காந்தமடி நான் உனக்கு!!-9

 


அத்தியாயம்-9

 

ரு வழியாக அமுதன் பெயரை அவன் வாயிலிருந்து வரவழைத்த அந்த மூன்று பெண்களாலும் அவனை பற்றிய மற்ற விவரங்களை வரவழைக்க முடியவில்லை.

எப்படி எப்படியோ கேள்வியை மாற்றிக் கேட்டாலும் அவனைப் பற்றி எந்த ஒரு விவரத்தையும் அறிந்து கொள்ள முடியவில்லை அவர்களால்.

தன்னைப் பற்றி கேட்கும் பொழுது அவன்  முகத்தில் ஒரு விரக்தி புன்னகை மட்டுமே. எதிரிலிருந்த சுவற்றை வெறித்துப் பார்த்தவாறு கல் போல இறுகி அமர்ந்து கொண்டான்.

அதற்கு மேலும் அந்த மூன்று பெண்களும் டயர்டாகி போனார்கள். கிட்டத் தட்ட அரை மணி நேரமாக அவனுடன் போராடிய பின் தெரிய வந்தது இதுதான்.

என்ன காரணத்திற்காகவோ அவன் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டான் தற்போது வேலை எதுவும் இல்லை. கையில் காசும் இல்லை. அதனால் தான் கடந்த இரண்டு தினங்களாக அன்னம் ஆகாரம் எதுவும் இல்லாமல் கையில் கிடைத்த கொஞ்சம் காசுக்கு டீயை வாங்கி குடித்து கொண்டு இருந்திருக்கிறான் என்று தெரிய வந்தது.

இப்பொழுது அவனாக வீட்டிற்கு போகும் எண்ணம் இல்லை. அவனுக்கு தேவை ஒரு இருப்பிடமும் வயிற்றுக்கு கொஞ்சமாய் உணவும். அவ்வளவே.

ஆனால் இவ்வளவு பெரிய பரந்து விரிந்த நாட்டில் இது இரண்டும் கிடைப்பது  அவ்வளவு எளிதா என்ன?  அதனால் தான் கடைசி சில தினங்களாக எங்கெங்கோ சுற்றி திரிந்தவன் இறுதியில் ரோட்டோரமாக மயங்கி சரிந்து விட்டான்.

அவர்களாகவே இதை எல்லாம் புரிந்து கொண்டார்கள். ஆனாலும் அவனை அப்படியே விட்டு விட மனம் வரவில்லை அந்த பெண்களுக்கு.

அவனை எப்படியாவது அவன் குடும்பத்தாருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று தோன்ற, மீண்டும் கடைசி முயற்சியாய் திவ்யா தான் அவனிடம் வினவினாள்.

“ப்ரோ...அட்லீஸ்ட் உங்க பேரன்ட்ஸ் எங்க இருக்காங்க?  அதையாவது சொல்லுங்க? என்று ஆர்வத்துடன் கேட்க, அதுவரை வெறித்துப் பார்த்தவன் ஒரு படி இறங்கி வந்தவன் வாயை திறந்து

“ப்ச்...எனக்கு யாருமில்லை.. “  என்றான் அதே இறுகிய முகத்துடனும்,  வேதனை மிகுந்த கண்களுடனும்.

அதைக் கேட்டு சத்யாவிற்கு மனதை பிசைந்தது. அடுத்த நொடி அவளையும் மறந்து

“ஏன் அப்படி சொல்றீங்க அமுதன்? உங்களுக்காக நான் இருக்கேன்...”  என்று சட்டென்று சொல்லி விட,  அதை கேட்டு விலுக் என்று நிமிர்ந்தவன் கண்களில்  பளிச்சென்று மின்னல் வெட்டி சென்றது.

அவளை ஒரு ஆழ்ந்த ஊடுருவும் பார்வை பார்த்தான்... அதற்குள் அவசரபட்டு ஏதோ உளறி வைத்ததை புரிந்து கொண்டவள் தன் நாக்கை கடித்து சமாளித்துக் கொண்டவள்

“அது வந்து... நான்  என்றால் நாங்கள் என்று அர்த்தம்...நாங்கள் எல்லாரும் உங்களுக்காக இருப்போம் அமுதன். நீங்கள் கவலை படாதிங்க...” என்று அவசரமாய் விளக்கமளித்தாள்.  

அவனும் ஒரு மெல்லிய புன்னகையை தன் இதழ்களில் தவழ விட்டவன்   மெல்ல கண் மூடி  திறந்தவன்,

“இப் யூ டோன்ட் மைன்ட்,  எனக்கு ஏதாவது ஒரு சின்ன வேலை  வாங்கி தர முடியுமா? என்றான் சத்யாவை பார்த்து

அவன் பேசிய ஆங்கிலத்தையும் அதன் ஸ்டைலையும் கண்டு பெண்கள் மூவரும் ஆச்சரியப்பட்டு ஒருவரையொருவர் பார்த்து பார்வையால் வினவிக் கொண்டனர்.

சத்யாவும் அவனை பார்த்தவள்

முயற்சி செய்யறேன். ஆனால் இப்பதான் வேலை கிடைப்பதே குதிரை கொம்பா இருக்கே. சாதாரண எடுபுடி வேலைக்கே அத்தன போட்டி. அதுவும் டிகிரி படித்தவர்கள் கூட அந்த வேலையாவது கிடைத்தால் போதும் என்று அடித்து கொள்கிறார்கள்...” என்று பெருமூச்சு விட்டாள்.

அதை கேட்டு அவன் முகம் வாடி விட, அதை தாங்க முடியாதவளாய்

“ஆனாலும் ட்ரை பண்ணி பார்க்கிறேன் அமுதன்...” என்றாள் மெல்ல புன்னகையுடன்.  .

அதோடு மூவரும் சத்யாவின் அன்னை வளர்மதியிடம் கலந்து ஆலோசித்து இப்போதைக்கு தங்கற மாதிரி அவர்கள் மாடியிலேயே இருக்கும் ஒற்றை அறையை அவனுக்கு கொடுப்பதாக முடிவு செய்தனர்.

அதைக் கேட்டு அவனுக்கு ரொம்ப மகிழ்ச்சி ஆகிப்போனது.  

“ரொம்ப தேங்க்ஸ் ஆன்ட்டி...”  என்று தழுதழுத்தான். அதற்குள் தன் பார்ம் க்கு வந்திருந்த சத்யா , அவனை பார்த்து   

“ஹலோ மிஸ்டர்...நாங்க வாடகைக்குத்  தான் அந்த ரூமை  கொடுக்கிறோம். நீங்க என்ன பண்ணுவீங்களோ, ஏது பண்ணுவீங்களோ தெரியாது. சட்டுபுட்டுனு  ஒரு வேலையை தேடி கண்டுபிடித்து அதில் சேர்ந்ததும் மாசம் மாசம் டான் னு எங்களுக்கு வாடகை வந்து விடனும். என்ன புரிஞ்சுதா? என்றாள்  வரவழைத்த  மிரட்டலுடன்.  

அவனும் சரி என்று தலையசைக்க,  அன்று இரவு, இரவு  உணவை வளர்மதி வற்புறுத்தி அமுதனை அங்கேயே சாப்பிட வைத்தார்.

அதன் பிறகு மூன்று பெண்களும் மாடிக்குச் சென்று அந்த அறையை ஒதுக்கிக் கொடுத்து அவனை அங்கேயே தங்க வைத்தனர்.  

அந்த அறை பத்துக்கு பத்து என்ற சைஸில் மிகவும் சிறியதாக இருந்தது. ஏதாவது தேவை இல்லாத தட்டுமுட்டு சாமான்களை போட்டு வைப்பதற்காக சிறியதாக கட்டி இருந்தது.

பிறகு அந்த அறையையும் வாடகைக்கு விட்டால் மாதம் மூவாயிரம் வரும் என்று கேள்வி பட்டதால், சத்யா அந்த அறையை காலி பண்ணி வாடகைக்கு விட்டிருந்தாள்.

சென்ற வாரம்தான் அதில் தங்கி இருந்தவர் காலி பண்ணி இருக்க, இப்பொழுது அந்த அறை காலியாக இருந்தது.  அதனால்தான் அதை அமுதனுக்கு கொடுக்க முடிவு செய்தனர்.

இப்பொழுது அந்த அறைக்கு உள்ளே வந்தவன் புருவத்தை சுருக்கி அந்த அறையை உற்று பார்க்க, அதை கண்டு லேசாக கடுப்பானவள்

“”ஹலோ... என்ன லுக்கு? ரூம் ரொம்ப பெருசா இருக்குனு யோசிக்கறீங்களா?  இல்லை மாடி மேல் மாடி என பல மாடி இருக்கும் அரண்மணையில் வாழ்ந்த ராஜகுமாரனுக்கு இந்த பத்துக்கு பத்து அறையில் எப்படி தங்குவது என்று யோசிக்கிறீங்களா? “ என்றாள் நக்கலாக.

அதை கேட்டு அவன் முகத்தில் சிறு வருத்தமும் அடுத்த நொடி ஒரு மெல்லிய மின் வெட்டாய் ஒரு மின்னலும் வெட்டி சென்றது. அவன் இதழ்களோ அழகாய் விரிந்து ஒரு மென்னகையை தவழ விட்டான்.

அதை கண்டவளோ ஒரு நொடி தடுமாறிப் போனாள்...

“ஆங்... நான் இப்படி கலாய்க்கிறேன். வாய திறந்து ஏதாவது பதில் சொல்றானா பார். சரியான கல்லுளி மங்கன்...” என்று  உள்ளுக்குள் அர்ச்சனை பண்ணியவள் அவனை முறைத்து பார்த்து

“என்ன இளிப்பு? இதுதான் உங்க ரூம். இதுக்குள்ள அட்ஜஸ்ட் பண்ணி இருந்துக்கங்க... “ என்றாள் அதே முறைப்புடன்.

அவனும் சரியென்று தலை அசைக்க, சத்யாவோ அவள் கொண்டு வந்திருந்த ஒரு மெல்லிய மெத்தையை தரையில் விரித்தாள்.

கூடவே அவள் தங்கைகள் எடுத்து வந்திருந்த ஒரு பெட்ஷீட்ம் தலையணையும் கொடுத்தவள்

“இதுவும் கடனாகத்தான் தருகிறோம்...” என்று அவள் முடிக்கும் முன்னே

“இதுக்கும் வாடகை தந்து விடுகிறேன்... “ என்றான் முதன் முறையாக குறும்பாக சிரித்தபடி...

அதை கேட்டு சத்யா முகம் கன்ற, அவள் தங்கைகளோ களுக் என்று கிளுக்கி சிரித்தனர்.

அவன் தன்னை கலாய்க்கத்தான் அப்படி சொன்னான் என்று கண்டு கொண்டவள்

“ஹ்ம்ம் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீங்க போறப்ப இதை திருப்பி கொடுத்தால் போதும்...” என்று முறைத்தபடி கழுத்தை நொடித்தவள்

“சரி. லேட் ஆகுது. படுத்து தூங்குங்க. நாளைக்கு காலையில் சீக்கிரம் எழுந்து ரெடியாகுங்க. வேலைக்காக ஒரு இடத்துக்கு போகலாம்...” என்று அதிகாரமாய் அவனுக்கு கட்டளையிட, அதை கண்டு ஒரு மெல்லிய ஆச்சர்யம் அவன் முகத்தில்.

ஆனால் அடுத்த நொடி அதை துடைத்து விட்டு சாதாரணம் போல காட்டி கொண்டவன் சரி யென்று தலை அசைத்தான். அவள் தங்கைகளும் அவனுக்கு குட் நைட் சொல்லி விட்டு வெளிவந்தனர்.

அவர்கள் வெளி வந்ததும்  ஒரு நீண்ட பெருமூச்சை விட்ட அமுதன், சத்யா விரித்திருந்த அந்த மெல்லிய படுக்கையில் காலை குறுக்கிக் கொண்டு படுத்துக்கொண்டான்.  

எதற்காகவோ அவனை மீண்டும் பார்க்க வந்த சத்யா, அவனை பார்த்து அப்படியே நின்றுவிட்டாள்.

அவனுடைய ஆறு அடி உயரத்திற்கும்  மேலான உயரத்திற்கும்,  அவனுடைய கட்டுகோப்பான உடற்கட்டுக்கும் அந்த அறையில் காலை குறுக்கிப் படுத்து இருப்பது கண்டு மனதை பிசைந்தது சத்யாவிற்கு.

அவனை பார்க்கும்பொழுது ஏனோ பெரிய இடத்தில் சொகுசாக வளர்ந்தவன் மாதிரி இங்கு வந்து கஷ்டபடுவது போல ஒரு உள்ளுணர்வு அவளுக்கு.

“என்னதான் செல்வாக்கா வளர்ந்து இருந்தாலும் இப்போதைக்கு சோத்துக்கே சிங்கி அடிப்பவன் தானே. கஷ்டபடட்டும். அப்பொழுது தான் வாழ்க்கை பாடம் நன்றாக புரியும் இவனுக்கு.”  என்று உள்ளுக்குள் முனகி கொண்டவள்   

ஒன்றும் சொல்லாமல் மீண்டும் எல்லாம் வசதியாக இருக்கிறதா என்று மட்டும் கேட்டு விட்டு அவனுக்கு குட்நைட் சொல்லிவிட்டு திரும்பி வந்துவிட்டாள் சத்யா.  


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!