காந்தமடி நான் உனக்கு!!-14

 



அத்தியாயம்-14

டுத்து வந்த நாட்கள் றெக்கை கட்டி பறந்தன...

அமுதன் திட்டமிட்டது போலவே அவனுக்கு Zomato ல் வேலை கிடைத்து விட்டது.

இருசக்கர வாகனத்திற்கு சத்யா உடைய தந்தையின் பைக்கை எடுத்துக் கொண்டவன் அடுத்ததாய் ஸ்மார்ட்போன் வேண்டும் என்பதால் சத்யாவே அவனுக்காக குறைந்த விலையில் ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கிக் கொடுத்தாள்.

அவன் எவ்வளவோ மறுத்தும் அவள் விடாமல் கட்டாயப்படுத்தி அதை வாங்கி கொடுத்திருக்க, அமுதனும் அதை தன் சம்பளத்தில் திருப்பி கொடுத்து விடுவதாக கூறி வாங்கிக் கொண்டான்.  

முன்பு ஃபேக்டரியல் பார்த்த வேலையை விட இந்த வேலை இன்னுமே மனதிற்கு இதத்தைக் கொடுத்தது. பல இடங்களுக்கு செல்ல வேண்டும்... பல விதமான மக்களை சந்திக்க, அவனுக்கு ரொம்பவுமே பிடித்துவிட்டது.

கூடவே வாடிக்கையாளர்கள் கொடுக்கும் டிப்ஸ் ம் சேர்ந்து கொள்ள,  கணிசமான தொகையும் மாதம் தோறும் அவன் கையில் புரண்டது.

அதை செலவு செய்து விடாமல் மாதம் தோறும் வாடகைக்கும், சாப்பாட்டுக்கும்  என்று கட்டாயப்படுத்தி ஒரு தொகையை வளர்மதியிடம் கொடுத்து விட்டான்.

மீதமிருந்த பணத்தில் அவனுக்கென்று சில ஆடைகளையும் வாங்கிக் கொண்டான். அதோடு அவனுடைய முதல் மாத சம்பளத்தில் அந்த தெருவில் அவனோடு விளையாடும் சிறுவர்களுக்கு எல்லாம் சாக்லெட் வாங்கி கொடுத்தான்.

இப்பொழுதெல்லாம் அந்த தெரு முழுவதுமே அமுதன் ஃபேமஸ் ஆகிவிட்டான். ஒருநாள் அவன் விளையாட செல்லவில்லை என்றாலும் அவனை தேடி கொண்டு வந்து விடுவர் அந்த வாண்டுகள்.

அதிலும் டிங்குதான் அவனுக்கு பெட். அவனுமே அமுதன் ணா என்று அவன் பின்னாலயே சுத்தி கொண்டிருப்பான்.

தன் முதல் மாத சம்பளத்தில் சத்யாவிற்கும் ஒரு ஜோடி வெள்ளிக் கொலுசுகளை வாங்கி பரிசளித்தான் அமுதன்.

அதை கண்டு உள்ளுக்குள் மகிழ்ந்து போனாலும், அவனுக்கு எதுக்கு வீண் செலவு என்று எண்ணி வேண்டாம் என்று சத்யா மறுக்க,  அவனோ

“இது,  கருப்பு வெள்ளையாய் இருந்த என் வாழ்வை வண்ணமயமாக்க வந்த என் தேவதைக்கு இந்த சிறு அர்ப்பணிப்பு. அடியேனின் சின்ன பரிசு தான் இது.

நான் இன்னும் மேலும் மேலும் முன்னேறி உன்னை மகாராணி போல கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்வேன் சது. அதுவரைக்கும் நம் காதல் உன் வீட்டில் தெரிய வேண்டாம்.

நான் ஒரு நல்ல நிலைக்கு வந்ததும் முறைப்படி ஆன்ட்டியிடம் உன்னை பெண் கேட்கிறேன். அப்பொழுதுதான் அவர்களுக்கும் சங்கடம் இல்லாமல் மனம் மகிழ்ந்து உன்னை எனக்கு தருவார்கள்.

அதனால் நீ இப்பொழுது எதுவும் சொல்லாதே..”  என்று வேண்டுதல் விடுக்க அவளுக்கும் அவன் சொல்வது சரியாக படவே ஒத்துக் கொண்டாள்.

தன் அன்னையின் முன்பும் சகோதரிகளின் முன்பும் இருவரும் நண்பர்களாகவே பழகினர்.

அவன் சாப்பிட வரும்பொழுது இருவரும் பரிமாறிக்கொள்ளும் கண் பார்வை மட்டும் தான் காதலர்களுக்கு உரித்தான சமிஞ்சை.

சில நேரம் இரவில் சத்யா மாடிக்கு வந்து அவனிடம் பேசிக்கொண்டிருப்பாள்.  

பொதுவாகவே அவள் எல்லோரிடமும் கலகலப்பாக சிரித்துப் பேசுவதால் மேலும் சத்யாவை பற்றி நன்கு அறிந்தவர்கள் என்பதால் அவர்கள் இருவரும் பழகுவதை பற்றி யாரும் எதுவும் தப்பாக சொல்லிவிட வில்லை.

நாட்கள் செல்லச் செல்ல இருவரின் காதலும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து விருட்சமாக நின்றது.

அமுதன் சது என்று செல்லமாக அழைப்பதும்,  பெண்ணவள் அமுதனை  சுருக்கி அம்மு என்று கூப்பிடும் அளவுக்கு மனதால் நெருக்கமாக நெருங்கி  இருந்தார்கள்.

பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறந்த அந்த காதல் பறவைகள் மீது யார் கண் பட்டதோ. விரைவிலேயே இருவரும் பிரிய நேர்ந்தது. அதுவும் அவளால்தான் அது நேர்ந்தது என்று எண்ணியவள் ஒரு நீண்ட பெருமூச்சை எடுத்து விட்டுக் கொண்டு அன்றைய சம்பவத்தை ஆராய்ந்து பார்த்தாள் சத்யா.  

ரு நாள் பௌர்ணமி நிலவு ஜொலி ஜொலிக்க,  மொட்டை மாடியில் டேங் க்கு செல்லும் படிகளில் அமர்ந்திருந்தனர் இருவரும்.

அமுதன் இரண்டு படிகள் மேலே அமர்ந்திருக்க,  இரண்டு படி தள்ளி கீழே அமர்ந்தவள்  அவன் தொடை மீது  தலை சாய்த்திருந்தாள் சத்யா.

அவன் கரங்களும் அவளின் பட்டுக் கூந்தலை மென்மையாக வருடிக் கொண்டிருக்க அவள் கூந்தலில் இருந்த மல்லிகை மணம் அவனுக்கும் புது வித கிறக்கத்தை தூண்டியது.

அப்போது தான் அவனுக்கு நினைவு வந்தது பாரதியார் கவிதை ஒன்று.

பாரதியார் கவிதைகள் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் பெரிதாக தெரிந்திருக்கவில்லை அவனுக்கு. இப்பொழுதெல்லாம் அதுவும் காதல் கொண்ட பிறகு பாரதியின் காதல் வரிகள் அவனுக்குள் ஒரு பரவசத்தை ஊட்ட, அடிக்கடி அவரின் பாடல்களை கேட்டு கொண்டிருப்பான் அமுதன்.

அதுவும் பாயும் ஒளி நீ எனக்கு கவிதையை பல ஆயிரம் முறை கேட்டு இருக்க, அதன் ஒவ்வொரு எழுத்தும், ஏன் கமா,  புல் ஸ்டாப் கூட அவனுக்கு மனதில் பதிந்து போனது.  

தற்பொழுது அந்த ரம்மியமான் சூழலில் அந்த  பாடல் நினைவு வர தன்னுடைய வசீகரக் குரலில் அந்த பாடலை அனுபவித்து ரசித்து பாடினான் அமுதன்.  

பாயுமொளி நீ எனக்கு... பார்க்கும் விழி நான் உனக்கு...

தோயும் மது நீ எனக்கு... தும்பியடி நான் உனக்கு...

வாயுரைக்க வருகுவதில்லை வாழிநின்றன் மேன்மை எல்லாம்

தூய சுடர் வானொலியே... சூரையமுதே கண்ணம்மா...!

 

வீணையடி நீ எனக்கு... மேவும் விரல் நானுனக்கு...

பூணும் வடம் நீ எனக்கு... புது வைரம் நான் உனக்கு...

காணுமிடந்தோறும் நின்றான் கண்ணினொளி வீசுதடி...

மானுடைய பேரரசே வாழ்வு நிலையே கண்ணம்மா...

:

:

பாரதி தன் கண்ணம்மாவை எண்ணி காதல் கசிந்துருக பாடிய அந்த பாடலின் வரிகளை அமுதனுமே ரசித்து, அனுபவித்து அவனுடைய கண்ணம்மாவிற்காக ஆழ்ந்த குரலில் பாடி கொண்டிருந்தான்.

பெண்ணவளும் அவனின் வசீகரக் குரலில் மெய் மறந்து அந்த பாடலை கேட்டு ரசித்திருக்க, அப்பொழுது வந்த காதலடி நீ எனக்கு என்ற வரிகளை பாடும்பொழுது ரொம்பவுமே தழுதழுத்து காதல் மயக்கத்தில் கிறங்கித்தான் போனான் அமுதன்...

ஒரு கரம் அவளின் பட்டான கூந்தலை வருடி கொண்டிருக்க, மற்றொரு கரமோ தன்னவளின் பட்டு  இதழ்களை வருடியபடி மீண்டுமாய் காதலடி நீ எனக்கு... என்று அனுபவித்து அந்த வரியை அழுத்தி சொல்ல, பெண்ணவளும் அந்த பாடலை அவன் பாட ஆரம்பித்ததிலயே தன் வசம் இழந்து விட்டாள்.

அதுவும் இப்பொழுது அவன் ரசித்து, அனுபவித்து,  தன்னை பாரதியின் கண்ணம்மா போல ஆராதித்து, காதல் கசிந்துருக, அந்த வரிகளை ரசனையாய் பாட, அதில் இன்னுமே கிறங்கி போனாள் சத்யா.

மையலுடன் தன்னவனை விழி விரித்து பார்த்திருந்தாள் பெண்ணவள்.

தன்னவளின் அந்த காதல் மோகம் கொண்ட, மையல் சூழ்ந்த முகத்தை இன்னுமாய்,  வெகுவாய் ரசித்தவாறு அவன் அந்த பாடலின் அடுத்த வரியை பாட எத்தனிக்க,  உடனே அவனுடைய இதழ்களை மெதுவாக தன் கரங்களை வைத்து மூடியவள்,  அடுத்து வரும் காந்தமடி நானுனக்கு என்ற வரிகளை மாற்றி,

காந்தமடா நீ எனக்கு...”  என்று பாடி மையலுடன் கண் சிமிட்டி சிரித்தாள் சத்யா.

அதைக் கேட்டு கன்னத்தில் குழி விழ, அழகாய் வெட்கபட்டு புன்னகைத்தான் அமுதன்.

அந்த வசீகர புன்னகையில் இன்னுமே தொலைந்து போனவள், அவன் கன்னத்து குழியையே ரசனையுடன் ஒரு கணம் ரசித்தவள், தன்னை மறந்து  முதன் முறையாய் எம்பி அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள் சத்யா...

அமுதனோ அந்த எதிர்பாராத முத்தத்தில், இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிப் போனான்.

என்னதான் இருவரும் காதலர்கள் என்றாலும் இதுவரை இருவருமே வரம்பு மீறி நடந்து கொண்டதில்லை.  கண்களால் காதல் பேசுவதும்,  எப்பொழுதாவது கரங்களை கோர்த்துக் கொள்வது மட்டும்தான் அவர்களிடையே.

இன்று அவளாகவே அவன் கன்னத்தில் இதழ் பதித்திருக்க,  அதில்  கிறங்கி தன்னிலை மறந்தவன் அடுத்த கணம் அவளை இழுத்து தன்னோட சேர்த்து இறுக்கி அணைத்து கொண்டவன் தாபத்துடன் அவள் செவ்விதழில் தன் இதழ் பதித்தான்.  .

அவனின் இறுகிய அணைப்பில் கிறங்கியவள், அவனின் அழுத்தமான இதழ் அணைப்பில் இன்னுமாய் உருகியவள்,  அவனின் பரந்த முதுகை சுற்றி தன் மென் கரங்களால் அணைத்தவாறு அவனின் வேகத்திற்கு ஈடு கொடுத்தவாறு அவன் இதழுள் முழுவதுமாய் தொலைந்து கொண்டிருந்தாள்.

அவர்களின் அந்த ஏகாந்த நிலையை கண்டு அந்த நிலா பெண்ணும் வெட்கபட்டு முகிலின் போர்வைக்குள் ஒளிந்து கொண்டு கண்ணை மூடிக்கொள்ள, அதன் தோழிகளான தாரகைகளோ தங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டமாய் அந்த காதல் ஜோடியை ஆசை தீர கண்டு ரசித்தன. 

வெகு நீண்ட நேரம் நீடித்தது அவர்களின் இதழ் அணைப்பு போர். இருவருமே  விட்டு கொடுக்காமல், மற்றவருக்கு ஈடு கொடுத்து அந்த முத்த யுத்தத்தில் இறங்கி இருக்க, அதில் குதூகலமானது இருவரின் மனமும் உடலும் தான்.

இருவர் மனதிலும் காதல் கசிந்துருக, இருவரும் ஒருவருக்குள் ஒருவராய் கரைந்து  கொண்டிருந்தனர்.

இருவரும் தங்களை மறந்து,  சூழலை மறந்து,  காதல் போதையில் கட்டுண்டவர்களாய் கிறங்கிப் போய் கிடந்த நிலையில்,  அவர்களின் ஏகாந்த நிலையை அறிவுறுத்தும் படியாய்,  அபாய சங்காய் ஒலித்தது அமுதனின் அலைபேசி...

அந்த சத்தத்தில் திடுக்கிட்டு விழித்தவர்கள் அப்பொழுதுதான் அவர்கள் இருக்கும் கோலம் புரிய, உடனே விலகிக் கொண்டனர்.

சத்யாவிற்கோ  முகம் சிவந்து போய் அவனை ஏறெடுத்துப் பார்க்க முடியவில்லை.

தன் இதழை பற்களால் அழுந்த கடித்தபடி, முகம் சிவக்க, அவனை விட்டு விலகி, படியில் இருந்து எழுந்தவள் அடுத்த கணம் ஒரு வெட்க புன்னகையை சிந்திவிட்டு மாடியில் இருந்து தடதடவென்று கீழே இறங்கி ஓடி விட்டாள்.  

அவன் வாங்கி அணிவித்திருந்த அந்த கொலுசும் அவளோடு சேர்ந்து கொஞ்சி விளையாண்டவாறு அவளோடு  செல்ல, அமுதனோ ஒரு சில நொடிகள் பேச்சற்று நின்று விட்டான்.  

என்ன நடந்தது என்று புரிய சில நொடிகள் ஆனது. பின் அவன் செய்த செயல் நினைவு வர, உடனே கொஞ்சம் வெட்கமும்,  கொஞ்சமாய் குற்ற உணர்வாக இருந்தது.

“சை....எப்படி இப்படி நடந்து கொண்டேன்?  அவள்தான் ஏதோ தன்னை மறந்து முத்தம் கொடுத்தாள் என்றால் நான் ஏன் அவளிடம் அப்படி நடந்து கொண்டேன்?

அப்படி என்ன அவசரம் டா உனக்கு? என்னை பற்றி என்ன நினைத்திருப்பாள்? சரியான இடியட்... ஸ்டுப்பிட்...” என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டான் அமுதன்.  

ஆனாலும் அவன் இதழில் இன்னுமாய் குடி கொண்டிருந்த அவள் இதழின் ரசம் அவனின் உயிர் வரை சென்று தித்தித்தது.

முதன்முதலாய் ஒரு பெண்ணின் தீண்டல்அதுவும் தன் மனம் கவர்ந்தவளின்தன்னவளின் தீண்டல்... அவன் ஒவ்வொரு அணுவிலும் கலந்து பரவசத்தை கொடுக்க... தன்னவளின் தீண்டலுக்கும், இதழ் அணைப்பிற்கும் மீண்டுமாய் அவன் உடலும் மனமும் ஏங்கியது.

மார்புக்கு குறுக்காக கைகளை கட்டி கொண்டு தன் உடலை இறுக்கி கொண்டு தன்னை கட்டுக்குள் கொண்டு வர,  அந்த மாடியில் நீண்ட நேரம் நடை பயின்றான் அமுதன்...!

Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!