உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-38

 


அத்தியாயம்-38

ரகதம் இருவரையும் மாடியில் அவர்களுக்காக ஒதுக்கி இருந்த அறைக்கு சென்று ரெப்ரெஸ் ஆகி விட்டு சீக்கிரம் சாப்பிட வர சொன்னார்.. ஆதியின்  பெற்றோர்கள் வந்தால் தங்கும் அறையை சுத்தம் பண்ணி ரெடி பண்ணி வைத்திருந்தார்....

ஒரு வேலையாள்  அவர்கள்   பொருட்களை கொண்டு வந்து அங்கு வைத்தார்..

இருவரும் அந்த அறைக்குள் வர, அந்த விசாலமான அறையையும் அதன் நேர்த்தியையும் கண்டு அசந்து நின்றாள் பவித்ரா.. அதன் சுவற்றில் ஒரு தம்பதியர் ஒரு 10 வயது இருக்கும் ஒரு சிறுவனை தூக்கி அணைத்திருக்க  மூவர் முகத்திலும் அப்படி ஒரு மகிழ்ச்சி இருந்தது..

அந்த பெண்ணை உற்று பார்த்த பவித்ரா அவரிடம் அப்படியே ஆதியின் சாயல் தெரிய, அவர்கள் தான் அவன் பெற்றோர்கள் என்று புரிந்தது.. பின் அவள் பார்வை அந்த சிறுவனிடம் செல்ல, குண்டு கன்னங்களுடன் சிரிக்கும் கண்களுடன் கொலுகொலுவென்று இருந்தான் அந்த சிறுவன்...

அப்படியே ஆதியின் ஜாடை.. அது ஆதிதான் என்று புரிய இப்ப இருக்கும் அதே சிரிக்கும் குறும்பு பார்வையும் சிரிக்கும் கண்ணு... என்று அந்த சிறுவனின் கண்ணை  உற்று பார்த்தவள் அந்த கண்ணில் ஒரு வித்தியாசம் தெரிந்தது அவளுக்கு..

அப்பொழுது இருந்தவன் கண்ணில் அப்படி ஒரு மகிழ்ச்சி தெரிய, இப்பொழுது இருக்கும் ஆதியின் கண்ணில் சம்திங்  மிஸ்ஸிங்...

“ஒரு வேளை அவன் பெற்றோர்களிடம் இருப்பதால் அந்த மகிழ்ச்சியோ??... அதுதான் இப்ப இல்லையா??.. “என்று அவள் யோசித்து கொண்டிருக்கையில் அவள் அருகில் வந்தவன்

“என்ன பேபி... அந்த க்யூட் பாய் ஐ சைட் அடிக்கிற போல இருக்கு... எப்படி இருக்கான்??..” என்று சிரித்தான் குறும்பாக..

“ஐய... நான் ஒன்னும் அந்த பையன சைட் அடிக்கல.... என் மாபியார் மாமனாரைத் தான் சைட் அடிச்சிகிட்டிருக்கேன்.. என் மாமனார் சோ ஹேன்ட்ஸம்.. செமயா இருக்கார்...

என்  மாமியார் அதைவிட சோ ப்ரிட்டி... அவ்வளவு அழகா இருக்காங்க... எனக்கே அவங்களை கட்டிகிட்டு அவங்க கன்னத்தில கிஸ் பண்ணனும் போல இருக்கு.. “ என்று கண் சிமிட்டி சிரித்தாள்...

அவள் தன் அன்னையை பற்றி சொன்னதை கேட்டதும் அவனுக்கு இதுவரை அவன் மறந்திருந்த, இல்லை மறைத்து தன் மனதுக்குள் புதைத்திருந்த தன் அன்னையின் அந்த சிரிக்கும் முகமும் அவனை எப்பவும் கொஞ்சி கொண்டிருக்கும் அவரின் அந்த சிரிக்கும் கண்களும் நினைவு வர,  அவன் முகம் இளகி, அவன் கண்களில் இலேசாக ஈரம் எட்டி பார்த்தது... 

மறுநொடி தன் தலையை உலுக்கி கொண்டு  தன் மனதை அறைந்து சாத்தியவன் முகத்தை எப்பவும் போல மாற்றி கொண்டவன் உடலில் ஒரு வித இறுக்கம் வந்து ஒட்டி கொண்டது...

ஒரு நொடியில் அவன் முகத்தில் வந்து போன அந்த இளக்கமும் அவன் கண்களில் தெரிந்த  வலியும் பெற்ற தாயை தேடும் குழந்தையின் ஏக்கமும் வேதனையையும் கண்டு கொண்டவள் மனம் கரைந்து போனது பவித்ராவுக்கு...

அவனை அப்படியே தன் மார்போடு அணைத்து அவன் தலையை வருடி அவன் ஏங்கிய அந்த தாய்ப் பாசத்தை கொடுத்திட துடித்தது அவள் மனம்...

ஆனால் அதற்கெல்லாம் அவசியமில்லை.. என்பது போல ஆதி அடுத்த விநாடியே நார்மலாகி அவன் பெட்டியை திறந்து எதையோ தேடி கொண்டிருந்தான்...அவளும் தன்னை சமாளித்து கொண்டு

“பாஸ்... உங்க ட்ரெஸ் அந்த பெட்டியில் இருக்கு.. இருங்க நான் எடுத்து தர்ரேன்.. “ என்று அவள் மற்றொரு பெட்டியை எடுக்க,

“ஹே.. இரு...  இரு.. இப்ப என்ன கூப்பிட்ட?? லுக் பேபி... இங்க இருக்கிறவரைக்கும் என்னை பாஸ்னு கூப்பிடாத.. இது வில்லேஜ்.. இங்க எல்லாம் அது வித்தியாசமா இருக்கும்... அதனால அப்படி கூப்பிடாத..”  என்று முறைத்தான்...

“ஹ்ம்ம்ம்ம் அப்ப  எப்படி கூப்பிடறதாம்??... “  என்று  அவன் உடையை எடுத்து கொடுத்தவள் கன்னத்தில் விரலை வைத்து தலையை சரித்து யோசிப்பதை போல பாவனை செய்ய,

அவனும் சிரித்து கொண்டே

“எப்படி வேணா கூப்பிடு... நல்லதா யோசித்து வை... நான் குளிச்சிட்டு வந்திடறேன்.. “ என்று அவள் கன்னத்தை செல்லமாக தட்டி சென்றான்... அதில் சிலிர்த்தவள் மீண்டும் சிரித்து கொண்டெ அவர்கள் உடைகளை எடுத்து அடுக்கி வைத்தவாறே அந்த அறையை சுற்றிலும் நோட்டமிட்டாள்..

ஆதியின் பெற்றோர்கள் முன்பு உபயோகித்த அறை.. அங்கு இருந்த பொருட்கள் எல்லாம் அப்படியே வைக்கபட்டு இருந்தன.. நிறைய ஆதியின் விளையாட்டு பொருட்களும் சில கதை புத்தகங்களும் இருக்க, அதை எடுத்து பார்க்க எல்லாம் சிறுவர்கள் படிக்கும் ஆங்கில நாவல்கள்..

“அப்பயே இங்கிலீஸ் தான் படித்தாரக்கும் இந்த துரை.. “ என்று சிரித்து கொண்டே இன்னும் சில புகைப்படங்களை பார்த்து கொண்டிருந்தாள்.. அதற்குள் ஆதி குளித்து விட்டு வந்திருக்க, பவித்ரா தன் உடைகளை எடுத்து கொண்டு உள்ளே சென்றாள்..

உள்ளே சென்றதும் அந்த குளியல் அறையின் தோற்றத்தை கண்டு வியந்து நின்றாள்.. சென்னையில் அவர்கள் வீட்டில் இருப்பதை போலவே இருந்தது.. பாத் டப், ஷவர் மற்றும் கீசர் என்று அனைத்து நவீன வசதிகளும் இருந்தன அந்த அறையில்...

அவள் கிராமம் என்றாள் திரைப்படங்களில் காமிப்பதை போல வீட்டிற்கு வெளியில் ஒரு குடிசையை கட்டி குளிப்பதை போல நினைத்து வந்தவளுக்கு அங்கு அத்தனை வசதிகளும் இருப்பதை கண்டு தன் மாமனார் மாமியாரை மெச்சி கொண்டாள்...

தங்கள் பையனுக்காக ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்திருப்பார்கள் போல.. என்று சிரித்து கொண்டே தன் குளியலை தொடர்ந்தாள்..

குளித்து முடித்து ஒரு சல்வாரை அணிந்து கொண்டு கீழ இறங்கி வந்தாள்... காலையில் சீக்கிரம் கிளம்பியதாலும் மேலும் இந்த கிராமத்து காற்று பட்டதாலும் நன்றாக பசி எடுக்க, நேராக டைனிங் ஹாலுக்கு சென்றாள்..

அங்கு அனைவரும் ஏற்கனவே வந்து அமர்ந்திருக்க, ஆதி பக்கத்தில் அந்த நந்தினி அமர்ந்து கொண்டு ஆதியிடம் சிரித்து பேசிக் கொண்டிருந்தாள்.. அதை கவனித்த பவித்ரா தன் தோள்களை குலுக்கி மெல்ல சிரித்தபடி ஆதியின் மறுபக்கம் அமர்ந்து இருந்த ஜனனியின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்..

மரகதம் அன்று ஆதிக்கு பிடித்த அசைவ வகைகளை சமைத்து இருந்தார்... அதுவும் கிராமப்புற பாணியில் வித்தியாசமாக இருக்க, பவித்ராவே ரசித்து நிறைய சாப்பிட்டாள்..

நந்தினி எதையாவது எடுக்கும் சாக்கில் வேண்டும் என்றே ஆதியை உரசி கொண்டிருக்க, பவித்ரா அதை  கண்டும் காணாதவாறு தன் உணவை உண்டு கொண்டிருந்தாள்.. ஆனால் ஜனனிக்கு தான் தாங்க முடியவில்லை...

அவள் பவித்ராவின் காதில் முனுமுனுக்க, பவித்ரா அவளை அமைதியாக இருக்க சொல்லிவிட்டு தன் சாப்பிடற வேலையை தொடர, அவள் மனம் அப்பயும் பொறுக்காமல் நந்தினியை முறைத்து கொண்டே சாப்பிட்டாள் ஜனனி...

அனைவரும் சாப்பிட்டு முடித்ததும், ஆதி  நேற்று இரவு கண் முழித்து மீதி இருந்த அலுவலக வேலையை முடித்ததால், தூக்கம் வருவதாக சொல்லி மேல சென்று விட, மதியம் உறங்கும் பழக்கம் இல்லாததால் பவித்ரா ஜனனியை அழைத்து கொண்டு வீட்டின் பின்னால் இருந்த தோப்புக்குள் சென்றாள்..

முதலில் அவர்கள் சென்றது மாந்தோப்பிற்கு.. அது  மாம்பழ சீசன் என்பதால் எல்லா மரங்களிலும் மாங்காய் கொத்து கொத்தாக காய்த்து தொங்கியது..

அதுவும் எல்லா மரங்களிலும் ஒரே மாதிரி காய்த்து தொங்க, அதுவும் கைக்கு எட்டும் தொலைவிலயே தொங்கி கொண்டிருக்க, அதை கண்ட பவித்ரா துள்ளி குதித்தாள்.. எட்டி குதித்து ஒரு மாங்காயை தொட்டு பார்த்தாள்..

மாங்காயை வெறும் கடைகளில் வரிசையாக அடுக்கி வைத்து பார்த்து பழகியவளுக்கு அத்தனை மாங்காய்களையும் மரத்தில் நேரடியாக பார்க்க அதிசயமாக இருந்தது.. அவள் தன் வீட்டு பக்கத்து வீட்டில் இருக்கும் மா மரத்தில் அதிசயமாக எப்பவாது கொஞ்சம் காய் பிடிக்கும்.. அதையே ஆச்சர்யமாக பார்த்தவளுக்கு இத்தனையையும் நேரில் பார்க்க குஷியாகி துள்ளி குதித்தாள்..

மறக்காமல் அதன் அருகில் நின்று செல்பி எடுத்துகொண்டாள்..

அதை கண்ட ஜனனியும் சிரித்து கொண்டே  ஒரு மாங்காயை பறித்து பவித்ராவிடம் கொடுக்க, பிறகு சாப்பிடுவதாக அதை கையில் வைத்துக் கொண்டாள்...

மாந்தோப்பு முழுவதும் சுற்றியவர்கள் அடுத்து இருந்த கொய்யா மரத்தோப்பிற்குள் நுழைந்தனர்.. மாந்தோப்பில் பார்த்த மாதிரியே  இங்கும் கொய்யாக்கள் காய்த்து குலுங்கின..

அதை கண்ட பவித்ரா இன்னும் குதித்து ஆர்ப்பரிக்க, திரண்டிருந்த கொய்யா காய்களை பார்க்கும் பொழுது அவளுக்கு சாப்பிட ஆசை வர, ஜனனியும்

“உங்களுக்கு எது  வேணும்னு சூஸ் பண்ணுங்க அண்ணி.. இந்த ஜனனி  அதையே பறித்து தருவா.. “ என்று சிரிக்க,

பவித்ராவும் அவளை வம்பு இழுக்க என்று தேடி மரத்தின் மேல உயரத்தில் இருந்த ஒரு காயை காமிக்க ,அடுத்த நிமிடம் ஜனனி அருகில் இல்லை.. சுற்றிலும் தேடி பார்க்க அவள் அந்த மரத்தின் மேல அமர்ந்து இருந்தாள்...

பவித்ராவுக்கு ஆச்சர்யமாக அவளும் அந்த மரத்தில் ஏற வேண்டும் என்க, ஜனனி இறங்கி வந்து எப்படி மரம் ஏறுவது என்று ஒரு இன்ஸ்டன்ட் ட்யூசன் எடுக்க, அதன் படி முதலில் வழுக்கினாலும் விடாமல் முயற்சி செய்து மெல்ல மேல ஏறி அந்த மரத்தின் கிளையில் அமர்ந்து கொண்டாள் பவித்ரா..மேல இருந்து கீழ பார்த்தவள்

“வாவ்.. ஜனனி ... ரியலி சூப்பர்... வெரி எக்ஷைட்டட்.. எப்படி நீ இப்படி ஈசியா மரம் ஏறுன?? “ என்று ஆர்வமாக கேட்க

“இதுல என்ன இருக்கு அண்ணி... அதெல்லாம் சின்ன வயசுல கத்துகிட்டது... அப்புறம் எங்க அம்மா எதுக்காச்சும் திட்டினால், நேரா இங்க வந்து ஏதாவது ஒரு மரத்துல ஏறி உட்கார்ந்துக்குவேன்.. அம்மா வந்து கூப்பிடற வரைக்கும் இங்க தான் அடைக்கலம்..

அப்புறம்  படிக்கிறப்போ ரொம்ப போரடிச்சாலும் புக் ஐ எடுத்து கிட்டு வந்து இப்படி உட்கார்ந்து இந்த கிளையில சாய்ஞ்சுகிட்டே படிச்சா சூப்பரா இருக்கும்... சோ  அடிக்கடி இங்க வந்திடுவேன்.. “ என்று சிரித்தாள் ஜனனி...

“ஹ்ம்ம்ம்ம் நீயெல்லாம் வானரமா பிறக்க வேண்டியது.. தவறி அத்தைக்கு மகளா பிறந்துட்ட போல இருக்கு.. “ என்று சிரித்தாள் பவித்ரா...

ஜனனியும் அவளை முறைத்தவாறே சிரித்து கொண்டு எட்டி பவித்ரா சொன்ன அந்த காயை பறித்து அதை கையால் தேய்த்து விட்டு பவித்ராவிடம் நீட்டினாள் சாப்பிட சொல்லி..

“ஹே ஜனி ... இதை எப்படி கழுவாமல் சாப்பிடறது??.. இதுல நிறைய கெமிக்கல்ஸ் இருக்கும்... அதோட இப்பதான் இந்த மாதிரி பழங்களை வவ்வால் கடிச்சு இருந்தா அதை  நாம சாப்பிட்டா புதுசா நிபா  (Nipah) னு ஒரு நோய் வரும்னு  கண்டு பிடிச்சிருக்காங்களே.. அதெல்லாம் வரும்..வேண்டாம்... “ என்று மறுக்க,

“அட போங்க அண்ணி.. கெமிக்கல் எல்லாம் கிடையாது.. இது எங்க அண்ணா எந்த செயற்கை உரமும் இல்லாமல் இயற்கை உரத்தை பயன்படுத்தி ஆர்கானிக் முறையில வளர்த்ததாக்கும்.. அதனால் எந்த இதுவும் வராது.. நீங்க நம்பி சாப்பிடலாம்.. நான் கேரண்டி.. “ என்று  சிரிக்க

பவித்ராவும் பயந்தவாறே அதை கடிக்க, அதன் சுவை மிகவும் அமிர்தமாக இருந்தது...

“வாவ்.. சுப்பர் ஜனி.. நீ சொன்ன மாதிரியே சூப்பரா இருக்கு.. “

“ஆமாம்.. அது என்ன என்னை ஜனி னு கூப்பிடறீங்க.. “என்றாள் ஜனனி...

“ஹா ஹா ஹா உன் பேரை ஜனனி னு இழுத்து கூப்பிடறதுக்குள்ள என் எனர்ஜி போய்டுது.. அதான் ஷார்ட் ஆ  ஜனி னு சுருக்கிட்டேன்.. இது எப்படி இருக்கு?? “என்று தன் புருவங்களை தூக்கினாள் பவித்ரா....

“ஹ்ம்ம்ம்ம் நல்லாதான் இருக்கு... அப்ப நானும் அண்ணினு கூப்பிடாம அணி னு கூப்பிடறேன்... என்ன டீலா?? “என்று அவள் கட்டை விரலை ஆட்டி காட்ட

“ஓ... டீல்... நீ எப்படி வேணும்னாலும் கூப்பிடு.. ஐம் பைன்..”  என்று அவளுக்கு கை பை கொடுக்க, ஜனி  அணி  னு  இரண்டு பேரும் அரட்டை அடிக்க ஆரம்பித்தனர்..

“ஆமா... ஜனி.. உன் நிஷா அண்ணனுக்கும் இப்படி மரம் ஏற தெரியுமா?? “என்றாள் ஆர்வத்துடன்...

“தெரியுமாவா??  அவர்தான் எங்களை விட  பாஸ்ட் ஆ ஏறுவார்.. அவர் ஊட்டியில் படிக்கிறப்போ எப்பவாது லீவுக்கு இங்க வருவார்.. அப்பல்லாம் நான், சரவணன், நிஷா அண்ணன் மூனுபேரும் அவ்வளவு ஜாலியா சுத்துவோம்..

அதோ  அங்க தெரியுது பாருங்க.. அந்த மூனு மரமும் தான் எங்களோட பேவரைட்.. ஆளுக்கொரு மரத்துல ஏறி உட்கார்ந்து கிட்டு கதை  அடிப்போம்.. அப்ப அந்த மரம் சின்னதா  இருந்துச்சு.. இப்ப இவங்களும் எங்கள மாதிரி பெருசா வளர்ந்திட்டாங்க.. “ என்று சிரித்தாள்...

“ஹ்ம்ம்ம் வெரி இன்ட்ரெஸ்டிங்க்...சே.. எனக்கெல்லாம் இந்த மாதிரி ஒரு சான்ஸ் கிடைக்கலையே.. “ என்று சிரித்தாள்

“ஹ்ம்ம்ம்  ஆனா அதுக்கப்புறம் நிஷா அண்ணா இங்க வர்றதே இல்லை.. அப்புறம் படிப்புக்காக வெளிநாடு போய்ட்டு அப்புறம் பிசினஸ் ல பெரிய ஆளா ஆய்ட்டார்.. இங்க எல்லாம் வர நேரமே இல்ல  போல...

அதிசயமா ரொம்ப வருசத்துக்கு பிறகு இப்பதான் இந்த பக்கம் வந்திருக்கார்.. “என்று பெருமூச்சு விட்டாள்..

பின் இருவரும் கீழ இறங்கி  இன்னும் மற்ற இடங்களையும் சுற்றி விட்டு  வர, அருகில் இருந்த வாழை மரத்தை தார் ஈன்ற நிலையில் கண்ட பவித்ராவுக்கு அதுவும் அதிசயமாக இருந்தது...

பெரிய வாழைத்தார் ன் காய்களும் திரண்டிருக்க அதன் பாரம் தாளாமல் அந்த மரம் தலை குனிந்து நிக்க, அதை கண்டவள் மெய் மறந்து நின்றாள்.. அதன் அருகில் சென்று செல்பி எடுத்து கொண்டாள்..

பின் அருகில் இருந்த மற்றொரு மரம் இப்பொழுது தான்  தார் போட்டிருக்க அதன் பூவை கண்ட ஜனனி

“அணி.. நீங்க வாழைப்பூ தேன் குடிச்சிருக்கீங்களா.. ?? “என்றாள்..

“வாழைப்பூவில் தேனா??.. நான் டாபர் ஹனி,  இப்ப புதுசா வந்திருக்கிற லைன் டேட்ஸ் ஹனி தான் சாப்ட்ருக்கேன்.. இது என்ன வாழைப்பூ ஹனி  ??  என்று புரியாமல் ஜனனியை பார்க்க,

“இருங்க.. உங்களுக்கு காட்டறேன்.. “ என்றவள் அருகில் இருந்த மரத்தில் இருந்து கீழ விழுந்திருந்த அந்த வாழைப் பூவின் இதழை எடுக்க அதில் உள்ளே இருந்த பூவை எடுத்து அதில் இருந்த மடலை விரித்து அதன் உள்ளே இருந்த ஒரு துளி தேனை காட்டி இது தான் வாழைப்பூ தேன்.. சூப்பரா இருக்கும்..

இத இப்படி சாப்பிடனும்.. “ என்று பவித்ராவுக்கு செய்முறை விளக்கம் காட்ட பவித்ராவும் அதை பாலோ பண்ணி அந்த தேனை ருசித்தாள்... வித்தியாசமாக இருந்தது அதன் சுவை.. பின் ஒவ்வொன்றாக அனைத்தையும் காலி செய்தாள்..

“வாவ்.. சூப்பர் ஜனி.. இன்னும் என்னெல்லாம் இருக்குனு சொல்லு.. எல்லாமே இன்ட்ரெஸ்டிங்க் ஆ இருக்கு... “என்று கண்கள் விரிய சொன்னாள் பவித்ரா...

“அப்பா... எவ்வளவு அழகான கண்கள் அணி உங்களுக்கு... இப்பதான் தெரியுது என் நிஷா அண்ணா உங்கள பார்த்த உடனே ஏன்  லவ்  பண்ணாருனு?? “என்று சிரித்தாள்..

“என்னது?? என்னை லவ் பண்ணாரா?? இது  என்ன புது கதை.. “ என்று புரியாமல் ஜனனியை பார்க்க,

“என்ன அணி??.. ஒன்னும் தெரியாத மாதிரி பார்க்கறீங்க... அண்ணா எங்கம்மா கிட்ட போன்ல பேசும் பொழுது நானும் கூடத்தான் இருந்தேன்.. உங்களை லவ் பண்றதாகவும் உங்களை கல்யாணம் பண்ணிக்கதான் எங்க அம்மாவை வந்து உங்க வீட்ல பேச சொன்னார்... “ என்று பழைய கதையை கூற

“அடச் சே.. இதுதான் தெரிஞ்ச கதையாச்சே... அவன் என்னை லவ்  பண்றேனு சொல்லியா அத்தையை கூட்டிகிட்டு வந்தான்.. இதுவும் இன்ட்ரெஸ்டிங் தான்..”  என்று  மனதுக்குள் குறித்து கொண்டாள்..

சிறிது தூரம் நடந்ததும் அங்கு இருந்த தென்னை மரத்தை கண்டதும் ஜனனி அதன் அருகில் சென்று

“அணி.. இருங்க இளநி குடிக்கலாம்.. “என்று சொல்லி வேகமாக அந்த மரத்தில் ஏறினாள்..

அவள் மரம்  ஏறும் அழகையே ஆர்வமாகவும் கொஞ்சம் பயத்துடனும் பார்த்து கொண்டிருந்தாள் பவித்ரா.. மேல சென்றவள் இரண்டு இளநீர் காயை பறித்து கீழ போட்டு விட்டு அதே வேகத்தில் கீழ இறங்கி வந்தாள்...

பின் அந்த மரத்தில் இருந்த அருவாளை எடுத்து அதை இலாவகமாக சீவி பவித்ராவிடம் நீட்ட, அவளோ ஆ னு  ஜனனியை பார்த்து முழித்து கொண்டு நின்றாள்... பின்  ஜனனியிடம் அதை குடிக்க ஸ்ட்ரா கேட்க, ஜனனி விழுந்து விழுந்து சிரித்தாள்..

பின் ஸ்ட்ரா இல்லாமல் எப்படி குடிப்பது என்று மீண்டும் ஒரு இன்ஸ்டன்ட் ட்யூசன் எடுக்க, பவித்ராவும் ஜனனி சொன்ன மாதிரி தன்  வாயை அந்த சிறிய ஓட்டையில் வைத்து இலாவகமாக அந்த இளநீரை பருகினாள்..

அங்கு இருந்த மண்ணிற்கு அந்த இளநீர் அவ்வளவு ருசியாக இருந்தது.. குடித்து முடித்ததும் ஜனனி அதை வெட்டி உள்ளே இருந்த இளகிய தேங்காயை எடுத்து கொடுக்க அதை அந்த ஜனனி பண்ணி கொடுத்த  ஸ்பூனால் எடுத்து சாப்பிட்டாள்..

“வாவ்.. சூப்பர் ஜனி.. இப்படி ஒரு இளநிய நான் சாப்பிட்டதே இல்லை... “ என்று சிரித்து கொண்டே மீண்டும் தோப்பின் வழியாக வீட்டிற்கு திரும்ப, இப்பொழுது பவித்ரா வழியில் கீழ விழுந்து கிடந்த மாங்காய், கொய்யா, சப்போட்டா என அனைத்தையும் பொறுக்கி தன் சுடிதாரின் முன்னால் இருந்த கீழ் பாகத்தை  மடித்து அதில் போட்டு கொண்டு வீட்டிற்கு வந்தனர்...





Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!