நிலவே என்னிடம் நெருங்காதே!!-9

 


அத்தியாயம்-9

மாடியில் இருந்து கீழிறங்கி வந்தவள் அங்கு தேவநாதன் நின்று கொண்டு அவளையே பார்த்து கொண்டிருப்பதை கண்டவள் இரண்டு இரண்டு படிகளாக வேகமாக தாவி இறங்கி அவரிடம் வந்தவள்

“ஹாய் தாத்தா... குட்மார்னிங்.. “ என்று கன்னம் குழிய சிரித்தபடி அவரிடம் வந்தாள்..

“வாடா.. மருமவளே... வெரி குட் மார்னிங்.. என்ன வீடெல்லாம் புடிச்சிருக்கா? “ என்றார் சிரித்தவாறு..

“ஹ்ம்ம்ம் புடிச்சிருக்கு தாத்தா... “ என்று வெண் பற்கள் பளிச்சிட சிரித்தாள்..

அதை கண்டு இன்னும் மகிழ்ந்தவர் பூஜை அறையில் பூஜை செய்வதற்கான பொருட்களை எடுத்து  வைத்து கொண்டிருந்த மனோகரியை அழைத்தவர்

“மனோ...சாமி முன்னாடி ஒரு நகை பெட்டகம் இருக்கு பார்.. அதை எடுத்து வா.. “ என்று கட்டளை இட்டார்...

மனோகரியும் எடுத்து வந்து தர, அதை திறந்தவர் அதில் இருந்த ஒரு வைர அட்டிகையை எடுத்து அவளிடம் கொடுத்தவர்

“இது இந்த ஜமீனின் பரம்பரை நகை... வழிவழியாக மூத்த மருமவளுக்கு போடுவது.. இதுவரை உன் மாமியார் போட்டிருந்தாள்.. இனிமேல் இது உனக்குத்தான்.. வீட்ல விசேச நாட்களில் இதை போட்டுக்கோமா.. “ என்று கொடுத்தார்..

அதை கண்டு அங்கு அமர்ந்து இருந்த பெண்கள் எல்லாம் வாயை பிளந்தனர்..

அந்த அட்டிகை அவ்வளவு அழகாக இருக்கும்.. எந்த ஆடைக்கு வேண்டும் என்றாலும் போட்டு கொள்ளலாம்.. இத்தனை வருடங்கள் ஆனாலும் சிறிதும் மங்காமல் பளிச்சென்று ஒளியை வாரி இறைத்து பார்ப்பவர்களை கட்டி இழுக்கும்..

அதை கண்டவள் பதறி ஒரு எட்டி பின்னால் வைத்து

ஐயோ தாத்தா... இதெல்லாம் எனக்கு வேண்டாம் என் கழுத்து சின்ன கழுத்து..

இவ்வளவு பெரிய நகையை போட்டால்  என் கழுத்து தாங்காது... இது அத்தைக்கு நன்றாக இருக்கும்.. அவர்களிடமே இருக்கட்டும்.. “  என்று வாங்க மறுத்தாள்..  

அதை கண்ட தேவநாதனுக்கு இன்னும் பெருமையாக இருந்தது..

நகையை வேண்டாம் என்று சொல்லும் பெண்கள் உண்டா? அதுவும் பளபளவென்று  பளிச்சிடும் விலை உயர்ந்த கண்ணை பறிக்கும் இந்த வைர அட்டிகையை பார்த்தும் வேண்டாம் என்று சொல்லும் பெண்கள் உண்டா என்று ஆச்சர்யமாக இருந்தது...

முன்பு ஒருமுறை, இதை பார்த்ததும் தன் பேரன் உடன் சுத்தி கொண்டிருக்கும் அந்த பட்டணத்து பொண்ணு தனக்கு போட்டு விடச் சொல்லி அடம் பிடித்தது அவர் கண் முன்னே வந்தது...

அன்று தேவநாதன்

“இந்த நகை இந்த வீட்டுக்கு வரும் மருமவளுக்குத்தான்.. நீ முறைப்படி  இந்த வீட்டு மருமகள் ஆன பிறகு போட்டுக்கொள்.. “  என்று சொல்லி மிரட்ட அடங்கிப் போனாள்..  

ஆனால் இன்றோ இந்த நகையை வாங்கிக்க முழு உரிமை இருந்தும் இந்த பெண் இதை வாங்க மறுப்பது கண்டு பெருமையாக இருந்தது தேவநாதனுக்கு..

பெருமையுடன் அவளை பார்த்தவர்

“உன் அத்தைக்கு இதே மாதிரி வேற வாங்கிக் கொடுத்து விட்டேன் மருமகளே.. இனிமேல் இது உனக்குத்தான்.. இந்த தாத்தாவோட கட்டளை இது.. மறுக்காமல்  போட்டுக்கோ

இனிமேல் அடிக்கடி ஜமீன் மருமவளை பார்க்க பெரிய மனுஷங்க வந்து போவாங்க.. அதனால் இன்னும் ஒரு வாரம் போட்டு இருந்து விட்டு பிறகு கழட்டி வைத்துக் கொள்.. “  என்று கட்டாயப்படுத்த அவளும் மறுக்க முடியாமல் அதை வாங்கி அணிந்து கொண்டாள்..  

அவளின் சங்கு கழுத்துக்கு அந்த அட்டிகை பாந்தமாக இருந்தது.. இன்னுமே  அவளுக்கு ஒரு மிடுக்கான தோற்றத்தை கொடுத்தது..

அதைக்கண்டு ரசித்தவாறு

“சூப்பரா இருக்கு மருமவளே... சரி வா... இன்று உன் கையால் பூஜை பண்ணு...” என்று பூஜை அறையை நோக்கி நடந்தவர் 

“நீங்களும் எழுந்து வாங்க... “  என்று வரவேற்பறையில் அமர்ந்திருந்த மற்றவர்களையும் அழைத்து விட்டு பூஜை அறையை நோக்கி சென்றார் தேவநாதன்..

அங்கு மனோகரி மற்றொரு பணியால் உதவியுடன் பூஜைக்கு எல்லாம் தயாராக வைத்திருக்க முதலில் அந்த ஜமீனின் புது மருமகளை விளக்கேற்றி வைக்கச் சொன்னார்..

எப்படியும் அவள் விளக்கு ஏற்ற தடுமாறுவாள் என்று எல்லாரும் ஆவலாக அவளை பார்த்துக் கொண்டிருக்க அவளோ எந்த தயக்கமும் இல்லாமல் தீப்பெட்டியை எடுத்து ஏற்கனவே எண்ணை ஊற்றி திரி போட்டு வைத்திருந்த திரியை தூண்டிவிட்டு தீக்குச்சியை பற்ற வைக்க, ஒரே உரசலில் அது பற்றிகொள்ள, அந்த வீட்டு குத்து விளக்கை ஏற்றி வைத்து கை குவித்து வணங்கினாள்...

பின் தேவநாதன் அவர்கள் வழக்கப்படி பூஜை செய்து அனைவருக்கும் தீபாராதனை தட்டை நீட்ட பயபக்தியுடன் அனைவரும் கும்பிட்டு தட்டில் இருந்த திருநீற்றையும் குங்குமத்தையும்  எடுத்து நெற்றியில் வைத்து கொண்டனர்..

அப்பொழுது தான் அதிரதன் அங்கு இல்லாத்தை கண்டவர்

“மனோ.. எங்க உன் மவன்? “ என்றார் புருவத்தை உயர்த்தி..

அவரோ வழக்கம் போல திருதிருவென்று  முழிக்க யாழினிதான்

“அண்ணா காலையில் எழுந்து கீழ வந்ததுமே காரை எடுத்துகிட்டு எங்கயோ போய்டுச்சு தாத்தா.. இன்னும் வீட்டுக்கு வரலை.. “ என்றாள் தயக்கத்துடன்..

“ஹ்ம்ம்ம் இந்த பயலுக்கு எத்தன சொன்னாலும் மண்டையில உறைக்கவே மாட்டேங்குதே... சரி வரட்டும்.. “ என்று உறுமியவர் பூஜை முடித்து வெளி வர அனைவரும் அடுத்து  காலை உணவுக்காக உணவு மேஜைக்கு சென்றனர்...

அங்கு காலையிலயே விருந்து தயாராகி இருக்க, வீட்டில் இருந்த நெருங்கிய சொந்தங்கள் முன்பே அங்கு அமர்ந்து இருந்தனர்..

தேவநாதன் வீட்டு தலைவருக்குரிய இருக்கையில் அமர்ந்ததும் மற்றவர்கள் ஒவ்வொரு இருக்கையில் அமர்ந்து கொண்டனர்..

புது மருமகள் மட்டும் அமராமல் தயங்கி நின்று கொண்டிருக்க,

“நீயும் வாம்மா.. உட்கார்.. “ என்று  அழைத்தார் தேவநாதன்..

“இல்ல தாத்தா...  நீங்க எல்லாம் சாப்பிடுங்க.. உங்களுக்கு பரிமாறிவிட்டு நான் சாப்பிடுகிறேன்.. “  என்றாள் தயக்கத்துடன்..

அடடா.. இங்க பரிமாற எல்லாம் ஆட்கள் இருக்காங்க மா..  நீயும் கூட வந்து உட்கார்.. “  என்று கட்டாயப்படுத்த அவளும் மீண்டும் தயக்கத்துடன்  பிறகு சாப்பிடுகிறேன் என்று மேலும் மறுக்க,

“என்னமா !! இந்த பொண்ணுங்களே இப்படித்தான்... கழுத்துல தாலி ஏறுச்சுனா  போதும்..  புருஷன் மேல உடனே ஆசை பாசம் எல்லாம் பொத்துகிட்டு வந்துடும்..  உன் புருஷன் இன்னும் சாப்பிட வரலைனு நீயும் விரதம் இருக்கறையாக்கும்..

அவனை எல்லாம் நீ எதிர்பார்க்காதே... அவன்  எப்ப வேணா வருவான்  எப்ப வேணாலும் சாப்பிடுவான்.. அவனுக்காக நீ காத்திருக்காத.. " என்று  நமட்டு சிரிப்பை சிரித்தார்..

"அச்சோ.. அப்படி எல்லாம் இல்ல தாத்தா... " என்றாள் அவசரமாக

"ஹா ஹா ஹா பின்ன ஏன் சாப்பிட வேண்டாம்ங்கிற... " என்று  கொக்கி போட, அவளும் வேற வழியில்லாமல் சாப்பிட ஒத்து கொண்டாள்..

தேவநாதன்  இடது புறம் யாழினியும் அமுதினி மற்றும் மற்ற பெண்கள் அமர்ந்திருக்க, வலது புறம் இருந்த இருக்கையை காட்டி அங்கே அமர சொன்னார்..

அதைக் கண்டு மற்றவர்கள் திகைத்தனர்..

அந்த இருக்கை அதிரதன் உடையது.. சிறுவயதில் இருந்தே அவன் தாத்தாவின் அருகில் அமர்ந்துதான் சாப்பிடுவான்... தாத்தாவை பிடிக்காமல் போன பிறகும் அவன் இருக்கையை யாருக்கும் விட்டு கொடுக்கவில்லை...

தன் தங்கையை கூட அதில் அமர விட மாட்டான்... அதனாலயே அவன்  உணவருந்த இல்லாத நேரங்களிலும்  தன் பேரனுக்காக அந்த இருக்கையை எப்பொழுதும் ரிசர்வ் பண்ணி வைத்திருப்பார்..  யாரும் அந்த இருக்கையில் அமரக் கூடாது என்று சொல்லிவிட்டார்..

அப்படியிருந்த அந்த இருக்கையில் அந்த வீட்டின் புது மருமகளை அவர் அமர சொல்ல, அதை கண்டு அனைவருக்குமே ஷாக்காகி போனது..

ஆனாலும் வாய் திறந்து கேட்க முடியாமல் போக உள்ளுக்குள்ளே  தேவநாதனை திட்டிக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தனர்.. அவளும் தேவநாதன் அருகில் அமர்ந்து சாப்பாட்டு  தட்டில் இருந்த உணவை எடுத்து ஒரு வாய் உண்ண போக, அதே நேரம்

"ஏய்...  உன்னை யார் இங்க உட்கார  சொன்னது? “  என்று  உறுமியவாறு வேக நடையுடன் அங்கு வந்து சேர்ந்தான்  அதிரதன்..

அவனை கண்டதும் அதுவரை கேசுவலாக இருந்த அவள் கை கால்கள் நடுங்க ஆரம்பித்தன...

ஆனாலும் கால் கட்டை விரலை தரையில் அழுத்தி  தன் நடுக்கத்தை மறைத்து கொண்டவள் நிமிர்ந்து தேவநாதனை பார்க்க அவரோ கண்ணால் ஏதோ ஜாடை செய்தார்..

அவளும் அமைதியாக உட்கார்ந்து விட, அவள் அருகில் வந்தவன்

“ஏய் எழுந்திரு.. இது என் இடம்.. " என்று முறைத்தான்..

“டேய்.. இனிமேல் உனக்கு சொந்தமானவை எல்லாம் உன் பொண்டாட்டிக்கும் சொந்தம்.. அதேபோல அவளுக்கு உரியது எல்லாம் உனக்கும் சொந்தம் தான்..  

இனிமேல்  நீ சாப்பிடற நேரத்துக்கு வீட்டில் இல்லை என்றால் இந்த இடம் உன் பொண்டாட்டிக்கு.. எல்லாரும் சாப்பிட உட்கார்ந்திருக்கிப்ப நீ  மட்டும் எங்கடா போன?”   என்று முறைத்தார்..

“நான் எங்க போறேன் வருகிறேன் என்றெல்லாம் உங்களிடம் சொல்லிக்கொண்டிருக்க முடியாது.. நான் எப்ப வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் போவேன் நீங்க என்னை கட்டுப்படுத்த முடியாது.. “  என்று தன் தாத்தாவை முறைத்தவன்  மீண்டும் அவளைப் பார்த்து

“ஏய் எழுந்திரு..... “  என்று பார்வையால் மிரட்ட அவளும் வேகமாக எழுந்து அருகில்  இருந்த இருக்கைக்கு  மாறி  அமர்ந்து கொண்டாள்..

அவளை வெற்றி கொண்டவன் அதன் மூலமாக அவன் தாத்தாவை வெற்றி கொண்ட களிப்பில்  அதிரதன்  தன் காலரை  தூக்கி விட்டுக் கொண்டு தாத்தாவை பார்த்து ஒரு நக்கல் சிரிப்பை சிரித்து அவருக்கு அடுத்து இருந்த அவனுடைய இருக்கையில் அமர்ந்து கொண்டான்.. 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!