உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-42
அத்தியாயம்-42
காலையில் கண் விழித்த பவித்ரா வழக்கம்போல ஆதி அங்கு இல்லாமல் போக, எழுந்து குளியல் அறைக்குள்
சென்றாள்..
நேற்று இரவே
மரகதத்திடம் கேட்டு வாங்கி வைத்திருந்த கஸ்தூரி மஞ்சளை முகத்துக்கும் காலுக்கும்
தேய்த்து குளித்து முடித்து, அவளுக்கு பிடித்தமான புடவையை நேர்த்தியாக கட்டி,
ஈரம் சொட்டிய தலைக்கு ஒரு டவலை கட்டிகொண்டு
கீழ இறங்கி வந்தாள்...
அவள் கீழ இறங்கி
வரும் அழகை கண்டதும் மரகதம் அதிசயித்து நின்றார்...
“அப்படியே
என் தங்கை வாணி மாதிரி இருக்கே பவி
மா..காலங்காத்தாலயே மஞ்சள் தேய்ச்சு குளிச்சிட்டு அப்படியே அந்த மகாலட்சுமியே
நேர்ல வந்த மாதிரி இருக்க.. சரி வா..
சாமிக்கு விளக்கேற்றி வைத்து இன்னைக்கு உன் கையால பூஜை பண்ணு என்று அவளை பூஜை
அறைக்கு அழைத்து சென்றார்..
பவித்ராவும்
சிரித்து கொண்டே அவர் பின்னால் செ ன்று அவர் சொன்ன மாதிரி விளக்கேற்றி வைத்து
அங்கு இருந்த தன் மாமனார் மாமியார் மற்றும் ஆதியின் தாத்தாவை வணங்கினாள்...பின்
மரகதம் அவள் தலையை துவட்டி இரண்டு பக்கமும் முடி எடுத்து நடுவில்
முடிச்சிட்டு அவளுக்கு திருஷ்டி சுத்தினார்...
“உன்னை இப்படி
பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்கு.. இப்படி ஒரு மருமகள் கிடைக்க எங்க வாணி கொடுத்து
வச்சிருக்கணும்.. இதை எல்லாம் அவ நேர்ல இருந்து பார்க்க முடியாமல் போயிருச்சே..
அதுவும் உன்
குணம் அப்படியே அவ குணத்தை போலவே இருக்கு.. உன்னை எப்படி எல்லாம் கொண்டாடி
இருப்பா.. “ என்று தழுதழுத்தார்...
அவரின் அந்த
நெகிழ்வை கண்ட பவித்ரா வும் நெகிழ்ந்து
“அடடா... என்ன
அத்தை நீங்க இப்படி ஏமாளியா இருக்கீங்க.. உங்களை சீக்கிரம் எல்லாரும் ஏமாத்திடலாம்
போல இருக்கே.. “ என்று சிரித்தாள்..
மரகதம் ஒன்றும்
புரியாமல் அவளை பார்க்க, பவித்ராவே தொடர்ந்தாள்..
“என்னோட இந்த
கெட்டப்பை எல்லாம் பார்த்து நான் ஒரு குடும்ப குத்து விளக்குனு தப்பு கணக்கு
போட்டுட்டீங்களே அத்தை.. இதெல்லாம் சும்மா... ஒருநாள் முதல்வன் மாதிரி ஒரு நாள்
கிராமத்து மருமகளா இருக்கணும் னு ஆசை...
அதான் இப்படி.. “ என்று தன் தோற்றத்தை கை விரித்து காட்டி சிரித்தாள்.. பின் அவர்
காதருகில் குனிந்து
“உண்மைய
சொல்லனும்னா, உங்க பையன்
காலைல எழுந்து ஆபிஸ்க்கு போன பிறகுதான் நான் படுக்கையில் இருந்தே
எழுந்திருப்பேனாக்கும்.. அதனால காலையில் சீக்கிரம் எழுந்திருச்சு குளிச்சிட்டு, தலையில துண்டை சுத்திகிட்டு வீட்டுக்கு சாம்பிராணி போட்டு உங்க பையன் காலை
தொட்டு கும்பிட்டு அப்புறம் அவரை எழுப்பி காபி கொடுக்கிற தங்கமான மருமகளா என்னை
நினைச்சுக்காதிங்க...
நமக்கு
அதெல்லாம் செட் ஆகாது.. சோ ரொம்ப பீலிங்க்ஸ் ஆகாதிங்க அத்தை.. உங்க தங்கச்சி கிட்ட
சொல்லி வைங்க அவங்க மருமகள் மாடர்ன் மருமகதானு.. “ என்று கண்ணடித்தாள்.. அவளின்
அந்த குறும்புத்தமான பேச்சை கேட்ட மரகதம்
“வாயாடி...
உன்னை வச்சு எப்படிதான் எங்க நிஷாந்த் சமாளிக்கிறானோ ?? “ என்று அவள் காதை பிடித்து
திருகினார்....
அதற்குள்
எழுந்து வந்த ஜனனி பவித்ராவை மேலும் கீழும் பார்த்து விட்டு
“இது யாருமா?? புதுசா இருக்கு.. நம்ம வீட்டுக்கு வேலைக்கு சேர்த்திருக்கியா?? ஆமா சென்னையில் இருந்து வந்திருக்கிற என்னோட பவித்ரா அண்ணி எங்க?? “என்று முகத்தை சீரியசாக வைத்து
கொண்டு கேட்க
“ஹே ஜனி.. என்ன
காலையிலயே மப்புல உளர்ற.. குத்து கல்லாட்டம் நிக்கற நான் உன் கண்ணுக்கு தெரியலை?? “ என்று முறைத்தாள் பவித்ரா..
“ஹலோ... நீங்க
யார்?? ... இப்படி மஞ்சாத்தா மாதிரி
இருக்கீங்க.. எங்க பவி அண்ணி எப்படி மாடர்னா இருப்பாங்க தெரியுமா?? “என்று நக்கல் அடித்தாள் ஜனனி..
“ஐயோ .. நான் தான் டி .. அது.. இரு இப்ப உனக்கு புரிய
வைக்கிறேன்.. “ என்று அவள் காதை பிடித்து
திருக
“ஆ....
வலிக்குது... இது அப்படியே பவி அண்ணி
திருகற மாதிரிதான் இருக்கு... அப்ப நீங்க நிஜமாவே பவி அண்ணிதானா?? .” என்று மேலும் கீழும் அவள் மீண்டும் உத்து
பார்க்க அதை கண்டு பவித்ரா அவளை முறைத்தாள்...
“ஹ்ம்ம்ம்
என்னாச்சு அண்ணி ?? ஒரே நாள் ல இப்படி ஆளே மாறிட்டீங்க.. அப்படி என்னாகியிருக்கும்?? “ என்று தன் கன்னத்தில் கை வைத்து யோசித்தவள்
“ஆங்
கண்டுபிடிச்சுட்டேன்... மா... அண்ணிக்கு ஏதோ பேய் அடிச்சிருக்கு.. நேற்று நாங்க
இரண்டு பேரும் தோப்புல சுத்திகிட்டு இருந்தோம் இல்ல.. அப்ப அண்ணி ஏதாவது ஒரு மண்டை
ஓட்ட மிதிச்சிருப்பாங்க.. உடனே அந்த மண்டைக்கு சொந்தக்கார பேய் அண்ணிய
புடிச்சிகிச்சு...
இப்படி மஞ்சளா
தேய்ச்சு குளிக்கிற பேய் யாரா இருக்கும் ?? “ என்று மீண்டும்
யோசித்தவள்
"ஆங்.. இது
நம்ம கோயிலுக்கு முன்னாடி பூ வித்துகிட்டிருந்த கண்ணம்மா வோட பேய்தான்.. அவங்கதான் எப்பவும் இப்படி மஞ்சளை
தேய்ச்சுக்குவாங்க.. ஆனால் அவங்க ரொம்ப சாப்ட் ஆச்சே.. இப்படி வயலன்ட் ஆ அட்டாக்
பண்ண மாட்டாங்க..
அப்ப மஞ்ச
தேய்ச்சு குளிக்கிற வேற பேய் யார்..” என்று மீண்டும் சீரியஸாக யோசித்தவள்
“ஆங்.. இந்த முறை கரெக்டா கண்டு பிடிச்சுட்டேன்....
இது காஞ்சனா பேய்தான்... அதுதான் மஞ்சள அள்ளி தேய்ச்சுகிட்டு நெத்தியில பெரிய
பொட்டா வச்சுகிட்டு... என்று பேசியவள் பவியின் நெற்றியை பார்க்க, சற்றுமுன் பூஜை செய்து
குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்திருக்க அது கரைந்து கொஞ்சம் பெரிதாக
வந்திருக்க, அதை கண்ட ஜனனி
“ஆஹா...
கன்பார்ம் ஆ இது காஞ்சனா பேய்தான்...
ஐயயோ.. அந்த
பேய் நம்மள துரத்தி துரத்தில்ல அடிக்கும்... அதுவும் அந்த குட்டிபையன் பேய் சிக்கனை
எடுத்து வாயில வச்சுகிட்டு
“சிக்கன்
சாப்டிட்டு சுச்சா போகவா.. இல்லா சுச்சா போய்ட்டு
சிக்கன் சாப்பிட வா..” னு மிரட்டற
டயலாக் மறக்கவே முடியாது...
அண்ணி...
நீங்களும் அது மாதிரி எதுவும் பண்ணிடாதிங்க.. நான் எதுவும் தப்பு பண்ணி இருந்தால்
பேசி தீர்த்துக்கலாம்.. நீங்க பாட்டுக்கு கோவை சரளாவையும் அவங்க மருமகளையும்
புரட்டி போட்டு மேல தொங்க விட்ட மாதிரி எங்க இரண்டு பேரையும் பண்ணிடாதிங்க... “
என்று பயந்தவளாக நடித்து காட்ட,
அதை கண்டு சிரித்துகொண்டே
“இரு டீ..
நிஜமாலுமே காஞ்சனாவை காமிக்கறேன்.. இப்ப.. “ என்று பவித்ரா அடிக்க வர அதற்குள்
ஜனனி ஓட பவித்ரா அவளை துரத்தி கொண்டே ஓட, இருவரையும் கண்டு
மரகதம் வாய்விட்டு சிரித்தார்....
அவரின் சிரிப்புக்கு
இணை சிரிப்பாக மற்றொரு பெண்ணின் சிரிப்பும் கேட்க மரகதம், ஜனனி மற்றும் ஜனனியை துரத்தி
சென்ற பவி என மூவரும் ஒரே நேரத்தில் திரும்பி பார்க்க, சமையல்
அறையின் சன்னல் வழியே வெளியில் நந்தினி ஆதியுடன் நெருக்கமாக நின்று கொண்டு
சிரித்து கொண்டிருந்தாள்...
அப்பொழுது தான் தூங்கி எழுந்திருப்பாள் போல..
இரவு அணிந்திருந்த நைட்டியை கூட மாற்றாமல், முகத்தை மட்டும் கழுவி கொண்டு தலையை கூட ஒதுக்காமல் அப்படியே
எழுந்து வந்திருந்தாள் நந்தினி....
ஆதியும் கை
இல்லாத டைட்டான டீசர்ட் ம் தொடைக்கு சற்று
மேல ஏறிய ட்ராயரும் அணிந்து ஜாகிங் ஓடிகொண்டிருந்தவன் அப்பொழுதுதான்
நின்றிருப்பான் போல..
அவன் ஓடிய
வேகத்திற்கு அவனின் பரந்த மார்பு விரிந்து சுருங்க, அவன் அணிந்திருந்த பனியனுக்கு வெளியே
தெரிந்தது அவன் ஆண்மை.. எந்த பெண்ணையும் வசீகரிக்கும் தோற்றத்தில் இருந்தான்..
ஒரு விநாடி தன்
கணவனை ரசித்தவள் அவன் அருகில் நெருக்கமாக நின்று கொண்டிருந்த நந்தினியை மீண்டும்
காண, இப்பொழுது அவள் அணிந்திருந்த அந்த ட்ரெஸ்
அவ்வளவு சரியானதாக பட வில்லை பவித்ராவிற்கு..
அவள் முகத்தில்
ஒரு அருவருப்பும் ஏதோ ஒரு சொல்ல முடியாத
உணர்வு வந்து போக,
அதே நொடி ஆதியும் பவித்ராவின் முகத்தில்
வந்த மாற்றத்தை கண்டு கொண்டான்...
நந்தினியுடன்
பேசி கொண்டிருந்தாலும் அவன் கண்கள், காலையிலயே குளித்து முடித்து தன் ஈரக் கூந்தலை தழைய விட்டு
அதுவும், இன்று முகத்தில் மஞ்சள் ஜொலிக்க, பனியில் நனைந்த மஞ்சள் ரோஜாவாக
மரகதத்திடம் சிரித்து பேசி கொண்டிருந்தவளையே
ஓரக்கண்ணால் ரசித்து பார்த்து கொண்டிருந்தன..
நந்தினி
சிரிப்பதை கண்டு திரும்பிய தன் மனைவியும் தன்னை கண்டு ரசித்ததை கண்டு கொண்டவன் பார்வை மீண்டும் அவளை ரசனையுடன்
விழுங்கி கொண்டிருக்கையில் தான் அவள் முகத்தில் வந்து போன முக சுளிப்பையும் கண்டு
கொண்டான்..
“ஏன் அவள் பார்வை அப்படி மாறியது ?? “ என்று அவசரமாக ஆராய்ந்தவன்
அப்பொழுதுதான் தன் அருகில் நின்று கொண்டிருந்த
நந்தினி நினைவுக்கு வந்தாள்..
“ஓ.. இவளை
பார்த்துதான் அவ பொறாமை படறாளா?? அப்ப அவ மனசுல உண்மையிலயே என்
மேல அன்பு இருந்தால் நான் நந்தினியிடம்
பழகுவதை பிடிக்காமல் என்னிடம் சண்டைக்கு வருவாள்..
அதை வைத்தே அவள்
வாய் வழியாக உண்மையை வரவழைக்க வேண்டும்.. “ என்று எண்ணியவன் பவித்ராவின் பொறாமையை
எப்படி தூண்டுவது என்று யோசித்து
அவசரமாக ஒரு திட்டத்தை தீட்டினான்..
பாவம் அவன்
அறிந்திருக்கவில்லை.. தன் திட்டத்தால் தனக்கே அவன் குழி வெட்டுவதை....
ஒரு விநாடி
பவித்ராவின் முகத்தில் நந்தினி மேல் வெறுப்பு, எரிச்சல் வந்ததோ அடுத்த நொடி தன்னை சாதாரணமாக்கி கொண்டு மரகதத்திற்கு சமையலில் உதவி செய்தாள்...
ஜனனி அந்த
நந்தினியை கண்டு முறைத்து கொண்டிருந்தாள்.. பவித்ரா கண்ணால் அவளை சும்மா இருக்க
சொல்ல, அவளால் தாங்க முடியாமல்
மனதுக்குள்ளயே நந்தினியை அர்ச்சனை செய்து கொண்டிருந்தாள்..
மரகதமும் நந்தினியை கண்டு
“எப்பவும் 10
மணிக்கு மேல எழுந்திருக்கிற பொண்ணு இன்னைக்கு ஏன் இவ்வளவு சீக்கிரத்தில்
எழுந்திருச்சு வந்தா..?? “ என்று யோசித்தார்...பின் தன்
யோசனையை விட்டு சமையலை தொடர்ந்தார்...
அவர் இன்னும்
கொஞ்சம் ஆழ்ந்து யோசித்திருந்தால் பின்னால் வரப்போகும் விபரீதத்தை தடுத்து
இருந்திருக்கலாம்....
மரகதம் சமையலை
முடித்து பின் முன்று பேரும் டைனிங் டேபிலில் எடுத்து வந்து வைக்க, ஆதி அதற்குள் தன் ஓட்டத்தை
முடித்து மேல சென்று குளித்து விட்டு கீழ வந்தான்..
அவன் வரவும் அதே
நேரம் நந்தினியும் தன் அறையில் இருந்து அவசரமாக வெளியில் வந்தாள்.. அவளும்
குளித்து விட்டு தாவணி பாவாடை அணிந்து கொண்டு வந்தாள்.. இடையில் தாராளமாக இடைவெளி
விட்டு அவளின் இடை முழுவதும் அப்படியே தெரியுமாறு அந்த தாவணியை கட்டி இருந்தாள்..
அவளின் அந்த
கோலத்தை கண்டு மூவரும் முகம் சுழித்தனர்.. சரோஜாவும் தன் தங்கையின் உடையையும் அவள்
கட்டி இருந்த விதத்தையும் கண்டு கண்ணால் அவளை ஜாடை காட்டி என்ன இது என்று கேட்க, நந்தினியும் அவளுக்கு கண்ணால் ஏதோ சைகை
செய்தாள்..
சதாசிவமும்
சரவணனும் காலையிலயே வெளியில் வேலை இருப்பதாக கிளம்பி சென்றிருக்க, மற்றவர்கள் காலை உணவிற்காக
அங்கு வந்தனர்..
வழக்கம் போல
நந்தினி ஓடி சென்று ஆதியின் பக்கத்தில் அமர்ந்து கொள்ள, பவித்ராவும் ஜனனியும் மறுபக்கம்
அமர்ந்து கொண்டனர்..
உணவு உண்ணும்
பொழுது நந்தினி வேணும் என்றே அவனிடம் நெருங்கி அமர்ந்து அவனை தொட்டு தொட்டு பேச
ஆதியும் அவளிடம்
“நன்ஸ் .” என்று
குழைந்தான் பவித்ராவை ஓரக் கண்ணல் பார்த்து கொண்டே...
நேற்று அவளிடம்
சாதாரணமாக பேசிய தன் கணவன் இன்று வேண்டும் என்றே அவளிடம் குழைவதை கண்டவள் ஒரு நிமிடம் கண்ணை மூடி அவள்
அறிவை கொண்டு யோசிக்க நொடியில் ஆதியின் திட்டம் புரிந்தது..
அவளை வெறுப்பேத்துவதற்கு
தான் அவன் நந்தினியிடம் கொஞ்சுகிறான் என்று புரிந்து விட
“திருடா...
உன்னோட இந்த மொக்க ப்ளானை எத்தன படத்துல
பார்த்திருக்கேன்.. நீ என்னை வெறுப்பேத்தறயாக்கும்... உன் திட்டம் எல்லாம் இந்த
பவித்ரா கிட்ட பலிக்காது.. “ என்று மனதுக்குள் சிரித்தவள் தன் முகத்தை இன்னும்
சிரித்த முகமாக வைத்து கொண்டு அவர்களை தவிர்த்து வேண்டும் என்றே ஜனனியிடம்
கதை அடித்தாள்..
இவர்களின்
நாடகத்தை புரியாத ஜனனிதான் மனதுக்குள் குமுறி கொண்டிருந்தாள் அந்த நந்தினியின்
செய்கையால்..
“இவர்களை எப்படி
பிரிப்பது??.. இவளிடம்
இருந்து தன் அண்ணனை எப்படி காப்பாற்றுவது?? “ என்று தன் மூளையை கசக்கி யோசித்து ஒரு ஐடியா
வர, முகம் பிரகாசமானது...
“நிஷா அண்ணா...
நாங்க இன்னைக்கு தோப்புக்கு மற்ற இடத்தை எல்லாம் பார்க்க போறோம்.. நீங்களும் எங்க
கூட வாங்க.. நேற்றே நிறைய பேர் உங்களை பார்க்கணும்னு கேட்டாங்க.. “என்றாள்
நந்தினியை ஓரக் கண்ணால் பார்த்தவாறு..
“ஓ ஸ்யூர் வாலு.
நானு உங்க கூட வர்ரேன்.. எனக்கும் இங்க போரடிக்கும்.. “ என்ற உடனே நந்தினியும்
“மாமா... நானும்
உங்க கூட வரவா?? “என்றாள்
தலையை சரித்து கொஞ்சும் குரலில்..
அவள் சொன்ன
மாமாவில்,
“என்னது மாமாவா?? “
என்று அதிர்ந்தனர் ஜனனியும் பவியும்... அதற்குள் அவள் சரவணனை மாமா என்று
தானே அழைக்கிறாள்.. அப்ப அவருடைய தம்பியும் மாமா முறைதான வரும்.. அதனால் அப்படி
கூப்பிடுகிறாளாக்கும்.. “ என்று பவித்ரா தனக்குதானே ஒரு விளக்கத்தை கொடுத்து
கொண்டாள்..
அதை கேட்ட ஆதி ,
“ஓ யெஸ்.. நன்ஸ்
டார்லிங்.. நீ இந்த மாமா கூடவே வரலாம்.. “
என்று கூடவே என்பதை அழுத்தி சொன்னான் பவித்ராவை ஓரக்கண்ணால் பார்த்து
கொண்டே மனதுக்குள் சிரித்துகொண்டு...
பவித்ராவோ அவனை
கண்டு கொள்ளவே இல்லை.. தன் உணவில் கவனத்தை செலுத்தி சாப்பிட்டு கொண்டிருந்தாள்
வேண்டும் என்றே...
ஆதியின்
டார்லிங் என்ற அழைப்பில் நந்தினி தலை சுத்தி போனாள்.. நேற்று இரவு அவள் திட்ட
மிட்ட படி அவனை எப்படி மயக்குவது என்று யோசித்து தன் அழகை காட்டி தான்
மயக்கவேண்டும் என்று முடிவு செய்து தான் அவள் இதுவரை ஆடி வருகிறாள்..
அவள்
எதிர்பார்த்த மாதிரியே ஆதியும் அவளிடம்
கொஞ்சி பேசவும் அவளிடம் மயங்கிதான் கொஞ்சுகிறான் என்று தப்பு கணக்கு போட்டாள்..
எப்படியோ தன் திட்டம் சீக்கிரம் நிறைவேறிடும் போல.. இவ்வளவு சுலபமா இவன் தன்
பக்கம் வருவான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை....
பாவம் அவள்
அறியவில்லை ஆதிக்கும் பவிக்கும் இடையில் நடந்து கொண்டிருக்கும் ஆட்டத்தை..
பவித்ராவை வெறுபேத்த தான் அவளிடம் நடிக்கிறான் என்று..
பின் அனைவரும் சாப்பிட்டு முடித்து அவர்கள் முடிவு
செய்த மாதிரி தோப்பிற்குள் நுழைந்தனர்.. சிறிது தூரம் நால்வரும் பேசிகொண்டே வர
கொஞ்ச தூரம் சென்றதும் ஆதியும் நந்தினியும் வேண்டும் என்றே கொஞ்சி பேச, அவர்களை முன்னால் விட்டு
பின்னால் நடந்து கொண்டிருந்த ஜனனி பல்லை கடித்தாள்..
வந்தது என்னவோ
நான்கு பேர் என்றாலும் அவர்கள் இருவர் மட்டுமே பேசி இல்லை கொஞ்சி கொண்டு வர,, ஜனனிதான் உள்ளுக்குள் பொருமி கொண்டிருந்தாள்..
பவித்ராவோ எதுவும் கண்டு கொள்ளாமல் அவள் பாட்டுக்கு அங்கு இருந்த மரங்களை ரசித்து
கொண்டிருந்தாள்..
சிறிது தூரம்
நடந்ததும் பெரிய தொட்டியில் பம்ப்செட் ல்
இருந்து நீர்கொட்டி கொண்டிருக்க, அடுத்த நிமிடம் பழைய ஞாபகத்தில் ஆதி அதில் குதித்து
இருந்தான்..
குதித்தவன்
அனைவரையும் உள்ளே குதிக்க சொல்ல,
பவித்ரா தனக்கு தண்ணியில கண்டம் என்று அந்த
ஆழமான தொட்டியின் அருகில் செல்ல பயந்து மறுத்து விட, ஜனனியும் பவித்ராவுடன் துணைக்கு நின்று
கொண்டாள்..
ஆதி உள்ளே
குதித்ததும் அந்த பெரிய தொட்டியில் லாவகமாக நீந்திக் கொண்டிருக்க அவன் நீந்தும்
அழகை யே ரசித்து பார்த்தாள் பவித்ரா..
சிறிது
நேரத்தில் அவர்கள் அருகில் நின்றிருந்த நந்தினியும் தொட்டிக்குள் குதித்திருக்க
மற்ற இரு பெண்களுக்கும் அதிர்ச்சியானது...
தொட்டியில்
குதித்தவள் வேண்டும் என்றே ஆதியின் தோளை
பிடித்து அவனுடன் நீந்த கொஞ்ச நேரத்தில் அவர்களின் கொஞ்சலை சகிக்க முடியாமல் ஜனனி
பவித்ராவின் கையை பிடித்து இழுத்து கொண்டு சென்றாள் மறுபக்கம்....
பம்ப்செட்டில்
இருந்து கொஞ்ச தூரம் தள்ளி வந்ததும்
பவித்ராவின் கையை விட்டவள் பொரிய ஆரம்பித்தாள்..
“என்ன அண்ணி?? இப்படி ஏமாளியா இருக்கீங்க..
அந்த நந்தினி வேணும்னே அண்ணாகிட்ட உரசறா... நீங்களும் வேடிக்கை பார்த்துகிட்டு சும்மா
நிக்கறீங்க...
அவ கனனத்துல
ஓங்கி ஒரு அறை விட்டா அடுத்த நிமிடம் அவ
அண்ணா கிட்ட வருவாளா?? எல்லாம் நீங்க கொடுக்கிற இடம்..
இந்த அண்ணனுக்கு அறிவு எங்க போச்சோ..?? அவள் எல்லாம் ஒரு
மூஞ்சினு அவ கூட இளிச்சுகிட்டு இருக்கார்... “
என்று மூச்சு விடாமல் பொரிந்து தள்ளினாள்..
அவளின்
கோபத்தையும் படபடப்பையும் விடைத்த மூக்கையும் கண்ட பவித்ராவுக்கு அப்படியே தன்னை
பார்ப்பதை போல இருந்தது.. முன்பு தானும் இப்படி தான் கோபப்படுவது நினைவு வந்தது..
திருமணத்திற்கு பிறகு அது எங்க போச்சு??
இப்பல்லாம் ஏன்
எனக்கு கோபம் வரமாட்டேங்குது?? என்று யோசித்தாள் பவித்ரா..
அதற்குள் ஜனனி
இன்னும் தன்னையே பார்த்து கொண்டு நிக்க,
“இவளுக்கு எனன
சொல்லி புரிய வைப்பது?? .. இது எல்லாம் அவள் அண்ணன் என்னை
வெறுப்பேத்த நடிக்கும் நாடகம்
என்று சொன்னால் எதுக்கு வெறுப்பேத்தனும் என்று சொல்ல வேண்டி இருக்கும்...
பின் தங்கள் முழு கதையையும் சொல்ல வேண்டி இருக்கும்.. “ என்று யோசித்தவள்..
“ஹ்ம்ம்ம்
உங்க அண்ணா இவ மாதிரி எத்தன பொண்ணுங்களை பார்த்திருப்பார்... அவருக்கு தெரியாதா?? யாரை எங்க வைக்கணும்னு.. “ என்று ஏதோ சொல்லி சமாளித்தாள்...
“ஆனாலும் அண்ணி, அவ என்னவோ திட்டத்தோட இருக்கா…நீங்க எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க..
“
“அவ என்ன
திட்டம் வேணா போடட்டும் ஜனி .. என் புருஷனை பத்தி எனக்கு தெரியும்.. யாரும் அவர் கிட்ட நெருங்க
முடியாது...
அதனால நீ இந்த
டென்ஷன விட்டு பிரியா இரு ...” என்று சிரித்தாள் பவித்ரா..
“என்னவோ போங்க
அண்ணி... எனக்கு மனசே கேட்களை.. நீங்க எப்படித்தான் இப்படி கூலா சிரிச்சுகிட்டே
இருக்கீங்கனு தெரியலை... “என்று புலம்பி
கொண்டே சிறிது தூரம் சென்றவர்கள் பின் நேற்று பார்க்காத மீதி இடத்தையும் சுற்றி
பார்க்க பவித்ராவிற்கு நேற்றைய உற்சாகம்
மீண்டும் வந்து ஒட்டிகொள்ள அவளின் உற்சாகத்தை கண்டு ஜனனியும் கொஞ்சம் கொஞ்சமாக
அவளுடன் இணைந்து குதிக்க ஆரம்பித்தாள்....
இருவரும் அரட்டை
அடிச்சுகிட்டே அந்த தோப்பு முழுவதும் சுற்றிய பின் பவித்ரா ஊருக்குள் போக வேண்டும்
என்று சொல்ல ஜனனி அவளை அந்த
கிராமத்துக்குள் அழைத்து சென்றாள்...
நகர சூழலில் இருந்தவளுக்கு அந்த கிராமத்தின்
வீடுகளின் அமைப்பும் அங்கு நிலவிய அமைதியும் ஒவ்வொரு வீட்டின் முன்பும் கலர் கலராக
பூத்திருந்த கோலங்களும் கண்ணை பறித்தது...
அதுவும்
திருவிழாவுக்காக அங்கங்கு வேப்பிலை தோரணம் கட்டியிருக்க, மைக் செட்டில் அம்மன் தொடர்பான
திரைப்பட பக்தி பாடல்கள் ஒலித்து கொண்டிருந்தன... மக்கள் எல்லாரும் ஒரு வித சந்தோசத்துடன்
வழைய வந்தனர்...
ஜனனி பவித்ராவை
தன் தோழி ஒருத்தி வீட்டிற்கு அழைத்து சென்றாள்.. அவளும் ஜனனியை கண்டதும் கட்டி
பிடித்து கொள்ள பின் பவித்ராவை வீட்டிற்குள் வரவேற்றாள்.. அந்த தோழியின் பெற்றோர்கள்
பவித்ராவை அடையாளம் கண்டுகொண்டு
“நீதான் அந்த
பண்ணை வீட்டு மருமகளா மா?? அப்படியே உன் மாமியார் மாதிரியே
இருக்க.. வாணியம்மாவுக்கு இந்த ஊர் னா
அவ்வளவு உசுரு..இந்த ஊருக்காக நிறைய செஞ்சிருக்காங்க... அதான் அவங்க போன பின்னாடியும் உன் புருசனும்
அவங்க உதவின மாதிரியே மத்தவங்களுக்கு உதவற நல்ல குணம் போல...
நாங்க இன்னைக்கு
இந்த ஊர்ல தலை நிமிர்ந்து நிக்கறம்னா அதுக்கு உன்
புருஷன் ஒரு விதத்துல காரணம்.. “ என்று தழுதழுத்தார் அந்த பெரியவர்...
பவித்ரா அவர்
என்ன சொல்றார் என்று புரியாமல் முழிக்க அவரே தொடர்ந்தார்...
“மூனு வருசம்
முன்னாடி எங்க விவிசாயம் படுத்திருச்சு.. முட்டுவலிக்கே பணம் இல்லை... சரி
எல்லாரும் பேங்க் ல லோன் வாங்கி விவசாயம் பண்றாங்களேனு நானும் போய் பேங்க் ல லோன்
வாங்கி பயிர் செஞ்சேன்...
ஆனா அந்த வருசம் பேஞ்ச மழையில எல்லாம் அடிச்சுகிட்டு
போயிருச்சு.. போட்ட பணத்தை கூட எடுக்க
முடியல.. பேங்க் காரங்க வேற வாசல்ல வந்து நிக்கறாங்க.. என்ன பண்றதுனே தெரியல...
பேசாம குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலாம்னு கூட தோணிச்சு..
அப்பதான் ஜன்னி
பொண்ணு உங்க மாமியார் மாமனார் பேர்ல
ஏதொ ஒரு ட்ரஸ்ட் வச்சு எங்கள
மாதிரி முடியாதவங்களுக்கு பணம் கொடுக்கிறதா சொல்லுச்சு.. அப்பதான் சரவணன் தம்பிய
போய் பார்த்தேன்..
அவரும் உடனேயே
பணத்தை கொடுத்து மீண்டும் விவசாயம் பண்ணுங்க..
இந்த வருஷம் நல்லா வரும்..நீங்க இதுக்கு வட்டி தரவேணாம்....நீங்க போட்ட
பணத்தை எடுத்த பிறகு கொஞ்சம் கொஞ்சமா கொடுத்தா போதும்... துணிஞ்சு விவசாயம்
பண்ணுங்க... எங்க சித்தி கூட இருந்து
பார்த்துக்குவாங்க னு அறுதல் சொல்லி
அனுப்பிச்சார்..
அந்த பண்ணை
வீட்டு வாணி அம்மா கையில யே பணத்தை வாங்கின மாதிரியே இருந்தது.. எனக்கு அப்பயே
நம்பிக்கை வந்திருச்சு இந்த வருசம் நல்லா வரும்னு.. அத வச்சு புது முறையில பயிர்
பண்ணவும் நல்ல விளைச்சல் அந்த வருசம் தாயி..
என் பேங்க் லோன் எல்லாம் கூடஅடச்சுட்டேன்..என் பொண்ணுக்கு
கல்யாணத்துக்கு கூட நகை எல்லாம் வாங்கி வச்சுட்டேன்... இப்படி நிறைய பேருக்கு உன் புருஷன் தான் மறைமுகமா
உதவறார்....
அதோட சரவணன்
தம்பியும் நிறைய விசயங்களை எங்களுக்கு எடுத்து சொல்லும்..புதுசு புதுசா கருவிகளை
கொண்டு வந்து கொடுத்து அதை எப்படி
பயன்படுத்தறது.. அப்புறம் விளைஞ்ச பொருட்கள எப்படி நேரடியா விக்கறது னு அப்பப்ப
எங்களுக்கு எடுத்து சொல்லுவார்...
இந்த ஊரே
இவ்வளவு செழிப்பா இருக்குனா அதுக்கு சரவணனும் உன் வீட்டுக்காரரும் தான் காரணம்
தாயீ..
நீ உன் புருஷனோட
சந்தோஷமா இருக்கணும்.. அடிக்கடி இங்க வரணும்....”
என்று வாழ்த்தினார்..
அதை கேட்டதும்
பவித்ராவுக்கு தன் கணவன் மேல் இன்னும் மதிப்பு கூடியது.. அவர் சொல்ற மாதிரி இந்த
பண்ணை லாபத்தை எல்லாம் கூட அவனே எடுத்துகிட்டு தன் பெரியம்மா குடும்பத்திற்கு
வெறும் மாத சம்பளம் மட்டும்
கொடுத்திருக்கலாம்... அட்லீஸ்ட் அந்த 25%
லாபத்தை யாவது அவன் தொழிலில் முதலீடு செய்திருந்தால் இன்னும் பல மடங்காக பெருக்கி
இருக்கலாம்..
அதெல்லாம்
விட்டு அதை இந்த மாதிரி கஷ்ட படற மக்களுக்காக விட்டு கொடுத்திக்கானே.. பெரிய ஆள்
தான்.. “ என்று பெருமையாக இருந்தது அவளுக்கு...
அதோடு தன்
மாமியார் விட்டு சென்ற பணியை தான் தொடர வேண்டும்... மாதம் ஒரு முறையாவது
எப்படியாவது தன் கணவனை இங்கு இழுத்து வந்து விட வேண்டும் என்று முடிவு செய்தாள்..
தன் கணவனை பற்றி
மனம் நிறைந்த பூரிப்பில் மற்ற இடங்களையும் சுற்றி பார்த்து விட்டு மாலை 5 மணி
அளவில் வீட்டிற்கு திரும்பினர் இருவரும்....
ஜனனி தன்
அறைக்கு சென்று விட,
பவித்ராவுக்கு தன் கணவனை இப்பயே பார்க்க வேண்டும் போல இருக்க, தன் சேலை முந்தானியை கையில் சுழற்றியவாறு மாடி படியில் துள்ளலுடன்
ஏறினாள்...
அவர்கள் அறையை
அடைந்ததும் கதவு கொஞ்சம் இடைவெளி விட்டு மூடியிருக்க, மெல்ல கதவை திறந்தாள்...
திறந்ததும் அவள்
பார்வை ஆர்வத்துடன் உள்ளே செல்ல அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்... தான்
பார்ப்பது உண்மை தானா என்று மீண்டும் ஒரு முறை உற்று பார்க்க, அங்கு அவள் கணவன் ஆதி, நந்தினியை அணைத்தவாறு கட்டிலில்
மிக நெருக்கமாக இருந்தனர்...
அதை கண்டதும் அவள் கால்கள் நழுவ, அப்படியே அதிர்ச்சியில் உறைந்து அருகில் இருந்த சுவற்றில் சாய்ந்து கொண்டாள் பவித்ரா......
Shock ah eruku mam
ReplyDeleteThanks pa. keep watching!
Delete