காந்தமடி நான் உனக்கு!!-28
அத்தியாயம்-28
சத்யாவிற்கு பட்டுப் புடவையும், வளர்மதிக்கு அதிக வேலைப்பாடு இல்லாத, அதே நேரம் தனியாக எடுத்து காட்டும் புடவையும் எடுத்துக் கொடுத்தான்
அமுதன்.
சத்யாவோ அதை வாங்கி கொள்ளாமல், அவனை முறைத்து வைக்க
“இதெல்லாம் எதுக்குப்பா? “ என்று தழுதழுத்தார்
வளர்மதி.
தன் கணவனுக்கு பிறகு, இந்த மாதிரி உரிமையோடு, பாசமாய் ஒரு
தலைமகனாய் வாங்கி கொடுக்க, ஒரு ஆண்மகன் இல்லையே என்ற ஏக்கம்
இப்பொழுது பெரிதாக தெரிந்தது.
“இருக்கட்டும் ஆன்ட்டி...உங்க
அன்புக்கு முன்னால் இதெல்லாம் ஒன்றுமே இல்லை தான். நான் முன்பு அவசரமாக கிளம்பி சென்று விட்டதால், பெரிதாக எதுவும் உங்களுக்கு
செய்ய முடியவில்லை.
இப்பொழுது தான் நேரம் கிடைத்தது.
அதுதான்....” என்றான் அவரை சமாதானபடுத்த.
அவன் முகம், வளர்மதி
இடம் பேசிக் கொண்டிருந்தாலும் பார்வையோ சத்யாவையே ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தது.
அவளும் அவன் பார்வையை கண்டு கொண்டு, அவன் தன்னைத் தான் பார்க்கிறான் என்று தெரிந்தாலும், அவன் பக்கமாய் முகத்தை
காட்டாமல் திருப்பிக் கொண்டாள்.
அவனும் மீண்டுமாய் ஒரு ஏக்கப் பார்வை
பார்த்து, பின் வளர்மதியை பார்த்தவன்
“ஆன்ட்டி...உங்களுடைய ஸ்பெஷல் சூடான
பஜ்ஜி கிடைக்குமா? அதுக்காகவே என் நாக்கு ஏங்கி போய் கிடக்கு.
அதுக்காகத்தான் ஓடோடி வந்தேன்...” என்றான் மெல்ல புன்னகைத்தவாறு.
அதைக்கேட்டு விலுக்கென்று நிமிர்ந்தவள்,
“அம்மா...இந்த கதை எல்லாம் நம்பாதீங்க.
சார் உண்மையிலேயே பெரிய பிக் ஷாட் தெரியுமா? .
நீ செஞ்சு கொடுக்கிற பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் எம்மாத்திரம்?
இது மாதிரி நிறைய ஐட்டம்ஸ் இருக்கும்
அவங்க வீட்டில். சும்மா இந்த தேனொழுகும் பேச்சை கேட்டு மயங்கி விடாதே...” என்று குத்திக் காட்டினாள் சத்யா.
“சும்மா இரு சத்யா. பாவம் அமுதன் ரொம்ப
நாள் கழிச்சு வந்திருக்கான். என்ன தான்
அவங்க வீட்டில் இருந்தாலும், நான் செய்யற மாதிரி வருமா? “ என்று அமுதன் சொல்ல நினைத்ததை வளர்மதியே சொல்லி விட்டு அடுத்த நொடி சமையலறைக்குள்
புகுந்து கொண்டார்.
அவள் இரு தங்கைகளும் அறைக்குள்
சென்றிருக்க, வரவேற்பறையில் யாரும் இல்லாததால், சத்யாவின் அருகில் நெருங்கி
வந்தவன்
“என் பொண்டாட்டிக்கு என் மேல் இன்னும் கோபம்
தீரலையா? “ என்றான் ஹஸ்கி குரலில்.
அவனின் பொண்டாட்டி என்ற விளிப்பில், ஒரு நொடி சில் என்று
பனிச்சாரல் பொழிந்தது அவள் உள்ளே. உள்ளுக்குள் பரவசமாகி போனாலும், அடுத்த நொடி தன்னை
சமாளித்துக் கொண்டவள், தலையை சிலுப்பி கொண்டு
“ஹலோ...மிஸ்டர் ஆரவமுதன்... யார் யாருக்கு
பொண்டாட்டி? இன்னொரு தரம் இந்த மாதிரி எல்லாம் தத்து பித்துனு
உளறாதிங்க. மைண்ட் யுவர் வோர்ட்ஸ்...” என்று அடிக்குரலில் சீறி, கண்களால் எரித்தாள்.
“ஷ் அப்பா... என்னா கோபம்... என்னா ஒரு
வேகம்.. பார்வையாலேயே என்னை எரிச்சிடுவா போல. இனிமேல் நான் எந்த ஒரு தவறும்
செய்யாமல் இருக்க வேண்டும்.
இல்லையென்றால் மாட்டிகிட்டால்
அவ்வளவுதான்..! என் பொண்டாட்டி என்னை
இப்படி உஷ்ண பார்வை பார்த்தே பஷ்பமாக்கிடுவா போல...” என்று கண் சிமிட்டி விஷமமாக
சிரித்தான்.
அவள் மீண்டும் அவனை முறைத்து ஏதோ சொல்ல
வர, அதற்குள் முந்தி கொண்டவன்
“சது...கொஞ்சம் மேல வர்ரியா? மாடிக்குப் போய் என்னுடைய
அறையை பார்க்கணும்...” என்று கண்களால்
சிரிக்க, அவளும்
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். அந்த
ரூம் இப்ப காலியாக இல்லை வாடகைக்கு விட்டாச்சு...” என்று வேண்டுமென்றே மாத்தி சொன்னாள்.
அதைக்கேட்டு அவன் முகத்தில் வேதனை வந்து
போனது. ஆனாலும் சமாளித்து கொண்டு,
“ஹ்ம்ம் வாடகைக்கு விட்டால் என்ன.. சரி நான் போய் அந்த இடத்தை யாவது பார்த்து விட்டு வருகிறேன்...” என்றவன் அவள் மறுக்க மறுக்க கேட்காமல் மாடியேறி
சென்றான்.
வழியில் மற்ற குடித்தனக்காரர்கள் எல்லோருமே அமுதனை கண்டு, முகமலர்ச்சியுடன்
நலம் விசாரித்து சென்றனர்.
இந்த மாதிரி ஒரு ஆத்மார்த்தமான
அன்பைத்தான் அவன் இழந்திருந்தான். அத்தனை பெரிய சாம்ராஜ்யத்தை, ஒரு தலைவனாய் கட்டி காத்தாலும் எந்நேரமும் டென்ஷன் தான் குடி
கொண்டிருக்கும்.
இந்த தொழிலில் யாரை எப்படி ஜெயிப்பது
என்று எந்நேரமும் பரபரத்துக் கொண்டிருக்கும் மெசின் வாழ்க்கை என்றுதான் தோன்றியது.
அவனுக்கு, அவன்
களித்த, கடந்த ஒரு வருட காலம் பொக்கிஷமாய் தெரிந்தது
இப்பொழுது.
எந்த ஒரு கவலையும் இல்லாமல், சம்பாதிக்கிற காசில்
நிம்மதியாய் செலவு பண்ணி விட்டு, எதிர்கால சேமிப்பு என்று ஓடி ஓடி
உழைத்து நிகழ்கால வாழ்க்கையை தொலைத்து விடாமல், வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து, அனுபவித்த அந்த நாட்கள் மனதில் வந்து போனது.
அதிலும் பசுமையான, இனிமையான, அமுதமான நேரம் அவனுடைய சது உடன் களித்த நேரம் தான். அதை நினைக்கும் பொழுது உடல் எல்லாம் சிலிர்த்து மீண்டும் ஒரு பரவசம் வந்து போனது அவன் உள்ளே.
அவன் தங்கி இருந்த அந்த பத்துக்கு பத்தான ஒற்றை அறையை
பார்த்த பொழுது, அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது.
அவனுடைய பாத்ரூமை விட, நூறில் ஒரு பங்குதான் இருந்தது அந்த சிறிய அறை. மிகச் சிறிய அளவிலான
இந்த அறையில்தான் தங்கியிருந்தான் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.
ஆனால் அப்பொழுது அதனுடைய கஷ்டம்
எதுவும் தெரியவில்லை. அதே போல அந்த அறையை ஒட்டி இருந்த, மேலே
தண்ணி டேங்குக்கு செல்லும் மாடிப்படியை பார்த்தவனுக்கு மீண்டுமாய் ஒரு சிலிர்ப்பு வந்து
போனது.
இங்கே உட்கார்ந்து கொண்டு தானே எத்தனை
நாட்கள் கதை பேசி இருக்கிறார்கள் அவனும் அவன் சதுவும். காதல் மொழி பேசி இருக்கிறார்கள். கவிதை
இயற்றியிருக்கிறான்.
ஏன் சில நேரம் சத்யா உணர்ச்சிவசப்பட்டு
அவனை கட்டி அணைத்து, அவனுக்கு முத்தம் கூட
கொடுத்திருக்கிறாள் என்று எண்ண, தானாக அவன் இதழில் புன்னகை
பூத்தது.
மெதுவாய் தன் இதழ்களை வருடிக்
கொடுத்தவன், அவளின் அந்த இதழ் அணைப்பு மீண்டும்
கிடைக்காதா என்று தவிப்பாக இருந்தது.
தன் தலையை உலுக்கி கொண்டவன், மீண்டும் அந்த அறைக்குள் வர, அங்கே அவனுடைய பொருட்கள்
எல்லாம் அப்படியே வைக்கப்பட்டிருந்தன.
கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் சென்ற
பிறகும், அந்த
அறையின் அமைப்பை மாற்றாமல், அவன் விட்டு சென்றதைப் போல அப்படியே வைத்திருந்தாள் சத்யா.
அதிலிருந்தே தன்னை எவ்வளவு மிஸ் பண்ணி இருக்கிறாள் என்பது புரிந்தது. அவளை அப்படி வருத்தப்பட
வைத்துவிட்ட தன் மீதே கோபம் வந்தது அவனுக்கு.
அவளின் வேதனையை கண்டு அவனுக்குமே கண்ணோரம்
கரித்தது. அவளின் எல்லையில்லாத, கரை காண முடியாத காதல் புரியவும்
“இவள் என்னுடைய பொக்கிஷம். எந்த ஒரு
நிலையிலும் இவளை கை நழுவ விட்டு விடக்கூடாது. இவள் என்னவள்...என் உயிரானவன்...என் உயிருக்கும்
மேலானவள். காதலடி நீயெனக்கு...”
என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டவன், எதேச்சையாய் திரும்ப, அங்கே வாசற்படியில் கைகளை
மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு அவனையே விரக்தியுடன் வெறித்து பார்த்தவாறு
நின்று கொண்டிருந்தாள் சத்யா...!
Part 29 & 30 it's wrongly updated.. Pls check
ReplyDeleteThanks for pointing out pa. I have corrected the links now.
Delete