காந்தமடி நான் உனக்கு!!-16
அத்தியாயம்-16
அன்று நடந்ததை நினைத்துப் பார்த்தவளுக்கு மீண்டும் மனம் கஷ்டமாக
இருந்தது. நெஞ்சுக்குள் ஏதோ பெரிய பாரத்தை வைத்து அழுத்தியதை போல மனம் தவித்தது.
அன்று அமுதன் கிளம்பி சென்றதும் இரவு
வரை அவனுக்காக வீட்டில் காத்திருந்தாள் சத்யா. ஆனால் அவன் இரவு நெடுநேரம் ஆகியும்
வீட்டிற்கு வரவில்லை.
நேரம் ஆக ஆக அவளுக்குள் கிலி பரவ, உடனே தன் அலைபேசியை எடுத்து அமுதனை அழைத்தாள். ஆனால் அதுவோ ஸ்விட்ச்
ஆப் என்று வந்தது. அதன் பிறகு பலமுறை முயன்றும் அவன் அழைப்பை ஏற்கவில்லை. ஸ்விட்ச்
ஆப் என்றே வந்தது.
பின் அவன் வேலை செய்யும் இடத்திலும்
சென்று விசாரித்தாள். யாருக்குமே அமுதனை பற்றி தகவல் எதுவும் தெரியவில்லை. தொடர்ந்து
ஒரு வாரம் முயற்சி செய்தும் அமுதன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடிய வில்லை.
அவனுக்கு என்ன ஆனது என்று தெரியாமல்
குழம்பி போனாள் சத்யா.
“நிஜமாலுமே அமுதன் போய்விட்டானா? என்னவன் என்னை மறந்து எங்கோ
சென்று விட்டானா?
எப்படி மனம் வந்தது அவனுக்கு? என்னை மறக்க எப்படி மனம்
வந்தது? “ என்று தனக்குள்ளே அரற்றிக் கொண்டாள்.
அடுத்த நொடி சுயபச்சாதாபம் எப்பொழுதும்
கூடாது என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டவள் தலையை உலுக்கிக் கொண்டவள்
“இல்லை...என் அமுதன் அப்படியெல்லாம் என்னை
விட்டுச் செல்ல மாட்டான். வந்துவிடுவான்...என்னைத்
தேடி வந்துவிடுவான். “ என்று தனக்குள்ளே
உரு போட்டுக் கொண்டாள் சத்யா...
நாட்கள் மெதுவாக நகர்ந்து சென்றது. தினமும் எப்படியும் இன்று வந்து விடுவான்
என்று ஆர்வத்துடன் எதிர்பார்க்க, அந்த நல்ல தகவல் மட்டும் அவளுக்கு கிடைக்கவே
இல்லை
இப்பொழுதெல்லாம் அவள் நடையில் இருக்கும்
துள்ளல் காணாமல் போயிருந்தது. கண்களில்
ஒருவித சோகம் இழையோடி இருக்க, தன்னையே வெறுத்தவளாய், நடைபிணமாய் உலா வந்தாள்
சத்யா.
வளர்மதியும் தன் மகளின் தோற்றத்தைக்
கண்டு திடுக்கிட்டார். அவளிடம் விசாரிக்க, சத்யாவோ ஒன்றும் இல்லை. வேலை கொஞ்சம் அதிகம்
என்று ஏதோ சாக்கு சொல்லி சமாளித்தாள்.
தாய் அறியாத சூழ் உண்டா? தன் மகள் மனம் அரசல்புரசலாக
வளர்மதிக்கு தெரிந்துதான் இருந்தது. அவள் அமுதனை விரும்புவதை கண்டு கொண்டிருந்தார்.
அமுதனுடைய குணத்தைப் பற்றி நன்கு தெரிந்ததாலும், மேலும் அந்த குடும்பத்தின்
மீது அவன் காட்டிய அன்பும் அக்கறையும் காண, வளர்மதிக்கும் அது
சந்தோசத்தை கொடுத்தது.
தன் மகளிடம் நேரடியாக விசாரிக்காமல்
அவளாகவே சொல்லட்டும் என்று காத்திருந்தார். இந்த நிலையில் தான் ஒரு நாள் அமுதன்
திடீரென்று காணாமல் போய்விட்டான்.
வேலைக்கு சென்றவன் அதன் பிறகு திரும்பி
வரவில்லை. அன்று மதியம் சத்யாவை சந்தித்து பேசி இருக்கிறான். அதன் பிறகு அவனை
பற்றி எந்த தகவலும் இல்லை.
அதிலிருந்துதான் குழப்பமாக இருந்தது. அமுதனுடைய
அலைபேசி இன்னுமே நாட் ரீச்சபிள் என்றே
வந்து கொண்டிருந்தது. அவருக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்து
கொண்டு இருந்தார்.
எப்படியாவது அமுதன் வந்துவிட வேண்டும்.
தன் மகள் வாழ்க்கை அவனை நம்பித்தான் இருக்கிறது. இந்த குடும்பத்துக்காக பல தியாகங்களை பண்ணி இருக்கிறாள் என் மகள்.
இனிமேலாவது அவள் நன்றாக இருக்கவேண்டும்.
அவள் வாழ்க்கை எந்த சிக்கலும் இல்லாமல்
நல்ல படியாக அமைய வேண்டும். அதுக்கு அமுதன் வந்துவிட வேண்டும்...” என்று மானசீகமாக
அந்த ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார் வளர்மதி.
அன்று மாலை வேலை முடித்து அயர்ச்சியாக வீடு திரும்பினாள் சத்யா.
அவள் அணிந்திருந்த ஆடையை கூட மாற்றாமல்
அப்படியே அசந்து போய் சோபாவில் சரிந்தவள், தலையை சோபாவின்
பின்னால் வைத்து கண் மூடி படுத்துக் கொண்டாள்.
உடனே அவளின் அருகில் வந்து அவள் தலையை
இருபக்கமும் பிடித்து விட்டார் வளர்மதி. அதைக் கண்டு திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தவள்
“சாரி... மா...” என்றாள் குற்ற
உணர்வுடன்
“என்னடா ஆச்சு? ஏன்
இவ்வளவு டல்லா இருக்க?“ என்றார் அக்கறையுடன்.
“ஒன்னும் இல்லமா... கொஞ்சம் வேலை
அதிகம். எனக்கு பசிக்குது. சாப்பிட ஏதாவது கொண்டு வா...”
என்று வரவழைத்த புன்னகையுடன் தன் அன்னையின் கவனத்தை திசை மாற்றினாள்.
சத்யா பசிக்குது என்றவுடனே
சமையலறைக்குள் ஓடிச் சென்றார் வளர்மதி
அதே நேரம் தன் முன்னால் இருந்த
தொலைக்காட்சி ரிமோட்டை எடுத்து சேனலை ஒவ்வொன்றாக மாற்றி வைத்துக் கொண்டிருந்தாள்...
ஏதோ ஒரு ந்யூஸ் சேனல் வந்திருக்க, மீண்டுமாய் அவள் முன்னே வந்து சிரித்தான் அவன்...ஆரவ்..
அவளையும் மறந்து, ஒரு நொடி அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்
சத்யா.
ஆறடிக்கும் மேலான உயரத்தில் கருப்பு நிற
பேன்ட், நன்றாக பாலிஷ் செய்யப்பட்ட பளபளக்கும் கருப்பு
நிற ஷூ, உள்ளே வெள்ளை நிற ஷர்ட் அணிந்திருந்தாலும் அதன்
மீது கருப்பு நிற ப்ளேசர் அணிந்திருந்தான்.
அங்கு வருவதற்கு முன்னால் அணிந்திருந்த
கருப்பு நிற கூலரை கழட்டி ஸ்டைலாக சட்டையில் மாட்டி இருந்தான்.
அடர்த்தியான கேசம், ஆரவ் சிரித்த பொழுது விரிந்த அவனின் அழுத்தமான உதடுகள்…நெற்றியில் விழுந்திருந்த அந்த யோசனை கோடுகள், சிரிக்கும்
மீசை...என அப்படியே அமுதனை நினைவு படுத்தியது.
அமுதனுக்கும் கருப்பு நிறம் என்றால் கொள்ளை
பிரியம். அவனுடன் ட்ரெஸ் எடுக்க சென்றபொழுது எப்பொழுதும் கருப்பு நிறத்தையே முதலில்
தேர்ந்தெடுப்பான். அவள் தான் அவனை முறைத்து வேறு சில நிறங்களிலும் வாங்கி தருவாள்.
ஆனாலும் தவறாமல் ஒரு கருப்பு நிற ஆடையாவது
அதில் இருக்கும். அவன் முழங்கையை பற்றி கொண்டு கடைகளில் அவனுடன் சுற்றிய நாட்கள் இப்பொழுது
நினைவு வர, பெண்ணவளின் கண்ணோரம் கரித்தது.
அனிச்சையாய் அந்த கண்ணீரை சுண்டி விட்டவள்
மீண்டுமாய் பார்வை அந்த தொலைக்காட்சியின் திரைக்கு சென்றது. மீண்டும் ஒரு முறை அவனை
மேலிருந்து கீழாக அளவிட, மாடலிங் ஹீரோ போல படு ஹேண்ட்ஸமாகத்தான்
இருந்தான்.
அமுதன் கூட இந்த மாதிரி ட்ரெஸ் பண்ணினால்
இப்படித்தான் இருப்பான் என்ரு பெண்ணவளின் மனம் தன்னவனை அந்த தோற்றத்தில் கற்பனை பண்ணி
பார்க்க, அடுத்த நொடி அப்படியே அதிர்ந்து போனாள்.
அவள் கற்பனையில் வந்தவன் அச்சு அசல் இந்த
ஆரவ் ஐ உரித்து வைத்து இருந்தான்.
“சே.... என்ன இது? ஏன் என் புத்தி இப்படி போகுது.
இவன் ஒன்னும் என் அமுதன் இல்லை. அம்மு திரும்பி வந்ததும் இதே மாதிரி காஸ்ட்யூம் வாங்கி
கொடுக்க வேண்டும். இவன் எல்லாம் அவன் கால் தூசுக்கு நிக்க மாட்டான்...”
என்று தனக்குள்ளே சொல்லி கொண்டவள் மீண்டுமாய்
உற்று பார்க்க, அப்பொழுது எதற்காகவோ மெல்லமாய் புன்னகைத்திருந்தான்
ஆரவ்.
அமுதனிடம் இருக்கும் அதே மயக்கும் காந்த
புன்னகை. எத்தனை நாட்கள் அந்த காந்த புன்னகையை கண்டு மயங்கி நின்றிருக்கிறாள்
சத்யா.
இப்பொழுது அது நினைவு வர, தொலைக்காட்சியில் தெரிந்தவனையே ஒரு முறை இமைக்க மறந்து
பார்த்திருக்க, அடுத்த கணம் அப்படியே திகைத்துப் போனாள்.
அவள் பார்வை அந்த திரையையே வெறித்துக்
கொண்டிருந்தது. மீண்டும் அவனையே ஆர்வமாய் பார்க்க, அங்கே
ஆரவ் அவன் நிறுவனங்களின் ஆண்டு விழாவில்
பேசிக் கொண்டிருந்தான்.
பேச்சு வழக்கில் அவன் கையில்
அணிந்திருந்த காப்பை அவன் கரம் வருடி கொண்டிருக்க, அந்த காப்பின் மீது சென்று
நின்றது சத்யாவின் பார்வை.
அவனும் அதை மற்றொரு கரத்தால்
அவ்வபொழுது லேசாக மேலே தள்ளி விட்டு கொண்டு சீரியசாக பேசி கொண்டு இருந்தான்.
அதைக் கண்டதும் தான் சத்யாவின் கண்கள்
பெரிதாக விரிந்தன. மீண்டும் அவனையே
உற்றுப் பார்க்க, அவன் கையிலிருந்த அந்த காப்பை ஆழ்ந்து
பார்த்ததும் அப்படியே அதிர்ந்து போனாள்.
அந்த காப்பு…அவள்
அமுதனுக்காக வாங்கி, அவளே அவன் கையில் போட்டு விட்ட செம்பு
காப்பு...!
Comments
Post a Comment