காந்தமடி நான் உனக்கு!!!(pre-final)-48

 


அத்தியாயம்-48

பெங்களூர் மணிப்பால் ஹாஸ்பிட்டலில் இருந்த சைக்யாட்ரிக் பிரிவில்,  பிரபலமான டாக்டர் சைதன்யா முன்னால் அமர்ந்து இருந்தனர் அமுதனும் சத்யாவும்.

அமுதன் முன்பே சத்யாவிற்கு இருக்கும் பிரச்சனையை பற்றி டாக்டர் சைதன்யா விடம் விளக்கி கூறி,  ஆலோசனை கேட்க,  அவர்தான் சத்யாவை நேரில் அழைத்து வர சொல்லியிருந்தார்.

இதை எப்படி சத்யாவிடம் சொல்வது என்று தயக்கமாக இருந்தது.  

ஆனால் இப்பொழுது வேறு பிரச்சனை ஒன்று ஆரம்பமாகி இருந்தது அவன் வீட்டில்.

திருமணம் முடிந்து மூன்றாவது நாளில் ரூபாவதிக்கு  பெங்களூர் கிளைமேட் ஒத்துவராததால், தன் மகன் மற்றும் மருமகள் இடம் சொல்லிக்கொண்டு மும்பை கிளம்பி விட்டனர்.

கடந்த நாட்களில் அமுதன் வீட்டில் இல்லாத பொழுது தன் மாமியார் மாமனாருடன் அரட்டை அடித்துக் கொண்டு பொழுதை கழித்தவள்...அவர்கள் சென்ற பிறகு தன் கணவனை பெரிதும் எதிர்பார்க்க ஆரம்பித்தாள் சத்யா.  

அவனோ ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தாமதமாக வருவது கண்டு  அவளுக்கு கஷ்டமாக இருந்தது.

திருமணத்திற்குப் பிறகு முதல் இரண்டு நாட்கள் சத்யா அவனிடம் நடந்து கொண்ட விதத்தை கண்டு,  அடுத்த நாள் இரவு அவளை தனியாகவே விட்டு விட்டு அவனுடைய அலுவலக அறையிலேயே தங்கிக் கொண்டான் அமுதன்.

சத்யா காரணம் கேட்க, முக்கியமான வேலை இருப்பதாக கூறி ஏதோ சமாளித்து விட்டான்.  

அடுத்த நாளும் ஏதோ பிஸ்னஸ் டின்னர் என்று வெளியில் சென்று விட்டு தாமதமாக வீடு திரும்பினான்.  அவன் வரும்பொழுது சத்யா நன்றாக உறங்கி இருக்க,  அவனும் அவளருகில் படுத்துக் கொண்டான்.  

இதே போலவே அடுத்து வந்த நாட்களும் அமுதன் சத்யாவை தவிர்க்க,  முதலில் அவன் சொல்வதை எல்லாம் நம்பியவள் தொடர்ந்து அவன் அவளை தவிர்ப்பது புரியவும் லேசாக சந்தேகம் வர ஆரம்பித்தது.

அவனை மடக்கி குறுக்கு விசாரணை செய்ய, அவனும் சமாளித்து ஏதேதோ சமாதானம் சொல்ல,  புத்திசாலியான சத்யா உடனே கண்டு கொண்டாள்.

மீண்டும் ஆழ்ந்து யோசித்தவள் அவனை நேராக பார்த்து

“அம்மு... உண்மையைச் சொல்லுங்க.  எனக்கு என்ன பிரச்சனை? “  என்று நேரடியாக கேட்க, அமுதனோ ஒரு நொடி அதிர்ந்து போனான்.  

“பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்ல மா... நீயே ஏதாவது கற்பனை பண்ணிக்  கொள்ளாதே...யு ஆர் பெர்பெக்ட்லி ஆல்ரைட்...”  என்று அவளை சமாதானப் படுத்த முயல

“இல்லை...சம்திங் ராங் வித் மி. எனக்கே தெரியுது. ஆனால் அது என்னனு தான் தெரியல. உண்மையைச் சொல்லுங்க. என்னால தானே நீங்க லேட்டா வீட்டுக்கு வர்ரீங்க.

கண்டிப்பா என்னை பிடிக்காமல் இல்லை. ஆனால் ஏதோ ஒன்று உங்களை என் அருகில் வர தடுக்கிறது. அதற்காகத்தான் இப்படி ஓடி ஒளிந்து இருக்கிறீங்க. நான் சொல்வது சரியா? “  என்று அவனை ஊடுருவி பார்த்து கேட்க அமுதனால்  அவளின் கண்களை பார்த்து மறுத்து பொய் சொல்ல முடியவில்லை.  

ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவன், அவள் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு மெல்ல அழுத்தி கொடுத்தவாறு

“சது பேபி...நான் சொல்வதைக் கேட்டு நீ டென்ஷன் ஆகக் கூடாது... உன்னையே நீ ஹர்ட் பண்ணிக்க கூடாது. அப்படினா நான் உண்மையை சொல்கிறேன்...”  என்று அவளை தயார்படுத்தியவன் அன்று நடந்ததை சுருக்கமாக கூறினான்.  

அதைக் கேட்டவள் அப்பட்டமாக அதிர்ந்து போனாள். அவள் அப்படி நடந்து கொள்வது அவளுக்கு நினைவில் இருப்பதில்லை.  

அவள் நம்பமுடியாமல் அமுதனை பார்க்க,  

“நான் சொல்வது சரிதான் சதுமா.  அன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட் அப்போ திங்க்ஸ் எல்லாம் கீழே விழுந்து கிடந்தது இல்லையா?  அது எல்லாம் நீ தூக்கி போட்டது தான்.

என்னால் உன்னை கண்ட்ரோல் பண்ணவே முடியவில்லை. உன்னை நெருங்க கூட முடியவில்லை. அதனால் தான் நான் அந்த அறையை விட்டு வெளியேறி விட்டேன்.

அதன் பிறகுதான் நீ கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகினாய். அதே போலத்தான் அடுத்த நாளும். ஆனால் எந்த பொருளுக்கும் சேதாரமில்லாமல் நான் நீ மாற ஆரம்பிக்கும் பொழுதே உன்னை விட்டு விலகி விட்டேன்.

அதற்குப் பிறகுதான் நீ அமைதியானாய்...”  என்று நடந்ததைச் சொல்ல அவளுக்கு இன்னுமே அதிர்ச்சியாக இருந்தது.    

அவளுக்குள்ளே இப்படி ஒரு வலியும் வேதனையும் இருப்பது அவளுக்கே தெரியவில்லை.

முன்பு அமுதன் அவர்களின் திருமண பேச்சை ஆரம்பித்த பொழுது அந்த சிறுவயது சம்பவம் நினைவு வந்தது தான்.  

அதனால் தான் திருமணத்தை வேண்டாம் என்று மறுத்தாள்.

ஆனால் அமுதன் அதை பெரிதாக கண்டு கொள்ளாமல் அவளை சமாதானப்படுத்தி இருந்தான்.  

அதை அத்தோடு மறந்து விட்டதாக எண்ணியிருக்க அவளையும் அறியாமல் அவள் மனதில் இருந்த அந்த நிகழ்வு... அதனால் அவளுள் வரும் மாற்றங்கள் என்று சத்யாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது.

அவள் முகத்தில் வந்திருந்த அதிர்ச்சியையும், வேதனையையும் கண்ட  அமுதன், அடுத்த நொடி அவளை  தன் மார்போடு அணைத்துக் கொண்டு

“இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை சது... உன்னுடைய மனம் சம்பந்தப்பட்டது.  இதற்கு முறையாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் கண்டிப்பாக நீ இதில் இருந்து வெளி வந்துவிடலாம்.

நான் ஏற்கனவே டாக்டரிடம் விசாரித்து விட்டேன்.  ஒருமுறை நேரில் சென்று பார்த்துவிட்டு வரலாமா? “  என்று தயக்கத்துடன் அவளின் கருத்தை கேட்டான்.

சத்யாவும் தன் நெற்றிப் பொட்டில் கையை வைத்து  தேய்த்தவாறு ஆழ்ந்து  யோசித்தவள் பின் சரி என்று தலையசைத்தாள்.

அதன்படி இதோ சைக்கியாட்ரிஸ்ட் சைதன்யா முன் அமர்ந்து இருந்தனர்.

சைதன்யாவும்  சில நிமிடங்கள் இருவரிடம் பொதுவாக பேசிக் கொண்டிருந்தவர்,  பிறகு அமுதனை வெளியில் காத்திருக்கச் சொல்லிவிட்டு சத்யாவிடம் சில  கேள்விகளை கேட்டார்.

அதோடு அவளை ஆழ்ந்த உறக்கத்திற்கு கொண்டு சென்று அவளின் சிறு  வயது சம்பவத்தை நினைவு படுத்த,  அப்பொழுது சத்யா முன்பு அமுதன் இடம் நடந்து கொண்டதைப் போலவே உடலை விறைத்து,  முகத்தை இறுக்கி கொண்டு பல்லை நரநரவென்று கடித்தாள்.

அந்த சம்பவத்தை அவளால் ஏற்றுக் கொள்ள முடியாததை உடல் மொழியாக வெளிப்படுத்தினாள்.  பின் அவளை பழைய நிலைக்கு கொண்டு வந்தவர், பின் சத்யாவை அழைத்து வந்து இருக்கையில் அமர வைத்து சத்யாவிடம் மனம் விட்டு பேசினார்.  

“லுக் மிஸர்ஸ் சத்யா... அறிந்தோ அறியாமலோ உன்னுடைய அந்த சிறு வயது சம்பவம் உன் மனதில் ஆழ பதிந்து இருக்கிறது.  உன்னையும் அறியாமல் அவ்வப்பொழுது அது வெளிவந்து விடுகிறது.

இது ஒருவித மனநோய் தான். நீ இதில் இருந்து முழுவதுமாக வெளிவர வேண்டும் என்றால் உன்னுடைய ஒத்துழைப்பு முழுவதுமாக எனக்கு வேண்டும். என்ன சம்மதமா? “  என்று அவளை ஆழ்ந்து பார்த்தவாறு வினவினார்.

“ஓ.கே டாக்டர்....என் அம்மு எனக்காக எவ்வளவோ செய்திருக்கிறான். நான் இந்த பிரச்சனையிலிருந்து சீக்கிரம் வெளிவர வேண்டும். பாவம் என்னுடைய பிரச்சனையால் என் ஹஸ்பன்ட் ம் இப்பொழுது வேதனைப்படுகிறார்.

திருமணம் ஆகியும் அவரை இன்னுமே தவிக்க விட்டு கொண்டிருக்கிறேன்.  இதிலிருந்து எப்படியாவது நான் வெளிவர வேண்டும்...சீக்கிரம் வெளி வரவேண்டும்.

அவருக்கு ஒரு நல்ல மனைவியாக நடந்து கொள்ள வேண்டும். அதற்கு நான் கண்டிப்பாக ஒத்துழைக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்க டாக்டர்...”  என்று உறுதியுடன் சொல்ல,  

அவரும் புன்னகைத்தவாறு

“சவுன்ட்ஸ் குட் சத்யா...உன்னுடைய இந்த உறுதியே போதும் மா.  கண்டிப்பாக இதிலிருந்து நீ சீக்கிரம் வெளிவந்து விடலாம்.

முதலில் நீ ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். சிறுவயதில் உனக்கு நடந்த அந்த சம்பவத்தை முதலில்  ஒரு விபத்தாக நீ உன் மனதில் பதிய வைக்க வேண்டும்.

அந்த வயது அறியாத வயது. யாரோ ஒரு கயவன் உன்னை தவறாக மிஸ்யூஸ் பண்ணினான் என்பதற்காக,  நீ உன்னுடைய பெண்மையே  அழிந்து விட்டதாக மனதில் பதிய வைத்திருக்கிறாய்.

நீ கலங்கபட்டவள்...என்று தவறாக மனதில் இறுத்தி கொண்டிருக்கிறாய்.  அதை முதலில் அழித்து ஏறி.  உன் பெண்மை, உன் கற்பு எல்லாம் உன்னிடமே தான் இருக்கிறது.

என்னை பொறுத்தவரை ஒரு பெண் தானாக மனமுவந்து தன்னை ஒருவனிடம் கொடுக்காத வரை,  அவள் வெர்ஜியன் தான்...கற்புள்ளவள் தான்.  

அவள் விருப்பம் இல்லாமல் வேறு யாராவது அவளை பலவந்தப்படுத்தி சீரழித்தால்,  அந்தப் பெண் பெண்மையை இழந்து விடவில்லை என்று முதலில் நம்ப வேண்டும்.

அதே போல இதை ஒரு விபத்து என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

எப்படி நாம் சாலையில் செல்லும் பொழுது ஏதாவது விபத்து நேர்ந்து விட்டால், உடலின் சில பாகங்களை கூட சில நேரம் இழக்க நேரிடலாம்.

ஆனால்  அதிலிருந்து குணமாகி வந்து விடுகிறோம். அதே விபத்தை எப்பொழுதும் நினைத்து கொண்டிருப்பதில்லை.  அதேபோல பெண்களுக்கு நடக்கும் இந்த மாதிரி  கொடுமைகளிலிருந்து அவர்கள் வெளியே வரவேண்டும்.

அதுவும் உன்னை போன்று, சிறுமியர்களுக்கு நடக்கும் கொடுமைகள்...   விவரம் தெரியாத வயதில் நடந்த சம்பவங்கள்... எத்தனையோ குழந்தைகளை காயப்படுத்தி விடுகின்ற.

சிலர் வளர்ந்த பிறகும் அதை எண்ணி எண்ணி மருகி வெளியிலும் சொல்ல முடியாமல் உள்ளுக்குள் புழுங்கிக் கொள்கின்றனர். உன்னைப்போன்ற சில பேருக்கு அது ஆழ்மனம் வரை பாதித்து விடுகிறது.

 சிறு பிள்ளைகள் என்றில்லை. வயது வந்த பள்ளி மற்றும் கல்லூரி பெண்கள், ஏன் அலுவலகத்தில் கூட எத்தனையோ பெண்கள் செக்சுவல் ஹரஸ்மென்ட் , பாலியல் கொடுமைகளை அனுபவிக்க வேண்டிதான் இருக்கின்றன.

நீயே பார்த்திருப்பாயே.. மீ டூ( #MeToo)  மூவ்மென்ட் னு வந்த பிறகு எத்தனை பெண்கள் முன்வந்து தங்களுக்கு நடந்த கொடுமைகளை எல்லாம் சொல்கின்றனர்.  

இதெல்லாம் பெண்களுக்கு இடையில் ஒரு விழிப்புணர்வு வர வேண்டும்... பெண்கள் எப்பொழுதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்...

அதே போல அவர்களையும் மீறி ஏதாவது நடந்துவிட்டால் அதை தைரியமாக கம்ப்ளைன்ட் பண்ண வேண்டும். தன்னை காயப்படுத்தியவர்களுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு இனிசியேட்டிவ்...

அதே போலத்தான் குழந்தைகளுக்கும்...இப்பொழுது எல்லாம் எப்பொழுதும் விழிப்போடு இருக்க வேண்டும் என்று சொல்லி கொடுக்க வேண்டும்.

சில பள்ளிக்கூடங்களிலும் செக்சுவல் கல்வியை கொண்டு வந்திருக்கின்றனர். அது வரவேற்க கூடியது தான். பெண் குழந்தைகள் மட்டுமின்றி ஆண் குழந்தைகளும் அதைப் பற்றி நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் வளர்ந்தபிறகு இந்த மாதிரி ஒரு தவறை செய்யக்கூடாது அதே போல பெண்களும் எப்போதும் விழிப்போடு இருக்கவேண்டும். ஒவ்வொரு பெண்ணும் தற்காப்பு பயிற்சிகளை பற்றிய அறிவு இருக்க வேண்டும்.

பெண்கள் சேப்டிக்கு என பல பாதுகாப்பு கருவிகள் என்று இப்பொழுது எவ்வளவோ வந்துவிட்டது. ஆனால் அதை பற்றிய விழிப்புணர்வு இன்னும் அந்த அளவுக்கு இல்லை.  

சிறுவர்களுக்கு மட்டுமின்றி பெற்றோர்களுக்கும் இதை பற்றின புரிதல் அவசியம் வேண்டும்.  

அதற்காகத் தான் எத்தனையோ விளம்பரங்கள், கேம்பைன்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.  

ஆனாலும் இன்னும் சில பெற்றோர்கள் அசால்ட்டாக இருந்து விட,  அதை அந்த கயவர்கள், காமுகன்கள், அவர்கள் நெருங்கிய நண்பர்களாகவும் உறவினர்களாகவும் இருந்தும்,  சிறு பிள்ளைகளை தவறாக பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றனர்

சீக்கிரம் இதெல்லாம் மாற வேண்டும்...மாறிவிடும் என்று நம்புவோம்...” என்று ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டார் சைதன்யா. அவர் முகத்தில் அப்படி ஒரு வேதனை.

சத்யா மாதிரி எத்தனையோ பாதிக்கப்பட்ட பெண்களை பார்த்தவர் ஆயிற்றே. தினமும் ஒரு கேஸ் ஆவது இந்த மாதிரி செக்சுவல் ஹரஸ்மென்டில் பாதிக்கபட்ட பெண்களாக இருக்கும்.

அவர்களுக்கு நடந்த கொடுமைகளை கேட்கும்பொழுது அவரையும் அறியாமலயே சினம் பொங்கி விடும். அப்படி தன் மனதில் அழுத்தியதை எல்லாம் இன்று சத்யாவிடம் கொட்டி விட்டார்.

சத்யாவுக்குமே அவர் சொல்லியதில் இருந்த உண்மை புரிந்தது.

தன் அன்னையை போன்று எத்தனையோ தாய்மார்கள் வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பி விடுகிறார்கள்.

தங்களிடம் சிரித்து பேசுபவர்கள்...தங்கள் குழந்தைகள் மீது அன்பு, அக்கறை காட்டுபவர்களை போல நடிப்பவர்களை  எல்லாம் நல்லவர்கள் என்று நம்பி வெள்ளந்தியாய் குழந்தைகளை அவர்களுடன் பழக விடுகின்றனர்.

ஆனால் அது எவ்வளவு ஆபத்து என்று அவர்களுக்கு புரியவில்லை. கண்டிப்பாக தன்னைப்போல இன்னுமே எத்தனையோ பேர் பாதிக்கபட்டு கொண்டுதான் இருப்பார்கள் என்ற வேதனை நெஞ்சை அடைத்தது.

சைதன்யாவும் தன்னை சமாளித்து கொண்டவர், பின் அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து, தொண்டைக்குள் நீரை சரித்து தன்னை சமனபடுத்திக் கொண்டவர் பின் சத்யாவை பார்த்து  

“இப்பொழுது உனக்கு புரிகிறதா சத்யா ? நான் முன்பு சொன்னது போல உனக்கு நடந்ததை ஒரு விபத்து என்று மட்டும் மனதில் பதிய வைத்துக் கொள்.  

நீ புனிதமாகத் தான் இருக்கிறாய்.  உன் கணவனுக்கு உன்னை கற்போடு அர்பணிக்கத்தான் காத்திருக்கிறாய் என்பதை மட்டும் திரும்பத் திரும்ப மனதில் உருப்போட்டு பதிய வைத்த கொள்.

அதோடு நான் சில தியானங்களை சொல்கிறேன். அதையும் இரவில் சிறிது நேரம் செய்து உன் மனதை சாந்தப்படுத்தி கொள். கூடவே சில மருந்துகளையும் பரிந்துரைக்கிறேன்.

இதை பாலோ பண்ணு மா. கண்டிப்பாக நல்ல முன்னேற்றம் வரும். ஆல் தி பெஸ்ட். காட் ப்லெஸ் யூ...” என்று புன்னகைத்து கைகுலுக்க, சத்யாவும் அவருக்கு நன்றி சொல்லி புன்னகைத்து,  மனதில் ஒரு தெளிவுடன் வெளியில் வந்தாள்.

அதோடு அமுதனுக்கும் அவளை எப்படி ஹேண்டில் பண்ணுவது என்று சில அறிவுரைகளை வழங்கியவர் இருவரையும் அனுப்பி வைத்தார். 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!