காந்தமடி நான் உனக்கு!!-13
அத்தியாயம்-13
“வேலையை விட்டுடலாம் என்று இருக்கிறேன் சத்யா...” என்றான் அமுதன் தயக்கத்துடன் இழுத்தவாறு.
அதைக்கேட்டு திடுக்கிட்டு போனாள் சத்யா.
நேற்று இரவு தானே தன்னுடைய காதலை முழுவதுமாக
உணர்ந்து கொண்டாள். அதை அவனிடம் சொல்லும் முன்பு அவன் வேலையை விடுகிறான் என்றால்?
விடுவது வேலையை மட்டும் தானா? இல்லை வீட்டையும் காலி
பண்ணிக் கொண்டு செல்ல போகிறானா? என்று அச்சம் மேலிட, அதே கலக்கத்துடன் விலுக்கென்று
நிமிர்ந்து அவனை ஆழ்ந்து பார்த்தாள் சத்யா.
“என்னாச்சு அமுதன்? “ என்றாள் தன் புருவத்தை
உயர்த்தி சிறு கலக்கத்துடன்.
“இல்லை...வந்து...நீ முன்பு சொன்னாய் இல்லயா? இப்ப இருக்கும் வேலையிலேயே நிலைத்து விடக் கூடாது. மேலே மேலே
முன்னேற வேண்டும் என்று.
அதனால் தான் யோசித்துப் பார்த்தேன்.
இப்ப இருக்கும் வேலையை விட்டுவிட்டு இன்னும் கொஞ்சம் பெரிய வேலைக்கு போகலாம் என்று
இருக்கிறேன்...” என்றான் அவளை நேராக
பார்க்காமல் எங்கோ பார்த்தபடி.
அவனுக்கும் அந்த வேலையை விட மனமில்லை
தான்.
காலையிலும் மாலையிலும் இரு நேரமும் அவளுடன்
கலகலவென்று பேசி சிரித்துக் கொண்டே அந்த பேருந்தில் சென்று வருவதும், வேலை செய்யும் நேரத்திலும்
கூட சத்யா வேலை செய்யும் பகுதிக்கு அவ்வபொழுது வருபவன் அவளை ஓரக்கண்ணால் பார்த்து ரசித்துவிட்டு செல்வது
மனதுக்கு இதத்தை கொடுத்தது அமுதனுக்கு.
அவனையும் அறியாமல் எப்பொழுதும் அவளை
பார்த்து கொண்டே இருக்க வேண்டும் என்ற தவிப்பு அவனுள்ளே படர்ந்து விட்டது.
அதனால் தான் வேலை நேரத்திலும்
கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு வேற பிரிவில் இருந்தால் கூட சத்யாவின்
பகுதிக்கு வந்து அவளை பார்த்துவிட்டு கண் குளிர ரசித்துவிட்டு செல்வான்.
இப்பொழுது அதையெல்லாம் இழக்க வேண்டும்
எனும் பொழுது அவனுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது.
ஆனால் வாழ்வில் சற்று உயர்ந்த நிலையை
அடைய, இன்னும் அதிகமாக கஷ்டப்பட வேண்டும்.
பெரிய வளமான வாழ்க்கை வாழ, சில பல இன்பங்களை, குட்டி சந்தோஷங்களை கூட தியாகம் செய்ய
வேண்டும் என்று கற்றுக் கொண்டவன் தன் மனதை
கல்லாக்கி கொண்டு, தன்னை வருத்திக் கொண்டு அந்த முடிவை
எடுத்து இருந்தான்.
தன் முடிவை சத்யாவிடம் சொல்லிவிட்டு
இப்பொழுது அவள் முகத்தை ஆராய்ந்து பார்த்தான்.
அவன் இந்த வேலையை விட்டுவிட்டு வேறு
வேலையை தேடிக்கொள்கிறேன் என்றதும் தான் பெரும் நிம்மதி வந்து சேர்ந்தது அவள்
மனதில்.
அப்படி என்றால் அவன் வீட்டை காலி பண்ண
மாட்டான். வேலைக்கு தானே வேற பக்கம் செல்கிறேன். அப்படி என்றால் எப்படியும் மாலை
நேரங்களில் சந்தித்துக் கொள்ளலாம் என்று தன்னை தேற்றிக் கொண்டவள், அவனை பார்த்து லேசாக புன்னகைத்து
“குட் ஐடியா அமுதன். ரொம்ப சந்தோஷம்...
நீங்களாகவே அடுத்த நிலைக்கு செல்ல தயாரானதுக்கு. அது சரி. இந்த வேலையை விட்டு
விட்டால் அப்படி என்ன வேலை கிடைத்து விடும் அமுதன்?
நீங்கள் தான் டென்த் பாஸ் பண்ணவில்லையே.
வேற வேலை எப்படி? “ என்றாள் யோசனையுடன்.
“ஹ்ம்ம்ம் நீ சொல்வது சரிதான் சத்யா. நேற்று இரவு ஒரு அட்வர்டைஸ்மென்ட் பார்த்தேன். Zomato ல் டெலிவரிக்கு ஆட்கள் தேவை என்று
போட்டிருந்தார்கள்.
நான் நேற்று இரவே அவர்களை அழைத்து
பேசிவிட்டேன். குவாலிபிகேசன் பெரிதாக தேவை இல்லை. நாளை நேரில் வரச் சொல்லி இருக்கிறார்கள். அந்த வேலை கிடைத்துவிட்டால்
நன்றாக இருக்கும்.
சம்பளமும் இப்பொழுது வாங்குவதை விட
அதிகமாக கிடைக்கும்...” என்று கண்கள்
மிளிர தன் திட்டத்தை விளக்கினான் அமுதன்.
அதை கேட்ட சத்யாவிற்கு மகிழ்ச்சியாக
இருந்தது.
“எப்படியோ அவனுடைய வாழ்க்கையை அவனாகவே யோசித்து
திட்டமிட்டு செயல்படுத்துகிறான் என்பதே பெரிய
முன்னேற்றம் தான். சீக்கிரம் இன்னும் பெரிய லெவல்க்கு வரவேண்டும்...”
என்று எண்ணிக் கொண்டவள் தன்னுடைய தயக்கத்தை மறைத்துக் கொண்டு முகம் மலர
சிரித்தவள்,
“வாவ்... சூப்பர் அமுதன். கண்டிப்பா
உங்களுக்கு இந்த வேலை கிடைக்கும். அதோடு உங்களுக்கு பைக் வேண்டுமென்றால் என்னுடைய
அப்பாவுடையது கூட எடுத்துக் கொள்ளுங்கள்.
அவரின் ஞாபகமாக அவர் பயன்படுத்திய
மோட்டார் பைக்கை அப்படியே தான் வைத்திருக்கிறோம். அது உங்களுக்கு உபயோகமாக
இருக்கட்டும். வாழ்த்துக்கள்... “ என்று
அவன் கை பிடித்து குலுக்கினாள்.
அமுதனுக்கே பெரும் ஆச்சர்யம். ஆக்சுவலா
அவனுக்கு பைக் ஒன்று தேவையாக இருந்தது. அந்த வேலையில் சேருவதற்கு முதல் தகுதியே
சொந்தமாக பைக் வைத்திருக்க வேண்டும் என்பது.
அவனிடம் பைக் இல்லாததால் என்ன செய்ய
என்று யோசித்து கொண்டிருந்தவன் அதை சத்யாவிடம் எப்படி சொல்வது?
அவளிடம் மீண்டும் உதவி கோர வேண்டுமே
என்று எண்ணி கொண்டிருக்க, அவளாகவே முன் வந்து அவன் கேட்காமலயே
அவன் நிலையை, அவன் மனதை புரிந்து கொண்டு அவனுக்கு உதவியதை
கண்டு பூரித்து போனான்.
“எப்படி இவளால் மட்டும் இப்படி வெகு இயல்பாக
எல்லாருக்கும் உதவ முடிகிறது? “ என்று ஆச்சர்யத்துடன் அவளை
பார்த்தான்.
அமுதனுக்கு மட்டும் என்றில்லை. வேலை
செய்யும் இடத்திலும் சத்யா மற்றவர்களுக்கு நிறைய உதவிகளை தானாக முன் வந்து செய்து
இருக்கிறாள்.
அங்கு நிறைய பேர் அவளை புகழ்ந்து பேச
கேட்டிருக்கிறான். உண்மையிலயே அவள் தேவதைதான்.
தேவதைதான் கேட்காமலயேயே வரத்தை அள்ளி
தருவாளாம்.
“அதே போல எனக்கு தேவையானதை அவளாகவே
கண்டு கொண்டு நிறைவேற்றி வைக்கும் என் தேவதை இவள்...என் சத்யா... என் சது... என்று
உள்ளுக்குள் சிலிர்த்து போனான்.
இந்த தேவதையை கண்ணுக்குள் வைத்து
பார்த்து கொள்ள வேண்டும். என்று தனக்குள்ளே உறுதி செய்து கொண்டான்.
அவன் அறியவில்லை. இந்த தேவதையை அவனே அழ
வைக்க போகிறான். பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறப்பவளை அவனே சிறகை ஒடித்து வேதனை
பட வைக்க போகிறான் என்று அப்பொழுது அறிந்திருக்கவில்லை அமுதன்.
தன்னவளை பற்றி பெருமையாக எண்ணி
கொண்டவன் கண்களில் காதல் மின்ன அவளை காதலுடன் ஓரப்பார்வை பார்த்து ரசிக்க, அந்த நொடி அவளும் அவன் பார்வையை கண்டு கொண்டவள், அவன் கண்களில் இருந்த காதலை
கண்டு கொண்டு மனம் குதூகலித்தாலும் அதை மறைத்து கொண்டு
“என்ன? “
என்று தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி வினவ, அதற்குள் தன்னை
சமாளித்து கொண்டவன் ஒன்றுமில்லை என்றதாய் இடவலமாய் தலையை அசைத்து ஒரு மந்தகாச
புன்னகையை இதழில் தவழ விட்டான்.
அதன் பிறகு இருவரும் பேசியவாறே அவர்கள்
வேலை செய்யும் பேக்டரியை அடைந்திருக்க, அதன்பின் இருவரும்
விடைபெற்று அவரவர் பகுதிக்குச் சென்று
அன்றைய நாளை துவக்கினர்.
அமுதனுக்கு அந்த பேக்டரியில் அவன் செய்யும் வேலை மனதுக்கு பிடித்த வேலை என்றாலும் அதில் சிறு உறுத்தலாய்,
சிறு சங்கடமாய், மனதுக்கு பிடிக்காததுமாய் ஒன்றும்
இருந்தது.
அது அவனுடைய ஆண்மையையும், கம்பீரத்தையும்
பார்த்து சில பெண்கள் தானாக அவன் மீது வந்து விழுந்தது.
அவன் எவ்வளவு தள்ளிச் செல்ல
முயன்றாலும், ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி அவன் அருகில்
வருவதும், அவனை தொட்டு பேசுவதும், உரசி நிற்பதுமாய் இருப்பதைத்தான் அவனால்
சகித்துக் கொள்ள முடியவில்லை.
அவனும் மறைமுகமாக எத்தனையோ முறை அவர்களிடம்
எடுத்து சொல்லி விட்டான். அவர்களை முறைத்து பார்த்து எச்சரிக்கையும் செய்து
விட்டான். ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அவனை கவர்வதில் இன்னுமே ஆர்வமாக
இருந்தனர்.
இதைக் கண்ட சத்யாவுக்குமே கடுப்பாக
வந்தது.
“சே... என்ன மாதிரியான பெண்கள் இவர்கள்? தங்கள் தரத்தை தாழ்த்தி கொண்டு இப்படி கீழ்த்தரமாக நடந்து
கொள்கிறார்களே... இவர்களால்தான் மற்ற பெண்களுக்கு கெட்ட பெயர்...” என்று
உள்ளுக்குள் பொங்கியவள் அந்த பெண்களிடம் சண்டைக்கு சென்றாள் சத்யா.
அவர்களும் இது மாதிரி எத்தனை
பேர்களை பார்த்தவர்கள் என்பதால் சத்யாவின்
அதட்டல், மிரட்டல்களை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
சத்யாவும் விடாமல் அவர்களை கேவலமாக திட்டி
வைக்க, ஒரு கட்டத்துக்கு மேல பொறுக்காத அவர்களும்
சத்யாவை முறைத்தவர்கள்
“சும்மா நிறுத்து டி. நாங்க என்ன உன்
புருஷனையா சைட் அடிக்கிறொம்? . பட்டா இல்லாத நிலத்தை யார் வேணாலும்
சொந்தம் கொண்டாடலாம். அப்படித்தான் நாங்கள் பார்த்து ரசிக்கிறோம்.
உனக்கு என்னமா? ஏன்
நீ மட்டும்தான் அவனை பார்த்து சைட் அடிக்கலாம். அவன் கூட ஒட்டிகிட்டு ஊர்
சுத்தலாம். உரசி உரசி பேசலாம். அதையே நாங்க பண்ணா மட்டும் உனக்கு ஏன் எரியுது?
என்னமோ நீதான் அவனுக்கு சொந்தக்காரி
மாதிரி சிலுத்துக்கிற? அமுதன்... எங்க டார்லிங் உன் வீட்ல
வாடகைக்குத்தான் தங்கி இருக்கிறார்.
என்னமோ உனக்கே வீட்டுக்காரன் போல இப்படி பொங்கிட்டு வர்ற?
பேசாம மூடிகிட்டு போ...போய் உன் வேலையை பார்... “ என்று நக்கலாக சிரித்தனர்.
அதை கேட்ட அமுதனுக்கே கோபம் பொங்கி
வந்தது. அந்த பெண்களை அங்கயே அடித்து துவைக்க வேண்டும் போல துடித்தது. முகத்தில்
கோபம் பொங்க, தன் கை முஷ்டியை இறுக்கியவன் அவர்களை
பார்த்து
"ஏய்... இன்னொரு வார்த்தை சத்யா
பத்தி ஏதாவது தப்பா பேசுனிங்க. நான் மனுசனா இருக்க மாட்டேன்... " என்று தன்
கோபத்தை உள்ளடக்கி, பற்களை நரநரவென்று கடித்து உள்ளடக்கிய
கோபத்தோடு வார்த்தைகளை கட்டுப்படுத்தி துப்பினான்.
ஆனால் அந்த பெண்களும் அதற்கெல்லாம்
அசருபவர்கள் போல தெரியவில்லை.
“இதோடா... இவளை சொன்னா மச்சானுக்கு கோபம் வருது. மச்சானை சொன்னால் இவளுக்கு பொங்கி வருது. அப்படி என்றால் உங்க
ரெண்டு பேருக்கும் இடையில் சம்திங்? சம்திங்? “ என்று குறும்பாக கண்ணடித்து சிரித்தாள் ஒருத்தி.
அதைக்கேட்டு அமுதன் இன்னும் டென்ஷனாகி
அவன் கையை உயர்த்த போக, சத்யாவுக்கும் அவள் முகம் சிவந்து போக, புசுபுசுவென்று கோபம் வந்ததுதான்.
ஆனால் தங்கள் கோபத்தை காட்டும் இடம்
அதுவல்ல என்று தன்னை கட்டுபடுத்தியவள் உடனே அமுதன் கையையும் பிடித்து அவர்களை அடித்திராதவாறு
தடுத்தவள் அந்த பெண்களை பார்த்து .
“இப்ப என்னங்கடி வேணும்? அவர் ஒன்னும் பொறம்போக்கு நிலம் இல்ல எல்லாரும் பார்த்து சைட் அடிக்கிறதுக்கும்
ஒட்டி உரசறதுக்கும். . அவர்க்கு சொந்தக்காரி நான்தான்.
அவர் என் ஆளுதான். இப்ப வாங்கடி எவளாச்சும்
பல்ல இளிச்சுகிட்டு...” என்று தன் கை முஷ்டியை இறுக்கி அங்கிருந்த பெண்களை
பார்த்து முறைத்தாள் சத்யா.
அதைக்கேட்ட அமுதன் திடுக்கிட்டு
அதிர்ந்து போனான். ஆனாலும் சத்யா
சொல்லியதை கேட்டு, உள்ளுக்குள் மழைச் சாரலாய், பனித் தூறலாய் ஒரு இதம் மனதினில் பரவியதுதான்.
அவளும் தன்னை விரும்புகிறான் என்று அமுதனும்
புரிந்து கொண்டான்தான். ஆனால் அதை இப்படி பப்ளிக்காக போட்டு உடைப்பாள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை
அமுதன்.
அதனால் தன் மகிழ்ச்சியை தன்னுள்ளே மறைத்துக்
கொண்டு சத்யாவை அதிர்ச்சியுடன் பார்த்தவன்,
“என்ன சத்யா ? “ என்று
கேட்டு ஏதோ சொல்ல வர, சத்யாவோ கண்ணால் ஜாடை காட்டி எதுவும் பேசவேண்டாம் என்று சைகை
செய்தாள்.
அவளின் சமிஞ்சையை கண்டு கொண்டவன் எதுவும்
பேசாமல் அமைதியாக நின்று கொண்டான்.
அதிலிருந்து அந்த பெண்களும் அமுதனை
கண்டாலே கொஞ்சம் தள்ளி நின்று கொள்வர். ஆனாலும்
அவனை சற்று தள்ளி நின்று பார்த்து சைட் அடிப்பதை நிறுத்தவில்லை.
அமுதனும் அவர்களை
உதாசீனப்படுத்திவிட்டு தன் வேலையில் கவனத்தை செலுத்தினான்.
அன்று இரவு, இரவு உணவை முடித்து விட்டு மாடிக்கு தனது அறைக்கு
வந்தவன், அந்த
மொட்டை மாடியிலேயே முன்னும் பின்னும் நடந்து கொண்டிருந்தான்.
அவனுக்கு குழப்பமாக இருந்தது. எதை எதையோ யோசித்தபடி குறுக்கும் நெடுக்குமாய்
நடந்து கொண்டிருந்தான் அமுதன்.
“எந்த கோட்டையை பிடிக்க இந்த அமுதன் மகாராஜா இவ்வளவு தீவிரமாக யோசித்துக்
கொண்டிருக்கிறார்?...” என்று சிரித்தவாறு அங்கு வந்து நின்றாள் சத்யா.
அவளை கண்டதும் இப்பொழுது அவன் உள்ளே சிறு
படபடப்பு...
கொஞ்சமாய் முகத்தில் இளம் வெக்கம் படர, சத்யாவை பார்த்து புன்னகைத்தவன்
“நீ ஏன் அப்படி சொன்ன சத்யா? “ என்றான் புருவத்தை உயர்த்தி
“எப்படி சொன்னேன்? “ என்றாள் அவளும் உதட்டுக்குள் சிரித்தபடி
“அது வந்து?
என்னை உன் ஆள் என்று ஏன் சொன்னாய்? “ என்றான் சற்றாய் தவிப்புடன்...
“அடப்பாவி... இப்ப கூடவா என் மனம் உனக்கு
புரியவில்லை.? என் ஆளை என் ஆளுனு சொல்லாம வேற எப்படி சொல்றதாம்.
அப்படியாவது என் காதலை சொல்லி விட்டேனே
என்று சந்தோஷப்டாமல் அதை உட்கார்ந்து... இல்ல...அதைப் போய் இப்படி குட்டி போட்ட
பூனை மாதிரி நடந்து கிட்டே தீவிரமா ஆராய்ச்சி பண்றானே..
இவனை எத வச்சு அடிக்க... “ என்று
உள்ளுக்குள் புலம்பியவள் அதை வெளியில் காட்டி கொள்ளாமல்
“ஹ்ம்ம் அதனால என்னப்பா ஆச்சு? அவளுங்க வாயை அடைக்கத் தான்
அப்படி சொன்னேன்...” என்றாள் உள்ளுக்குள் அவனை வசை பாடியபடி.
“ஓ அப்படியா...அப்பாடா... இப்பதான் எனக்கு
நிம்மதியா இருக்கு... “ என்று ஒரு பெருமூச்சு எடுத்து விட்டான் அமுதன்.
அதைக் கண்டவள் முகம் கடுப்பாக
“இப்ப எதுக்கு இந்த பெருமூச்சு? நான் நடிப்பு ன்னு
சொன்னவுடனே அவ்வளவு சந்தோசமா?
என்ன
பாஸ் ? அதுக்குள்ள வேற யாரையாவது செட்டப்
பண்ணிட்டீங்களா?
லுக் மிஸ்டர் அமுதன்... என்னை தவிர வேற
யாரையாவது ஆர்வமா பார்த்தீங்க, இல்லை சைட் அடிச்சிங்க, அந்த முட்ட கண்ண தோண்டி
கையில கொடுத்திடுவேன்... ஜாக்கிரதை...” என்று விரல் நீட்டி மிரட்டியவள்
“நான் அவளுங்க கிட்ட சொன்னது எல்லாம்
பொய்யில்லை. என் அப்பா எப்பவும் உண்மையை மட்டும்தான் சொல்ல வேண்டும் என்று சொல்லி
கொடுத்து வளர்த்த்திருகிறார்.
அதனால் நான் சொன்ன மாதிரி நீங்க என்
ஆளுதான்...அவளுங்க கிட்ட நெஞ்சை நிமிர்த்தி தைர்யமா சொல்லுங்க. நீங்க அல்ரெடி இந்த
சத்யா கிட்ட கமிட்டட் னு...” என்று படபடவென்று பொரிந்தவள் அடுத்த கணம் வெட்க பட்டு
சிரித்தபடி வேகமாக அங்கிருந்து
ஓடிவிட்டாள்.
அதைக்கண்ட அமுதனுக்கு என்னவோ புரிவது
போல இருந்தது.
மனதுக்குள் மத்தளம் கொட்ட, மேளதாளங்கள் முழங்க , அப்பப்ப அவனை பார்த்து கண்சிமிட்டி சிரிக்கும் அவன் தேவதை மொத்தமாய்
அவன் மனதில் குடி புகுந்தாள்.
அவள் வீட்டின் மகாராணியாய் எல்லாரையும் அதட்டி மிரட்டி ஆட்சி செய்பவள் இப்பொழுது
அவனுக்கும் மகாராணியாய் அவன் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டாள்.
எப்படி அவளிடம் தன் காதலை சொல்வது
என்று தவித்து கொண்டிருந்தவனுக்கு சிரமமே வைக்காமல் அவளாகவே அவள் மனதை சொல்லி
விட்டாள்.
மற்ற காதலர்களை போல ஐ லவ் யூ என்று
சொல்லி கட்டி அணைத்து முத்தமிடாமல், அதிரடியாய், சரவெடியாய், எவ்வளவு அழகாய் நேரடியாக தன் மனதை சொல்லி விட்டாள் என்று எண்ணியவனுக்கு
உள்ளம் பூரித்து போனது...
அவளின் அந்த அதிரடி ப்ரபோசலை எண்ணி அவன்
இதழில் பெரிதாய் பூத்தது வெட்க புன்னகை ஒன்று.
அவனுடைய சிட்சுவேசனுக்கு தகுந்த மாதிரி
சற்று தொலைவில் இருந்த பக்கத்து வீட்டு மாடியிலிருந்தவரின் அலைபேசியில் இருந்து பாடல் ஒன்று ஒலித்தது...
சொல்லிட்டாளே அவ காதல...
சொல்லும் போதே சுகம் தாளல...
இது போல் ஒரு வார்த்தைய யாரிடமும் நெஞ்சு
கேக்கல...
இனி வேறொரு வார்த்தையே கேட்டிடவும் எண்ணி
பார்க்கல...
அவ சொன்ன சொல்லே போதும்...
அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்...!
தன் பின்னந்தலையை கைகளால் கோதியவாறு மெல்ல
புன்சிரிப்புடன் தன் கரங்கள் இரண்டையும் ட்ராக் பேன்ட்டுக்குள் விட்டு கொண்டு
மெல்லமாய் விசில் அடித்தான் அமுதன் ஆனந்தத்தில்.
இது கூட,
எப்படி விசில் அடிப்பது என்பதைக் கூட
சத்யா தான் சொல்லி
கொடுத்திருந்தாள்.
அவன் மனம் முழுவதும் மகிழ்ச்சியில்
நிறைந்து வழிய, அந்த ரம்மியமான நிலவொளியில் தன்னவளை
எண்ணியவாறு சற்று நேரம் உல்லாசமாய் விசில்
அடித்தபடி நடை பயின்றவன்
பின் தன் படுக்கையை மொட்டை மாடியில்
விரித்து மல்லாந்து படுத்துக்கொண்டு தலைக்கு அடியில் கையை மடித்து வைத்து கொண்டு அந்த
நிலவில் தெரிந்த அவனுடைய சதுவின் முகத்தை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்
அமுதன்.
கோடி கோடியாய் கொட்டி கொடுத்தாலும்
இந்த நிமிடத்து சந்தோஷம், அது தரும் சுகம் தந்துவிட முடியாது
என்றுதான் தோன்றியது அவனுக்கு.
அந்த ஏகாந்தத்தில் அப்படியே கண் மூடி தன்னவளுடன் கனவுலகத்தில் சஞ்சரிக்க ஆரம்பித்தான் அமுதன்...!
Sema proposal mam
ReplyDelete:) Thanks pa!
Delete