காந்தமடி நான் உனக்கு!!!(final)-49
அத்தியாயம்-49
ஒரு
வருடத்திற்கு பிறகு:
“இன்னும் ஒரே ஒரு வாய் வாங்கிக்க டா செல்லம்...என் டார்லிங் இல்லை... உன்
அம்மு சொன்னா கேட்கணும்...” என்று கையில், உணவு கிண்ணத்தை
வைத்துக்கொண்டு தன் மனையாளின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தான் அமுதன்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சத்யாவும், அவளின் நன்றாக
மேடிட்டிருந்த வயிற்றை தூக்கிக் கொண்டு மூச்சிறைக்க உண்ண மறுத்து தன் கணவனிடம்
இருந்து நழுவி ஓடிக் கொண்டிருந்தாள்.
“ப்ளீஸ் அம்மு...போதும்... இதுக்குமேல்
என்னால் ஒரு வாய் கூட சாப்பிட முடியாது...” என்று பாவமாக கெஞ்ச,
“சரி டா...நீ இதுவரைக்கும் சாப்பிட்டது
எல்லாம் உனக்காக பேபி. இப்பொழுது நம்ம ஜூனியர்க்காக...இன்னும் ஒரே ஒரு வாய்
சாப்பிடுவியாம்...” என்று அவளை செல்லம்
கொஞ்சினான் அமுதன்.
“ஆஹான்... இப்படி சொல்லி சொல்லித்தான்
இதோடு பத்து தரம் ஊட்டி விட்டிட்டிங்க. எனக்காக ஒன்று...உங்களுக்காக ஒன்று...என்
அம்மாவுக்காக தங்கைக்காக... அத்தை மாமா..” என்று வரிசையாக பட்டியலிட்டு உள்ளே தள்ளி
விட்டீர்கள்.
அது போதாதாக்கும். இப்ப உங்க ஜூனியர்
ம் சேர்ந்துக்கிட்டாங்களா? ப்ராட்...இதெல்லாம் சீட்டிங்...” என்று அவனை செல்லமாக முறைக்க, அவனோ வாய்விட்டு மலர்ந்து
சிரித்தான்.
“கள்ளி...கண்டுகொண்டாளே என் தந்திரத்தை...”
என்று சிரித்தவாறு, எட்டி அவளை கைப்பிடித்து மெல்ல இழுத்து நிறுத்தியவன், உணவு கிண்ணத்தில் இருந்த
கடைசி ஸ்பூனையும் எடுத்து அவள் வாயில் வலுக்கட்டாயமாக திணித்தவன் கையோடு
வைத்திருந்த தண்ணீர் பாட்டிலையும் திறந்து அவளை குடிக்க வைத்தான்.
சத்யாவும் ஒரு வழியாக குடித்து
முடித்தவள், பின் ஆயாசமாக அந்த பால்கனியில் இருந்த
ஊஞ்சலில் சென்று அமர்ந்து கொண்டாள்.
அமுதனும் உணவுக் கிண்ணத்தைக் கீழே
வைத்துவிட்டு ஊஞ்சலுக்கு கீழே சென்று அமர்ந்து கொண்டவன், அவளின் காலை எடுத்து தன் மடிமீது வைத்துக்
கொண்டு மெல்ல அழுத்திக் கொடுத்தான்.
அதை கண்டு பதறிய சத்யா தன் காலை இழுக்க
முயன்றாள்.
“அச்சோ...என்ன அம்மு இது? நீங்க போய் எனக்கு கால்
அமுக்கி விடலாமா? “ என்று செல்லமாக கண்டிக்க
“ஹா ஹா ஹா என் பொண்டாட்டிக்கு தானே...கால்
என்ன கை கூட அமுக்கி விடுவேன். ஏன் அவளின் உடம்பை கூட புடிச்சு விடுவேன்...அதுல
என்ன இருக்கு? “ என்று மந்தகாசமாக புன்னகைக்க, அதைக்கண்டு, தன் கணவனின் அன்பை கண்டு ரொம்பவே நெகிழ்ந்து
போனாள் சத்யா.
கிட்டதட்ட ஒரு வருடம் முன்பு
நடந்ததெல்லாம் நினைவு வந்தது.
சத்யா அவனை மணக்க மறுத்ததும், அமுதன் பிடிவாதமாய் அவளை மணந்ததும், மணந்த பிறகும் அவனுக்கு எந்த சுகத்தையும்
கொடுக்காமல் அவனை விரட்டி விட்டது...
அதைக் கண்டு கொஞ்சம் கூட முகம்
சுளிக்காமல், அவளை கட்டாயப்படுத்தி தனது ஆசையை தீர்த்துக்
கொள்ளாமல், அவளுக்கு தகுந்த சிகிச்சை அளித்து, அதிலிருந்து அவள்
முழுவதுமாக குணமாகும் வரை காத்திருந்தான்.
சைதன்யாவை சந்தித்துவிட்டு வந்த பிறகு, கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆனது சத்யாவிற்கு முழுவதுமாக அந்த
பாதிப்பில் இருந்து வெளிவர. அதன்
பிறகுதான் அவளிடம் கணவன் என்ற உரிமையை எடுத்துக் கொண்டான் அமுதன்.
அதுவரைக்கும் அவள் மனதை
காயப்படுத்தாமல் தள்ளி நின்று அவளை அரவணைத்துக் கொண்டான். அதன் பிறகு இன்றுவரை கொஞ்சம் கூட அவன் காதல்
குறையாமல் அவளை தாங்குகிறான்.
அதுவும் அவள் கருவுற்றதிலிருந்து துள்ளி
குதித்தவன் அவளை தரையில் கூட நடக்க விடாமல் தாங்குகிறான்.
ஏழாவது மாதம் வளைகாப்பு முடிந்ததும் தலைச்சன்
பிள்ளை தாய் விட்டில் தான் பிரசவம் பார்க்க வேண்டும் என்று சொல்லி, வளர்மதி தன் வீட்டிற்கு சத்யாவை அழைத்துச் செல்ல விருப்பத்தை
தெரிவிக்க, அவனோ மறுத்து விட்டான்.
“என் பொண்டாட்டியை நான் தான்
பார்த்துக்குவேன் அத்தை. பொண்ணு வீட்டில்
தான் பிரசவம் என்பதெல்லாம் மறந்து விடுங்கள். வேண்டும் என்றால் நீங்களும் எங்களுடன் வந்து
தங்கி விடுங்கள்.”
என்று சொல்லியவன் சொன்னபடி, திவ்யாவையும் நித்யாவையும் தன் வீட்டிற்கே அழைத்து வந்துவிட்டான்.
தன் மனைவிக்காக அவளின் குடும்பத்தையே கட்டாயபடுத்தி
இங்கே குடிபெயர்த்துக் கொண்டு வந்துவிட்டான்.
வளர்மதியும் தன் மகளை பிரிந்து இருக்க
முடியாமல், சத்யாவின் பிரசவம் முடியும் வரை கூட
இருந்து பார்த்துக் கொள்ள தன் இரு மகள்களுடன் அங்கேயே குடி வந்து விட்டார்.
அப்படி இருந்தும் அமுதன் வீட்டில்
இருக்கும் நேரத்தில் சத்யாவின் பின்னே தான் சுற்றிக் கொண்டிருப்பான்.
அவளுக்கு வேண்டியதை எல்லாம் அவன்தான்
செய்து கொடுப்பான். அவன் அலுவலகம்
கிளம்பிச் சென்றதும் தான் வளர்மதி தன் மகளிடம் வந்து அவளுக்கு தேவையானதை செய்து
கொடுப்பார்.
அதுவும் வார இறுதி விடுமுறை நாட்களில்
சொல்லவே வேண்டாம். அவள் காலையில் எழுந்ததில் இருந்து இரவு படுக்கும் வரைக்கும்
ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்து கொடுப்பான்.
தன் மருமகனின் தன் மகளின் மீதான
பாசத்தைக் கண்டு நெகிழ்ந்து போவார் வளர்மதி. அதையெல்லாம் நினைத்துப் பார்த்த சத்யாவிற்கு
மனம் பூரித்துப் போனது.
தன் காலை பிடித்து விட்டுக்
கொண்டிருந்த தன் காதல் கணவனையே ஆசையாக பார்த்தவள்,
பின் மெல்ல குனிந்து அவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தம் பதித்தாள்.
“ஐ லவ் யூ அம்மு...” என்று கண் சிமிட்டி சிரிக்க, அவனும் புன்னகைத்தவாறு
தரையிலிருந்து எழுந்து, ஊஞ்சலில் அவள் அருகில் அமர்ந்து கொள்ள, அவளும் வாகாக தன் கணவன் தோளில்
சாய்ந்து கொண்டு, அவனின் இடையோடு கட்டிக் கொண்டவள்,
“ரொம்ப தேங்க்ஸ் அம்மு...இந்த
உலகத்திலேயே ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருப்பது யார் என்றால் நான் தான். இப்படிப்பட்ட
ஒரு மகிழ்ச்சியான சந்தோசமான வாழ்க்கையை கொடுத்த உனக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்...” என்று மீண்டுமாய் அவன் கன்னத்தில் அழுந்த இதழ் பதித்தாள்.
அவனும் அவளை தன்னோடு சேர்த்து மெல்ல
அணைத்து கொண்டவன்
“நீ சொன்னதே தான் நான் திரும்ப
சொல்கிறேன் ஹனி. இந்த உலகத்திலேயே ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருப்பவன் நான் தான்.
எந்த ஒரு சென்டிமென்ட்டும் இல்லாமல், வாழ்க்கையில் எந்த பிடித்தமும் இல்லாமல், மெக்கானிக் வாழ்க்கையாக சென்று கொண்டிருந்த என்
வாழ்க்கையில் வசந்தத்தை கொண்டு வந்தவள் நீ.
உன்னை பார்த்த பிறகுதான் வாழ்க்கையை
எவ்வளவு அழகாக வாழலாம் என்று கற்றுக் கொண்டேன்.
குடும்பம், நட்பு, சகோதர பாசம் என்பதை நான் உன்னை கண்ட பிறகுதான் நான்
உணர்ந்து கொண்டேன். அது மட்டுமா? காதல் என்ற அற்புதமான உணர்வையும் எனக்கு
கொடுத்தவள் நீயடி...
“உன்னை என் மனைவியாய் பெற நான் எவ்வளவு
தவம் செய்திருக்க வேண்டும்...” நெகிழ்ந்து
போய் தழுதழுத்தவாறு உரைத்தான் அமுதன்.
அதில் இன்னுமே பூரித்து போனவள், தன்னவனை இன்னுமாய் இறுக்கி
அணைத்துக் கொண்டவள்
“அது சரி...எனக்கு ஒரு பாட்டு பாடு அம்மு...நம்ம
பேவரைட் சாங்...” என்று கன்னங்குழிய
சிரிக்க, அவனும் தன் தொண்டையை செருமிக் கொண்டு பாடினான்.
பாயுமொளி நீ எனக்கு... பார்க்கும் விழி நான் உனக்கு...
தோயும் மது நீ எனக்கு... தும்பியடி நான் உனக்கு...
வாயுரைக்க வருகுவதில்லை வாழிநின்றன் மேன்மை எல்லாம்
தூய சுடர் வானொலியே... சூரையமுதே கண்ணம்மா...!
என்று தன் கணீர் குரலில், காதல் கசிந்துருக பாடிக்
கொண்டு வந்தவன், காதலடி நீயெனக்கு என்று அவளை பார்த்தபடி நிறுத்த, உடனே அவளும் காந்தமடா நீயெனக்கு
என்று பாடியவள், அவன் கழுத்தை தன் பக்கமாய் வளைத்து
அவனின் இதழில் அழுத்தமாய் தன் முத்திரையை பதித்தாள் சத்யா.
அதில் கிறங்கியவன் தன்னவளையும் அவள்
சுமக்கும் தன் ஜூனியரையும் சேர்த்து
அணைத்துக் கொண்டு, சந்தோசமாக மலர்ந்து சிரித்தான் ஆராவமுதன்..!
அவர்களின் அந்த நிறைவான வாழ்க்கையும், மகிழ்ச்சியும், சந்தோசமும் என்றென்றும்
நிலைத்திருக்க வேண்டும் என்று வாழ்த்தி விடை பெறுவோம்...! நன்றி!!!
*******சுபம்*****
இந்த கதையை
பொறுமையாக வாசித்து ரசித்த அனைத்து வாசகர்
தோழமைகளுக்கும் என் மனமார்ந்த
நன்றிகள். இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை மறக்காமல் என்னுடன் பகிர்ந்து
கொள்ளுங்கள்.
மீண்டும் ஒரு புதிய கதையுடன் விரைவில் உங்களை சந்திக்கிறேன்...நன்றி!!!- அன்புடன் பத்மினி செல்வராஜ்.
Super story mam
ReplyDeleteThanks pa!
DeleteSuper
ReplyDeletethanks pa!
Delete