அழகான ராட்சசியே!!!-11
அத்தியாயம்-11
அன்று
வெள்ளிக்கிழமை..
வெள்ளிக்கிழமை என்றாலே ஒரு வித உற்சாகம் வந்து
ஒட்டிக் கொள்ளும் ஒவ்வொருவருக்கும்.. ஏனென்றால் அந்த வாரத்தின் கடைசி நாள் அன்று ..
இயந்திர தனமாக காலையில் எழுந்து அவசரமாக வீட்டு வேலைகளை செய்து, அலுவலகம் வந்து அங்கிருந்த வேலைகளை அதே இயந்திர தனமாக முடித்து வீடு திரும்பி என ரொட்டீன் வாழ்க்கை தற்காலிகமாக
முற்று பெறுவது இன்றோடு..
அடுத்த இரண்டு நாட்கள் ரிலாக்ஸாக இருக்கலாம்
என்று எண்ணுகையிலயே வெள்ளிகிழமை அன்றே வார விடுமுறை கொண்டாட்டத்துக்கான உற்சாகம்
வந்து ஒட்டி கொள்ளும்...
அன்று மட்டும் எல்லாருமே இலகுவாக சிரித்த முகத்துடன்
வளைய வருவர்..
அப்படி எல்லாருமே ஆவலுடன் எதிர்பார்க்கும்
இந்த நாளில் மகிழனுமே காலையில் எழுந்த உடனே அன்று ஏதோ ஒரு புத்துணர்ச்சியுடன் உலா
வந்தான்.. உடற்பயிற்சி செய்யும் பொழுதும் அதன் பிறகு குளிக்கும் பொழுதும் என அவனை
அறியாமலயே ஒரு உற்சாகம் ஒட்டிக் கொண்டது..
நேற்று ரோகிணி கொடுத்த அறிவுரையின் படி
இன்று யோகாசனத்தையும் காலையில் சேர்த்து கொண்டான்.. அவன் முன்பு செய்த சில
ஆசனங்களை செய்ய, மனம் இன்னும் லேசாகி புத்துணர்வுடன்
இருந்தது.
தனக்கு பிடித்த பாடலை ஹம் பண்ணிய படியே
அலுவலகம் செல்ல தயாராகி மாடிப் படிகளில் தாவி தாவி இறங்கி வந்தான்.. வழக்கமான
அலுவலகத்துக்கு அணியும் பார்மல் உடையில்
இல்லாமல் ஜீன்ஸ் ம் டீசர்ட் ம் அணிந்திருந்தான்..
மாடிப் படிகளில் துள்ளலுடன் இரண்டு இரண்டு
படிகளாக தாவி இறங்கி வர, அவன் வேகத்துக்கு அவன் முன்
நெற்றி கேசம் அழகாக அசைந்தாட, அதை ஸ்டைலாக கைகளில் ஒதுக்கிய படி
வந்த தன் இளைய மகனையே கண் நிறைந்து ரசித்த படி பார்த்து கொண்டிருந்தார் சிவகாமி..
உணவு மேஜையில் காலை உணவை அவனுக்காக எடுத்து
வைத்து காத்து கொண்டிருந்தவர் அவன் துள்ளலுடன் வருவதையே புன்னகையுடன் பார்த்து
கொண்டிருந்தார்..அருகில் வந்தவன்
“ஹாய் சிவகாமி தேவி.. குட் மார்னிங்.. “ என்று
சிரித்த படி அவர் எதிரில் வந்து
அமர்ந்தவனை கண்டதும் அவரும் புன்னகைத்து
“என்னடா சின்னவா... ரொம்ப குஷியா இருக்க போல
இருக்கு.. என்ன? என் சின்ன மருமகளை கண்டு புடிச்சிட்டியா? “ என்றார் சிரித்தவாறு..
“ஹா ஹா ஹா.. அதெல்லாம் இல்ல மா.. அவ வர்ர
அன்னிக்கு வரட்டும்..இன்னைக்கு சும்மாதான்.. பீலிங் ஹேப்பி. “ என்று அவர் கன்னத்தை இரு பக்கமும் பிடித்து இழுத்து
ஆட்டியவன்
“ஆமா.. எங்க என் பிரின்ஸஸ் ? இந்நேரம் என் சத்தம் கேட்டதும் குதிச்சிருக்கணுமே.. “ என்றான் கண்களால்
துழாவியவாறு..
“ஹ்ம்ம் உன்ன மாதிரியே அவளும் ஒரு இடத்துல இருக்க மாட்டேங்கிறா.. தோட்டத்துல
பட்டாம் பூச்சியை பார்க்கணும் னு அங்கயே
கையை காட்டி கூட்டி போகச் சொல்றா.. எவ்வளவு நேரம் அவள வச்சுகிட்டே அங்க நிக்கறதாம்..என்னால முடியலைனு நான்
வந்திட்டேன்.. மதுதான் அங்க வச்சுகிட்டு நிக்கறா..
வீட்டுக்கு உள்ள வந்தா அழ ஆரம்பிச்சிடறா..
சரியான வால் ஆ வருவா போல இருக்கு.. அகிலா வ கூட சமாளிச்சிட்டேன். இந்த குட்டிய
சமாளிக்க முடியலை.. “ என்று சிரித்தார்..
“ஹா ஹா ஹா.. பின்ன
இத்தனை பேர் வீட்ல உட்கார்ந்து இருக்கீங்க இல்லை... அதன் ஒவ்வொருத்தருக்கா வேலை
கொடுக்கறாளாக்கும்... அவ யார்.? தி கிரேட் ACP நிகிலனோட பொண்ணு இல்ல.. அதான் எல்லாரையும் உட்கார விடாம ட்ரில் வாங்கறா..
“ என்று சிரித்தான்...
அவரும்
சிரித்து கொண்டே அவனுக்கு காலை உணவை எடுத்து வைத்து, அவரும் தனக்காக மது
செய்து வைத்திருந்த ராகி கலியை தன் மருமகளை திட்டியபடியே அவனுடன் சேர்ந்து
சாப்பிட்டார்..
தன்
அன்னையிடம் வம்பு இழுத்து கொண்டே சாப்பிட்டு முடித்து கை கழுவியவன் தன் அன்னையிடம்
விடை பெற்று தன் பைக் சாவியை எடுத்து
கொண்டு தோட்டத்துக்கு சென்றான்..
மனதுக்கு
மிகவும் உற்சாகமாக இருக்கும் நாட்களில் மகிழன் தன் பைக்கில் செல்வது வழக்கம்..
இன்று என்னவோ பைக் ல் போக தோன்ற, காரை விடுத்து பைக் ல் போக திட்டமிட்டிருந்தான்..
தோட்டத்தில்
மது தன் மகள் நித்திலாவுடன் பட்டாம் பூச்சி பின்னால் ஓடி கொண்டிருக்க, அதை கண்டு சிரித்தவாறு
அவளிடம் சென்றான்.. இவனை கண்டதும் வழக்கம்
போல இவனிடம் தாவி வந்தாள் அந்த குட்டி நித்திலா..
அவனும்
அவளை அள்ளி கொஞ்சி விட்டு திரும்ப மதுவிடம் கொடுக்க, அவன் டீசர்ட் காலரை
கெட்டியாக பிடித்து கொண்டு மதுவிடம் வர
மறுத்தாள்...அதை கண்டு கடுப்பான மது,
“திருடி..
இவ்வளவு நேரம் என்கிட்ட தான இருந்த.. இப்ப பார் உன் சித்தப்பாவை பார்த்ததும் அங்க
தாவிட்டியே.. அவர் போனதும் நான் தான் உனக்கு கம்பெனி கொடுக்கணும்.. மறந்திடாத..
ஒழுங்கா என்கிட்ட வந்திடு.. “ என்று முறைத்தாள்..
அந்த
குட்டி திரும்பி மதுவை பார்த்து விட்டு
மீண்டும் முகம் திருப்பி மகிழன் தோளில்
முகத்தை புதைத்து கொண்டு வர மாட்டேன் என்று
குதித்தாள்..
மகிழனுக்கோ
கொள்ளை மகிழ்ச்சி.. அப்படியே அவளை அணைத்து அவள் பட்டு கன்னத்தில் முத்தமிட்டவன்
“நீ
வாடா பிரின்ஸஸ். என் கூட ஆபிஸ் போகலாம்.. உன் மம்மி வேண்டாம்.. “ என்றவாறு அவளை
தூக்கி கொண்டு தன் பைக் ஐ நோக்கி சென்றான்..
“ஹலோ
மகி.. சொன்ன சொல்லை காப்பாத்தணும்..
இன்னைக்கு புல்லா நீங்கதான் அவளை பார்த்துக்கணும் சொல்லிட்டேன்.. “ என்று மது கத்த அவன் கண்டு கொள்ளாமல் அவளை தூக்கி
கொண்டு பைக் ஐ அடைந்தவன் அதில் முன்னால் அமர வைக்க, புதிதாக
அந்த வாகனத்தை பார்க்கவும் குஷியில் அதன் மீது நன்றாக அமர்ந்து கொண்டு தன் பிஞ்சு கையை
அதன் மீது தட்டினாள் அந்த குட்டி..
அவன்
அடுத்து என்ன செய்ய போகிறான் என அறிந்த மது வேகமாக ஓடி வந்து
“ஐயோ.. வேண்டாம் மகி ...இப்படி பழக்கினா அவ
இதையே தினமும் கேட்பா.. நான் தான் கஷ்டபடணும்..இப்பவே எல்லாம் புதுசு புதுசா தேடறா...”
என்று சலித்து கொண்டாள் மது.
“ஹீ ஹீ ஹீ .. அவ
யார்?..
நித்திலா IPS ஆக்கும்.. உன் புருசன்
மூச்சுக்கு முன்னூறு தரம் சொல்றான் இல்லை..அவன் பொண்ணு அவனை மாதிரியே IPS ஆவானு.. அதான் இப்ப இருந்தே ட்ரெயினிங் கொடுக்க வேண்டாமா ?.
இந்த
பைக் எல்லாம் எம்மாத்திரம் என் பொண்ணுக்கு...நீ வேணா பார் மது.. அவ சின்ன வயசுலயே
ப்ளைட் ஓட்ட போறா.. இல்லை ராக்கெட் விடுவா.. இல்லை.. “ என்று ஏதோ இழுக்க
“ஐயா
சாமி.. அவ எது வேணா ஓட்டட்டும்.. இப்போதைக்கு அவ கூட நான் இந்த நாளை ஓட்டணும்..
என்னால இவ கூட போராட முடியாது.. இப்பவே இப்படி படுத்தறா.. இவளுக்காகவே நான் அடுத்த
வாரத்துல இருந்து என் பேட்மிண்டன் கோச்சிங் க்ளாஸை கன்டினியூ பண்ண போறேன்.. “ என்று சிரித்தாள்..
“ஹா
ஹா ஹா.. அது.. பார் அவ அம்மா இப்படி சோம்பேறியா இருக்க பிடிக்காம உன்னையே ஓட
வைக்கிறா.. அவ படுத்தற மாதிரி சீக்கிரம் உன் ப்ராக்டிசை பார் மது.. இந்த வருடம் நீ நேசனல் சாம்பியன்
ஆகணும்..
அப்புறம்
இந்த குட்டியை பார்த்துக்கத்தான் நமது இல்லத்தில் இருந்து வந்து இருக்கிற
ஆன்ட்டிஸ் இருக்காங்களே.. பத்தலைனா சொல். இன்னும் இரண்டு பேரை வர வச்சுடலாம்..
இவ
கூட போட்டி போட யாரெல்லாம் ரெடியா இருக்காங்களோ
எல்லாரையும் ஒரு ரவுண்ட் கூட்டி வந்து மோத வச்சுடலாம்.. எப்படி என் ஐடியா..? “ என்று காலரை தூக்கி விட்டு கொண்டான்..
“ஹ்ம்ம்ம்
ஏற்கனவே அவங்கதான் பார்த்துக்கறாங்க மகி.. நான் சும்மா சொன்னேன்.. எனிவே இவ கூடவே
இருக்க கசக்குமா என்ன? .. சரி நீங்க ஒரு ரவுண்ட் மட்டும் போய்ட்டு வந்து பாப்பாவை என்கிட்ட கொடுங்க.. ஆபிஸ் டைம் ஆச்சு பார்.. “
என்று சிரித்தாள் மது..
அவனும்
சிரித்து கொண்டே வண்டியை ஸ்டார்ட் பண்ணி அங்கிருந்த பாதையில் சிறிது நகர்த்த அந்த
குட்டி அசராமல் அதிசயமாக மகிழ்ச்சியுடன் பார்த்தாள்.. அவள் மகிழ்ச்சியை கண்டவன் சற்று நேரம்
அங்கயே சுற்றி வந்து அவனுக்கு போர் அடிக்க மது அருகில் வந்தவன் இறக்கி விட அவளை
தூக்க, அவளோ அந்த வண்டியை இறுக்கி பிடித்து கொண்டு வர மறுத்தாள்..
“ஹா
ஹா ஹா.. பார்த்திங்களா.. இதுக்குத்தான் சொன்னேன்.. இப்ப நல்லா மாட்டினீங்களா? சொன்ன மாதிரி கூடவே கூட்டிகிட்டு போங்க.. “ என்று
சிரித்தாள் மது..
அவனும்
நேரம் ஆவதை உணர்ந்து அந்த குட்டியை கொஞ்சி கெஞ்ச அவளோ தலையை இரு பக்கமும் ஆட்டிய படி
இறங்க மறுத்தாள்..
சிறிது
நேரம் போராட, அவனின் பாவமான முகத்தை கண்ட மது போனால் போகட்டும் என்று தன் மகளின் அருகில் வந்து அருகில் இருந்த ஒரு
பட்டாம் பூச்சியை காட்ட அந்த குட்டி
பட்டாம் பூச்சியா, இந்த வண்டியா என குழம்பி போனாள்..
எதை
கேட்பது? எதை விடுவது? என பட்டி மன்றம் நடத்தி கொண்டிருக்க
அதை சாக்காக வைத்து மது கூடவே அவளை கொஞ்சிய
படி தூக்கி கொண்டாள்.. மகிழன் வேகமாக தன்
வண்டியை நகர்த்திய படி செல்ல மது அவனை ஹெல்மெட்
போட சொல்லி சைகையால் காட்டி முறைத்தாள் ..
அவன்
வேண்டாம் என்று மறுக்க மது கோபமாக முறைக்க
“அப்பா..
உன் புருசனை மாதிரியே நீயும் சரியான
ரூல்ஸ் பேர்வழி மது.. விட மாட்டேங்கறியே.. “ என்றான் சலித்து கொண்டே..
“ஹெல்மெட்
போடுவது ரூல்ஸ்க்காக இல்லை.. நம்ம சேப்டிக்காக.. எங்க போனாலும் இதை முதல்ல எடுத்து கிட்டு போங்க.. “என்று மீண்டும்
முறைத்தாள்..
அவன்
கையை உயர்த்தி
“ஓகே
டன்.. வர வர அந்த சாமியார் மாதிரி நிறைய ரூல்ஸ் பேச ஆரம்பிச்சுட்ட மது.. ஓ கலெக்டர்
அம்மா ஆக போறீங்க இல்ல.. அதான் முன்னாடியே ஸ்ட்ரிக்ட் ஆபிசரா எப்படி இருப்பது என்று என்னை வச்சு ப்ராக்டிஸ்
பண்றியாக்கும்..
இந்த
வருசம் நீ எப்படியாவது IAS
எக்சாம் எழுது மது.. கண்டிப்பா பாஸ் பண்ணிடலாம்.. “ என்றான் கனிவுடன்
அவள்
தங்கள் குடும்பத்துக்காக தன் ஆசை, கனவை மறைத்து கொண்டாள்
என தெரியும்.. நிகிலன் இந்த குழந்தை வேண்டாம் என்று சொன்ன பொழுது கூட அவனை எதிர்த்து தன் கனவை
விட்டு விட்டு தன் அன்னைக்காக இந்த குட்டியை பெற்றெடுத்தவள்..
“இனிமேல்
அவள் விரும்பியதெல்லாம் அவளுக்கு கிடைக்கட்டும்.. “ என்று மனதுக்குள் வேண்டியவன் வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே
சென்று ஹெல்மெட்டை எடுத்து வந்து அணிந்து கொண்டு மதுவுக்கு கை அசைத்து விடைபெற்று
சென்றான்
அலுவலகத்தை அடைந்தவன்
அதே உற்சாகத்துடன் தன் இருக்கைக்கு சென்றான்.. நேற்றை போலவே இன்றும் அவன் கண்கள்
தானாக டெஸ்ட்டிங் டீம் இருந்த பகுதிக்கு சென்று வந்தது..
ஆனால் அவன் கண்கள் தேடியவள் மட்டும்
அங்கில்லை.. உதட்டில் விரிந்த புன்னகையுடனே தன் இருக்கைக்கு செல்ல, அவனுக்காகவே காத்திருந்தான் மனோ.. இன்டர்வ்யூக்காக சில கேன்டிடேட்ஸ் வந்திருப்பதாக சொல்லி அவனை
இன்டர்வ்யூ பண்ண சொன்னான்..
அவர்கள் பணிபுரியும் அந்த கிளைன்ட் அவர்கள்
புது ப்ராஜெக்ட் ஒன்றை சைன் பண்ணி இருக்க அதற்காக டீமை விரிவாக்க இன்னும் சில பேரை
வேலைக்கு எடுக்க வேண்டி இருந்தது..
இன்றிலிருந்து அதற்கான பணிகளை ஆரம்பித்து
விட்டான் மனோகர்.. ஏற்னவே வேலை தேடி அந்த அலுவலகத்துக்கு விண்ணப்பித்திருந்த சில புரபைல்களை
டெவ் லீட் இருவரிடம் கொடுத்து சார்ட் லிஸ்ட்
பண்ணி முதல் கட்ட தேர்வு முடித்திருந்தனர்..
அதில் தேர்ந்தெடுத்தவர்களுக்கு மட்டும் இரண்டாவது கட்ட இன்டர்வ்யூவை மகிழனை எடுக்க சொன்னான் மனோகர்...
மகிழனும் அந்த புரபைல்களை வாங்கி கொண்டு
அருகில் இருந்த டிஸ்கஷன் அறைக்கு சென்றான். அதன் பின் அவன் நேரம் இறக்கை கட்டி
பறந்தது... தன் வேலையில் மூழ்கி விட்டான்...
“குட்மார்னிங்
கா..” என்று தன் வலது கையால் சல்யூட் ஐ வைத்தவாறு எதிரில் நின்றவனை கண்டதும் தன் லேப்டாப்பில்
இருந்த தலையை நிமிர்த்தி எதிரில் நின்றிருந்தவனை பார்த்து முறைத்தாள் சந்தியா...
அன்று காலையில் தாமதமாக வந்தவள் அன்று
முடிக்க வேண்டிய வேலை நிறைய இருப்பதால் அவள் இடத்தில் இருந்தால் தேலையில்லாமல் யார்
உடனாவது அரட்டை அடித்து கொண்டிருப்பேன். வேலையை முடிக்க முடியாது என அவள் இடத்தில் இருந்து
எழுந்து அருகில் காலியாக இருந்த இருவர்
மட்டும் அமரும் வகையில் இருந்த சிறிய டிஸ்கஷன் அறைக்கு சென்று தன் வேலையை
தொடர்ந்தாள்..
அப்பொழுது ஒருத்தன் வந்து அவள் முன்னால் வந்து
நிற்கவும் அதுவும் அவளை அக்கா என்று அழைக்க
அதில் கடுப்பானவள் அவனை பார்த்து முறைத்தாள்..
அவள் முறைக்கவும் எதற்காக முறைக்கிறாள் என தெரியாமல்
குழம்பியவன்
“சாரி கா.. நீங்க சந்தியா அக்கா தான..அந்த
அன்பழகி அக்காதான் நீங்க இந்த ரூம்ல இருக்கீங்கனு சொல்லி போய் பார்க்க சொன்னாங்க
கா.. அதான் வந்தேன் கா.. எதுவும் தப்பா வந்திட்டனா கா? “ என்று தலையை சொரிந்தான்..
“டேய் தம்பி.. போதும் நிறுத்தறியா? எத்தனை தரம் தான் அக்கா அக்கானு ஏலம் போடுவ.. ஆமாம் நீ யார்? இங்க எதுக்கு வந்த ? “ என்று புருவத்தை உயர்த்தி பார்வையால் மிரட்டினாள் சந்தியா...
“மை நேம் இஸ் மயில்வாகனன்.. நான் டெஸ்ட்டிங்
டீம் ல புதுசா சேர்ந்திருக்கேன்.. நீங்க தான் எனக்கு buddy
ஆம்.. வினித் சார் உங்க கிட்ட எல்லா டீடெயெல்ஸ்ம் கேட்டுக்க
சொன்னாங்க கா.. அதான் உங்களை பார்க்க வந்தேன் கா.. “ என்றான் கொஞ்சம் பயந்தவாறு...
“டேய்.. என்னை பார்த்தா உனக்கு அக்கா மாதிரியா
இருக்கு? ஒழுங்கா சந்தியா னு என் பெயர்
சொல்லி கூப்பிடு.. “ என்றாள் அதே மிரட்டலுடன்..
“ஐயோ.. பெரியவங்களை பேர் சொல்லி கூப்பிடக் கூடாது
னு எங்க அப்பத்தா சொல்லி இருக்கு கா.. எல்லாரையும் மரியாதையா தான் கூப்பிடணுமாம்..
அதனால அப்படி எல்லாம் கூப்பிட வராது கா... “ என்று தலையை சொரிந்தான்...
“ஹீ ஹீ ஹீ .. சரி வந்து இப்படி உட்கார்.. உனக்கு
நான் நிறைய சொல்லி கொடுக்கணும் போல.. “ என்றவள் அருகில் இருந்த இருக்கையை காமிக்க
அவனும் தயங்கியவாறு அதில் வந்து
அமர்ந்தான்..
“ஆமா.. உன் பெயர் என்ன சொன்ன? “ என்றாள் காதுக்குள் விரலை விட்டு நோண்டியவாறு ஸ்டைலாக..
“மயில்வாகனன்... “
“ஆங்.. மயில்வாகனம்... “ என்று சந்தியா இழுக்க
“அக்கா.. மயில்வாகனம் இல்ல.. மயில்வாகனன்..
“ என்று திருத்தினான்..
“டேய்.. இரண்டும் ஒன்னுதான்.. வாகனன் னா
என்ன? வாகனம் னா என்ன எல்லாம் ஒன்னுதான்.. “ என்று முறைத்தாள்..
“ஐயயோ.. இல்லக்கா... வாகனம் னா அது அஃறிணை..
வாகனன் தான் உயிரிணை.. மனுசங்கள உயிரிணையாதான் கூப்பிடணும் னு என் தமிழ்
வாத்தியார் சொல்லி கொடுத்திருக்கிறார்.. “ என்று நமட்டு சிரிப்பை சிரித்தான்..
“டேய்.. நானும் தமிழ் படிச்சிருக்கேன்..
அதுவும் நான் பத்தாம் வகுப்புல தமிழ் ல நூற்றுக்கு நூற்றி ஒன்று தெரியுமா? “ என்றாள் புருவங்களை உயர்த்தி
“ஆங்.. நூற்றுக்கு நூற்றி ஒன்றா ? அது எப்படி? “ என்று விரல் விட்டு எண்ணி பார்த்தான்..
“ஆங்.. அதெல்லாம் அப்படித்தான்.. நீ ஒன்னும்
எனக்கு தமிழ் கிளாஸ் எடுக்க வேண்டாம்.. எனக்கு எது வருதோ அதைதான்
கூப்பிடுவேன்..என்ன டீலா வாகனம் ? .. “ என்று சிரித்தாள்...
எதிரில் அமர்ந்தவனோ நொந்து போய்
“அக்கா... இது என்ன ரேக்கிங் மாதிரி
மிரட்டறீங்க.. ரேக்கிங் எல்லாம் காலேஜ் ஓட முடிஞ்சிருச்சுனாங்க.. இங்க ஆபிஸ்லயும்
இருக்கா? “ என்றான் கொஞ்சம் கலவரத்துடன்..
“ஹா ஹா ஹா.. ஆமான்டா தம்பி மயில்வாகனம்..
காலேஜ் ல ரேக்கிங் தடை செய்த பிறகு யாராவது அவங்க காலேஜ் ல ரேக்கிங் இருக்குனு
சொல்வாங்களா?? அந்த மாதிரி தான் இங்கயும்.. பிரஸ்ஸரா ஜாய்ன் பண்றவங்களுக்கும் ragging
உண்டு..
இன்னும் ஒரு வாரத்துக்கு நீ நான் சொல்றதையெல்லாம்
கேட்கணும்... இன்டக்சன் ல HR சொல்லலை? “ என்றாள்
“ஆங்.. இல்லையே .. அவங்க ஒவ்வொருத்தருக்கும்
buddy
னு ஒருத்தங்களை அசைன் பண்ணுவாங்க.. அவங்க கிட்ட எல்லாம்
கேட்டுக்கலாம்.. என்று தானே சொன்னாங்க...” என்று மீண்டும் தன் தலையை தட்டி யோசித்தான்...
“ஆங்.. அதான்... பின்ன நேரடியாவா இந்த ஆபிஸ்
ல ரேக்கிங் இருக்கு அப்படீனு சொல்வாங்க.. இதெல்லாம் அன்டர் டேபில் டீலிங் தம்பி...
“ என்று முறைத்தாள் உள்ளுக்குள் பொங்கி வந்த சிரிப்பை அடக்கி கொண்டு..
“ஓ........... அப்படியா க்கா... பார்த்துக் கா.
என்னை ரொம்ப ரேக் பண்ணாதிங்க...காலேஜ் ல கடைசி வரைக்கும் என்னைய மட்டும் என் சீனியர்ஸ்
வச்சு செஞ்சானுங்க.. இப்பதான் அவங்க கிட்ட இருந்து தப்பிச்சு வந்திருக்கேன்.. திரும்பவும்
நீங்க ஆரம்பிச்சுடாதிங்க அக்கா.. உங்களுக்கு புண்ணியமா போகும்.. “ என்று கெஞ்சினான்...
“ஹ்ம்ம் அதெல்லாம் நீ எப்படி நடந்துக்கற
அப்படிங்கறதை பொறுத்து.. அப்புறம் முதல்ல இந்த அக்காவை விடு.. ஒழுங்கா என்னை சந்தியானு
கூப்பிடு.. “ என்று மீண்டும் முறைத்தாள்..
“வந்து.. அது எப்படிக்கா..? காலேஜ் ல கூட சீனியரை அக்கா, அண்ணானு கூப்பிட
சொல்லி மிரட்டினாங்க.. நீங்க என்னடான்னா அக்கா னு மரியாதையா கூப்பிட்டா
வேண்டாங்கறீங்க... “ என்றான் குழப்பமாக
“ஹா ஹா ஹா.. டேய் வாகனம்... இந்த ஐ.டி ல இருக்கிற
ஒரே ஒரு பெனிபிட் என்ன தெரியுமா? யாரை வேணாலும் பெயர் சொல்லி
கூப்பிடலாம்..நம்ம மேனேஜரை வினித் னே கூப்பிடலாம்.. அப்புறம் நம்ம CEO யார்? “ என்றாள் தன் புருவத்தை உயர்த்தி
“யார்?? “ என்று தலையை
சொரிந்தவன் அவசரமாக தன் மொபைலை எடுத்து கூகுல் ஐ ஓபன் பண்ண அதை கண்ட சந்தியா
“அடப்பாவி..இந்த கம்பெனியோட CEO
யார் னே தெரியாம எப்படிடா
இன்டர்வ்யூல பாஸ் ஆன..” என்றாள் ஆச்சர்யமாக..
“அட போங்க கா ..எத்தனை கம்பெனி இன்டர்வ்யூக்காக ஏறி
இறங்கறோம்.. ஒவ்வொரு கம்பெனியோட CEO வையும் எப்படி ஞாபகம்
வச்சுக்கறதாம்.. அதான் அப்பப்ப எந்த கம்பெனிக்கு இன்டர்வ்யூ போறனோ அதை மட்டும்
மக்கப் பண்ணிகிட்டு போய்டறது..
ஹீ ஹீ ஹீ அது அடுத்த நிமிசம் மறந்து போய்டும்...வேணும்னா
அதான் நம்ம கூகுல் அண்ணாத்தை கையிலயே
இருக்காரே.. அவரை தட்டி கேட்டா உடனே
சொல்லிட போறார்... இதுக்கு எதுக்கு நம்ம மூளையை வேஸ்ட் பண்ணி ஸ்டோர் பண்ணி வைக்கணும்...”
என்று அசட்டு சிரிப்பை சிரித்தான்...
“ஆஹா.. நீ நல்லா பொழச்சுக்கவ மயில்வாகனம்...
“ என்று சிரித்தாள்..
“சரி . நீ என்ன படிச்சிருக்க? “
“B.E Mechanical Engineering..
கா... பர்ஸ்ட் க்ளாஸ் ல பாஸ் பண்ணேன்.. “ என்று காலரை தூக்கி விட்டு
கொண்டான்..
“அப்புறம் ஏன்டா அந்த மெசினை பார்க்காம இந்த
ஐ.டி க்கு வந்த? “
“ஹ்ம்ம்ம் எங்க.. எனக்கும் நாலு மெசினை பிரிச்சு ரிப்பேர் பண்ணனும்னு ஆசைதான்..அதனாலதான்
மெக்கானிக்கல் எடுத்து படிச்சேன்... ஆனா அதுக்கு யாரும் வேலை தர மாட்டேனுட்டானுங்க..
எனக்கு சொத்து நிறைய இருந்தாலும் வேலைக்கு
போனாதான் கௌரவம்.. பின்னாடி கல்யாணத்துக்கு பொண்ணு தருவாங்கனு எங்கப்பன் வேலை தேடு
னு துரத்தி விட்டுட்டார்.. அதான்.. வந்தாரை
வாழ வைக்கும் இந்த ஐ.டி க்கு
வந்துட்டேன்.. “ என்று சிரித்தான்..
“ஹா ஹா ஹா .. மெசினை பிரிச்சு ரிப்பேர் பண்ண
எதுக்குடா நீ B.E படிக்கணும்?
அதான் நம்ம பட்டறைல கொடுத்தாலே பண்ணி கொடுத்திடுவாங்களே... “ என்றாள் நக்கலாக..
“அக்கா..இது ரொம்ப ஓவர்.. இந்த அளவுக்கு
யாரும் என்னை இன்சல்ட் பண்ணியதில்லை... “
என்று சிலிர்த்து கொண்டான் மயில்..
“ஓகே.. ஒகே.. சில் மயில்... நோ டென்ஷன்..”
என்று மீண்டும் சிரித்தாள் சந்தியா..
“சரி கா... நீங்க என்ன படிச்சிருக்கீங்க ? “ என்றான் ஆர்வமாக
“B.Sc Physics..” என்றாள் பெருமையாக
“என்னது B.Sc Physics ஆ? அத படிச்சிட்டு எப்படி கா இந்த வேலைக்கு
வந்தீங்க? “ என்றான் ஆச்சர்யமாக
“ஹோய்... நீ மெக்கானிக்கல் படிச்சிட்டு இந்த
டெஸ்ட்டிங் க்கு வர்ரப்ப நான் பிசிக்ஸ் படிச்சிட்டு டெஸ்ட் பண்ண வரக் கூடாதா? எந்த ஊர் நியாயம் இது?
அதுவும் இல்லாம இந்த இன்புட் கொடுத்தா என்ன ரிசல்ட்
வரும் னு முன்னாடியே எழுதி வச்சுகிட்டு அதே மாதிரி வருதானு டெஸ்ட் பண்ற வேலைக்கு நம்மள
மாதிரி ஆளுங்க போதும்...
என்ன ஒரு
சோகம் னா இதுக்கு போய் நீ நாலு
வருசம் வேஸ்ட் பண்ணி படிச்சிட்டு வந்திருக்கியேனு தான் ” என்றாள் நக்கலாக
சிரித்தவாறு..
“ஆங்... நீங்க சொல்றதும் கரெக்ட்தான் கா.. நான் தான் ப்ளான் இல்லாம
எல்லாரும் இன்ஜினியருக்கு படிக்கறாங்கனு அவங்க விழுந்த அதே குட்டைல போய்
விழுந்திட்டேன்.. “ என்றான் சோகமாக.
“டோன்ட் வொர்ரி மயிலு.. எதை படிச்சா என்ன? நம்ம தலைல என்ன எழுதி இருக்கோ அது படிதான் நடக்கும்.. டேக் இட் ஈஸி.. சரி
வா.. நாம பொழப்ப பார்ப்போம்..
முதல்ல இந்த கம்பெனியோட ரூல்ஸ் அன்ட் ரெகுலேசன்ஸ் நம்ம டெஸ்ட்டிங்
டீமோட ப்ராசஸ்.. எல்லாம்.. “ என்று முடிக்கு
முன்னே
“எல்லாம் சொல்லி தரப் போறீங்களா? “ என்றான் ஆர்வமாக
“ஹீ ஹீ ஹீ..எல்லாம் இந்த டாகுமென்ட் ல இருக்கு.. உனக்கு அனுப்பறேன்..
நீயே படிச்சு தெரிஞ்சுக்க..” என்று சிரித்தாள்..அதை கேட்டவன்
“இதுக்கு நீங்க எதுக்கு? என்று ஒரு லுக் விட்டான் மயில்..
அதை கண்டு கொள்ளாமல் இன்னும் மற்ற பார்மாலிட்டிஸை
அவனுக்கு விளக்க, சிற்து நேரத்தில் அது போர்
அடிக்க,
“அக்கா.. போதும் கா .. ஒரே நாள் ல எல்லாத்தையும் மண்டைல ஏத்த முடியலை... மெதுவா
படிச்சுக்கலாம்.. இப்ப சாப்பிட போகலாமா? “ என்று தலையை
சொரிந்தான்..
“டேய்.. இன்னொரு தரம் அக்கானு சொன்ன, அப்புறம் நம்ம பிரபு சார் ஒரு பாட்டு ல
பாடுவாரே மயில புடிச்சு கால உடச்சு ஆடச் சொல்லுகிற உலகம்னு.. அதே
மாதிரி அந்த மயிலோட கால உடைக்கிற மாதிரி உன்
காலை உடச்சுடுவேன்..
ஒழுங்கா சந்தியா னு கூப்பிடு.. எங்க சொல்லு
பார்க்கலாம்.. ச ந் தி யா... “ என்று ஒவ்வொரு எழுத்தாக அவனுக்கு சொல்லி காட்ட, அவனும் கஷ்ட பட்டு சந்தியா என்று அழைத்தான்..
“ஆங்.. வெரி குட்.. இப்ப வந்திருச்சு
பார்த்தியா.. சோ.. இன்னைக்கு வீட்டுக்கு போய் உ ங்க வீட்ல இருக்கிற எல்லாரையும் பெயர்
சொல்லி கூப்பிட்டு பழகு.. நாளைக்கு வர்ரப்போ இங்க இருக்கிற யாரையும் அக்கா, அண்ணா, மாமா, மச்சானு கூப்பிட்ட தொலச்சுடுவேன்.. டீலா? “ என்றாள் மிரட்டியவாறு..
“ஹ்ம்ம்ம்ம்ம் சரி கா... சாரி ... சரி
சந்தியா.... “ என்றான்
அவளும் சிரித்து கொண்டே
“ஹ்ம்ம் அது.. சரி.. உன் வீட்டை பற்றி
சொல்..யாரெல்லாம் இருக்கா? குறிப்பா உனக்கு அழகா
ஹேண்ட்ஸம் ஆ அண்ணா எதுவும் இருக்கானா ? “ என்றாள் ஆர்வமாக குறுநகையுடன்...
அதை கேட்டு
“ஆங்... “ என்று வாயை பிளந்தவன்
“ஹீ ஹீ ஹீ... சாரி சந்தியா... எனக்கு அண்ணா
யாரும் இல்லை.. வேணும்னா நான்தான் எங்க
வீட்ல இருக்கிற அழகா ஹேண்ட்ஸம் ஆன
அண்ணா... “ என்றான் குறும்பு சிரிப்புடன்..
அவன் சொன்னதன் அர்த்தம் புரிய
“அடிங்க... டேய்.. பார்த்தா புள்ள பூச்சி
மாதிரி பம்முன.. இப்ப என்னையே நீ கலாய்க்கிறியா..மயில புடிச்சு கால உடச்சு...
பாட்டு.. எப்பவும் ஞாபகம் வச்சுக்க.. நான் பார்க்கத்தான் அழகா இருப்பேன்.. ஆனா
சூடானேன் டெரர் ஆ மாறிடுவேன்.. “ என்று முறைத்தாள்..
“ஓ.. அப்ப நீங்க ஒரு அழகான ராட்சசி..
கரெக்ட ஆ? “ என்றான் சிரித்தவாறு...அதை கேட்டு
“ஆங்... “ என்று வாயை பிளப்பது இப்பொழுது சந்தியா
முறையானது...
“ஹா ஹா ஹா.. பரவாயில்லையே மயில்வாகனம்.. என்
கூட சேர்ந்த கொஞ்ச நேரத்துலயே பார்ம் க்கு வந்திட்ட.. நீ இந்த ஐ.டி ல குப்பை
கொட்டிடுவ. சரி வா.. நமக்கு முக்கியமான சாப்பாட்டு வேலையை பார்க்கலாம்.. “ என்று
சொல்லி சிரித்தவாறு அந்த அறையில் இருந்து வெளி வந்தாள்..
மயிலும் அவளை பின் தொடர, தன் இருக்கைக்கு சென்றாள்.. அங்கு அன்பு ஏற்கனவே தயாராக தன் டிபன் பாக்சை
எடுத்து வைத்து கொண்டு சந்தியாவுக்காக
காத்திருந்தாள்..
அங்கிருந்தவர்களிடம் மயிலை அறிமுக
படுத்தினாள் சந்தியா..ஆண்கள், பெண்கள் எல்லாம்
அவனுக்கு கை கொடுத்து வாழ்த்த, அவனோ ஆச்சர்யத்தில்
நெழிந்தான்...
“காலேஜ் ல எந்த பொண்ணுகிட்டயாவது கிட்ட
போனாளே முறச்சு பார்ப்பாளுங்க.. இங்க என்னடான்னா எல்லா பொண்ணுங்களும் சர்வ
சாதாரணமா கை கொடுக்கிறாங்க..ஓ.. இதுவும் ஐ.டி யோட மகிமையா !! வாழ்க ஐ.டி.. “ என்று
உள்ளுக்குள் சிரித்து கொண்டான்..
அவன் மன ஓட்டத்தை புரிந்து கொண்ட சந்தியா
அவன் அருகில் வந்தவள்
“டேய்.. வாகனம்.. போதும் ஜொல்லு விட்டது..
கீழ இப்பயே தண்ணி ஓட ஆரம்பிச்சிருச்சு..உன் பம்பு செட் ஐ ஆப் பண்ணிக்க..அப்புறம்
இங்க இருக்கிற பொண்ணுங்க எல்லாம் பிரியா பழகறாங்கனு கவுந்திடாத.. ஒவ்வொருத்திக்குள்ளயும்
ஒரு டெரர் சந்தியா இருப்பா... ஜாக்கிரதை.. “ என்று விரல் நீட்டி மிரட்ட
“ஐயோ.. அப்படி எல்லாம் இல்ல கா... சாரி
சந்தியா... சும்மா ஆச்சர்யமா இருந்ததா .. அதான் அப்படி பார்த்துட்டேன்.. மத்தபடி
ஐம் அ குட் பாய்.. எல்லா பொண்ணுங்களும் உடன் பிறவா சகோதரிகள் என்ற கொள்கை
உடையவன்... “ என்று இழுக்க
“ஷப்பா.. போதும் டா உன் தற்பெருமை.. பசியில
காது அடைக்குதுனா உன் பேச்சை கேட்டா மயக்கமே வருது.. சரி வா கேப்டீரியாவுக்கு
போகலாம்.. “ என்று சிரித்தவாறு அன்பழகியையும் அழைத்து
கொண்டு முதலாவது தளத்தில் இருந்த கேப்டீரியாவுக்கு சென்றனர்...
வழக்கம் போல சந்தியா அவளுக்கு பிடித்த
சிக்கன் பிரியாணியை வாங்கி கொண்டு
“வாகனம்.. எனக்கும் சேர்த்து நீ யே பே பண்ணிடு.. இரண்டு பில்லை
மட்டும் என் கிட்ட கொண்டு வந்து கொடுத்துடு..இன்றைக்கு மட்டும் இல்லை.. இன்னும்
இரண்டு நாளைக்கு நீதான் எனக்கு சாப்பாடு
வாங்கி தரணும்.. இதுவும் கம்பெனியோட பாலிசி.. என்ன புரிஞ்சுதா? “ என்றாள்
“ஆங்.. இப்படி ஒன்ன கேள்வி பட்ட மாதிரி
இல்லையே என்று அவசரமாக யோசித்தவன் அவளிடம் எதுவும் கேட்டு வாங்கி கட்டிக்க வேண்டாம்
என்று முடிவு செய்தவன் சரி யென்று தலையை ஆட்டி
விட்டு அதே போல பணத்தை செலுத்தி விட்டு ரெசிப்ட் ஐ கொண்டு வந்து சந்தியாவிடம்
கொடுத்தான்..
பின் அருகில் இருந்த தண்ணீரை எடுத்து வர
எழுந்து சென்றான்..
அதை கண்ட அன்பு மெல்ல சந்தியாவின் காதருகில்
வந்து
“ஹே.. எதுக்குடி அவன பே பண்ண சொன்ன? இது buddy க்கான செலவு.. நீதான பே பண்ணனும். பே பண்ணிட்டு
க்ளைம் பண்ணனும் இல்ல? . எதுக்கு அவனை பே பண்ண சொன்ன ? “ என்றாள் புரியாமல்..
“ஹீ ஹீ ஹீ.. நம்ம மயில் இருக்கானே.. நல்ல பசை
உள்ள பார்ட்டி டீ. சும்மா டைம் பாஸ்க்காகத்தான் இந்த வேலைக்கு வர்ரான்.. அதனால
அவன் பே பண்ணினா அவன் சொத்து ஒன்னும் கொறஞ்சிடாது.. இந்த ரெசிப்ட் ஐ வச்சு நான்
க்ளைம் பண்ணிப்பேன்..” என்று சிரித்தாள்
சந்தியா..
அதை கேட்ட அபர்ணா அதிர்ந்து போய்,
“அடிப்பாவி. இப்படி எல்லாமா ப்ராட் பண்ணுவ ? “ என்றாள் ஆச்சர்யமாக
“ஹீ ஹீ ஹீ.. இது ப்ராட் இல்லடி..
இருக்கிறவங்க கிட்ட இருந்து எடுத்து இல்லாதவங்க கிட்ட கொடுக்கறது.. “
“ஆங்.. இதுலா யார் இல்லாதவங்க? உங்கப்பாவும் தான் ஒத்தை புள்ளை உனக்கு இரண்டு தலைமுறைக்கு சொத்து சேர்த்து
வச்சிருக்கார் இல்லை.. பத்தாததுக்கு ஊர்ல எல்லாம் நிறைய நிலம் இருக்கு.. நீதான்
ஊருக்கு போனா பெரிய பண்ணைக்காரி ஆச்சே.. அப்புறம் எதுக்கு டீ இந்த சீட்டிங்.. “ என்று அவளை மேலும் கீழும் பார்த்து முறைத்தாள்
அன்பு..
“ஹீ ஹீ ஹீ.. அதெல்லாம் என்னோடது ஆகாது டீ...
அதெல்லாம் எங்கப்பா உடையது தான்... நான் சேர்ப்பது என் பொண்ணுக்காக டி..அவளுக்கு
நானே இந்த காசெல்லாம் சேர்த்து அப்படியே அவ அக்கவுண்ட் ல
போட்டிடுவேன்.. “ என்றாள் சிரித்தவாறு..
அவள் தன் பொண்ணு என்று சொல்லியதை கேட்டு அவள் முதுகுக்கு பின்னால்
முதுகு காட்டி அமர்ந்து இருந்த மகிழன் அதிர்ந்து போனான்...
Comments
Post a Comment