன  சொன்னாங்க என்றான்.

அவன் பார்வையின் அர்த்தம் எப்படித்தான் இவளுக்கு மட்டும் சரியாக புரிகிறதோ? அவனை நேராக பார்த்தவள்

ம்கூம்...இந்த பார்வைக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை...” என்று  கழுத்தை நொடித்தவள்

“நீ ஒரு திருடனாம்...ரோட் ல மயங்கி விழற மாதிரி விழுந்து யாராவது இ.வா மாட்டினால் உடனே கிடைச்சதை ஆட்டைய போட்டுகிட்டு போயிடுவியாம்.  உன்னை வீட்டிற்கு கூட்டி வர வேண்டாம் என்று சொன்னாள்.  

நான்தான் அவள் பேச்சை கேட்காமல் உன்னை இங்கே கூட்டி வந்தேன். இப்ப பார்த்தா நீ உன்னை பற்றி வாயைத் திறக்க மாட்டேங்குற. அப்ப கண்டிப்பா அவ  சொன்னது தான் உண்மை. நீ திருடனா? இல்ல நல்லவனா? “  என்று அவனை பார்த்து முறைத்தவாறு கேட்க,  

அதுவரை அழுத்தமாய் இறுகி மூடியிருந்த அவன் இதழ்கள் முதல் முறையாய் மெல்லமாய் விரிந்து,  வெண் பற்கள் தெரிய அழகாய் புன்னகைத்தான்.

அதை கண்டதும் மயங்கி விழாத குறைதான் சத்யாவிற்கு.

ஒரு ஆணின் சிரிப்பு கூட இந்த அளவுக்கு கவர்ச்சிகரமாக இருக்குமா என்று அப்பொழுது தான் உணர்ந்தாள்.

அந்த அளவுக்கு வெண்ணிறப் பற்கள் பளீரென்று மின்ன,  அவன் இதழில் தவழ்ந்த மெல்லிய புன்னகையை கண்டு அவள் இதயம் தாறுமாறாக எகிறியது.

அவளுக்கே  தன்னை நினைத்து ஆச்சரியமாக இருந்தது.

“என்ன ஆச்சு எனக்கு?  ஏன் இப்படி அவனின் ஒவ்வொரு அசைவுக்கும் மெய் மறந்து போகிறேன்?  இல்லை... இவன் கிட்ட ஏதோ ஒரு மேஜிக் இருக்கு... என்னை மெஸ்மரைஸ் பண்ண பார்க்கிறான்.

காந்தமாய் என்னை இழுத்து கட்டிப்போட பார்க்கிறான்.  அவன் எண்ணம் நிறைவேறக் கூடாது... இந்த சத்யா அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் அடங்க மாட்டா...” என்று தலையை சிலுப்பிக் கொண்டவள் மீண்டும் அவனை பார்த்து முறைத்து

“ஹலோ...இளிச்சது போதும். பல்லு சுளுக்கிக்க போகுது. நான் என்ன ஜோக்கா சொல்றேன்.  இப்ப எனக்கு உண்மை  தெரிஞ்சாகனும்...நீ திருடனா?  இல்லையா? “  என்று அவனிடமே கேட்க அப்பொழுது தான் பக்கத்து வீட்டிலிருந்து திரும்பி வந்திருந்த அவள் தங்கைகள் இருவரும் களுக் என்று கிளுக்கி சிரித்தனர்.

அவர்களின் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவள்

“என்னங்கடி சிரிப்பு? “  என்று முறைக்க உடனே அவள் தங்கைகள் சிரிப்பை அடக்கிக் கொண்டவர்கள் தன் அக்காவை பார்த்து

“நீ என்ன  லூசாக்கா? யாராவது நான் தான் திருடன் என்று ஒத்துக்குவாங்களா?  அறிவில்லாமல் நீ போய் அவர்கிட்டயே நீ திருடனா  இல்லையா  என்று கேட்டால் அவர் என்ன  சொல்வாராம்? “  என்று முறைத்தாள் வித்யா.

அப்பொழுது தான் என்ன கேட்டு வைத்தாள் என்பது சத்யாவிற்கு உறைத்தது.

“அதுக்காகத்தான் இந்த இடிச்ச புளி அப்படி ஒரு சிரிப்பை சிரித்தானா? சே...இப்படி லூசுத்தனமா உளறி வச்சிருக்கேனே...” என்று முகம் கன்றிப் போனாள்.

ஆனாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கணக்காய் தன் கெத்தை விடாமல் முறுக்கி கொண்டவள்

“அதெல்லாம் எனக்கு தெரியும் டி.  அப்படி கேட்டாலாவது ஏதாவது வாயைத் திறந்து சொல்றாரானு பார்க்கலாம் என்று தான் கேட்டேன்...இப்ப பார்.. வாயை திறந்து பேசவில்லை என்றாலும் ஏதோ சிரிக்க வாச்சும் செய்தாரே...”  என்று சமாளித்தாள்

“ஓகே ஓகே நம்பிட்டோம்...கீழ விழுந்தாலும் உன் மீசையில் மட்டும் மண்ணு ஒட்டாதே...“  என்று கிளுக்கி சிரித்தவர்கள் தன் அக்காவுடன் பேசியவாறு ஆர்வமாக அவனருகில் வந்து

“ஹலோ சார்... என் பெயர் வித்யா...இவ பெயர் நித்யா.. என் அக்கா பெயர் சத்யா...உங்க பெயர் என்ன? “  என்று ஆர்வமாய் கேட்க, அவனும் அவர்களை பார்த்து நட்பாய் புன்னகைத்தவன் மெல்ல தன் இதழ் பிரித்து ஆ.... என்று ஆரம்பித்தவன் அப்படியே நிறுத்திக் கொண்டான்.  

அதைக் கேட்ட கடைக்குட்டி நித்யாவோ  

“என்னது? ஆ...னு ஒரு பெயரா?  கேள்விப்பட்டதே இல்லையே... வித்தியாசமா இருக்கே..! “  என்று தன் தாடையில் கை வைத்து யோசிக்க அதைக் கேட்டவனோ மீண்டுமாய் கலகலவென்று வாய்விட்டு சிரித்தான்.  

அதுவரை இறுகிப் போய் அமர்ந்திருந்தவன் முதல் முறையாக கலகலவென்று வாய்விட்டு சிரிக்க,  அதை பார்த்த மூன்று பெண்களும் ஆ வென்று வாயைப் பிளந்தனர்.

அவ்வளவு ஏன்...சமையலறையிலிருந்து வெளியே வந்த வளர்மதி கூட அவன் சிரிப்பில் கட்டுன்டவராய் மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

சத்யாவிற்கோ சொல்லவே வேண்டாம்...அவன் லேசாக புன்னகைத்தாலே அவள் உள்ளே பொங்கிப் பெருகும் பரவசம் அவனின் இந்த வாய்விட்டு சிரிப்பை கண்டு விவரிக்க முடியாத பரவசத்தின் எல்லைக்கு சென்றாள்.

இவன் எப்பொழுதும் இப்படியே சிரித்து கொண்டே இருக்க வேண்டும். இவனை இப்படி சிரிக்க வைத்து சந்தோஷபடுத்தி பார்த்து ரசிக்க வேண்டும் என்று அவளையும் அறியாமல் ஒரு ஆவல் அவள் உள்ளே.

ஆனால் அடுத்த நொடி தன் எண்ணம் போகும் போக்கை கண்டு திடுக்கிட்டவள், அதன் தலையில் ஓங்கி ஒரு கொட்டு வைத்து நொடியில் தன்னை சமாளித்துக் கொண்டவள்  

“ஹலோ மிஸ்டர்...இப்ப எதுக்கு சிரிக்கிறீங்க? இத்தனை பேர் கேட்கறோம் இல்ல...உங்க உண்மையான பெயரைச் சொல்லுங்க...”  என்று அவனிடம் முறைத்து நிற்க.  அதைக் கண்ட வித்யாவோ

“இருக்கா....நாங்கதான் விசாரிச்சுகிட்டு இருக்குகோம் ல. நடுவுல நீ எதுக்கு வர்ற. நீ சும்மா இரு. நாங்க கேட்டுட்டு இருக்கோம்... “ என்று தன் அக்காவை அடக்கியவள்  

“ஹ்ம்ம்ம் சொல்லுங்க சார்...ஆ தான் உங்க பேரா? “  என்று மீண்டுமாய் அவனை ஆராய்ந்தவாறு கேட்க, அவனும் தன் சிரிப்பை அடக்கி கொண்டு மெல்லமாய் புன்னகைத்தவாறு இருபுறமும் இல்லை என்று தலையாட்டினான்.

“தேங்க் காட்...நல்ல வேளை உங்க பெயர் ஆ இல்லை... இல்லைனா ஆ ... ஆ.... எப்படி கூப்பிடறதாம்... தமிழ் ல ஆ னா பசுமாடு னு வேற அர்த்தமாக்கும்.... உங்கள போய் மாடு னு கூப்பிடற மாதிரி இருக்கும். நல்ல வேளை அப்படிபட்ட பேர்ல இருந்து நீங்க தப்பிச்சுகிட்டிங்க.

சரி... அப்ப உங்க பெயர் என்ன? “ என்று வித்யா மீண்டும் ஆர்வமாய் கேட்டாள்.

சத்யா வோ

“ரொம்பத்தான் படுத்தறான். இவன் வாயில் இருந்து இவன் பெயரை வரவைக்கிறதுக்குள்ளயே போதும் போதும்னு ஆய்டுது. எப்படி இவன் அட்ரஸ் ஐ வெளி கொண்டு வருவது.

கடைசியில் அந்த சுகா வாய்க்கு சக்கரைதான் போடனும்...வேலியில் போனா ஓணானை எடுத்து மடியில் விட்ட கதையா ஆகிடுமோ? “ என்று புலம்பியவாறு அடுத்து என்ன செய்ய என அவசரமாக யோசித்தாள்.   

அவனோ மீண்டும் மூவரையும் ஒரு பார்வை பார்த்தவன் அதுவும் சத்யாவை கூடுதலாக ஆழ்ந்து பார்த்தவன் மெல்ல இதழ் திறந்து

“அ.... மு......த...... ன்..... “ என்றான்.

மெது மெதுவாய்த்தான் சொல்லி இருந்தான். முதல் முறையாக அவன் குரலை கேட்க, சத்யாவுக்கோ விதிர்விதிர்த்து போனது.

அவன் குரலில் அப்படி ஒரு ஆளுமை...கம்பீரம்...அவன் குரலை கேட்டாலே மற்றவர்கள் அவன் குரலுக்கு அடி பணிந்து போய்விடும் வகையில் கணீரென்ற அமர்த்தலான குரல்.

சத்தியமாக அவன் தோற்றத்திற்கும் அவன் குரலுக்கும் கொஞ்சமும் சம்பதமில்லை... பார்ப்பத்தற்கு பஞ்சத்தில் அடிபட்டவன் போல இருந்தாலும் அவன் குரலில் அப்படி ஒரு ராஜ கம்பீரம்.

கூடவே கேட்பவர்களை வசீகரிக்கும் விதமாயும் இருந்தது.  

அவன் ஒவ்வொரு எழுத்தாக மெதுவாக உச்சரித்த அமுதன் என்ற பெயரை கேட்டதும் சத்யாவுக்கோ அந்த அமுதை உட்கொண்டதைப் போன்ற பரவசத்தைக் கொடுத்தது.

அவளையும் அறியாமல் அ   மு  த   ன் என்று அவனைப் போலவே ஒவ்வொரு எழுத்தாக சொல்லிப் பார்த்து மெய்சிலிர்த்துப் போனாள்.  

அவள் அறியவில்லை...அந்த நொடியே அமுதன் அவளின் ஒவ்வொரு அணுவிலும் கலந்து விட்டான் என்று...அவனை பற்றி எதுவும் தெரியாமலயே அவளின் ஆழ் மனதில் சென்று சிம்மாசனம் இட்டு அமர்ந்து கொண்டான் என்று.

அவனை பார்த்ததுமே அவனின் காந்த பார்வையிலும் மெல்லிய புன்னகையிலும் வசீகரிக்கும் குரலிலும் பெண்ணவளை காந்தமாய் அவன் பக்கம் இழுத்து கொண்டான் என்று அந்த பேதை அப்பொழுது அறிந்திருக்க வில்லை....

இப்படித் தான் அமுதன் சத்யாவிற்கு அறிமுகமானது...இப்படித்தான் சத்யாவின் வாழ்விலும் மனதிலும் அதிரடியாய் நுழைந்தான் அமுதன்...!



Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!