காந்தமடி நான் உனக்கு!!-31
அத்தியாயம்-31
காலதேவன் காலில் சக்கரத்தை கட்டியது போல வேகமாக சுழன்று கொண்டிருந்தான்.
மேலும் ஒரு மாதம் கடந்திருக்க, அமுதன் அவனுடைய மென்பொருள்
நிறுவனத்தை ஆரம்பிப்பதில் படு பிஸியாகி போனான். இப்பொழுது கிட்டதட்ட அதனுடைய எல்லா
ஃபார்மாலிட்டீஸ் ம் முடிந்திருக்க, அடுத்த வாரத்தில் அதன் திறப்பு விழா
என்றிருந்தது.
விழாவிற்காக அவனுடைய பெற்றோர்கள் மும்பையிலிருந்து
இங்கே வர இருக்கிறார்கள். தன்னுடைய தொழிலில் அடுத்த பகுதியை, புதிய
துறையை தென்னிந்தியாவில் ஆரம்பிக்க இருக்கிறான் அமுதன்.
இது அவனுடைய கனவு ப்ராஜெக்ட்.
இதுவரை அவன் தந்தை கால் பதித்திராத துறை
ஐ.டி துறை. அவருக்கு அதில் அவ்வளவாக பிடித்தம் இல்லாததால் இந்த பக்கம் பார்க்காமல்
இருந்தார்.
ஆனால் அமுதன் அப்படியில்லையே. அவனுக்கு
இந்த துறையிலும் ஆரவ் க்ரூப் ஆப் கம்பெனிஸ் க்கு நல்ல பெயர் இருக்கவேண்டும் என்று எண்ணினான்.
அதனால்தான் ஐ.டி நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டும்
என்று திட்டமிட்டு, அதையும் தென்னிந்தியாவை தேர்வு செய்து, அதிலும் பெங்களூரை தலைமை இடமாக
கொண்டு தன் நிறுவனத்தை தொடங்க இருந்தான்.
ஏனோ அவனுக்கும் பெங்களூருக்கும் ஒரு பிரிக்க
முடியாத பந்தம் போல மனதினில் ஒரு உணர்வு. அவன் செட்டில் ஆவது கூட இங்கதான் என தீர்மானித்தவன், அதனாலயே பெங்களூரில் தனக்கென்று ஒரு பெரிய பங்களாவையும் வாங்கி விட்டான்.
எல்லாமே அவன் திட்டமிட்ட படிதான் சென்று
கொண்டிருந்தது. அவன் வாங்கிய பங்களாவாகட்டும். அவன் திட்டமிட்ட ஐ.டி நிறுவனமாகட்டும்.
எல்லாமே அவன் திட்டமிட்டது போல ஆன் டைமில் நடந்து கொண்டிருந்தது.
எல்லாவற்றிலும் வெற்றி பெற்றவன், பெறுபவன், பெற்றுக் கொண்டு இருப்பவன், எதிலும் அவன் நினைத்ததை சாதித்தவன், ஒன்றில் மட்டும் தோற்று கொண்டிருந்தான்.
அதில் மட்டும் அவனால், அவன் நினைத்ததை சாதிக்க முடியவில்லை. தன் முயற்சியை விடாமல் இன்னுமே
முயன்று கொண்டு இருக்கிறான் தான்.
இன்று காலையில் கூட அவன் தந்தை அவனை அழைத்து, புகழ்ந்து தள்ளி விட்டார். இந்த ஐ.டி நிறுவனத்தை சொன்ன காலத்தை விட சீக்கிரமாகவே
முடித்து விட்டான். தன்னைவிட பல மடங்கு வேகமாக இருக்கிறான் என்று பூரித்து அவனை புகழ்ந்து
தள்ளினார் மதி.
மற்ற நேரமாக இருந்திருந்தால் துள்ளி குதித்திருப்பான்.
அவன் தந்தை தான் அவனுக்கு குரு. அவரும் அவ்வளவு எளிதாக யாரையும் மனம் திறந்து பாராட்டி
விட மாட்டார்.
சின்ன வயதில் இருந்து, இன்று வரை அவரிடம் பாராட்டு
பெறவேண்டும் என்பதற்காகவே அவன் கடினமாக உழைப்பான். அவருக்கு முழு மொத்த திருப்தி ஆனால்
மட்டும்தான் வாய் திறந்து சபாஷ் என்று சிரித்து அவன் தோளை தட்டி கொடுப்பார்.
பூரித்து போவான் ஆரவமுதன். அதற்காகவே இன்னும்
நிறைய செய்ய வேண்டும். தந்தையிடம் பாராட்டை பெற வேண்டும் என்று உற்சாகம் பொங்கும்.
இப்பொழுதும் அவனுடைய கடின உழைப்பை, சரியாக திட்டமிடுதலை, திட்டமிட்டதை சரியாக நிறைவேற்றியதை சொல்லி, அவனை பாராட்ட, வெறும் சின்ன புன்னகை மட்டுமே அவன் இதழ்களில்.
அவன் மனம் ஏனோ எந்த ஒரு
மகிழ்ச்சியையும் காட்டவில்லை. மாறாக அவன் உள்ளே சிறு வலியும், வேதனையும், ஏமாற்றமும், நிரம்பி வழிந்தது.
அதற்குக் காரணம் அவனின் மனம் கவர்ந்தவள்...அவனின்
செல்லம்மா... அவனின் சது.
அன்று நேரடியாகவே வளர்மதியிடம் சத்யாவை மணந்து கொள்ள சம்மதம் வேண்டி நிக்க, அவரும் ஒத்துக்கொள்ள, ஆனால் ஒத்துக்கொள்ள வேண்டியவளோ மறுத்து
விட்டாள்.
அவனுடனான திருமணத்தை மறுத்து விட்டாள்.
அவனை பிடிக்கவில்லை என்று முகத்தை திருப்பி கொண்டாள். அதைத்தான் அவனால் தாங்கிக் கொள்ள
முடியவில்லை.
அவனும் எத்தனையோ வழிகளில் சத்யாவை சமாதான
படுத்த முயன்று விட்டான். ஆனால் அவளோ நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்பதாய்
பிடிவாதமாக நிற்கிறாள்.
அவனும் எவ்வளவோ தூரம் இறங்கி வந்து விட்டான்.
அவளுக்கு அவனுடைய பொருளாதார நிலைதான் குறுக்கே நிற்கிறது என்றால், அதைக்கூட துறந்து விட தயாராக இருந்தான்.
அன்று கிளம்பி வந்த பிறகு மீண்டும் அடுத்த
வாரம், வார விடுமுறையில் அவ்வளவு பிசி செட்யூலிலும் அவள்
முன்னே சென்று நின்றான்.
“சொல்லு சது. உனக்கு என் ஸ்டேட்டஸ் பிடிக்கவில்லை
என்றால், உனக்கு பிடிக்காதது எனக்கும் வேண்டாம். இந்த ஆரவ்
வேண்டாம். அமுதனாகவே உன்னிடம் வந்து விடுகிறேன்.
எனக்குமே நான் முன்பு வாழ்ந்த வாழ்க்கைதான்
பிடித்து இருக்கிறது சது மா. ஒரு மாத சம்பளக்காரனாய், எந்த
ஒரு டென்ஸனையும் தலையில் ஏற்றி கொள்ளாமல் அன்றாடம் நமக்கு கொடுத்த வேலையை செய்து கொண்டு, ஆன்ட்டி கையால் நல்ல ருசியான சாப்பாடு சாப்பிட்டு,
இரவில் மொட்டை மாடியில் உன் மடியில் படுத்து
கொண்டு, நிலவை
ரசித்தபடி, பாரதியின் கவி பாடி, உன்னை திகட்ட திகட்ட காதலித்து.... சொர்க்கம் டி. அந்த வாழ்க்கை...!
வந்து விடவா? எல்லாத்தையும்
விட்டுவிட்டு வந்து விடவா? “ அவள் கையை பற்றி, அவள் கரத்துக்குள் தன் கரத்தை
வைத்து கொண்டு அவள் கண்களை பார்த்து யாசித்தான் அமுதன்.
அவன் முகத்தில் அத்தனை அத்தனையாய் ஏக்கம்.
தவிப்பு.. அவளை தன் பக்கத்தில் வைத்து கொள்ளவேண்டும்... தன்னவளாக்கி கொள்ள வேண்டும்
என்ற ஆசை எல்லாம் அவன் கண்களில் தெரிந்ததுதான்.
அதைக் கண்ட சத்யாவோ ஒரு நொடி ஆடிப் போனாள்.
அவள் உறுதி கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்தது.
“பேசாமால் ஓகே சொல்லிவிடலாமா? இவனை.. என்னவனை இந்த அளவுக்கு வருத்தப்பட வைக்க வேண்டுமா? “ என்று தவித்தது அவளின்
காதல் கொண்ட மனம்.
ஆனால் அடுத்த நொடி ஏதோ நினைவு வர, உடனே தன்னை உலுக்கி கொண்டு, தலையை சிலுப்பி
கொண்டு, அவள் கையை அவனிடம் இருந்து உருவிக் கொண்டவள்,
“ஸ்டுப்பிட் மாதிரி பேசாத அம்.... “
அம்மு என்று சொல்ல வந்தவள் பாதியில் நிறுத்தி கொண்டு மிஸ்டர் ஆரவமுதன் என்று
நீட்டி முழக்கினாள்.
“உங்களை நம்பி எத்தனை குடும்பங்கள்
இருக்கின்றன. உங்கள் நிறுவனம் நன்றாக முன்னேறினால்தான் அத்தனை குடும்பங்களும்
சந்தோஷமாக இருக்க முடியும்.
அவர்களுக்கு மாதா மாதம் சம்பளம்
வரவேண்டும் என்றால் , நீங்கள் உங்க நிறுவனத்தை நல்ல படியாக
நடத்த வேண்டும். உங்க நிறுவனம் நல்ல
படியாக நடக்க வேண்டுமென்றால் அதுக்கு தலைமை ஏற்று நீங்கள் அதை நல்ல படியாக வழி நடத்தி
செல்ல வேண்டும்.
இவ்வளவு பொறுப்பு உங்களுக்கு இருக்க, எனக்காக ஒன்றும் அதை எல்லாம் விட்டு விட்டு வரவேண்டாம். என்னால்
அந்த வாழ்வில் பொருந்தி வாழ முடியாது.
அதுக்காக உங்களை மட்டும் அங்கிருந்து
பிரித்து எடுத்து கொள்ளும் சுயநல வாதியும் அல்ல நான்...” என்று படபடவென்று
பொரிந்தாள் சத்யா.
மூச்சு வாங்க பேசுபவளையே, மூச்சு விட மறந்து, இமைக்க மறந்து ரசித்து
பார்த்திருந்தான் அமுதன். அவள் படபடவென்று பொரிந்ததில், அவனுக்கு
ஏதோ புரிந்தது போல.
உடனே தன் வருத்தத்தை, வேதனையை மறைத்து கொண்டு, அவன் இதழோரம் சின்னதாய் பூத்தது அழகான புன்னகை
ஒன்று.
“சோ....இதனால் நீ சொல்வது என்னவென்றால்....? “ என்று நிறுத்தினான் அவளையே குறும்பாக பார்த்தவாறு.
“அட ராமா... விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு
ராமன் சித்தப்பானானாம் ஒரு அறிவாளி. அந்த மாதிரி இதுவரைக்கும் என்ன சொல்லி கிட்டிருந்தேன்.
இப்ப மறுபடியும் நான் கோட்டை அழிச்சிட்டு திரும்பவும் போடணுமா?
என்னால ஆகாது டா சாமி... சுருக்கமே தலைவர்
பாணியில் சொல்லிடறேன். என் வழி தனி வழி. உங்க வழி வேற வழி. அவங்கவங்க வழியை பார்த்துகிட்டு
போலாம் மிஸ்டர் ஆரவமுதன்.
இதுக்கு மேலயும் என்னை தொந்தரவு பண்ணாதிங்க.
ப்ளீஸ்... “ என்று தன் இரு கரம் கூப்பி, அவனை கையெடுத்து பெரிதாக கும்பிட போட, கொஞ்ச நேரம் இருந்த இலகுதன்மை
மறைந்து ஒரு விரக்தி வந்து ஒட்டி கொண்டது அமுதனுக்கு.
அவளையே வெறித்து பார்த்தவன்
“அப்ப நம்ம காதல் சது? நமக்குள் ஒன்னுமே இல்லையா? எப்படி உன்னால்
அப்படி சட்டுனு தூக்கி போட முடிந்தது? உனக்கு எப்படியோ..
என்னால் நீ இல்லாமல் இருக்க முடியாது சது. என் லைப் ஏ நீதான்.... “ என்றான் வேதனையுடன், தழுதழுத்தவாறு...
அதைக்கேட்டு அவளுக்குமே மனதை பிசைந்தது.
“என்னால் மட்டும் எப்படி அவன் இல்லாமல்
இருக்க முடியும்? அவனை, தன்னை
மறந்திடு என்று சொல்லும் நான், அவ்வளவு சீக்கிரம் அவனை மறந்து விட முடியுமா? “ என்று
தனக்குள்ளே அரற்றிக் கொண்டவள் நொடியில் சமாளித்துக் கொண்டு
“ப்ச்...சும்மா இந்த சென்ட்மென்ட்டா எல்லாம்
பேசாதிங்க மிஸ்டர் ஆரவமுதன். இந்த நேரத்தை உருப்படியா வேற எதுலயாவது இன்வெஸ்ட் பண்ணினிங்கனா
இன்னும் கொஞ்சம் மேல போயிருந்திருக்கலாம்.
உங்க ஸ்டேட்டஸ் இன்னுமே உயர்ந்திருக்கும்.
பல மில்லியன் டாலர் மதிப்பு உயர்ந்திருக்கும்.
அப்புறம் இன்னொரு விசயம். என்னை மறந்து
எப்படி வாழ்வது என்றுதானே உங்களுக்கு கவலை. டோன்ட் ஒர்ரி மிஸ்டர் ஆரவமுதன். யு நோ ஒன்
திங்...
கண்ணால் பார்க்காதது சீக்கிரமே கருத்தில்
நிலைக்காமல் போய்விடும் என்று சொல்லுவார்கள். அதே போல எந்த ஒரு விஷயமும் இருபத்து எட்டு
நாட்கள் பின்பற்றி விட்டால் அதுவே நிரந்தர பழக்கமாயிடுமாம்.
அதனால் ஆரம்பத்தில் அப்படித்தான்... என்னை
பார்க்காமல் ரொம்ப கஷ்டமா இருக்கும் மிஸ்டர் ஆரவமுதன். அப்புறம் அப்படியே பழகிடும்.
அதனால் நீங்க ரொம்பவும் பீல் பண்ண வேண்டாம்.
உங்களுக்கு பொருத்தமான பெண்ணை பார்த்து
கல்யாணம் பண்ணிக்கங்க. முடிஞ்சா உங்க பொண்ணுக்கு என் பெயரை வச்சிடுங்க...“ என்று தன்
வலியை மறைத்து கொண்டு கண் சிமிட்டி குறும்பாக சிரித்தவளை, வெட்டவா, குத்தவா என்று முறைத்து
பார்த்தான் அமுதன்.
பின் தன் கண்களை அழுந்த மூடியவன் ஒரு நிமிடம்
ஆழ்ந்து யோசித்து தன்னை சமனபடுத்தியவன் சத்யாவை நிமிர்ந்து அவள் கண்களுக்குள் கூர்ந்து
பார்த்தவன்
“லுக் சத்யா... இதுவரைக்கும் நான் எதுலயும்
முன் வச்ச காலை பின் வைத்ததில்லை. எல்லாத்துலயும் வெற்றிதான்... என் அப்பாவிடம் வைத்த
பெட்டில் கூட அத்தனை கஷ்டங்களையும் தாங்கி கொண்டு ஜெயித்து காட்டினேன்..
அது மாதிரி உன் விஷயத்திலும் நான்தான் வெற்றி
பெறுவேன். உன் மனதையும் வெற்றி கொள்வேன். உன்னை மாதிரி என்னால் மனதை மறைத்து வேஷம்
போட முடியாது.
இந்த ஜென்மம் மட்டுமல்ல. இனி வரும் ஜென்மத்திலும்
நீதான் எனக்கு சரிபாதி...என் செல்லம்மா நீதான். அதை யாராலும் மாற்ற முடியாது...உன்னையும்
சேர்த்துத்தான்...வர்றேன்...” என்றான் முகத்தில் கோபம் கொந்தளிக்க சிடுசிடுத்தவாறு.
“ஹா ஹா ஹா ரொம்பத்தான் செல்ப் டப்பா அடிக்கறீங்க.
ஓவர் கான்பிடென்ட் உடம்புக்கு ஆகாது பாஸ்...” என்று சத்யா சத்தமாக சிரிக்க, அவனோ இன்னும் கடுப்பாகி
“இந்த அமுதன் சொல்றதைத்தான் செய்வான்..
செய்வதைத்தான் சொல்வான்... லெட்ஸ் வெய்ட் அன்ட் வாட்ச்...வரட்டா டார்லிங்... “ என்று
அவளின் குண்டு கன்னத்தை செல்லமாக தட்டிவிட்டு, உல்லாசத்துடன் துள்ளி குதித்தவாறு கிளம்பி சென்றான்
ஆரவமுதன்.
சத்யாவோ திக் பிரம்மை பிடித்தவளை போல தன்
முன்னால் செல்பவனின் முதுகையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
அன்று இரவு தன் அலுவலை முடித்து, படுக்கையில் வீழ்ந்தவனுக்கோ மனதில் பல குழப்பங்கள்..
எல்லாம் அவனுடையவளை பற்றித்தான்.
பல கோடி ப்ராஜெக்ட் க்கு கூட அசால்ட்டாக
திட்டம் போட்டு அதை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறான். ஆனால் ஒரு பெண்ளை கரெக்ட் பண்ண முடியலையே..! .
அவளை இந்த திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க, இவ்வளவு கஷ்ட பட வேண்டி இருக்கிறதே
என்று உள்ளுக்குள் புலம்பியவனுக்கு அன்று நடந்த அவளுடனான உரையாடலை மனசுக்குள் ஓட்டி
பார்த்தவனுக்கு எங்கயோ இடித்தது.
அவள் தன் ஸ்டேட்டஸ் ஐ பார்த்துத்தான் வேண்டாம்
என்கிறாள் என்றால் அவன் அதை எல்லாம் விட்டு விட்டு வருகிறேன் என்று சொல்லும்பொழுது
அவள் கண்கள் ஏன் படபடக்கவில்லை.
அவள் முகம் ஆச்சர்யத்தில் பிரகாசிக்கவில்லை.
மாறாக ஏதோ ஒரு அச்சம் அவளை ஆட்கொண்டதை அவள் கண்களிலிருந்து கண்டு கொண்டான். அவன் முடிவை
அவள் ஏற்கவில்லை.
“இந்த முறை தொழிலாளிகள் நிலை, மாத சம்பளம் என்று வேறு கதை சொன்னாள். அப்படி என்றால் அவள் தன்னை வெறுப்பதற்கு
அவன் ஸ்டேட்டஸ் காரணம் அல்ல. பிறகு வேறு என்ன?
அது தெரிந்து விட்டால், கண்டிப்பாக அவளை தன்னிடம் கொண்டு
வந்து விடலாம். என்னவாக இருக்கும்? அவள் மனதில் இருப்பது என்னவாக இருக்கும்? ஏன் என்னை வெறுக்கிறாள். இல்லை வெறுப்பது போல நடிக்கிறாள்? “ என்று பல ஆயிரம் கேள்விகள்
அவன் உள்ளே.
மேலும் ஒரு வாரம் கடந்து சென்றிருந்தது.
அன்று மாலை சத்யா தன்னுடைய பேக்டரியில்
தன் வேலையில் பிஸியாக இருந்தாள். அந்த மாதம் முடிக்கவேண்டிய ஆர்டர் நிறைய இறுக்க, எல்லாருமே வெகு சீரியஸாக தங்கள் வேலையில் மூழ்கி இருந்தனர்.
திடீரென்று சத்யாவுடைய அலைபேசி ஒலிக்க, அதை எடுத்துப் பார்த்தவள்
அதிலிருந்த அம்மு என்ற பெயரைக் கண்டதும் ஒரு நொடி உள்ளம் துள்ளிக் குதிக்கத்தான்
செய்தது.
இந்த எண், அவள் அவனுக்காய், அமுதனுக்காய்
வாங்கிக் கொடுத்திருந்த சிம் கார்டு. அந்த எண்ணில் இருந்து இப்பொழுது அழைக்கிறான்.
அப்படி என்றால் என் மீது இன்னுமே பாசமாக தான் இருக்கிறான் என்று ஒரு நொடி நினைத்து
பூரித்துக் கொண்டாலும், மறுநொடி அவள் நிலை கண் முன்னே வர, தலையை சிலுப்பிக் கொண்டு வரவழைத்த
சிடுசிடுப்புடன் அந்த அழைப்பை கட் பண்ணினாள்.
அவனும் மீண்டும் மீண்டும் முயற்சிக்க, அவளும் மீண்டும் மீண்டும் அழைப்பை துண்டித்தாள். ஆனால் அவன்தான் பிடிவாதக்காரன்
ஆயிற்றே.
விடாமல் தொடர்ந்து அடித்து கொண்டே இருக்க, ஒரு வழியாக இறுதியில் மலை இறங்கி வந்தவள், அவன் தொடர்ந்து அழைக்கிறான் என்றால் ஏதோ விஷயம்
போல என்று அழைப்பை ஏற்க, அவனோ
“சது....நீ உடனே கிளம்பி அப்போலோ
ஹாஸ்பிடலுக்கு வா...” என்றான் மொட்டையாக
அதை கேட்டதும் திடுக்கிட்டு போனவள்
“என்னாச்சு? “ என்று
அதிர்ந்து பதைபதைத்து போனது பெண்ணவளுக்கு
“நத்திங் டு வொர்ரி... நீ உடனே பெர்மிஸ்ஸன்
சொல்லிட்டு கிளம்பி வா..” என்று அழைப்பை துண்டித்தான்.
அவளும் அவன் சொன்ன மாதிரியே மீதி வேலை
செய்யும் நேரத்தில் பெர்மிஸ்ஸன் எடுத்துக்கொண்டு, வேகமாக அமுதன் சொல்லியிருந்த மருத்துவமனைக்கு விரைந்தாள்
ஆட்டோவில் செல்லும்பொழுது இதயம் எகிறி குதித்தது.
அமுதனுக்கு என்ன ஆச்சோ என்று நெஞ்சாங்கூடு வேகமாக ஏறி இறங்கியது.
மனதுக்குள்ளேயே அவனுக்கு எதுவும் ஆகிடக்கூடாது
என்று கந்த சஷ்டி கவசத்தை உருப்போட்டு கொண்டே கண்களை மூடியபடி நடுக்கத்துடன் அமர்ந்திருந்தாள்.
அந்த மருத்துவமனையை அடைந்ததும், கையில் கிடைத்த காசை எடுத்து அந்த ஆட்டோ ட்ரைவரிடம் திணித்துவிட்டு, ஆட்டோவில் இறங்கி வேகமாக மருத்துவமனை நுழைவு வாயிலை நோக்கி ஓடினாள்.
வாயிலிலேயே காத்திருந்தான் அமுதன்.
அவனைக் கண்டதும் தான் பெரும் நிம்மதி
வந்து சேர்ந்தது பெண்ணவளுக்கு. அடுத்த கணம் எதை பற்றியும் யோசிக்கவில்லை... யாரையும்
கண்டு கொள்ளவில்லை. அது பொது இடம் என்ற சித்தம் துளியும் இல்லை.
“அம்முமுமுமு..... “ என்று பாய்ந்து சென்று
அவனை இறுக்கி கட்டிக்கொண்டாள். அவனை தன்னுள்ளே
பத்திரமாய் புதைத்துக்கொள்ளும் அக்கறையான வேகமான அணைப்பு அது.
அவசரமாய் அவனை உச்சி முதல் பாதம் வரை கண்களால்
மின்னல் வேகத்தில் ஸ்கேன் செய்தவள் அவனுக்கு
ஒன்றுமில்லை என்று அறிந்த பிறகுதான் மனம் அமைதி அடைந்தது.
அவன் முகம் எங்கும் முத்த மழை பொழிந்தவள், மீண்டுமாய் அவனை இறுக்கி கட்டிக்கொண்டாள். அவனுக்கு எது வந்தாலும் தன்னை
தாண்டித்தான் வரவேண்டும் என்ற உறுதி அந்த அணைப்பில் தெரிந்தது.
ஆட்டோவில் வரும்பொழுது அவனுக்குத்தான் என்னவோ
ஆயிற்று என்று உடைந்து போய் வந்தவள், அவனை முழு மொத்தமாய்
காணவும்தான் இப்பொழுது மூச்சு விட முடிந்தது.
அந்த சிலிர்ப்பில் அவனை இன்னுமாய் கட்டிக்கொள்ள, அமுதனுக்கோ எப்படி உணர்வது என்றே தெரியவில்லை. அவளின் மனநிலை அவனுக்கும்
புரிகிறதுதான்.
அவன் அழைத்து ஹாஸ்பிட்டல் வரச் சொல்லவும்
அவனுக்குத்தான் என்னவோ என்று பயந்துவிட்டாள் என்பது புரிகிறதுதான். அதனால்தான் தன்னை
இப்படி கட்டிக் கொண்டிருக்கிறாள் என புரிய, அவன் உள்ளேயோ அந்த
நிலையிலும் குத்தாட்டம் ஆடினான்.
“அவளின் இந்த அக்கறை... சக்கரை...க்கு என்ன
பெயராம்? என்னை பிடிக்கவில்லை. என்னை காதலிக்கவில்லை என்று
வாயால் சொல்பவள் இப்பொழுது செயலில் காட்டி கொண்டிருப்பது என்னவாம் ?
அவனின் மீதான டன் கணக்கான காதல் அல்லவா? இவ்வளவு காதலை உள்ளுக்குள் மறைத்து வைத்துக்கொண்டு நாடகம் ஆடறாளே இந்த
லூசு... இவளை எதை வைத்து அடிக்க? “ என்று தனக்குள்ளே சிரித்து கொண்டான்.
ஆனாலும் அவனுக்கு ரொம்பவும் பிடித்து இருந்தது.
தனக்கே தனக்கு என்று ஒருத்தி. ஒவ்வொரு நொடியும் தன்னை பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க
ஒருத்தி. தனக்கு ஒன்று என்றால் உயிர் வரை துடிக்க ஒருத்தி.
வாழ்வில் இதைவிட ஒருவனுக்கு என்ன வேண்டும்..
அனைத்தையும் சாதித்துவிட்ட கர்வம் அவன் உள்ளே. அவள் உடன் இருக்கும் இந்த வாழ்வு சொர்க்கம்
அல்லவா? அதேபோல அவள் இல்லை என்றால் கண்டிப்பாக அந்த வாழ்வு
நரகத்தை விட மோசமானதாக இருக்கும் என்பதும் புரிகிறது அவனுக்கு.
இல்லை....இவள் என்னவள்... என் பொக்கிஷம்..இவளை
எக்காரணத்தை கொண்டும் கை விட்டுவிடக்கூடாது. விட்டு விட மாட்டான்.. யாருக்கும் எதுக்கும்
விட்டு கொடுத்திடவும் மாட்டான் இந்த அமுதன்....” என்று தனகுள்ளே உறுதி செய்து கொண்டவன்
அவளை மெல்லமாய் அணைத்து கொண்டவன்
“ரிலாக்ஸ் சது மா... எனக்கும் ஒன்னுமில்லை.
ஒன்னுமேயில்லை ஐம் பெர்பெக்ட்லி ஆல்ரைட். நான் மனதால் உனக்கு, என் பொண்டாட்டிக்கு கட்டியிருக்கும் தாலியின் சக்தி ரொம்பவும் பெரிது.
எனக்கு எப்பொழுது எதுவும் ஆகாது....: என்றான் தழுதழுத்தவாறு அவளின் அன்பில் காதலில்
உருகியவனாய்.
அதைக்கேட்டு திடுக்கிட்டவள், அப்பொழுதுதான் சுற்றுப்புறம் உறைக்க, அவள்
அவன் மார்பில் தஞ்சம் புகுந்து கொண்டிருப்பது உறைக்க, உடனே
விலுக்கென்று அவனிடமிருந்து விலகி தள்ளி நின்று கொண்டாள்.
அடுத்த நொடி அவள் அறிவு விழித்துக்கொள்ள,
“இவன் நன்றாகத்தான் இருக்கிறான். அப்படி
என்றால் எதற்கு என்னை அவசரமாக வரச் சொன்னான்? அப்போ வேற யாருக்கோ எதுவோ பிரச்சனையா? “ என்று மீண்டுமாய் யோசிக்க, அவளின் மனதை புரிந்தவனாய் அவள்
அருகில் நெருங்கி வந்தவன்
“ஒன்னும் இல்ல சது மா...வந்து.... ஆன்ட்டிக்கு தான் கொஞ்சம் மைல்ட் ஹார்ட் அட்டாக் வந்திருக்கு...” என்று தயக்கத்துடன் இழுக்க, அதைக் கேட்டதும் அடுத்த நொடி அம்மா.... என்று அலறியபடி மயங்கி சரிந்தாள் சத்யா...!
Super mam. Eppo sathya kovam kuraiyum
ReplyDeleteThanks pa. seekiram kuraiya vachudalam :)
DeletePart 32 link issue.. Pls check
ReplyDelete