காந்தமடி நான் உனக்கு-41

 


அத்தியாயம்-41

முதன் மீதான தன் காதலை முழுமையாக உணர்ந்து கொண்ட சத்யா, அவனை மணக்க சம்மதம் என்று உற்சாகத்துடன் சொல்லி வைக்க, அதைக் கேட்கத்தான் அவனுக்கு கொடுத்து வைக்கவில்லை.

அவளின் அலைபேசி பேட்டரி இல்லாமல் உறக்கத்திற்கு சென்றுவிட்டிருக்க, அதைக்கண்டு டென்ஷன் ஆனவள்,  அதை விசிறி எறிய, மீதி உயிரையும் விட்டிருந்தது அந்த வாயில்லா ஜீவன்.

அதை கண்டு ஒரு நொடி அதிர்ந்துதான் போனாள் சத்யா. ஆனால் அடுத்த நொடி அவள் மனம் பரபரப்பானது.

“இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும்...இது நடக்கக் கூடாது...”  என்றவள்,  இப்பொழுது அமுதனை அழைத்து தன் முடிவை சொல்ல வழி இல்லாமல் போய்விட,

அதோடு நேரமும் இல்லாததால்,  அவளாகவே நேரிலேயே சென்று விடலாம் என்று முடிவு செய்தவள் அவசரமாய் குளியலறைக்குள் ஓடி, பரபரப்புடன் தன் முகத்தை கழுவிக் கொண்டு,  வேகமாக வீட்டை விட்டு வெளியேறினாள் சத்யா

அவசரத்தில் செருப்பைக் கூட சரியாக மாட்டாமால் வேற வேற ஜோடியில்  ஒன்றை எடுத்துப் போட்டுக் கொண்டு,  தலைதெறிக்க வாசலுக்கு ஓடி வர,  இங்கிருந்து எப்படி செல்வது என்று அடுத்த சோதனை தயாராக இருந்தது.

அப்பொழுது தான் அவள் வீட்டில் குடியிருக்கும் டாக்சி டிரைவர் ஒருவர் தன்னுடைய ஓலா கேப் ஐ வீட்டின் அருகில் நிறுத்திவிட்டு, கீழே இறங்கி இருக்க,  உடனே அவரிடம் ஓடியவள்

“அண்ணா...நான் அவசரமாக தாஜ் ஹோட்டலுக்கு போக வேண்டும். என்னை ட்ராப் பண்றிங்களா? ப்ளீஸ் கொஞ்சம் சீக்கிரம் போகணும்...” என்க அவள் முகத்தில் இருந்த பரபரப்பையும்,  அழுது இருந்த கண்ணையும் பார்த்து அவனுக்கு என்ன தோன்றியதோ...

“சரி சத்யா... வா போகலாம்...”  என்று அவளை காரில் அமர்த்திக் கொண்டு  காரை ஓட்டினான்.

சத்யாவும் அவனுடைய அலைபேசியை வாங்கி, அமுதனை அழைக்க முயல அதுவோ அணைக்கப் பட்டு இருந்தது.

அடுத்ததாய் தன் தங்கைக்கு முயல, அதுவும் ரிங் அடித்துக்கொண்டே இருந்தது. திவ்யா அதை எடுக்கவில்லை.

“ஒருவேளை ஹேண்ட்பேக் உள்ளே வைத்துவிட்டாளா?  எருமை...”  என்று திட்டியவாறு முன்னாலிருந்த டிரைவரை இன்னும் வேகமாக ஓட்ட சொல்ல ஒவ்வொரு நொடியும் செத்து பிழைத்தாள் சத்யா...

ப்படியோ அரைமணி நேரத்தில் அந்த ஹோட்டலை வந்தடைய, ஹோட்டலின் வெளிப்புற தோற்றத்தை பார்த்தே மயக்கம் வராத குறை சத்யாவுக்கு.  

திவ்யா வர்ணித்ததை போல இந்திரலோகம் போலத்தான் இருந்தது. அந்த ஹோட்டல் முழுவதும் வண்ணமயமான அலங்காரத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தது.

காரை நிறுத்தி கீழே இறங்கி எங்கே செல்வது என்று முழித்துக் கொண்டிருந்தனர். பின் அந்த டிரைவருக்கு நன்றி சொல்லி அவரை அனுப்பிவிட்டு திரும்பியவள்,  எப்படியோ திருமணம் நடைபெறும் அரங்கத்தின் உள்ளே செல்ல வழியை கண்டுபிடித்து உள்ளே சென்றுவிட்டாள்.

பிரம்மாண்டமான அலங்காரத்துடன், நிறைய முக்கிய பிரமுகர்களாலும் அந்த ஹால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.  

தொலைவிலிருந்தே மணமகன் கோலத்தில் மணமேடையில் அமர்ந்திருந்த அமுதனை கண்டு கொண்டாள் சத்யா.  

கூடவே ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த எல்.இ.டி திரையில் மணமகனை வெகு க்லோசப்பில் காட்டிக் கொண்டிருக்க, மணக்கோலத்தில் தன்னவனை கண்ட பெண்ணவளும் அவனின் கம்பீரத்தில் மெய்மறந்து தான் போனாள்.

சில நொடிகள் அவனையே இமைக்க மறந்து பார்த்திருந்தாள் சத்யா. பின் அவள் வந்த வேலை நியாபகம் வர, உடனே தன் தலையை உலுக்கி சுதாரித்துக் கொண்டு அவசரமாய் அங்கிருந்த சூழ்நிலையை ஆராய, அமுதனுக்கு இன்னும் திருமணம் முடியவில்லை என்றுதான் தோன்றியது.

அதை கண்டதும் தான் பெரும் நிம்மதியாக இருந்தது. அதுவரை இருந்த பதட்டத்தில்,  இப்பொழுது அவள் கால்கள் தளர்ந்து போய், நடை தள்ளாடினாலும், அதை இழுத்து பிடித்து கொண்டு

“இன்னும் அமுதனிடம் என் மனதை, என் சம்மதத்தை  சொல்லவில்லை. சொன்னால்தான் என்னுடைய மனம் அவனுக்குப் புரியும். எப்படி அவனை அடைவது? 

என்று சுற்றிலும் பார்வையை சுழற்ற, அப்பொழுது மணமகனுக்கான சடங்குகள் முடிந்திருக்க,  வேற ஒரு ஆடையைக் கொடுத்து மாற்றிக் கொண்டு வரச் சொன்னார்கள்.

அந்த நேரம் அமுதன் எழுந்து மணமகன் அறைக்கு உள்ளே செல்ல,  அதுதான் சமயம் என்று அந்த ஹாலின் பின்னாலிருந்த ஒரு பாதை வழியாக புயலென மணமகன் அறைக்கு ஓடினாள் சத்யா.

மணமகன் அறைக்குள் நுழைந்த அமுதன்,  கதவை இலேசாக  மூடிவிட்டு தன் மேலாடையை கழட்ட, அந்த நொடி புயலென பாய்ந்து உள்ளே சென்றாள் சத்யா

அடுத்த நொடி தன்னவனை கண்டு கொண்டு கொண்டவள்,  எதுவும் யோசிக்காமல்,  பாய்ந்து சென்று அவனை இறுக்கி அணைத்துக் கொண்டவள்

“ஐ லவ் யூ அம்மு...ஐ லவ் யூ சோ மச். உன்னை என்னால் யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது. என்னுடைய அமுதன் நீ....எனக்கு மட்டும் தான் நீ...”  என்று சொல்லியவாறு வழக்கம் போல அவன் கழுத்தை கீழ் நோக்கி இழுத்து அவன் முகமெங்கும் முத்த மழை பொழிந்தாள் சத்யா.  

அவனோ அவளின் செயலில் அதிர்ந்து போனாலும், உடனே தன்னை சமாளித்துக் கொண்டவன்,  அவளின் செயலுக்கு எந்த எதிர்வினையும் காட்டாமல், கொஞ்சமும் அசையாமல் எங்கோ வெறித்த படி கற்சிலையாய் நின்று கொண்டிருந்தான்.

தன் காதலை, ஏக்கத்தை, தவிப்பை எல்லாம் அவனிடம் மொத்தமாக, முத்தமாக கொட்டி முடித்தவள், அவனிடம் இருந்து எந்த ரியாக்சனும் இல்லாமல் போக, அவன் மார்பில் சாய்ந்தவாறு நிமிர்ந்து அவன் முகம் பார்க்க,  அவனோ இன்னுமே எங்கோ வெறித்து கொண்டிருந்தான்.

அதைக்கண்டவள் மனம் திடுக்கிட்டு போனது.

“நான் அவனை தள்ளி வைத்ததால், வெறுத்து விட்டானா? என் அமுதன் என்னை வெறுத்து விட்டானா ? “ என்று நெஞ்சம் பதைபதைக்க,

“ஐம் சாரி... வெரி சாரி அம்மு... இத்தனை நாள் என்னை பற்றியே சரியாக புரிந்து கொள்ளாமல் முட்டாளாக இருந்து விட்டேன். இப்பதான் எனக்கு எல்லாம் தெளிவாக புரிந்தது. நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது...

ஐ லவ் யூ அம்மு...ப்ளீஸ்... என்னை மன்னித்து என்கிட்ட பேசு. நீ இப்படி எதுவும் பேசாமல் இருந்தால் எனக்கு ரொம்பவும் கஷ்டமா இருக்கு....நான் ரெடி... நாம் இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம்... எனக்கு சம்மதம்....” என்றாள் தவிப்புடன்.

அதுவரை எங்கோ வெறித்து கொண்டிருந்தவன் பார்வை இப்பொழுது அவள் பக்கமாய் திரும்ப, அவளையே ஊடுருவி ஆழ்ந்து  பார்த்தவன்

“மாற மாட்டாயே? “ என்றான் அவள் கண்களுக்குள் பார்த்தவாறு.

“இல்லை.. மாட்டேன்...” என்று இரு பக்கமும் தலையை ஆட்டினாள் சத்யா.

“எந்த சூழ்நிலையிலும் என்னை விட்டுக் கொடுக்க மாட்டாயே? என்றான் மீண்டும் கேள்வியுடன் அவளை ஆழ்ந்து பார்த்தவாறு.

“மாட்டேன்...மாட்டேன்...மாட்டேன்...என் உயிரே போனாலும் உன்னை,  யாருக்கும் எதற்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன். என் பொக்கிஷம் நீ...இனிமேல் இருவரும் ஈருடல், ஓர் உயிர் தான்.

உன் வாழ்வில் நீ இழந்து இருந்த அத்தனை சந்தோசத்தையும் நான் கொண்டு வருவேன் அம்மு. என் அமுதன் நிறைய சாதிக்க வேண்டும். அதே போல அவன் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.

அதுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன். ஐ லவ் யூ டா...” என்று கண்கள் பளபளக்க, கண்ணில் நீர் வழிய கூறிக்கொண்டிருக்க, அவள் சொல்ல வந்ததை முடிக்கும் முன்னே அடுத்த நொடி அவளை இறுக்கி அணைத்து இருந்தான் அமுதன்.  

அவளை, தன்னவளை இழக்க போகிறோம் என்ற தவிப்பில் இருந்தவனுக்கு, அவன் கை நழுவவிட்ட பொக்கிஷம் மீண்டும் கிடைத்ததை போல உள்ளம் மகிழ்ந்து போனவன், அவன் மகிழ்ச்சியை எல்லாம் தன் இறுகிய அணைப்பில் காட்டினான் அமுதன்.

பெண்ணவளுக்கும் அந்த அணைப்பு ரொம்பவும் தேவையாக இருந்தது.

காடு மேடெல்லாம் சுற்றி அலைந்து திரிந்தவள், இளைப்பாற ஒரு இடம் கிடைத்ததாய் அவள் மனம் பூரிக்க,  அவன் மஞ்சத்தில் அப்படியே இன்னுமாய் வாகாக சரிந்து கொண்டாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவியவாறு ஏகாந்தத்தில் திளைத்து வேற உலகத்தில் சஞ்சரித்து கொண்டிருக்க, சில நிமிடங்கள் கடந்து இருக்க, அவனின் அறைக்கதவு தட்டப்பட்டது.

அதில் திடுக்கிட்டு விழித்தவர்கள் அவசரமாக விலகிக் கொள்ள,

“நாங்க உள்ளே வரலாமா? என்று கேட்டபடி கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தனர் சத்யாவின் தங்கைகள் மற்றும் ரூபாவதி.

“என்னடா கண்ணா?  இப்பவாது உன் பொண்டாட்டியை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து விட்டாயா?  அவளுக்கு மணமகள் அலங்காரம் செய்ய வேண்டும். ஆரம்பித்து விடலாமா? என்று சிரித்தபடி உள்ளே வந்த ரூபாவதி, சத்யாவை பார்க்க,  சத்யாவிற்கோ பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

அவளால் நம்பவே முடியவில்லை. அவளை எப்பொழுதும் கேவலமாக வெறித்து பார்த்து வைக்கும் ரூபாவதி,  தன்னிடம் சிரித்து பேசுவது கண்டு அவளால் நம்பவே முடியவில்லை.

ஒருவேளை இதெல்லாம் கனவா என்று மறைமுகமாக தன்னைத்தானே கிள்ளி பார்த்துக் கொண்டாள். அது கனவல்ல நிஜம் என்பதாய் அவளுக்கு சுர்ரென்று வலித்தது.

உடனே இன்னுமே நம்பாமல் அமுதனை பார்க்க, அவளின் மனதை அறிந்தவனாய்,

“எல்லாம் நிஜம்தான் சது. அதெல்லாம் அப்புறம் சொல்கிறேன் செல்லம்மா. இப்பொழுது அம்மாவுடன் சென்று உனக்கான அலங்காரத்தை செய்து கொண்டு வா. பாவம் அந்த பியூட்டிசியன்ஸ்  ரொம்ப நேரமாக உனக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்...”  

என்று கண்சிமிட்டி சிரிக்க, அவளோ இன்னுமாய் அதிர்ச்சியுடன் மற்றவர்களை பார்க்க,  

திவ்யாவும் நித்யாவும் அவள் கையை பிடித்து  

“சும்மா வாக்கா... எவ்வளவு நேரமா உனக்காக எல்லாரும் காத்துகிட்டிருக்கோம். ஆடி அசஞ்சு இப்பதான் வந்து சேர்ந்திருக்க. இதுதான் நீ மாம்ஸ் மேல வச்சிருக்கிற லவ் ஆ?

சரி சரி.. அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்...சீக்கிரம் வா... “  என்று இழுக்காத குறையாக தன் அக்காவை இழுத்துச் சென்றனர்.  

டுத்த அரை மணி நேரத்தில் அவளுடைய அலங்காரங்கள் முடிந்து விட,  ரூபாவதி ஏற்கனவே அவளுக்காக வாங்கி வைத்திருந்த மெருன் கலர் பட்டுப் புடவையிலும்,  அதற்கு பொருத்தமாய்  வைரம் மற்றும் பிளாட்டினம் நகைகளை பூட்டியதில் தேவதையாக ஜொலித்தாள் சத்யா.

கொஞ்சமாய் வெட்கத்துடன் தன் அருகில் வந்து அமர்ந்தவளையே இமைக்க மறந்து பார்த்திருந்தான் அமுதன்.

அவளோ அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் வெட்கப்பட்டு தள்ளி அமர்ந்து கொள்ள, அவன் இன்னுமாய் நெருங்கி அமர்ந்தான்.

“செமையா இருக்க டி... பொண்டாட்டி..”  என்று காதோரம் கிறக்கத்துடன் கிசுகிசுத்தான்.  

“மாம்ஸ்...நாங்களும் இங்கதான் இருக்கிறோம். இப்படி பப்ளிக்கா எல்லாம் ரொமான்ஸ் பண்ணக்கூடாது. அதையெல்லாம் தனியா உங்க ரூம்ல வெச்சுக்கோங்க... இப்ப நல்ல பிள்ளையா ஐயர்வால்  சொல்றதை செய்ங்க...”  என்று கிண்டல் அடித்தாள் திவ்யா.

அதன் பிறகு கிண்டலும் கேலியுமாக சடங்குகள் முடிய,  கெட்டி மேள சத்தம் முழங்க, மற்ற மங்கல வாத்தியங்களும் அசுர கதியில் இசைக்க,  அந்த மங்கலநாணை பெரியவர்களின் ஆசியோடு தன்னவள் கழுத்தில் அணிவித்து அவனுடைய சதுவை,  முறைப்படி தன்னவள் ஆக்கிக் கொண்டான் அமுதன்.

சத்யாவும் மனம் நிறைந்த பூரிப்புடன் அவன் கட்டிய தாலியை தலைகுனிந்து வாங்கிக் கொண்டு, காதலுடன் அவனைப் பார்த்து புன்னகைத்தாள். விழியோரம் அவளையும் மீறி ஒரு சொட்டு கண்ணீர் திரண்டிருந்தது.

அதையும் கண்டு கொண்டவன், செல்லமாய் முறைத்து  இனி அவள் கண்ணில் எப்பொழுதும் நீர் வரக்கூடாது இன்று சைகையால் காண்பித்தவன்,  செய்கையிலும் அதை நிரூபித்தான்.  

தன் நீண்ட கரத்தால், சத்யாவின் பின்பக்கமாய் சுற்றி வந்து அவளின் முன்னுச்சி நெற்றியில் திலகம் வைத்தவன்,  எதிர்பாராத விதமாய் அதே உச்சியில் மென்மையாய் முத்தமிட்டான்.  

அதில் கொஞ்சமும் காமம் இல்லை.

இனி உனக்காக நான் இருக்கிறேன். உன்னுடைய இன்ப துன்பங்கள் யாவும் என்னோடுதான் என்றதாய் இருக்க,  அதில் ரொம்பவே உருகிப் போனாள் சத்யா.  

அவனின் செய்கையில் கன்னங்கள் சிவந்து போனாலும் காதலுடன் கண்களால் நன்றி சொன்னாள்.

அவர்கள் இருவரையும் மணக்கோலத்தில் பார்க்க,  இரு வீட்டு பெரியவர்களுக்கும் மனம் நிறைந்து போனது.

அதுவும் வளர்மதிக்கு சொல்லவே வேண்டாம்.  எங்கே தன் மகள் திருமணமே வேண்டாம் என்று பிடிவாதமாக நின்று விடுவாளோ என்று அஞ்சி இருந்தவருக்கு, இன்று அவளை மாலையும் கழுத்துமாக இப்படி மணக்கோலத்தில் பார்க்கவும் பூரித்துப் போனார்.

மனநிறைவுடன் இருவருக்கும் ஆசி வழங்கி ஆசீர்வதித்தார். கண்ணோரம் திரண்டிருந்த நீரை உள்ளிழுத்துக் கொண்டு புன்னகைத்தவாறு.

இதுவரை தன் மகள் வாழ்வில் அடித்த புயல் போதும். இனிமேலாவது தன் மகள் வாழ்வில் எப்பொழுதும் வசந்தமே வீச வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டார் வளர்மதி.

அவரின் வேண்டுதல் பலிக்குமா? விட்ட குறை தொட்ட குறை என்று ஒன்று அவரின் மகளை சுற்றி வந்து அவளின் வாழ்க்கையை சூறையாட காத்திருக்கிறதே...பாவம் அதை அறிந்திருக்கவில்லை அந்த பேதை தாய்.

அப்படி என்ன காத்திருக்கிறதாம் சத்யாவுக்கு? வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்...


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!