நிலவே என்னிடம் நெருங்காதே!!-7

 


அத்தியாயம்-7

ரு மணி நேரம் கழித்து அதிரதனின் அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் அவள்..

கைகள் வெடவெடக்க கால்கள் பின்னிக் கொள்ள தன் நடுக்கத்தை மறைக்க கையில் இருந்த பால் சொம்பை கெட்டியாக பிடித்தபடி தலையை குனிந்தபடி அறைக்கு உள்ளே வந்து நின்றாள் அவள்...

எளிதான  அலங்காரத்திலும்   தேவதையாக ஜொலித்தாள் அவள்..

ஒல்லியான கொடி போன்ற தேகம்.. அந்த கொடியை சுற்றி  சின்ன பார்டர் வைத்த வெண்ணிற பட்டுபுடவையும், தலையில் மணக்கும் மல்லிகையும் பயத்தில் துடித்த திரண்ட இதழ்களும் கண்களில் ஒரு வித மிரட்சியுடன் உள்ளே நின்றிருந்தவளை கண்டதும் இல்லற வாழ்க்கையில்  விருப்பம் இல்லாதவன்  கூட தன் மனதை மாற்றி கொண்டிருப்பான்..  

அத்தனை அழகு கொட்டி கிடந்தாலும் அதை பற்றி கர்வம் சிறிதும் இல்லாமல் அமைதியாக நின்றிருந்தாள் அவள்..

தலையை குனிந்து இருந்தாலும் அவள்  கண்கள்  அந்த அறையை துழாவியது அன்று காலையில் தன் கழுத்தில் மூன்று முடிச்சு இட்டு தனக்கு கணவனாகியவனை தேடி...

ஆனால் அவனோ  அந்த அறையில் இல்லை.. பின் மெல்ல தலையை நிமிர்ந்து அந்த அறையைத் தாண்டி துழாவ, அந்த அறையை ஒட்டியிருந்த பால்கனியில்  கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு முன்னும் பின்னும் நடைபயின்று கொண்டிருந்தான்  அதிரதன்..

அவன் முகத்தில் தெரிந்த இறுக்கமும் கைமுஷ்டி இறுக விறைத்த உடலுமாய் அசராமல் வேக நடையில்  நடந்து கொண்டு இருப்பவனை கண்டவளுக்கு இன்னும் வயிற்றில் கிலி பரவியது..  

பெரிய பெரிய மூச்சுக்களாக எடுத்து விட்டு ஓரளவுக்கு தன்னை சமாதானப்படுத்திக் கொண்டாள்.. அவள் பார்வை எதேச்சையாக அந்த அறையில் இருந்த கட்டிலை அடைய அங்கு பலவண்ண பூக்களைக் கொட்டி அந்த படுக்கையை அலங்கரித்திருந்தார் தேவநாதன்...  

அதைக் கண்டதும் மூச்சு முட்டியது அவளுக்கு.. அதையெல்லாம் விட்டு விட்டு எங்கேயாவது ஆளில்லாத இடத்திற்கு ஓடி விட வேண்டும் போல அவள் மனம் பரபரத்தது

ஆனால் அவள் கழுத்தில் தொங்கிய அந்த தாலி அவளுடைய நிலையை அவளுடைய கடமையை உணர்த்த,  உதட்டை கடித்தவாறு அப்படியே நின்று கொண்டிருந்தாள்...

அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை.. அவளாக சென்று அவனை அழைக்கவும் பயமாக இருந்தது....இந்த கல்யாணம் அவனுக்கு வேண்டாத,  பிடிக்காத கல்யாணம் என்று மற்றவர்கள் ரகசியமாக பேசி கொண்டதில் புரிந்து கொண்டிருந்தாள்..

கூடவே தனக்கு தாலி கட்டி இந்த வீட்டிற்கு வந்ததும் அடுத்த நொடியே அவன் எங்கேயோ சென்று விட்டதையும் அவனுடைய சின்ன தங்கை யாழி தன் அக்காவிடம் புலம்பியதை வைத்து தெரிந்து கொண்டாள்..

மேலும் அவனுடைய கோபத்தை பற்றியும் ஓரளவுக்கு அறிந்து கொண்டாள்.. இதோ நேரிலும் பார்க்கிறாளே.. அவன் பெயருக்கேற்ப ஒரு போர் வீரனை போல நெஞ்சை நிமித்தி கொண்டு உடல் விறைக்க,  சூரியனை போல  அந்த இரவிலும் கொதித்து கொண்டிருப்பவனை ஓரக்கண்ணால் காண இன்னுமே உடல் நடுங்கியது அவளுக்கு...

ஆனால் சற்றுமுன் தன் அறைக்கு வந்து தாத்தா தேவநாதன் அவளிடம் சொல்லிய அறிவுரைகள் மனதில் வந்து போக, கொஞ்சம் தைர்யத்தை வரவழைத்து கொண்டு அவள் கையில் இருந்த பால் சொம்பை அங்கிருந்த டேபிலில் வைத்தவள் அந்த பால்கனி  கதவை திறந்து கொண்டு வெளியில் சென்றாள்....

அவனோ இன்னும் தன் நடையை நிறுத்தாமல் வேகமாக நடந்து கொண்டிருக்க,

“ம்க்கூம்... “ என்று தொண்டையை செருமினாள் அவன் கவனத்தை ஈர்க்க...

அந்த சத்தத்தில் அனிச்சையாக திரும்பி வாயில் பக்கம் பார்த்தவன்  அதிர்ந்து போனான்..

அங்கே வெண்ணிற தேவதையாக அந்த நிலவொளியில் ஜொலித்தவளை கண்டதும் 

“யார் இவள்? “  என்ற கேள்வி முதலாவதாக வர அடுத்து அவன் பார்வை அவள் மார்பில் தொங்கிக் கொண்டிருந்த அந்த மாங்கல்யத்தின் மீது பட்டு நிக்க அடுத்த நொடி உண்மை உறைத்தது அதிரதனுக்கு...  

அவள் தான் காலையில் அவன்  தாலி கட்டிய இல்லை இல்லை அவனை கட்டாயப் படுத்தி தாலி கட்ட வைத்து அவனுக்கு மனைவி ஆக்கப்பட்டவள்  என்ற உண்மை உறைக்க அடுத்த நொடி அவன் உடல் இன்னும் இறுகியது..

அவன் நடந்துகொண்டிருந்த திசையை மாற்றி இப்பொழுது அவளை நோக்கி வேகமாக எட்டு வைத்து  வந்தான்..

அவன் நடையில் இருந்த வேகத்தையும் அவன் முகத்தில் தெரிந்த கோபத்தையும் கண்டு பயந்து போனவள்  அனிச்சையாக கால்கள் பின்னால் நடக்க கொஞ்சம் நகர்ந்து அந்த அறைக்குள் வந்திருந்தாள்..

அடுத்த நொடி அவனும் அந்த அறைக்குள் வந்திருந்தவன்  அந்த பால்கனி கதவை அறைந்து சாத்தினான்..

பின் நேராக அவளை ஒரு எரிக்கும் பார்வை பார்த்தவன்

“ஏய்... அந்த கிழவனை மயக்கிய மேனகை நீதானா?  என்ன சொல்லி அவரை மயக்கி வச்ச? நான் எவ்வளவு கெஞ்சியும் கேட்காமல் என்னை கட்டாயப்படுத்தி உன் கழுத்தில் தாலி கட்ட வச்சிட்டார்..

இது எல்லாம் அவருடைய சதி என்று எனக்கு தெரியும்..  அவருக்குத்தான் வயசாயிடுச்சு... அறிவு இல்லாமல் அப்படி செய்தார்  என்றால் உனக்கு அறிவு இல்லை..

திடீர்னு ஒருத்தனை கொண்டு வந்து உன் கழுத்துல தாலி கட்ட வச்சா உடனே அதை ஏற்றுக் கொள்வியா?  உனக்குனு  ஒரு விருப்பமில்லை..  முன்ன பின்ன தெரியாதவன  எப்படி ஹஸ்பண்ட் ஆ  ஏத்துக்க முடியும்?

ஓ...  என்னை பார்த்ததும் என் அழகில் மயங்கி போயிட்டியாக்கும் !!  

அதுதான பார்த்தேன்..!   நல்ல வசதியுள்ள பசையுள்ள  பார்ட்டி.. பத்தாததற்கு பார்க்கவும் வாட்ட சாட்டமா இருக்கான் என்று தெரிந்ததும் மஹாராணி மாதிரி வாழலாம் னு கணக்கு போட்டு உடனே கழுத்தை நீட்டிட்டியாக்கும்..

நீ உன் மனசுல என்ன வேணா நெனச்சு  கழுதை நீட்டி இருக்கலாம்.. ஆனால் அதெல்லாம் ஒரு போதும் நிறைவேறாது... ஏனா நான் ஏற்கனவே வேற ஒருத்தியை விரும்பறேன்..  

அவ மட்டும் தான் என் வாழ்க்கையில்.. அவளை தவிர வேற யாரையும் என்னால பொண்டாட்டியா ஏத்துக்க முடியாது.. அந்த கிழம் என்னதான் சதி செய்து  என்னை இந்த வலையில் சிக்க வைத்திருந்தாலும்  அதையெல்லாம் அறுத்து எறிந்து அந்த வலையை விட்டு  வெளியில் வருவான் இந்த அதிரதன்..

எனக்கு எப்பொழுதும் என் நிலா பொண்ணுதான் என் பொண்டாட்டி...என்ன புரிஞ்சுதா? “ என்று  மூச்சு விடாமல் அனைத்தையும் சொல்லி முடித்தான் அதிரதன்..

அவன் கத்த  ஆரம்பித்ததுமே தலையை குனிந்து கொண்டாள் அவள்..

எதுவும் பேசாமல் அமைதியாக நின்றுகொண்டிருந்தாள்..அவன்  பேசி முடிக்கவும் இறுதியாக சொன்ன என் நிலா பொண்ணுதான் என் பொண்டாட்டி என்றதை கேட்டதும் அதுவரை அமைதியாக நின்றிருந்தவள் விழுக்கென்று தலையை நிமிர்ந்து அவனை நேர்பார்வை பார்த்தாள்..

அதுவரை தலையை குனிந்து கொண்டு இருந்தவளை கண்டமேனிக்கு திட்டி கொண்டிருந்தவன் திடீரென்று அவள் நிமிர்ந்து அவனை நேராக பார்க்க , அவளின் நேர்பார்வையை கண்டு அப்படியே பேச மறந்து போனான் ஒரு சில நொடிகள்..

அதற்குள் தன்னை சுதாரித்து கொண்டவன்

“ஏய்... என்ன லுக்கு? “ என்று அவளைப் பார்த்து  முறைத்தான்..  

“இப்படியெல்லாம் லுக் விட்டு என்னை மயக்கிடலாம்னு நினைக்காத...நான் யாருக்கும் மயங்க மாட்டேன் அடங்கவும்  மாட்டேன்..  எனக்கு என் நிலா பொண்ணுதான் பொண்டாட்டி.. “  

என்று முன்பு சொன்னதையே திரும்பவும் சொல்லி அவளை முறைத்து பார்க்க அவளும் மீண்டுமொரு நேர் பார்வை பார்த்தவள்  அடுத்த நொடி கட்டிலை அடைந்து அதில் இருந்த ஒரு தலையணையையும் பெட்ஷீட்டையும் எடுத்துக் கொண்டாள்..

பெட்ஷீட்டை தரையில் விரித்து தலையணையை அதில் வைத்து அடுத்த நொடி அதில் படுத்து கண்ணை மூடிக் கொண்டாள்..

அதைக் கண்டவனோ அதிர்ந்து போனான்...

அவன் சொன்னதைக் கேட்டு அவள் அவனிடம் சண்டை போடுவாள்..  தன்னை திட்டுவாள்..  அப்படியும் இல்லை என்றால் கண்ணீர்  விட்டு அழவாவது செய்வாள் என்று எதிர்பார்த்தவன்  அவள் அப்படி செய்தால் இவன் என்ன செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டு இருந்தான்..

ஆனால் அவள் அப்படி எதுவும் செய்யாமல் அவனை தைர்யமாக எதிர்கொண்டு நேர் பார்வை பார்த்து நின்றதை கண்டதும்  திகைத்துப் போனான்..

எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அவன் திட்டியதை கூட    கண்டு கொள்ளாமல் அமைதியாக சென்று தரையில் படுத்துக் கொண்ட அவளை கண்டதும் ஒரு நொடி திகைத்தாலும் அடுத்த நொடி அவன் உள்ளே கொதித்தது...

“இவளுக்கு திமிரைப் பார்...இவ்வளவு திட்டு திட்டி இருக்கேன்.. கொஞ்சமாவது கண்டு கிட்டாளா? இவள்  உடம்பு முழுவதும் திமிர்...  அந்த கிழம் பார்த்து கண்டுபிடித்தவள்  இல்லையா?  அவரைப் போலவே தான் இவளும் திமிராக இருப்பாள்..

இவளை வைத்து தானே என்னை மடக்க திட்டமிட்டிருக்கிறார் அந்த கிழம்.. அது ஒரு நாளும் நிறைவேறாது.. இந்த அதிரதன் யார் என்று அவருக்கு நான் காட்டுகிறேன்..  

அவர் பேச்சைக் கேட்டு தலை ஆட்டி வைத்த இவளுக்கும் சேர்த்துதான் நான் யாரென்று காட்டறேன்.. “  என்று  பல்லைக் கடித்தவன் அவளை பார்த்து மீண்டும் முறைத்து விட்டு அந்த கட்டிலில் ஏறி படுத்து கண் மூடி உறங்க முயன்றான்....

தரையில் படுத்தவளுக்கோ மூச்சு முட்டியது...

அவன் பேச்சுக்கள் எல்லாம் அவள் காதில் ரீங்காரம் இட்டு கொண்டிருந்தது..

அதை எல்லாம் கேட்டு அவள் மனம் வாட, தானாக அவள் கண்களில் நீர் திரண்டது..

"ஒருவேளை தவறு செய்து விட்டமோ? இந்த திருமணத்திற்கு ஒத்து கொண்டிருக்க கூடாதோ? " என்று அவள் மனம் அவசரமாக பரிசீலிக்க, எதேச்சையாக அவள் கை அவள் மார்பில் தொங்கிய மாங்கல்யத்தின் மீது பட்டது...

அதை தொடர்ந்து பல நினைவுகள் வந்து போக ஒரு பெருமூச்சு விட்டவள்

"எது எப்படியோ..!  களத்தில் இறங்கி ஆட்டத்தை ஆரம்பித்தாகிவிட்டது... இனி முன் வச்ச காலை பின் வைக்க முடியாது..ஆடித்தான் பார்க்கவேண்டும்..!  "  என்று தன்னைத் தானே தேற்றி கொண்டவள் வெளி வர துடித்த கண்ணீரை உள்ளுழுத்து கொண்டு கண்ணை இறுக்க மூடி உறங்க ஆரம்பித்தாள் அடுத்து அவள் வாழ்க்கைபடகு  எப்படி பயணிக்கும் என்ற பல குழப்பங்களுடன்....

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!