காந்தமடி நான் உனக்கு!!-36

 


அத்தியாயம்-36

 

மேக்னா- ஒரு மும்பை மாடல் அழகி.

நிறைய விளம்பர படங்களில் நடித்திருக்கிறாள். நடித்துக்கொண்டும் இருக்கிறாள். அவள் பங்கு பெறாத விளம்பரங்களே இல்லை என்ற அளவில் மிகவும் பெயர் பெற்றவள்.

திரைப்பட கதாநாயகிகளின் சம்பளத்தை விடவே அதிகம் சம்பாதிப்பவள். எத்தனையோ பட வாய்ப்புகள் வந்த பொழுதும் அதை எல்லாம் தவிர்த்து விட்டு மாடலிங் மட்டும் போதும் என்று நின்று விட்டவள்.

கூடவே மாடலிங் ஐ ஒரு பொழுது போக்கிற்காக, பேரும், புகழுக்காக செய்து வருகிறாள். அவள் தந்தை மும்பையில் பெரிய தொழில் அதிபர். அவளுக்காக சேர்த்து வைத்திருக்கும் சொத்தே இன்னும் ஏழு தலைமுறைக்கு உட்கார்ந்து... இல்லை படுத்துகொண்டே சாப்பிடலாம்.

அதனால் மாடலிங் பண்ணிதான் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலை இல்லை அவளுக்கு. ஆனாலும் அவளுக்கு ஒரு தீராத ஆசை. எல்லாரும் தன் அழகை புகழ வேண்டும், ஆராதிக்க வேண்டும்,  அவளையே சுற்றி வரவேண்டும் என்று.

அதில் கிட்டதட்ட வெற்றியும் பெற்றுவிட்டாள். அவளிடம் வழிந்து நிக்காத ஆண்மகன்கள் என்று யாருமில்லை ஒருவனை தவிர. அவளின் டேட்டிங்குக்காக தவமிருக்கும் நடிகர்கள், தொழில் அதிபர்கள் ஏராளம்.

ஆனால் அவளுக்குத்தான் ஏனோ யாரையும் பிடிக்கவில்லை. அவர்கள் எல்லாம் தன்னை சுற்றி வர வேண்டும் என்று எண்ணினாளே தவிர அதில் ஒருவனை தேர்ந்தெடுத்து வாழ்க்கையில் செட்டில் ஆகணும் என்றெல்லாம் எண்ணமில்லை.

இது ஒரு வித போதை. தன்னை எல்லாரும் புகழ்வதால் கிடைக்கும் ஒரு சுகமான போதை.. அதுதான் வேண்டும் மேக்னாவிற்கு. மற்றபடி அவளை சுற்றிவரும் யாரையும் அவளுக்கு துளியும் பிடிக்கவில்லை.

சமீபகாலமாக ஒருவனை மட்டும் அவள் மனம் அடிக்கடி நினைத்துக் கொள்கிறது.

அத்தனை பேர் அவள் காலடியில் விழுந்த பொழுதும் ஒருவன் மட்டும் அவளை கண்டு கொள்ளாமல் உதாசினபடுத்துவது புரிய, சினம் கொண்டு பொங்கி எழாமல், மையல் கொண்டு அவன் பக்கமாய் சாய ஆரம்பித்து இருக்கிறது அவளின் மனம்.

அவன்தான் ஆரவ்..ஆரவமுதன். மும்பை பிசினஸ் வோர்ல்ட் ல் சமீபத்தில் அறிமுகமானவன் என்றாலும் அவன் தன் ஆளுமையிலும், நிர்வாகத்திலும் கடகடவென்று முன்னேறியவன். 

கூடவே கட்டுக்கோப்பான மற்றும் வசீகரிக்கும் அவனின் தோற்றத்திலும் அனைவரின் கவனத்தை கவர்பவனாக வலம் வருபவன்..

அவனை கண்டதில் இருந்தே அவனையே சுற்றி வர ஆரம்பித்திருக்கிறாள். மேக்னா. அவளாகவே வழிய சென்று அவன் கலந்து கொள்ளும் விழாக்களில்  அவளும் இடம்பெறுமாறு பார்த்துக்கொண்டாள்.

ஆனால் அமுதனோ அவளை கொஞ்சமும் கண்டு கொள்ளவில்லை. எப்பொழுதும் நட்புடன் கூடிய ஒரு புன்னகை. அதை தாண்டி அவன் பார்வை அவளிடம் எல்லை மீறியதில்லை.

பெரும் ஆச்சர்யம் அந்த அழகிக்கு. இப்படி கூட ஒருத்தன் இருப்பானா என்ற சந்தேகமே வந்துவிட்டது. ஏனென்றால் அவளை பார்க்கின்ற அத்தனை ஆண்களுமே அவளை துயில் உரித்து பார்ப்பதும், இவள் தனக்கு கிடைக்கமாட்டாளா என்ற ஏக்க பெருமூச்சு விட்டு செல்வதும் தான் கண்டிருக்கிறாள்.

அப்படிப்பட்ட பேரழகியை ஒருத்தன் துளியும் கண்டு கொள்ளவில்லை என்றால்? இது அவளின் அழகுக்கே கிடைத்த பெரிய அடி அல்லவா?

எப்படியாவது ஆரவ் ஐயும் தன் பக்கம் இழுக்க வேண்டும். தன் அழகில் அவன் மயங்கி கிறங்கி போக வேண்டும் என்று தனக்குள்ளே சூளுரைத்தவள் அதற்கான திட்டங்களை தீட்டினாள்.

தில் முதற்கட்டம்தான் அவன் அன்னை ரூபாவதி. அவரும் மும்பையில் வளர்ந்தவர்...ஆடம்பரத்தை ரொம்பவும் விரும்புபவர் என்று கண்டு கொண்டு அவர் கலந்து கொள்ளும் ஒரு பொது நிகழ்ச்சியில் மேக்னாவும் கலந்து கொண்டு அவரிடம் சென்று வழிய பேசினாள்.

அவள் எதிர்பார்த்த மாதிரி மேக்னாவின் அழகில் அசந்து போனார் ரூபாவதி. அதோடு மேக்னா மும்பையில் பெரிய தொழிலதிபரின் மகள் என தெரிய இன்னுமே குஷியாகி போனார் ரூபாவதி.

இப்படி பட்ட அழகியை, அந்தஷ்திலும் தங்களுக்கு இணையானவளை,  தன் மருமகளாக்கி கொண்டால், எல்லாரும் தன்னை பார்த்து பொறாமைப்படுவார்கள் என்று ரூபாவதியும் அவசரமாக மனதில் திட்டமிட்டார்.

இருவர் எண்ணமும் ஒரே நேர்கோட்டில் இருக்க, விரைவிலயே இருவருக்குள்ளும் நட்பு உருவாகி இருந்தது. அதனாலயே இந்த மென்பொருள் நிறுவனத்தின் திறப்பு விழாவிற்கு அவளையும் தன்னோடு அழைத்து வந்திருந்தார் ரூபாவதி.

ந்த மாடல் பேரழகியின் வரவு சத்யாவிற்கு சுத்தமாக பிடித்தமானதாக இல்லை. அவளை கண்டதும் ஏனோ அதுவரை இருந்த இதம் மறைந்து விட, மனதில் ஒரு வெறுமை, கசப்பு பரவியது.

அதுவும் அன்று ஒருநாள்,  அந்த அவார்ட் பங்சனில், அவள்  அமுதனிடம் இழைந்ததும், கொஞ்சி குழாவியதும் மீண்டும் நினைவில் வந்தது.

இந்த முறை அப்படி அவள் அமுதனை நெருங்க கூடாது. அவளை அப்படி இழைய விட்டு விடக்கூடாது என்று முடிவு செய்து கொண்டு அவளையே பார்வையால் தொடர்ந்து பாலோ பண்ணினாள் சத்யா...

மனம் எதேச்சையாக அவளையும் தன்னையும் ஒப்பிட்டு பார்த்தது.

வெள்ளை வெளேரென்று, சுண்டினால் ரத்தம் வரும் பால் வண்ண நிறத்தில், அச்சு அசல் ரசகுல்லா போன்று பளிச்சிட்ட,  பளபளக்கும் மேனியும்,  பார்ப்பவர்களை சுண்டி இழுக்கும் லிப்ஸ்டிக் போட்ட திரண்ட அதரங்களும், மெலுகு சிலை போன்ற வழவழப்பான கரங்களும் அவளை ஒரு செல்லுலாய்ட் பொம்மை என்றே எடுத்து காட்டியது.

அதோடு அவள் அழகை, அவளின் பெண்மையை இன்னுமே எடுத்து காட்டும் விதமாய், தாராளமாக இறக்கம் காட்டி அவள் அணிந்திருந்த ஆடை பார்ப்பவர்களை எல்லாம் திணற அடித்தது.

எல்லாருமே ஒரு கணம் நின்று அவளை பார்த்து ஏக்க பெருமூச்சு விட்டு சென்றனர்.

அதே நேரம் சத்யாவும் தன்னுடைய தோற்றத்தை ஆராய்ந்தாள். தனக்கு அவள் பக்கத்தில் நிக்க கூட தகுதி இல்லை என்பது அப்பொழுதுதான் புரிந்தது.

அவளின் அதிரடிக்கும் அழகுக்கு முன்னால் தான் எல்லாம் ஒன்றுமே இல்லை என மண்டையில் உறைத்தது.

சத்யா அங்கு வந்ததில் இருந்து யாரும் இதுவரை ஒரு முறை கூட திரும்பி பார்த்ததில்லை அவளை. மாநிறம்...சற்றாய் பூசினாற் போன்ற தேகம். இழுத்து போர்த்தியதை போல கட்டியிருந்த புடவை.

இப்படி இருந்தால் யார் என்னை பார்ப்பார்கள் என்று தனக்குள்ளே குமைந்து கொண்டாள்.

“அட லூசே..உன்னை பார்க்கத்தான் ஒருத்தன் தவம் இருந்து கொண்டிருக்கிறானே. இந்த கருப்பு நிறத்தழகியைத்தான்  அவன் துரத்தி துரத்தி காதலிக்கிறானே.. அது உன் கண்ணுக்கு தெரியவில்லையா? “  என்று அவள் மனசாட்சி இடித்து கூறியது...

“ஆமாம் இல்ல... இவள் எவ்வளவு பெரிய அழகியாக இருந்தாலும் என் அம்மு என்னைத்தானே காதலிக்கிறான். என்னைத்தானே கட்டிகொண்டான்.. எனக்குத்தானே முத்தம் இட்டான்...”  என்றதும் அவள் கன்னங்கள் சற்றுமுன் நிகழ்ந்த திடீர் முத்த தாக்குதலில் இப்பொழுதும் சிவந்து போனது.

“என் அம்மு என்னை மட்டும்தான் பார்ப்பான். அந்த ரம்பையே வந்தால் கூட அவன் திரும்பி பார்க்க மாட்டான்.. என்னவன்...”  என்று கர்வத்துடன் நிமிர்ந்து பார்க்க,  அப்படியே அதிர்ந்து போனாள்.

அங்கே அமுதன் அந்த அழகியிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்தான். அவளும் அமுதனிடம் ஒட்டி உரசி,  கொஞ்சி குழைந்து  பேசி கொண்டிருந்தாள். அதோடு அவன் வந்தவர்களை வரவேற்க செல்ல, அவளும் ஒயிலாக அவனுடன் இணைந்து நடந்தபடி சென்று வருபவர்களை வரவேற்றாள்.

 

அதைக்கண்டு சத்யாவுக்கு கண்ணை கட்டிக்கொண்டு வந்தது. அவளின் தோற்றமும் செயலும் என்னவோ அவள்தான் அவனுக்கு உரிமைக்காரி என்பதாய் அனைவருக்கும் பறைசாற்றுவதாய் தெரிந்தது.

அதோடு அமுதனை தொட்டு தொட்டு பேசுவதும், அடிக்கடி வந்து அவன் இடையோடு கட்டி அணைத்து கொள்வதும்,  அவனை உரசியபடி கொஞ்சிக் கொஞ்சிப் பேச, சத்யாவோ இங்கே பல்லைக் கடித்தாள்.  

அமுதனும் நாசுக்காய் அவளை விலக்கி விட முயன்றான் தான்.  

ஆனால் அவள் அதை கண்டுகொள்ளாமல், இன்னுமே ஒட்டி உரசி, அவன் மீது விழும் தொத்தும் கிளியாய் அவனோடு ஒட்டிக்கொண்டு அவன் செல்லும் இடம் எல்லாம் அவனோடு ஒட்டிக் கொண்டு அவளும் சேர்ந்து சுற்றினாள்...

பார்ப்பவர்கள் எல்லாரும் இருவரின் ஜோடி பொருத்தத்தையும் மெச்சிக் கொள்ள தவறவில்லை. கூடவே கொடுத்து வைத்தவன் என்று அமுதனை பார்த்து பொறாமை பார்வையும்,  ஏக்க பெருமூச்சும் விட தவறவில்லை.

இதெல்லாம் சத்யாவின் காதிலும் எட்டியது. அவள் மனம் வலித்தது.

அவனுடைய அன்னை ரூபாவதியும் பெரிய புன்னகையோடு  அதற்கு ஆதரவு தருபவராய் அந்த பெண்ணையே தூண்டி விட்டுக் கொண்டிருந்தார்.

அமுதனுக்குத்தான் விழாவின் பரபரப்பிலும் இடை இடையிடையே அந்த அழகியின் தொந்தரவிலும் முழி பிதுங்கி போனான். ஆனாலும் தன் அன்னைக்கு எதிராக அவளை எதுவும் சொல்லி விட முடியாது என பல்லை கடித்து பொறுத்து கொண்டான்.

ற்று நேரத்தில் விழா ஆரம்பித்து இருந்தது. அந்த புதிய அலுவலகத்தின் வரவேற்பு பகுதியிலயே பெரிய குத்துவிளக்கு வைக்க பட்டிருந்தது.

அவன் தந்தை மதியழகன் ரிப்பன் வெட்டி அந்த அலுவலகத்தை திறந்து வைக்க, ரூபாவதி குத்து விளக்கு ஏற்றி வைக்க, அந்த விழா இனிதாக ஆரம்பித்தது.

அமுதன் கண்ணால் ஜாடை காட்டி சத்யாவை தன் அருகில் வர சொன்னான்.

அவளோ வேண்டாம் என தலை அசைத்து மறுத்து அவனை பார்க்காதவளை போல மறுபுறம் திரும்பி கொண்டாள். ஆனால் அடுத்த நொடி அவள் இடத்தை பிடித்து கொண்டாள் மேக்னா.

அமுதன் அருகில் சென்று ஒட்டி நின்று கொண்டவள் கூடவே  அவன் கைக்குள் தன் கையையும் விட்டு கொள்ள முயல, அமுதன் நாசுக்காய் விளக்கி விட முயன்றான்.

ஆனால் அவளோ விடாமல் அவன் கரங்களுக்குள் தன் கரத்தை பதித்து கொண்டாள். அதை கண்ட சத்யா இன்னும் அதிர்ந்து போனாள்.

இப்படி பப்ளிக் ப்ளேஸ்ல எப்படி அவ அப்படி ஒட்டி உரசி அதுவும் கை கோர்த்து கொள்ளும் அளவுக்கு நெருக்கமாகி விட்டாள்? . அப்படி என்றால் இருவருக்கும் இடையில் ஏதோ இருக்கிறது என்பது தெளிவாக புரிந்தது.

இல்லை என்றால் எப்படி ஒருத்தி இந்த அளவுக்கு ஒருவனிடம் உரிமை எடுத்து கொள்ள முடியும் என்று அவளின் அறிவாளி மூளை அவசரமாய் கணக்கு போட்டது.

அவள் மனதில் ஓடும் எண்ணத்தை அறியாத அமுதனோ அந்த விழாவில் மட்டுமே போகஸ் பண்ணி கொண்டிருந்தான். இடையில் அந்த மேக்னாவின் தொல்லை வேறு.

சற்று நேரத்தில் எல்லா பார்மாலிட்டிஸ் ம் முடிந்து அனைவரும் அவனை வாழ்த்தி, பரிசை கொடுத்து அங்கு ஏற்பாடு செய்திருந்த உணவை முடித்து விடை பெற்று சென்றிருந்தனர்.

அமுதன் வி.ஐ.பிக்கள் உடன் பிசியாக இருந்ததால் அவன் உதவியாளன் ராகேஷ் இடம் சொல்லி சத்யாவையும் அவள் தங்கைகளையும் கவனிக்க சொல்லி இருந்தான்.

அதன்படி ராகேஷ் வந்து அவர்களை அழைத்து சென்று உணவு உண்ண வைத்து அவர்களுக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்தான்.

ஆனால் சத்யாவின் மனமோ அமுதனையே சுற்றி வந்தது. அவன் தங்களுடன் வரவில்லையே என்ற சிறு ஏக்கமும் அந்த அழகியுடன் மட்டும் ஒட்டி கொண்டு சுற்றுகிறான் என்ற கோபமும் பொங்கி வந்தது.

அடிக்கடி கண்ணோரம் கரித்த நீரை யாரும் அறியாமல்  சுண்டி விட்டு கொண்டாள் சத்யா.

ரு வழியாக விழா நல்ல படியாய் முடிந்து,  அனைவரும் கலைந்து சென்றிருக்க, அங்கிருந்த ஒரு அறையில் அப்பொழுதுதான் சாவகாசமாக ஒரு இருக்கையில் காலை நன்றாக நீட்டி வைத்து தளர்ந்து அமர்ந்து இருந்தான் அமுதன்.

அவன் முகத்தில் அப்படி ஒரு சோர்வு. காலையில் இருந்து ஒவ்வொருவரையும் இன்முகமாய் சிரித்து வரவேற்று நலம் விசாரித்து என ரொம்பவும் களைத்து போயிருந்தான்.

கண்களை இறுக்க மூடி கொண்டு,  தளர்ந்து அமர்ந்திருந்தவன் நெற்றியில் மென்மையாய் வருடியது ஒரு மென்கரம். கண்ணை திறக்காமலயே அது யாரென்று புரிந்து விட, உடனே அவன் இதழ்களில் பூத்தது பெரும் புன்னகை.

அவன் முகத்தில் இருந்த சோர்வு அடுத்த நொடி ஓடி மறைந்து போனது.

“எப்படி தெரிந்ததாம் இவளுக்கு நான் அசதியாக இருப்பது...? என்னையே கண்காணித்து கொண்டு இருக்கிறாளா என்னவள்? “ என்று உள்ளுக்குள் பூரித்து போனான் அமுதன். 

நெற்றியில் இருந்த அந்த பட்டு கரத்தை எடுத்து தன் கன்னத்தில் வைத்து அழுத்தி கொண்டான். இன்னுமே கண்களை திறக்கவில்லை. திறக்கவும் பிடிக்கவில்லை...

அவனுக்கு ரொம்பவும் இதமாக இருந்தது அந்த கரத்தின் அழுத்தம். அத்தனை சோர்வையும் போக்கி இருந்தது.

“இந்த ஜூஸ் ஐ குடி அம்மு...ரொம்ப டயர்டா இருக்க...” என்று அக்கறையுடன் அவன் முன்னே ஒரு டம்ளரில் பழச்சாற்றை நீட்டி இருந்தாள் சத்யா.

அவளின் குரல் கேட்டு மெல்ல கண் விழித்தவன்,  அவள் கையை இன்னுமே விட்டு விடாமல் இப்பொழுது தன் இதழில் வைத்து அழுத்தி முத்தமிட்டவாறு

“என் டயர்ட் போகணும்னா அதுக்கு வேற ஒரு மருந்து வேண்டும் ஹனி? அந்த மருந்து தர்ரியா? “ என்றான் விஷமாக கண் சிமிட்டி.

“என்ன மருந்து ? “ என்றாள் புரியாமல்.

“ஹ்ம்ம்ம்ம் இந்த பழரசத்தை விட உன் இதழ் ரசம்தான் எனக்கு எனர்ஜி பூஸ்டர் டார்லிங். என்ன கிடைக்குமா? “ என்று கண் சிமிட்டி கல்மிஷமாக சிரித்தான். அவன் பார்வையோ அவள் இதழை தாபத்தோடு பார்த்திருந்தது.

அவன் பார்வையின் வெட்பத்தை தாங்காதவள் கன்னம் சிவக்க, தன் கட்டை விரலை தரையில் ஊன்றி அதை மறைக்க முயன்றாள்.

அவளின் சிவந்த கன்னத்தை தாபத்தோடு நோக்கியவன் அவள் கையில் இருந்த ஜூஸ் ஐ வாங்கி அருகில் இருந்த டேபிளில் வைத்துவிட்டு,  அவள் கரம் பற்றி சுண்டி இழுக்க, அதை எதிர்பாராதவளோ தடுமாறி அவன் மடியில் விழுந்தாள்.

“அச்சோ.... என்ன அம்மு இது..? ” என்று சிணுங்கியவாறு எழ முயல, அவனோ அவளை தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்து கொண்டவன்

“ஐம் வெரி டயர்ட் ஹனி. இந்த ஹனி இப்ப எனக்கு ரொம்ப ரொம்ப தேவை...”  என்றவன் அடுத்த நொடி அவளின் இதழில் இருந்த இதழ் ரசத்தை சுவைக்க ஆரம்பித்து இருந்தான்.

அவ்வளவுதான்.. அவளுக்கு இந்த உலகமே மறந்து போனது. சற்றும் முன் அவன் மீது கொண்டிருந்த கோபம் எல்லாம் போன இடம் தெரியவில்லை. அந்த மேக்னா, அவள் மீது தான் கொண்ட பொறாமை, தான் அவனுக்கு தகுதி இல்லை என்ற தாழ்வு மனப்பான்மை எல்லாம் போயே போச்சு.

அந்த நொடி அவனின் இறுகிய அணைப்பில் கிறங்கி அவளுமே தன் கரத்தை அவனின் பரந்த முதுகில் தவழவிட்டு அவனை இன்னுமாய் தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டாள்.

மன்மதனாய், ஆணழகனாய், ஹீரோவாய்,  அத்தனை பெண்களின் கண்களும் அவன் மீது மொய்த்திருந்ததை கண்டு பொறாமை கொண்டவள்,  அந்த ஆணழகன், காந்தமவன்,  எனக்கே எனக்கானவன் என்று உள்ளம் பூரிக்க, அவனை இன்னுமாய் கட்டிக்கொண்டாள் சத்யா.

அதோடு அவனின் ப்ரெஸ்ஸாக சேவ் செய்யபட்ட வழவழ பளிங்கு கன்னத்தை தன் கரங்களால் வருட, அதில் இன்னுமே கிறங்கியவன் தாபத்தோடு அவள் இதழில் இருந்து இறங்கி அவளின் சங்கு கழுத்தில் தன் இதழ் ஊர்வலத்தை நடத்த ஆரம்பித்து இருந்தான்.

இருவருக்குமே அந்த கணம் சொர்க்கமாக இருந்தது. இருவர் மனதிலும் இருந்த ஒரு சோர்வு, அயர்வு அந்த நொடி மறைந்து புதுவேகம் வந்திருந்தது.

தன்னை மறந்து தன்னவளுள் மூழ்கி முத்தெடுத்து கொண்டிருந்தான் அமுதன் அடுத்து வரும் ஆப்பை அறியாமல்...!




Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!