உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-49

 


அத்தியாயம்-49

றுநாள் காலை எழும்பொழுதே பவித்ராவின் வலது கண் துடித்தது.. வலது கண் துடித்தால் ஏதாவது கெட்டது நடக்கும் என்று தன் அன்னை சொல்லியது நினைவு வர,  முதலில் அதை நம்பாவிட்டாலும் கடைசியாக இந்த மாதிரி துடித்தது நினைவு வந்தது..

அப்பொழுது தான் தன் அன்னை விளக்கம் சொல்லி அவளை கவனமாக இருக்க சொல்லி அனுப்பி வைக்க, அன்றுதான் அவள் ஆதியை முதலில் சந்தித்தது.. அதற்கப்புறம் தான் அவள் சோதனை காலம் ஆரம்பமானது...

அதே  மாதிரி இன்று மீண்டும் துடிக்கவும் இப்ப என்ன ஆகப்போகுதோ?? என்று கொஞ்சம் யோசித்தவாறு எழுந்து குளியல் அறைக்குள் சென்றாள்…

குளித்து முடித்து கீழ வந்தவளுக்கு மரகதம் சூடான பில்டர் காபியை கொடுக்க, ஃபிரெஸ்ஸான நாட்டு பசுவின் பாலில் கலந்த காபி சுவையாக இருக்க அதை  ருசித்து குடித்து கொண்டே

“சே.. இந்த  மாதிரி காபி குடிக்கவே அடிக்கடி வரணும் அத்தை.. “என்று சிரித்தாள்..

மரகதமும் இணைந்து சிரித்தார்..

“அப்புறம் பவித்ரா.. இன்னைக்கு காலை சாப்பாடு முடிந்ததும் எல்லாரும்  எங்க ஊர்ல இருக்கிற குல தெய்வம் கோவிலுக்கு போறோம்... நீயும் நிஷாந்த் ம் கிளம்பி வாங்க.. “ என்றார்...

“இன்னைக்கு ஈவ்னிங் நாங்க ஊருக்கு கிளம்பறோம் அத்தை... அங்க வந்திட்டு திரும்ப வரமுடியுமா?? “என்றாள் யோசித்தவாறு...

அதெல்லாம் அதுக்குள்ள திரும்பி வந்திடலாம் பவித்ரா.. பக்கத்துல ஒரு 20 கிலோ மீட்டர் தான் எங்க ஊர்..

நான் சரோஜாவுக்கு நல்ல படியா குழந்தை பிறக்கணும்னு  வேண்டி கிட்டது.. அதான் எல்லாரும் இருக்கையிலயே போய்ட்டு வந்திடலாமுனு...

அதோட இது சக்தி வாய்ந்த கோவில்.. நீயும் வந்து வேண்டி கிட்டா சீக்கிரம் எங்க வீட்டுக்கு இன்னொரு வாரிசும் வந்திடும் பார்...கல்யாணம் ஆகி 6 மாசம் ஆகப் போகுது...இன்னும்  நீ உண்டாகலையே...இந்த சாமிகிட்ட வேண்டி கிட்டா சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைச்சிடும்...“ என்று சிரித்தார்...

பவித்ராவுக்கு அவர் என்ன சொல்கிறார் என்று முதலில் புரியவில்லை.. பிறகு அவர் சொன்ன வேண்டுதல் என்பது புரிய 

“உங்க பையன் என்னை பொண்டாட்டியா ஏத்துகிட்டிருந்தா இந்த வேண்டுதலுக்கு எல்லாம் தேவையே இருந்திருக்காது.. “ என்று மனதிற்குள் முனகி கொண்டாள்...

பின் அவரை பார்த்து

“எதுக்கும் அவர் கிட்டயும் கேட்டுடுங்க அத்தை... “ என்றாள்..

“நிஷாந்த் கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன் பவி.. அவனும் சரினுட்டான்.. நீ போய் உங்க துணி எல்லாம் பேக் பண்ணி வச்சுடு...  வந்ததும் சீக்கிரம் கிளம்பிடலாம் என்று அவளை அனுப்பி வைத்தார்...

அனைவரும் காலை உணவை முடித்து கோவிலுக்கு செல்ல கிளம்பி வெளியில் வந்தனர்...

ஆதி காரிலயே அனைவரும் செல்வதாக இருந்தது...அவன் பெரியப்பா வெளியில் வேலை இருப்பதால் கோவிலுக்கு நேராக வந்துவிடுவதாக சொல்லி காலையிலயே கிளம்பி சென்றிருந்தார்....

அனைவரும் கார் அருகில் வந்திருக்க, அந்த நந்தினியை தேடினாள் பவித்ரா... அவள் அங்கு இல்லாததால், சரோஜாவிடம் திரும்பி 

“எங்க அக்கா நந்தினியை காணோம்.. “ என்றாள் பவித்ரா....

நந்தினி சாவி கொடுத்ததில் ஏற்கனவே கொதித்து கொண்டிருந்த சரோஜா

”ஹ்ம்ம்ம் அக்காவாம் அக்கா... என் கூட ஒட்டி பிறந்த மாதிரி அக்கானு கூப்பிடறத பார்.. “ என்று மனதுக்குள் கருவி கொண்டவள் அதை  மறைத்து கொண்டு

“அவளுக்கு உடம்பு சரியில்லை... அதான் கோவிலுக்கு வரலை னு சொல்லிட்டா... “ என்று சமாளித்தாள் சரோஜா...

பவித்ராவின் வலது கண் மீண்டும் துடித்தது...

சரவணன் முன்னால் அமர்ந்து கொள்ள, மற்ற பெண்கள் நாள்வரும் பின் இருக்கையில் அமர்ந்து கொள்ள ஆதி  காரை கிளப்ப, சரவணன் அவனுக்கு வழி சொல்லியபடியே வர, கொஞ்ச நேர பயணத்திற்கு பிறகு அந்த கோவிலை அடைந்தனர்...

கிராமத்துக்கு வெளியில் வீற்றிருந்தது மரகதத்தின் குல தெய்வ கோவில்...

அவர்களின் காரை கண்டதும் அந்த கோவில் பூசாரி விரைந்து வந்து அவர்களை வரவேற்றார்...

மரகதமும் அவரின் நலன் விசாரித்து பின் பொங்கல் வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார்... பவித்ரா அவர் செய்வதையே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்க,பொங்கல் வைப்பதற்கு அடுப்பை சரி பண்ணி பவித்ராவையே அடுப்பை பற்ற வைக்க சொல்லி ஆரம்பித்து வைத்தார்...

அதை  கண்டு  சரோஜாவின் மனம் அந்த அடுப்பை விட வேகமாக எரிந்தது... சிறிது நேரம் மரகதத்திற்கு  உதவி செய்தாள்... ஜனனி அஸ்வினை வைத்து கொண்டு விளையாண்டு கொண்டிருக்க, சரவணன் அவர்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த சேவலை அறுப்பதற்கு ரெடி பண்ணி கொண்டிருந்தான்..

எதேச்சையாக நிமிர்ந்த பவித்ரா சரோஜாவை காண, சரோஜா ஏதோ பதற்றத்துடன் இருப்பதை போல இருந்தது.. அடிக்கடி தன் அலைபேசியை பார்த்து கொண்டிருந்தாள்...

அதை கண்ட பவித்ரா தன் தோளை குலுக்கி பின் பொங்கல் வைக்கும் வேலையில் மும்முரமாக இருந்தாள்...

சில நிமிடங்களில்  சரோஜாவின் அலைபேசி அடிக்க, அது முதல் சத்தத்திலயே அதை ஆன் பண்ணி பேச, அவளின் முகம் கொஞ்சம் மாறியது...

பவித்ரா ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருக்க, சரோஜா பேசி முடித்ததும் கையை பிசைவது தெரிந்தது... அதை கண்டு அவள் மரகதத்திடம் சொல்ல, மரகதமும் தன் மருமகளை காண, அவருக்குமே அவள் ஏதோ குழப்பத்தில் இருப்பது புரிந்தது...

பின் அவர் எழுந்து அவள் அருகில் சென்று

“என்னாச்சு சரோ ?? ஏன்  டென்சனா இருக்க?? “ என்றார்...

அவரின் குரலை கேட்டதும் நிமிர்ந்தவள்

“ஒரு சின்ன பிரச்சனை அத்தை... “ என்று முனகினாள்..

“என்னாச்சு மா?? எதுனாலும் சொல்லு  “ என்றார் அவரும் கொஞ்சம் பதற்றத்துடன்....

“வந்து.... நந்தினி கப்போர்ட் சாவிய என் ரூம்ல வச்சிருந்தாளாம்... நான் அது தெரியாம என் ரூமை பூட்டி சாவி எடுத்துகிட்டு வந்திட்டேன்... அவ இப்ப குளிச்சிட்டு போட்டுக்க ட்ரெஸ் ஐ எடுக்கிறப்ப பார்த்தா சாவி இல்லை... அதான் எனக்கு போன் பண்ணினா.... இப்ப என்ன செய்யறது னு தெரியலை.. அதான் யோசிச்சுகிட்டிருக்கேன்... “  என்றாள்

“ஹ்ம்ம்ம் வேற ட்ரெஸ் எதுவும் இல்லையா ?

“இல்லை அத்தை... எல்லாரும் இங்க வர்றதுனால எல்லா ரூமையும் பூட்டிட்டு வந்திட்டேன்...யாராவது வீட்டுக்கு போய் இந்த சாவிய கொடுத்திட்டு வரணும்.. அதான் யோசிச்சுகிட்டு இருக்கேன்... “ என்றாள் தன்  மாமியாரை ஓரக்கண்ணால பார்த்து கொண்டே...

“ஹ்ம்ம்ம் இதுக்கு எதுக்கு தயங்கணும்... நம்ம நிஷாந்த்  ஐ யே போய்ட்டு வர சொல்றேன்... அப்படியே நந்தினி பொண்ணு நல்லா இருந்தா அவளையும் கூட்டி கிட்டு வரச் சொல்றேன்.. “என்றார் வெகுளியாக அந்த நந்தினி விரித்திருக்கும் வலையை அறியாமல்...

சரோஜாவும்

“ஆகா.. எலி  தானா வந்து மாட்டுதே.. “ என்று உள்ளுக்குள் மகிழ்ந்தவள்

“அவருக்கு எதுக்கு சிரமம் அத்தை.. நான் வேணா நடந்து போய் கொடுத்திட்டு வர்ரேன்... “என்றாள் முகத்தை பாவமாக வைத்து கொண்டு...

“நடப்பதா?? .. அவ்வளவு  தூரம் நடக்க  முடியாது சரோ.. ஒரு சிரமமும் இல்லை.. இரு நான் நிஷாந்த் ஐ கூப்பிடறேன்.. “ என்றவர் சரவணனுடன் ஆதியும் நின்று கொண்டு அந்த பூசாரி செய்வதை பார்த்து கொண்டிருந்தான்.. மரகதம் அவனை அழைக்க, அவனும் அருகில் வர, மரகதம் அவனிடம் நடந்ததை தயக்கதுடன் சொன்னார் ...

“இவ்வளவுதான பெரியம்மா.. நான் போய் கொடுத்திட்டு வந்திடறேன்.. இங்கதான இருக்கு கொடுத்திட்டு சீக்கிரம் வந்திடறேன்.. “என்றான் சிரித்தவாறு..

இவர்கள் மூவரும் பேசி கொண்டிருப்பதை கண்டு ஜனனி அஸ்வினை தூக்கி கொண்டு அங்க வரும்பொழுது, நிஷாந்த் கார் சாவியை எடுத்து கொண்டு சுழற்ற , மரகதம் மீண்டும் அந்த கதையை சொல்ல, ஜனனிக்கு ஏதோ  தப்பாக தோன்றியது... உடனே

“நிஷா ணா .. நானும் கூட வரவா?? “ என்றாள்...

அதற்குள் சரோஜா

“நீ இங்கயே இரு ஜனனி.. அஸ்வின் அழுவான்.. அவனை வச்சிருக்க ஆள்  வேணும்... “ என்று அவசரமாக தடுத்தாள்...

ஆதியும் “ நீ இங்கயே இரு வாலு... நான் போன உடனே வந்திடறேன்... “  என்றவன் சாவியை சுழற்றியவாறு பவித்ராவை கடந்து செல்கையில் அவளை பார்த்து கண் சிமிட்டி தலை அசைத்து சென்றான்....

அவர்கள் பேசியது சரியாக கேட்கவில்லை என்றாலும் சிறிது தொலைவில் இருந்தே அவர்களின் உதட்டசைவில் இருந்து  என்ன பேசினார்கள் என்று யூகித்திருந்தாள் பவித்ரா....

ஆதி  தன்னை கடந்து செல்கையில் ஏனோ  மீண்டும் அவள் வலது கண் துடித்தது.. அவள்  மனதில் உள்ளேயும் ஏதோ பிசைவதை போல இருந்தது.. என்னவென்று சரியாக புரியவில்லை..

அவள் எதுவும் பேசாமல் தன் வேலையை கவனித்து கொண்டிருந்தாள்... சிறிது நேரத்தில் பொங்கல் வைக்கும் வேலை முடிந்து விட, அவர்கள் அறுத்த சேவல் கொழம்பு வைக்கும் வேலை ஆரம்பிக்க, அதற்குள் ஜனனி வந்து பவித்ராவை அழைத்து சென்றாள் அந்த இடங்களை சுற்றி பார்க்க..

கோவிலை சுற்றிலும் தெரிந்த இயற்கை காட்சிகள் கண்ணை பரிக்க, அதில் லயித்தவள் தன் கணவனை பற்றி மறந்து போனாள்....

அருகில் இருந்த வயல்களில் பெண்கள் நாற்று நட அவர்கள் வேகமாக வரிசையாக நடுவதையே வியந்து பார்த்து கொண்டிருந்தாள் பவித்ரா....

சிறிது தூரம் நடக்க, செம்மறி ஆட்டு கூட்டம் வர, அதில் நடுவில் புகுந்து  விளையாடியவள் ஒரு ஆட்டு குட்டியை பிடித்து அதை கொஞ்சுவது போல தன்  மொபைலில் படம் எடுத்துக் கொண்டாள்...

அங்கு இருந்த காட்சிகளை எல்லாம் ரசித்து சுற்றி பார்த்த பின் கோவிலுக்கு திரும்பினர்...

மரகதம் எல்லாம் முடித்து பூஜைக்காக தயார் பண்ணி கொண்டிருக்க, சரோஜா ஒரு ஓரமாக அமர்ந்து தன் அலைபேசியை நோண்டி கொண்டிருந்தாள்... மரகதம் மட்டும்தனியாக வேலை செய்து கொண்டிருப்பதை கண்டு வேகமாக சென்று மரகதத்திற்கு உதவியவள்

“சாரி.. அத்தை கொஞ்சம் லேட் ஆகியிருச்சு.. “என்றாள்..

“பரவாயில்லை பவித்ரா.. உனக்கு இங்க இருக்கிறதெல்லம் புதுசா இருக்கும்... எல்லாம் நல்லா சுத்தி பார்.. “ என்று சிரித்தார்...

அவருடன் பேசி கொண்டிருந்தாலும் அவள் கண்கள் என்னவோ தன் கணவனையே தேடியது.. அவன் அங்கு இல்லாததால், அவன் கார் நிறுத்தியிருந்த இடத்தை காண அதுவும் காலியாக இருந்தது....

“அத்தை.. இன்னும் அவர் வரலையா?? “ என்றாள் தயங்கியவாறு...

“யாரு.. ஓ நிஷாந்தா ..   தெரியலையே.. இந்நேரம் வந்திருக்கணுமே.. நான் வேலையா இருந்ததால பார்க்கலை பவித்ரா.. இரு சரவணன் கிட்ட கேட்கறேன் “என்றவர் சரவணனை அழைத்து விவரம் கேட்க சரவணனும் தான் பார்க்கவில்லை என்றான்...

பவித்ரா அவனின் அலைபேசிக்கு முயற்சி செய்ய அது  ஸ்விட்ச் ஆப் என்று வந்தது... அதை கண்டு சிறிது பதட்டமானாள் பவித்ரா... அதை  கண்ட மரகதம்

“நீ ஒன்னும் பயந்துக்காத பவித்ரா... இது  என்ன சிட்டியா?? கிராமத்த்துல அப்படி எதுவும் ஆகியிருக்காது...இந்நேரத்துக்கு வந்திருக்கணுமே .. “ என்று யோசித்தவர்

“சரோ.. நீ நந்தினிக்கு போன் பண்ணு.. நிஷாந்த் அங்கிருந்து கிளம்பிட்டானானு தெரிஞ்சுக்கலாம்..”  என்றார்...

சரோஜா நந்தினிக்கு போன் பண்ண அதுவும் சுவிட்ச் ஆப்  ஆகியிருந்தது...

அதை கண்டு அனைவரும் யோசனையில் ஆழ, அங்கு இருந்த பூசாரி நல்ல நேரம் போவதாக சொல்ல, பவித்ரா அவர்களை பூஜையை ஆரம்பிக்க சொன்னாள்....

மரகதம் நிஷாந்த் இல்லையே என்று வருத்தபட,

அதான் நான் இருக்கேன் இல்ல அத்தை... அவர் வரமுடியாததற்கு நாம என்ன பண்ண முடியும்... அவருக்கும் சேர்த்து நான் வேண்டிக்கறேன்.. “ என்று சிரித்தாள் பவித்ரா தன் உள்ளிருக்கும் கலக்கத்தை மறைத்து கொண்டு...

ஒரு வழியாக மரகதம் சமாதானம் ஆகி அனைவரும் அந்த தெய்வத்தை வணங்கினாலும் பவித்ரா மட்டும் இன்னும் தன் கணவனை காணவில்லையே என்று கோவில் வாயிலையே  பார்த்து இருந்தாள்...

மனம் அந்த பூஜையில் ஒன்றவில்லை.. பூஜை முடிந்தும் அவன் வராமல் போக .மீண்டும் மீண்டும் அவன் அலைபேசிக்கு முயற்சி செய்ய, அது அனைக்கபட்டே இருந்தது...

“சரி வீட்டிற்கு போய் பார்க்கலாம்... “ என்று அனைவரும் முடிவு செய்ய, அடுத்த கேள்வி அங்கிருந்து எப்படி வீட்டிற்கு செல்வது??  என்று வந்தது...

சரவணன் அந்த ஊரில் இருக்கும் தன் நண்பனுக்கு போன் பண்ண, அவன் அடுத்த 10 நிமிடத்தில்  காருடன் வர, அனைவரும் காரில் ஏறி கிளம்பினர்....

பவித்ராவின் மனம் மட்டும் இன்னும் அடித்து கொண்டே இருந்தது...

ஒரு வழியாக வீட்டிற்கு அனைவரும் வந்து சேர, அங்கு ஆதித்யாவின் கார் வெளியிலயே இருப்பதை கண்டு அனைவருக்கும் நிம்மதி மூச்சு வந்தது...

அனைவரும் காரிலிருந்து இறங்கி சரவணன் நண்பனுக்கு நன்றி சொல்லி அனுப்பி வைத்தனர்...

“சாவிய கொடுத்துட்டு உடனே வராம இங்க என்ன பண்றான்?? “என்ரு யோசித்தவாறெ வீட்டிற்குள் வந்தனர்... அதே  நேரம் ஆதியின் பெரியப்பாவும் திரும்பி வந்திருந்தார்...

அனைவரும் வரவேற்பறைக்கு வந்து சுற்றி பார்க்க யாரையும் காணவில்லை...

நந்தினியை அழைக்க எண்ணிய பொழுது அவள் அறையில் இருந்து அவள் விசும்பும் சத்தம் கேட்டது... அதை  தொடர்ந்து ஆதியின் குரலும் மெலிதாக கேட்டது...

அதை கேட்டு அனைவரும் அங்கு செல்ல, நந்தினியின் அறையில் நந்தினி கட்டிலில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்க, ஆதி அவள் அருகில் அமர்ந்து ஏதோ சமாதானம் செய்து கொண்டிருந்தான்...

அதை கண்ட சரோ

“என்னாச்சு நந்து?? ஏன் அழற??  “ என்று கேட்க, சரோஜாவின் குரலை கேட்டு தலையை நிமிர்ந்த நந்தினி

“அக்கா.. “என்று அழைத்தவாறு ஓடி வந்து சரோஜாவை கட்டி கொண்டாள்...

அதை  கண்டு மற்றவர்களுக்கு  இன்னும் குழப்பமானது..

நந்தினி ஏன் அழுகிறாள் என்று புரியாமல் அனைவரும் அவளையே பார்க்க, பின் ஆதியிடம் திரும்பிய அவர் பெரியப்பா

என்னாச்சு நிஷாந்த்??  ஏன்  நந்தினி அழுவுது?? “ என்றார்... அவர்களை கண்டதும் தான் அமர்ந்திருந்த கட்டிலில் இருந்து எழுந்து நின்றான் ஆதி...

அவனாலும் எதுவும் சொல்ல முடியவில்லை... தலை குனிந்து நின்றான் அனைவர் முன்னாலும்...

அவள் இன்னும் விசும்பி கொண்டிருக்க, சரோஜா அவளை அதட்டினாள்..

“அழாம விசயத்தை சொல்லு நந்து..பார் எல்லாரும் என்னாச்சோனு தவிப்பா இருக்கு இல்ல.. “ என்றாள்...

ஒரு வழியாக தேம்பி முடித்தவள்

“அக்கா... நிஷாந்த் மாமா சாவி கொடுக்க வந்தாரா.. நான் சாவிய வாங்கிட்டு என் ரூம் சாவிய எடுத்துகிட்டு என் ரூம்க்கு வந்திட்டேன்..

அப்ப நேற்று வாங்கி வந்த கல்லு அங்க இருக்க, வெயிலுக்கு நல்லா இருக்குமேனு   ஊற்றி கொடுத்தேன்... அதை குடிச்சதும் கொஞ்ச நேரத்தில ஒரு மாதிரி இருக்குனு அவர் சொல்ல, என் அறைக்கு கூட்டிட்டு வந்து கட்டில் ல படுக்க வச்சேன்...

நல்லாதான் படுத்திருந்தார்.. கொஞ்ச நேரம் கழிச்சு எதையோ எடுக்க வந்த என்னை திடீர்னு கட்டிபிடிச்சு..... “ என்று மேலும் சொல்ல முடியாமல் விசும்பினாள்...

“நானும் எவ்வளவோ போராடினேன் அவர்கிட்ட இருந்து தப்பிக்க... ஆனால்அவர் குடிச்ச கல்லு ரொம்ப போதை ஆயிருச்சு போல..  நான் எவ்வளவு முயன்றும் என்னால முடியல.... “ என்று நிறுத்தி விசும்பியவள்

“என் வாழ்க்கையே போச்சுக்கா... “ என்று மீண்டும் தன் அக்காவை கட்டி கொண்டு அழுதாள் நந்தினி...

அவள் சொன்னதை கேட்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்...பின் சுதாரித்து கொண்டு அனைவரும் ஆதியை பார்க்க

“சாரி பெரியப்பா...பெரியம்மா.. “ என்று தலை குனிந்தான் ஆதி...

அதை  கேட்டதும் பவித்ராவிற்கு  தன் தலையில் இடி விழுந்ததை போல இருந்தது... 

அவன் மறுத்து எதுவும் சொல்லுவான் என்று எதிர்பார்த்தவளுக்கு அவன் மன்னிப்பு கேட்கவும்  மொத்தமாக உடைந்து நொறுங்கி போனாள்  பவித்ரா... 

Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!