காந்தமடி நான் உனக்கு!!-15
அத்தியாயம்-15
மேலும் ஒரு மாதம் கடந்து இருந்தது.
அன்று காலையில் எழும் பொழுதே அமுதனுக்கு
ஒரு மாதிரியாக, மனதில் பெரும் பாரமாக, எதுவோ நடக்கக் கூடாதது நடக்கப்
போவதைப் போல அவன் மனம் தவித்தது.
ஆனால் ஏன்,
எதற்கு என்று புரியவில்லை. அதே தவிப்புடன் கிளம்பி தன் பணிக்கு சென்று விட்டான்.
நேரம் ஆக, ஆக அவன் தவிப்பு தணியவில்லை. இன்னும்
கூடுதலானது.
ஏதோ கெட்டது நடக்க போகிறது என்ற
மாதிரியான தவிப்பு, வேலை நேரத்திலும் தொடர, அவனுக்குள் ஏதோ ஒரு
இனம்புரியாத பயம் வந்து சூழ்ந்து கொண்டது.
மதியம் வரை தன்னுள்ளே முயன்று போராடியவன்
அதற்குமேல் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் கிளம்பி சத்யாவின் பேக்டரிக்கு சென்றான்.
அங்கு வேலை செய்த பழக்கத்தால்
வாட்ச்மேன் கதவை திறந்து விட, உணவு இடைவேளையில் அப்பொழுதுதான் அவள் கொண்டு
வந்திருந்த மதிய உணவை முடித்து, டிபன் பாக்சை மூடி வைத்தவள் தன் தோழி
சுகன்யாவுடன் சிரித்து கதை பேசிக் கொண்டிருந்தாள் சத்யா...
அமுதன் அவள் முன்னே சென்று நிக்க, அவளோ ஆச்சர்யத்தில் தன் கண்களை அகல விரிக்க,
அதில் கட்டுண்டவன் ஒரு நொடி ரசனையோடு அவளின் மான் விழிகளை ரசித்தவாறு அசந்து
நின்று விட்டான்.
அடுத்த நொடி தான் வந்த வேலை மண்டையில்
உறைக்க, தன்னை
உலுக்கி கொண்டு அவளிடம் பேச வேண்டும் என்று சொல்லி அவளை வெளியில் அழைத்து வந்தான்.
அவனின் முகத்தில் இருந்தே ஏதோ
சரியில்லை என்று யூகித்தவள் எதுவும் கேட்காமல் அவனை பின் தொடர்ந்தாள் சத்யா.
அருகில் இருந்த ஒரு பூங்காவிற்கு
அழைத்து சென்றவன், ஒதுக்கு புறமாய் இருந்த ஒரு சிமெண்ட் பெஞ்சில்
அமர்ந்து கொண்டு, தன் கண்களை இறுக்க மூடி கொண்டான்.
அழுத்தமாய் மூடி இருந்த இமைகளின்
பின்னால் இருந்த கண்மணிகளில் பரவி கிடந்த வேதனை பெண்ணவளுக்கும் புரிகிறதுதான். அதை
கண்டு பதறியவள் அவசரமாய் அவன் அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டவள்
“என்னாச்சு அம்மு? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க? உடம்பு ஏதும் சரியில்லையா? “ என்று அக்கறையுடன்
விசாரித்தவாறு அவன் நெற்றியில் கை வைத்து சுரம்
எதுவும் இருக்கிறதா என்று பார்த்தாள்.
அவள் கையைப் பற்றி இழுத்து அதில்
அழுத்தமாய் முத்தம் பதித்தவன்
“நாம இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாமா சது? “ என்றான் திடீரென்று.
அதைக் கேட்ட சத்யாவும் அதிர்ந்து போனாள்.
ஒருவேளை அவன் எதுவும் விளையாடுகிறானோ
என்று எண்ணியவாறு அவனை குழப்பத்துடன் பார்த்தவள்
“என்னாச்சுப்பா? ஏன் இவ்வளவு அப்செட் ஆ இருக்கிங்க? “என்றாள் முழு மொத்த கரிசனத்துடன்.
“ப்ச்... தெரியலை சது... ஆனால் என்னவோ
தப்பா நடக்க போகிற மாதிரி இருக்கு. நம்மள யாரோ பிரித்து விடுவார்கள் போல இருக்கு.
அதுதான் காலையில் இருந்து ஒரு மாதிரி மனதை பிசைந்து கொண்டே இருக்கிறது.
என்னால வேலையிலும் கவனம் செலுத்த
முடியலை. பேசாம நாம ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்... இப்பவே... அதற்குப் பிறகு
வீட்டில் சொல்லிக் கொள்ளலாம்....” என்று
பரபரப்பாக சொல்லி அடம்பிடிக்க, சத்யாவோ அதிர்ந்து போய் அவசரமாக யோசித்தாள்.
அவனைப் போல எடுத்தோம் கவிழ்த்தோம்
என்று எதையும் செய்துவிட முடியாதே...
இப்பொழுது அவள் தந்தையின் இடத்தில்
இருந்து, தன் குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் பொறுப்பில்
இருக்கிறாள் சத்யா.
அவளுடைய இரண்டாவது தங்கை இப்பொழுதுதான்
கடைசி வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள். எப்படியும் கேம்பஸ் செலக்சனில் தேர்வாகி
விட்டால், அவளும் ஒரு வேலைக்கு சென்று விட்டால், அவளுடைய பாரத்தை கொஞ்சமாய் இறக்கி வைத்து விடலாம்.
அதன் பிறகு எந்த தயக்கமும் இல்லாமல்
தனக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டு இருக்க, இவனோ திடீரென்று கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம் என்று சொல்ல அவளுக்கோ தூக்கிவாரிப்
போட்டது.
“அது.... வந்து... இன்னும் கொஞ்ச நாள்
போகட்டுமே பா...நீங்கள் இன்னும் கொஞ்சம் செட்டில் ஆகுங்க அம்மு...பிறகு வீட்டில்
சொல்லி கல்யாணம் பண்ணிக்கலாம்....” என்று தயக்கத்துடன்
இழுக்க,
அதைக் கேட்டவன் முகமோ லேசாய்
இறுக்கமடைந்தது.
“அப்ப நீ என்னை நம்பவில்லை இல்ல. என்னால்
இதுக்கு மேல முன்னேற முடியாது. இந்த டெலிவரி பாய் வேலையிலயே நின்று விடுவேன் என்று
பயமா இருக்கா? “ என்றான் இறுகிய முகத்துடன் கடுமையான
குரலில்.
“ப்ச்... அப்படி இல்லப்பா....எனக்கும்
சில பொறுப்புகள் இருக்கு. அதை அப்படியே விட்டுட்டு உங்க பின்னாடி வந்துட முடியாது.
திவ்யாவை செட்டில் பண்ணிட்டா அப்புறம்
வரும் வாடகை வைத்து நித்யாவின் படிப்பை சமாளித்து விடலாம். அதுதான் இன்னும் ஒரு இரண்டு
வருடங்கள் காத்திருங்களேன்... “ என்று பொறுமையாக
அவள் பக்கத்தை அவனுக்கு விளக்க முயன்றாள்.
அவனோ அதை புரிந்து கொள்பவனாக
தெரியவில்லை.
“ப்ச்...இனிமேல் உன்னை பிரிந்து என்னால்
இருக்க முடியாது சது. அதனால்தான்
சொல்கிறேன். நம்மை யாரோ பிரித்து விடுவார்கள் போல இருக்கு. அதுக்குத்தான் நாம
இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம்...”
“ப்ச்.. அப்படி யார் நம்மை பிரித்து
விடப்போகிறார்கள் பா. அம்மாவுக்கு நம்ம விசயம் ஏற்கனவே மேலோட்டமா தெரியும் னுதான்
நினைக்கிறேன். கண்டிப்பா அவங்க நம்ம காதலை எதிர்க்க மாட்டாங்க.
அவங்களுக்கு நீங்கனா ரொம்ப இஷ்டம்.
சோ... என் சைட் இருந்து எந்த எதிர்ப்பும் இருக்காது. உங்க பக்கம் எப்படியோ ?” என்று அவனை கேள்வியாக பார்க்க,
“ஹ்ம்ம்ம் தெரியலை சது....இதுதான் னு
தெரியலை. ஆனால் மனசு அடிச்சுக்குது. ஏதோ சம்திங் பேட் கோயிங் டு
ஹேப்பன்ட்...ப்ளீஸ் ட்ரஸ்ட் மீ...நாம இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம்..."
என்றான் மீண்டுமாய் கெஞ்சலுடன் முகத்தில் வேதனையுடன்.
சற்று நேரம் தன் தலையை இரு கையால்
அழுத்தி பிடித்து கொண்டவள், சற்று நேரம் ஏதோ யோசித்தவள், பின் தன் தலையை நிமிர்ந்து
அவனை ஊடுருவி பார்த்தவள்
“என் மீது உங்களுக்கு நம்பிக்கை
இல்லையா அம்மு? நான் உங்களை விட்டு விட்டு வேறு யாரையாவது
கல்யாணம் பண்ணிக்குவேன் என்று இருக்கிறதா?“ என்றாள் அவன்
கண்களை ஆழ்ந்து பார்த்தவாறு.
“ப்ச்...அதெல்லாம், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை
சது. உன்னை பற்றி எனக்கு தெரியாதா? இது வேற மாதிரியான ஃபீலிங். சில
விஷயம் என்னால் நேரடியாக சொல்ல முடியாது. நாம் இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம்...ப்ளீஸ்...
“ என்றான் மீண்டும் கெஞ்சுதலாக.
அதைக் கேட்டு தன் பொறுமையை இழந்தவள்
அவனை பார்த்து காரமாய் முறைத்தவள்
“கல்யாணம் னா உங்களுக்கு விளையாட்டா
இருக்கா அம்மு. அது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா? ஆர
அமர, யோசித்து, திட்டமிட்டு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து மனம்
பூரிக்க செய்ய வேண்டும்.
அதை விடுத்து வா டிபன் சாப்பிடலாம்
என்பது போல வா கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேசுவலா திடுதிப்புனு சொல்றிங்க?
இப்போதைக்கு என்னால் திருமணம் செய்து
கொள்ள முடியாது அம்மு. இன்னும் இரண்டு வருடங்கள் ஆகும். நான் சொன்னது போல என்
தங்கைகளை செட்டில் பண்ணிவிட்டுத்தான் எனக்கான வாழ்க்கையை அமைத்து கொள்வேன்...” என்றாள்
உறுதியான குரலில்.
அதைக்கேட்டு அவனுக்கு லேசான கோபம்
எட்டிப் பார்த்தது...தன் ஆத்திரத்தை கட்டுபடுத்த,
தன் கை முஷ்டியை இறுக்கி கொண்டவன்,
“நான் என்ன இப்பவே கல்யாணம்
பண்ணிக்கிட்டு, இன்னைக்கே குடும்பம் நடத்தனும் என்றா சொல்கிறேன் சது?
உன் குடும்பத்தை,
உன் பொறுப்பை விட்டுவிட்டு என் பின்னால் வர சொல்ல நான் ஒன்னும் சுயநலவாதி இல்லை...
நாம் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம். அபீசியலா,
சட்ட பூர்வமா நாம் இரண்டு பேரும் கணவன் மனைவி ஆகிடலாம்.
நீ எப்பொழுதும் போல உன் கடமையை செய்.
நான் நல்ல நிலைக்கு வந்த பிறகு இருவரும் வீட்டில் சொல்லி நம் வாழ்க்கையை
ஆரம்பிக்கலாம்...”
“இல்லை...இதெல்லாம் திரைப்படத்தில்
பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். நடைமுறைக்கு ஒத்துவராது அமுதன்...” என்றாள்
எரிச்சலுடன்.
“ஏன் ஒத்து வராது? அப்படி என்றால் என்னை
நம்பவில்லையா? உன்னை மணந்து கொண்டு,
பிறகு கை விட்டு விடுவேன் என்று எண்ணுகிறாயா?” என்றான் இடுங்கிய கண்களுடன்.
“இல்லை...அம்மு...அப்படி இல்லை...எதையும்.
அவசரத்தில் முடிவு எடுக்க கூடாது. அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசமா சங்கடப்படு என்பதை
போல ஆகி விடக் கூடாது.
எதையும் மற்றவர்கள் அறியத்தான் செய்ய
வேண்டும். அதுவும் திருமணம் என்பது
உற்றார் உறவினர் சூழ்ந்திருக்க, அவர்களின் மனம் நிறைந்த ஆசிகளுடன், அட்சதை தூவி வாழ்த்த, நீங்கள் அந்த மஞ்சள் கயிற்றை என்
கழுத்தில் கட்டி முறைப்படி எல்லா சடங்கும் நடந்தால் தான் அது உண்மையான, முழுமையான திருமணம் ஆகும்.
என்னால் இப்படியெல்லாம் ஓடிப்போய் திருட்டுத்தனமாய்
கல்யாணம் பண்ணிக்க முடியாது. அதற்கு
அவசியமும் இல்லை. என் அம்மாவும் இதற்கெல்லாம் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
உங்களுக்கு அப்படி என்ன அவசரம்? ஏன் இப்பவே கல்யாணம் பண்ணிக்கனும் னு அடம் பிடிக்கறீங்க? “ என்றாள் அவனை ஆராய்ந்து
பார்த்தவாறு.
“ஹ்ம்ம்ம் அவசரம் தான் சது. நாம் இப்பவே
கல்யாணம் பண்ணிக்க வேண்டிய அவசரம் தான்.
இப்பொழுது பண்ணிக்காவிட்டால் நாம்
எப்பொழுதும் திருமணம் செய்து கொள்ள
முடியாது என்று தான் தோன்றுகிறது. நான் உனக்கு கிடைக்க மாட்டேன். பரவாயில்லையா?” என்று அடுத்த வழியில் அவளை
மடக்க முயன்றான்.
“வாட் நான்சென்ஸ் அமுதன்? இது என்ன முட்டாள் தனமான பிளாக்மெயில்? அப்படி என்ன நெருக்கடி?
ஏன் இந்த அவசரம் என்ற காரணத்தை சொல்லுங்கள். நான் வேறு ஏதாவது வழியிருக்கிறதா என்று
சொல்கிறேன்...” என்றாள் பிடிவாதமாக.
“இல்லை சது. அதை இப்பொழுது என்னால் சொல்ல முடியாது...” என்க, அதைக்கேட்டு அதுவரை பொறுமையாக பேசிக்
கொண்டிருந்தவளின் முகம் கோபத்தில் சிவந்து போனது.
அவளின் மூக்கு விடைக்க, காதுமடல்கள் விறைத்துக்
கொண்டு நிற்க அவனை நேராக ஊடுருவிப் பார்த்தவள்
“காதலில் முதல் படியே நம்பிக்கை அமுதன்.
ஒருவர் மீது ஒருவர் முழு நம்பிக்கையும்
வைத்திருக்க வேண்டும். ஈருடல், ஒரு மனம் என்பதாகத்தான் இருக்க வேண்டும்.
அதுதான் உண்மையான காதல்.
ஆனால் நீங்கள் என்னிடம் சொல்ல
முடியாமல் ஏதோ ஒரு விஷயத்தை மறைக்கிறீர்கள் என்றால் என்ன அர்த்தம்? அப்ப என்னை முழுவதுமாக
நம்பவில்லை என்றுதானே அர்த்தம். அப்படி என்மீது நம்பிக்கை இல்லாத உங்க காதல்
எனக்கு தேவையில்லை...” என்றாள் எங்கோ
வெறித்து பார்த்தபடி.
அதைக் கேட்டவுடன் அதிர்ந்து போனான்
அமுதன். அவளிடமிருந்து இப்படி ஒரு
வார்த்தை வரும் என்று எதிர்பார்க்கவில்லை அமுதன்.
உடனே ஆத்திரம் தலைக்கு ஏற, தன் கை முஷ்டியை இறுக்கியவன்
“அதையேதான் நானும் சொல்கிறேன் சத்யா...நான்
அவசரபடுவதற்கான காரணத்தை தற்பொழுது சொல்ல முடியவில்லை என்றால் அதன் பின்னே ஏதாவது
ஒரு காரணம் இருக்கும் என்ற அளவுக்குக் கூடவா உன்னால் என் மீது நம்பிக்கை வைக்க முடியவில்லை...”
என்றான் கண்களை அழுந்த மூடி தன் வலிகளை
மறைத்து கொண்டு.
அவளும் பதில் எதுவும் சொல்லாமல் தலையை
குனிந்து கொள்ள, சற்று நேரம் தன் கண்களை அழுந்த மூடி
எதையோ ஆழ்ந்து யோசித்தவன்
“லுக் சத்யா...நாம் இருவருமே ஒருவர்
மீது ஒருவர் முழுவதுமாக நம்பிக்கை வைக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. அப்படி
என்றால் கண்டிப்பாக நம்மிடையே இருப்பது
காதல் அல்ல. இது வெறும் லஸ்ட் மட்டும்தான். இந்த வயதிற்கே உரித்தான இனகவர்ச்சி
தான்.
அப்படியென்றால் இந்த லஸ்ட் ஐ இப்பொழுதே
முறித்துக் கொள்ளலாம். நீ உன் வழியை பார்.. நான் என் வழியை பார்த்துக் கொள்கிறேன்.
இதுவரைக்கும் நீ செய்த உதவிக்கெல்லாம்
ரொம்ப பெரிய தேங்க்ஸ்... “ என்று சொல்லி தன் இரு கரங்களையும் தலைக்கு மேலே
உயர்த்தி பெரிய கும்பிடு போட்டவன், அடுத்த கணம் விடுவிடுவென்று அந்த
இடத்தை விட்டு வேகமாக வெளியேறி சென்றான். .
சத்யாவுக்கோ சில நொடிகள் ஆனது என்ன
நடந்தது என்று முழுவதுமாக உணர்ந்து கொள்ள.
திடீரென்று வந்தான்...திருமணம் செய்து
கொள்ளலாம் என்றான்...அதற்கு அவள் மறுக்கவும் உடனே காதல் இல்லை என்று சொல்லிவிட்டானே...
எப்படி மனம் வந்தது இப்படி ஒரு வார்த்தையை அவன் சொல்வதற்கு?.
நானும் தான் கொஞ்சம் அதிகமாக
பேசிவிட்டேனோ? பொறுமையாக பேசி அவனிடம் என்ன நடந்தது என்று
விசாரித்திருக்க வேண்டுமோ? அவசரத்தில் ஏதோ வார்த்தையை விடப்போய்
அது அவனுடைய கோபத்தை தூண்டி விட்டு விட்டதோ?
எது எப்படி இருந்தாலும் எப்படி அவன்
அப்படி ஒரு வாத்தையை சொல்லுவான்? அப்படி என்றால் அவனுக்குள்ளே இது காதல் அல்ல என்ற
உணர்வு ஆழ் மனதில் மண்டி கிடந்திருக்கும்.
அதுதான் இப்பொழுது அவன் வாய் மொழியாக
வந்து இருக்கிறது. ஆனாலும் எப்படி சொல்ல முடிந்தது அவனால் இது காதல் அல்ல என்று.
காதலடி நீ எனக்கு என்று காதல் கசிந்துருக பாடியவன் எடுத்த உடனேயே இது காதல் அல்ல
என்று எப்படி சொன்னான்?
அப்படி என்றால் அவன் காதல் மொழி
பேசியதெல்லாம் வெறும் நாடகமா? எல்லாம் அவன் நடிப்பா?. நோ... அது நடிப்பல்ல. அம்மு கண்களில் காதலை கண்டேன். அவன் என்னை
ஆழமாகத்தான் காதலிக்கிறான்.
நானும் அப்படித்தான். ஆனால் அந்த
காதலுக்காக கண்ணை மூடி கொண்டு அவன் செய்ய சொல்வதை எல்லாம் எப்படி செய்ய முடியும்? அதற்காக இப்படி முறுக்கிகிட்டு போய்ட்டானே..
எப்படி அவனால் அப்படி ஒரு வார்த்தையை சொல்ல முடிந்தது? “ என்று தன் தலையின் இரு பக்கமும் கையை வைத்து அழுத்தி பிடித்து கொண்டு தளர்ந்து போய் அமர்ந்தவள், தனக்குள்ளே பலதையும் எண்ணி மறுகி கொண்டாள் சத்யா.
Comments
Post a Comment