காந்தமடி நான் உனக்கு!!-17

 


அத்தியாயம்-17

ரு முறை வளர்மதி, வேலூரின் அருகில் இருக்கும் அவரின் சொந்த ஊருக்கு சென்று வர வேண்டும் என்று தன் குடும்பத்தை அழைத்துச் சென்றிருந்தார்.

அமுதனையும் கட்டாயபடுத்தி தங்களோடு சொந்த ஊருக்கு அழைத்து சென்றிருந்தார்.

வேலூரில் இருந்து பொற்கோயிலுக்கு(Golden Temple) சென்றவர்கள்,  தரிசனம் முடித்து விட்டு வெளியில் வந்தவர்கள் அங்கிருந்து கடைகளில் ஷாப்பிங் பண்ணி கொண்டிருந்தனர்.

சத்யாவின் தங்கைகள் அவர்களுக்குப் பிடித்ததை எல்லாம் வாங்கி குவித்துக்  கொண்டிருந்தனர். அப்போது சத்யாவின் பார்வையில் அந்த செம்பு காப்பு பட்டது.

உடனே அதை வாங்கியவள், அமுதன் கையில் அதை மாட்டி விட்டாள்.

“இது செம்பு காப்பு அம்மு. உடலில் இருக்கும் சூட்டை தணித்து எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்திருக்கும். என் நினைவாக இது  எப்போதும் உங்க கையில் இருக்க வேண்டும்...”  என்று அவன் காதில் கிசுகிசுத்தவாறு அதை மாட்டி விட்டாள்.  

அவனும் அவளை காதலுடன் பார்த்தவன்

“இந்தக் காப்பை பார்த்தால் தான் உன் ஞாபகம் வரும் என்றில்லை சது. நீதான் எப்பொழுதும் என் இதயத்தில் இருப்பவள் ஆயிற்றே. எப்பொழுதோ என் மனதில் வந்து விட்டாய்... என்று காதலுடன் கூற, அதைக்கேட்டு இன்னுமே நெகிழ்ந்து போனாள் சத்யா

அவனை ஒட்டி நின்றவள் கரங்களுக்குள் தன் கரங்களை  பதித்துக்கொண்டு அவன் காதலுடன் மெல்ல அழுத்தி கொடுத்தது இப்பொழுதும் நினைவு வந்தது. 

“அதுதான்... அதே காப்புதான்...இப்போது இடம் மாறி அந்த ஆரவ் கையில் இருக்கிறது. இது எப்படி? “  என்று அவசரமாக யோசித்தாள் சத்யா.

அதே நேரம் ஆரவ் படு தீவிரமாக தன்னுடைய திட்டங்களை விளக்கோ விளக்கு என்று விளக்கிக் கொண்டிருக்க,  அவனுடைய மேனரிசத்தை  உற்றுப் பார்க்க, அவனின் ஒவ்வொரு அசைவும், ஆக்சனும்,   அப்படியே அமுதனை ஒத்து இருந்தது

ஒருவேளை இவன் அமுதனுடைய க்ளோனிங் ஆக இருப்பானோ என்று அறிவியல் ரீதியாக  யோசித்தவள்

“சே...இல்லை.. அதெல்லாம் ஒன்றுமில்லை...அப்ப்டியெல்லாம் நம்ம நாட்டில் இன்னும் வந்துவிடவில்லை. அப்படி என்றால் இவன் ஆரவ் ஆ இல்லை அமுதனா?...” என்று மீண்டும் சந்தேகம் எழ, மீண்டுமாய் திரையில் தெரிந்தவனை உற்று பார்த்தாள் சத்யா.

அப்பொழுது பேசிக்கொண்டிருந்த சுவாரஷ்யத்தில், அவன் கையை உயர்த்தி,  அவனுடைய முன் உச்சி கேசத்தை கோதிக் கொண்டான். இதுவும் அமுதனிடம் இருந்த பழக்கம் தான். அடிக்கடி அவனும் இப்படித்தான் தன் கேசத்தை வருடிக் கொள்வான்.

அந்த ஆரவ் தன் கேசத்தை கோதிக் கொண்ட பொழுது தெரிந்தது அங்கிருந்த வடு ஒன்று.

நெற்றியின் மேல்பகுதியில் திருநீறு வைத்ததை போல நீளவாக்கில் ஒரு கோடு இருந்தது. அதைக்கண்டு ஜெர்க் ஆகி, கொஞ்சமாய் இருக்கையில் இருந்து நிமிர்ந்து அமர்ந்தவள், அந்த வடுவையே உற்று பார்க்க, இந்த வடுவையும் அமுதனிடம் கண்டிருக்கிறாள்.

சத்யா கூட ஒரு முறை அந்த வடுவை பார்த்து விட்டு,  என்னவென்று அமுதனிடம் விசாரிக்க,

“இது என்னுடைய சிறுவயது வீர தீர பராக்கிரம விளையாட்டின் வீர அடையாளங்கள்...”  என்று அவன் கண்சிமிட்டி சொன்னது இப்பொழுதும் நினைவு வந்தது.

அவ்வளவுதான்...அடுத்த நொடி தன் இருக்கையிலிருந்து துள்ளி எழுந்தாள் சத்யா.

ன்பார்ம் ஆ  இது அமுதன் தான் என்று அவள் மனம் சத்தியம் செய்து சொல்லியது இப்பொழுது. உடனே அவசரமாக தன் அலைபேசியை எடுத்தவள் ஆரவ் குரூப் ஆஃப் கம்பெனிஸ் ஐ பற்றி தேடினாள்.  

இவன் வட மாநிலத்தை சேர்ந்தவன் என்றால்எப்படி சரளமாக தமிழ் பேசினான் என்று முதலில் சந்தேகமாக இருந்தது. உடனே இணையத்தில் அவனுடைய பூர்வீகத்தை தேடிப் பார்க்க, அப்படியே அதிர்ந்து போனாள்.

ஆரவ் க்ரூப் ஆப் கம்பெனிஸ் ன் முன்னால் எம்.டி, ஆரவ் ன் தந்தை,   மதியழகன் என்றும் அவரின் பூர்வீகம் தமிழ்நாடு என்றும் இருந்தது.

அப்படி என்றால் இந்த ஆரவ் உடைய தாய்மொழி தமிழ்தான். ஆனால் ஆரவ் வளர்ந்தது எல்லாம் டெல்லியில் என்று இருந்ததால் மீண்டும் தன் மூளையை கசக்கி யோசிக்க அப்பொழுதுதான் அவளுக்கு தெளிவாக புரிந்தது.

அவன் நன்றாக தமிழ் பேசினாலும் எழுதப் படிக்க தெரியாது.

படிப்பது கூட கொஞ்சம் தயங்கி, ஒவ்வொரு எழுத்தாக சேர்த்து ஓரளவுக்கு படித்தான். ஆனால் எழுதுவது சுத்தமாக அவனுக்கு வரவில்லை

ஆனால் ஆங்கிலம் சரளமாக வந்தது. அவனையும் மறந்து அடிக்கடி ஆங்கிலத்தில் பேசி விடுவான்.  பிறகு சமாளித்துக் கொண்டு மாற்றி சொல்லுவான்.

அதே போலத்தான் ஹிந்தியும் அவனுக்கு சரளமாக வந்தது. அப்படி என்றால் இவன் கண்டிப்பாக அமுதன் தான் என்று அவளுக்கு தெளிவாக புரிந்து விட்டது.

ஆனாலும் மூளையில் சிறு குழப்பம் இருந்தது. அதனால் மீண்டுமாய் ஆரவ் கடந்த ஒரு வருடமாக எங்கிருந்தான் என்று இணையத்தில் தேடிப் பார்க்க அவன் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்தான் என்றுதான் குறிப்பிட்டிருந்தார்கள்.

“அமெரிக்காவில் இருந்தான் என்றால்,  இங்கே பெங்களூரில் எப்படி வந்திருப்பான்?. ஒரு வேளை இதெல்லாம் என்னுடைய கற்பனையோ?

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாம். காமாலைக் கண்ணனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாகத் தான் தெரியுமாம்.  

அந்த மாதிரி இவனை, இந்த ஆரவ் ஐ அமுதன் என்று எண்ணி பார்த்தால், எல்லாமே அமுதனாகவே தெரிகிறது. இல்லை.. இவன் அமுதன் இல்லை.. ஆரவ் என்று பொருத்தி பார்த்தால் அதுவும் சரியாகத்தான் பொருந்துகிறது.

ஆனால் அந்த காப்பு? “ என்று யோசிக்க,

“ஆமாம்... பொல்லாத காப்பு. ஏன் உன் அமுதன் மட்டும்தான் இந்த மாதிரி காப்பை போடுவானாக்கும். இந்த ஆரவ் கூட அப்படி ஒரு காப்பை எங்கயாவது வாங்கி போட்டிருக்கலாம் இல்லையா..? “ என்று அவள் மனம்  அவளுக்கு எதிராக வாதாட, சத்யா வோ மீண்டும் குழம்பி போனாள்.

ஏதோ கண்டுபிடித்து விட்டதை போல மனதில் குறுகுறுத்தாலும் ஏதோ நூலிலையில் சரியாக புரிபடாமல் ஊசலாடியதை போல இருந்தது.  

“எங்கே தவறு செய்கிறேன்? எப்படி கன்பார்ம் பண்ணுவது? ”  என்ற குழப்பத்துடன் மேலும் சில பல தகவல்களை இணையத்தில் தேட அவளுடைய குழப்பத்திற்கு எல்லாம் தீர்வாய் ஒரு செய்தி கிடைத்தது.

அதை பார்த்தவள் அப்படியே அதிர்ந்து போனாள். ஆரவ் குரூப் ஆஃப் கம்பெனிஸ் உடைய புதிய எம்.டி ஆரவ் ஐ பற்றிய கட்டுரை ஒன்று இணையத்தில் வெளியாகி இருந்தது.

அதில் ஓரளவுக்கு எல்லாமே அவளுக்கு தெரிந்த விஷயம் தான் சொல்லியிருந்தார்கள். ஆனால் இறுதியாக இருந்த அந்த பெயரை பார்த்ததும் தான் ஷாக்காகி போனாள்.

அதில் அவனுடைய முழுப் பெயர் ஆராவமுதன் என்று பெரிய எழுத்துக்களில் போட்டிருந்தது. அதை பார்த்ததும் ஆரவ் + அமுதன் என்று தனக்குள்ளே சொல்லி பார்த்தவள்,  மயங்கி விழாத குறையாக அதிர்ந்து போனாள் சத்யா...!

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!