அழகான ராட்சசியே!!!-15

 


அத்தியாயம்-15

மாலை நான்கு மணி அளவில் அனைவரையும் முதலாவது தளத்தில் இருந்த ஒரு பெரிய கான்ப்ரென்ஸ் அறைக்கு அழைத்திருந்தார்கள்..

அங்கு சில கலை நிகழ்ச்சிகளும் மற்றும் ஃபேஷன் ஷோவும் ஏற்பாடு செய்திருந்தனர்..

அதில் கலந்து கொள்ள மற்றவர்கள் லிப்ட் வழியாக சென்றிருக்க, மகிழன் மட்டும் மாடி படி வழியாக செல்ல எண்ணி அந்த எக்சிட் கதவை திறந்தான்...

அப்பொழுது மீண்டும் கீழ முதல் தளத்தில் அந்த கொலுசொலி கேட்க உள்ளுக்குள் துள்ளி குதித்தான்.

“இந்த முறை எப்படியாவது அவளை பார்த்து விட  வேண்டும்.. “ என்று  எண்ணியவன் வேகமாக கீழிறங்கி செல்ல முதல் தளத்தில்  அந்த பெண் படிகளில் இறங்கி கொண்டிருந்தாள்..

முன்பு போலவே  இறங்கும் பொழுது தெரிந்த அவளின் பொற்பாதமும் அதை தழுவிய அந்த கொலுசும் அவன் மனதை  கொள்ளை அடித்தது...

மெல்ல விழி உயர்த்தி அவளை பார்க்க, அவனுக்கு முன்புறமாக அவள் இறங்கி கொண்டிருந்ததால்  அவள் பின்னால் மட்டுமே தெரிந்தது..

அழகான பட்டு பாவாடை தாவணி அணிந்திருந்தாள்.. இடையில் மெல்லிய ஒட்டியாணமும் கைகளில்  கண்ணாடி வளையல்களும் அவள் இறங்கும்  வேகத்திற்கு ஏற்ப குலுங்கின..

தலையில் அவளுடைய குட்டையான முடியை ஃபிரெஞ்ச் ப்ளைட் ஸ்டைலில் பிண்ணி இருந்தவள் அதில் அளவான மல்லிகை சரத்தை சூடி இருந்தாள்..

மெல்லிய கொடி போன்ற இடையுடன் முன்னால் அவள் பாவாடையை இரு கைகளாலும் தூக்கி பிடித்து  தன் பாதத்தை வேகமாக  எடுத்து வைத்து படிகளில் குதித்தபடியே  இறங்கியவளை பின்னால் இருந்து காண மகிழன்  மனம் எகிறி குதித்தது..

அவளை, அவளின் கொடியிடையை  அப்படியே தன்னோடு சேர்த்து இறுக்கி  அணைத்து கொள்ள துடித்தது அவன் உள்ளே..

அப்படியே ஒரு காலை மடித்து  பின்னால் சுவற்றில் வைத்து கொண்டு மெல்ல  சுவற்றில்  சாய்ந்து கொண்டு தன் முடியை பின்னால் கோதி கொண்டு அவள் செல்வதையே ரசித்து கொண்டிருந்தான்..

அவள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் அவன் இதயத்தில் பெரும் மழைச்சாரலை கொண்டு வந்தது..காஷ்மீர் பனி அவன் மீது பொழிந்ததை போன்று உள்ளுக்குள் சிலிர்த்தது..

கண்ணை மூடி அந்த இன்பத்தை, அந்த சுகத்தை அணுஅணுவாக அனுபவித்தான்.. 

சில நொடிகளில் தன்னை சுதாரித்தவன் மீண்டும் அவள் முகம் பார்க்க எண்ணியவன் விழித்து பார்க்க அதற்குள் அந்த முதல் தளத்தின் கதவை திறந்து கொண்டு அந்த தளத்திற்கு உள்ளே சென்று விட்டாள்..

அதை கண்டவன் திடுக்கிட,

“சே.. இந்த முறையும் இப்படி கோட்டை விட்டுட்டியே மகிழா... சீக்கிரம் ஓடு..எப்படியாவது அவள் முகத்தை பார்த்து விடு..  “ என்று  அவனை விரட்டியது மனஸ்..

அவனும் வேகமாக படிகளில்  இறங்கி வந்து கதவை திறந்து கொண்டு அந்த தளத்திற்கு உள்ளே வர, அவள் இல்லை அங்கு..

சுற்றிலும் கண்களை சுழற்றி தேட, எங்கும் தென்படவில்லை அவள்..

“சே. மிஸ் பண்ணிட்டேனே.. “ என்று  புலம்பியவாறு விழா நடைபெறும்  அந்த கான்பிரன்ஸ் ஹால் க்கு சென்றான்..

விழா நிகழ்ச்சிகள் முன்பே ஆரம்பித்து இருக்க, மகிழன் தன் டீம் இருக்கும் பகுதிக்கு சென்று அமர்ந்து கொணடான்.. ஆனாலும் அவன் கண்கள அந்த பெண்ணவளையே தேடியது...

அந்த கூட்டத்தில் யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை அவனால்..

“சே.. அவளை பார்த்த உடனே வேகமாக இறங்கி வந்திருந்தால் அவள் முகத்தை பார்த்திருக்கலாம்.. அப்பதான் இந்த உலகத்தையே மறந்து ட்ரீம்ஸ் க்கு போய்ட்டேன்...

அவளை யாரென்று தெரிந்து கொண்டு சேர்த்து வச்சு ட்ரீம் அடிச்சிருக்க கூடாதா? இப்படி கோட்டை விட்டுட்டனே... “ என்று உள்ளுக்குள் புலம்பியபடி தன்னையே நொந்து கொண்டிருந்தான்..

சில நிகழ்ச்சிகள் முடிந்திருக்க,  அடுத்ததாக பெண்களின் தமிழகத்தின்  கிராமிய  நடனம் ஒன்று  அறிவிக்க, அனைவரும் ஆவலுடன் மேடையை பார்த்து கொண்டிருந்தனர்..

மகிழன் குனிந்து தன் அலைபேசியை நோண்டி கொண்டிருந்தான்.. அவன் மனம் எந்த நிகழ்ச்சியிலும் பதியவில்லை..அனைவரும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் ரசித்து பார்த்து கை தட்டி ஆரவரிக்க, மகிழன் மனமோ சற்று முன் அவன் கண்ட அந்த பெண்ணின் பின்னழகில் சொக்கி இருந்தது...

அங்கு மேடையில் பெண்கள் அழகாக ஆடி கொண்டிருக்க, அனைவரும் விசில்  அடித்து கை தட்டி ஆரவரிக்க, எதேச்சையாக மேடையை பார்த்தவன் அப்படியே அதிர்ந்து நின்றான்..

அங்கு நடனமாடும் பெண்களில் அவன் சற்று  முன் கண்ட அதே பின்னழகு தேவதையும் இருந்தாள்....இப்பொழுதும் அவள் பின்னால் திரும்பி நின்றிருக்க, அவள் பின்னழகு மட்டுமே தெரிந்தது அவனுக்கு..

அதே பாதம், கொலுசு,   இடை, அதே ஜடை, அதே மல்லிகை என முன்பு பார்த்த  அவளின் தோற்றத்தை மனக் கண்ணில் கொண்டு வந்து ஒப்பிட்டு பார்க்க அத்தனையும் பொருந்தியது அவளிடம்...

முன்பு போலவே இப்பொழுதும் அவன் மனம் எகிறி குதித்தது..

அவன் ஒவ்வொரு அணுவும் அவள் முகம் பார்க்க துடித்தது அவன் உள்ளே.. அந்த நொடி முடிவு செய்தான்..

“அவள் முகம் எப்படி இருந்தாலும் அவள் எப்படி பட்டவளாக இருந்தாலும் அவள்தான் என்னவள்..இவள் தான் எனக்காக பிறந்து வளர்ந்து  என்னை தேடி வந்த என் தேவதை...  இவள்தான் என்னவள்... “ என்று  முடிவு செய்தவன் அந்த நடனத்தை ஆர்வமாக பார்த்தான்..

பாடலின் ஒவ்வொரு வரிகளுக்கும் இசைக்கும் தகுந்த மாதிரி தன் இடையை வளைத்து நளினமாக ஆடினாள்...அவன் பார்வை மற்ற பெண்களை தவிர்த்து அவளை மட்டுமே ரசித்து கொண்டிருந்தது...

இப்பொழுது அனைத்து பெண்களும் முன்புறம் திரும்பி முகம் காட்டி ஆட, மகிழனும் சற்றுமுன் தன்னவளாக தீர்மானித்தவள்  முகத்தை காண ஆவளுடன் காத்திருந்தான்...

அவன் இதயம் எகிறி குதித்து கொண்டிருந்தது தன்னவளின் முகம் காணும் அந்த நொடிக்காக... அந்த நொடியும் வந்து விட, முன்னால் திரும்பி இருந்த அவன் கொலுசு தேவதையின் முகத்தை ஆவலுடன்  கண்டவன் அதிர்ந்து போனான்..

யெஸ் பிரண்ட்ஸ்.. நீங்கள் கெஸ் பண்ணியதை போல மகிழன் யாரை அவன் துணைவியாக வரக் கூடாது என்று வேண்டி கொண்டிருந்தானோ அந்த சண்டக்காரி, வாயாடி, ராட்சசியே தான் அவன் முன்னால் அழகாக தன் இடையை வளைத்து ஆடி கொண்டிருந்தாள்..

இப்பொழுது அவள் முகத்தை  பார்க்க, அவள் அணிந்திருந்த அந்த தாவணி பாவடையும் கழுத்தில் அணிந்திருந்த மெல்லிய டாலர் சங்கிலி, முகத்தில் மிதமான ஒப்பனை மற்றும் அவளின் திரண்ட  இதழ்களை எடுத்து காட்டிய அந்த லிப்ஸ்டிக்,  ஒல்லியான  தேகம் கொடி போன்ற உடல் வாகுடன் உதட்டில் மிளிர்ந்த புன்னகையுடன் அந்த நடனத்தை  ரசித்து ஆடி கொண்டிருந்தாள் சந்தியா..

அவளை கண்டதும் முதலில் அதிர்ந்தவன்

 “ஐயோ.. இவளா? என்ன முருகா சோதனை இது? இந்த உலகத்துல எத்தனையோ பொண்ணுங்க அழகழகா இருக்க,  போயும் போயும் இந்த ராட்சசியை எனக்கு கோர்த்து விட்டுட்டியே.. நீ நல்லா இருப்பியா? விளங்குவியா? இது உனக்கே அடுக்குமா ?

இனிமேல் உனக்கு நான் எடுக்கும் காவடி கட்.. எங்கம்மா செய்யும் பால் அபிஷேகமும் கட்.. இதுதான் உனக்கு சரியான தண்டனை...

சே...இந்த மேடையில் எத்தனை பொண்ணுங்க இருக்காங்க.. எல்லாரும் தான் அழகழகா ட்ரெஸ் பண்ணி இருக்காளுங்க... அவளை மாதிரியேதான் கொலுசு போட்டிருக்காங்க.. கண்ணாடி வளையல் போட்டிருக்காங்க.. காலுக்கு கூட மருதாணி எல்லாம்  வச்சிருக்காளுங்க..

எல்லாத்தையும் விட்டு இந்த ராட்சசியை போயா   எனக்கு பிடித்து தொலைக்கணும் ? “ என்று உள்ளுக்குள் அந்த வேலனை திட்டி பின் தன்னை நினைத்து புலம்பி  கொண்டிருந்தான் மகிழன்..

 “ஹ்ம்ம்ம் என்ன ஆனாலும் நான் முன்பு தீர்மானித்த மாதிரி இவள் தான் என்னவள்..இவளை மட்டும்தான் பிடித்து தொலைக்கும் போல... “ என்று  மீண்டும் தீர்மானித்தவன் அவள் நடனத்தை  மீண்டும் காண அவளோ இவன் ஒருத்தன் எதிரில் இருப்பதையே கண்டு கொள்ளாதவளை போல மற்றவர்களை பார்த்து புன்னகைத்த படி அந்த நடனத்தை ஆடி கொண்டிருந்தாள் சந்தியா...

அவள் ஆடுவதையே ரசித்து பார்த்தான் மகிழன்..பின் அவளின் அந்த நடன அசைவில் முற்றிலும் தொலைந்து போனான்..

அந்த  நடனம் முடிந்திருக்க, அனைவரும் கை தட்டி விசில் அடித்து ஆரவரித்தனர்..

அதற்கு பிறகு சில கலை நிகழ்ச்சிகள் முடிந்து அடுத்ததாக ஃபேஷன் ஷோ ஏற்பாடு செய்திருந்தனர்.

ஒவ்வொரு டீம் ஒவ்வொரு பெர்மான்ஸ் எடுத்து கொண்டனர்.. மகிழன் மற்றும் சந்தியா இருந்த டீம் ஃபேஷன் ஷோ வை தேர்ந்தெடுத்தனர். அவர்கள் டீம் லயே வெவ்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களை தேர்ந்தெடுத்து  அவர்களின் பாரம்பரிய உடையில் மேடையில் அழகாக நடந்து வர வேண்டும்..

மகிழன் டீம் ல் அவனையும் மற்றும்  சில ஆண்களையும் தேர்வு செய்திருக்க அவனை மேடைக்கு அழைத்தனர் அவன் டீம் மெம்பர்கள்..

மகிழனும் எழுந்து சென்று  தன் வேட்டியை கீழ அவிழ்த்து  விட்டு தோளில் ஒரு துண்டுடன் ஸ்டைலாக நடந்து வர, அவனை கண்டதுமே அந்த ஹாலில் இருந்த  எல்லா பெண்களுமே ஓ வென்று  கத்தினர்..

அதுவும் ரோகிணி மகிழனை கண்டதும் இன்னும் விசில் அடித்தே ஆர்பரித்தாள்.. 

மகிழன் அந்த அலுவலகத்திலயே ஒரு கனவு நாயகன்.. அவன் டீம் ல் மட்டும் அல்லாமல் மற்ற ப்ராஜெக்ட் லும் அவன் மிகவும் பிரபலம்.. நிறைய பெண்கள் தானாக தேடி வந்து அவனிடம் புரபோஸ் செய்திருக்கிறார்கள்..

அதையெல்லாம் நாகரிகமாக மறுத்து விட்டான்.. அதே போல அவனும் எந்த பெண்ணிடமும் வழிந்து நின்றதிலை...

அதனாலயே பெண்கள் அவனையே ஏக்கத்துடன் பார்த்து இருப்பர்..

இன்று வேட்டி சட்டையில் புது மாப்பிள்ளை தோற்றத்தில் இருந்தவனை கண்டதும் அனைத்து பெண்களும் எழுந்து நின்று மீண்டும் கூச்சலிட அவன் மெல்லிய வெட்கத்துடன் ஆணிற்கு உரிய கம்பீரத்துடன் அந்த மேடையில் நடந்து வந்தான்..

ஆண்கள் சுற்று  முடிந்ததும் அவன் குழுவின் பெண்கள் இப்பொழுது நடந்து வந்தனர்.. அதில் சந்தியாவும் ஒருத்தி.. அவள் ஸ்டைலாக நடந்து வருவதை  கண்டதும் அனைவரும் வியந்து  பார்த்தனர்..

அவள் அலங்காரத்துக்கும்  அவள் கேரக்டர்க்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்தது.. அந்த கெட்டப் ல் பார்க்க  அப்படியே குடும்ப குத்து விளக்காக தெரிந்தாள்..

ஆனால் அவளை பற்றி தெரிந்தவர்களுக்கு மட்டும் அவள் ஒரு அழகான ராட்சசி போல தெரிந்தாள்.. அதுவும் அஜய் கண்ணுக்கு அழகான அவள் நாக்கை நீட்டி கண்ணை உருட்டி மிரட்டுவதை போல இருக்க

“ஆத்தி... இவளை யார் டா இந்த கூத்துல இழுத்து விட்டது ? .. முட்ட கண்ணி .. சாதாரணமாக பார்த்தாலே ஆளை எரித்து விடுவாள்.. இந்த கெட்டப் ல இன்னும் சொல்லவே வேண்டாம்.. “ என தலையில் அடித்து கொண்டான்..

அடுத்ததாக ஆண் பெண் இருவரும் கை கோர்த்து  பேர்(pair)  ஆக நடந்து வர வேண்டும் என ஏற்பாடு செய்திருந்தனர்..

மகிழனுடன் வர வேண்டி ஒத்திகை பார்த்திருந்த பெண் இன்று வந்திருக்கவில்லை.. அதனால் தான் முதல் சுற்றில் சந்தியாவை இழுத்து கொண்டனர் அந்த அணியினர்..

மற்றவர்கள் யாரும் ஸ்டைலாக நடக்க பயிற்சி செய்யாததால் வர மறுத்து விட, தங்கள் அணியின் மானத்தை காக்க என்று போர்களம் இறங்கி விட்டாள் சந்தியா..

“நடக்கிறது தான.. இதெல்லாம் நமக்கு  ஜுஜூபி.. “ என்றவள் அதே மாதிரி அழகாக நடந்தும் வந்து  விடடாள்..அடுத்ததாக பேர் பேராக நடக்கவேண்டும் என சொல்ல, அதில் மகிழனும் சந்தியாவும் தான் பேர் என தெரிய இருவருமே அதிர்ந்து போயினர்...

சந்தியா அதெல்லாம் முடியாது என மறுக்க, அந்த அணியின் தலைவன் அவளிடம் கெஞ்சி கொண்டிருந்தான்

"ப்ளீஸ் சந்தியா.. நம்ம டீம் ஓட பெர்மான்ஸ்க்குதான் ப்ரைஸ் கிடைக்க போகுது.. இது தான் லாஸ்ட் ரவுண்ட்.. இதுலயும்  நமக்கு பாய்ண்ட்ஸ் வந்திருச்சுனா நாமதான் வின்னர்.. சும்மா ஒரு நிமிசம் தான..இப்படி போய்ட்டு அப்படி வர்ரது தான..நம்ம தல கூட நடந்துட்டு ஓடி வந்திடலாம். " என்று கெஞ்சி சமாதான படுத்தினான்..

மகிழனுக்கும் அவள் உடன் செல்ல தயக்கம் தான்.. ஆனால் பெண்களை போல அவனால் தயக்கத்தை வெளியில் சொல்ல முடியாதே.. ஏன் என்று காரணம் கேட்டால் என்ன சொல்வது என்று  யோசித்தவன் தன் தயக்கத்தை வெளிகாட்டாமல் நின்று கொண்டான்..

ஒரு வழியாக கடைசியில் சந்தியா ஒத்துக் கொள்ள, முன்னால் இரண்டு பேர் ஸ்டைலாக நடந்து செல்ல, அதே போல சந்தியாவையும் முன்னால் சென்றவர்களை பார்த்து நடக்க சொல்லி இருந்தான் அந்த அணியின் பயிற்சியாளன்..  

சந்தியா மகிழனை கண்டதும்  முறைத்தாள்.. அவனோ அவள்  முறைப்பதற்கு வழக்கம் போல முறைக்காமல்  சின்ன புன்னகை மட்டுமே.. அதை கண்டவள்

“இந்த மங்கி நான் முறைத்தால் இவனும் இல்ல திருப்பி முறைப்பான்.. இன்னைக்கு என்ன அதிசயமா சிரிக்கிறான்..எங்கயோ இடிக்குதே... “ என்று குழப்பம் மேலிட யோசித்தவாறு அவனுடன் இணைந்து நடந்தாள்

இருவரும்  ஒட்டி நடக்க, மகிழனுக்கோ இதயம் வேகமாக எகிறி குதித்தது...

இதுவரை அவளுடன்  சண்டை இட்டபொழுதெல்லாம் தடுமாறாத அவன் மனம் சற்று  முன் இருந்து அதன் நிலையில் இல்லை.. ஆனாலும் உள்ளுக்குள் பொங்கியதை கட்டு படுத்தி கொண்டவன் அவளுடன் இணைந்து நடக்க, ஒரு கட்டத்தில் அவள் கை பற்றி நடக்க வேண்டும்..

அதற்காக மகிழன் ஸ்டைலாக அவன் கையை நீட்ட, சந்தியா வேற வழியில்லாமல்  உள்ளுக்குள் மகிழனை முறைத்து கொண்டே தன் கையை அவன் கையில் வைக்க, அவளின் கை சில்லிட்டிருந்தது..

சில்லிட்டிருந்த அவள் கை பற்றியதும் உள்ளுக்குள் சிலிர்த்தது மகிழனுக்கு..வெளியில் கரடு முரடாக யாரும் நெருங்க முடியாதவளாக இருந்தாலும் அவளின் மென்மை அவள் கையில் தெரிந்தது..

இதுவரை  அவன் த ங்கை அகிலா கையோ தன் அன்னையின் கையோ நிறைய முறை பிடித்திருக்கிறான்.. அதில் தோன்றாத ஏதோ ஒன்று அவள் கை பிடித்ததும் தோன்றியது.. அவளின் மென்மையான சில்லிட்டிருந்த கையை தொட்டதும் அவன் உள்ளே மின்சாரம் பாய்ந்ததை போல இருந்தது..

அவள் கை பிடித்து ஸ்டைலாக நடந்து வர, அவர்களின் ஜோடி பொருத்தத்தை பார்த்து எல்லாரும் ஓ வென்று  கத்தினர்...

நிறைய பெண்கள் பார்வையாளர் பக்கம் இருந்து

"சந்தியா யூ ஆர் சோ லக்கி... " என்று  கத்தினர்..

சில பேர்

"தல.. திஸ் இஸ் நாட் ஃபேர்.. ஐம் வெயிட்டிங் பார் யூ.... என்னை ஏமாத்திட்டிங்களே.. " என்று கத்த மகிழன் சின்ன வசீகர புன்னகையுடன் பார்வையாளர் பக்கம் பொதுவாக பார்த்து  கை அசைத்து மீண்டும் அதே ஸ்டைலாக நடந்தான்..

ஒரு வழியாக அந்த சுற்று முடிய அந்த ஷோ வின் இறுதியாக அனைவரும் ஒன்றாக அந்த மேடையில் தோன்ற, அந்த ஹாலே அதிர்ந்தது கை தட்டலிலும் விசில் சத்தத்திலும்..

அத்தோடு அந்த ஃபேஷன் ஷோ நிறைவு பெற, அனைவரும் பார்வையாளருக்கு  வணக்கம் சொல்லி கலைந்து சென்றனர்..மீண்டும் ஒரு முறை பார்வையாளர் அனைவருமே இந்த அணியினரின் பெர்மான்ஸ் க்கு மட்டும் பலத்த கரகோஷத்தை  எழுப்பினர்...

அந்த ஷோவில் பங்கு பெற்றவர்களும் மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் அந்த மேடையை ஒட்டியிருந்த அறைக்கு உள்ளே செல்ல வேற சிலர் அடுத்த பெர்மான்ஸ் ஐ பார்க்க முன்னால் சென்றனர்.. ஓரளவுக்கு எல்லாருமே கலைந்து சென்றிருக்க, அந்த அறைக்குள் சென்றிருந்த சந்தியா மற்ற நிகழ்ச்சியை பார்க்க எண்ணி வேகமாக அந்த அறையில் இருந்து வெளியில் வந்தாள்..

அதே நேரம் மகிழன் அந்த அறைக்குள் செல்வதற்காக வந்து கொண்டிருந்தான். வெளியில் வேகமாக வந்தவள் அதே வேகத்தில் கால் எடுத்து வைக்க, அவள் பாவாடை காலில் மாட்டி தடுக்கி விழ இருந்தாள்..

அருகில் வந்திருந்த மகிழன் டக் கென்று அவளை இடையோடு சேர்த்து பிடித்து இழுக்க, அந்த எதிர்பாராத நிகழ்வால் சுதாரிக்க முடியாமல் அவன் மார்பின் மீது விழுந்திருந்தாள் சந்தியா..

முன்பும் இதே மாதிரிதான் மகிழன்  அவள் மீது இடித்து கொண்டது.. அப்பயே அவன் மனம் எகிறி குதித்ததுதான்.. ஆனால் அப்ப இருந்த கலேபரத்தில் மகிழன் தன் மனம் சொன்னதை கேட்க தவறி இருந்தான்..

இப்பொழுது ஏற்கனவே அவள் பக்கம் சாய்ந்திருந்த அவன் மனம் இந்த மெய் தீண்டலில் மொத்தமாக கவிழ்ந்து போனான்..அவள்தான் தனக்கானவள் என்று முடிவு செய்திருந்த அந்த நொடியில் இருந்தே அவளை தன்னவளாக எண்ண ஆரம்பித்து விட்டான்..  

அந்த உரிமையில் அவளின் மெல்லிய இடையை பற்றி  இருந்த அவன் கை அவளை இன்னும் இறுக்கி கொள்ள, சந்தியாவுமே மந்திரத்துக்கு கட்டுண்டவள் போல அவனுடன் ஒட்டி கொண்டிருந்தாள்..

மகிழன் அதோடு நிறுத்தி இருந்திருக்கலாம்... ஆனால் அவன் அணைத்ததற்கு  அவளிடம் இருந்து எந்த எதிர்ப்பும் வராமல் போக, அவளை இடையோடு சேர்த்து அணைத்திருந்ததில் அவன் உள்ளே புயல் அடிக்க, அவன் கைகள் தன்னவள் என்ற உரிமையில் அத்து மீறி அவள் இடையில் ஊர்வலம் வர ஆரம்பிக்க,  அதில் திடுக்கிட்டு விழித்தாள் சந்தியா..

அடுத்த நொடி நடந்தது மற்றும்  நடப்பது புரிய  தீ சுட்டதை  போல துள்ளி குதித்து அவனிடமிருந்து  விலகியவள் எதிர்பாராத நிலையில் ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்து இருந்தாள்...

"ராஸ்கல்...எப்படா சான்ஸ் கிடைக்கும் னு அலையறானுங்க.. யார் கிட்ட? ..  தொலச்சுடுவேன் ஜாக்கிரதை.. " என்று  விரல் நீட்டி மிரட்டியவள் கண்ணகியை விட ஒரு உஷ்ண பார்வையை மகிழன் மீது செலுத்தி முறைத்து விட்டு  திரும்பி பார்க்காமல் தன் பாவாடையை தூக்கி பிடித்து கொண்டு வேகமாக வெளியேறி சென்றாள் சந்தியா..

மகிழனோ இன்னும் அதிர்ச்சியில் உறைந்து நின்றான்..

அவனுக்கே என்ன நடந்தது என புரிய சில நொடிகள் ஆனது.. அப்பொழுது தான் அவன் தவறு புரிந்தது.. அவளை கீழ விழாமல் இருக்கத்தான் அவன் அவளை தாங்கி பிடித்தது.. அதோடு நிறுத்தி இருக்க வேண்டும்..

சற்றுமுன் அவன் மனதில் அவள் தான் அவனவள் என தீர்மானித்து விட்டதால் அந்த உரிமையில் கொஞ்சம் அத்துமீறி அதிகமாக நடந்து கொண்டதும் புரிந்தது..

அவன் உரிமையில் செய்ததை  அவள் ஒரு ஆடவனின் ஆசை என்றல்லவா புரிந்து கொண்டாள்..

"சே.. சொதப்பிட்டியே மகிழா.. ஏற்கனவே அவளுக்கு உன்னை கண்டால் பிடிக்காது.. இப்ப இப்படி வேற சொதப்பி வச்சிருக்க...இந்த லட்சணத்துல அவ தான் உன்னவள் னு வேற முடிவு செய்துட்ட...

அவளை எப்படி சரி செய்ய போறியோ? பேசாம உன் முடிவை மறுபரிசீலனை செய்..என்னால் இப்படி நீ அவ கையால அடி வாங்கறதை பார்த்து  கிட்டு இருக்க முடியாது... " என்றது அவன் மனஸ்..

சற்று முன் அடி வாங்கிய தன் கன்னத்தை தடவியன்,  

"ஹ்ம்ம்ம்ம் எது எப்படி ஆனாலும் இவள் தான் என்னவள்.. எனக்காக பிறந்து எனக்காக வளர்ந்து கடைசியில் என்னை தேடி வந்து விட்டாள்.. இத்தனை நாளாக நான் அவளை கண்டு கொள்ளாமல் இருந்து விட்டேன்..

இனி இவள்தான் என் பொண்டாட்டி... "  என்று  சிரித்து கொண்டவன்

"கண்டு கொண்டேன்.. கண்டு கொண்டேன்.. என்னவளை கண்டு கொண்டேன்.. " என்று உல்லாசமாக பாடியவாறு அந்த மேடையின் முன்பகுதிக்கு சென்றான்..

ஹாய் பிரண்ட்ஸ்,

எப்படியோ நம்ம மங்கி மகி அவன் உள்ளே இருந்த காதலை கண்டு கொண்டான்.. ஆனால் நம்ம வாயாடி நாயகி முறுக்கி கொண்டு சென்றுவிட்டாள்.. ஹீரோ சார் அவளை  எப்படி சமாதான படுத்த போகிறார் ?  நாயகி இறங்கி வருவாளா? வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்..! 

Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

என்னுயிர் கருவாச்சி