நிலவே என்னிடம் நெருங்காதே!!-3

 



இந்த நாவல் ஆடியோ நாவலாக என்னுடைய  Youtube சேனலில் வெளிவந்துள்ளது. இந்த கதையை ஆடியோ வடிவில் இனிய குரலில் கேட்டு மகிழ, என்னுடைய சேனலை கிளிக் பண்ணுங்க...அப்படியே மறக்காமல் சப்ஸ்க்ரைப் பண்ணுங்க...! அடுத்த அத்தியாயத்தில் விரைவில் சந்திக்கலாம்...நன்றி!!! 

https://www.youtube.com/channel/UCEYI0t-vckRAOhGYxxEf7nQ


அத்தியாயம்-3

மேட்டுப்பாளையம் வட்டத்தில் இருந்த  அந்த ஜமீன் ஒரு மிகப் பெரிய ஜமீன் ஆகும்...ஊத்துக்குளி ஜமீனைப் போல, அந்த சுற்று வட்டாரத்தில் பரந்து விரிந்து இருந்தது..அங்குள்ள அத்தனை விவசாய நிலங்களும் அந்த ஜமீன்க்கு சொந்தமாக இருந்தது..

அந்த ஜமீனை சுற்றி இருந்த கிட்ட தட்ட எல்லா கிராமங்களுமே அந்த ஜமீனில்தான் வேலை செய்து வயிற்றை கழுவி வந்தனர்...

அப்பொழுது இருந்த ஜமீன்தார் பூமிநாதன்  ஏழை வயிற்றில் அடித்து தன் சொத்தை பெறுக்காமல் அந்த ஜமீனில் வரும் லாபத்தில் பெரும் பகுதியை அந்த பகுதி மக்களுக்கே திரும்ப கொடுத்தார்...

அங்குள்ள பிள்ளைகளின் படிப்புக்காக பள்ளிக் கூடங்களை திறந்தார்.. கால்வாய்களையும் ஏரி குளங்களையும்  ஆண்டு தோறும் தூர்வாரி பராமரித்து மழை நீர் வீணாகாமல் காத்து  நிலத்தடி நீரை பெறுக்க, விவசாயம் செழித்து வளர்ந்தது அந்த பகுதியில்..

கூடவே தனியாக விவசாயம் பண்ணனும் என்று விருப்பமுள்ளவர்களுக்கு தன் நிலத்தை தானமாக கொடுத்து அவர்களை விவசாயம் செய்ய ஊக்கப்படுத்தினார் பூமிநாதன்..

அதனால் அந்த ஜமீனில் இருந்த மக்கள் மகிழ்ச்சியோடும்  மனநிறைவோடும்  வாழ்ந்து வந்தனர்..

1958ல் தனி நபர்கள் வைத்திருக்கும் நில உடைமைக்கு உச்ச வரம்பை நிர்ணயித்து அதற்கு மேற்பட்ட உபரி நிலங்களை அரசு கையகப் படுத்தும் நில உச்சவரம்பு சட்டம் என்ற சட்டத்தை அரசு கொண்டு வர அதை கண்டு ஜமீன்கள் எல்லாம் கலக்கம் அடைந்தனர்

இதுவரை தங்கள் சொத்தாக இருந்ததை இப்பொழுது சர்க்காருக்கு தாரை வார்த்துக் கொடுக்க மனம் வரவில்லை அவர்களுக்கு..

சிலர்   குறுக்கு வழிகளை பின்பற்றி தங்கள் சொத்துக்களை பினாமி பெயரில் எழுதி வைத்தும் தங்கள் சொந்தங்களுக்கு  சொத்துக்களை பிரித்து கொடுத்தும்  தங்கள் சொத்து தங்கள்  கையை விட்டுப் போகாதவாறு  குறுக்கு வழியில் காப்பாற்றிக் கொள்ள முயன்றனர்..

ஆனால் பூமிநாதன் அப்படி எதுவும் செய்யவில்லை..

மாறாக தன்னிடமிருந்த சொத்துக்களை எல்லாம் தன் குடும்பத்தாருக்கு பிரித்துக் கொடுத்து விட்டு மீதியிருந்த சொத்துகளை சொந்த நிலம் இல்லாதவர்களுக்கு தானமாக கொடுத்தார்..

ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பட்டா போட்டு அரை ஏக்கர் நிலம் என்ற விதத்தில் பிரித்து கொடுத்தார்..

அன்றைய நாள் அந்த ஜமீன் ஏ விழாக்கோலம் பூண்டிருந்தது..

மக்கள் மனதில் அவ்வளவு மகிழ்ச்சி.. அனைவருமே ஜமீன்தாரை மனதார வாழ்த்தி விட்டு சென்றனர்.. அப்பொழுது சிறுவனாக இருந்த பூமிநாதன் மகன்  தேவநாதன் மனதில் அது எல்லாம் பதிந்துவிட்டது..

சிறுவயதிலிருந்தே நல்ல பண்புகளை சொல்லி வளர்க்கப்பட்டதால் தேவநாதன் மற்றவர்கள் நலனில் அக்கறை கொண்டு இருந்தார்..  அவர் தந்தை ஆரம்பித்த பள்ளியிலேயே மேல் படிப்பை முடித்தார்..

தன் தந்தை பூமிநாதனை போலவே தேவநாதனுக்கும் விவசாயத்தில் ஆர்வம் வந்துவிட  விவசாயத்தையே தொடர்ந்து செய்து வந்தார்..

தன் தந்தையின் மறைவுக்கு பிறகு அந்த ஜமீனின் பொறுப்பை ஏற்று கொண்டவர் தன் தந்தையை போலவே மக்களுக்கு சில பல நல்ல காரியங்களை செய்து வந்தார்..   

அவருக்கு மனைவியாக வந்து சேர்ந்தார் மணியம்மை.. ஜமீன்தாரினியும் தேவநாதனுக்கு உறுதுணையாக  அவர் செய்யும் நல்ல காரியங்களுக்கு துணை இருந்தார்..

தன் மனைவி என்றால் கொள்ளை பிரியம் தேவநாதனுக்கு.. வயலுக்குச் சென்று மேற்பார்வை பார்த்துவிட்டு திரும்பி வந்தால்  மனைவியை சுற்றிக் கொண்டே இருப்பார்..

மணியம்மை அம்மையாருக்கும் கணவன் என்றால் உயிர்.. அப்படி ஒருவர் மேல் ஒருவர் அன்பு செலுத்தியிருக்க இதுவரை எந்த குறையும் இல்லாமல் நிறைவான வாழ்க்கை வாழ்ந்த அவர்களுக்கு குறையாக வந்து சேர்ந்தது புத்திரபாக்கியம் இல்லாதது..

திருமணம் முடித்து ஐந்து வருடங்கள் ஆகியும் மணியம்மை கருவுற்று இருக்கவில்லை.. மணியம்மை மனதில் அதுவே ஒரு குறையாக இருந்து வந்தது..

தேவநாதன் அதைப் பொருட்படுத்தாமல் ஏதாவது ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்ல மணியம்மை மறுத்துவிட்டார்..

“இந்த ஜமீன் வாரிசு இதோடு முடிந்து விடக் கூடாது.. கண்டிப்பா  உங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும்..பேசாமல் வேற ஒரு திருமணம் செய்து கொள்ளுங்கள்..”  என்று வற்புறுத்த தேவநாதனோ அதை மறுத்துவிட்டார்...

ஆனாலும் மணியம்மை அவரை விடாமல் நச்சரித்து வந்தார்... இதனால் இருவருக்கிடையில் சில சில சலசலப்புக்கள் வந்தாலும் தன் மனைவியை அவர்  என்றும் வெறுத்தது இல்லை.. வருத்தியதும் இல்லை...

மணியம்மை தன் கணவருக்கு அவர் பேச்சை கேட்காமலயே பெண் தேட ஆரம்பித்தார்...

நல்ல வேளையாக அதற்கு அவசியம் இல்லாமல் அடுத்த மாதமே அவர் கருவுற்றுவிட, தேவநாதனோ பெரும் மகிழ்ச்சி அடைந்தார்..

வாரிசு வரப் போகிறது என்பதை விட தன் மனைவி இனியாவது சந்தோஷமாக இருப்பாள்..

“அவளை  கண்கலங்க விடாமல் காப்பேன் என்று நான் கொடுத்த வாக்கை எங்கே காப்பாற்ற முடியாமல் போய் விடுமோ என்ற கவலை இனி இல்லை... இனி அவளை நல்ல படியாக பார்த்து கொள்ளலாம்.. மேலும் இனிமேல்  தன்னை இன்னொரு திருமணத்திற்கு வற்புறுத்த மாட்டாள்.." என்ற நிம்மதி வந்து சேர்ந்தது..

தன் மனைவியை பக்கத்தில் இருந்து கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார் தேவநாதன்...

மணியம்மை யும் தன் கணவனின் அன்பில்  உருகி போனவர்

“என் அவசர புத்தியால் வேற ஒருத்தியை கொண்டு வர இருந்தேனே.. இப்படிபட்ட ஒரு நல்ல கணவனை இழக்க இருந்தேனே.. நான் ஒரு மடச்சீ... “ என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டார்..

பத்தாவது மாதத்தில் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் மணியம்மை..  தன் மனைவியை உரித்து வைத்து பிறந்திருந்த தன் மகனை  கண்டதும் தேவநாதனுக்கு ஆனந்த கண்ணீர் வந்தது..

மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு அந்தக் குழந்தையை கையிலேந்தி முத்தமிட்டார்..  மணியம்மை அதைக் கண்டு மனம் பூரித்து போனார்...  அந்த குழந்தைக்கு நெடுமாறன் என்று பெயரிட்டனர்..  

நீண்ட நாட்கள்  தவமிருந்து  பெற்ற தன் மகனை தன் கண்ணுக்குள் வைத்து வளர்த்தார் மணியம்மை..

எப்பொழுதும் அவனையே சுற்றி சுற்றி வருவார்.. அவன்  சிறிது வளர்ந்ததும் அவன் வயது குழந்தைகள் யாரும் கூட விளையாட இல்லாததால் நெடுமாறன் விளையாடுவதற்கும் தன் அன்னையைத் தான் தேடுவான்..

அவரும் தன் மகனுடன் சேர்ந்து விளையாடி  அவனை சிரிக்க வைப்பார்.. தேவநாதனும் தன் மகனையும் மனைவியையும் கண்டு ரசித்து சிரித்து விட்டு தன் வேலையை பார்க்க சென்று விடுவார்..

ந்த சமயம் பெரும் பஞ்சம் வந்தது.. மழை இல்லாமல் விவசாய நிலங்கள் எல்லாம் வறண்டு விட  அதை எப்படி சரி பண்ணுவது? மக்களை எப்படி காப்பது என்று தேவநாதன் அதிக  நேரம் பொதுமக்கள் நலனில் ஊன்றி போய்விட, தன் மகனிடம் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போய்விட்டது..

அதன் பலனாக நெடுமாறன் தனது அன்னையிடம் அதிகம் ஒட்டி கொண்டான்..  அவன் அன்னை மணியம்மை  குணத்தை அப்படியே பிடித்துக் கொண்டான்.. எப்பொழுதும் தன் அன்னையின்  முந்தானையை பிடித்து கொண்டே சுற்ற, கொஞ்சம் பயந்த சுபாவமாக வளர்ந்து விட்டான்..

புதியவர்களை நேரில் பார்த்து பேச அஞ்சியும் எப்பொழுதும் தன் அன்னையின் கை பிடித்துக் கொண்டு சுற்றுவதும் அவனுக்கு வசதியாய் போனது..

அதைக் கண்ட தேவநாதன் தன் மகனுக்கு தைரியத்தை சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்க அவனோ  அதை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டான்.. ஓடிச்சென்று தன் அன்னையை கட்டிக் கொள்வான்

மணியம்மையும்

“அவன் சிறு குழந்தை தானே..  வளர வளர மாறிவிடுவான்.. அவனை மிரட்டாதிர்கள்.. “  என்று கணவனுக்கு சமாதானம் சொல்வார்..

நாட்கள் நகர,  நெடுமாறன் அவனுடைய பன்னிரண்டாவது வயதில் மணியம்மை அம்மையார் விஷ காய்ச்சலுக்கு ஆளானார்...

தேவநாதன் எத்தனையோ வைத்தியர்களை அழைத்து வந்து காட்டினார்..  ஆனால் யாராலும் அந்த நோயை  குணப்படுத்த முடியாமல் போய்விட படுக்கையில் படுத்த ஒரு மாதத்திலேயே தன் மகனைப் பிடித்து தன் கணவன் கையில் கொடுத்து அவனை நன்றாக பார்த்துக்க சொல்லி விட்டு இந்த உலகத்தை விட்டு பிரிந்து சென்றார்..

தேவநாதனோ அதிர்ச்சியில் உறைந்து போனார்...

தன்னுடன் எப்பொழுதும் சிரித்து பேசி கொண்டிருக்கும் தன் மனைவி இனி இல்லை என்ற உண்மையை ஒத்துக்கவே முடியவில்லை...

எப்பொழுதும் தன் மனைவியுன் நினைப்பிலேயே மூழ்கி இருக்க அவருடைய உறவினர்கள் அவரை மறுமணம் செய்து கொள்ள வற்புறுத்தினர்..

நெடுமாறனை காரணம் காட்டி அவனைப் பார்த்துக் கொள்ள ஒரு அன்னை வேண்டும் என்ற காரணத்தை சொல்லி அவரை மறுமணம் செய்து கொள்ள வற்புறுத்தினர்...

அப்பொழுதுதான் தேவநாதனுக்கு தன் மகனின் நினைவே வந்தது..மணியம்மை இறந்ததும் தேவநாதனுடையை அன்னை தான் தன் பேரனை பார்த்து கொண்டிருந்தார்..

தன் மனைவிக்கு கொடுத்த வாக்கு நினைவு வர, அதற்கு பிறகு தன் மகன் மட்டுமே வாழ்க்கை என்று உறுதி செய்து கொண்டு தன்னை மறுமணம் செய்து கொள்ள வற்புறுத்தியவர்களை எல்லாம் ஒரே பார்வையில் அடக்கி விட்டார்...

முறுக்கிய மீசையும் ஆறடிக்கும் மேலான உயரத்தில் நெஞ்சை நிமிர்த்தி கொண்டு கம்பீரமாக நடக்கும் தன் தந்தையை காண நெடுமாறனுக்கு பயமாக இருக்கும்...

அதுவரை தன் அன்னையின் முந்தானைக்குள்ளயே வளர்ந்தவனுக்கு திடீரென்று அவர் அவனை விட்டு செல்ல தன் தந்தையிடம் ஒட்ட அவனுக்கு முடியவில்லை...  

தேவநாதன் ஆசையாக தன் மகனை அணைக்க சென்றாலும் கூட அவருடைய மிரட்டும் கம்பீரமான தோற்றத்தை கண்டு அஞ்சி ஓடிச்சென்று தன் பாட்டியின் முந்தானைக்குள் ஒளிந்து கொள்வான்.. 

தன் மகன் அப்பா என்று தன்னிடம் ஆசையாக வராமல் தன்னை கண்டு பயந்து நடுங்குவதை கண்டு வேதனையாக இருந்தது தேவநாதனுக்கு.. ஆனாலும் அதை தன் மனதுக்குள் போட்டுகொண்டு முடிந்தவரை அவன் கண் முன்னே வராமல் பார்த்து கொள்வார்..

விளைவு அவன் இன்னுமே தந்தையை விட்டு விலகி செல்ல ஆரம்பித்தான்..

பள்ளியிலும் மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடாமல் தணித்தே இருப்பான்..

இப்படியே நாட்கள் நகர நெடுமாறன்  வளர்ந்து இளைஞனாக நின்றான். தன் மனைவியின் சாயலில் அவளைப் போலவே இருந்த தன் மகனைக் காண அவருக்கு பூரிப்பாக இருந்தது..

ஆனாலும் தன் மகனை  ஆசையாக கட்டிக் கொள்ளாமல் தன் மகன் அஞ்சுவான்  என்று தள்ளி நின்று பார்த்து ரசித்தார்.. நெடுமாறனும்  அவனுக்கு ஏதாவது தேவை என்றால் மட்டுமே தந்தையிடம் வந்து நிற்பான்..

பள்ளிப்படிப்பு முடிந்ததும் கல்லூரி படிப்புக்காக கோயம்புத்தூருக்கு அனுப்பி வைத்தார்.. அங்கு விடுதியில் தங்கிப் படித்த நெடுமாறன் இறுதி ஆண்டில் இருந்த பொழுது அதே கல்லூரியில் முதல் ஆண்டில் சேர்ந்த மனோகரி மீது காதல் வயப்பட்டான்..

மனோகரியும் கோயம்புத்தூரை அடுத்து இருந்த ஒரு சிறு பண்ணைக்காரரின் மகள்தான்..

கல்லூரியில் சேர்ந்த சில நாட்களில் அவள் பார்வை நெடுமாறனை வட்டமிட, அவனை பார்க்கும்பொழுதெல்லாம் கண்களை கொட்டி படபடவென்று அடித்து ஒரு வெட்க புன்னகையுடன் ஓரக் கண்ணால் பார்த்தவாறு விலகி செல்வாள்..

அதைக் கண்டதும் தானாகவே நெடுமாறன் மனம் மனோகரியின் மீது படர்ந்தது.. தன் மனதில் தோன்றியது காதலா இல்லையா என்று ஆராயவும் அதைப்பற்றி ஆலோசித்து தெளிவுபடுத்த  அவனின் ஆருயிர் அன்னை இல்லாமல் போகவும் கொஞ்சம் தடுமாறினான் நெருமாறன்..

ஆனால் அவனை மேலும் தடுமாற விடாமல் மனோகரி அவனிடம் வந்து அவனை காதலிப்பதாக சொல்லி புரபோஸ் பண்ண  நெடுமாறன் உடனே உள்ளம் குளிர்ந்து போய் அவள் காதலை ஏற்றுக்கொண்டான்..  

கல்லூரி படிப்பை முடிக்கவும் அந்த இறுதி நாளில் நெடுமாறன் தன்னை மணந்து கொள்ளுமாறு வற்புறுத்தினாள் மனோகரி..

“எனக்கு 23 வயதுதான் ஆகிறது.. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் நானும் தொழிலை பார்க்க ஆரம்பித்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம்..”  என்று சொல்லி தயங்க மனோகரி அவனை விடவில்லை..

அவளின் வற்புறுத்தலினால் நேராக தன் தந்தையிடம் சென்று நின்றான் நெடுமாறன் இதுவரை தன் மகன் எதற்காகவும் தன்னிடம் வந்து நின்றதில்லை.. இப்பொழுது அவன் ஒரு பெண்ணை கேட்டு வந்து நிற்கவும் சந்தோசபடுவதா இல்லை வருத்தபடுவதா என்று யோசனையானார் தேவநாதன்...

உடனே அந்த பெண்ணை பற்றி விசாரிக்க, விசாரணையில் கிடைத்த தகவல் அவர் மனதுக்கு பிடித்தமானதாக இல்லை..

மனோகரியுடைய பெற்றோர்கள் தவறான வழியில் சொத்து சேர்த்து வருவதும் தங்களை கொஞ்சம் ஆடம்பரமாக பகட்டாக காட்டிக் கொள்வதில் சிறந்தவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்தது..

சரி பெற்றவர்கள் எப்படியோ  இருக்கட்டும் தன் வீட்டுக்கு வரும் மருமகள் நன்றாக இருந்தால் போதும் என்று அவளைப் பற்றி விசாரிக்க அதுவும் உவப்பானதாக இல்லை..

இன்னும் தீவிரமாக விசாரித்ததில் தன் மகனை காதல் வலையில் விழ வைத்ததே  ஒரு திட்டமிட்ட சதி என்று தெரிந்து கொண்டார்..

நெடுமாறன் உடைய வசதி வாய்ப்பையும் வளமான பின்புறத்தையும் கண்டுதான் தானாகவே தன் மகனிடம் வந்து காதல் வார்த்தை பேசியிருக்கிறாள்  என்று கண்டு கொண்டார்..

கூடவே அவளுடைய பகட்டும் பேச்சும்  குணமும் தங்கள் ஜமீனுக்கு ஒத்து வராது என்று கூறி தன் மகனின் மனதை மாற்ற முயன்றார்..

ஆனால் ஏற்கனவே மனோகரி

“உங்கள்  தந்தை இப்படித்தான் கூறுவார்.. நீங்கள் என்னை கை விட்டு விட மாட்டீர்களே?”  என்று கண்ணீருடன் நெடுமாறனிடம் சத்தியம் வாங்கியிருக்க அவள்  சொன்னபடியே தன் தந்தையும் கூற, அதைக்கேட்டு கோபமடைந்தான் நெடுமாறன்..

இதுவரை தன் தந்தையிடம் எதிர்த்து பேசியிராதவன் முதன் முறையாக தன் தந்தையை எதிர்த்து  நின்றான்...  

மனோகரி யை திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் அந்த வீட்டை விட்டு போய் விடுவதாக மிரட்ட தன் மகனின் பிடிவாத குணத்தையும் தன் மனைவி உயிரையே வைத்திருந்த தன் மகன் தன்னைவிட்டு சென்று  விடாமல் இருக்கவும் அவன் விருப்பப்படி மனோகரியை நெடுமாறனுக்கு  மணமுடித்து வைத்தார் தேவநாதன்..

மனோகரிக்கு  நம்பவே  முடியவில்லை.. அவள் பெற்றோர் சிறுவயதில் இருந்து சொல்லி சொல்லி உருவேற்றி இருந்த பெரிய இடத்து மருமகள் கனவு நிறைவேறி விட்டதை கண்டு பூரித்து போனாள்..

இப்பொழுது அவள் ஒரு ஜமீனின் மருமகள் என்று பெருமையாக இருந்தது.. படிப்பை பாதியில் விட்டுவிட்டு அந்த ஜமீனின் மருமகளாக வளைய வந்தாள்..

விதவிதமான ஆடைகளும் கழுத்து நிறைய அணிகலன்களும் அணிந்து கொண்டு மூன்று வேலைக்கும் விதவிதமான சாப்பாடு என்று அவள்  கனவிலும் நினைக்காத வாழ்க்கை அமைந்து விட, பூரித்து போனாள்..

தேவநாதனும் சிறுபெண்.. நகை நட்டுக்கு ஆசைபடுகிறாள்.. போகட்டும் என்று கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார்...

டுத்து தன் மகனுக்கு விவசாயத்தில் ஆர்வம் இல்லாமல் போக, கோயம்புத்தூரில் சிறிய அளவில் ஒரு டெக்ஸ்டைல் பிசினஸ் ஐ ஆரம்பித்து கொடுத்தார்..

ஆனாலும் அவன் தொழில் செய்வதில் சிரமப்படுவான் என்று அவரும் கூடவே இருந்து பார்த்து கொண்டார்.. அதனாலயோ என்னவோ, பெரிதாக தொழில் வளர்ந்தாலும் அது எல்லாம் தேவநாதன் மூளையாக இருந்தது..

நெடுமாறன் அந்த தொழிலிலும் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. அவனுக்கு மாலை 5 ஆனால் போதும்.. தன் காதல் மனைவியை காண ஓடி வந்து விடுவான்.. தன் மகனுக்காக ஆரம்பித்த தொழில் அவனுக்கு விருப்பம் இல்லை என்றாலும் தேவநாதனுக்கு அதில் ஆர்வம் வந்துவிட்டது..

அவரே மும்முரமாக அதில் இறங்கினார்.. அதன் பலனாக விரைவிலயே அந்த தொழில் நன்றாக வளர்ந்துவிட்டது...

விவசாயத்துடன் டெக்ஸ்டைல் பிசினஸ் ம் வேகமாக வளர இன்னும் பெரிய அளவில் வளர்ந்தார் தேவநாதன்...

இந்த நிலையில் அந்த வருடமே மனோகரி கருவுற்றிருக்க, தேவநாதனுக்கு அத்தனை மகிழ்ச்சி.. தன் மருமகளுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க, அழகான ஆண் குழந்தையை பெற்று எடுத்தாள் மனோகரி..

அதிசயமாக அந்த குழந்தை அவன் பெற்றோர்களை போல இல்லாமல் அப்படியே தேவநாதனை உரித்து வைத்து பிறந்திருந்தான்..

அதை கண்டதும் தேவநாதனுக்கு கர்வமாக இருந்தது.. தன் மகன் பிறந்த பொழுது இல்லாத பெருமையும் கர்வமும் தன் பேரனை கண்டதும் அவர் உள்ளே பொங்கி பெருகியது...

அவனை மார்போடு அணைக்க, அவனும் அவர் முகம் பார்த்து அழகாக சிரித்தான்..அந்த சிரிப்பில் மயங்கி போனவர் அதன் பிறகு தன் பேரனையே சுத்தி வர ஆரம்பித்தார்....

மனோகரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பொழுது அவளை அவள் பிறந்த வீட்டிற்கு அனுப்பாமல் தன்னுடைய ஜமீனுக்கு அழைத்துச் சென்றுவிட்டார் தேவநாதன்..

அதைக் கண்டு ரொம்பவும் பெருமையாகவும் நிம்மதியாகவும் இருந்தது மனோகரிக்கு..

அவள் பிறந்த வீட்டில் இப்பொழுது நிலமை அவ்வளவாக சரியில்லை.. அவள் பெற்றோர் தொழில் கொஞ்சம் கொஞ்சமாக சரிய ஆரம்பிக்க பொருளாதார நிலையில் கீழே இறங்கிக் கொண்டிருந்தனர்..   

மேலும் ஜமீனில்  இருக்கும் வசதிகள் அவள் வீட்டில் கிடையாது.. அதனாலேயே உள்ளுக்குள் எங்கே தன்னை  பிறந்த வீட்டிற்கு அனுப்பி  விடுவாரோ என்று அஞ்சி இருக்க தேவநாதன் தன் மருமகளை ஜமீனுக்கு அழைத்து வர பெரும் நிம்மதியாக இருந்தது..  

தன் மருமகளையும் பேரனையும் தங்கத் தட்டில் வைத்து தாங்கினார் தேவநாதன்..  நெடுமாறனுக்கு ரொம்பவும் சந்தோஷம்.. தன் விருப்பத்தை மதித்து இதுவரை தனக்காக எல்லாம் செய்து வரும் தன் தந்தை மீது கொஞ்சமாக நல்ல அபிப்ராயம் வர ஆரம்பித்தது நெடுமாறனுக்கு...

தேவநாதன்  தன் பேரனுக்கு அதிரதன் என்று பெயரிட்டார்..

அதிரதன்-  மகாபாரதத்தில் வரும்  கர்ணனின் வளர்ப்பு தந்தையின் பெயர்.. தேரோட்டத்தில் சிறந்தவன். சிறந்த தேர் வீரன்.. எண்ணற்ற தேர்வீரர்களை  எதிர்த்துப் போரிடும் வல்லமையுடையவன்..

அந்த போர்வீரனைப் போல தன் பேரனும் யாருக்கும் அஞ்சாமல் எதிர்த்து நின்று அவன் வாழ்வில் பல வெற்றிகளை பெறவேண்டும் என்று அந்த பெயரை வைத்தார்...

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!