காந்தமடி நான் உனக்கு!!-11

 


அத்தியாயம்-11

 

ன்று இரவு மொட்டை மாடியில் வானத்தை ரசித்து பார்த்தவாறு கால் மீது கால் போட்டு கொண்டு மல்லாந்து படுத்திருந்தான் அமுதன்.

அவனால் இன்னுமே நம்ப முடியவில்லை..  

நேற்றுவரை வாழ்வில் எந்த ஒரு லட்சியமும் இன்றி, போக்கிடம் இன்றி, ஒரு நேரம் உணவுக்குக் கூட வழியில்லாமல் இருந்தவனுக்கு இன்று வாழ்க்கையே தலைகீழாக மாறிப் போனதை போல இருந்தது.

திக்கு தெரியாமல் முழித்து கொண்டிருந்த வனத்தில், வன தேவதையாய்,  வழி தெரியாமல் முழித்தவனுக்கு வழிகாட்டும் வழி காட்டியாய், அவன் வாழ்வையே மாற்றி அமைக்கும் மாயாவியாய் வந்தாள் சத்யா.

நேற்று மாலை பசி மயக்கத்தில் ரோட்டோரத்தில் அவன் சுருண்டு விழுந்த பொழுது,  அவனை சுற்றி நின்று வேடிக்கைதான் பார்த்தார்கள் எல்லாரும்.

எத்தனையோ பேர் அங்கு சுற்றி நின்று கொண்டு அவனை ஒரு காட்சி பொருளாகத்தான் பார்த்து கொண்டிருந்தார்கள்.

ஒருவரும் முன் வந்து ஒரு வாய் தண்ணி கூட கொடுக்காதவர்கள்,  வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்க,  திடீரென்று கேட்டது அந்த தேவதையின் குரல்.

அவளின் குரலைக் கேட்டதும், ஆழ்ந்த மயக்கத்திற்கு சென்று கொண்டிருந்தவன், திடுக்கிட்டு விழித்துக் கொண்டான்.  

அந்த குரல் அவன் ஒவ்வொரு அணுவிலும் ஊடுருவி கலந்து சென்று அவனை சிலிர்க்க வைத்தது.

அது யாருடைய குரல்? சின்னவளா? பெரியவளா, திருமணம் ஆனவளா?  ஆகாதவளா? என்றெல்லாம் அந்த நேரம் யோசிக்கவில்லை.

ஏதோ அந்த குரலில் இருந்த ஒரு வசீகரம் அவன்  உள்ளே ஒரு புத்துணர்வை ஊட்டியது. எப்படியாவது தான் எழுத்து  கொள்ள வேண்டும். அந்த தேவதையின் முகத்தை பார்க்க வேண்டும் என்ற வைராக்கியத்தையும் மன உறுதியையும் அவனுக்கு கொடுத்தது அந்த குரல்.

அதனாலேயே நேற்று முயன்று தன்னுடன் போராடி தன்னைத் தானே காத்துக் கொள்ள முயன்றான் அமுதன்.  

எப்படியோ கடைசியாய் அவன் வேண்டுதல் நிறைவேறியது. அந்த தேவதையே அவனை ரக்ஷித்து தன்னோடு அழைத்து வந்து விட்டாள்.

அழைத்து வந்தது மட்டுமல்லாமல் அவனை தன் வீட்டிலயே  தங்க வைத்தாள். அதோடு இன்று அவன்  கேட்டது போல ஒரு வேலையையும்  வாங்கிக் கொடுத்து அவனுக்கான  இந்தப் பிறவிக்கான  ஒரு அர்த்தத்தையும் அடையாளத்தையும் காட்டி விட்டாள்.  

அதை நினைத்த பொழுது இப்பொழுதும் அவனுக்குள் சிலிர்த்துப் போனது. அந்த சிலிர்ப்பிலேயே அசந்து உறங்கிப் போனான்  அமுதன்.

டுத்து வந்த நாட்கள் றெக்கை கட்டி பறப்பது போல வேகமாக ஓடிச் சென்றது. அமுதனுக்கு அந்த வேலை ரொம்பவும் பழகிவிட்டது.

காலையில் எழுந்ததும் தன் காலை உடற்பயிற்சிகளை முடித்துவிட்டு குளித்து கிளம்பி கீழே வருவான்.

வளர்மதி அமுதனுக்கும் சேர்த்து காலை மற்றும் மதிய உணவையும் சமைத்த விடுவார்.

ஆரம்பத்தில் அமுதன் அதை மறுத்து விட்டு வெளியில் சாப்பிடுவதாக எவ்வளவோ வற்புறுத்தி சொல்லியும் வளர்மதி விடவில்லை.

“உனக்காக நான் தனியாவா உலை வைக்கிறேன் அமுதா. எங்களுக்கு சமைப்பதில் ஒரு கை சேர்த்து போடுகிறேன். அவ்வளவுதான்.

உனக்கு மனசுக்கு கஷ்டமாக  இருந்தால், வேண்டுமென்றால்  நீ சும்மா சாப்பிட வேண்டாம். பேயிங் கெஸ்ட் போல, இதை எல்லாம் கணக்கில் வைத்து கொள்ளலாம்.

நீ  நன்றாக சம்பாதிக்க ஆரம்பித்ததும் உன்னால் முடிந்ததை கொடு. அது போதும்... “  என்று மறுத்துவிட்டார்.

அதற்கு மேல் மறுக்க முடியாமல் மூன்று வேளையும் அங்கேயே சாப்பிட்டு கொண்டான்.  

காலை உணவை முடித்ததும் சத்யாவுடன் கிளம்பி பேக்டரிக்கு செல்வான்.  தொழிற்சாலையில்  அவனுக்கு கொடுக்கப்படும் வேலையை முகம் சுளிக்காமல் செய்ததோடு அவனுடைய பிரிவு இல்லாத வேலையையும் இழுத்துப் போட்டு செய்தான்.

அதனாலயே எல்லோருக்கும் அவனை ரொம்பவே பிடித்து போய்விட்டது.

தொழிற்சாலை எண்றில்லாமல் சத்யா வீட்டு பக்கத்திலும் அமுதனுக்கு ரசிகர்கள் கூட ஆரம்பித்தனர்.

மாலை வீடு திரும்பி வந்ததும் தன் அறைக்கு சென்று ரெப்ரெஸ் ஆகி வேற ஒரு இலகுவான ஆடைக்கு மாறி கீழ வருவான்.  

வளர்மதி கொடுக்கும் சிற்றுண்டியை சாப்பிட்டுவிட்டு தெருவிற்கு சென்று விடுவான்.  

கொஞ்ச நாட்களிலேயே அந்த தெருவில் இருக்கும் அனைவருடனும் நன்றாக பழகிவிட்டான்.  அதுவும் சிறுவர்கள் தான் அமுதன் அண்ணா என்று அழைத்து அவனோடு நன்றாக ஒட்டி கொண்டனர்.

கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து,  கேரம் போர்டு முதற்கொண்டு எல்லா விளையாட்டிலும் சிறு பிள்ளைகளோடு சேர்ந்து கொண்டு அவனும் விளையாடுவான்.

அதை கண்ட சத்யாவுக்கு ஒரு பக்கம் சிரிப்பாக இருந்தாலும் இன்னொரு பக்கம் இப்படி பிழைக்க தெரியாதவனா இருக்கானே... என்று உள்ளுக்குள் புலம்பியவள்

“என்ன சார் ... இது... ஏழு கழுதை வயசு ஆச்சு. இப்ப போய் இப்படி சின்ன புள்ளைங்க கூட சேர்ந்து கிட்டு விளையாடறீங்க? “ என்று சத்யா கிண்டல் அடிப்பாள்.

“ஏழு கழுதை வயது ஆனாலும் இந்த மாதிரி சின்ன பசங்க கூட விளையாடும் சுகம் கிடைத்து விடாது சத்யா. வாழ்க்கையில் ஓடி ஓடி சம்பாதிச்சு என்னத்த பண்ணப் போறோம்.

இருக்கும் வரை ஜாலியாக அனுபவிக்க வேண்டும்... “  என்று வேதாந்தம் பேசுவான் அமுதன்..  

“ஹ்ம்ம் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற கேள்விப்பட்டதில்லையா அமுதன்? இப்போதைக்கு சம்பாதிக்கும் பணத்தை கொஞ்சமாவது எதிர்காலத்திற்கு என்று சேர்த்து வைக்க வேண்டும்.

அப்பொழுதுதான் கஷ்டம் வரும் காலத்தில்  ரோட்டோரமா மயங்கி விழாமல்  உருப்படியாக ஏதாவது செய்யலாம்... “  என்று எதார்த்தமாக சொன்னாள் சத்யா.  

அது அவன் மனதில் சுருக்கென்று தைத்தது. உடனே முகம் வாடிப்போனது

சத்யாவிற்கும் அவனை பார்க்க கஷ்டமாக இருந்தது. உடனே இறங்கி வந்தவள்  

“ஐம் சாரி...உங்க பர்சனல் ல்  தலையிட்டதுக்கு.  உங்க மேல இருக்கிற அக்கறையில் தான் சொன்னேன். இப்பொழுது இருக்கும் நேரத்தை வைத்து  ஏதாவது உருப்படியா படிக்கலாம் இல்ல.

இப்படியே இந்த எடுபிடி வேலையிலயே செட்டிலாகி விடலாம் என்று முடிவு பண்ணி விட்டீர்களா? என்று இடுப்பில் கை வைத்து முறைத்தாள்.

அதை கேட்டு ஒரு நொடி கலவரமானான் அமுதன். அதற்குள் சமாளித்து கொண்டு

“வந்து...இல்லை சத்யா...அதெல்லாம் வேண்டாம்...இப்பொழுது தான் வேலைக்கு சேர்ந்திருக்கிறேன். கொஞ்சம் காசு சேர்ந்த பிறகு ஏதாவது ஒரு கோர்சில் சேரலாம்... “  என்று அப்போதைக்கு அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் அமுதன்.

படிப்பை பற்றி பேசினால் மட்டும் ஏனோ அவனிடம் கொஞ்சம் தடுமாற்றம் இருப்பதை கண்டு கொண்டாள் சத்யா.

“அன்று கூட மேனேஜர் அவன் என்ன படித்திருக்கிறான் என்று கேட்டதற்கு தடுமாறித்தான் பதில் சொன்னான்.

இப்பொழுதும் ஏதாவது படிக்கலாம் என்றால் கலவரமாகிறான். சம்திங் ஃபிஷ்ஷி.. ஏதோ என்கிட்ட மறைக்கிறானா?”  என்று தாடையில் கை வைத்து ஆழ்ந்து யோசித்தாள் சத்யா!!!


Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!