உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-36

 


அத்தியாயம்-36

சிறிது நேரத்தில் சரண்யாவும் வந்து விட, அவளுக்கு வீட்டை சுற்றி காண்பித்து பின் இருவரும் அங்கு இருந்த நூலகத்திற்கு சென்று சில புத்தகங்களை ஆராய்ச்சி செய்தும் நெட்டில் தேடியும் சில குறிப்புகளை எடுத்தனர்...

இரண்டு பேரும் வாயடிக்காமல் சின்சியராக வேலை பார்த்து ஓரளவுக்கு ஜிவெல்லரி பற்றி தெரிந்து கொண்ட  பின் கீழ இறங்கி வந்து தோட்டத்திற்கு சென்றனர்...

சரண்யாவுக்கு தோட்டத்தை சுற்றி காண்பித்தவள் பின் இருவரும் அங்கு இருந்த சேரில் அமர்ந்து கொண்டு தங்கள் கல்லூரி கதையை பேசி கொண்டிருந்தனர்...

அப்பொழுது ப்ரேம் உள்ளே வந்து அவன் காரை பார்க் பண்ணிவிட்டு, பவித்ரா தோட்டத்தில் அமர்ந்து இருப்பது தெரிய , கையில் கார் சாவியை சுற்றி கொண்டே ஸ்டைலாக நடந்து வந்தான்...

அருகில் வரவும் பவித்ராவுடன் சரண்யாவும் அமர்ந்து இருப்பது தெரிய அவன் மனம் அவனை அறியாமல் துள்ளி குதித்தது..

ஆதியின் திருமணத்தில் அவளை பார்த்த நினைவு வர அவன் முகத்தில் புன்னகை அரும்பியது.. அதே மகிழ்ச்சியில் உல்லாசமாக விசில் அடித்து கொண்டே பவித்ராவின் அருகில் சென்றவன்

“ஹாய் சிஸ்டர்..  ஹவ் ஆர் யூ?? “  என்று சிரித்து கொண்டே அவள் அருகில் அமர்ந்தான்

ஐம் பைன் ப்ரதர்.. “ என்று பவித்ராவும் சிரிக்க,

“அப்புறம் வாழ்த்துக்கள்  சிஸ்டர்.. ஒரே நாள்ல பாப்புலர் ஆகிட்டீங்க.. இப்பதான் நியூஸ் பார்த்தேன்... ரொம்ப சந்தோஷம் நீங்க இந்த பீல்ட்க்கு வர்றது.. “ என்று மகிழ்ச்சியுடன் தன் வாழ்த்தை சொன்னான்...

“ஹ்ம்ம்ம் ஏதோ நீங்களாம் இருக்கிற தைர்யத்துல தான் இந்த சவாலை ஏற்று கொண்டேன் ப்ரதர்..”

“கவலைபடாதிங்க சிஸ்டர்.. கலக்கிடலாம்.. “ என்று சிரித்தவன் அப்பொழுது தான் சரண்யாவை பார்ப்பவனைப் போல  ஒரு லுக் விட்டு

 “இவங்க??  “என்று தெரியாதவனாட்டம் ஆக்சன் பண்ண,

அதை கண்டு கொண்ட பவித்ரா

“அடப்பாவி ப்ரதர்.. என்னமா நடிக்கிற?? நிஜமா இவளை தெரியாது உனக்கு?? ” என்று குறும்பாக அவனை பார்க்க, அவனோ கண் சிமிட்டி

“உங்க சர்ப்ரைஸ் கிப்ட் சூப்பர் சிஸ்... “ என்று மெதுவாக முனகி, கண்ணால் ஜாடை செய்தான.. 

பவித்ராவும் புரிந்து கொண்டு கட்டை விரலை உயர்த்தி காட்டி ஆல் தி பெஸ்ட் சொல்ல, சரண்யாவோ தன்னை அவன் தெரியாத மாதிரி காட்டி கொள்ளவும் கடுப்பாகி அவனை முறைத்தாள்..

அதற்குள் பவித்ரா இடையில் புகுந்து

“இவ என் ப்ரெண்ட் சரண்யா ப்ரதர்.. எங்க கல்யாணதப்போ பார்த்திருப்பீங்களே.!!!  “ என்றாள் நமட்டு சிரிப்புடன்...

“ஓ.. ஆமால்ல.. இப்பதான் ஞாபகம் வந்தது.. எப்படி இருக்கீங்க  சரண்..... யா “ என்று வேண்டு மென்றே சரண் என்று அழைத்து கடைசியில் “யா”  வை சேர்த்துக்கொண்டான்...

“ஹ்ம்ம்ம் நல்லா இருக்கேன்.. “ என்று அவனை முறைத்தாள் சரண்யா...

அதற்குள் வள்ளி அவர்களுக்கு சிற்றுண்டி எடுத்து வந்து வைக்க, மூவரும் சிறிது நேரம் கதை அடிக்க சிறிது நேரத்தில் சரண்யாவும் சகஜமாக பேச ஆரம்பித்தாள்.. பின் பவித்ரா

“ஓ கே ப்ரதர்.. ஜாலி மோட் ஆப் பண்ணிட்டு இப்ப சின்சியர் மோட் க்கு வாங்க..” என்று சொல்ல,

“ஆஹா... ஜாடிக்கு ஏத்த மூடிதான்.. அப்படியே அந்த ஆதி மச்சான் மாதிரியே இருக்காங்களே அவன் பொண்டாட்டியும்.. எங்க சுத்தினாலும் காரியத்துல கண்ணா இருக்காங்க...”என்று மனதுக்குள் புலம்பியவன்

“ஓகே. சிஸ்டர்... டன்.. நான் ரெடி.. நீங்க ரெடியா ..”  என்று சிரிக்க

“நாங்க எப்பவோ ரெடி ப்ரதர்.. .சொல்லுங்க எங்க இரண்டு பேருக்குமே இந்த துறையில அனுபவம் இல்லை.. எப்படி ஆரம்பிக்கறது??  என்ன பண்றதுனு ஒன்னும் புரியலை.. உங்க ப்ரண்ட் பாட்டுக்கு நீதான் பண்ணனும் சொல்லிட்டார்... என்ன பண்றதுனு சொல்லுங்க.. “ என்று ஆரம்பித்தாள் பவித்ரா...

அதுவரை ஜாலியாக சிரிச்சு பேசிகிட்டிருந்தவன் அந்த பிசினசை பற்றி விளக்க ஆரம்பித்தான்... பவித்ராவும் சரண்யாவும் ஏற்கனவே அலசி ஆராய்ந்து குறிப்பு எடுத்து வைத்திருந்த தங்கள் சந்தேகங்களை கேட்க, ப்ரேம் அவர்களுக்கு பொறுமையாக விளக்கி கொண்டிருந்தான்....

அந்த தொழில் பற்றிய பேச்சை ஆரம்பித்ததுமே அவன் பாடி லாங்குவேஜ் மாறிப்போனது... அவன் முகத்தில் ஒரு தீவிரமும் பேச்சில் ஒரு சின்சியாரிட்டியும் வந்திருக்க, சரண்யா அவனயே இமைக்காமல் பார்த்து இருந்தாள்..

இவன்தான் இதுவரை சிரித்து பேசியவன் என்றால் நம்ப முடியாது அப்படி மாறி போயிருந்தான்.. பவித்ரா அவனை விடாமல் தன் கேள்வி கணைகளை தொடுக்க, அதற்கெல்லாம் சலைக்காமல் பதில் சொல்லி கொண்டிருந்தான்....

இடையில் சரண்யா தன்னையே பார்ப்பது தெரிந்தது ம் உள்ளுக்குள் குதித்து கொண்டான்... ஆனால் அதை  வெளியில் காட்டி கொள்ளாம கடமையே கண்ணாக பவித்ராவுக்கு விளக்கி கொண்டிருந்தான்...

ஒரு வழியாக எல்லா கேள்வியும் முடிய, அதே நரம் ஆதியும் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்..அருகில் வந்ததும்,

“வாடா மச்சான் எப்படி இருக்க?? “ என்று அவன் முதுகில் தட்டியவன் அப்பொழுது தான் சரண்யாவை பார்க்க,

“ஹே  வாங்க சிஸ்டர்.. நீங்க எப்படி இருக்கீங்க?? ... எப்ப வந்தீங்க??.. “ என்று விசாரித்து கொண்டே பவித்ராவின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்...

சரண்யாவும் அவனை பார்த்து புன்னகைத்து

“நல்லா இருக்கேன் ஹீரோ சார்... உங்க ஹீரோயின் தொல்லை தாங்க முடியலை.. நீங்க ஏதோ அவளுக்கு பெரிய பதவியை கொடுத்திட்டீங்களாம்... உடனே அந்த ஜான்சி ராணி களத்துல குதிச்சிட்டா..

அவ குதிச்சதோட இல்லாம என்னையும் அதுல இழுத்து விட ஒரே நச்சு... அதான் அவ தொல்லை தாங்காம கிளம்பி வந்திட்டேன்.. “ என்று சிரித்தாள்...அவள் சிரிப்பதையே ரசனையுடன் பார்த்தான் ப்ரேம்.. 

ஆதியும் சரண்யாவின் புலம்பலுக்கு சிரித்து கொண்டே பவித்ராவை பார்க்க அவள் சரண்யாவை முறைத்தாள்...

“மச்சான்... சிஸ்டர் செம பாஸ்ட் டா.. நீ காலைல தான புள்ளி வச்ச..  அவங்க அதுக்குள்ள ரோடு போட ரெடியாயிட்டாங்க.. அப்பா... என்னமா கேள்வி கேட்கறாங்க... நான் எங்கப்பா கைல காலுல விழுந்து 5 வருசமா கத்துகிட்டத சிஸ்டர் ஒரே நாள் ல கத்துகிட்டாங்கனா பாரேன்... நான்  சொல்றேன் பார்.. இந்த புது ஷோரூமை சூப்பரா கொண்டு வருவாங்க.. “ என்று சிரித்தான் ப்ரேம்..

“அப்படியா?? ... நம்ப முடியலையே... காலைல என்னால முடியாதுனு மூக்கால அழுதா... அதுக்குள்ள ரெடியா?? “ என்றான் ஆச்சர்யமாக பவித்ராவை பார்த்து சிரித்துகொண்டே

“ரெடியாவா... நம்ம சரண்யா தான் அசிஸ்டன்ட்.. நான் தான் அட்வைசர் அவங்களுக்கு.. இங்க பார்.. எத்தன நோட்ஸ் எடுத்து வச்சிருக்காங்க.. “ என்று அவள் குறிப்பு எழுதி வைத்திருந்த டைரியை எடுத்து காட்ட,

அவள் அதை ப்ரேம் கையில் இருந்து பிடுங்க அதை அவள் கைக்கு கிடைக்காமல் ஆதியும் அவள் கையை பிடித்து புடுங்கி அதில் அவள் எழுதி வைத்திருந்த குறிப்புகளை பார்க்க ஒரே நாளில் பாதி டைரி முடிந்திருந்தது...

அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது.. சும்மா ஒரு பேச்சுக்கு தான் அவள் நடத்துவதாக கூறியிருந்தான் அப்போதைய நிலையை சமாளிக்க...அவளை முன்னால் நிறுத்தி அவளுக்கு பின்னால் அவனே நின்று அவளுக்கு செய்து தருவதாக திட்ட மிட்டிருந்தான்.. ஆனால் அவளுடைய ஆர்வத்தையும் அவள் எழுதி இருந்த குறிப்பையும் கண்டு அசந்து போனான்....

அவனையே பார்ப்பதை போல இருந்தது ஆதிக்கு ... அவன் ஒரு காரியத்தில் இறங்கி விட்டாள் அதை செய்து முடிக்கிறவரைக்குமே உறங்க மாட்டான்.. தன் மனைவியும் அதே மாதிரி இருப்பதை கண்டு உள்ளுக்குள் மகிழ்ந்து போனான்..

அவள் குறிப்புகளை மேலோட்டமாக பார்க்க, பவித்ராவோ வெக்கபட்டு

“பாஸ்... அதுல ஒன்னும் இல்ல.. நீங்க கொடுங்க. அதெல்லாம் உங்களுக்கு புரியாது.. “ என்று  அந்த டைரியை பிடுங்க, அவள் சொன்ன பாஸ் என்ற அழைப்பில் திகைத்து சரண்யாவும் ப்ரேமும் ஒரே  நேரத்தில்

“என்னது பாஸ் ஆ?? “  என்று சந்தேகமாக  பார்க்க

அப்பொழுது தான் அவள் அவர்கள் முன்னால் உளறியது நினைவு வர  தன் நாக்கை கடித்து கொண்டவள்

“ஹீ ஹீ ஹீ.. ஆமா எனக்கு  மேனேஜர் பதவி போட்டு கொடுத்திருக்கார் இல்ல.. அதனால் அவர் எனக்கு பாஸ் தான்.. பிசினஸ் ல பெர்சனல் இருக்க கூடாது என்பது என் பாஸோட கொள்கை... அப்படித்தானெ பாஸ்.. “என்று ஆதியை பார்த்து கண்ணடிக்க அவனோ அவளை பார்த்து முறைத்தான் அவர்கள் அறியாமல்..

பின் பவித்ரா அருகில் இருந்த சிற்றுண்டி தட்டை எடுத்து ஆதியிடம் கொடுத்தாள்.. ப்ளாஸ்கில் இருந்த காபியை ஊற்றி அவனிடம் கொடுக்க, சரண்யா அதை குறித்து கொண்டாள்...

பின் நால்வரும் சிறிது நேரம் அரட்டை அடிக்க, சரண்யா நேரம் ஆவதை உணர்ந்து வீட்டிற்கு கிளம்பினாள்.. பவித்ரா ப்ரேமிடம் சரண்யா வை  ட்ராப் பண்ண சொல்ல, அவள் மறுக்க

“ஹலோ.. நான் ஒன்னும் உங்களை கடிச்சு தின்னிட மாட்டேன் ,, வாங்க.. நானும் அந்த வழிதான் போகணும்.. அப்படியே ட்ராப் பண்ணிடறேன்.. “ என்று முறைக்க அதற்கு மேல் மறுக்க முடியாமல் அவனுடன் கிளம்பி சென்றாள் சரண்யா...

காரில் அவன் முன்னால் கதவை திறந்து விட, அவளும் ஏறி ஜன்னலை ஒட்டி அம்ரந்து கொண்டாள்... ப்ரேம் அவளின் செய்கையை கண்டு மனதுக்குள் சிரித்து கொண்டே காரை கிளப்பி சிறிது நேரம் சென்றதும் இளையராஜாவின் மெல்லிசை பாடல்களை ஒலிக்க வைத்தான்..

பவித்ராவின் வீட்டில் நால்வரும் அமர்ந்து பேசி கொண்டிருக்கும் பொழுது ப்ரேமின் பார்வை அடிக்கடி சரண்யாவை தழுவியதை அவள் கண்டு கொண்டாள்.. அவன் பார்வை தன் மேல் படும்பொழுது எல்லாம் அவளுக்குள் ஒரு இனம் புரியாத பரவசம் வந்து போனது..

அப்பொழுது அப்படி பார்த்தவனிடம் எப்படி தனியா காரில் செல்வது என்று   யோசித்தே வர மறுத்தாள்... ஆனால் அவள் எதிர் பார்த்ததற்கு மாறாக, ப்ரேம் அவளிடம் எதுவும் பேசவில்லை.. அவள் பக்கமும் திரும்பவில்லை...

ஆனால் ஓரக் கண்ணால் அவள் அறியாமல் அவளை அடிக்கடி பார்த்து கொண்டான்.. அவனுக்கும் அது புதுவிதமான அனுபவமாக இருந்தது.. .எத்னையோ பெண்களை கூட்டி வந்திருக்கிறான் இதே காரில்.. அப்பொழுது எல்லாம் தோன்றாத ஒரு பரவசம் இன்று அவளுடன் செல்லும்பொழுது தோன்றியது..

சரண்யாவும் அதே மனநிலையில் இருக்க, இருவரும் ஒன்றும் பேசாமல் அமர்ந்து அந்த மோன நிலையை ரசித்து வந்தனர்.. பின் சரண்யாவின் வீடு வந்திருக்க, கதவை திறக்க முயல அதை திறக்க முடியாததால்  அவள் புறமாக எட்டி முன்னால் வந்தவன் கதவை தள்ளி திறக்க, அவனின் அந்த நெருக்கம்  சரண்யாவிற்கு படபடப்பாக இருந்தது...

எதேச்சையாக கதவை திறக்க வந்த ப்ரேமுக்கும் அவளின் அந்த நெருக்கம் அவனுள் புரட்டி போட்டது... 

கதவை திறந்து விட்டவன் வேகமாக தன் இருக்கைக்கு வந்து அமர்ந்து கொண்டான்.. சரண்யாவும் தன் உணர்ச்சிகளை காட்டாமல் கீழ இறங்கியவள் நன்றி சொல்ல, பின் நினைவு வந்தவளாக பார்மாலிட்டிஸ்க்காக வீட்டிற்கு அழைக்க,

“இன்னொரு நாள் வர்ரேன்.. Take care.. Good night. See you.. Sweet Dreams.. “  என்று அவளை பார்த்து கண் சிமிட்டி காரை வேகமாக கிளப்பி சென்றான் குறும்பாக சிரித்தவாரு

சரண்யா அவனின் கண் சிமிட்டலை கண்டு உறைந்து நின்றாள் சில விநாடிகள்.. பின் தன் நிலைக்கு வந்தவள் வெக்க பட்டு கொண்டே வீட்டிற்கு உள்ளே சென்றாள்...

சரண்யா சென்றதும் ஆதியும் பவித்ராவும் சிறிது நேரம் அமர்ந்து பேசிகொண்டிருக்க, ஆதிக்குமே அந்த சூழ்நிலை ரொம்ப பிடித்தது.. காலையில் இருந்த அநத அழுத்தம் நீங்க அவளுடன் பேசும் பொழுது ரிலாக்ஸ்டாக இருந்தது...

அதுவும் பனி அப்பொழுது தான் பொழிய ஆரம்பித்திருக்க, அவள் கையை எடுத்து அவன் கைகளுக்குள் வைத்து அலைந்து கொண்டே அவன் இந்த பிசினஸ் க்குள் வந்த கதையை பேசி கொண்டிருந்தான்.. பவித்ராவும் அவன் சொல்வதை ஆர்வமாக கேட்டு கொண்டிருந்தாள்....

டுத்து வந்த இரண்டு வாரமும் காலில் சக்கரத்தை கட்டிகொண்டு சுற்றினர் பவித்ராவும் சரண்யாவும்.. ஆதி ஏற்கனாவே இந்த மாதிரி ஷோ ரூம் ஆரம்பிக்க திட்டமிட்டு  இருந்ததால் நகரின் மையப்பகுதியில் நலிவடைந்து கொண்டிருந்த ஒரு நகைக்கடையை வாங்கி இருந்தான்..

அதை  வாங்கும் பொழுது அதில் இருந்த தொழிலாளர்களுக்கு வேலை இல்லாமல் போகக் கூடாது என்ற எண்ணத்தில் தான் வாங்கியது... அந்த நேரத்தில் பவித்ரா வும் வேலைக்கு போகணும்னு அடம் பிடிச்சுகிட்டிருந்தப்போ தான் அவனுக்கு இந்த திட்டம் தோன்றியது...

அதுவும் அவளின் துடிப்பையும் அடுத்தவங்களுக்கு உதவும் குணம் மற்றும் அவளின் நேர்மையும் கண்டவனுக்கு அவளை வைத்தே இந்த பிரிவை நடத்துவது என்று  முடிவு  செய்திருந்தான்...

அந்த இடம் கொஞ்சம் பழசாக இருந்ததால், அதில் கொஞ்சம் ரெனவேஸன் செய்ய வேண்டி இருந்ததால், அதில் உள்ள தொழிலார்களுக்கு அவங்க திறமைக்கு தகுந்த மாதிரி அவனுடை மற்ற நகை கடைக்கும் வேற சிலரை அவனுடைய மற்ற அலுவலகத்திற்கு  மாற்றினான் ...

எல்லா வேலையும் முடிந்து  தயாராக இருந்தது அந்த கட்டிடம்.. பவித்ரா ஒத்துகொண்ட அடுத்த நாளே   பவித்ராவையும் சரண்யாவையும் அழைத்து கொண்டு சென்று அந்த இடத்தை காட்டினான் ... அவர்களுக்கும்  அந்த இடம் மிகவும்  பிடித்து விட்டது...

அது பெண்கள் மட்டுமே வேலை செய்யும் இடம் என்பதால் அவர்களுக்கு வசதியாக சிறிசிறு  மாற்றங்களை சொல்ல ஆதியும் அவர்களை புகழ்ந்து அதை உடனே  சரி பண்ண ஏற்பாடு செய்தான்..

அடுத்து அங்கு பணி புரிய ஆட்களை தேர்ந்தெடுப்பதையும் அவர்களிடமே விட்டு விட்டான்.. முதல் தேர்வு அவர்கள் பண்ண வைத்து அவர்கள் தேர்ந்தெடுப்பவர்களை அவனும் ஒரு முறை நேர் காணல் செய்த பிறகே தேர்வு செய்தான்.. முதல் ஒரு வாரம் அவர்களுடன் இருந்து என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்லி கொடுத்த பின் அடுத்த வாரம் முழுவதும் அந்த இரண்டு பெண்களும் களத்தில் இறங்கினர்..

ப்ரேமும் தினமும் வந்து அவர்களுக்கு உதவி செய்தான்

ஆதியே அசந்து போகிற அளவுக்கு தயாரக இருந்தது அந்த பிரான்ச்..

இரண்டாவது வாரத்தின் இறுதியிலயே நல்ல நாளில் ஒரு பிரபல பெண் செலப்ரிட்டியை வைத்து கடையை திறந்தனர்... பவித்ரா அம்மா, ஆதி பெரியம்மா மரகதம், ப்ரேம் குடும்பம்,சரண்யா அப்பா என முக்கியமான அனைவரும் வந்திருக்க, விழா நல்ல படியாக முடிந்தது...

சரண்யா தனக்கு தெரிந்த சில டிசைன்களை வரைந்து கொடுக்க, அதுக்கு எப்படி உரிமம் வாங்குவது போன்ற சில லீகள் விசயங்களையும் சொல்லி கொடுத்திருந்தான் ஆதி... சரண்யா டிசைன்பண்ணி இருந்த அந்த கம்மல் நல்ல வரவேற்பை பெற்றது... அதுவும் தங்களுக்கு பிடித்த டிசைனை தாங்களே வடிவமைக்கலாம்  என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த கடை பிரபலமடைந்து வந்தது..

செய்கூலி, சேதாரம் என்று அதிகம் பிடுங்காமல் குறைந்த லாபத்தில் மட்டுமே விற்றதால் நல்ல மதிப்பை பெற்றது.. அதோடு அங்க வரும் பெண்களுக்கு இலவசமாக ஐஸ்கிரீம் கொடுக்க என ஒரு ஐஸ்கிரீம்  கவுண்டர் ஐ ஏற்பாடு செய்திருந்தாள் பவித்ரா.. அதற்காகவே பெண்கள் கூட்டம் அலை மோத ஆரம்பித்தது...

அதை  கண்ட ஆதி  அசந்து நின்றான்.. இவளுக்குள் இப்படி ஒரு திறமையா என்று.. எப்படியோ சரியான நேரத்தில் அவளை இதுல இழுத்து விட்டாச்சு... இனிமேல் நான் வேண்டாம் னு  சொன்னா கூட நிக்க மாட்டா.” என்று சிரித்து கொண்டான்..  

புதுகடை ஆரம்பித்து ஒரு மாதம்  ஆகி இருக்க, அப்பொழுது தான் கொஞ்சம் ரிலாக்ஸ்ட் ஆக இருக்க முடிந்தது பவித்ராவுக்கு.. ஆதிக்குமே மற்ற எல்லா வேலையும் முடிந்திருக்க, எங்கயாவது வெளில போகலாம் என எண்ணியிருந்தான்.. அதே  நேரம் 

அவன் பெரியம்மா மரகதம் அழைத்து இருந்தார் ஆதியை..

வழக்கமான நல விசாரிப்புக்கு பிறகு ஆதியையும் பவித்ராவையும் தங்கள் ஊர்  கோவில் திருவிழாக்கு வருமாறு அழைத்தார்..

ஆதியோ தனக்கு வேலை இருப்பதாக மறுத்து விட அதை கேட்டு கொண்டிருந்த பவித்ராவுக்கு மனம் வாடியது... முன்பு ஜனனி இங்கு இருந்த பொழுது அவ ஊரை பற்றி பெருமை அடித்ததை வைத்து பவித்ராவுக்கும் அந்த மாதிரி ஊரை சென்று பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது...

என்னதான் இப்ப கொஞ்சம் ஃப்ரெண்ட்லியா அவன் பேசினாலும் இன்று வரை  அவன் சொல்லுவதைதான் அவள் கேட்கிற மாதிரி தான் வச்சிருக்கான்..

“நானா ஏதாவது கேட்டால் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி அவன் சொல்றதுதான் சரி னு சொல்லிடறான்...நான் போய் இப்ப  அத்தை ஊருக்கு போகலாம்னு சொன்னால் அவன் கண்டிப்பா வேண்டாம்னு தான் சொல்வான்.. என்ன  செய்யலாம்??.. “   என்று  சிறிது நேரம் யோசித்தவளுக்கு அவனுடைய பழய மொக்க லாஜிக் நினைவு வர

“இத  வச்சே அவன மடக்க வேண்டியதுதான்.. “ என்று சிரித்தவள் தன்  அலைபேசியை எடுத்து கொண்டு மரகததிற்கு  அழைத்த மாதிரி போனை காதில் வைத்துகொண்டு ஆதிக்கு கேட்கிற மாதிரி சத்தமாக பேசினாள்

“ஹ்ம்ம்ம் சொல்லுங்க அத்தை... எப்படி இருக்கீங்க?? என்ன உங்க ஊருக்கு வரணுமா??

சே .. சே அங்கெல்லாம் என்னால வந்து இருக்க முடியாது அத்தை.. வெறும் பட்டிகாடா இருக்கும்.. ஒரு ஏசி இருக்காது.. குளிக்கிறதுக்கு பாத் டப் இருக்காது... என்னால உங்க ஊருக்கெல்லாம் வரமுடியாது.. நீங்க வேணா ஜனனி ய கூட்டிகிட்டு இங்க வாங்க... “என்று அவனை ஓரக் கண்ணால் பார்த்து கொண்டே அவன் கேட்கிற மாதிரி சத்தமாக தனக்கு வராத அழைப்புக்கு பேசி கொண்டிருந்தாள்...

அதை கேட்ட ஆதிக்கு கோபம் வந்தது..

“ஆமா...  இவ அம்மா வீட்ல அப்படியே ஏசியிலயே பொறந்து வளர்ந்தா... இருக்கிறது ஒரு ஓட்ட பேன்.. அதுவும் எப்ப நிக்கும் னு தெரியாது... அத வச்சுகிட்டு ஏசிலதான் இருப்பாளாமாம்... பெரியம்மா இவ்வளவு தூரம் கூப்பிடறாங்க.. என்னமா பந்தா பண்றா பார்.. இவளை இப்பயே அடக்கி வைக்கணும்..”  என்று முடிவு செய்தவன் உடனே போனை எடுத்து

“பெரியம்மா... நாளைக்கே நாங்க ஊருக்கு வர்ரோம்.. “ என்றான் அவளை பார்த்து முறைத்து கொண்டே...அதை கேட்ட பவித்ரா

“Yes…”  என்று தன் கையை பின்னால் மடக்கி குதித்து கொண்டாள்... என்கிட்டயேவா??  என்று ஒரு லுக் வேற.. ஆனால் வெளியில் அவனை முறைப்பதை போல  ஆக்சன் வேறு..

 அவள் அருகில் வந்த ஆதி

“நாளை ஊருக்கு போறோம்.. ட்ரெஸ் எல்லாம் எடுத்து வச்சுக்கோ.. “ என்று சொல்ல் அவனை பார்த்து முறைத்தாள் உள்ளுக்குள் சிரித்து கொண்டே...

பவித்ராவுக்கு இந்த மாதிரி கிராமத்தை பார்த்ததில்லை என்பதால் ஆர்வமாகவும் ஆதிக்கோ இந்த பயணத்தை வச்சு அவள் மனதை எப்படியாவது மாற்றி இந்த ஆட்டத்தை முடிக்கணும் என்று எண்ணியதால் இருவரும் நாளை பயணத்தை ஆவலுடன் எதிர்பார்த்தனர்....

இந்த பயணம் அவர்கள் இருவர்  வாழ்க்கையையும் புரட்டி போடப் போவதை அறியாமல் இருவரும் ஒரு ஒரு மனநிலையில் தயாராயினர்...




Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!