காந்தமடி நான் உனக்கு!!-32

 


அத்தியாயம்-32

த்யா கண்விழித்துப் பார்த்த பொழுது, அவள் அருகில் கவலையுடன் அமர்ந்திருந்தான்  அமுதன். அவனோடு அவளின் தங்கைகள் இருவரும் வேறு சோகமே உருவாக அவள் முன்னே அமர்ந்து இருந்தனர்.

மெல்ல கண்ணை நன்றாக திறந்து அவனை ஆழ்ந்து பார்த்தவள் அப்பொழுது தான் சற்று முன் என்ன நடந்தது என்று நினைவில் வந்தது. அமுதன் தன் அன்னைக்கு ஹார்ட் அட்டாக் என்று சொன்னதும் தான் மயங்கி விட்டது புரிய, உடனே வேகமாக படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தாள்.

அவள் ரொம்பவும் வீக்காக இருக்கிறாள். அவளின் பிபி ரொம்பவும் குறைவாக இருக்க, அவளுக்கு ட்ரிப்ஸ் போட்டிருந்தனர்.

அவள் கைகளில் ட்ரிப்ஸ் இறங்கி கொண்டிருக்க, அதை கண்டு கொள்ளாமல் வேகமாக எழுந்து அமர்ந்தவளைக் கண்டு பதறியவன், வேகமாய் எழுந்து அவளை தன் இடையோடு கட்டி கொண்டவன்

“சது.... உனக்கு ட்ரிப்ஸ் இறங்கி கிட்டு இருக்கு.... கொஞ்சம் கையை காலை ஆட்டாம இரு மா... ஆமா.. இப்படியா  டென்ஷன் ஆவது. நான் கூட நீ தான் தைரியமான பொண்ணு னு நினைச்சா இப்படி மயக்கம் போட்டுட்ட...

இப்படி இருந்தால் எப்படி இந்த குடும்பத்தை பார்த்துக்க முடியும்?  உன்னைப் பார்த்து சின்ன புள்ளைகளும் பயந்துட்டாங்க பார்...” என்று செல்லமாக அதட்டினான்.

அவளோ அதை எல்லாம் காதில் வாங்கவில்லை.  அவளுக்கு அவளின் அன்னை மட்டுமே கண் முன்னால் நின்றார்.

“அ..அம்.... அம்மா க்கு என்னாச்சு?  என்றாள் மீண்டும் படபடப்பாக.

“அது...வந்து... ஒன்னும் பெருசா இல்ல மா... மைல்ட் ஹார்ட் அட்டாக். மைனர் சர்ஜரி பண்ணனும் னு  டாக்டர் சொல்றார். இரத்தக்குழாயில் அடைப்பு இருக்கிறதாம். அதை சரிபண்ண, ஹார்ட்ல ஸ்டென்ட் வைக்கணுமாம்.

முன்ன மாதிரி ஓபன் ஹார்ட் சர்ஜரி எல்லாம் இல்லை. மைனர் சர்ஜரி தான். பயப்படும்படியா எதுவும் இல்ல டா. இப்பல்லாம் இந்த ஸ்டென்ட் மெத்தாட் ல ட்ரீட் பண்ணுவது ரொம்பவும் காமன். சர்ஜரி ஒரு ஒன் ஹவர்ல முடிஞ்சிடும்.

இன்னும் அரை மணி நேரத்தில் சர்ஜரி ஆரம்பிக்க போகிறது.. நீ ஒன்றும் கவலை படவேண்டாம். நான் இருக்கேன் ஆன்ட்டியை பார்த்துக்க... பத்திரமா வீட்டுக்கு கூட்டிகிட்டு வர... “ என்று சத்யாவிற்கு ஆறுதல் சொன்னான் அமுதன்.

அதை கேட்டு இன்னும் அரண்டு போனவள் நான் இப்பொழுதே அம்மாவை  பார்க்க வேண்டும் என்று அடம் பிடிக்க,  அவனோ

“உனக்கு லோ பிபி இருக்கு டா... எழுந்தா  கீழ மயங்கி விழுந்திடுவ. அதுக்குத்தான் ட்ரிப்ஸ் இறங்கிகிட்டிருக்கு.. இது இறங்கி முடித்ததும் போகலாம்...”  என்று அவளை  சமாதானப்படுத்த முயன்றான்.  

அவளோ  மீண்டும் பிடிவாதம் பிடிக்க,  

“சரி.. நான் ஆன்ட்டி இருக்கும் ஐ.சி.யூவில் இருந்து வீடியோ கால் பண்றேன். நீ அது வழியாக அவரைப் பார். அவர் கிட்ட பேசமுடியாது. பட் யு கேன் சி ஹெர்...” என்றவன் ஐ.சி.யுக்கு சென்று, அனுமதி வாங்கி,  அவன் சொன்ன மாதிரியே அவள் அன்னை வளர்மதியை காட்டினான்.  

எப்பொழுதும் சிரித்த முகமாய், உதட்டில் உறைந்த புன்னகையுடன் வலம் வரும் தன் அன்னை, வாடிய மலராய், முகத்தில் கவலையும்,  வலியும் வேதனையும் கொட்டி கிடக்க,  கண் மூடி படுத்திருந்தார்.

அதைக் கண்டதும் சத்யாவின் மனதை பிசைந்தது. என்னவோ தன்னால் தான் இப்படி ஆனது என்று அவள் மனம் இடித்துரைத்தது.

ஆம் இன்று காலையில் அவள் வேலைக்கு செல்லும் பொழுது வளர்மதி மீண்டும் சத்யாவின் அருகில் வந்து அவளுடைய திருமண பேச்சை ஆரம்பித்தார்.

இப்பொழுது வித்யா அவள் படிப்பில் கடைசி  வருடத்தை முடித்திருக்க, அவள் கல்லூரியில் நடந்த கேம்பஸ் தேர்வில், அமுதன் ஆரம்பிக்க இருக்கும் பென்பொருள் நிறுவனத்திலயே வேலை கிடைத்து விட,  அடுத்த மாதத்தில்  இருந்து வேலைக்கு செல்ல இருக்கிறாள்.  

“இங்க பார் சத்யா... இப்ப வித்யா உன் இடத்திற்கு வந்து விட்டாள். அவளும் சம்பாரிக்க ஆரம்பித்து விட்டால், குடும்பம் நல்லாவே ஓடும். உன்னைப் போலத்தான் பொறுப்பா நம் வீட்டை பார்த்துக்குவா...

அதனால் இனிமேலும் உன் திருமணத்தை தள்ளிப் போட வேண்டாம். ஒன்னு அமுதனை   திருமணம் செய்து கொள். அப்படி முடியாது என்றால் வேறு மாப்பிள்ளை பார்க்கலாம்.  என்ன சொல்ற?” என்று கேட்க,  சத்யாவோ  அதிர்ந்து போனாள்.  

வேற ஒருவனா? அவளால் ஏற்று கொள்ள முடியுமா? அமுதனை தவிர வேறு யாராவது அவள் பக்கத்தில் மணமகனாய் அமர்ந்து விட முடியுமா? இல்லை...நோ..வே..” என்று அவள் மனம் ஓலமிட்டு சொல்ல, உடனே பதறியவள்

“இல்லம்மா... எனக்கு கல்யாணமே வேண்டாம். நான் இப்படியே இருந்து விடுகிறேன்....”  என்று சொல்ல,  அதைக் கேட்ட வளர்மதி திடுக்கிட்டு போனார்

என்ன சத்யா இது..?  நீ இதுவரைக்கும் இந்த குடும்பத்திற்காக பண்ணினது ரொம்ப பெருசு. இனிமேலும் உன்னுடைய சந்தோசத்தை பறித்துக்கொண்டு நாங்கள் உன் நிழலில் குளிர் காய விரும்பவில்லை..

ரெண்டுல ஏதாவது ஒரு முடிவைச் சொல்...”  என்று அதட்டினார் வளர்மதி.

“ரெண்டுமே முடியாது...நான் கடைசி வரைக்கும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க போகிறேன். உங்க பொண்ணா உங்க கூடவே இருந்திடறேன்..

ப்ளீஸ் மா.. என்னை கம்பெல் பண்ணாத...”  என்று தழுதழுத்தவாறு இரு கரம் கூப்பி கையெடுத்து கும்பிட்டு தன் அன்னையிடம் கெஞ்சினாள் சத்யா.

அதைக் கண்டு வாயடைத்து போனார் வளர்மதி. இதுவரை எதுக்கும் தன் மகளை கட்டாயபடுத்தியதில்லை வளர்மதி. சத்யா மட்டும் அல்லாமல் அவரின் மற்ற இரு பெண்களுக்குமே கூட அப்படித்தான்..

அவர்களாகவே நல்லது கெட்டது தெறிந்து கொண்டு அதுக்கு தகுந்த  மாதிரி அவர்கள் தங்கள் முடிவை தாங்களவே எடுத்து கொள்ளுமாறு தான் வளர்த்திருந்தார்.

அதன்படி இப்பொழுது சத்யா திருமணமே வேண்டாம் என்று மறுக்க, அவளை அதட்டி மிரட்டி திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க அவருக்கு மனம் வரவில்லை

இப்ப எப்படி இவளை சம்மதிக்க பைப்பது என்று நாள் முழுவதும் அதையே நினைத்துக் கொண்டிருந்தவருக்கு மன அழுத்தம் அதிகமாகி விட்டது.

கூடவே இதயத்தை முன்பே பரிசோதிக்காமல் இருந்ததால் ரத்த வால்வுகளில் கொழுப்பு சேர்ந்து பாதை அடைத்து கொண்டு இருந்ததும் கண்டு பிடிக்காமல் விட்டு விட்டனர்

அதுவே இப்பொழுது அவருக்கு எமனாக வந்து இருந்தது.

காலையில் நடந்த சம்பவம் நினைவு வர, தன்னால் தான் தன் அன்னைக்கு இப்படி ஆகிவிட்டது என்று குற்ற உணர்வாக இருக்க, வேதனையோடு தன் கண்களை அழுந்த மூடிக் கொண்டாள் சத்யா...

டுத்த இரண்டு மணி நேரத்தில் வளர்மதிக்கு ஆபரேஷன் செய்வதற்காக அழித்து சென்றனர். அதற்குள் சத்யாவும் தெளிவாகி தேறி இருக்க, எழுந்து நடமாட ஆரம்பித்தாள்.

எழுந்ததும் வேகமாக சென்று தன் அன்னையை பார்த்தாள். அவருமே எதுவும் சொல்லவில்லை. சத்யாவை ஒரு வெற்று பார்வை பார்த்துவிட்டு அமுதனிடம் மட்டும் தன் மகள்களை காட்டி பார்த்துக்க சொல்ல, அதைக் கண்டு இன்னுமே சத்யாவுக்கு பொங்கி வந்தது அழுகை.

தன் அன்னை இன்னுமே தன் மீது கோபமாக, வருத்தமாக இருப்பது புரிந்தது. தலையை குனிந்து கொண்டாள் தன் கண்ணீரை மறைக்க. அவள் தலையில் வந்து விழுகிறது ஆதரவாய் ஒரு கரம்.

விலுக்கென்று நிமிர்ந்து பார்க்க, வளர்மதிதான் அவள் தலையை வாஞ்சையுடன் தடவி கொடுத்து அழக்கூடாது என்று கண்டித்தார். அவளுக்கு தெரியும். தன் அன்னையால் யாரையும் காய படுத்த, வருத்தப்பட வைக்க முடியாது என்று அவளுக்கு தெரியும்.

அவள் கண்கலங்கவும் அதை தாங்காமல் வளர்மதி இறங்கி வந்து தன் மகளை வாஞ்சையுடன் வருடி கொடுக்க, அதில் இன்னுமே குற்ற உணர்வு மேலோங்கி நின்றது சத்யாவுக்கு.

இப்படி பட்ட பாசக்கார அன்னைக்கு, தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே...அவர் ஆசையை நிறைவேற்றி வைக்க முடியவில்லையே என்ற ஆற்றாமை பல்கி பெருகியது.

வளர்மதி தன் மற்ற இரு மகள்களையும் அருகில் அழைத்து அவர்களின் முகத்தை வாஞ்சையோடு வருடி தைர்யமாக இருக்க சொல்லி, மீண்டும் அமுதனை அர்த்தத்தோடு பார்க்க, அவனும் முன்னே வந்து

“நீங்க எதுக்கும் கவலைப்படாதிங்க ஆன்ட்டி...நான் இருக்கேன்... நான் மூவரையுமே நன்றாக பார்த்துக் கொள்வேன். உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். அதோடு உங்களுக்கு எதுவும் ஆகாது.

இது மைனர் சர்ஜரிதான். இந்த ஹாஸ்பிட்டல் டீன் கிட்ட பேசி, ரொம்பவும் எக்ஸ்பீரியன்ஸ் ஆன டாக்டரைத்தான் ஏற்பாடு செய்திருக்கிறேன். அதனால் சர்ஜரி முடிஞ்சி நீங்க ஜம்முனு வரப்போறிங்க...டோன்ட் வொர்ரி.. சியர் அப்...”

என்று அவர் கன்னம் தட்டி புன்னகைக்க, அவன் வசீகர புன்னகை தந்த தைர்யமே அவரும் புன்னகையுடன் ஆப்ரேசன் தியேட்டர் உள்ளே சென்றார்.

அவருக்கு வெளியில் தைர்யம் சொல்லி விட்டாலும் உள்ளுக்குள் அவனுக்கும் கொஞ்சம் பதட்டமாகத்தான் இருந்தது. ஆனாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் மற்ற மூவருக்கும் தைர்யம் சொல்லி கொண்டிருந்தான் அமுதன்.   

(பார்த்ததும் அவருக்கு அதிர்ச்சியான எதுவும் சொல்லக் கூடாது என்று படித்திருக்கிறேன் அதுவும் அன்னையிடம் தோன்றி தழுவாமல் அமைதியாகவே கண்களில் வழிகின்ற பார்த்துக்கொண்டிருந்தால் மணி நேரமும் தவித்துப் போனார் )

ஆபரேஷன் நடந்து கொண்டிருந்த பொழுது சத்யா இன்னுமே பயந்து போனாள். இருக்கையில் அமராமல் தியேட்டர் வாயிலிலயே நின்று கொண்டிருக்க, அமுதன் தான் அவளுக்கு ஆறுதல் சொல்லி கொண்டிருந்தான்.

அவளின் நடுங்கும் கரத்தை எடுத்து அவன் கரங்களுக்குள் வைத்து பொத்திக் கொண்டவன்

“நான் இருக்கேன் சது...ஆன்ட்டியை அவ்வளவு சீக்கிரம் விட்டு விட மாட்டேன். எனக்கு கண்டிப்பாக ஆன்ட்டி வேண்டும். அதனால் எத்தனை லட்சம் செலவானாலும் நான் அவரை காப்பாற்றியே தீருவேன். ட்ரஸ்ட் மி...” என்று அவளுக்கு சமாதானம் சொன்னான் அமுதன்.

அவனை பிடிக்கவில்லை,  காதலிக்கவில்லை என்று சொல்லிவிட்டு நொடியும் அவன் கரத்திலிருந்து தன் கரத்தை விலக்காமல் அவன் கைகளுக்குள்ளேயே அடக்கமாகி கொண்டாள்.  

சத்யாவின் தங்கைகளும் வெளிறிய முகத்துடன் அங்கே அமர்ந்திருக்க,  அமுதன் மட்டுமே அவர்களுக்கு ஆறுதல் சொல்லி தேற்றிக் கொண்டிருந்தான்.  

ஒரு வழியாக அடுத்து இரண்டு மணி நேரத்தில் ஆப்ரேஷன் முடிந்து விட, வெளியில் வந்த டாக்டர்,  

“ஆப்ரேஷன் சக்ஸஸ்...இனி எந்த பயமும் இல்லைஆனால் எந்த ஒரு அதிர்ச்சியான தகவலையும் சொல்ல வேண்டாம்...”  என்று சொல்லிச் சென்றார்.

அதன் பிறகுதான் சத்யாவிற்கு உயிரே வந்தது.

தன்னை மறந்து அருகில் இருந்தவனை இறுக்கி கட்டிக் கொண்டாள் சத்யா...

“அம்மு...தேங்க்யூ சோ மச். என் உயிரையே மீட்டுக்கொடுத்திட்டிங்க..” என்று தழுதழுத்தவாறு அவன் மஞ்சத்தில் புதைந்து கொள்ள,  அவனும் கொஞ்சமாய் சங்கோஜப் பட்டாலும் அவளின் தலையை ஆதரவாய் வருடியவன் மெல்ல அணைத்துக் கொண்டான்.

அவனின் மார்பில் புதைந்து கொண்டது அவ்வளவு பாதுகாப்பாய், நிம்மதியாய் இருந்தது சத்யாவிற்கு. இந்த நிம்மதி எப்பவும் நிலைக்காதா என்ற ஏக்கமும் உள்ளுக்குள் பரவியதுதான்.

ஆனால் அடுத்த நொடி ஏதோ நினைவு வர, உடனே தீச்சுட்டாற் போல அவன் மார்பில் இருந்து விலகி கொண்டாள். அவனை விட்டு தள்ளி நின்று கொண்டவள்

“ஸாரி....” என்று முணுமுணுத்தாள். அவனும் இதழ் ஓரம் ஒரு ரகசிய புன்னகையை ஓட விட்டவன்

“எதுக்காம் இந்த ஸாரி சது? “ என்றான் அவ்வளவு நேரம் இருந்த தவிப்பை மறந்து கொஞ்சம் இலகுவாய், குறும்பாக புன்னகைத்தவாறு....

அவனை கட்டி அணைத்ததுக்கும் அவன் மார்பில் சாய்ந்ததுக்கும்தான் என்று எப்படி சொல்வாளாம்?

“எல்லாத்துக்கும் தான்...” என்று பொதுவாக சொல்லியவள் தன் தங்கைகளின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள். அவனும் தன் தலையை இடவலமாக ஆட்டி புன்னகைத்தவாறு கேண்டின் சென்று மூன்று பேருக்கும் குடிக்க டீ வாங்கி வந்து கொடுத்தான்.

அவ்வளவு பெரிய மல்ட்டி மில்லினர், அவன் கண் பார்வைக்கு, ஏவலுக்கு சேவகம் செய்ய அத்தனை பேர் காத்திருக்க, இங்கு அவனே சென்று அவர்களுக்காய் டீ வாங்கி வர, பெண்ணவளுக்கோ என்னவோ போல் இருந்தது.

அவர்களிடம் பழகும்பொழுது மட்டும் அமுதனாகத்தான் வலம் வருவான். தன் சொகுசு காரையோ, இல்லை ஆடம்பர ஆடைகளையோ பயன்படுத்த மாட்டான்.

அவனுடைய ஹேர் ஸ்டைலையும் கொஞ்சம் மாற்றி கொள்வதால் அவனை ஆரவமுதன் என்று யாராலும் சீக்கிரம் அடையாளம் கண்டு கொள்ள முடியாது.

டுத்த சில  மணித்துளிகளில் வளர்மதியை பார்க்க அனுமதிக்க, அந்த மூன்று பெண்களும் ஆவலுடன் அறைக்குள் பாய்ந்து சென்றனர். அமுதனும் அவர்களை தொடர்ந்து பின் சென்றான்.  

எப்பொழுதும் மலர்ந்த முகத்துடன் புன்னகையாய் இருப்பவர்,  இன்று வாடிய முகமாய் கசங்கிக் கிடப்பதை கண்டதும் சத்யாவிற்கு கஷ்டமாக இருந்தது

அவர்  கையை மெல்ல பற்றிக் கொள்ள,  வளர்மதி கண்களை மெல்ல திறந்தார். கண்களில் வேதனையுடன் அமுதனை பார்த்தவர் ஏதோ சொல்ல முயல, அதை புரிந்து கொண்டவன் வேகமாய் முன்னால் வந்து அவசரமாய் மறுத்து

“ஆன்ட்டி...இப்ப எதுவும் ஸ்ட்ரெயின் பண்ணிக்காதிங்க. நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். ரெஸ்ட் எடுங்க...” என்று அவரை அமைதிப்படுத்த, அவருக்கோ மனம் அமைதி அடையவில்லை.

எங்கே மூன்று பிள்ளைகளையும்  அனாதையாக்கி விட்டு விடுவாரோ என்ற பயம் வந்து அப்பிக் கொண்டது வளர்மதிக்கு.

அதனாலேயே தன் கையை பற்றி கொண்டிருந்த சத்யாவின் கைப்பற்றியவர்

“சத்யா மா...என்னால் இனி தாமதிக்க முடியாது. எனக்கு இப்பொழுது பயம் வந்து விட்டது. அட்லீஸ்ட் உன்னையாவது கரையேற்றி விட்டால் நீ மற்ற இருவரையும் பார்த்துக்குவ. தயவு செய்து உன் முடிவைச் சொல்...”  என்றார் கெஞ்சலுடன்.

அதைக் கேட்ட சத்யா அதிர்ந்து போனாள். தன் அன்னை அவளின் திருமண பேச்சை மறந்து விட்டார் என எண்ணி இருக்க, இன்னுமே அது மட்டுமே அவர் மனதை அரித்து கொண்டிருக்கிறது என புரிகிறதுதான்.

“ப்ளீஸ் மா... இப்ப எதுவும் பேச வேண்டாம். நீங்க முதல்ல குணம் ஆகி வாங்க. எல்லாம் பேசிக்கலாம்...” என்று சமாதானப்படுத்த முயல

அவரும் பிடிவாதமாய்

“இல்ல சத்யா...நீ ஒரு முடிவு எடுத்தாகணும். இல்லைனா என் பிள்ளைகளை  அனாதையாக்கி விட்டு சென்றாலும் சென்று விடுவேன். அந்த வேதனை என்னை நிம்மதியா இருக்க விடாது.  

போகிற காலத்தில் என் பிள்ளைகளுக்கு ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுத்த மனம் திருப்தியாவது இருக்கும். எனக்கு நம்பிக்கை இருக்கு நீ மற்ற ரெண்டு பேரையும் கைவிட்டு விட மாட்டாய் என்று.

நீ அமுதனை மணந்து கொள் செல்லம். அமுதனை பற்றி நன்றாக தெரியும். அவன் மற்ற இருவரையும் கை விட்டு விட மாட்டான். எனக்கு மகன் இல்லாத குறையை தீர்க்க வந்தவன்.. அவனை நான் மருமகனாய் பார்க்கணும்...” என்று தழுதழுக்க, அதில் பதறிய அமுதன் முன்னால் வந்து அவர் கையை பற்றி கொண்டவன்

“என்ன பேசறீங்க ஆன்ட்டி...சத்யா என்னை மணந்து கொள்ளவில்லை என்றாலும் நான் மூவரையுமே நன்றாக பார்த்துக் கொள்வேன் ஆன்ட்டி.  உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். நான் உங்களுக்கு மருமகனாக முடியவில்லை என்றால் மகனாக கண்டிப்பாக நிப்பேன்.  

அதற்காக வேண்டி சத்யாவை கட்டாயப்படுத்தாதீர்கள். அவள் மனம் என்ன சொல்கிறதோ அது படி செய்யட்டும். திருமணம் என்பது யாரையும் கட்டாயப்படுத்தி ஒத்துக்க வைப்பது இல்லை.

மனம் சம்பந்த பட்டது. மனதால் சம்மதிக்கவில்லை என்றால் அந்த திருமணத்திற்கே அர்த்தம் இல்லை. நீங்க சதுவை கட்டாய படுத்தாதிர்கள். ப்ளீஸ்...”    என்று சத்யாவுக்கு சாதகமாகவே பேசினான் அமுதன்.

சத்யாவுக்குத்தான் என்ன சொல்வது என்று புரியவில்லை. அவள் மனம் இன்னுமே சமாதானம் அடையவில்லை. அவள் விரும்பியது  அமுதனை.  இங்கே இருப்பவனோ ஆரவ்..என்று தான் அவள் மனம்  அடித்துச் சொல்கிறது.

அப்படி இருக்க, தன் மனதிற்கு ஒப்பாத ஒருவனை  எப்படி திருமணம் செய்து கொள்வது என்றுதான் அவள் மனம் வருந்துகிறது. ஆனாலும் வாடிய மலராய் கடந்த தன் தாயின் முகத்தைப் பார்க்கவும் அவரை மறுத்து  சொல்லவும் மனம் வரவில்லை

எப்படியாவது அவரின் ஆசையை நிறைவேற்றி, அவர் மனதிற்கு நிம்மதியை கொடுக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. சற்று நேரம் கண்ணை இறுக்க மூடி ஆழ்ந்து யோசித்தவள், பின் அவள் பிடித்து கொண்டிருந்த அன்னையின் கையை பற்றி கொண்டு,

“சரிம்மா...உங்க இஷ்டம் போலவே ஆகட்டும்...”  என்றாள் வேதனையுடன். அதைக் கேட்டு வளர்மதியின் முகம் அப்பொழுது தான் தெளிவானது.

முகம் பிரகாசிக்க, புன்னகைத்தவர்,  தன் மகளின் கையை நன்றியுடன் பற்றிக் கொண்டார்.  

அதுவரை கண்ணில் கண்ணீருடன் தன் தாயின் நிலையை கண்டு அழுது கொண்டிருந்த அவள் தங்கைகளும், தன் அன்னையின் முகத்தில் சிரிப்பை பார்த்ததும் உடனே தேம்புவதை நிறுத்திக் கொண்டு,  சந்தோஷ செய்தியை உள்வாங்கிக் கொண்டனர்.

மகிழ்ந்து போய் தன் அக்காவை கட்டிக் கொண்டு

“சூப்பர் அக்கா...இனிமேல் அமுதன் ப்ரோ எங்களுக்கு மாமாவா? என்று கேட்க,  அவளோ வேதனையுடன் தலையை குனிந்து கொண்டாள்.  

தங்களின்  திருமண செய்தி கேட்டு சந்தோசப்பட வேண்டிய தன்னவளின் வாடிய முகத்தை கண்டு,  அமுதனும் வேதனை பட்டு போனான். அவனுக்கு தெரியும். அவள் அன்னைக்காகத்தான் இந்த திருமணத்திற்கு ஒத்து கொண்டாள் என்று.

அது இன்னுமே அவனை வேதனை கொள்ள வைத்தது.  

மொத்தத்தில் அந்த திருமண செய்தி அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் இருவரையும் தவிர மற்றவர்களுக்கு ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் தான் இருந்தது.

அவள் மனதார இந்த திருமணத்திற்கு சம்மதம் சொல்லவில்லை என்று கண்ட அமுதனுக்கு வேதனையாக இருந்தது. ஆனாலும் அவள் மனம் மாறி விடுவாள்.  தன்னை மனதார ஏற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கையில் அவனும் அமைதியாகிப் போனான்.

கிட்டத்தட்ட எல்லோருமே அந்த திருமணத்திற்கு சம்மதித்திருக்க,  வெண்ணை திரண்டு வரும் நேரம் தாழி உடைந்தது போல அடுத்த சிக்கல் வந்து நின்றது அமுதனுக்கு...! அதுவும் தன்னவளின் மூலமாகவே...! சமாளிப்பானா? பார்க்கலாம்...!





Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!