காந்தமடி நான் உனக்கு!!-10

 


அத்தியாயம்-10

றுநாள் காலையிலேயே மாடிக்கு வந்து அமுதன் உறங்கி கொண்டிருந்த அந்த அறைக் கதவைத் தட்டினாள் சத்யா.

அவனோ நேற்று இரவு உண்ட களைப்பில் இன்னுமே அசந்து உறங்கிக் கொண்டிருந்தான்.  

அவளோ விடாமல் கதவை தட்டிக் கொண்டிருக்க, அசதியுடன் எழுந்து சென்று கதவைத் திறக்க, அவனை பார்த்து முறைத்தபடி நின்றாள் சத்யா.

“யோவ்...போனா போகுது னு பாவம் பார்த்து ஒரு வேளை சாப்பாடு போட்டால், நீ என்னவோ மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு வந்து இருக்கிற புது மாப்பிள்ளை மாதிரி இப்படி சொகுசா தூங்கிக்கிட்டு இருக்க? .

மணி என்ன ஆச்சு தெரியுமா?  கொஞ்சமாவது ஏதாவது வேலை வெட்டி தேடலாம் னு அக்கறை இருக்கா? பொறுப்பு இருக்கா? “ என்று படபடவென்று பொரிந்தாள் சத்யா.

அப்பொழுது தான் சூரியன் உதித்து மேலே வந்திருக்க, மொட்டை மாடியில் கிழக்கு பக்கமாய் பார்த்தபடி நின்றிருக்க, காலை வெயில் சுள்ளென்று வீசிக் கொண்டிருப்பது உரைத்தது.

சத்யா சொன்ன மாதிரி நேற்றிரவு உண்ட களைப்பில் தான் நன்றாக உறங்கிவிட்டான். உடனே தன் தவறை உணர்ந்து குற்றவுணர்வுடன் அவளை பார்த்தவன்  

“ஐம் சாரி சத்யா. கொஞ்சம் அசந்து தான் தூங்கிட்டேன்... “  என்றான் பாவமாக.

அதுவரை கோபமாக பொங்கியவள், ஏனோ அவன் முகத்தையும் அவன்  குரலில் இருந்த குற்ற உணர்வையும் காண, அவளுக்கு மனம் தாங்கவில்லை.

உடனேயே தன் கோபத்தை குறைத்துக் கொண்டவள்

“ஹ்ம்ம்ம் சரி சரி. ரொம்ப பீல் பண்ண வேணாம். இதுல ஒரு ஜீன்ஸ் ம் டி ஷர்ட் ம் இருக்கு. குளிச்சிட்டு இதை போட்டுகிட்டு கீழ வாங்க. பாத்ரூம்ல உங்களுக்கு தேவையானது எல்லாம் வச்சிருக்கேன்.

சீக்கிரம் குளித்துவிட்டு இந்த ட்ரஸ் சை போட்டுகிட்டு கீழ வாங்க. ஒரு இடத்துக்கு உங்களுக்கு வேலைக்கு கேட்பதற்காக போக வேண்டும்.

அப்புறம் அப்படியே மறக்காமல் இந்த தாடியை எடுத்துடுங்க. பார்க்கவே ரௌடி மாதிரி பயங்கரமா இருக்கு...”  என்று முகத்தை சுளித்தபடி புன்னகைத்தவாறு சொல்ல,  அவனும் மெல்லிய புன்னகையை இதழில் தவழ விட்டவன் ஏதோ நினைவு வந்தவனாய்

“வந்து... ஷேவ் பண்றதுக்கு என்கிட்ட எதுவும் இல்லையே...”  என்று தயக்கத்துடன் இழுக்க

“ஒரு நிமிஷம்...இருங்க வர்றேன்...”  என்றவள் சிட்டாக கீழ ஓடிச் சென்று அவள் தந்தை வாங்கி வைத்திருந்த புது சேவிங் செட்டை எடுத்துக் கொண்டு வந்தாள்.  

அவள் தந்தையின் ஞாபகமாக அதை அப்படியே பத்திரமாக வைத்திருந்தாள் சத்யா. இன்று அவளையும் மறந்து அவனுக்காக அதை கொண்டு வந்திருந்தாள்.

அப்படி என்றால்?  அவனை அவளுடைய தந்தையின் இடத்தில்,  தந்தைக்கு  சரி சமமாக பார்க்கிறாளா?  என்று அந்த கணம் ஆராய மறந்து போனாள் சத்யா.  

அவனுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருக்க என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் செய்து வைத்தாள்.  

அவனும் நன்றி சொல்லி அதை வாங்கிக்கொண்டான்.  

டுத்த பத்து நிமிடத்தில் சத்யா சொன்னபடி குளித்துவிட்டு அவள் கொடுத்த ஆடையை அணிந்து கொண்டு மாடியில் இருந்து இறங்கி கீழே வந்தான் அமுதன்.  

சத்யா வின் தங்கைகள் அப்பொழுது தான் பள்ளிக்கும் கல்லூரிக்கும் செல்ல தயாராகி நின்று கொண்டிருந்தவர்கள் மாடியிலிருந்து இறங்கி வந்தவனை பார்த்ததும் ஆ என்று வாயைப் பிளந்தனர்.

நேற்று இரவு முகத்தில் பல நாள் தாடி மீசையும்,  கண்களில் பசி மயக்கத்துடன் இருந்தவனை பார்த்தவர்களுக்கு இன்று அந்த ஜீன்ஸ் டீ ஷர்ட் ல் ட்ரிம் செய்யப்பட்ட தாடி மீசையில் ப்ரெஸ் ஸாக தயாராகி வந்தவனைப் பார்க்க ஹீரோ போல இருந்தான்.  

இவன் தான் நேற்று  ரோட்டு ஓரத்தில் மயங்கி கிடந்தவன் என்று சொன்னால் யாரும் நம்பியிருக்க மாட்டார்கள்.

அந்த அளவுக்கு இன்று ஒரு புத்துணர்வுடனும் முகத்தில் ஒரு தேஜஸ் உடனும் பார்ப்பவர்களை வசீகரிக்கும் ஆழ்ந்த காந்த பார்வையும், பளபளப்பான கன்னங்கள், அழுத்தமான உதடுகள் என்று ஒரு கதாநாயகனின் அத்தனை அம்சங்களும் நிரம்ப பெற்றவனாய் திகழ்ந்தான் அமுதன்.  

கிட்டத்தட்ட சற்று முன் டிவியில் பார்த்த,  அந்த ஆரவ் எப்படி இருக்கிறானோ அதே போலத்தான் அன்று அமுதன் அவர்கள் முன்னே நின்றிருந்தான்.

அவனை பார்த்து வளர்மதி  கூட அசந்து நின்று விட்டார்.

சத்யாவின் தங்கைகள் இருவரும் அவனைப் பார்த்து

“ப்ரோ...செமையா இருக்கீங்க. எங்களுக்கே அடையாளம் தெரியவில்லை.  எப்பவும் இந்த மாதிரி,  இப்படி பளிச்சென்று இருங்கள்.  நேற்று மாதிரி சோக கீதம் எல்லாம் வேண்டவே வேண்டாம்..”  என்று குறும்பாக சொல்லி சிரிக்க அவனும் ஒரு மென்னகையை இதழில் தவழ விட்டான்.

கூடவே அவன் பார்வை சத்யாவிடம் சென்றது. அவள் இன்னும் எதுவும் சொல்ல வில்லையே என்று அவள் பக்கமாய் பார்வையை திருப்பினான்.

சத்யாவிற்கோ சில நொடிகள் ஆனது தன்னை சமாளித்துக் கொள்ள.  

ஏனோ அவன் பார்வை அவளை காந்தம் போல கட்டி இழுக்க,  சற்று முன் வரை அவனை அதட்டி மிரட்டியவளுக்கு இப்பொழுது ஏனோ அவனை ஏறெடுத்தும் பார்க்க முடியவில்லை.

பார்வையை மாற்றி கொண்டு தலையை குனிந்த படி வேகமாக சமையலறைக்கு சென்றாள் அவனுக்கு சாப்பிடுவதற்கு என்று காலை உணவை எடுத்து வருவதாக காட்டிக் கொள்ள  சென்றாள்.

வளர்மதியும் அவன் அருகில் வந்து

“இந்த வாலுங்க ரெண்டு பேரும் சொல்வதைப்போல இந்த ட்ரெஸ் ல் சூப்பரா இருக்க பா. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு. கொஞ்சம் குனியேன்...”  என்று அவனை  குனிய வைத்து அவனுக்கு நெட்டி முறிக்க அமுதனோ ஒரு நொடி நெகிழ்ந்து போனான்.  

யார் என்றே தெரியாத தன்னிடத்தில் அந்த குடும்பத்தார் காட்டும் பாசம் அவனை மெய் சிலிர்க்க வைத்தது.

கூடவே  இந்த மாதிரி எல்லாம் யாரும் அவனை கொண்டாடியதில்லை. இப்பொழுது வளர்மதியின் பாசத்தை கண்டு நெகிழ்ந்து ஒரு சொட்டு கண்ணீர் அவன் கண்களில் வெளி வருகிறது தான்.  

அதை மற்றவர்கள் அறியாதவாறு சுண்டி விட்டு, தன்னை மறைத்து கொண்டவன் கணீரென்ற குரலில்

“சாரி...ஆன்ட்டி...உங்களுக்கு ரொம்பவும் தொந்தரவு கொடுத்துட்டேன். சீக்கிரம் எனக்கு ஒரு வேலை கிடைத்ததும்  சென்று விடுகிறேன். அது வரைக்கும் என்னை இங்கே தங்க வைத்ததற்கு ரொம்ப நன்றி...”  என்று தழுதழுத்தான் அமுதன்.

அதே நேரம் அவனுக்கு சாப்பிட காலை உணவை தட்டில் போட்டு எடுத்து வந்தவள்  

“ஹலோ மிஸ்டர் அமுதன். அந்த ரூம் ஐ நாங்க ஒன்னும் சும்மா கொடுக்கலை. நான் நேற்றே சொன்னது போல எங்களுக்கு மாசம் ஆனா வாடகை கரெக்டா வந்துடுடணும். நீங்க எவ்வளவு நாள் வேணா தங்கிக்குங்க. நோ ப்ராப்ளம்...”  என்று புன்னகைத்தவாறே அங்கு வந்தாள் சத்யா.

“ஓ...கண்டிப்பா சத்யா...நான் அதுக்குள்ள ஒரு வேலைக்கு போய்ட்டு வாடகையும் ஒழுங்கா கொடுத்துடுவேன்...” என்று புன்னகைக்க அவனின் வசீகர புன்னகையை கண்டு பெண்ணவளுக்குத்தான் தலை சுற்றி போனது.

உடனே தன் பார்வையை மாற்றிக் கொண்டவள்  

“சரி சரி... சீக்கிரம் கிளம்பி வாங்க போகலாம்...” என்று விரட்டியவள் அப்பொழுதுதான் அவனையே பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்த தன் தங்கைகள் இருவரையும் பார்த்தவள்  

“இன்னும் என்னங்கடி... இங்க வேடிக்கை?  உங்களுக்கு டைம் ஆகுது பாரு. கிளம்புங்க...”  என்று அவர்களை விரட்ட,  அவர்களும் மனமே இல்லாமல்  அவனுக்கு பை சொல்லி

“ஈவ்னிங் பாக்கலாம் ப்ரோ...”  என்று விடை பெற்று துள்ளலுடன் குதித்த படி வெளியேறிச் சென்றனர்.

தன் பிறகு அமுதன் சாப்பிட்டு முடிக்க,  அவனை அழைத்துக் கொண்டு அவள் வேலை செய்யும் கார்மென்ட் பேக்டரிக்கு சென்றாள் சத்யா.  

அவளுக்கு முன்னதாகவே அங்கு சென்றிருந்த சுகன்யா, பேக்டரியின் வெளியில் நின்றிருந்தாள்.

சத்யா புதுசா ஒரு ஆணுடன் வருவதை கண்ட சுகா வாயை பிளந்தாள்.

சத்யாவும் அவளை பார்த்துவிட்டு புன்னகைத்தபடி சுகன்யாவின் அருகில் வர, இருவரும் காலை வணக்கத்தை பரிமாறி கொண்டனர்.

உடனே சுகன்யா சத்யாவின் காதருகில் வந்தவள்

“ஹே... சத்யா? யாருடி இது. புதுசா இருக்கார். செம ஹேன்ட்ஸம் ஆ இருக்கார்? என்று அவள் காதில் கிசுகிசுக்க,  சத்யாவும் வாய்விட்டு சிரித்தாள்.

“இவர்  தான் தாடியும், அழுக்கு ட்ரெஸ்ஸுமாய் நேற்று ரோட்டோரம் மயங்கி  கிடந்தவர் டி. நீ கூட அப்படியே விட்டுட்டு போய்டலாம் னு சொன்னியே அவரே தான் இவர்...”  என்று கடைசி வாக்கியத்தை மட்டும் அழுத்தமாய் சத்தமாய் சொல்ல, சுகாவின் சிரிக்கும் முகம் இப்பொழுது சுருங்கிப் போனது.

அமுதனும் அவர்களுடைய சம்பாஷணையை கேட்டுக் கொண்டிருக்க, அவனை கண்ட சுகன்யாவிற்கு தர்மசங்கடமாக இருந்தது. அவனை பார்த்தவள்

“சாரி.... அது வந்து... அது வந்து...”  என்று இழுக்க, அவளின் நிலையை புரிந்து கொண்ட அமுதன்

“பரவாயில்லை சிஸ்டர். யாரா இருந்தாலும் அந்த கோலத்தில் பார்க்கும் பொழுது அப்படித்தான் தோன்றியிருக்கும். உங்கள் மீது தவறு ஒன்றுமில்லை...”  என்று புன்னகைத்தான்

அவனுடைய  இலகுவான பேச்சும்,  வசீகர புன்னகையும் கண்டு  சுகன்யாவால் கூட நம்ப முடியவில்லை.  இவனையா நேற்று அப்படி கேவலமா பார்த்து வச்சோம் என்று எண்ணி தன்னைத்தானே கொட்டி கொண்டு ஒரு அசட்டு சிரிப்பை சிரித்து பின் விடை பெற்றுச் சென்றாள்.  

அதன் பிறகு சத்யா அங்கிருந்த மேனேஜரிடம் அமுதனை அழைத்துச் சென்றாள்.  

மேனேஜர் சத்யாவிற்கு ரொம்பவும் பழக்கம் என்பதால் நேரடியாகவே அவரை சென்று சந்தித்தாள்.  

அமுதனை பற்றி விவரம் சொல்லி ஏதாவது வேலை போட்டு தர முடியுமா என்று கேட்டாள்.  

அவரும் அவனுடைய படிப்பைப் பற்றி விசாரிக்க,  ஒரு நிமிடம் தயங்கியவன்  

“டென்த் ஃபெயில் சார்... “ என்று தயக்கத்துடன் இழுத்தான்.  

அதைக் கேட்டவள் கண்களோ சந்தேகத்தில் சுருங்கி விரிய,  அவளின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் வேறு பக்கம் பார்த்தான்  அமுதன்.

கண்டிப்பாக அவன்  பொய் சொல்கிறான் என்று தெரிந்தது சத்யாவிற்கு.

காலையில் அவன் பேசியதை வைத்து அவன்  ஓரளவுக்கு நன்றாக படித்தவன் என்று கெஸ் பண்ணி இருந்தாள்.  

ஆனால் அவனோ பத்தாம் வகுப்புதான் என்று சொல்ல,  அவளுக்கு சந்தேகமாக இருந்தது.  மேனேஜர் முன்னிலையில் அவனை குறுக்கு விசாரணை செய்ய விரும்பாதவள் அப்படியே விட்டு விட்டாள்.

மேனேஜரும் சற்று நேரம் யோசித்து அவனுக்கு, அவன் தகுதிக்கு ஏற்ற ஒரு வேலையை போட்டுக் கொடுத்தார்.

அவனிடம் படிப்பு இல்லை என்பதால் அதற்கு தகுந்த மாதிரியான ஒருவேளை. அசிஸ்டன்ட் வேலை. அதுவும் இந்த வேலை மட்டும்தான் இப்பொழுது காலி இருக்க அதற்கு சம்மதமா என்று கேட்டார்.

அசிஸ்டன்ட் வேலை என்பது பெரிய பெர்சனல் அசிஸ்டன்ட் மாதிரியான வேலை அல்ல. அங்கு பணி புரியும் ஆட்களுக்கு உதவி செய்வது.

காலையில் எல்லோருக்கும் அவர்கள் அன்று தைக்க வேண்டிய துணி பீஸ்களை எடுத்துக் கொடுப்பதும், அவர்கள் தைய்த்து முடித்ததும் அதை மடித்து அதற்கான பெட்டியில் அடுக்கி வைப்பது.

சில நேரம் கட்டிங் செக்சனில் இருந்து கட் பண்ணிய பீஸ்களை எடுத்து வந்து அதை தைக்கும் செக்சனில் கொடுப்பது, அதிலும் ஒவ்வொன்றாக இடம் மாறும். அதை எல்லாம் பார்த்து செய்ய வேண்டும்.  

மற்றும் இடைவேளையில் அவர்களுக்கு டீ எடுத்து வந்து தருவது போன்ற எல்லாவிதமான உதவிகளையும் செய்ய வேண்டும். மொத்தத்தில் அது ஒரு எடுபுடி வேலை.  

அதைக் கேட்டதும் சத்யாவிற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.

அவனுடைய தோற்றத்திற்கும் அந்த வேலைக்கும் சம்பந்தம் இல்லாததாய் தோன்றியது. அவள் தங்கைகள் சொல்வதைப் போல ஹீரோ மாதிரி இருக்கும் அவனை கொண்டு வந்து எடுபுடி வேலை செய்ய வைப்பது கஷ்டமாக இருந்தது.

அதனால் கொஞ்சம் தயங்கியவள்  

“சார்...இதை விட இன்னும் கொஞ்சம் பெட்டரான வேலை எதுவும் இருக்கா?  டெலிவரி பாய்...இல்ல சூப்பர்வைசர் அந்த மாதிரி...”  என்று இழுத்தாள் சத்யா.

அவரும் அவளை முறைத்தவர்

“இவருடைய தகுதிக்கு இந்த வேலையே அதிகபட்சம் சத்யா. இப்பல்லாம் இதுக்கு கூட பிளஸ் டூ  ஏன் டிகிரி படித்தவங்களே  போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள்.

இவரோ டென்த் பெயில். இந்த குவாலிபிகேசனுக்கு இதுவே அதிகம். ஏதோ உன் முகத்துக்காகத்தான் இந்த வேலையை போட்டு கொடுத்தேன். ஆள் ஹீரோ மாதிரி இருந்தா மட்டும் பத்தாது சத்யா...

கொஞ்சமாவது படிச்சு இருக்கணும். படிக்க வேண்டிய வயதில் ரௌடி மாதிரி ஊரை சுத்திட்டு காலம் போன பிறகு சங்கரா சங்கரா என்றால் வந்து விடுமா..

இப்ப வருந்தி என்ன பிரயோஜனம். துரைக்கு இந்த வேலை இஷ்டம் இல்லைனா நீ நடைய கட்டு. என் டைம் ஐ வேஸ்ட் பண்ணாத...” என்று முறைக்க,  அதற்குள் அவரை மறுத்தவன்

“பரவாயில்லை சார்...எனக்கு இந்த வேலையே போதும். எனக்கு பெருசா எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. கிடைக்கிற வேலையை சரியாக செய்தாலே போதும்.

எந்த வேலை என்றால் என்ன? நான் இதுலயே சேர்ந்துக்கறேன்...” என்று அவன் சம்மதம் சொல்லிவிட அதற்கு மேல் சத்யாவும் எதுவும் செய்ய முடியாமல் விட்டு விட்டாள்.  

அவரும் புன்னகைத்தவாறு அன்றிலிருந்தே வேலையை ஆரம்பிக்க சொல்ல,  அமுதனுக்கு ரொம்ப மகிழ்ச்சி ஆகிப் போனது.

அந்த மேனேஜருக்கு நன்றி உரைத்தவன் அவர் நகர்ந்து சென்றதும்  சத்யாவின் கையைப் பற்றி குலுக்கி

“ரொம்ப தேங்க்ஸ் சத்யா...அட்லீஸ்ட் இந்த வேலையாவது எனக்கு கிடைத்ததே. இது கூட இல்லாமல் எத்தனை நாட்களாக தேடி அழைத்தேன் தெரியுமா?  

இப்பொழுதுதான் தெரிகிறது வேலை வேண்டும் என்றால் சிபாரிசு முதலில் வேண்டும் என்று. இதுவே நானாக வந்து இவரிடம் கேட்டு இருந்தால் கண்டிப்பாக எனக்கு இந்த வேலையை போட்டுக் கொடுத்து இருக்க மாட்டார்.

இதுவே தெரிந்தவள் நீ சொல்வதை அப்படியே கேட்டுக் கொண்டாரே. இது தெரியாமல் தான் இத்தனை நாட்களாக  கம்பெனி கம்பெனியாக ஏறி  இறங்கினேன்.

எல்லா பக்கமும் தோல்வியே...”  என்றான் வேதனையுடன்.  

திடீரென்று அமுதன் அவள் கையை பற்றி இழுத்து குலுக்கியதும் மின்சாரம் பாய்வது போல் அதிர்ந்து போனவள் அந்த நொடி தன்னையும் மறந்து போனாள். அவனின் கை குலுக்கலிலே மெய் மறந்து நின்று விட்டாள்.    

ஆனால் அடுத்த நொடி அவன் முகத்தில் இருந்த சோகத்தை பார்த்ததும் உடனே தன்னை சமாளித்துக் கொண்டவள்  

“இட்ஸ் ஓகே அமுதன்... அது தான் இப்ப இருக்கிற நிதர்சனம்.  நீங்கள் என்று இல்லை. இன்று எத்தனையோ பேர் இப்படித்தான்.

எப்படி ஒரு வேலைக்கு விண்ணப்பிப்பது என்று தெரியாமல், சரியான வழிகாட்டி இல்லாமல்,  சரியான வழியில் செல்லாமல், ஏதோ வேலை தேட வேண்டுமே என்று தேடி  வேற பக்கமாக சென்று முட்டிக் கொண்டு தோல்வியில் நிற்பவர்கள்  நிறைய பேர்...”  என்று பெருமூச்சு விட்டாள்.  

“எப்படியோ...இப்ப கிடைத்திருப்பது இந்த கம்பெனிக்குள் நுழைய ஒரு நுழைவு சீட்டு மட்டுமே. இதிலயே செட்டில் ஆகிடக்கூடாது. இதில் இருந்து உங்க திறமையால் இன்னும் மேல வரணும்.

இனிமேல் உங்களுக்கு எல்லாம் நல்லதாக அமையட்டும்... வாழ்த்துக்கள்...”  என்று அவன் கையை மிருதுவாய் பற்றி லேசாக குலுக்கினாள்  சத்யா.

மீண்டுமாய் அவளை பார்த்து புன்னகைத்தவன் அவளுக்கு மீண்டும் நன்றி சொல்லி அவனுடைய வேலையை ஆரம்பிக்க சென்றான் அமுதன்...!


Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!