காந்தமடி நான் உனக்கு!!!-46

 


அத்தியாயம்-46

 

றுநாள் காலை கண்விழித்த சத்யாவிற்கு,  உடம்பெல்லாம் அடித்துப் போட்டது போன்ற வலி.

தன் கையை முறுக்கி,  காலை ஸ்ட்ரெட்ச்  பண்ணி,  உடம்பை வளைத்து என்று தன் அசதியை விரட்ட முயன்றவள், பின் மெதுவாக கண் திறக்க அடுத்த நொடி அதிர்ந்து போனாள்,  

அவளின் பார்வையின் வட்டத்தில் வருகிறாள் பெண் ஒருத்தி. கன்னம் குழிய சிரித்துக் கொண்டிருந்தாள்.

அதில் திடுக்கிட்டவள் மீண்டும் தன் கண்களை கசக்கி கொண்டு மீண்டும் உற்று பார்க்க, மீண்டுமாய் அதே குறும்பு சிரிப்புடன் அவளுக்கு எதிரில் நின்றிருந்தாள் அவள்...  

ஆளுயர புகைப்படத்தில் புன்னகையுடன் நின்றிருந்த சத்யா..!   

அந்த ஆளுயர புகைப்படத்தில்,  தன்னைக் கண்டவள்,  ஒரு நொடி அதிசயித்துப் போனாள் சத்யா.

அவளின் புகைப்படம்... அதுவும் இவ்வளவு பெரிய சைஸில்...தன் அறையில்... எப்படி? என்று கண்களை சுழற்றி பார்க்க, அப்பொழுதுதான் இது அவள் அறை  இல்லை என்பது புரிந்தது.

கூடவே ஆங்காங்கே பொருட்கள் எல்லாம் கலைந்து கிடப்பதும்,  அதைவிட படுக்கையின் மீது கிடந்த வாடிப் போயிருந்த மலர்கள்...

அவள் தலையில் சூடியிருந்த மல்லிகை பூக்கள் எல்லாம் உதிர்ந்து,  காய்ந்து போய் இங்கொன்றும் அங்கொன்றுமாய் தொங்கி கொண்டிருந்தன.    

வெறும் நார் மட்டும்  முன்னால் தொங்கிக் கொண்டிருக்க, அதைக்கண்டு இன்னுமே அதிர்ந்து தான் போனாள். பின் ஏதோ ஒன்று வித்தியாசமாக இருக்க,   குனிந்து தன் முன்னால் பார்க்க,  அவளின் மார்பில் தொங்கிக் கொண்டிருந்தது புத்தம் புதிய பொன்தாலி

அதைக் கண்டதும் தான் அவளுக்கு நேற்றைய சம்பவங்கள் நினைவுக்கு வந்தன.  

அமுதன் தன் கழுத்தில் அந்த தாலியை  கட்டியது நினைவு வர, இப்பொழுது தன்னவன் தனக்கே சொந்தமாகி விட்டான் என்று முகம் பூரிக்க,  அதை எடுத்து தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள்.

அடுத்ததாய் என்ன நடந்தது என்று தலையை தட்டி யோசிக்க,  இறுதியாய் பால் சொம்புடன் பள்ளி அறைக்கு வந்ததும், அடுத்ததாய் அவனின் அணைப்பில்,  இதே  கட்டிலில் அவன் மஞ்சத்தில் கிறங்கி  கிடந்ததும் நினைவு வந்தது.

அவனின் கைகளின் ஆளுமையில்,  மெலுகாய் உருகி குழைந்து படுக்கையில் கிடந்ததும், அவனும் தாபத்துடன் அவளை ஆட்கொள்ள ஆரம்பித்ததும் நினைவு வர , இப்பொழுதும் அவள் கன்னங்கள் சூடேறி சிவந்து போயின வெட்கத்தால்.

தன் கரங்களை எடுத்து முகத்தில் பொத்திக் கொண்டு வெட்கப்பட்டு சிரித்தாள் சத்யா.

அதற்குப்  பின் என்ன ஆனது என்று யோசித்தவளுக்கு ஒன்றும் நினைவில்லை.

“அச்சோ... ஒருவேளை அப்படியே தூங்கிட்டேனா?  சே...நான் ஒரு சரியான தூங்கு மூஞ்சி. என்ன நினைத்திருப்பான்  அம்மு? “  என்று மீண்டும் வெட்கப்பட்டு சிரித்தவாறு,  தன் முகத்தின் மீது போர்த்தி இருந்த போர்வையை கொஞ்சமாய் விலக்கி,  கண்களால் தன் கணவனை தேடினாள்.  

படுக்கையில் படுத்தவாறே கண்களை சுழற்றி,  ஓரக்கண்ணால் கட்டிலின் மறுபக்கம் பார்க்க,  அங்கே அவளவன் இல்லை.  

அதற்குள்  எங்கே போய்விட்டான் என்று யோசித்தவாறு போர்வையை முழுவதுமாக விலக்கி எழுந்தவள்,  பின் குளியல் அறைக்குள் சென்று, தலைக்கு குளித்து முடித்து,  ஒரு புடவையை கட்டிக்கொண்டு வெளி வந்தாள்.  

அப்பொழுதும்  அறையில் அமுதன் இல்லை.  

ஒருவேளை கீழே போயிட்டாரோ  என்று எண்ணியவாறு,  பால்கனி கதவை திறந்து கொண்டு வெளியில் வர,  அங்கே கண்ட காட்சியில்  ஒரு நொடி அதிர்ந்தாலும்,  பிறகு சிரிப்பு பொங்கி வர, பக் என்று சிரித்து விட்டாள் சத்யா.

பால்கனியில் இருந்த சிட்அவுட்டில்,  குட்டியாய் இருந்த பென்ச் ல் , தன் உடலை வைத்து குறுக்கிக் கொண்டு படுத்திருந்தான்  அவள் கணவன்...

அவனின் ஆறடி உயரத்திற்கு அந்த சிறிய பென்ச் இடுப்புவரைக்கும் தான் பொருந்தியிருந்தது. அங்கிருந்த இருக்கைகளில் இரண்டை ஒன்றாக இழுத்து போட்டு இணைத்து இருந்தவன்,  காலை அதன் மீது வைத்துக் கொண்டு எப்படியோ சமாளித்து உறங்கிக் கொண்டிருந்தான்.  

சிறுபிள்ளையாய் கண்களை சுருக்கி கொண்டு, கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, அசந்து உறங்கும் தன் கணவனையே ஒரு நொடி இமைக்க மறந்து ரசித்து பார்த்திருந்தாள் சத்யா.

அதோடு நேற்றிரவு அவன் சொல்லியது எல்லாம் நினைவு வர,  தனக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறான் என்று மீண்டுமாய் உள்ளம் பூரிக்க பெருமையுடன் தன் கணவனின் முகத்தை ரசனையுடன் ஆழ்ந்து பார்த்தாள்  சத்யா.

அவனோ கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு உறங்கிக் கொண்டிருக்க,  அவன் முகத்தில் அப்படியே பிடிவாதத்துடன் உறங்கும் குழந்தை போல இருந்தான்.  

“சரியான பிடிவாதக்காரன் தான். அவன் நினைத்ததை சாதித்து விட்டானே...”  என்று பெருமையுடன் சிரித்தவாறு அவனருகில் சென்றவள்,  

“அம்மு... “  என்று மெல்ல அழைத்தாள் சத்யா.  

நேற்று இரவு நீண்ட நேரம் வரை உறக்கமில்லாமல்,  அந்த பால்கனியிலேயே நடந்து கொண்டிருந்தவன்,  அப்பொழுதுதான் உறங்க ஆரம்பித்து இருந்தான்.  

அதனால் அவளின் குரல் அவனுக்கு கேட்கவில்லை. மீண்டும் ஒரு முறை அவனை அழைக்க,  அப்பொழுதும்  பதில் இல்லை அவனிடத்தில்.  

பின் மெல்லக் குனிந்து அவனின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு,  அவன் காதருகே

“குட் மார்னிங் மைடியர் ஹஸ்பன்ட்...”  என்று குறும்புடன் சொல்ல,  அவளின் முத்தத்தில் திடுக்கிட்டு விழித்தவன், வெகு அருகில் சத்யாவை காணவும்,  அடித்து பிடித்து வாரி சுருட்டி எழுந்து அமர்ந்தான் அமுதன். .

கூடவே எதிரில்  நின்றிருந்தவளை கண்டு மிரண்டு போனான்.  

அவசரமாய் இங்கே அவள் அடிப்பதற்கும், தூக்கி விசிறி எறிவதற்கும்  ஏதாவது பொருட்கள் இருக்கிறதா என்று கண்களை சுழற்ற,  அவள் தூக்கி போடுவதற்கு ஏதுவாக சிறிய பொருட்கள் எதுவும் அங்கே இல்லாமல் போக நிம்மதி மூச்சு விட்டவன்,   அப்பொழுதுதான் நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தான்.  

அடுத்த நொடி இன்பமாய் அதிர்ந்து போனான்...  

அந்த அதிகாலையிலேயே குளித்து முடித்து விட்டு,  தலையில் டவலை சுற்றியிருந்தவள், அவள் கூந்தலில் இருந்த நீர்  இன்னுமாய் ஒவ்வொரு சொட்டுக்களாக விழுந்து கொண்டிருக்க,  

பனியில் நனைந்த புத்தம் புது ரோஜாவாய்,  கன்னம் குழிய சிரித்துக் கொண்டிருந்த தன்னவளை  கண்டதும் அதிசயித்துப் போனான் அமுதன்.  

இவள்தான் நேற்று இரவு சந்திரமுகியாய்  மாறி இருந்தாள் என்று சொன்னால் அவனை எல்லோரும் பைத்தியம் என்று ஏற இறங்க பார்த்து வைத்திருப்பார்கள்.

அந்த அளவுக்கு,  நேற்று கோபத்தில் கொதித்த அவள் முகம்,  இப்பொழுதோ  பளிச்சென்ற பால் நிலவாய் மிளிர்ந்தது.

சத்யா மாநிறம்தான் என்றாலும் நல்ல கலையான முகம். அந்த முகத்தில், இப்பொழுது  கல்யாணப் பெண்ணிற்கான, புதுப்பெண்ணிற்கான கலையும் சேர்ந்து இருக்க, இன்னுமாய் மிளிர்ந்தாள் சத்யா.  

தன்னவளை அந்த கோலத்தில் பார்த்ததும், அவன் மனம் தறிகெட்டு எகிறி குதித்தது. அவளை அப்படியே இழுத்து அணைத்துக் கொள்ள,  அவன் கரங்கள் துடித்தன.

ஆனாலும் நேற்று இரவு ஃபர்ஸ்ட் நைட்டில் நடந்த கடைசி சீன் நினைவில் வந்து,  அவனை பயமுறுத்தியது.

உடனே தன்  தலையை உலுக்கி,  சமாளித்துக் கொண்டவன்,சத்யாவை பார்த்து  அசட்டு சிரிப்பை சிரித்து வைத்தான்.  

அவளோ நேற்று இரவு சம்பவத்தில் இன்னுமாய் வெட்கப் பட்டு சிவந்தவள், பின் தன் வெட்கத்தை மறைத்துக்கொண்டு  

“என்னாச்சு அம்மு?  ஏன் இங்க வந்து படுத்து இருக்கீங்க? “  என்றாள் குழப்பமாக.

அதை கேட்டதும் இன்னுமாய் அதிர்ந்து போனான் அமுதன்.  

“அடிப்பாவி...நேற்று இரவு, என் சட்டையை பிடித்து வெளியே தள்ளாத குறையாக என்னை உள்ளே இருந்து வெளியே தள்ளி விட்டு விட்டு,  இப்பொழுது ஏன் இங்கே வந்து படுத்திருக்கிறாய் என்று கேட்கிறாளே..  

இவளை என்ன செய்யலாம்? “  என்று உள்ளுக்குள் பற்களை கடித்துக் கொண்டவன், தன்னை மறைத்துக் கொண்டு

சும்மா தான் சது. ஒரு வேண்டுதல்..அதான்...”   என்றான் அமுதன் பொங்கி வந்த ஏமாற்றத்தை  மறைத்துக் கொண்டு.

“வேண்டுதலா?  அப்படி என்ன வேண்டுதல்? “  என்றாள் விடாமல்.

“அதுவா...நமக்கு நல்லபடியாக நம் திருமணம் நடந்து விட்டால், தினமும் இரவில் இப்படி பால்கனியில் படுத்து உறங்குவதாக வேண்டிக் கொண்டேன். அதுதான்...”  என்றான் உள்ளுக்குள் நொந்து கொண்டே.  

“ஓ...இப்படியெல்லாம் வேண்டுதல் இருக்கா? “ என்று யோசித்தவள் பின் ஏதோ நினைவு வர,

“ஆமா அம்மு... நேற்று நைட்டு நம்ம ரூம்ல தானே இருந்தீங்க... நமக்கு கூட ஃபர்ஸ்ட் நைட் நடந்ததே...அப்புறம் எப்படி.. ” என்று சொல்லும்பொழுதே  அவளின் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்து போக, உடனே தலையை குனிந்து கொண்டாள்.

தன்னவளின் சிவந்த காஷ்மீர் ஆப்பிள் போன்ற கன்னத்தை கண்டவனுக்கு இன்னுமாய் உள்ளுக்குள் எகிறி குதித்தது.

அதுவும் புது மனைவி... இப்படி பிரஷ்ஷாக காலையிலேயே குளித்துவிட்டு ஈரம் சொட்ட சொட்ட நின்றுகொண்டிருப்பதை பார்க்கவும்,  அவனுக்கு கணவனின் உணர்வுகள் கிளர்ந்து எழுந்தன.  

ஆனாலும் அந்த நேற்று இரவு சமபவம் மீண்டும் நினைவில் வர,  அவசரமாய் தன் ஆசைக்கு தடை போட்டவன்,  அவளை பார்த்து செல்லமாக முறைத்தவன்

“அடியே...நமக்கு ஃபர்ஸ்ட் நைட் ஒன்னும் நடக்கல. ஆரம்பித்தது வேணா நல்லா தான் ஆரம்பித்தது. அதுக்குள்ள தான் சந்திரமுகி வந்துவிட்டாளே...”  என்று தனக்குள்ளே புலம்பிக் கொண்டவன்,  சத்யாவை பார்த்து

“சது...நேற்று இரவு நடந்தது எல்லாம் உனக்கு நினைவிருக்கிறதா? “  என்று விசாரித்தான்.

அவனின் முன்னே,  இவ்வளவு இயல்பாக பேசுபவள்,  எப்படி நேற்று இரவு அப்படி நடந்து கொண்டிருக்க முடியும் என்று யோசித்தவன்,  அவளை ஆராய்ச்சியுடன் பார்த்து வைத்தான்.  

அதைக் கேட்டவளோ இன்னுமாய்  கன்னம் சிவந்து போக,  அவன் அமர்ந்திருந்த இருக்கையில் அவனுடைய மடியில் வந்து அமர்ந்து கொண்டவள், அவன் கழுத்தில் தன் இரு கரங்களையும் மாலையாக்கி போட்டுக்  கொண்டவள்  

“போங்க... அம்மு...எனக்கு வெட்கமா இருக்கு...”  என்றவள் மீண்டும் வெட்கத்துடன் புன்னகைத்தவாறு,  அவன் மார்பில் தன் முகத்தை புதைத்துக் கொண்டாள்.

அவளின் அந்த செய்கையில் இன்னுமே கிறங்கி போனான் அமுதன்.

அவளின் மேனியில் இருந்து வந்த சோப்பின் வாசமும், அவளின் வாசமும் சேர்ந்து அவனை இன்னுமே புரட்டி போட்டது. ஆனாலும் சில விசயங்களை தெளிவு படுத்திக்க வேண்டி இருந்ததால் மீண்டும் அவளை ஆராய்ந்தான்.

“நிஜமாகவே... எல்லாமே ஞாபகம் இருக்கா பேபி...” என்று திரும்பவும் கேட்டான். அவளோ அவன் மஞ்சத்தில் இன்னுமாய் தன்னை புதைத்துக் கொண்டவள் ஆமாம் என்று தலையசைத்தாள்.  

அவனுக்கோ இன்னுமே குழப்பமாகிப் போனது.

நேற்று அவள் தன்னிடம் நடந்து கொண்டதுக்கும், இப்பொழுது இப்படி அவளாகவே அவனை நெருங்கி வந்து,  அவனை கட்டிக்கொண்டதுக்கும் ஒரு பொருத்தமும் இல்லையே என்று குழப்பம் மேலிட,

“சரி... நீ எதையாவது தூக்கி என் மீது போட்ட மாதிரி ஞாபகம் இருக்கா? “  என்ற மறைமுகமாக விசாரித்தான்.

அதைக் கேட்டவள் குழப்பத்துடன்,மெல்ல விழிகளை மட்டும் உயர்த்தி,  அவன் முகத்தை நோக்கியவள்

“நான் எதற்கு உங்க மீது தூக்கி போட வேண்டும் அம்மு. அதுவுமில்லாமல் நீங்கதான் என்னை இப்படியும் அப்படியும் நகரவிடாமல் அப்படி இறுக்க கட்டிப்பிடித்துக் கொண்டீங்களே...”  என்று மீண்டுமாய் நேற்றைய கூடல் நினைவு வர, அவள் கன்னம் மீண்டும் ஒரு தரம் வெட்கப்பட்டு சிவந்தது.

அவனின் மார்போடு இன்னுமாய் ஒன்றிக்  கொண்டாள்.

அதைக்கண்ட அமுதனுக்கு இன்னும் குழப்பம் அதிகம் ஆகிப் போனது.

அவளின்  பேச்சில் இருந்து ஒன்று தெளிவாக புரிந்தது.  

நேற்று இரவு இறுதியாக நடந்தது எதுவும் அவளுக்கு நினைவில் இல்லை.  அப்படி என்றால் தன்னை மறந்து,  வேற ஒருத்தியாக மாறிவிடுகிறாளா?

இல்லை சந்திரமுகி போல, இல்லைனா  காஞ்சனா வைப் போல இவளுக்கு பேய் எதுவும் பிடித்திருக்குமோ?  என்று யோசித்துக் கொண்டிருக்க,  அவன் மார்பில் முகம் புதைத்திருந்தவளோ  தலையை மட்டும் நிமிர்த்தி,  அவன் முகத்தை மையலுடன்  பார்த்தவள்,  

“என்னாச்சு அம்மு?  ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? “  என்றாள்  யோசனையுடன்.

அதற்குள் தன்னை சமாளித்துக் கொண்டவன்

நத்திங்...ஒன்னும் இல்லம்மா...”  என்று சமாளித்தான். ஆனால் அதை நம்பவில்லை அவள்.

தன் தலையை இருபக்கமும் ஆட்டியவள்  

“இல்லை...எதுவோ என்னிடம் மறைக்கிறீங்க...உண்மையை சொல்லுங்க. உங்க மனதில் இப்ப என்னவோ ஓடிக்கிட்டிருக்கு? “  என்று ஆராய்ச்சியுடன் பார்க்க,

“அதெல்லாம் இல்லடா...ஐம் அஸ் யூஸ்வல்... “  என்று சமாளிக்க முயல,

“இல்லையே...நீங்கள் சாதாரணமான அமுதனாக இருந்தால்,  இந்நேரம் நான் வந்து இப்படி கட்டிக்கிட்டதுக்கு,  நீங்க சும்மா இருந்திருக்க மாட்டீங்க...”  என்று வெட்கத்துடன் கண் சிமிட்ட, அப்பொழுது தான் அவள் சொல்ல வந்தது புரிந்தது.

அவனுக்குள் இருந்த குழப்பத்தில்,  அவளாகவே அவனை நெருங்கி வந்ததும் அவன் மடியில் அமர்ந்து கொண்டு, தன் கரங்களை  இப்படி அவன் கழுத்தில் மாலையாக போட்டுக் கொண்டதும்,  அவன் கருத்தில் பதியவில்லை.

இப்பொழுது அதை உணர்ந்தவன், அடுத்த நொடி  தன் குழப்பத்தை பின்னுக்கு தள்ளி,  அவளை மெல்ல அணைத்து கொண்டவன்,  அவளின்  காதுமடலில்  தன் முகத்தால் உரசியவன்

“என் பொண்டாட்டி...காலையிலயே குளிச்சிட்டு இவ்வளவு பிரஷ்ஷாக இருக்கிறாளே.  அவளை மீண்டும் அழுக்காக்க வேண்டாம் என்று தான் விட்டுக் கொடுத்தேன்...”  என்று கல்மிஷத்துடன் புன்னகைத்து சமாளிக்க முயல,  

“ஆஹான்... உங்கள மாதிரி ஒரு நல்லவனை இந்த உலகத்திலேயே தேடினாலும் கண்டு பிடிக்க முடியாது. இந்த பொண்டாட்டி மேல என்ன ஒரு அக்கறை..

ஸோ ஸ்வீட் ஆப் யூ...ஐ லவ் யூ சோ மச்...” என்று கிளுக்கி சிரித்தவள், அவன் கன்னத்தில் அழுத்தமாய் முத்தம் பதிக்க,  அவ்வளவுதான் அதுவரை அணை போட்டு தடுத்து வைத்திருந்த அவனுடைய உணர்வுகள் மீண்டுமாய் பொங்கி எழ, அவளை இழுத்து தாபத்துடன் அணைத்தவன் அவளின்  செவ்விதழை சிறைப் பிடித்தான்.

அவனின் தாப அணைப்பில் பெண்ணவளும் உருகி, குழைந்து போக, சற்றுநேரம் தன்னவளை முத்தத்தால் ஆராதித்தவன் பின் அவளை அப்படியே கையில் அள்ளிக்கொண்டு அறைக்குள் வந்தான்.

தன் கணவனின் மோகத்தில் இன்னுமே மயங்கி போனவள், மையலுடன் அவன் மஞ்சத்தில் புதைந்து கொள்ள, அறைக்கு உள்ளே  வந்தவன், அங்கிருந்த கட்டிலில் அவளை கிடத்த,  அப்பொழுது தான் அறை முழுவதும் சிதறிக் கிடந்த பொருட்கள் கண்ணில் பட்டன.

அதைத் தொடர்ந்து அவள் நேற்று நடந்து கொண்டதும் அவன் கண் முன்னே வர,  சிறு தயக்கம் அவன் உள்ளே.

மீண்டும் அவள் அந்த மாதிரி நடந்து கொண்டால் என்று சந்தேகம் வர, அவளை அப்படி ஒரு நிலையில் மீண்டும் பார்க்க அவனுக்கு மனமில்லை.

அதனால் அவளை தழுவுவதற்கு யோசனையாக சில நொடிகள் கண் மூடி நின்று விட்டான்.

கட்டிலில் கிடந்த சத்யாவோ தன் கண்களை மூடி,  தன்னவனின் அணைப்புக்காக காத்திருந்தவள், பின் மெல்ல கண் திறந்து தன்னவனை பார்க்க, அதுவரை யோசித்து கொண்டிருந்தவன், அவள் தன்னை பார்ப்பது தெரியவும் உடனே தன்னை சமாளித்துக் கொண்டவன்

“சாரி பேபி...ஒரு இம்பார்ட்டன்ட் கால் பண்ணனும். இதோ கால் பண்ணிட்டு வந்திடறேன்...” என்றவன் அவசரமாக தன் அலைபேசியை எடுத்துக் கொண்டு பால்கனிக்கு சென்றான்.

அவனின் செயலைக் காண, சத்யாவுக்கு லேசாக அதிர்ச்சியாக இருந்தது.

“அம்மு இப்படி எல்லாம் நடந்து கொள்ள மாட்டானே? அவளே வெட்கத்தை விட்டு அவனை நாடிய பொழுதும், அவளை விலக்கி நிறுத்துவது போல அல்லவா தயங்கி நின்றான்.

அதோடு வேறு ஏதோ சம்பந்தம் இல்லாமல் என்னென்னவோ கேட்டு வைத்தானே? ஏன் அப்படி கேட்டான் ? “ என்று யோசனையோடு படுக்கையில் படுத்தவாறே கண்களை சுழற்றினாள்.

அப்பொழுதுதான் அங்கே இறைந்து கிடந்த பொருட்களையெல்லாம் கண்டாள். முன்பு அதை பார்த்த பொழுது கண்டுகொள்ளாதவள், இப்பொழுது அந்த பொருட்களை எல்லாம் காணவும் அவளுக்கு யோசனையானது.

“ஒருவேளை இதைத்தான் அமுதன் கேட்டிருப்பானோ?  எப்படி இதெல்லாம் சிதறியது?”  என்ற யோசனையுடன், படுக்கையில் இருந்து எழுந்தவள்,  சிதறி கிடந்த பொருட்களை எல்லாம் அடுக்கி வைக்க ஆரம்பித்தாள்.  

சற்று நேரத்தில் அந்த அறை முன்பு இருந்ததை போல நேராகி இருந்தது. அதைப்பார்த்து திருப்தியுடன் புன்னகைக்க, அதே நேரம் பால்கனிக்கு சென்றிருந்த அமுதன் திரும்பி வந்திருந்தான்.

திரும்பி வந்தவன், சத்யாவின் அருகில் வந்து

“சது... ஆன்ட்டி உன்கிட்ட பேசணுமாம். நான் ராக்கி உடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஆன்ட்டியின் கால் வந்தது. நீயே பேசு...”  என்று தன்  அலைபேசியை அவளிடம் கொடுக்க,  அவளும் வாங்கி தன் அன்னையிடம்  உற்சாகமாக பேச ஆரம்பித்தாள் அவளுக்குள்  இருந்த குழப்பத்தை மறந்து.  

தன் மகளின் குரலில் இருந்த உற்சாகமே அவள் சந்தோஷமாக தன் வாழ்க்கையை ஆரம்பித்து விட்டாள் என்று சொல்லாமல் சொல்ல, அந்த தாய்க்கு பெரும் நிம்மதியாக இருந்தது.

கூடவே மனம் எல்லாம் சந்தோஷத்தில் பூரிக்க, அதே சந்தோஷத்தில் தன் மகளையும், மருமகனையும் மறுவீட்டு அழைப்பு என்று சொல்லி மதிய உணவுக்கு தன் வீட்டிற்கு அழைத்திருந்தார். வளர்மதி..! 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!