காந்தமடி நான் உனக்கு!!!-45

 


அத்தியாயம்-45


துவரை தன்னுடன் இணைந்து,  இழைந்து குழைந்து இருந்தவள்...அவளும் அவன் மீதான மோகத்தில் கட்டுண்டு இருந்தவள்...அவளை ஆட்கொள்ள அனுமதித்தவள்... திடீரென்று அவனை விலக்கியது ஏனென்று குழப்பமாக இருந்தது.

இதற்கும்,  ஒவ்வொரு நொடியும் அவளின் முகம் பார்த்து,  அவளின் சம்மதத்தை உணர்ந்த பிறகுதான் அவளை ஆட்கொள்ள ஆரம்பித்திருந்தான்.

இதுவரை அவளும் சம்மதித்ததால் தானே எல்லாம் நடந்தது.  திடீரென்று என்ன ஆயிற்று? ஏன் அப்படி கத்தினாள்? அவனுக்கு  ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன் அவள் சென்று குளியலறை கதவினையே  பார்த்துக் கொண்டிருந்தான் அமுதன்.  

நீண்ட நேரம் ஆகியும் சத்யா வெளியில் வரவில்லை.

அதற்கு மேல் காத்திருக்க முடியாதவனாய் எழுந்து தன் ஆடையை அணிந்துகொண்டு,  குளியல் அறைக்குச் சென்றவன்  கதவை மெதுவாக தட்டி சது என்றான் மென்மையாய்.

“ம்கூம்... உள்ளிருந்து பதில் எதுவும் வரவில்லை. கொஞ்சம் வேகமாக தட்டியவன்

“ப்ளீஸ்...கதவை திற சது... இவ்வளவு நேரம் உள்ள என்ன பண்ற? என்னாச்சு உனக்கு? என்ன பண்ணுது? ப்ளீஸ் வெளியில் வா மா...”  என்று மீண்டுமாய் மென்மையான குரலில் அழைக்க, அதற்கும் அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

அதைக் கண்டவனுக்கு திக் என்றது.

கதவை தாளிட்டுக்கொண்டு உள்ளே எதுவும் மயங்கி விழுந்து விட்டாளா? இப்ப எப்படி தெரிந்து கொள்வது என்று அவசரமாய் யோசித்தவன் கடைசி முயற்சியாய்

“சது...நீ இப்ப கதவை திறக்கவில்லை என்றால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வர வேண்டி இருக்கும். ப்ளீஸ்...வெளியில் வந்து விடு..” என்று சற்றாய் அதட்டலுடன் மிரட்ட, அதற்கு கொஞ்சம் ரெஸ்பான்ஸ் கிடைத்தது..  

“இல்லை... நான் திறக்க மாட்டேன்... நான் வெளியில் வர மாட்டேன்... வந்தால்...  வந்தால்... நீங்க என்னை... என்னை...”  என்று பாதியில் நிறுத்திக் கொண்டவள் மீண்டும் குலுங்கி அழ ஆரம்பித்தாள்.

அவளின் அழுகை சத்தம் மூடியிருந்த கதவையும் தாண்டி அவன் செவிகளை தீண்ட,  அவனின் மனம் பதைபதைத்து போனது.

இன்று காலையில்தான் அவள் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வர விடமாட்டேன் என்று அக்னி சாட்சியாய் உறுதி எடுத்து இருந்தவன்,  இப்பொழுது இப்படி அருவியாய் நீரை கொட்டிக் கொண்டிருக்கிறாளே  என்று மனம் பதைத்தது.

“ப்ளீஸ் சது...உனக்கு பிடிக்காதது எதுவும் நடக்காது. உன்னை நான் எதுவும்  செய்ய மாட்டேன். ப்ளீஸ் மா வெளியே வா...”  என்று  மீண்டுமாய் அவளிடம் கெஞ்ச,  

அவளோ அதை ஏற்றுக் கொள்ளாமல்

“இல்லை... நம்பமாட்டேன்... இந்த ஆண்களே மோசம். எல்லோருக்குமே பெண்களின் உடம்பு தானே தேவையா இருக்கு. நீங்களும் அந்த ஆண் வர்க்கத்தில்  ஒருத்தர் தன்...”  என்று அருவருப்புடன் அவள் கத்த அப்பொழுதுதான் அமுதனுக்கு  விஷயம் புரிந்தது

அவள் முன்பு சொல்லிய அவளின் சிறுவயது சம்பவம்...எப்படியோ அவளின்  மனதில் அதை ஆழ புதைத்துக் கொண்டால் போல.. இப்பொழுது மீண்டும் அப்படி ஒரு நிலையை காணவும் அவளின் ஆழ்மனம் விழித்துக் கொண்டது.

அதனால் தான்,  தன் கணவனே என்றாலும் அவளால் தன்னை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்ற உண்மை புரிந்தது அமுதனுக்கு.    

அவளின் மனதை புரிந்து கொண்டவன்  மீண்டுமாய் இலகிப் போனான்...

“எவ்வளவு தைர்யமானவள்...இப்பொழுது இப்படி உடைந்து கதறி அழுகிறாளே..அப்படி என்றால் அவள் மனம் எவ்வளவு அடிபட்டிருக்கும் அந்த சிறுவயதில்....” என்று அவன் மனம் அவளுக்காய் அடித்துக் கொண்டது.  

“இல்ல டா.  நான் அப்படியெல்லாம் இல்லை. அதோடு  எல்லா ஆண்களும் தப்பானவர்கள் இல்லை...ஏதோ ஒரு சில ஆண்கள் செய்யும் தவறுக்காக முழு மொத்த  ஆண் வர்க்கத்தையே வெறுத்து விடாதே...

உன்  அமுதன் அப்படிப்பட்டவன் இல்லை. ட்ரஸ்ட் மி. நீ என் உயிரானவள் டி. என் உயிரில் சரிபாதி. உனக்கு போய் நான் கஷ்டத்தை கொடுப்பேனா. உனக்கு பிடிக்காதது எதுவும் நடக்காது. ப்ராமிஸ்...ப்ளீஸ் டா வெளியில் வா…”  

என்று இன்னுமாய் அவளை  வற்புறுத்தி அழைக்க,  அவளும் மீண்டும் மீண்டுமாய் மறுத்துக் கொண்டிருந்தாள்  

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்தவன்

“சத்யா... இப்ப மட்டும் நீ வெளியில் வரவில்லை என்றால் முன்பு சொன்னது போல், இந்த கதவை உடைத்து விடுவேன். தேவையா அது?  முதலில் நீ வெளியில் வா...”  

என்று சத்தமாக கத்தி அதட்டவும்,  அவனின் அதட்டலுக்கு மிரண்டவளாய்,  அதற்கு மேல் உள்ளே  இருக்க முடியாமல்,  மெதுவாய் கதவை திறந்து கொண்டு கண்களில் மிரட்சியுடன் வெளி வந்தாள் சத்யா.

அவளின் முகத்தை கண்டவனோ அதிர்ந்து போனான்.  

சற்று முன்னால் அவனின் முத்தத்தில் கிறங்கி, மிளிர்ந்த,  பூரித்து இருந்த அவள்  கன்னங்கள் இரண்டும் இப்பொழுது கண்ணீரால் குளிப்பாட்டி இருக்க,  

சற்றுமுன் வரை அவனிடம் காதல் பேசிய அவளின் விழிகள் இப்பொழுது கண்ணீரை சொரிந்து கொண்டிருக்க, அவனின் தீண்டலில்,  வெட்கத்தில் சிவந்து இருந்த அவளின் செம்பவள இதழ்கள் இப்பொழுது அழுகையில் துடித்துக் கொண்டிருக்க,

பௌர்ணமி நிலவாய் ஜொலித்த அவளின் பால்நிலா முகமோ இப்பொழுது முழு மொத்த அருவருப்பில், அவனை பார்க்க பிடிக்காமல் எங்கோ முகத்தை திருப்பிக் கொண்டவாறு வெளிவந்தாள் சத்யா.  

தன்னவளை அந்த நிலையில் கண்டவன்  மனம் இன்னுமாய் துடித்துப் போனது.

அவளை  அப்படியே இறுக்க அணைத்து,  தன் மார்பின் மீது சாய்த்துக் கொண்டு அவளின் வேதனையை எல்லாம் போக்கிட தவித்தது அவன் மனம்.  

அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க முயல, வேற பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டிருந்தவள்,  அவனிடத்தில் அசைவு தெரியவும் உடனே கோபம் கொப்புளிக்க, அவன் பக்கம் திரும்பியவள் வேகமாய் கையை நீட்டி

“ஸ்டாப் தேர்...டோன்ட் கம் நியர் மி...டோன்ட் டச் மீ...ஸ்டே அவே...” என்று கர்ஜித்தாள் சத்யா.

அவள் முகம் கோபத்தில் செந்தனலாய் கொதிக்க, கண்கள் இரண்டு நெருப்பை கக்குவதை போல சிவந்து போய் பார்க்கவே பயங்கரமாக இருந்தாள்.  

அதைக் கண்டு இன்னுமாய் அதிர்ந்து போனான் அமுதன்.

எத்தனை முறை அவளாகவே அவனை நெருங்கி வந்து இருக்கிறாள்... அவனை  கட்டியணைத்துக் கொண்டிருக்கிறாள்... அவன் கன்னத்தில் ஏன் உதட்டில் கூட முத்தம் இட்டு இருக்கிறாள்.  

இப்பொழுது அவனுடைய அருகாமையே  அவளுக்கு அருவருப்பாய் இருப்பதைப் போல அவள் நடந்து கொள்ளவும், அதைக் கண்டு அவன் காதல்  மனம் வேதனை கொண்டாலும்,  அதை பின்னுக்குத் தள்ளி அவளை சமாதானபடுத்த முயன்றான்.

“ஓ.கே... இட்ஸ் ஓகே சது. நான் வரலை. உன் பக்கத்தில் வரவில்லை. யு பி  ரிலாக்ஸ்...”  என்று கனிவாக, இதமாக எடுத்துச் சொல்ல, அவளோ இன்னும் கோபம் கொண்டவளாய்

“இல்லை...நம்ப மாட்டேன்...நான் நம்ப மாட்டேன். நான் தூங்கின பிறகு,  மீண்டும் என் ட்ரெஸ் எல்லாம் கலட்டி....சீ... அசிங்கம்... முதலில் நீ வெளியில் போ...”  என்று அவனை வெறுப்புடன் பார்த்து, அறைக்கு வெளியே செல்ல சொல்லி கையை காட்டி கத்தினாள்...

“இல்லடா... அப்படியெல்லாம் எதுவும் நடக்காது...இனிமேல் உன் அருகில் வரமாட்டேன். நீ ரிலாக்ஸா இரு...”  என்று சமாதானம் சொல்ல முயன்றாலும்,  அவனை நம்பாதவளாய்  

“இல்லை...நீங்கள் முதலில் வெளியே போங்க... ஐ ஹேட் யூ... எனக்கு பிடிக்கல. இதெல்லாம் பிடிக்கல...”  என்று அந்த கட்டிலின் மீது இருந்த மலர் அலங்காரத்தை எல்லாம் வெறி கொண்டவளாய்  கலைத்து எறிந்தாள்.

தன் அக்கா இதுவரை தன் குடும்பத்துக்காக உழைத்து களைத்தவள்...  இனியாவது அவள்  கணவனுடன் சந்தோசமாக தன் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து அவள் தங்கைகள் அலங்கரித்த முதல் இரவு படுக்கை அலங்காரத்தை எல்லாம்  வெறி கொண்டவளாய் பிய்த்து எறிந்தாள் சத்யா.

அவளின் நிலை கண்டு தவித்து, அவளை நெருங்க முயன்ற அமுதனையும் கிட்ட வர விடாமல் தடுத்து நிறுத்தி,  அவன் மீது அங்கிருந்த தலையணையை எல்லாம் எடுத்து விசிறி அடித்தாள்.  

அமுதன் அவளின் செயலை கண்டு அதிர்ந்து போனவன்  அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.  

சத்யாவோ இன்னும் இன்னுமாய்  கோபத்துடன்,  வெறுப்புடன் அங்கிருந்த பொருட்களை எல்லாம் எடுத்து விசிறி அடித்து,  அந்த அறையை அலங்கோலமாக்கி கொண்டிருந்தாள்.  

அவளின் செய்கையில் இருந்து,  அவன் அங்கிருப்பது அவளுக்கு பிடிக்கவில்லை என்பதை கண்டு கொண்டவன்,  

“சது...உனக்கு நான் இங்கே இருப்பதுதானே பிடிக்கவில்லை. சரி மா... நான் இந்த ரூமை விட்டு போய் விடுகிறேன். நீ அமைதியாய் இரு. இவ்வளவு டென்ஷன் வேண்டாம். ப்ளீஸ் ரிலாக்ஸ்... “

என்றவன்  அடுத்த நொடி அங்கிருந்த பால்கனி கதவை திறந்து கொண்டு வெளியேற,  அதற்காகவே காத்திருந்தவள்  போல வேகமாக ஓடிவந்து அந்த அறைக் கதவை உட்புறமாக தாழிட்டுக் கொண்டாள் சத்யா.  

பால்கனிக்கு வந்திருந்த அமுதனுக்கு வேதனையாக இருந்தது.

தன்னவளுடனான முதலிரவை இனிமையாக கழிக்க எப்படி எல்லாம் கனவு கண்டு கொண்டிருந்தான். 

அதெல்லாம் இப்படி ப்ளாப் ஆகி போனதே என்று ஒரு நொடி மனம் வாடினாலும் அடுத்த நொடி அவன் மனம் தன்னவளுக்காய் பார்த்து பதறிப் போனது.

என்னதான் அந்த சம்பவத்தை மறந்து விட்டதாக அவள்  எண்ணி இருந்தாலும் அவளின் ஆழ் மனதில் அழுத்தமாய் பதிந்து விட்டது போல.

அதுதான் மீண்டும் அதே மாதிரி ஒரு சிச்சுவேஷன் வரும் பொழுது அவளுக்கு அவளின் நினைவுகள் அந்த பழைய புள்ளியை தொட்டு விட்டன போல...”  என்று சரியாக கணித்தவன்  

“இதை எப்படி சரி செய்வது?”   என்று அவளுக்காய் யோசிக்க ஆரம்பித்தான் அமுதன்..! .


Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!