காந்தமடி நான் உனக்கு!!-24

 


அத்தியாயம்-24

ராவமுதன் தந்தை மதியழகன், திண்டிவனம் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தை சேர்ந்தவர்.

அவர் பிறக்கும் முன்னே அவரின் தந்தை சொந்த ஊரில் இருந்து பிழைப்பு தேடி மும்பைக்கு வந்துவிட்டார். கை ரிக்சா இழுத்தும், மூட்டை தூக்கியும்,  கிடைத்த வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்.  

திருமண வயது வந்ததும் தன் சொந்த ஊருக்கு வந்தவர், தன் அத்தை மகளை திருமணம் முடித்து மீண்டும் மும்பைக்கு சென்று விட்டார். மூன்றாண்டுக்கு பிறகு பிறந்தவர் தான் மதியழகன்.

மதியழகன் படிப்பில் ரொம்ப சுட்டி. அதோடு சிறுவயதிலிருந்தே தன் தந்தை படும் கஷ்டத்தை பார்த்து வளர்ந்தவர். அதனாலேயே  அவன் வளர்ந்ததும், பெரிய பணக்காரன்  ஆக வேண்டும்.  

தன் தந்தையைப் போல கஷ்டப்படாமல்,  குளுகுளு ஏசியில் உட்கார்ந்தவாறே கோடிகளில் சம்பாதிக்க வேண்டும் என்று தன் மனதில் பதித்துக் கொண்டவர் அதற்கான வழிமுறைகளை சிறு வயதிலிருந்தே தேட ஆரம்பித்தார்.

படிக்கும் போதே வியாபாரத்தில், பொருள் ஈட்டுவதில் அவருக்கு ஆர்வம் வந்துவிட்டது. சிறுவயதிலயே ஒவ்வொரு வீட்டிற்கும் பேப்பர் போடுவதில் இருந்து,  மளிகை பொருட்களை வாங்கி வந்து கொடுப்பது என்று முகம் சுளிக்காமல் சிறு சிறு வேலைகளை செய்து அதனால் பணம் ஈட்ட ஆரம்பித்தார்.

வளர வளர பணம் சம்பாதிப்பதற்கான வழி முறைகளையும் மாற்றிக் கொண்டே வந்தார். படித்துக்கொண்டே பார்ட் டைம் வேலை பார்த்தவர். ஸ்காலர்ஷிப் ல் எம்.பி.ஏ முடித்தார்.

ப்பொழுது கேம்பஸில் ரூபாவதி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் மேனேஜராக தேர்வானார் மதியழகன்.

அங்கேயேயும் தன்னுடைய திறமையையும்,  கடின உழைப்பையும் காட்ட அந்த நிறுவனத்தின் உரிமையாளர் வர்மாவுக்கு மதியழகனை ரொம்பவும் பிடித்துவிட்டது.

நாளடைவில் தன்னுடைய பெர்சனல் அசிஸ்டன்ட் ஆக மதியழகனை மாற்றிக் கொண்டார்.

மதியழகனும் தன்னுடைய மாறுபட்ட யோசனைகளை, அவ்வபொழுது வழங்கி,  அதை இம்ப்ளிமென்ட் பண்ணவும் அனுமதி வாங்கி விட, அவனுடைய வித்தியாசமான, நவீன யோசனைகளால் ரூபாவதி டெக்ஸ்டைல்ஸ் இன்னும் பெரிய அளவில் முன்னேற ஆரம்பித்தது.

அதன் லாபத்தை வைத்து மற்ற தொழில்களை ஆரம்பிக்க பரிந்துரை செய்தார் மதியழகன். ஆனால் வர்மாவுக்கு அப்பொழுது வயதாகிவிட்டதால் ஒரு புதிய தொழிலை தொடங்க  அவருக்கு விருப்பமில்லை.

கூடவே அவரின்  ஒரே மகள் ரூபாவதியை திருமணம் முடித்து வரப்போகும் மாப்பிள்ளையின் கையில் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு ஓய்வு எடுத்துக் கொள்ள முடிவு செய்திருந்தார்.

அதன்படி தன் மகள் ரூபாவதிக்கு மாப்பிள்ளை தேடவும் ஆரம்பித்துவிட்டார்.  அவளை மணந்து கொள்ள நிறைய பேர் போட்டி போட்டார்கள் தான். ஆனால் வர்மாவுக்கு யாரையும் பிடிக்கவில்லை.

பல மாப்பிள்ளை போட்டோவை பார்க்கும் பொழுது யாரும் மனதிற்கு அந்த அளவிற்கு ஒட்டவில்லை. அவரின் மனமோ ஒவ்வொரு போட்டோவையும் மதியழகன் உடன் வைத்து ஒப்பிட்டு பார்த்து நிராகரித்து கொண்டு இருந்தது,

அடிக்கடி மதியழகன் முகமே வர்மா மனதில் வந்து வந்து போனது.

ஆறடி உயரத்தில்,  கச்சிதமான உடற்கட்டுடன் அந்த வயதில் ஆணழகனாய்  திகழ்ந்தவர் மதியழகன்.

மாநிறமாக இருந்தாலும் அவனுடைய ஆண்மையும், கம்பீரமும்,  தொழிலில் நேர்மையும்,  மேலும் தன் மீதும்,  தன் குடும்பத்தின் மீதும் அவன் காட்டும் அக்கறையும் வர்மா வை அவன் பக்கமாய் கட்டிப் போட்டிருந்தது.

மூன்று மாதம் வரை பல ஜாதகங்களை,  புகைப்படங்களை அலசி ஆராய்ந்தவர்,  பின்  சலித்துபோய் அனைத்தையும் விட்டு விட்டு மதியழகனை தன் மகளின்  மணாளனாக தேர்ந்தெடுத்தார் வர்மா.

ரூபாவதியும்  தந்தையின் விருப்பமே தன் விருப்பம் என்று சொல்லி விட,  மதியழகன் மட்டும் கொஞ்சம் யோசித்தார்.

தற்பொழுது அவன் நல்ல நிலைமையில் இருந்தாலும்,  இன்னுமே மாத சம்பளம் வாங்கும் ஒரு சாதாரணமானவன் தானே.

அதோடு அவனுடைய நதிமூலம் ரிஷிமூலம் எல்லாம் வெளியில் சொல்லிக்கிற மாதிரி இல்லையே. அவன் தந்தை இறக்கும் வரைக்கும் ரிக்சா இழுத்து சம்பாதித்தவர்.

அதை உணர்ந்ததும் வர்மாவிடம் தன்னை பற்றிய அனைத்து உண்மையையும் தானாகவே சொல்லி  விட்டார் மதியழகன்.

அவரின் நேர்மையை கண்டு இன்னுமே வர்மாவுக்கு அவரை பிடித்து போய்விட்டது.

உடனடியாக திருமணத்தை ஏற்பாடு செய்தார்.  அடுத்த மாதத்திலேயே திருமணம் நடந்து விட, மதியழகன் வீட்டோடு மாப்பிள்ளையாகி போனார்.   வர்மாவும் அவருடைய சில சொத்துக்கள் தவிர,  அனைத்தையும் தன் மகள் மற்றும்  மருமகன் பெயருக்கு   மாற்றிவிட்டார்

பிறப்பிலேயே நல்ல குணம் படைத்தவர் மதியழகன் என்பதால்  அந்த சொத்துக்களை தன் வசப்படுத்திக் கொள்ளாமல்,  அதனை பெருக்குவதிலும் கட்டி காப்பதிலும் மும்முரமாக ஈடுபட்டார்.

அதன்படி அடுத்ததாய் கன்ஸ்ட்ரக்சன் தொழிலில் இறங்குவதற்கு தயாராக இருக்க, அப்பொழுதுதான் அவருக்கு ஆண்மகன் பிறந்திருந்தான்.  

மதியழகன் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் மும்பை என்றாலும் அவருக்கு தன்னுடைய தாய்மொழி மீது பற்று ரொம்ப அதிகம். அதனால் தமிழில் தான் தன் மகனுக்கு பெயர் வைக்க வேண்டும் என்று ஆராவமுதன் என்று பெயரிட்டார்.

ஆரா   என்றால் வற்றாத, குறையாத, நீங்காத என்ற ஆர்த்தமாம். ஆராவமுதன் என்றால், அமுத ஊற்றன், தீரா அல்லது குன்றா அமுதன் என்று பொருள்.

தன் மகன் எப்பொழுதும் குறையாத அமுதத்தை மற்றவர்களுக்கு வாரி வழங்கிட வேண்டும் என்றே அவனுக்கு ஆராவமுதன்  என்று பெயரிட்டார்.

அவனும் அதே போலத்தான்.. சிறுவயதில் இருந்தே மற்றவர் நலன் நாடுபவனாய், தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு அமுதினை வாரி வழங்கி அவர்களை தன் வசபடுத்துபவனாய் வளர்ந்தான்.

மதியழகன் தன் மகனை வாய் நிறைய அமுதன் என்று அழைத்தாலும் மும்பையில், அவனை மற்றவர்கள் எல்லாரும் ஆரவ் என்றுதான் அழைப்பார்கள்.

அவன் அன்னை ரூபாவதியும் ஆரவ் என்றுதான் கொஞ்சுவாள். அதனாலயே அடுத்ததாய் அவர் ஆரம்பித்த கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்திற்கு ஆரவ் கன்ஸ்ட்ரக்சன்ஸ் என்று பெயரிட்டார்.

அவர் சிறுவயதில் இருந்தே ஏழ்மையை பார்த்து வளர்ந்தவர். இருக்க உறைவிடம் இல்லாமல் கஷ்டபட்ட அந்த காலங்கள் மனதில் ஆட, நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவருடைய கன்ஸ்ட்ரக்சன் மூலமாக சிறிய பட்ஜெட் வீடுகளை கொண்ட அப்பார்ட்மென்ட்ஸ்களை கட்ட ஆரம்பித்தார்.

அந்த பட்ஜெட் வீடுகள் மும்பையில் ரொம்பவும் பிரபலம் அடைந்து விட, ஆரவ் கன்ஸ்ட்ரக்சன் அவர் எதிர்பார்த்ததை விட வேகமாக வளர ஆரம்பித்தது...


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!