நிலவே என்னிடம் நெருங்காதே!!-5

 


அத்தியாயம்-5

திரதன ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தான்.. அப்பொழுது மனோகரிக்கு மூன்றாவதாக மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்திருக்க, இப்பொழுது அதிரதனுக்கு நன்றாக விவரம் தெரிந்து விட குட்டி ரோஜாவாய் கண் சிமிட்டி சிரிக்கும் தன் தங்கையை கண்டதும் அவனுக்கு ரொம்பவும் குசியாகி போனது...

அவளுக்கு யாழினி என்று அவனே பெயர் சூட்டினான்..  

அந்த பட்டு ரோஜாவை தொட்டு பார்ப்பதும் தூக்கி வைத்து கொஞ்சுவதும் என்று அவளையே சுத்தி வர ஆரம்பித்தான் அதிரதன்.. அமுதினியும் இப்பொழுது வளர்ந்திருக்க, அண்ணா என்று அதிரதனிடம் ஒட்டி கொண்டாள்..

பெரியவளின் அண்ணா என்ற அழைப்பும் சின்ன குட்டியின் பொக்கை வாய் சிரிப்பும் அவனை கட்டி இழுக்க, அவர்களுடனேயே நேரத்தை செலவிட  ஆரம்பித்தான் அதிரதன்..

அதனால் தேவநாதனுடன் செலவிடும் நேரம் குறைய ஆரம்பித்தது..

எப்பொழுதும் தன் தாத்தாவுடன் உறங்குபவன் இப்பொழுது தன் தங்கைகளுடன் உறங்க வேண்டும் என்று அடம் பிடித்ததால் தேவநாதனும் அவனை மனோகரியின் அறையிலயே விட்டுவிட்டார்...

தன் பேரனின் போக்கில் மாற்றத்தை கண்ட தேவநாதனுக்கு யோசனையாக இருந்தது..

தன் பேரன் தன் தங்கைகள் மீது பாசமாக இருப்பது சந்தோஷம் தான்.. ஆனால் அந்த பாசமே அவனை அவன் அப்பனை போல ஆக்கிவிட்டால் என்று யோசனையாக இருந்தது..

தன் மகனை ஆரம்பத்தில் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டதால் தான் அவன் வளர்ந்த பிறகு அவன் குணத்தை மாற்ற முடியாமல் போய்விட்டது.. அதே மாதிரி ஒரு தவறு தன் பேரன் இடம் நேராமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தவர் அவன் ஐந்தாம் வகுப்பு முடித்ததும் அவனை ஊட்டி கான்வென்டில் ஆறாம் வகுப்பில் அவனை சேர்த்து விட்டார்..

அவனுக்கு தன்னம்பிக்கையும் தைரியம் வரவேண்டும்..  கூடவே அவர் சம்பந்தி மாதிரி ஆட்களின் தவறான போதனைக்கு அவன் மயங்கி விடக் கூடாது என்று கருதியே அவனை கான்வென்டில் சேர்த்தார்..  

ஆனால் அவர் செய்த தவறு அதை தன் பேரனிடம் விலக்கி சொல்லி இருக்கவில்லை

இந்த சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருந்த பாரிஜாதம் இதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டார்..  

தன் பேரனிடம்

“உன்னை எங்களிடமிருந்து பிரிக்கத்தான் உன் தாத்தா உன்னை தனியாக அனுப்பி வைக்கிறார்.. இல்லை என்றால் இந்த சிறு வயதிலேயே நீ ஏன் இந்த குடும்பத்தையும் உன் தாத்தா உன் அப்பா அம்மா எல்லாரையும் பிரிந்து செல்ல வேண்டும்..

அப்படி என்ன பெரிய படிப்பு வேண்டியிருக்கு?  இந்த வயசில் உன் தங்கைகளுடன் விளையாடாமல் நீ மட்டும் தனியாக சென்று கஷ்டப்படலாமா?  உன் தாத்தாக்கு உன் மேல் பாசமே இல்லை.. “  என்று இன்னும் ஏதேதோ திரித்து சொல்ல அதையெல்லாம் கேட்டு அதிரதன் மனம் குழம்ப ஆரம்பித்தது...

அவன் பாட்டி சொல்வதும் நியாயமாக தெரிந்தது அவனுக்கு.. கூடவே அப்பொழுதுதான் அவன் விரல் பிடித்து நடக்க ஆரம்பித்த குட்டி தங்கையை விட்டுச் செல்ல அவனுக்கு மனமில்லை..

அவன் தாத்தாவிடம் சென்று  நான் ஊட்டிக்கு போக மாட்டேன் என்று அடம்பிடிக்க தன் பேரனை எப்படியாவது அந்த பள்ளியில் சேர்ந்துவிட வேண்டும் என்று முடிவு செய்திருந்தவர் அதுவரை தன் பேரனிடம் எப்பொழுதும் கொஞ்சி பேசுபவர் முதன் முறையாக கண்டிப்பை கையிலெடுக்க ஆரம்பித்தார்..

அவரது விருப்பமாக, அவன் ஊட்டியில் படித்தால் வரும் நன்மைகளை  விலக்கி சொல்லாமல் கட்டளையிடும் தொணியில் அவன் ஊட்டியில்தான் படிக்க வேண்டும் என்று கடுமையான முகத்துடன் கூற தன் தாத்தாவின் புதுமுகத்தை கண்ட அதிரதன் அதிர்ந்து போனான்..

அதுதான் அவன் தாத்தாவை  பற்றிய ஒரு தவறான கருத்து அவன்  ஆழ்மனதில் விதையாக புதைந்து கொண்டது...

காரை விரட்டி கொண்டே தன் சிறுவயது பழைய நினைவுகளிலிருந்து வெளிவந்த அதிரதன் தன்  தலையை உலுக்கிக் கொண்டு முன்னாலிருந்த சாலையை பார்க்க அப்போதுதான் அவனுடைய வீடு வந்து சேர்ந்திருப்பது உறைத்தது..

அவனுடைய காரை கண்டதும் செக்யூரிட்டி பவ்யமாக சல்யூட் வைத்து கேட்டை திறந்து விட்டான்..

பெரிய அரண்மனை போல இருந்த அந்த வீட்டினுள் நுழைந்தது அவனுடைய ஆடி கார்.. கைகள் தானாக ஸ்டியரிங்கை சுழற்ற காரை அதனுடைய இடத்தில் நிறுத்தி அணைத்தவன்  அதன் சாவியை உருவிக்கொண்டு வேகமாக கீழிறங்கினான்..

அதுவரை கொஞ்சமாக மட்டு பட்டிருந்த அவனுடைய சீற்றம் மீண்டும் தலை தூக்க அதையெல்லாம் சேர்த்து அந்தக் கார் கதவின் மேல் காண்பித்து அந்த கதவை அறைந்து சாத்தினான்..

பின்  காலில் இடறிய வேஷ்டியை கேஷுவலாக ஒதுக்கியவன் அடுத்த நொடி புயல் என அந்த வீட்டிற்குள் நுழைந்தான்....

உள்ளே வந்தவன் வரவேற்பறையை அடைய அந்த பெரிய ஹாலில் அவனுடைய நெருங்கிய உறவினர்களும் தொழில் முறையில் நெருங்கிய நண்பர்களும் கூட்டமாக அமர்ந்து இருக்க எல்லாருமே சற்று முன் நடந்திருந்த அவன்  திருமணத்தை பற்றி தான் பேசிக் கொண்டிருந்தனர்..

ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையை  திரித்து சொல்லிக் கொண்டிருந்தனர்..  புயலென உள்ளே நுழைந்தவன்  அங்கு இருந்த கூட்டத்தைப் பார்த்ததும் தன் சீற்றத்தை அடக்கிக் கொண்டான்..  

அதே நேரம் அங்கு அமர்ந்திருந்தவர்கள் உள்ளே வந்தவனை கண்டதும் தங்கள் பேச்சை அப்படியே நிறுத்திக் கொண்டனர்..

ஆறடிக்கும் மேலான  உயரத்தில், புது மாப்பிள்ளையாக வேஷ்டியின் ஒரு நுனியை கையில் ஸ்டைலாக  பிடித்தபடி கம்பீரமாக உள்ளே  வந்து நின்று கொண்டிருந்தவனை கண்டதும் வாய் பிளந்து பார்த்தனர்..

இன்னும் சிலரோ அவனை எப்படியாவது தங்கள் மாப்பிள்ளை ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று கோட்டை கட்டி வைத்திருந்த கனவெல்லாம் கலைந்து போய் விட கை நழுவி விட்ட அவனையே ஏக்கத்துடன் பார்த்தனர்..  

எல்லார் பார்வையும் தன்மீது இருப்பதை கண்டவன் அனிச்சையாக  அனைவருக்கும் கைகூப்பி வணக்கத்தை வைத்தவன்  மெல்ல புன்னகைத்து சிறு தலையசைப்புடன்  தன் அறையை நோக்கி வேக நடையுடன் நடந்தான்..

அவனின் அந்த கம்பீர நடை அவனுடைய தாத்தா தேவநாதனை அப்படியே ஒத்து இருக்க எல்லாருமே மலைத்துப் போய் அவனையே பார்த்திருந்தனர்..  

விடுவிடுவென்று தன் அறைக்கு  சென்றவன் அறைக்கதவை மூடிவிட்டு  கையிலிருந்த அலைபேசியை கட்டிலின் மீது தூக்கி எறிந்தான்..

அதே நேரம் கதவை மெதுவாக தட்டிக் கொண்டு உள்ளே வந்தார் அவன் அன்னை மனோகரி.. உடலை விறைத்து கொண்டு முஷ்டி இறுக முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க நின்றிருந்த தன் மகனை கண்டதும் பதறியவர்

"அதி கண்ணா... கல்யாணம் முடிஞ்சதும் கங்கணத்தை கூட கழட்டாமல் எங்கடா போனஅந்த கிழம் என்னைய போட்டு வறுத்து எடுத்திருச்சு..." என்று சலித்து கொண்டே உள்ளே வந்தார் மனோகரி...

அவன் ஏதோ பதில் சொல்லு முன்னே மனோகரி கையோடு எடுத்து வந்திருந்த அவர் அலைபேசி ஒலிக்க, அவசரமாக அதை ஆன் பண்ணி காதில் வைத்தவர்

“ஆங் சொல்லுங்க மாமா... “  என்று பவ்யமாக குழைந்தார் மனோகரி..  

"என்ன மனோ? உன் மவன் வந்துட்டானா? "  என்று கர்ஜித்தார் மறுமுனையில் இருந்தவர்..

“இப்ப தான் வந்தான் மாமா...  நானும் அவனை திட்டிகிட்டுத்தான்  இருக்கிறேன்.. “  என்று மீண்டும்  பவ்யமாக உரைத்தார்..  

“அது சரி... சீக்கிரம் அவன் கையில் இருக்கிற கங்கணத்தை கழட்டி வைத்து விட்டு உடனே அவனை என் ரூமுக்கு வரச் சொல்.. “  என்று கட்டளையிட்டார்..

அவர் பேசிக் கொண்டிருப்பது அதிரதனுக்குமே கேட்டது...உடனே பல்லை கடித்தவன் தன் அன்னையின் அலைபேசியை பிடுங்கி அவன்  மறுத்து பேச முயல, அதுக்கு முன்னே அலைபேசியை வைத்திருந்தார் தேவநாதன்..

மனோகரி  தன் மகனை பார்த்து ஏதோ சொல்ல வரும் முன்னே 

"அம்மா.... உன் மாமனார் ரொம்பத்தான் ஓவரா போறார்..  என்னால  அவர் பேச்சை கேட்டெல்லாம் ஆட முடியாது.. "  என்று தன் அன்னையை முறைத்தான்..

அவன் முகத்தில் தெரிந்த கோபத்தைக் கண்டு அதிர்ந்து போனவர் அவனை இப்பொழுது அவர் ரூம்க்கு  அனுப்பவில்லை என்றால் அவரும் இதேபோல இல்லை இதைவிட ஒரு படி மேல போய் தன்னைத்தான் திட்டுவார் என்று உறைக்க,

"டேய் கண்ணா... அந்த கிழத்தை பற்றி தெரியாதா?  இன்னும் கொஞ்ச நாள் தானே அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.. “  என்று தன் மகனை சமாதானப்படுத்த முயன்றார்

“ஆமா... இதையேதான் பல வருஷமா சொல்லிக்கிட்டு இருக்கீங்க.. அவரும் தனக்கு வயசாயிடுச்சு னு  அடங்கின மாதிரி தெரியல.. இப்பத்தான் மைனர் மாதிரி இன்னும் இந்த குடும்பத்தோட ராஜா மாதிரி எல்லாரையும் ஆட்டி வச்சுக்கிட்டு இருக்கார்..

நீங்க எல்லாரும் எப்படியோ ஆடுங்க..  என்னால இதுக்கு மேல அவர் சொல்றது எல்லாம் கேட்க முடியாது.. “ என்று சொல்லி தன் அன்னையை முறைக்க அதே நேரம் அவனுடைய அலைபேசி ஒலித்தது..

வேண்டா வெறுப்பாக அதை எடுக்க

“இன்னும் என்னடா பண்ணிக்கிட்டு இருக்க?  இன்னும் ஒரு நிமிஷத்துல என் ரூம்க்கு வர.. “  என்று மீண்டும் கட்டளையிட்டார் தேவநாதன்.. அதிரதன் அவருக்கு திருப்பி  பதில் சொல்லும் முன்னே தன் அலைபேசியை அணைத்து விட்டார்..

அதைக் கண்டு இன்னும் கொதித்தது அவன் உள்ளே.. ஆனால் கால்கள் அவருடைய கட்டளைக்கு அடிபணிந்தது போல தானாக அவருடைய அறையை நோக்கி நடந்தது..

அவனும் எவ்வளவோ கட்டுபடுத்த முயன்றாலும் சற்று முன் கேட்ட அந்த குரலில் இருந்த ஏதோ ஒன்று அவனை  செலுத்த அடுத்த நிமிடம் அவர் அறையில் நின்றிருந்தான் அதிரதன் ...

அந்த அறையில் இன்னும் சில முக்கிய பிரமுகர்கள் அவன் தாத்தாவிடம் சிரித்து பேசிக் கொண்டிருந்தனர்..

அந்த அறையில் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவனை கண்டதும் அனைவரும் தங்கள் பேச்சை நிறுத்திக் கொண்டு அவனையே ஆர்வத்துடன் பார்த்தனர்..

பின் முதலாவதாக அமர்ந்திருந்தவர் எழுந்து அவன் அருகில் வந்து

“வாழ்த்துக்கள் தம்பி.. திடீர்னு கல்யாணம் முடிஞ்சிருச்சு னு  கேள்விப்பட்டோம்..  அது தான் நேர்ல வந்து வாழ்த்தி செல்லலாம் என்று வந்தோம்.. வாழ்த்துக்கள்... “  என்று அவனுடைய கை பிடித்து குலுக்கி புன்னகைத்தார்...

உடனே அனிச்சையாக அவனும் தன் வெண்பற்கள் தெரிய கொஞ்சமாக சிரித்து வைத்தான்.. அதன்பின் ஒவ்வொருவராக எழுந்து வந்து அவனுக்கு வாழ்த்துச் சொல்ல அவனும் வேற வழியில்லாமல்  அனைவருடைய வாழ்த்துக்களையும் ஏற்றுக் கொண்டான்...

அவர்களை நோக்கிய தேவநாதன்

“உங்க எல்லாருக்கு ரொம்ப நன்றி...  கல்யாணம் திடீர்னு நடந்து விட்டது.. அதை எல்லாருக்கும் தெரிவிக்கும் விதமாக நாளைக்கு பெரிய அளவில் ரிசப்ஷன் ஏற்பாடு பண்ணியிருக்கேன்.. நீங்க எல்லாரும் வந்து என் பேரனையும் என் பேத்தியையும் வாழ்த்தோணும்... “ என்று கம்பீரமாக  சிரித்தார் தேவநாதன்..

அதைக்கேட்டு திடுக்கிட்டுப் போனான்  அதிரதன்...

"என்னது?  மறுபடியும் ஒரு கூத்தா..?  இன்னைக்கு நடந்த கூத்தையே என்னால இன்னும் ஜீரணிக்க முடியல.. மூச்சு முட்டுது.. இப்பயே எங்கயாவது ஓடி போய்டலாம் போல இருக்கு...

இதுல நாளைக்கு அடுத்த கூத்தா? யாரை கேட்டு ரிசப்ஷன் ஏற்பாடு பண்ணினார்? “ என்று உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருக்க அவரோ அவனை கண்டு கொள்ளாமல் வந்திருந்தவர்களை வழியனுப்பும் விதமாக எழுந்து அவர்களுடன் அந்த அறையை விட்டு வெளியேறினார்..

அவனை கடக்கும் பொழுது அவன்  முகத்தை பார்த்து ஒரு நக்கல் சிரிப்புடன் வெளியில் சென்றார்.. அதைக் கண்டதும் இன்னும் கடுப்பானது அதிரதனுக்கு...

“சே..... “  என்று காலை தரையில் எட்டி உதைத்தான்.. கையை மடக்கி அருகில் இருந்த சுவற்றில் ஓங்கி குத்தி தன் கோபத்தை காட்டினான்..

அதே நேரம் அவன் கையிலிருந்த அலைபேசி மீண்டும் சிணுங்க அதனுடைய ரிங்டோன் ல்  இருந்தே  அழைப்பது யார் என்று தெரிய அதுவரை வில்லாக விறைத்து கொண்டிருந்த  அவன்  உடல் உடனே இலக ஆரம்பித்தது..

இதழ்களில்  புன்னகை ஓடி வந்து ஒட்டி கொள்ள, குறுநகை தவழ அவசரமாக அந்த அழைப்பை ஏற்றான்..

“ஹாய் பேபி.... “  என்று கொஞ்சல் உடன் ஆரம்பித்தாள் அவனுடைய நிலா.. அவளின் அந்த கொஞ்சலை கேட்டதுமே அவன் உள்ளே எரிந்த நெருப்பு அணைந்து போனது..

"ஹாய் ஹனி... " என்றவாறு உதட்டில்  புன்னகை தவழ பேசிகொண்டே தன் அறைக்கு சென்றான்...

அறைக் கதவை மூடிவிட்டு படுக்கையில் விழுந்தவன்  அடுத்த அரை மணி நேரம் இன்பமாய் கழிந்தன நிமிடங்கள்... அவனுடைய நிலா பெண்ணின் காதல் மழையில் நனைந்து சில்லிட்டு போனான் அதிரதன்.. 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!