உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-45

 


அத்தியாயம்-45

தி ஜனனியையும், நந்தினியையும் அழைத்து கொண்டு கோவிலுக்கு சென்றதும் மரகதம் பவித்ராவையும் ரெடியாகி வரச்சொன்னார்... அதை கேட்டு தயங்கி நின்ற பவித்ரா,

“அத்தை... ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே.. “ என்றாள் தயங்கியவாறு..

“அடடா.. என்கிட்ட என்ன தயக்கம் பவித்ரா.. எதுனாலும் தயங்காமல் கேள்..”  என்று சிரித்தார் மரகதம்...

“அது வந்து அத்தை... இந்த பூஜைக்கு பட்டு புடவை கட்டிக்கணும்னு ஆசை.. ஆனால் நான் எதுவும் எடுத்துட்டு வரலை.. எல்லாம் டிசைனர் புடவைதான் இருக்கு... அதான் என் மாமியாரோட புடவை எதுவும் இருந்தால் அதை கட்டிக்கணும் போல இருக்கு.. ஏதாவது இருக்கா??  “ என்றாள் தயங்கியவாறு...

“ஹா ஹா ஹா.. இவ்வளவுதானா?? இதுக்கு எதுக்கு இவ்வளவு தயக்கம்?? இந்த பண்ணையே உனக்கு சொந்தம் பவித்ரா.. இதுல நீ எதுக்கு தயங்கி நிக்கற...

அப்புறம் என்ன கேட்ட ?? புடவை இருக்காவா??  உன் மாமியார்க்கு பட்டு புடவைனா அவ்வளவு இஷ்டம்.. அத்தன புடவை வாங்கி குவிப்பா.. இங்கு வரும்பொழுது கட்டும் புடவை எல்லாம் அப்படியே தான் இருக்கு.. வா உனக்கு எடுத்து தர்ரேன்.... 

ஆனால் அதெல்லாம் பழைய டிசைன் ஆச்சே...பார்டர் எல்லாம் பெருசு பெருசா இருக்கும்...  இப்ப இருக்கிற பொண்ணுங்க அந்த மாதிரி புடவைய எங்க கட்டறாங்க?? “ என்று யோசித்தார் மரகதம்...

“பரவாயில்லை அத்தை.. எனக்கும் அந்த மாதிரி புடவை ரொம்ப பிடிக்கும்...நீங்க அதெல்லாம் யோசிக்காதிக்க.. “என்று சிரித்தாள் பவித்ரா...

“சரி வா.. காட்டறேன்.. “ என்று பவித்ராவை மேல மாடியில் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு அழைத்து சென்றார்... அந்த அறையில் நுழையிலயே முன்பு கண்ட காட்சி நினைவு வர, பவித்ராவின் கைகள் இறுகியது..

ஆனால் அதற்குள் தன்னை சமாளித்துக் கொண்டவள் தான் கண்டதை பின்னுக்கு தள்ளி, அதை பற்றி நினைக்க கூடாது என்ற உறுதியுடன் மரகதம் உடன் உள்ளே சென்றாள்..

மரகதம் தன்னிடம் இருந்த சாவியால் ஒரு அலமாரியை திறக்க, அங்கு கண்ணை பறிக்கும் விதத்தில் அழகழகான பட்டு புடவைகள் ஹேங்கரில் தொங்க விடப்பட்டிருந்தன... எல்லாமே அந்த காலத்து டிசைனில் இன்னும் புதுசு மாறாமல் அப்படியே இருந்தது...

“இதெல்லாம் உன் மாமியாரோடது தான் பவித்ரா... நான் தான் அப்பப்ப இதை எல்லாம் எடுத்து திருப்பி வைப்பேன் புடவை வீணாகி விடாமல் இருக்க... சரி.. உனக்கு பிடிச்சதை எடுத்துக்கோ... “ என்று சிரித்தார்...

அவளும் எதை  எடுப்பது என்று  குழம்பி கடைசியில் மயில் கழுத்து கலரில் இருந்த அந்த பட்டு புடவையை தேர்வு செய்தாள்... அதை  கண்டதும் மரகதம் ஆச்சர்யத்தில் கண்களை விரித்தார்...

“பவி மா .. உனக்கு அப்படியே உன் மாமியார் டேஸ்ட்.. அவளுக்கும் இந்த புடவை தான் ரொம்ப பிடிக்கும்....இத்தனை புடவை இருந்தாலும்  அடிக்கடி இதைத்தான் விஷேசங்களுக்கு கட்டு வா...

கடைசியா இந்த ஊர் திருவிழாவிற்கு வந்தது தான்.. அப்ப இதே புடவைதான் கட்டியிருந்தாள்... அதுக்கப்புறம் இந்த மாதிரி கட்டி பார்க்க முடியாம போயிருச்சு.. “ என்று கண்கலங்கினார் மரகதம்...

பவித்ரா அவரின் கையை ஆதரவாக பிடித்து கொள்ளவும் தன்னை சமாளித்து கொண்டு

“சரி வா.. இதுக்கு மேட்சிங் ஆன நகையையும் எடுத்துக்கோ.. “ என்று அந்த அலமாரியின் உள்ளே இருந்த லாக்கர் சிஸ்டத்தில் சில எண்களை அழுத்த அது திறந்து கொண்டது...

அதன் உள்ளே பார்த்தவளுக்கு இன்னும் ஆச்சரியம்... வித விதமான வைர நகைகளும், தங்க நகைகளும் உள்ளே இருந்தன...

“இதெல்லாமும்  உன் மாமியாரோடது தான் பவி மா.... புடவை மாதிரியே நகைகள் மேலயும் வாணிக்கு விருப்பம் அதிகம்...அதான் இத்தனை கலெக்சன்....

அதுவும் வாங்கும் பொழுதே இதெல்லாம் என் மருமகளுக்கும் பிடிக்கணும் என்று பார்த்து பார்த்து வாங்கினா... உனக்கு பிடிச்சதை எடுத்துக்கோ.. “ என்றார்..

“ஐயோ.. அத்தை.. இதெல்லாம் எனக்கு வேண்டாம்... என்னோடதே போதும்.. இதை எல்லாம் அப்படியே வைங்க... “ என்று அவசரமாக மறுத்தாள் பவித்ரா...

“இதெலாம் முறையா உனக்கு சேர வேண்டியது தான் பவித்ரா...நானும்  நிஷாந்த் கிட்ட சொல்லி கிட்டிருக்கேன் இதை  எல்லாம் எடுத்துட்டு போக சொல்லி.... அவன் தான் இதெல்லாம் அம்மா போட்டது..

அம்மா நியாபகமா இங்கயே இருக்கட்டும் பெரியம்மானு  சொல்லி  இந்த லாக்கர் சிஸ்டத்தையும்  ஏற்பாடு பண்ணி கொடுத்தான்.. எனக்கும் அவனுக்கும் மட்டும் தான் இது  தெரியும்...

நீயாவது  இந்த முறை ஊருக்கு போறப்போ இதை  எல்லாம் எடுத்துகிட்டு போய்டு பவித்ரா... “என்றார்...

பவித்ராவுக்கு அவரை நினைத்து பெருமையாக இருந்தது... பணத்துக்காக ஆசைபட்டு இதை  எல்லாம் தானே எடுத்துக் கொள்ளாமல் தன் தங்கச்சி விட்டு சென்றதை     எல்லாம் பத்திர படுத்தி வச்சிருக்காரே... நல்ல குடும்பத்துல தான் வாழ்க்கை பட்டிருக்கேன் என்று உள்ளுக்குள் சிரித்துக்கொண்டவள்,

“இல்ல..  வேணாம் அத்தை...அவர் சொன்ன மாதிரி இதெல்லாம் இங்கயே இருக்கட்டும்... என் மாமியார் மாமனார் ஆத்மா இங்கயே தான் இருக்கும் னு நினைக்கிறேன்...இதெல்லாம் இங்க இருக்கிறதுதான் சரி ....

உங்க ஆசைக்காக ஒன்னு எடுத்துக்கறேன் இப்ப போட மட்டும்... அப்புறம் கழட்டி இங்கயே வச்சுடறேன்... “ என்று சிரித்தவள் அதில் தேடி அந்த புடவைக்கு மேட்சாக ஒரு வைர அட்டிகையும் கொஞ்சம் மெல்லிசான தங்க ஆரத்தையும் எடுத்து கொண்டாள்...

“ஹ்ம்ம்ம்ம் சூப்பர் செலக்ஷன் பவித்ரா... இதே  காம்பினேசன் தான் வாணியும் அடிக்கடி போடுவா... சரி.. நீ தயாராகி கீழ வா.. நான் போய் சரோஜாவையும் தயாராக சொல்றேன்..”  என்று அந்த லாக்கரை பழைய படி மூடி அந்த சாவியை எடுத்து கொண்டு வெளியேறினார்...

பவித்ராவும் மீண்டும் ஒரு குட்டி குளியல் போட்டு பின் அந்த புடவையை நேர்த்தியாக கட்டி அதற்கு மேட்சிங்கான ஆபரணங்களையும்  அணிந்து கொண்டு கீழ இறங்கி வந்தாள்...

அதற்குள் மரகதமும் தயாராக  இருக்க, மாடியில் இருந்து இறங்கி வரும் பவித்ராவையே  கண் இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தார்...அவர் அருகில் வந்தவள்

“என்ன அத்தை அப்படி பார்க்கறீங்க?? “  என்று அவர் முன்னே கை நீட்டி சொடக்கு போட்டு சிரித்தாள்....

“அப்படியே என் தங்கச்சியே நேர்ல வந்த மாதிரி இருக்கு பவி மா... என்ன அவ இன்னும் கொஞ்சம் உயரம் அதிகம்.. “ என்று அவள் முகத்தை சுற்றி திருஷ்டி கழித்து பின் சமையல் அறைக்குள் சென்று அந்த பண்ணை வீட்டு தோட்டத்தில் இருந்து பறித்த அடுக்கு மல்லி மொட்டுகளை நெருக்கமாக கோர்த்து ஒரு பூ பந்தை போல சுற்றி வைத்திருந்த அந்த மல்லிகை பூவை கொண்டு வந்து அவள் நீண்ட சடையை சுற்றி வைத்து விட்டார்...

அவளின் அந்த மயில்  கழுத்து கலர் புடவைக்கும் வைர அட்டிகைக்கும் தங்க ஆரத்திற்கும் நீண்ட சடையும் அதை சுற்றி இருந்த மல்லிகை சரமும் அவளை அசல் குட்டி பண்ணையார் அம்மாவாக காட்ட, மரகதம் அசந்து நின்றார்... 

பின் அவளை உற்று பார்த்தவர் ஏதோ ஒன்று குறையுதே என்று உள்ளே சென்று ஒரு சிறிய நெத்தி சுட்டியையும் கொண்டு வந்து வைத்து விட்டார் அவளுக்கு பவித்ரா மறுத்தும் கேக்காமல்...

“இப்பதான் இன்னும் ஜம்முனு இருக்க மருமகளே... இரு திருஷ்டி பொட்டு வைக்கிறேன்...”  என்று அருகில் இருந்த குழந்தைகளுக்கு வைக்கும் வேங்கை பொட்டில் ஒரு  துளி எடுத்து அவள் கன்னதில் ஒரு சிறு பொட்டாக வைத்தார்....

“அப்படியே அந்த அம்மனே நேர்ல வந்த மாதிரி இருக்க பவி மா...” என்று அவளை கட்டி அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டார்...

அதே நேரம் சரோஜாவும் தன் அறையில் இருந்து வெளியில் வரவும் இருவரின் கொஞ்சலையும் கண்டு அவளுக்கு உள்ளுக்குள் கொதித்தது....

“இந்த கிழவி என்னை என்றாவது இப்படி கொஞ்சியிருக்கா?? தங்கச்சி மருமகள இப்படி தலையில வச்சு ஆடுதே... என்னதான் இருந்தாலும் இந்த சொத்துக்கெல்லாம் சொந்தக்காரி அவ தான.. அதான் நல்லா ஐஸ் வைக்குது போல.. “ என்று முகத்தை நொடித்தவாறே அவர்கள் அருகில் வந்தாள் சரோஜா....

அருகில் வந்தவள் பவித்ரா வின் கெட்டப்பை பார்த்து அசந்து நின்றாள்.. பட்டு புடவையில் கோவில் சிலையாட்டம் மிளிர்ந்தவளை கண்டு 

“சே... பேசாம நானும் இந்த மாதிரி பட்டு புடவையை கட்டியிருக்கலாம்... பார்..  இந்த குட்டச்சி கூட அந்த பட்டு புடவையில எவ்வளவு அழகா ஜொலிக்கிறா...

இந்த நந்தினி என்னவோ

பவித்ரா பட்டணத்துல இருந்து வந்தவ.. அவ ஸ்டைலா டிசைனர் புடவை தான் கட்டுவா. நீ  பாட்டுக்கு பட்டிக்காடு மாதிரி பட்டு புடவைய சுத்திக்காத...  அவளுக்கு சமமா நீயும் நல்ல மாடர்ன் புடவையை கட்டுக்கா.. “ என்று சொல்லி அவளே இந்த புடவையை எடுத்து வைத்து விட்டு சென்றிருந்தாள்..அந்த புடவையைத்தான் சரோஜா கட்டி வந்திருந்தாள்... அவள் நிறத்துக்கு அந்த புடவையும் அழகாக இருந்தது...

ஆனால் அவளுக்கு பவித்ரா கட்டியிருந்தது தான்  பெரிதாக தெரிந்தது...

தன் அருகில் வந்த சரோஜாவை கண்டதும்

“வாவ்... சூப்பரா இருக்கீங்க  அக்கா... இந்த புடவை உங்களுக்கு சூப்பரா இருக்கு...சரவணன் மாமா பார்த்துட்டு அப்படியே ப்ளாட் ஆகப் போறார்..”  என்று கண்ணடித்து உண்மையாக பாராட்டினாள் பவித்ரா...

அவளின் பாராட்டில் கொஞ்சம் குளிர்ந்தாலும் அவள் மனதில் உள்ளே கொதித்து கொண்டுதான் இருந்தது...

அதற்குள் மரகதம் “சரோ.. அஸ்வின் எங்க?? அவன  ரெடி பண்ணிட்டியா?? “ என்று தன் பேரனை பற்றி கேட்க

சரோஜாவோ தன்னை அழகு படுத்துவதிலயே மணிக் கணக்காக நின்று கொண்டிருக்க, அவள் பையனை கண்டு கொள்ள வில்லை...

“இன்னும் இல்லை அத்தை... “ என்று முனகினாள்...

“நீங்க இருங்க அக்கா.. நான் அந்த குட்டி பையன ரெடி பண்றேன்.. “என்று சொல்லி உள்ளே சென்றவள் அவனை தூக்கி வந்து  உடம்புக்கு கொஞ்சமாக பவுடர் போட்டு பின் அவ ள் வாங்கி  வந்திருந்த அந்த புது ட்ரெஸ்சை போட்டு கூடவே தங்க செயின் மற்றும் பிரேஸ்லட் எல்லாம் போட, ஆவனும் பவித்ராவை பார்த்து சிரித்து கொண்டே சமத்தாக இருந்தான்...

மரகதத்திக்கு ஒரே ஆச்சர்யம்..

“எப்படி பவி.. இதெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்க?? “ என்றார்..

“ஹ்ம்ம்ம் எங்க தெருவுல யார்க்கு குழந்தை பிறந்தாலும் மூனாவது மாசத்துல இருந்து வீக் என்ட் ல என் கிட்ட கொண்டு வந்து விட்டுடுவாங்க அத்தை.... இதெல்லாம் எனக்கு பழக்கம் தான்.. “ என்று சிரித்தாள்...

“ஹ்ம்ம் அப்ப நிஷாந்த் க்கு பிரச்சன இல்லை அவன் வாரிசை பார்த்துக்க... நீயே எல்லாம் பார்த்துக்கவ போல... சீக்கிரம் நீயும் ஒரு குட்டி நிஷாந்தோ இல்ல குட்டி பவியோ பெத்துக்க... “ என்று சிரித்தார்....

அதை கேட்டு பவித்ராவின் கன்னங்கள் சிவந்தன... அப்பொழுது சரவணன் உள்ளே வர, வந்தவன் அவன் மனைவியின்  தோற்றத்தில் வியந்து அப்படியே மயங்கி நின்றான்..

எப்பவும் பட்டு புடவையில் இருப்பவள் இன்று வித்தியாசமாக டிசைனர் புடவையில் வித்தியாசமாக இருக்க தன் மனைவியையே மையலுடன் பார்த்து கொண்டு நின்றான்... அவனின் பார்வையை கண்டு கொண்டு சரோவும் வெக்க பட்டு கீழ  குனிந்து கொண்டாள்... 

அவர்களின் நாடகத்தை கண்டு கொண்ட பவித்ரா

“ம்ஹூம்... நாங்களும் இங்க தான் இருக்கோம் மாமா... ஜொள்ளு விட்டது போதும்....நீங்க விட்ட ஜொள்ளுல  இந்த பண்ணையே மூழ்கிடப் போகுது.... “ என்று பவித்ரா சிரிக்க, அதற்குள் தன்னை சமாளித்து கொண்டவன் மெல்லிய வெட்கத்துடன் சிரித்து கொண்டே உள்ளே வந்தான்....

அவனும் ஆதியை போலவே பட்டு வேட்டியும் சட்டையும்  அணிந்திருக்க, தன்  கணவனின் கம்பீரத்தில் அவனையே பார்த்து கொண்டு நின்றாள் சரோ...

“ம்ஹூம்... அக்கா உங்களுக்கும் தான்...உங்க ரொமான்ஸ் ஐ எல்லாம் உள்ள வச்சுக்கங்க... இது பப்ளிக்.. இங்க எல்லாம் இப்படி ஓபனா சைட் அடிக்ககூடாது...ஆனாலும் மாமா  சூப்பரா இருக்கார் இல்ல....அவர் திரும்பி வந்த உடனே சுத்தி போடுங்க... “என்று கண் சிமிட்டி சிரித்தாள் பவித்ரா...  

“ஹே  வாலு...ஜனனி தான் வாய் ஓயாம பேசற வாலுனு நினைச்சா, நீ அவள விட  பெரிய வாலா இருப்ப போல  இருக்கே...  உன்னை எப்படி தான் என் தம்பி வச்சு சமாளிக்கறானோ “  என்று சிரித்தான் சரவணன்...

மரகதமும் சிரித்து கொண்டே

“சரி வாங்க போகலாம்.. பவித்ரா..  நீ அந்த மாவிளக்கு தட்டை எடுத்துக்கோ.. “ என்கவும் அதுவரை கொஞ்சம் இளகி சிரித்துக் கொண்டிருந்த சரோஜாவின் முகம் மாறியது...

“போன வருடம் நான் தானே மாவிளக்கு தட்டை எடுத்தேன்.. இப்ப திடீர்னு புது மருமகள் வந்ததும் என்னை கழட்டி விடுதே இந்த கிழவி... “ என்று உள்ளுக்குள் பொறுமினாள்...

அவளின் மனநிலையை புரிந்து கொண்ட மரகதம்

“சரோ .. பவித்ரா  இந்த வருசம் புதுசா கல்யாணம் ஆகி வந்திருக்கா.. அதனால இந்த வருசம் அவ மாவிளக்கு எடுக்கட்டும்.. அதோட இந்த பண்ணை வீடு அவளோடது.. அதனால அவதான் முறைப்படி எடுக்கணும்.. அவ இல்லாத சமயங்களில் தான் நாம செய்யனும்... “ என்று விளக்கினார்... அதை கேட்டு சரோஜாவின் மனம் இன்னும் கொதித்தது...

“இப்ப என்ன இந்த வீடு, பண்ணை எல்லாம் இந்த குட்டச்சிக்கு சொந்தம்.... நான் வெறும் ஒண்ட வந்தவ.. எப்ப வேணாலும் வெளியேறனும்னு சொல்லாம சொல்லுதா இந்த கிழவி...

இதுக்கெல்லாம் இவர்தான் காரணம்.. “ என்று திரும்பி சரவணைனை முறைக்க அவன் தன் மனைவி முறைக்க போறது முன்னரே தெரிந்து புத்திசாலிதனமாக முன்னரே  வாயிலை நோக்கி திரும்பி கொண்டான்...

பின்ன எப்ப இந்த பண்ணை அவர்களோடது இல்லை.. நிஷாந்த் உடையது என தெரிந்ததில் இருந்தே சரவணனை வறுத்து எடுத்து கொண்டிருக்கிறாள் சரோ... அவனும் எவ்வளவோ சமாதானம் சொல்லியும் அவள் கேட்கவில்லை...பின் அவனும் அப்படியே விட்டு விட்டான்...  

மரகதம்  தன் பேரன் அஸ்வினை தூக்கி கொள்ள, பவித்ராவும் அந்த மாவிளக்கு தட்டை எடுத்துக் கொண்டு காரை நோக்கி சென்றனர்...

சரோஜா முன்னால் அமர்ந்து கொள்ள, பவித்ராவும் மரகதமும் பின்னால் அமர்ந்து கொண்டனர்... பவித்ரா அஸ்வினுக்கு விளையாட்டு காட்டி கொண்டே வர, அவனும் பவித்ராவிடம் நன்றாக ஒட்டி கொண்டான்....

கோவிலை அடைந்ததும் பவித்ராவின் கண்கள் தானாக தன்னவனை தேடின... உள்ளே இருந்தே பார்வையை சுழல விட்டவள் அவள் கணவன் கொஞ்சம் தொலைவில் யாருடனோ சீரியஸாக பேசி கொண்டிருப்பதை கண்டாள்....

வேட்டியை மடித்து தொடை வரை ஏற்றி கட்டிகொண்டு அவன் நின்ற ஸ்டைலில், இவன்தான் மல்ட்டி மில்லினர்.. AN Group of companies Chairman என்று சொன்னால் கேட்பவர்கள் சிரித்து இருப்பர்... அந்த அளவுக்கு அந்த கிராமத்தில் ஒருவனாக மாறி இருந்தான்...

கையை நீட்டி ஆக்சனுடன் அவன் எதையோ அந்த பெரியவரிடம் பேசி கொண்டிருக்க, அப்பொழுது அடித்த மெல்லிய காற்றில் அவன் சிகை அழகாக பறக்க, அதை  ஸ்டைலாக தன் கையால் அடக்கி கொண்டே நின்ற அவன் அழகையே ரசித்து பார்த்து கொண்டிருந்தாள் பவித்ரா...

மற்றவர்கள் ஏற்கனவே காரை விட்டு இறங்கியிருக்க, பவித்ரா மட்டும் இன்னும் இறங்காததை கண்டு உள்ளே எட்டி பார்த்த சரவணன் அவளை கண்டு கொண்டு

“ஹா ஹா ஹா....யாரோ நான் விடற ஜொள்ளுல பண்ணை மூழ்கிடும்னு கவலை பட்டாங்க.. இப்ப என்னடான்னா அவங்க கிட்ட இருந்தே ஜொள்ளு அருவியா கொட்டிகிட்டு இருக்கு...

பாத்துமா... பாவம் எங்க ஊர் மக்கள்... இந்த திருவிழா முடியற வரைக்கும் இந்த ஊரை  மூழ்காம காப்பாத்து...“ என்று சரவணன் காருக்குள் தலையை விட்டு  அவளை கிண்டல் அடிக்க,

“போங்க மாமா... “ என்று அவளும்  வெக்க பட்டு சிரித்து கொண்டே கார் கதவை திறந்து கீழ இறங்கினாள் அந்த மாவிளக்கு தட்டை கையில் வைத்து கொண்டு...

அவள் காலை கீழ வைக்கும் அதே நேரம் ஆதியும் எதேச்சையாக இந்த பக்கம் பார்க்க அப்படியே அசந்து நின்றான்...

அந்த இரவு நேரத்தில் பட்டு புடவையும் பளபளக்கும் அந்த வைர அட்டிகையும், நெத்திசுட்டியும் அவனுக்கு அப்படியே தன் அன்னையை நினைவு படுத்தியது...

என்னதான் தன்  பழைய நினைவுகளை ஆழ்மனதில் புதைத்து வைத்திருந்தாலும் அந்த புடவையையும் அவள் அணிந்திருந்த நகையையும் கண்டதும் கடைசியாக தன் அம்மா இதே மாதிரி அணிந்து காரில் வந்து இறந்கியதும் அவனும் கூடவே இறங்கி அவர் கையை பிடித்து கொண்டு இந்த கோவிலுக்குள் குதித்து கொண்டே சென்றதும் கண் முன்னே வந்தது...

தன் தலையை உலுக்கி பழைய நினைவுகளை பின்னுக்கு தள்ளி, மீண்டும் தன்னவளை காண, அவளின் அசத்தலான அழகில் மெய் மறந்து நின்றான்....சரவணன் ஏதோ சொல்ல, கன்னங்குழிய சிரித்தவளையே இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தான்..

அருகில் நின்றவர் அவனிடம் ஏதோ கேட்க அவனிடம் இருது பதில் இல்லாமல் போக நிமிர்ந்து அவனை பார்த்தவர் அவன் எதிர்புறம் அவன் மனைவியை ரசித்து கொண்டிருக்க, இங்கிதம் தெரிந்த அந்த பெரியவர் நமட்டு சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்தார்...

அவர் சென்றது கூட தெரியாமல் லயித்து இருந்தவன் பார்வையை கண்டு கொண்டு பவித்ராவும் கன்னம் சிவந்தாள்...

பின் அவர்கள் அனைவரும் ஆதியை கண்டு கொண்டு அவனை நோக்கி வர, அவன் தன் பாக்கெட்டில் வைத்திருந்த அலைபேசியை எடுத்து பவித்ரா மெல்ல அடி எடுத்து வைத்து கையில் மாவிளக்கு தட்டுடன் நடந்து வரும் அழகை அழகாக பதிவு செய்து கொண்டிருந்தான் மையலுடன்....

அவனின் ஜொள்ளு பார்வையை கண்டு நந்தினி மனதுக்குள் புகைந்தாள்...

பவித்ராவை வெறுப்பேத்த என்றே ஆதியுடன் கிளம்பி வந்தாள் நந்தினி... இராட்டினத்தில் சுற்றும்  சாக்கை வைத்து அவனோடு ஒட்டி கொள்ளலாம் என்று திட்டமிட்டு அவனுடன் கிளம்பி வந்தாள்...

ஜனனியோ அவளும் கூட வந்தது கண்டு முறைத்தாலும் பின் அவளை கண்டு கொள்ளவில்லை...  கோவிலை அடைந்ததும் தன் அண்ணன் கையை பிடித்து இழுத்து கொண்டு அங்கிருந்த தேர் கடைக்கு சென்று விட்டாள்... நந்தினியும் அவர்கள் கூடவே சென்றாள்...

அந்த தேர் கடையில் ஜனனி அவளுக்கு பிடித்ததை எல்லாம் வாங்கி குவிக்க, நந்தினியும் அவள் வாங்குவதில் இன்னொரு செட் தனக்காக வாங்கி கொண்டாள்...

ஆதியும் சிரித்து கொண்டே காசு கொடுப்பதற்காக  தன் வாலட்டைதிறக்கையில் அதில் உள்ளே இருந்த கத்தை நோட்டுக்களையும் பல கிரெடிட் கார்டுகளையும் கண்ட நந்தினியின் கண்கள் விரிந்தன....

அவனின் செல்வ வளத்தை கண்டவள்
“இவனை எப்படியாவது மடக்கணும்..  இந்த காசுக்கெல்லாம் நான் சொந்தக் காரியாகணும் “ என்ற வெறி அவளுள் இன்னும் வேகமாக பரவியது...

ஒரு வழியாக ஜனனி அந்த கடையில் இருந்த எல்லாத்தையும் வாங்கி முடிக்கவும் இராட்டினம் இருக்கும் பகுதிக்கு வந்தனர்... நந்தினி அவனுடன் ஒட்டிய படியே அப்பப்ப கொஞ்சவும் செய்தாள்...

இராட்டினத்தில் சுற்ற, அவனையும் அழைக்க, அவன் மறுத்து அவர்கள் இருவரையும் என்ஜாய் பண்ண சொல்லிவிட்டு அந்த ஊர் பெரியவர்களிடம் பேசிகொண்டிருந்தான்...

ஆதி  இந்த ஊருக்கு வருவதில்லை என்றாலும் சரவணன் மூலமாக இங்கு நடப்பதை எல்லாம் அப்பப்ப கேட்டுக் கொள்வான்.. ஏதாவது உதவி தேவை என்றால் சரவணன் வழியாகவே செய்வான்..

அதனாலயே  இந்த ஊரில் அவனுக்கு நல்ல மதிப்பு.. இன்றும் அந்த ஊர் தலைவரிடம் இன்னும் ஏதாவது  செய்யனுமா??  என்பதை பற்றிதான் பேசி கொண்டிருந்தான்...

இங்கு வந்ததில் இருந்து ஒன்றை கவனித்தாள் நந்தினி.. என்னதான் அவள் அவனிடம் கிட்ட ஒட்ட முயன்றாலும் அவன் விலகி போனான்...அவள் மீது ஒரு இன்ட்ரெஸ்ட் ஓ இல்லை தப்பான பார்வை கூட படவில்லை..

அந்த பவித்ரா இருக்கும் பொழுது தன்னிடம் கொஞ்சுபவன் அவள் இல்லாத நேரங்களில் அவளை கண்டு கொள்ளவே இல்லை... இதிலிருந்தே அந்த   பவித்ராவுக்காகத்தான் அவன் தன்னிடம் நடிக்கிறான்..  என்று புரிந்து கொண்டாள் நந்தினி...

“சே!! இவனை போய் குறைத்து எடை போட்டுட்டனே...இவ்வளவு அழகா இருக்கிற என்னை கண்டுக்காமல் அந்த குட்டச்சிய இப்படி ஜொள்ளு விட்டு பார்த்து கிட்டிருக்கான்...

ம்ஹும்.. இது சரி வராது... நம்ம திட்டத்தை இன்னும் தீவிரமாக்கணும்....என்ன செய்யலாம்?? “ என்று யோசிக்க ஆரம்பித்தாள்..

காரிலிருந்து இறங்கிய அனைவரும் ஆதியின் அருகில் வந்திருக்க, அந்த குட்டி பையன் அஸ்வின் ஆதியை கண்டதும் அவன் கிட்டதாவினான்... ஆதியும் அவனை இலாவகமாக வாங்கி அவன் கன்னத்தில் முத்தமிட்டான்...

அதற்குள் அவன் பெரியப்பாவும் அங்கு வந்து அனைவரையும் கோவிலுக்குள் அழைத்து சென்றார்...

பவித்ராவின் அருகில் ஒட்டி நடந்த ஆதி அவள் காதருகில் குனிந்து

“You are looking so gorgeous பேபி...” என்று கிசுகிசுத்தான் ஒரு மாதிரி குரலில்...

அவனின் அந்த ஹஸ்கி வாய்சையும் அவள் காரிலிருந்து இறங்கியதில் இருந்தே அவனின்  பார்வையும் கண்டு  கொண்டவளுக்கு உள்ளுக்குள் சிலிர்த்தது... ஆனாலும் சமாளித்து கொண்டு

Thanks பாஸ்... நீங்களும் தான் ஹேன்ட்சம் ஆ இருக்கீங்க... இந்த ஊர் பொண்ணுங்க எல்லார் கண்ணும் உங்க மேலயே தான் இருக்கு...வேணும்னா அப்படியே அந்த பக்கம் பாருங்க.. ஒரு கும்பலே உங்கள தான் சைட் அடிச்சிகிட்டு இருக்காளுங்க....என்று கண்ணடித்தாள்... அவன் முகத்தில் மெல்லிய வெக்கம் வர,

“ஹ்ம்ம்ம் இப்பயாவது தெரிஞ்சுகிட்டியா என்னோட பெருமைய ?? “  என்று தன் காலரை தூக்கி விட்டு கொண்டான்...

“ஐய... ரொம்பத்தான்... “ என்று தன் நாக்கை நீட்டி ஒழுங்கு காட்டினாள்... அதில் இன்னும் தலை சுத்தி போனான்  அவள் கணவன்...

இருவரும் தங்களுக்குள் பேசி கொண்டே கோவிலை நோக்கி நடக்க, மரகதமும் மற்றவர்களும் உள்ளே சென்றிருக்க, பவித்ரா அந்த கோவில் வாயிலை தாண்ட ஆதியும் அவள் கையை பிடித்து கொண்டான்...

பவித்ரா ஒருகையில் மாவிளக்கு தட்டை வைத்திருக்க, ஆதியும் ஒரு கையில் அஸ்வினை தூக்கி கொண்டு மற்ற கையால் அவளின் வலது கரத்தை பற்றி கொண்டு இருவரும் ஜோடியாக அந்த கோவிலின் உள்ளே வலது காலை எடுத்து வைத்து சென்றனர்....

சற்று முன்னால்  உள்ளே சென்றிருந்த மரகதம் நின்று திரும்பி இவர்களை  பார்க்க, தன் தங்கை மகன் கையில் குழந்தையுடன் தம்பதி சகிதமாக உள்ளே வரும் அந்த காட்சியை கண்டு மனம் நிறைந்து நின்றார்....

“சீக்கிரம் அவனும் இதே மாதிரி குழந்தையும் குடும்பமா வரணும்... “என்று அந்த அம்மனை வேண்டி கொண்டார் மரகதம்...!




Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!