காந்தமடி நான் உனக்கு!!-27



அத்தியாயம்-27


ஹை...அமுதன் அண்ணா வந்தாச்சு...”  என்று உற்சாக கூக்குரலிட்டு துள்ளிக் குதித்தனர் அந்த தெருவை சேர்ந்த வாண்டுகள்.

அவர்கள்  தெருவில் போட்ட சத்தம், எல்லா வீடுகளிலும் கேட்டிருக்க,  அனைவருமே ஜன்னலை திறந்து பார்த்தனர்.

சமையலறையில் இருந்த வளர்மதியும்,  சிறுவர்களின் கூச்சலை கேட்டு வேலையை அப்படியே போட்டுவிட்டு தெருவுக்கு விரைந்தார் ஆவலுடன் அமுதனை பார்க்க.

அங்கே அந்த வாண்டுகள் எல்லாம் சூழ்ந்து கொண்டு குதித்துக் கொண்டிருக்க,  அவர்களுக்கெல்லாம் டைரி மில்க் சாக்லெட்டை கொடுத்துக் கொண்டிருந்தான் முகத்தில் புன்னகையோடு.  

கொஞ்சம் வெளுத்துப் போன ஜீன்ஸ்ம்,  விலை குறைவான டீ-ஷர்ட்ம், படிய வரப்பட்ட சிகையுமாய்,  பழைய அமுதனாய் நின்றிருந்தான் அங்கே.

ஆனால் உடல் மட்டும் சற்று எடை குறைந்து கொஞ்சமாய் இளைத்து இருந்தான்...இங்கு இருந்தபொழுது,  வளர்மதி அவனை பார்த்து பார்த்து கவனித்துக் கொள்வார்.

அவன் வேண்டாம் என்று மறுத்தாலும் இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக அவன் தட்டில் வைத்து, அவனை கட்டாயபடுத்தி உண்ண வைப்பார்

அதனாலேயே அங்கு வந்த பொழுது உடல் இளைத்திருந்தவன் ஒரு வருடத்தில் நன்றாக எடை போட்டிருந்தான்.  

ஆனால் இப்பொழுது கண்டிக்க யாரும் இல்லாதவனாய், அருகில் இருந்து பார்த்து பார்த்து பரிமாற யாரும் இல்லாத்தால் கொஞ்சமாய் இளைத்து இருந்தான்.  

தூரத்திலிருந்தே வளர்மதியை கண்டுகொண்டவன், அவரை பார்த்து கையசைத்து பெரிய புன்னகையுடன் சிரிக்க,  வளர்மதிக்கோ சந்தோஷம் தாளவில்லை.

அவன் தன் வீட்டை தேடி வரும்வரை காத்திருக்காமல் குடுகுடுவென்று அவன் அருகில் ஓடி சென்றார்.

அவனும் அங்கிருந்த வாண்டுகளை எல்லாம் விலக்கி விட்டு முன்னால் வர,  தெரு  என்றும் பாராமல் அமுதனை மென்மையாக கட்டிக்கொண்டார் வளர்மதி.

“எங்கப்பா போன அமுதா?  எங்க கிட்ட சொல்லாம, கொள்ளாம போய்ட்டியே..” என்று தழுதழுத்தார்.

அதைக் கண்டு அமுதனும் ஒரு நொடி நெகிழ்ந்து தான் போனான்.  

அவனைப் பெற்றவள், அவன் வனவாசம் சென்றதை போல, ஒரு வருடம் பிரிந்து இருந்துவிட்டு, ஒரு  வருடத்திற்கு பிறகு அவன் திரும்பி சென்ற பொழுது கூட,  ரூபாவதி முகத்தில் இந்த அளவுக்கு மகிழ்ச்சி இல்லை.

“ஹாய் பேபி... ஹவ் ஆர் ஊ? என்று பார்மாலிட்டிக்கு கேட்டுவிட்டு வெளியில் கிளம்பி சென்றுவிட்டார்.

கட்டிய கணவன் படுக்கையிலிருந்த பொழுதுகூட பெரிதும் கவலை படாமல், தினமும் ஒரு ஃபங்ஷன் அட்டென்ட் பண்ண தவறவில்லை. அதை எண்ணும்பொழுது அமுதனுக்கு கசந்து வழிந்தது.  

அவனைப் பொறுத்தவரை அவன் தந்தை தொழிலில் ஜெயித்துவிட்டார். ஆனால் அன்பில், பாசத்தை, காதலை தேடிப்பதில் தோற்று விட்டார் என்றுதான் தோன்றியது.

அதனால் தான் அவன் தன் தந்தை செய்த தவறை அவனும் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்...பணம் மட்டுமே குறிக்கோள் இல்லை. தனக்கு அன்பான, பாசமான, காதலுடனான வாழ்க்கை வேண்டும். குடும்பம் வேண்டும் என்று தனக்குள்ளே உறுதி செய்து கொண்டான்.

வளர்மதியின் பாசமான அணைப்பில் நெகிழ்ந்து கண்ணோரம் லேசாக கரித்திருக்க, தன் தலையை உலுக்கிக் கொண்டு, தன்னை சமனபடுத்தியவன்  மெல்லப் புன்னகைத்து  அவரை தன்னோடு மெல்லமாய் அணைத்துக் கொண்டவன்  

“எப்படி இருக்கீங்க ஆன்ட்டி? என்றான் தழுதழுத்தவாறு. அவர்மீது எப்பவுமே அவனுக்கு தனிப்பட்ட பாசம் உண்டுதான். இந்த கையால தானே பார்த்து பார்த்து அவனுக்கு பரிமாறினார்.

பசியோடு இருந்த நேரத்திலும், வேண்டாம் என்று மறுத்த நாட்களிலும் அதட்டி, உருட்டி அவனுக்கு உணவளித்த அன்னலட்சுமி ஆயிற்றே.!

“எங்களுக்கு  என்னப்பா?  எல்லாரும் நல்லா இருக்கோம். எப்பொழுதும் உன்னை பற்றிய கவலைதான். அதுவும் சத்யா தான் ரொம்ப மெலிஞ்சு போயிட்டா.

உன்னை பற்றி எந்த தகவலும் தெரியாமல், சரியாக சாப்பிடுவதில்லை...  தூங்கவில்லை... யாரிடமும் சரியாக பேசுவதில்லை. ஒரு நடைபிணமாக தான் நடந்துகிட்டு இருக்கா...” என்றார் தழுதழுத்தவாறு.

அவளை நேரில் பார்த்தபொழுது, அவனும் கவனித்துதான் இருந்தான். முகம் வெளுத்து போய், எப்பொழுதும் கவி பாடும் கண்களில் துளியும் ஜீவன் இல்லாமல் வற்றி போய், குறும்பு தவழும் இதழ்கள் வறண்டு போய், வாழ்க்கையே வெறுத்தவளாய் ஜீவனற்று இருந்ததை அவனும் கவனித்து தான் இருந்தான்.

அவளை அப்படி பார்த்ததுமே அவனுக்கே மனதை பிசைந்தது. ஆனாலும் தன்னை மறைத்துக்கொண்டுதான் அன்ரு அவளிடம் சீண்டி கொண்டிருந்தான்.

“அம்மா...கொஞ்சம் நிறுத்தறியா?  நான் ஒன்னும் யாருக்காகவும் ஏங்கி போய்,  சாப்பிடாமல் இருக்க வில்லை. மூணு வேளையும் நல்லா மூக்கு பிடிக்க கொட்டிக்கிட்டு தான் இருக்கேன்.

இப்ப இன்னும் ரெண்டு கிலோ கூடித்தான் போயிருக்கேன்...”  என்றாள் சத்யா அமுதனை  முறைத்தபடி.

அப்பொழுதுதான் வேலை முடிந்து வந்தவள், அவள் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தாள். தெருவில் எல்லாரும் கும்மாளமிட்டு கொண்டிருக்க, அவளும் சிறு ஆவலுடன் அங்கு வந்திருந்தாள்.  

அப்பொழுது தன் அன்னையை கட்டி அணைத்தவாறு நின்றிருந்தவனை கண்டதும் மனம் துள்ளி குதித்தாலும்,  அதுவும் அவள் பார்த்து பழகிய அதே பழைய அமுதனாக வந்திருக்க, அவள் மனமோ எகிறி குதித்தது.

இந்த அமுதனைத்தானே அவள் விரும்பினாள். இவனைத்தானே மிஸ் பண்ணி இருந்தாள். இப்பொழுது அவனே நேரில் வந்திருக்க, ஓடிச்சென்று அவனை இறுக்கி அணைத்து,  அவன் மார்பில் தஞ்சம் புகுந்து கொள்ள தவித்தது அவள் உடலின் ஒவ்வொரு அணுவும்.

ஆனால்..?

இவன் தோற்றத்தில் அமுதனாக வந்திருந்தாலும் அவன் நதிமூல, ரிஷிமூலம் எல்லாம் கண் முன்னே வர, இவன் அமுதன் இல்லை... ஆரவமுதன்.. தி கிரேட் மல்ட்டி மில்லினர் ஆரவ் க்ரூப் ஆப் கம்பெனிஸ் ன் ஒரே வாரிசு... ஆரவமுதன்... என மண்டையில் உறைக்க, அவள் முகத்தில் வந்திருந்த அந்த ஏக்கம் தொலைந்து போய் வெறுமை வந்திருந்தது.

கூடவே தன்னை இப்படி அலைகழிக்கும் அவன் மீது கோபமும் பல்கி பெருகியது. அந்த கோபத்தைத்தான் அவள் முகத்திலும், குரலிலும் காட்டி சீறி கொண்டிருந்தாள் சத்யா.

அவளின் கோபமான முகத்தை கண்டு உள்ளுக்குள் ரசித்துக்கொண்டே,  அதே ரசனையான பார்வையை அவள் மீது செலுத்த, அந்த காந்த பார்வையில் அவள் கோபம் எல்லாம் போன இடம் தெரியவில்லை.

அவனை எதிர்கொள்ள முடியாமல் முயன்று தன்னை இறுக்கி கொண்டு. அவனை முறைத்துப் பார்த்து வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள் சத்யா.

அப்பொழுது பள்ளி மற்றும்  கல்லூரி விட்டு வந்திருந்த திவ்யாவும்,  நித்யாவும் கூட அமுதனை கண்டதும் “ஹே... அமுதன் ப்ரோ... “ என்று கத்தியவாறு ஓடிவந்து அவனை கட்டிக் கொண்டனர்.

அதைப் பார்த்து ஒரு நொடி சத்யாவும் மகிழ்ந்து போனாள்.  ஆனால் மறுநொடி நிதர்சனம் உரைக்க,  உடனே தன் உடலை விறைத்துக் கொண்டு, கழுத்தை நொடித்தவள்  முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“என்னாச்சு புரோ? ஏன் எங்களையெல்லாம் திடீர்னு விட்டுட்டு போய்ட்டிங்க? என்று இருவரும் அவனை பிடித்துக் கொள்ள,  அவன் பார்வையும் சத்யா வின் பக்கம் சென்றது.

“உங்க  அக்கா எதுவும் சொல்லவில்லையா? என்றான் சத்யாவை பார்த்தவாறு.

“இல்லையே...நேத்துல இருந்து சிடுசிடுன்னு இருக்கா. எல்லார் மேலேயும் எரிஞ்சு விழறா.  நெருப்பா கொதிக்கிறா... அவ கிட்ட கூட போக முடியல...” என்றவர்கள்  

“ப்ரோ... அதுக்கு காரணம் நீங்க தானா? உங்களை அக்கா முன்னரே பார்த்து விட்டாளா? இது காதலுக்கு பிறகு வரும் ஊடலினாலா?  என்று ரகசியமாக அவனிடம் விசாரித்தனர்.

அதைக்கேட்டு இன்பமாய் அதிர்ந்தவன்

“என்னது காதலா? “ என்றான் அவனும் ரகசியமாய்...அவர்கள் இருவரும் காதலிப்பதை சத்யா வீட்டில் யாரிடமும் சொல்லி இருக்கவில்லை. பிறகு எப்படி இவர்களுக்கு தெரிந்தது என்று யோசனையாக அவர்களை பார்க்க,  

“ப்ரோ... நாங்களும் பிக் கேர்ள்ஸ்தான். எங்களுக்கு தெரியாதா? முசபுடிக்கிற நாயை மூஞ்ச பார்த்தே சொல்லிடுவோமாக்கும். உங்க ரெண்டு பேரு கண்லயும் வழியுமே அப்படி ஒரு காதல்...

ஸப்பா... அந்த ரொமாண்ஸ் சீனை எல்லாம் இத்தனை நாட்களாக மிஸ் பண்ணி இருந்தோம்...பாவம் அக்கா... உங்களை பிரிந்து ரொம்ப கஷ்டபட்டுட்டா... “ என்று தன் தமக்கைக்காய் மருகினர் அந்த பாசக்கார சகோதரிகள்..

அவர்கள் சொல்லியதை கேட்டு அமுதனுக்கு ஜிவ் என்று இருந்தது. தன்னவள் மனதில் தன் மீது இருக்கும் காதல் புர்கிறதுதான். ஆனாலும் அவள் முறுக்கி கொண்டு இருப்பது சிறு வேதனை அளிக்க, அவனும் மெல்லியதாய் புன்னகைத்தவன்

“இனிமேல் நான் பார்த்துக்கிறேன்...என் பொண்டாட்டிய இனிமேல் வருத்தபட்ட வைக்க மட்டேன்... என்கிட்ட விடுங்க...”  என்று புன்னகைத்தவன்  அவர்களுக்காக வாங்கி வந்திருந்த பரிசுப் பொருட்களை எடுத்துக் கொடுக்க அவர்களும் சந்தோஷத்துடன் வாங்கிக் கொண்டு உள்ளே ஓடினர்.


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!