உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-39

 


அத்தியாயம்-39

மாலை நேரத்து மஞ்சள் வெயில் அந்த மரங்களின் மேல் பட்டு எதிரொளிக்கும் கொள்ளை அழகாக இருந்தது...அதை ரசித்துக் கொண்டே வீட்டிற்கு வர, அங்கு ஆதி எழுந்து வந்து வெளியில் அவன் பெரியப்பாவுடனும் சரவணனும் அமர்ந்து பேசி கொண்டிருக்க, நேராக அங்கு சென்றவள்

“இங்க பாருங்க பா.... “ பாஸ் என்று சொல்ல வந்து பாதியில் நிறுத்தி கொண்டு அசட்டு சிரிப்பை சிரித்து

“எவ்வளவு நேச்சுரலா இருக்கு இந்த ப்ரூட்ஸ் எல்லாம்... டேஸ்ட் ம் சூப்பரா இருக்கு.. சாப்பிடறீங்களா?? “என்றாள் கண்கள் விரிய..

அவளின் அந்த புன்னகையை ரசித்தவன்

“ஹே பேபி.. இதெல்லாம் நீயா மேல ஏறி பறிச்ச??  “ என்றான் அவனும் அதிசயித்து

“ஹா ஹா ஹா ஏற வச்சுட்டோம் இல்ல.. “ என்று ஜனனி தன் காலரை தூக்கி விட்டு கொள்ள

“போச்சுடா ... இதுவரைக்கும் ஒரு வாணரம் மட்டும் தான் இருந்தது.. இப்ப இன்னொன்னும் சேர்ந்திருச்சா... வீடு தாங்கின மாதிரி தான்.. “ என்று சரவணன் சிரிக்க,

“மாமா... நீங்களுமா என்னை ஒட்டறீங்க?? .. இது நல்லதுக்கில்லை.. “ என்று விரல்  நீட்டி பவித்ரா மிரட்ட, ஆதி  அவள் சொன்ன மாமாவை குறித்து கொண்டான்..

அதற்குள் மரகதம் காபி கோப்பையும் பிஸ்கட்டும் இருந்த ட்ரேயை எடுத்து கொண்டு வந்தார்.. சரோஜாவும் நந்தினியும் அங்கு வர, சரோஜா கையில் இருந்த குழந்தையை கண்டதும் பவித்ரா எழுந்து சென்று கையை நீட்ட அந்த குட்டியும் அவளிடம் தாவி கொண்டு வந்தான்..

பின் அனைவரும் அமர்ந்து அரட்டை அடித்து கொண்டே அந்த மாலை நேரம் இனிதாக கழிய, சிறிது நேரத்தில் மரகதம் எழுந்து இரவு உணவு தயாரிக்க சமையல் அறைக்குள் செல்ல சிறிது நேரம் கழித்து பவித்ராவும் எழுந்து சமையல் அறைக்குள் வந்தாள்..

மரகதம் வேணாம் என்று மறுத்த பொழுதும் அவளும் சிரித்துகொண்டே அவருக்கு உதவ, சிறிது நேரத்தில் அந்த நந்தினியின் அலட்டலில் கடுப்பான ஜனனியும் எழுந்து சமையல் அறைக்குள் வந்தாள்... அவளை கண்ட மரகதம்

“அடடா... பவித்ரா இன்னைக்கு மழை கொட்ட போகுது... என்  பொண்ணு அதிசயமா கிச்சனுக்குள்ள வந்துட்டா..”  என்று சிரிக்க

“மம்மி.. இது அநியாயம்.. நான் கிச்சனுக்குள்ள வந்ததே இல்லை??... நீ செஞ்சு வைக்கிரதை எல்லாம் டைனிங் ஹாலில் எத்தன முறை கொண்டு போய் வச்சிருக்கேன்... “ என்று சிணுங்கினாள்

“ஆமாம் இல்ல... அத மறந்துட்டேன்.. அதோட நீ நைட்ல வந்து உருட்டறதும் இப்பதான் நினைவு வந்தது..”  என்று சிரிக்க, பவித்ராவும் அவருடன் இணைந்து நகைத்தாள்.. மூவரும் வாயடித்து கொண்டே இரவு உணவை தயாரித்து முடிக்க, ஜனனியும் பவித்ராவும் அதை கொண்டு வந்து டைனிங் டேபிலில் வைத்தனர்..

பின் அனைவரும்  அங்கு வர பவித்ரா மரகதத்தை அமர சொல்லி தான் பரிமாறுவதாக சொல்ல, மரகதம் மனம் குளிர்ந்தது.. “இப்படி பொறுப்பா இருக்காளே என்று..  தன் மருமகள் ஒரு நாளும் சமையல் அறைக்குள் வந்ததும் இல்லை.. இந்த மாதிரி ஏதாவது உதவி செய்யவா என்று வாய் வார்த்தைக்காக கூட கேட்டதும் இல்லை...”என்று நினைத்து பெருமூச்சு விட்டார்.. 

பவித்ரா எல்லாருக்கும் வைத்து விட்டு மற்ற எல்லாத்தையும் நடுவில் வைத்து விட்டு அவளும் ஜனனியின் அருகில் அமர்ந்து கொண்டு சாப்பிட, மீண்டும் எல்லாரும் கலகலவென்று சிரித்து கொண்டே உண்டனர்..

பவித்ராவின் கலகல பேச்சும் அங்கு அனைவருக்கும் பிடித்து விட ஒரே நாளில் அங்கு பழக்கபட்டவள் போல் ஆனாள்.. ஆனால் நந்தினி மட்டும் அவளை அப்பப்ப முறைத்து கொண்டிருந்தாள்...திடீரென்று சதாசிவம் பவித்ராவை பார்த்து

“என்ன மருமகளே!! எப்படி இருக்கு எங்க ஊர்?? பிடிச்சிருக்கா.. “   என்றார் சிரித்தவாறு..

“ஹ்ம்ம்ம் சூப்பரா இருக்கு மாமா... அங்க சென்னைல எப்பவுமே ஒரே சத்தத்துல இருந்து கிட்டு இங்க வந்தா அவ்வளவு அமைதியா இருக்கு.. அதுவும் சுத்தமான காற்றும் அந்த காற்றில்  வீசும் ஒரு விதமான வாசமும், இந்த தோப்பு என எல்லாமே ரம்மியமா இருக்கு...

பேசாமல் இங்கயே தங்கிடலாம் போல  இருக்கு.. இல்லையா அட்லீஸ்ட் மாதம் ஒரு முறையாவது இங்க வரணும்.. “என்று கண்கள் மின்ன சொன்னாள் பவித்ரா... அதை கேட்ட மரகதம்

“நீ  எப்ப வேணாலும் வரலாம் பவி மா.. இல்ல இங்கயே தங்கறதுனாலும் தங்கிக்கலாம்... இது உன் வீடு.. “என்று சிரித்தார்...

அவர் சொன்ன “உன் வீடு” என்பதில் கடுப்பான நந்தினி பவித்ராவை மட்டம் தட்ட எண்ணி

“அது எப்படி அத்தை இது  அவங்க வீடாகும்??.. அவங்க வீடு மாதிரி தான் ஆகும்... என் அக்காதான் இந்த வீட்டுக்கு சொந்தக்காரியாக்கும்.. “ என்று சிரித்துகொண்டே சொன்னாள் நந்தினி..

மரகதம் சிரித்து கொண்டே

“இல்ல நந்தினி... நான் சொன்ன மாதிரி இந்த வீடு பவித்ராவோடது தான்.. அவ்வளவு ஏன் இந்த தோப்பு, சுத்தி இருக்கிற எல்லா வயல்களும், இந்த பண்ணையும்  பவித்ராவோடது தான்..”என்றார் சிரித்து கொண்டே அடுத்து வரும் பிரளயத்தை அறியாமல்...

இதை  கேட்ட நந்தினி கண்களை சுருக்கி,

“புரியலையே... கொஞ்சம் புரியும் படியா சொல்லுங்களேன்..” என்றாள்..

இதுவரை  இவங்க உரையாடலில் கவனம் செலுத்தாத சரோஜா வும் இப்பொழுது ஆர்வமாக மரகதம் சொல்லும் பொழுது கவனிக்க ஆரம்பித்தாள்...

தான் வாய் விட்டு மாட்டி கொண்டதை அறியாமல், தான் சொல்ல போகும் செய்தியால் பல பிரச்சனைகள் வரப்போவதை அறியாமல் மரகதம் தொடர்ந்து பேசினார்..

“அதாவது பவித்ரா வோடதுனா அவளுக்கு சொந்தமான அவ புருஷனோடது... அதாவது இந்த வீடு, பண்ணை எல்லாமே நிஷாந்த் ஓடது.. அப்பனா அது பவித்ராவுக்கும் சொந்தமானது தான... “என்று சிரிக்க, அந்த செய்தி சரோஜாவுக்கும் நந்தினிக்கும் பெரும்  இடி விழுந்ததை போல இருந்தது.. தன்னை கட்டுபடுத்தி கொண்ட நந்தினி,

“அப்ப இதெல்லாம் உங்களோடது  ஐ மீன் என் சரவணன் மாமாவோடது இல்லையா?? “ என்றாள் தன் அதிர்ச்சியை மறைத்து கொண்டு...

“இல்லை நந்தினி... இதுக்கெல்லாம் சொந்தக்காரன் நிஷாந்த் தான்..உனக்கு முதல்ல இருந்து சொன்னாதான் புரியும்.. “ என்று நிறுத்தியவர் ஆதியின் பெற்றோர்களை பற்றி கூறலானார்...

நிஷாந்த்  ஓட  அப்பா வழி தாத்தாவோட சொந்த ஊர் தான் இது.. அவர் அந்த காலத்துல விவசாய நிலங்களில் கூலி வேலை செய்து வந்தார்..அவருக்கு தனக்கு சொந்தமாக நிலம் வாங்கி அதில் தானே விவசாயம் செய்யணும் என்று ஆசை..

அதுக்காக இரவு பகலாக உழைத்து  கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து தனக்கு சொந்தமாக நிலத்தை வாங்கி அதில் விவசாயம் செய்து வந்தார்.. அவரோட கடின உழைப்பால் விவசாயம் நன்றாக வளர்ந்து கிட்ட தட்ட ஒரு ஏக்கர் நிலத்தை தன் சொந்த உழைப்பால் வாங்கினார்...

தனக்கு பின் தன் பையனும் விவசாயத்திற்கு வரணும் என்று ஆசைபட, நிஷாந்த் அப்பாவிற்கோ இந்த விவசாயத்தில் ஆர்வம் இல்லாமல் போனது.. அவருக்கு பட்டணத்தில் போய் தான் வேலை செய்வேன் என்று அடம் பிடித்து சென்னைக்கு போய்ட்டார்...

சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில்தான் ஆரம்பத்தில் வேலை செய்தார்... பின் அவருடைய முயற்சியாலும் தொழில் செய்ய வேண்டும் என்ற வேகத்திலும் இரண்டு ஆண்டிலயே சொந்தமாக ஒரு  தொழிலை ஆரம்பித்து அதை வெற்றிகரமாக நடத்தி வந்தார்... அவர் எப்பயாவது தான் தன் தந்தையை பார்க்க வருவார்... 

நிஷாந்த் தாத்தாவும் என் அப்பாவும் பால்ய காலத்து சிநேகிதர்கள்.. என்  திருமணத்திற்கு வந்திருந்த நிஷாந்த் தாத்தாவிற்கு என் தங்கை வாணியை பிடித்துவிட, அப்பொழுதே எங்க அப்பாவிடம் வாணியை தன் பையனுக்கு திருமணம் செய்து வைக்க கேட்டார்...

என் அப்பாவும் சம்மதித்து விட அடுத்த முறை அவர் பையன் வந்த பொழுது வாணியை பற்றி சொல்லி பெண் பார்க்க அழைத்து வந்தார்... நிஷாந்த் அப்பாவிற்கு வாணியை பிடித்து விட அடுத்த முகூர்த்தத்திலயே திருமணம் நடந்தது... 

அவர் வாணியை கையோடு சென்னைக்கு அழைத்து சென்று விட்டார்...

என்னதான் பட்டணத்துக்கு போனாலும் வாணிக்கு எங்க கிராமத்தை போல இல்லை னு புலம்புவா... அதனாலயே மாதம் ஒரு முறை தன் கணவனை அழைத்து கொண்டு இந்த ஊருக்கு வந்து விடுவாள்..

இரண்டு நாட்கள் இங்க இருந்து இந்த காத்தை எல்லாம் சுவாசித்து விட்டு ஞாயிறன்று மாலை கிளம்பி செல்வர்... அவளுக்கும் விவசாயத்தில் ஆர்வம் அதிகம் என்பதால் நிஷாந்த் தாத்தா உடன் சேர்ந்து உதவி செய்வாள்..

நிஷாந்த் அப்பாவோட பிசினஸ் பெரியதாக வளர, அந்த லாபத்தில் ஒரு சிறு பங்கை வாணிக்கு கொடுக்க அவளோ அதை கொண்டு வந்து தன் மாமனாரிடம் கொடுத்து இன்னும் அருகில் இருந்த நிலங்களையும் வாங்க சொன்னாள்..

அந்த மாதிரி வாணியும் நிஷாந்த் தாத்தாவும் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி சேர்த்தது தான் இவ்வளவு பெரிய பண்ணையாக வளர்ந்து நிக்குது இப்போ...

நிஷாந்த் அப்பாவும் முதலில் மறுத்தாலும் வாணியின் ஆசையை புரிந்து கொண்டு அவருமே உதவ ஆரம்பித்தார்... எல்லாம் நல்ல முறையாக போய் கொண்டிருக்க, வாணி திருமணம் ஆகி 5 வருடம் ஆகியும் குழந்தை இல்லாததால் கவலை அடைந்தாள்...

நிஷாந்த் தாத்தா தான் கோவில் கோவிலாக சென்று அவளுக்காக பிரார்த்தனை பண்ணி பிரசாதம் கொண்டு வந்து தருவார்... அவளை ஒரு மகளாக பாவித்தார்.. வாணியுமே அவருக்கு ஒரு மகளாகத்தான் இருந்தாள்..

எல்லாருடைய பிரார்த்தனையாலும் வாணி உண்டாகி இருக்க, அவன் தாத்தாவுக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி... அவன் பிறந்ததும் அப்படி கொண்டாடினார்.. அவன் வளர்ந்து தவளும் நிலைக்கு வந்த பொழுது மீண்டும் வாணி இங்க வந்தாள். அதற்கப்புறம் ஒவ்வொரு மாதமும்  மூன்று பேருமே வந்து விடுவர்..

அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.. எனக்கு சரவணனும் ஜனனியும் குழந்தைகளாக இருக்க,  ஜனனி அப்பாவிற்கு விவசாயம் படுத்து விட அடுத்து என்ன செய்வது என்று யோசித்த நிலையில் தான் எங்களை இங்க வரவழைத்தாள் வாணி...

தாத்தாவிற்கு முன்பு மாதிரி முடியாததால் எங்களை அவர் அருகில் இருந்து பார்த்து கொண்டு இந்த பண்ணையையும் பார்த்துக் கொள்ளும் படி சொல்ல, நாங்களும் இங்கயே தங்கிட்டோம்..

எல்லா நல்லாதான் போய் கிட்டிருந்தது.. நிஷாந்த் ஐந்தாம் வகுப்பில் அடி வைக்க, அவன் அப்பா அவனை ஊட்டி கான்வென்ட் ல் சேர்த்தார். வாணி எவ்வளவோ மறுத்தும் அவன் வளர்ந்து தன் தொழிலுக்கு வாரிசாக வரணும் என்றும் அவனுக்கு தன்னம்பிக்கை தைரியம் வரணும் என்றும் அவனை ஊட்டியில் சேர்த்துவிட்டார்.

வாணிதான் ரொம்பவும் ஏங்கி போனாள்..அப்பவும் மாதம் ஒரு முறை போய் அவனை அழைத்து கொண்டு இங்க வந்து தங்கிவிட்டு செல்வர்..

ஒரு முறை அவனை பள்ளியில் விட்டு வரும் பொழுது அவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகி அந்த இடத்துலயே இருவரும் இறந்துவிட, அந்த செய்தியை கேட்டு நிஷாந்த் தாத்தாவும் அப்படியே மயங்கி விழுந்தவர் அவரும் பிறகு எழுந்திருக்கவே இல்லை... 

பலத்த அடி எங்களுக்கெல்லாம்..

அதன் பிறகு நிஷாந்த் எங்களோடவே இருக்க சொல்ல அவன் மறுத்துவிட்டு தன் படிப்பை ஊட்டியிலயே தொடர்ந்தான்.. “ என்று நிறுத்தி பெருமூச்சு விட்டார் மரகதம்..

அனைவருமே சில விநாடிகள் அமைதியாக இருந்தனர்.. பவித்ராவிற்கோ மனம் வலித்தது.. “அவ்வளவு சின்ன வயதில் பெற்றோர்கள் இருவரையுமே இழந்து எப்படி தவித்திருப்பான் .. “ என்று உருகியவள் மெல்ல ஆதியை பார்க்க அவனோ எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் தன் உணவை சாப்பிட்டு கொண்டிருந்தான்...

இதை  கேட்ட ஜனனி

“மா .. அப்ப நிஷா அண்ணா நினைச்சா இதெல்லாம் விற்றுவிட்டு சென்னையில் இன்னும் பெரிய தொழிலா ஆரம்பிக்கலாம் இல்லை... “ என்று தன் சந்தேகத்தை கேட்க, தன் கண்ணில் இருந்த நீரை துடைத்து கொண்ட மரகதம்

இல்ல ஜனனி.... அது முடியாது... இந்த இடம் எல்லாம் நிஷாந்த் தாத்தாவும் வாணியும் சேர்ந்து சம்பாதித்ததால் மற்றும் விவசாயம் அழிந்து விடக்கூடாது என்பதாலும் இருவரும் சேர்ந்து உயில் எழுதும் பொழுது இந்த வீடு நிலம் எல்லாம் நிஷாந்த் ம் அவனோட வாரிசுகளும் அனுபவித்து கொள்ளலாம்..

ஆனால் அதை யார்க்கும் விக்க முடியாது..  என்று எழுதி வைத்தனர்.. தங்கள் பிற்கால சந்ததியர் இந்த இடத்தை விற்று அழித்து விடக்கூடாது என்பதாலயே இந்த மாதிரி ஒரு ஏற்பாடு செய்தனர்... அதன்படி நிஷாந்த் இந்த இடத்தை அனுபவிக்கலாம் ஆனால் விக்க முடியாது...

அவன் வளர்ந்து தொழிலை கையில் எடுக்க நாங்கள் இந்த பண்ணையை அவனிடமே திருப்பி கொடுக்க அவனோ இதை எல்லாம் தனக்கு வேண்டாம் என்று எங்களையே பார்த்துக்க சொல்லிட்டான்.. ஆனால் இதில் வரும் லாபத்தில் 25%  மட்டும் அவன் அப்பா அம்மா பேரில் ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து அதில் போட சொல்லிட்டான்...

அந்த ட்ரஸ்ட் கூட சரவணன் தான் பார்த்துக்கறான்.. நிறைய பேருக்கு படிக்கவும் குறிப்பா விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு கடனாகவும் அன்பளிப்பாகவும் இந்த ட்ரஸ்ட் ல் இருந்து எடுத்து கொடுப்பான்... “என்று சொல்லி தன் கதையை நிறுத்தினார்..

“எங்க நிஷாந்த் எவ்வளவு தங்கமானவன்.. “ என்று அருகில் அமர்ந்திருந்த  அவன் தலையை வாஞ்சையுடன் தடவினார்.. அவனும் அவர் பக்கம் செல்லமாக சாய்ந்து கொண்டு

“போதும் பெரியம்மா.. என்னை பத்தி இவ்வளவு பெருமை அடிச்சிருக்க வேணாம்...  “என்று அவர் தலையில் முட்டி சிரித்தான்....

பின் அனைவரும் சாப்பிட்டு முடித்து எழுந்து செல்ல, அன்று இரவு சரோஜா தன் கணவனை வறுத்து எடுத்தாள்..

“இவ்வளவு கதை  பின்னால இருக்கு... ஏன் என்னிடம் சொல்லவில்லை.. ??  என்னை ஏமாற்றி கல்யாணம் பண்ணிகிட்டீங்க.. “ என்று மூக்கை உறிஞ்சினாள்

“நான் எப்ப இதெல்லாம் எங்களோடதுனு சொன்னேன் சரோ...இதெல்லாம் உங்க அப்பாவுக்கு முன்னாடியே தெரியுமே... அவர் உன்கிட்ட சொல்லலையா?? ஏன் சுத்தி இருக்கிற எல்லா ஊருக்குமே தெரியும் இந்த பண்ணை என் சித்தியோடதுனு... 

இப்பவும் இது நம்மளோடது மாதிரிதான்..இதில் வரும் அனைத்து லாபமும் நமக்கு தானே.. “என்று அவளை சமாதானம் செய்ய முயன்றான்..

“ம்ம்ம்ம்ம் நம்மளோடது  மாதிரிதான.. நம்மளோடது இல்லை இல்லையா.. நாளைக்கே இந்த நிஷாந்த் நம்மளை எல்லாம் வெளியில போக சொல்லிட்டா?? அப்ப என்ன பண்ணுவீங்களாம்?.. என்று கண்ணை கசக்கினாள்..

“ஹே .. அதெல்லாம் அவன் அப்படி செய்ய மாட்டான் டி..அவனை பத்தி எனக்கு நல்லா  தெரியும்...  நீ தேவை இல்லாமல் கவலை படற....”

“ஹ்ம்ம்ம்ம் யாருக்கு தெரியும்.. இந்த பண்ணையில வர்ற லாபத்தை பார்த்து அது தனக்கே வரணும்னு நினைச்சா?? மனுசங்க மனசு எப்ப வேணாலும் மாறும்..இப்ப வேணான்ற உங்க தம்பி  பின்னாடி தனக்கே வேணும்னு சொன்னா??  யாரையும் நம்ப முடியாது“  என்று தன் கணவனை முறைத்தாள் சரோ.. அதை  கேட்டு

“ஹா ஹா ஹா.. “என்று சிரித்தான் சரவணன்..

“போடி பைத்தியம்.. இந்த பண்ணையில வர்ற லாபம் எல்லாம் அவனோட தொழில்ல வர்ற லாபத்துல ஒரு  பெர்ஸன்ட் கூட கிடையாது... அவன் கோடியில் புரள்ற கோடிஸ்வரன்.. அவன் போய் சில லட்சம் லாபம் வர்ற இந்த பண்ணைக்கு ஆசை படுவானா?? “ என்று மீண்டும் சிரித்தான்.. அதை கேட்டு தன் வாயை பிளந்தாள் சரோஜா...

“என்னங்க சொல்றீங்க...  “ என்றாள் ஆச்சர்யமாக.. அவளுக்கு இந்த மாதிரி தன் மாமியாரோட தங்கச்சி பையன் சென்னையில இருக்கிறான்.. அவனை பார்க்க அப்பப்ப தன்  மாமியார் போய்ட்டு வர்றதும் அறிந்தது தான்.. ஆனால் அவன் இவ்வளவு வசதியா இருப்பான் என்று தெரியாது...

“ஹ்ம்ம்ம் அவன் சென்னை மட்டும் இல்ல பல நகரங்களில் அவனோட தொழில் இருக்கு...எல்லா வகையான தொழில்களும் அவன் கையில...  பல நகை கடைகளும், பெரிய பெரிய ஹோட்டல்களும், ஐடி கம்பெனிகளும் னு  பல தொழில்கள் வச்சிருக்கான்..

போன மாசம்கூட புதிதா ஒரு நகை  கடை  ஆரம்பிச்சானே.. அம்மா கூட போய்ட்டு வந்தாங்க இல்ல.. அது முழுக்க முழுக்க பவித்ரா தான் பார்த்துக்கிறா...

அதை எல்லாம் விட்டுட்டா அவன் இங்க வரப்போறான்.. போடி.. “ என்று சிரித்தான்..

அதை கேட்டு சரோஜா வாய் திறந்து நிக்க, அதை விட இதை  எல்லாம் வெளியில் நின்று கேட்டு கொண்டிருந்த நந்தினி  இன்னும் அதிர்ந்து நின்றாள்..

எதுவோ எடுக்க தன் அக்காவின் அறைக்கு வந்தவள் அவர்கள் ஆதியை பற்றி பேசிக் கொண்டிருக்கவும் அப்படியே மறைந்து நின்று அவர்கள் பேசியதை எல்லாம் ஒட்டு கேட்டாள்...

அவன் இந்த பண்ணைக்கு சொந்தக்காரன் என்பதுக்கே அசந்து நின்ற அந்த இரு பெண்களும்  அவன் அவ்வளவு பெரிய பணக்காரன்..  இல்லை கோடீஸ்வரன் என்று தெரிந்ததும் இன்னும் அதிர்ந்து நின்றனர்...

இத்தனை சொத்துக்கும் அந்த குட்டச்சி சொந்தக்காரி என்பதே இன்னும் அவர்கள் வயிறு எரிந்தது....தங்களை போல சாதாரண குடும்பத்தில் பிறந்தவள்.. அவ்வளவு ஒன்னும் பெருசா அழகி கூட  கிடையாது... அவளுக்கு போய் இப்படி ஒரு வாழ்வா?? ..”  என்று  பொறாமையில் பொசுங்கினர் இருவரும்

எப்படியாவது பவித்ராவை அகற்றி அந்த இடத்தில் தான் வரவேண்டும் என்று நினைத்தாள் நந்தினி.. ஏற்கனவே அவனிடத்தில் மயங்கி இருந்தவள் இப்ப அவன் வசதி தெரியவும் எப்படியாவது அவனை மயக்கி இந்த சொத்துக்கெல்லாம் தான் எஜமானி ஆக வேண்டும் என்று முடிவு செய்து மடமடவென்று யோசித்து தன் திட்டத்தை தீட்டினாள்...

ந்தினியின் மனதில் வந்திருக்கும் விஷத்தை அறியாமல் பவித்ரா கையில் பால் டம்லருடன் உற்சாகத்தோடு மாடி படிகளில் ஏறி கொண்டிருந்தாள்

 மரகதம் சொன்ன  கதையை கேட்டு அவன் மேல் பரிதாபம் வந்தது..

“சிறுவயதிலயே பெற்றோர்களை இழந்து எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பான்...ஆனால் அதை  கொஞ்சம் கூட  வெளியில் காட்டிக்கொள்ளாமல் எவ்வளவு அழகா அவன் வாழ்க்கையை அவனே நிர்ணயித்து இதுவரை எந்த சறுக்கலும் இல்லாமல் வளர்ந்து வந்திருக்கானே !!! “ என்று ஆச்சர்யமாக இருந்தது அவளுக்கு...

அதோட அவன்  காசுக்கு ஆசை படாமல் இந்த பண்ணை எல்லாம் மரகத்திடமும் தன் பெரியாப்பாவிடம் ஒப்படைத்து மேலும் மற்றவர்களுக்கு உதவுகிறான் என்று தெரிய எங்கயாவது ஒரு மூலையில் அவன் மேல இருந்த தப்பான எண்ணமும் ஓடி மறைந்து போனது அவளுக்கு...

என் கணவன் எவ்வளவு நல்லவன்..!!! எல்லாத்திலயும் எவ்வளவு திறமையா இருக்கான்.. ஒரு  சிறந்த ஆணிற்கான அத்தனை இலக்கணமும் அதையும் விட மேல  அவன் இருப்பதாக எண்ணி பெருமையுடனும் பூரிப்புடனும் மாடிப்படியில் தாவி ஏறி கொண்டிருந்தாள்...

அதோடு திருமணத்திற்கு பிறகு இருவரும் தனியாக இரவு வெளியில் தங்குவது இதுவே முதல் முறை..அன்று தன் அம்மா வீட்டில் நடந்த குளியல் அறை சம்பவம் நினைவு வர, அவள் கன்னங்கள் சிவந்தன... 

“ஐயோ... அவன் எதுவும் மீண்டும் வம்பு பண்ணுவானா?? அப்படி பண்ணினால் தன்னால் அதை எதிர்க்க முடியுமா??..”   என்று யோசித்தவாறு சிறு பயத்துடனும்,  அவன் அப்படி வம்பு செய்யமட்டானா??  என்று அவள் ஆழ்மனதில் அவளையும் அறியாமல் ஒளிந்துகொண்டிருக்கும் எதிர்பார்ப்புடனும் அவர்கள் அறைக்குள் நுழைந்தாள் பவித்ரா....




Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!