காந்தமடி நான் உனக்கு-43
அத்தியாயம்-43
ரூபாவதி தன் சொத்தை எல்லாம் காட்டி, தன் மகனை வழிக்குக் கொண்டு வந்து விடலாம் என்று
எண்ணி, மேக்னாவை மணந்தால் தான் அவனுக்கு சொத்து
கிடைக்கும் என்று தூண்டிலை போட்டு, மேக்னாவை மணந்து கொள்ள சொல்லி அமுதனை கட்டாயப்
படுத்தினார்.
ஆனால் அவனோ, அவன் உடம்பில் ரூபாவதியை விட, அவன் தந்தை மதியழகன் ரத்தம் தான் அதிகம்
ஓடுகிறது என்பதை காட்டும் விதமாய் தன் அன்னையின் சொத்து அனைத்தையும் வேண்டாமென்று உதறி
விட்டு பெங்களூர் வந்து விட்டான்.
நேராக வந்தவன் சத்யாவிடம் தன் நிலையைச்
சொல்லி இப்பொழுது மணந்து கொள்ளலாம் என்று கெஞ்சிய பொழுது, அவள் அவனுக்காய் பார்த்து அவனின் வேண்டுதலை மறுத்துவிட்டாள்.
அதற்கு பிறகு அவனும் சத்யா விடம் எவ்வளவோ
வழிகளில் முயன்று விட்டான். அதேபோல தன்
அன்னையிடமும் அவன் பிடிவாதமும் குறையவில்லை.
தன் பெற்றோர்களை பார்க்க மறுத்து மும்பைக்கு
செல்லாமல் , அவர்களை பார்க்காமல் சில வாரங்கள்
பெங்களூரிலயே தங்கி விட்டான்.
இந்த நிலையில் திடீரென்று ஒரு நாள் உலகத்தையே
உலுக்கி கொண்டிருக்கும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டார் ரூபாவதி.
மதியழகன் வெளியில் செல்ல வேண்டாம்
என்று எவ்வளவோ மறுத்து சொல்லியும் கேட்காமல்,
வீட்டில் இருக்க முடியவில்லை என்று சொல்லி
ஒரு பார்ட்டிக்கு சென்று வந்தார்.
மறுநாளில் இருந்து உடல் நிலை
சரியில்லாமல் போக, ஆரம்பத்தில் அதன் அறிகுறிகளை கண்டு கொள்ளாமல்
அலட்சியமாக இருந்து விட, அதுவே அவரின் உயிரை பாதிக்கும் நிலைக்கு கொண்டு
சென்றிருந்தது.
ஐந்தாவது நாளில்தான் தொற்றின் பாதிப்பு
அதிகமாகி விட, அப்பொழுதுதான் அவருக்கு தொற்று நோய்
தாக்கி இருந்தது தெரிய வந்தது. அவரின் நுரையீரல் பெரிதாக பாதிக்கப்பட்டு இருக்க, மூச்சுக்காற்றுக்காய் ரொம்பவும் சிரமப்பட வேண்டியிருந்தது.
உடனடியாக பெரிய மருத்துவமனையில்
அவசரபிரிவில் அனுமதிக்கபட்டு சிகிச்சை
தொடங்கப்படது. ஆனாலும் உயிர் பிழைப்பது கஷ்டம் தான் என்று சொல்லி விட்டனர் மருத்துவர்கள்.
அப்பொழுதுதான் ரூபாவதி க்கு இந்த
வாழ்க்கையின் முக்கியத்துவம் புரிந்தது... அவரிடம் அத்தனை செல்வங்கள், பண வளங்கள் கொட்டிக் கிடந்தாலும், அந்த பணத்தைக் கொண்டு தன் உயிரை காப்பாற்ற
முடியாது என்று புரிந்து கொண்டார்.
இந்த பணத்தை வைத்துக் கொண்டு தானே தன்
மகனின் மகிழ்ச்சியை பறிக்க எண்ணினோம் என்ற குற்ற உணர்வு மேலே எழுந்தது.
அதோடு தன்னைப் போல எத்தனை எத்தனை பேர்
எவ்வளவு எல்லாம் கனவு கொண்டிருப்பார்கள் தங்கள் வாழ்க்கையை பற்றி. அவர்கள் கனவு கண்ட
வாழ்க்கையை வாழ முடியாமல் திடீரென்று அகால மரணத்தில் எத்தனை பேர் மரணித்து
விட்டனர் இந்த தொற்றால்.
தங்கள் வாழ்வு பாதியில் முடிந்து
விடும் என்று அவர்களெல்லாம் அறிந்திருப்பார்களா? கொஞ்சமும் சந்தோஷமாக, வாழ்க்கையை
ரசித்து வாழாமல், எதிர்காலத்திற்காக சேமிக்க வேண்டும் என்று
நிகழ்கால வாழ்க்கையை நிராகரித்து, எதிர்காலத்திற்காக சேமித்தவர்கள், கடினமாக உழைத்தவர்கள்
எத்தனை எத்தனை பேர்..!
அப்படி ஒரு எதிர்காலத்தையே காணாமல்
எவ்வளவு பேர் பாதியிலேயே தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டனர் இந்த கொடிய தொற்று வியாதியால்..!
புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம்
வந்தது போல ரூபாவதி க்கு அந்த மருத்துவமனையில், அதுவும்
மரண படுக்கையில் தான் ஞானோதயம் வந்தது.
அப்பொழுதுதான் தன் குடும்பம், தன் கணவன், தன் மகன் என்ற உறவுகள் எல்லாம் கண் முன்னே
வந்து நின்றனர். அதோடு வாழ்க்கையில் அவர் செய்த தவறும் புரிந்தது.
தன் குடும்பத்தினர் மீது அன்பு செலுத்தாமல்
அந்த அன்பை வெளியில் தேடிய தன் முட்டாள்தனம் புரிந்தது. அதுவும் தன் மகன் மீது எள்ளளவும்
பாசத்தை காட்டாமல், தன் நலம், தன்
சுகத்தை மட்டுமே எண்ணி வெளியில் சுற்றிய தவறும் புரிந்தது.
ஏனோ இப்பொழுது தன் கணவன், மகன் என்று குடும்பமாக வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை அவரின் நெஞ்சை
அடைத்தது.
அட்லீஸ்ட் தன் மகனை ஒரு தடவையாவது
பார்க்க வேண்டும்... அவன் மனதிற்கு பிடித்த வாழ்க்கையை வாழ வைக்க வேண்டும்...அதை பார்த்து
தான் ரசிக்க வேண்டும் என்று எண்ணியவர், உடனே தன் கணவனிடம் சொல்லி அமுதனை மும்பைக்கு அழைத்து
வரச் சொன்னார்.
ஆனால் அமுதனோ மும்பை வர மறுத்து விட்டான்.
மீண்டும் தன் அன்னை ஏதாவது ட்ராமா பண்ணி, அவனை சிக்க வைத்து விடுவார்.
அவனால் சத்யாவை தவிர வேறு யாரையும் மணக்க முடியாது என்று உறுதி கொண்டவன் மும்பைக்கு
செல்ல மறுத்து விட்டான்.
அப்பொழுது தான் மதியழகன் அவன்
அன்னைக்கு வந்திருக்கும் நோயை பற்றி சொல்ல, அதைக் கேட்டு அதிர்ந்து போனான் ஆரவமுதன்.
அதுவரை மும்பை செல்ல மாட்டேன் என்று பிடிவாதமாக
இருந்தவன், தன் அன்னை மரணப்படுக்கையில் இருக்கிறார் என்று தெரிந்ததும், தன் பிடிவாதத்தை எல்லாம்
தூக்கி போட்டு விட்டு அடுத்த ப்லைட்டிலேயே மும்பை பறந்து விட்டான்.
என்னதான் தன் அன்னையை பிடிக்காது...அவர்
ஒருபோதும் தன் மீது பாசமாக இருந்ததில்லை... என்றாலும் இப்பொழுது இருக்கும் தன்
அன்னையின் நிலை கண்டு ஒரு நொடி ஆடி விட்டான்.
அந்த ஒரு வாரத்திலேயே உடல் மெலிந்து
போய், கண்கள் சொருகி, பார்க்கவே முடியாத அளவுக்கு உருக்குழைந்து போய் படுக்கையில்
படுத்திருந்தார் ரூபாவதி.
அவரை அப்படிக் கண்டதும், தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்பதுபோல அவரின் நிலை கண்டு
அமுதனின் மனம் பதைத்து போனது...
அவரின் கையை பிடித்துக் கொண்டு
“உங்களுக்கு ஒன்னும் இல்ல மாம். நீங்க சீக்கிரம் குணமாகி வந்திடுவிங்க. உங்களை அப்படி எல்லாம் விட்டு விட மாட்டேன்...” என்று தழுதழுத்தவாறு அவரின் கையைப் பற்றி
அழுத்தி கொடுக்க,
தன் மகனின் ஸ்பரிசத்திலும், அவன் கண்களில் அவருக்காக
வழிந்த கண்ணீரையும் கண்டு மனம் நெகிழ்ந்து போனது ரூபாவதிக்கு.
இப்படிப்பட்ட மகனை இத்தனை நாள்
கொண்டாடாமல் விட்டு விட்டோமே என்று அவர் மனம் சுட,
“எப்படியாவது இதிலிருந்து, இந்த நோயிலிருந்து நான்
பிழைத்து வந்து விடவேண்டும். என் மகன், மருமகள், பேரக்குழந்தை என்று முழுக்க முழுக்க சந்தோசமான வாழ்க்கையை வாழ்ந்து
பார்க்க வேண்டும்...” என்று அவரிடம் ஒரு ஆவல்
வந்து சேர்ந்தது.
அதற்கு தகுந்தாற்போல அமுதன் எந்நேரமும்
அவரின் அருகில் இருந்தவாறு தன் அன்னையை பார்த்துக் கொண்டான்.
இன்னும் பெரிய ஸ்பெஷலிஸ்ட் எல்லாம்
அழைத்து வந்து கன்சல்ட் பண்ணினான்.
என்னதான் பெரிய ஸ்பெஷலிஸ்ட் வந்து
விதவிதமான மருந்துகளைக் கொடுத்து காப்பாற்ற முயன்றாலும்,
ரூபாவதி ன் மனதில் இப்பொழுது இருந்த உறுதியும், அமுதனின் அக்கறையும் பாசமும் கண்டு, தான் எப்படியாவது பிழைத்துக்
கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் ஒன்று சேர, கொஞ்சம்
கொஞ்சமாக உடல் தேற ஆரம்பித்தார் ரூபாவதி...
அப்பொழுது தான் அன்பு, பாசம் என்றதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டார்.
மதியழகனுக்கு தன் மனைவியின் அருகில்
இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், தொழிலில் ஏகப்பட்ட வேலை தேங்கிக் கிடக்க,
இப்பொழுது அமுதனும் இல்லாமல் அவரால் தனியாக
சமாளிக்க வேண்டி இருந்ததால், தன் மனைவியை பார்த்துக் கொள்ள ஒரு செவிலியை ஏற்பாடு
செய்து விட்டு, அவர் தன் வேலையை பார்க்க சென்றுவிட்டார்.
ஆனாலும் காலை மாலை என இரண்டு வேளையும் வந்து பார்த்து
விட்டு தான் செல்வார். அதைக் கண்ட பொழுதுதான் ரூபாவதி ன் மனம் இன்னுமாய் ஏங்க
ஆரம்பித்தது.
தனக்காக தன் அருகில் இருந்து
பார்த்துக் கொள்ள ஒரு உறவு இல்லையே என்று குற்ற உணர்வு மேலிட, அதைப் போக்கும் வகையில் தன்
மகன் இவ்வளவு பாசத்துடன் இருக்கிறான் என்றதும், அந்த
எண்ணமே அவரை மேலும் குணமாக்கியது.
அடுத்து இரண்டு வார கால போராட்டத்தில், முழுவதுமாக குணம் அடைந்து இருந்தார் ரூபாவதி.
அதற்குப் பிறகு அவரின் குணத்திலும்
நிறைய மாற்றங்கள் வந்திருந்தன.
முதல் வேளையாக தன் மகனை அழைத்தவர், அவன் மனம் விரும்பும்
சத்யாவையே மணந்து கொள்ள சொல்லி விட்டார்.
அதைக் கேட்டதும் அமுதனுக்கு மிகுந்த
மகிழ்ச்சி ஆகிப் போனது. தன் அன்னையைக்
கட்டிக் கொண்டு அவரின் கன்னத்தில் முத்தமிட, ரூபாவதிக்கும் இன்னும் சிலிர்த்து போனது.
இந்த மாதிரி எல்லாம் முத்தமிட, ஆசையாக கட்டிக்கொள்ள, தன் மகனை அனுமதித்ததில்லை. இந்த
வயதில் அவன் தந்த முத்தம் இனிமையாக, தித்திப்பாக இருக்க, இன்னுமாய் நெகிழ்ந்து
போனார்.
தன் அன்னையின் சம்மதம் கிடைத்ததும்
உடனே அவன் சத்யாவை அணுகவில்லை. அவள், இன்னுமே தன்னை, அவன் காதலை உணர்ந்து
கொள்ளவில்லை என்றுதான் தோன்றியது.
அதனால் தான் ஒரு சின்ன விஷயம்
என்றாலும் உடனே தன்னை விலக்கி விடுகிறாள்.
முதலில் அவளை, அவள் மனதை அவளுக்கு புரியவைக்க வேண்டும்.
நானின்றி அவள் இல்லை என்ற உண்மையை அவளுக்கு
புரியவைக்க வேண்டும் என்று தான் இந்த ட்ராமாவை ஆரம்பித்தான்.
அவனுக்கும் மேக்னாவிற்கும் திருமணம்
என்பதாய் அவளிடம் சொல்லி வைத்து அவளுடைய மனதை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று திட்டமிட்டான்...
அவனுடைய திட்டத்திற்கு மற்றவர்களும்
ஒத்துக் கொண்டனர்.
வளர்மதிக்கு உள்ளுக்குள் கொஞ்சம்
பயமாகத்தான் இருந்தது.
இந்த முட்டாள் பெண் கடைசி வரைக்கும்
தன் மனதை அறிந்து கொள்ளாமல் போய் விட்டால் என்ன ஆகுமென்று கவலை வேறு.
அந்தக் கவலை கொஞ்சமும் இல்லாமல் தன்
திருமண வேலையை ஆரம்பித்திருந்தான் அமுதன்.
எப்படியும் அவள் தன்னைத்தேடி வந்து
விடுவாள் என்று அவன் போட்டு வைத்திருந்த
கணக்கு இப்பொழுதும் தப்பவில்லை.
எப்படியோ கடைசியில் தன் காதலை உணர்ந்து கொண்டவள், கடைசி நேரத்தில் எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்தி விட வேண்டும் என்று புயலென வந்தவள், பின் அவளே மணமகள் ஆகிப் போனாள்...
? Mmm super mam
ReplyDeleteThanks pa!
Delete