நிலவே என்னிடம் நெருங்காதே!!-10

 


அத்தியாயம்-10

காலையில் எழுந்ததும் நேற்றைய சம்பவங்கள் கண் முன்னே வர, அதுவும் அவன் கத்தியதற்கு அவள் திமிராக சென்று தரையில் படுத்து கொண்டதும் நினைவு வர, காலையிலயே அவன் உள்ளே கொதிக்க ஆரம்பித்தது...

அதனால் தன் காரை எடுத்து கொண்டு கை போன போக்கில் காரை விரட்டிவிட்டு கொஞ்சம் ஆத்திரம் குறைந்ததும் வீட்டிற்கு திரும்பி வந்திருந்தான்..

வீட்டிற்கு உள்ளே வரும்பொழுதே எல்லாரும் உணவு மேஜையில் இருப்பது தெரிந்தது...

ஏனோ அவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட அவனுக்கு பிடிக்கவில்லை.. நேராக தன் அறைக்கு செல்லத்தான் எண்ணி வந்தான்.. ஆனால் டைனிங் ஹாலில் அவள் அமர்ந்து இருக்க அதை கண்டு உள்ளுக்குள் கொதிக்க ஆரம்பித்தது..

அதுவும் அவள் அவன் தாத்தாவின் அருகில் அவன் இடத்தில் அமர்ந்து இருக்க அதை கண்டு பொங்கியவன் நேராக டைனிங் ஹாலுக்கு வந்து கத்த ஆரம்பிக்க அவளும் பயந்து போய் எழுந்து இருக்கை மாற்றி அமர, தன் தாத்தாவுக்கு எதிரான முதல் வெற்றி என உள்ளுக்குள் கொக்கரித்தான் அதிரதன்..

தேவநாதனோ..

“பார்த்தியாடா..!!  உன்னை எப்படி இந்த உணவு மேஜைக்கு இழுத்து வந்தேன்..

ஆடற மாட்டை ஆடி கறக்கணும்.. பாடற மாட்டை பாடித்தான் கறக்கணும் னு பாடம் படித்தவன் டா இந்த தேவநாதன்.. என்கிட்டயே வா.. " என்று  உள்ளுக்குள் சிரித்து கொண்டவர் தன் மீசையை தடவி விட்டு கொண்டார்...

பின் தன் பேத்திகளுடன் கலகலப்பாக பேசி கொண்டே சாப்பிட, அதிரதன் மட்டும் அவரை முறைத்தவாறு தட்டை பார்த்து சாப்பிட்டு கொண்டிருந்தான்.. அவனை அடுத்து அமர்ந்து இருந்த அவளுக்கும் உணவு உள்ளே செல்ல மறுத்தது..

என்னதான் தைர்யமானவள் என்று  வெளியில் காட்டி கொண்டாலும் புயலென உள்ளே வந்தவனை கண்டதும் வெட வெடுக்க ஆரம்பித்தது.. அதுவும் அவளை ஒட்டி அவன் அமர்ந்து இருக்க, இன்னும் நடுங்க ஆரம்பித்தது..

அவள் அமைதியாக சாப்பிட்டு கொண்டிருப்பதை கண்ட தேவநாதன்

"என்ன மருமவளே..! சாப்பிட்டு முடிச்சதும் .இரவு ரிசப்ஷனுக்கு எல்லாம் ரெடியா இருக்கானு பார்த்துக்க.. மனோ.. என் மருமவளுக்கு மேக்கப் போடும்  புள்ளைகளை நேரா இங்கயே வர சொல்லிடு.. " என்று  அவர் பாட்டுக்கு அடுக்கி கொண்டே போக, மீண்டும் எரிமலையானான் அதிரதன்...

“தாத்தா... யாரை கேட்டு இந்த ரிசப்ஷனை ஏற்பாடு பண்ணினிங்க? " என்று குதிக்க ஆரம்பித்தான்..

நீண்ட நாட்களுக்கு பிறகு தன் பேரன் அவரை தாத்தா என்று அழைக்கவும் அவனுடைய சீற்றத்திலும்  அவருக்கு சில்லென்ற மழை பொழிந்தது போல இருந்தது...

அதன் குழுமையை ரசித்துக் கொண்டு அவனை நேர் பார்வை பார்த்தவர்

“நேற்று தானடா சொன்னேன்..  இன்னைக்கு ரிசப்ஷன் என்று.. அதுக்குள்ள பொண்டாட்டி வந்த சந்தோஷத்துல மறந்துட்டியாக்கும் !! “  என்று வேண்டும் என்றே  நமட்டு சிரிப்பை சிரித்தார்..

அதைக் கண்டு இன்னும் கடுப்பான அதிரதன்

“என்னால எல்லாம் அங்கு வந்த நிற்க முடியாது.. “ என்று முறைத்தான்..

“கல்யாணம் ஆனது உனக்கு.. உன் ரிசப்ஷனுக்கு நீதான் மேடையில் நிக்கனும்...அத விட்டுட்டு உனக்கு பதிலா வேற ஒரு ஆளை வாடகைக்கா  கூட்டிகிட்டு வர முடியும்?  

ரதன்.... நீ  வந்து மணமேடையில நிக்கிற..  நான் எல்லா ஏற்பாட்டையும் ஏற்கனவே பண்ணிட்டேன்... உனக்கு ரிசப்ஷன் ட்ரஸ் பிடிக்கலனா நேரா நம்ம கடையில போய் பிடிச்சத எடுத்துக்கோ.. ஏழு மணிக்கெல்லாம் மண்டபத்துல தயாரா இருக்கணும்..அம்புட்டுதான் சொல்லிபுட்டேன்.. அதுக்கு பிறகு உன் இஷ்டம்..”  என்று கட்டளையிட்டார்..

அதிரதன் மறுத்து ஏதோ சொல்ல வர அதற்குள் தன் சாப்பாட்டை முடித்து இருந்தவர் அருகிலிருந்த கை கழுவும் கிண்ணத்தின் கையை கழுவிக்கொண்டு தன் மீது இருந்த துண்டால் கையை  துடைத்தபடி எழுந்து மீசையை முறுக்கிக் கொண்டு தன் அறையை நோக்கி நடந்தார்...

முன்னே நடந்தாலும் அவருக்கு பின்னால் அதிரதன் ஏதேதோ சொல்லி கத்திக் கொண்டிருப்பது நன்றாகவே கேட்டது..  அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் உள்ளுக்குள் சிரித்தபடி வீர நடையுடன் சென்று விட்டார்..

அங்கு அதிரதன் காலை தரையில் வேகமாக உதைத்தும்  கையை ஓங்கி மேஜையில் குத்தியவன் அருகில் இருந்தவளை பார்த்து ஒரு எரித்து விடும் பார்வை பார்த்துவிட்டு பாதி சாப்பாட்டில் எழுந்து சென்று விட்டான்..

அங்கு இருந்தவர்களோ  அந்த வீட்டு புது மருமகளை பிடித்துக் கொண்டனர்...

“எல்லாம் இவளால் வந்தது..  அந்த கிழவனுக்கு தான் அறிவில்லாமல் எங்க வீட்டு பையனை தாலிகட்ட சொன்னால்  இவளுக்கு புத்தி எங்க போச்சு?  பெரிய இடத்து பையன் வேண்டாம் என்று மறுத்து சொல்லாமல் அந்த கிழம்  சொன்னவுடனே இவளும் இதுக்குனே காத்திருந்தவ மாதிரி கழுத்தை நீட்டி தாலியை கட்டிக்கிட்டாள்..”

என்று இன்னும் ஏதேதோ சொல்லி திட்ட ஆரம்பித்தனர்..

ஆனால் அவளும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தலையை குனிந்தபடி சாப்பிட்டு முடித்து எழுந்து தங்கள் அறையை நோக்கி சென்றாள்..

அதை கண்ட பாரிஜாதம் இன்னும் கொதித்தார்...

“பார் மனோ.. நாம தொண்டை தண்ணி வத்தி போக இவ்வளவு கத்து கத்திக் கொண்டிருக்கிறோம்... அவ திரும்பி ஏதாவது சொன்னாளா பார்? எல்லாம் அந்த கிழவன் கொடுக்கிற இடம்.. அந்த கிழவன் மாதிரியே திமிரா வந்து வாச்சிருக்கா..

அம்மாடி மனோ.. நீ புத்தியா பொழச்சிக்க.. இந்த வீட்டு கொத்து சாவிய மட்டும் அவகிட்ட கொடுத்துடாத.. அப்புறம் உன்னைய ஒரு மூலையில் உட்கார வச்சுடுவா.. உனக்கு பவர் எதுவும் இருக்காது..

பார்த்த இல்ல... அவ வந்த உடனே அந்த கிழவன் உன் கழுத்துல இருந்த பரம்பரை நகையை கழட்டி அவளுக்கு கொடுத்துட்டார் இல்ல.. இனிமேல் ஒவ்வொன்னா உன்கிட இருந்து பறிக்க படும்..

அதனால் நீ எச்சரிக்கையா இரு.. இந்த கிழவன் சொல்றார் னு நீ உன்னோடது எதையும் கழட்டி கொடுத்துடாத.. " என்று  தன்  மகளுக்கு வேதம்  ஓதினார்...

ன்று மாலை கோயம்புத்தூரில் முக்கிய வீதிகள் எல்லாம் விழாக் கோலம் பூண்டிருந்தது...

தெருவெங்கும் வண்ண விளக்குகளும் அலங்கார தோரணங்களும் பெரிய பெரிய கட் அவுட்களும் பேனர்களும் மணமக்களின் புகைப்படங்களை தாங்கி பெருமையுடன் நின்றிருந்தன..

பார்ப்பவர்கள் எல்லாம் ஒரு நிமிடம் நின்று திரும்பி பார்த்து அந்த ஜோடியை மீண்டும் கண் குளிர கண்டு ரசித்து சென்றனர்..

அந்த அலங்கார தோரணங்களும் பெரிய பெரிய கட் அவுட்கள் எல்லாம் அந்த ஜமீன் வீட்டு பெருமையும் பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டின...

ஆறடிக்கும் மேலான உயரத்தில், ஜமீன் முறைப்படியான கோட் சூட் அணிந்து காலில் அதற்கு பொருத்தமான ஷூவும் கழுத்தில் தொங்கிய மலர் மாலை என மணமகன் கெட்டப்பில் மிடுக்காக நின்று கொண்டிருந்தான் அதிரதன்...

பார்ப்பவர்கள் எல்லாம் தேவநாதனே சிறுவயதில் வந்து நின்றிருந்ததை போல இருக்க, அவனையே ஆச்சர்யமாக பார்த்தனர்..

தேவநாதனுக்கும் தன் பேரனை அப்படி பார்க்க பூரித்து போனார்... உள்ளுக்குள் பெருமிதத்துடன் தன் மீசையை அடிக்கடி நீவி விட்டு கொண்டு விழாவுக்கு வருபவர்களை வாய் நிறைய சிரித்து வரவேற்று கொண்டிருந்தார்...

ஆனால் பார்வை மட்டும் அடிக்கடி மணமேடைக்கு சென்று வந்தது...   

விழா மேடையில் கம்பீரமாக நின்றிருந்த அதிரதன் வரவேற்பு விழாவிற்கு வருகை தந்தவர்களுக்கு புன்னகைத்து அவர்கள் பரிசினையும் வாழ்த்தினையும் ஏற்று கொண்டான்..

அவனுக்கு இணையாக அவன் அருகில் ஒட்டி நின்ற ஜமீனின் திடீர் மருமகள்,  புது மருமகளும் அழகு நிலைய பெண்களின் கை வண்ணத்தால் தேவலோகத்து பெண்ணாக ஜொலித்தாள்..

உயரத்தில் பெண்களின் சராசரி உயரத்திற்கும் அதிகமே... கிட்டதட்ட அதிரதனின் தோளுக்கு இணையாக நின்றாள்.. அதுவும் அவனுடையை கட்டான தேக்கு போன்ற உறுதியான உடல் கட்டுக்கு அவளின் கொடி போன்ற தோற்றம் அத்தனை பாந்தமாக இருந்தது..

வந்தவர்கள் அனைவரும் மணமக்களின் ஜோடி பொருத்தத்தை கண்டு வியந்து சிறிது  நேரம் அமர்ந்து ரசித்து சென்றனர்...விழாவிற்கு வந்தவர்கள் எல்லாரும் கண் குளிர மணமக்களை கண்டும் வயிறு நிறைய அறுசுவை உணவை உண்டும் மன திருப்தியோடு செல்ல, அந்த விழாவின் நாயகனோ உள்ளுக்குள் கொதித்து கொண்டிருந்தான்..

இந்த விழா வேண்டாம்  என்று  எவ்வளவோ தூரம் மறுத்தும் சொல்லியும் தேவநாதன் கேட்காமல் அந்த விழாவை ஏற்பாடு பண்ணி இருந்தார்..

ஒரே நாளில் தன் மகன் நெடுமாறனை விரட்டி, மற்றும் மற்ற ஆட்களை வைத்து கொண்டு அத்தனை ஏற்பாட்டையும் பண்ணி இருக்க, அதை மெச்சும் மனநிலையில் இல்லை அதிரதன்...

அவன் சொல்ல சொல்ல கேட்காமல் இதை ஏற்பாடு செய்துவிட்டாரே  என்று  உள்ளுக்குள் கொதித்தது..

இன்னொரு புறம்  அவனுக்கு திருமணம் ஆன செய்தி அவனுடைய சென்னையில் இருக்கும் நட்பு வட்டத்திற்கு தெரியாது.. குறிப்பாக அவனுடைய நிலா பொண்ணுக்கு தெரியாது..

இங்கு நடப்பது வெறும் நாடகம்.. தனக்கு பிடித்தம்,  விருப்பம் இல்லாமலயே தன் மீது திணிக்கபடுகிறது.. ஆனால் அவன் இதை எல்லாம் அறுத்தெறிந்து விட்டு என் நிலா பொண்ணை கை பிடிப்பேன் என்று உள்ளுக்குள் குமுறி கொண்டிருந்தான்..

“இதெல்லாம் நாடகம், அவனை ஆட்டி வைத்து கொண்டிருக்கிறார் தேவநாதன் ஜமீன்தார் என்று  அவனுக்கு தெரியும்.. ஆனால் அவனுடைய நிலா பொண்ணுக்கு தெரியாதே...!!”  என்று அவனுக்குள் தவிப்பாக இருந்தது...

அவனுடைய திருமண செய்தி அவள் காதுக்கு எட்டி விட்டால் அவனை தப்பாக எண்ணி விடுவாளே...!  எண்ணி விடுவதோடு தன்னை வெறுத்து விட்டால் அப்புறம் அவளை முழுவதுமாக இழக்க வேண்டி இருக்கும்..

அதனால் அவனுடைய திருமண செய்தி அவளை அடையும் முன்பே அவனாகவே அவனுடைய திட்டத்தை அவளிடம் விளக்கி விட துடித்தான்..

இந்த அவசர திருமணத்தை பற்றி சொல்லி இதில்  அவனுக்கு விருப்பம் இல்லை .. நிலா பொண்ணுதான் என்றும் அவன் பொண்டாட்டி என்று அவளிடம் சொல்லி விட பல முறை முயன்று விட்டான்..

ஆனால் அவன் நிலா பொண்ணோ  அதை எல்லாம் கேட்கும் மனநிலையில் இல்லை...

இவன் போனில் அழைத்தபொழுதெல்லாம். உற்சாகமாக அவனை கொஞ்சுவதும் அவன் இல்லாமல் அவள் ஏங்கி தவிக்கிறாள் சீக்கிரம் வந்து விட சொல்லி புலம்புவதும் அதற்குமேல் அலைபேசி வழியாகவே கட்டி அணைப்பது முத்தமிட்டு கொஞ்சுவதுமாய் சென்று விட, அவனால் அவன் மனதில் இருந்ததை அவன் நிலா விடம் சொல்ல முடியவில்லை..

அந்த தவிப்புதான் அதிகம் இப்பொழுது.. யாராவது தங்களை போட்டோ எடுத்து பேஸ்புக் லயே வாட்ஸப்பிலயே போட்டுவிட்டால் அது நிலா கைக்கு கிடைத்து விட்டால் அவள் தன்னிடம் விளக்கம் கேட்காமலயே வெறுத்து விட்டால்?? என்ற அச்சமே அவனை முள்ளின் மீது நிக்க வைத்ததை போல தவிப்பாக இருந்தது..

அப்படி எதுவும் நடந்து விடக்கூடாது என்று  உள்ளுக்குள் அடித்து கொண்டே இருந்தது..

அதனாலயே கடனே என்று அந்த மேடையில் நின்று கொண்டிருந்தான்.. ஆனால் தன் கௌரவத்தையும்  ஜமீனின் கௌரவத்தையும் பாரம்பரியத்தையும் விட்டு கொடுக்காமல் அனைவரையும் இன்முகத்தோடு வரவேற்று புன்னகையுடன் அனைவரின் வாழ்த்தையும் ஏற்று கொண்டிருந்தான்..

சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் மற்றவர்கள் அறியாத வண்ணம் தன்னிடம் ஒட்டி நின்றவளிடம் அடிக்குரலில் சீறினான்..

எல்லாம் அவளால் தான் என்று மொத்த பழியையும் அவள் மேல் சுமத்தி முழு எரிச்சலையும் அவனுடைய இயலாமை எல்லாம் சேர்ந்து அவளிடம் எரிந்து விழுந்தான்..

அவளோ அதை கண்டு கொள்ளாமல் தனக்கு கொடுத்திருந்த பாத்திரத்தை செவ்வனே செய்து வந்தாள்.. அவன் அருகில் ஒட்டி நிக்காமல் கொஞ்சம் இடைவெளி விட்டு பார்ப்பவர்களுக்கு வித்தியாசமாக தெரியாமல் இருக்குமாறு நின்று கொண்டாள்..

அதிரதனுக்கு அடுத்த கஷ்டம் வீடியோகாரர்களும் புகைப்படக்காரர்களும் படுத்திய பாடு..

விழா ஆரம்பிக்குமுன்னே மணமக்களை பல கோணங்களில் நிக்க வைத்து விதவிதமாக போட்டோ எடுத்தனர்.. மணமக்கள் இருவரும் அன்யோன்யமாக இருப்பதை போல காட்ட சில நெருக்கமான போஸ்களில் நிற்க சொல்ல அதிரதன் தவித்து போனான்..

அதெல்லாம் வேண்டாம்.... இன்னொரு நாள் எடுத்து கொள்ளலாம்  என்று சொல்ல அங்கேயும் வந்து நின்றார் தேவநாதன்..

“அவன் அப்படித்தான் சொல்லுவான்.. உங்களுக்கு எப்படி வேண்டுமோ அப்படி எடுத்து கொள்ளுங்கள்.. போட்டோ ஆல்பம் சூப்பரா வரணும்.. “  என்று சொல்லி அவர்  அங்கயே நின்று  கொள்ள அதற்குமேல் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை..

உள்ளுக்குள் பல்லை கடித்து கொண்டு சந்தடி சாக்கில் தன் தாத்தாவை பார்த்து முறைத்து கொண்டே போஸ் கொடுத்தான்..

ப்படியோ  ஒரு வழியாக எல்லா கூத்தும் முடிந்து விட மணமக்கள் ஜமீனிற்கு திரும்பி இருந்தனர்...

தேவநாதன் மணமக்களுக்கு திருஷ்டி சுத்த சொன்னார்..

“எல்லார் கண்ணும் என் பேரன் மேலயும் என் வீட்டு மருமவ  மேலயும்தான்.. நல்லா சுத்து மனோ.. “  என்று சொல்லி சிரித்து கொண்டார்... 

வீட்டிற்கு உள்ளே வந்தவள் தன் அறைக்கு சென்று ஆடையை மாற்றி கொள்ள மாடி ஏறி கொண்டிருந்தாள் அவள்... அதிரதன் போன் பேசிவிட்டு உள்ளே வந்து கொண்டிருக்க, மாடி ஏறி சென்றவளை பார்த்த தேவநாதன்

“அம்மாடி நிலா.. இங்க கொஞ்சம் வாடா..... “ என்று அழைக்க அவரின் நிலா என்ற அழைப்பில் திடுக்கிட்டு திரும்பி பார்த்தான் அதிரதன்..

ஒருவேளை அவனுடைய நிலா பொண்ணுதான் இங்க வந்திருக்கிறாளோ ? என்று அவசரமாக அந்த ஹாலில் துலாவினான்.. அவள் எங்கும் இல்லை..

பின் யாரை நிலா வென்று அழைத்தார் என்று திரும்பி மாடியில்  பார்க்க, மாடியில் ஏறி முன்னே சென்று கொண்டிருந்தவள்  தாத்தாவின் அழைப்பை கேட்டு அப்படியே நின்றபடி கழுத்தை மட்டும் திருப்பி தேவநாதனை பார்க்க அந்த மாடிப்படிகளில் இருந்த அலங்கார விளக்குகளின் ஒளியில் அவள் முகம் பௌர்ணமி நிலவாய் ஜொலித்தது...

இதுவரை தன்னருகில்  நின்றவளை நொடியும் உற்று கவனித்திராதவன் இப்பொழுது எதேச்சையாக பார்க்க, அவளின் புன்னகையில் விரிந்த திரண்ட செந்நிற இதழ்களும்,  பிறை நிலா போன்ற புருவங்களும் அரை நிலா போன்ற அவளின் நெற்றியும் வட்ட நிலா போன்ற பளிச்சென்று மின்னிய முகமும் காண அந்த நிலவே சேலை கட்டி வானில் இருந்து இறங்கி வந்ததை போல இருந்தது...

ஒரு நொடி இமைக்க மறந்து நின்றுவிட்டான் அதிரதன்....

ஒரு புறமாக திரும்பி நின்றிருந்தவள்

“ஆங் சொல்லுங்க தாத்தா... “ என்று  வெண்ணிற பற்கள் பளிச்சிட புன்னகைக்க,

“ஒரு நிமிசம் கீழ வாடா நிலா மா.... “  என்று  மீண்டும் அழைத்தார்...

அவரின் நிலா என்ற அழைப்பு அவனுள் எதையோ புரட்டி போட, திடுக்கிட்டு விழித்தவன் அருகில் நின்றிருந்த தன் சின்ன தங்கை யாழினியிடம் குனிந்து ரகசியமாக

“யாழி.... அவ பெயர் என்ன? “ என்றான் மெதுவாக கிசுகிசுக்கும் குரலில்...

“யார் னா அந்த அவ?  “ என்று  புரியாமல் யாழி திருப்பி கேட்க, பார்வையை அவள் பக்கம் காட்டி

“அதான்.. ஒரு திமிர் பிடித்தவ, அடங்கா பிடாரியை உன் தாத்தா இந்த வீட்டு மருமகனு கூட்டிகிட்டு வந்து கூத்தடிச்சிகிட்டு இருக்காரே.. அவ பெயர் என்ன?  “ என்றான் ரகசியமாக....

அதை கேட்டு அவளோ கெக்கே பெக்கே என்று சிரிக்க ஆரம்பிக்க, மற்றவர்கள் திரும்பி பார்க்குமுன்னே அவள் வாயை தன் கையை வைத்து அழுத்தி மூடி கொண்டான்..

அவளோ சத்தம் இல்லாமல் உடல் மட்டும் குலுங்க சிரித்து முடித்தவள் தன் அண்ணன் கையை எடுக்க சொல்லி கெஞ்ச அவனும் மெல்ல கையை எடுக்க மீண்டும் சிரிக்க ஆரம்பித்தாள்..

அவள் சிரிப்பதை கண்டு அதிரதன் முறைக்க அதில் சிரிப்பை அடக்கி கொண்டவள்

“உன் கூட சரியான காமெடி ணா... உன் பொண்டாட்டி பேர் கூட தெரியாமலயா அவங்களுக்கு தாலி கட்டி, பர்ஸ்ட் நைட் முடிச்சு இன்னைக்கு ரிசப்ஷனும் முடிஞ்சிருச்சு...ஐயோ ஐயோ!! “ என்று ரகசியமாக கூறி தலையில் அடித்து கொண்டாள் யாழினி...

அதில் கடுப்பானவன்

“ஏய் யாழி... நீ சொன்ன பர்ஸ்ட் ம்  லாஸ்ட் ம் வேணா ஒத்துக்கறேன்.. ஆனால் நடுவுல சொன்னியே  பர்ஸ்ட் நைட் னு.. அதெல்லாம் ஒன்னும் நடக்கல.... “ என்று முறைத்தான்...

“ஓ.................................ஆனால் காமு (காமினி)  வேற கதை இல்ல சொன்னா....” என்றாள் தன் தாடையில் கை வைத்து யோசித்தவாறு..

“அந்த குட்டி சாத்தான் என்ன கதை சொன்னா? “ என்றான் அதே ரகசிய குரலில்...

“அது வந்து.......... அண்ணி இருக்கற அழகுக்கு அவங்கள பார்த்த உடனேயே நீ தலை குப்புற விழுந்திருப்ப...உனக்கு பர்ஸ்ட் நைட் நடந்திருக்கும் னு இல்ல சொன்னா... சே.. அப்ப ஒன்னும் நடக்கலையா? .” என்று அவனை ஏற இறங்க  யோசனையாக பார்க்க,

“ஏய்... வயசுக்கு தகுந்த பேச்சு பேசு டீ.. அவ கூட சேர்ந்து கிட்டு கெட்ட பழக்கத்தை எல்லாம் கத்துக்காத... “ என்று தன் தங்கையின் தலையில் ஒரு குட்டு வைத்தான்..

அவளோ ஆ வென்று  கத்த முயல அதற்குள் அவள் வாயை மீண்டும் பொத்தியவன்

“ஓ... சாரிடா குட்டிமா.. நீ என் செல்லம் இல்ல.. அதெல்லாம் விடு... அவ பெயர் என்ன.. சொல்லுடா செல்லம்.... “ என்றான் கெஞ்சலான குரலில்...

“அதான் தாத்தா பெரிய பெரிய கட் அவுட் வச்சிருந்தாரே... உங்க ரெண்டு பேர் பெயரையும்  போட்டு ரெண்டு பேரையும் ஒன்னா நிக்க வச்சு... அந்த கட் அவுட்ல இருந்த பெயரை கூடவா பார்க்கலை...?  “ என்றாள் மீண்டும் சிரித்தவாறு...

“ஆமா... அந்த பிசாசு மூஞ்ச பார்த்தாலே பத்திகிட்டு வருது. இதுல அவ பேரை பார்க்கறது ஒன்னுதான் குறைச்சல்.. அதெல்லாம் நான் பார்க்கலை.. கண்டுக்கவும் இல்ல.. “ என்றான் எரிச்சலுடன்...

“ஓ....... அப்ப இப்ப மட்டும் ஏன் கேட்கற? “ என்று திருப்பினாள் தன் அண்ணனிடம்...

“அது வந்து............. தாத்தா நிலானு கூப்பிட்டாரா... அதனால  அவ பெயர் என்னானு சும்மா தெரிஞ்சுக்கலாம் னு... “ என்று இழுத்தான் அதிரதன்...

“ஹா ஹா ஹா சும்மா தெரிஞ்சுக்கவா..?  இல்ல ஆர்வமா தெரிஞ்சுக்கிட்டு எப்படி செல்ல பெயர் வச்சு கூப்பிடறதுனு யோசிக்கவா ?   என்று  இடுப்பில் கை வைத்து புருவத்தை உயர்த்தி தன் அண்ணனை மிரட்ட

“அம்மா தாயே... நீ சொல்லவே வேண்டாம்.. அவ பேர் என்னவா இருந்தா எனக்கென்ன? “ என்று அழுத்து கொண்டான் ஆனாலும் தன் தங்கையை ஓர கண்ணால் பார்த்தவாறு..

“சரி போனால் போகட்டும் சொல்றேன்.. ஆனால் எனக்கு ஸ்கூட்டி வாங்கி தரணும் ஓகே வா.. “ என்று  டீல் பேசி விட்டு

“அண்ணி பெயர் என்னன்னானானா......... “  என்று இழுத்து அவனை டென்சன் ஆக்கியவள்

நி ல வி னி.... எல்லாரும் நிலா னு கூப்பிடுவாங்களாம்...........” என்று  சிரித்தபடி அங்கிருந்து ஓடி சென்றாள்..

அதை கேட்டவனோ திகைத்து அதிர்ந்து நின்றான்...

நேற்று இரவு அவளிடம் சவால் விட்டது நினைவு வந்தது..

எனக்கு எப்பொழுதும் நிலா பொண்ணுதான் என் பொண்டாட்டி..என்று கத்தியதும் அதை கேட்டதும் அவள் விழுக்கென்று திரும்பி பார்த்ததன் அர்த்தம் இப்பொழுது புரிந்தது...

“சே.... என் நிலா பொண்ணுக்கு ஈகுவலா இந்த பிசாசு பேரும் நிலா னா வந்து தொலைக்கணும்.......” என்று திகைத்து  அதிர்ந்து நின்றான் அதிரதன்..!

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!