அழகான ராட்சசியே!!-22

 


அத்தியாயம்-22

 

ந்த OMR சாலையில் தன் ஸ்கூட்டியில் பறந்து கொண்டிருந்தாள் சந்தியா... மணி 8 ஐ நெருங்கி இருந்ததால் சாலையில் போக்குவரத்து நெரிசல் கொஞ்சம் குறைவாக இருந்தது..

அரசு அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் மாலை 6 மணி அடித்தால் கிளம்பி விடுவதால் இந்த நேரம் தனியார் நிறுவனங்களில் அதுவும் பெரும்பாலும் சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்  தான் தங்கள் வேலையை முடித்து வீடு திரும்பி கொண்டிருந்தனர்..

அதுவும் அன்று வெள்ளிக்கிழமை என்பதால் நிறைய பேர் கொஞ்சம் சீக்கிரமே வீடு திரும்பி இருக்க வாகன நெரிசல் அவ்வளவாக இல்லை...

அதனால் தான் சந்தியா அந்த சாலையில் கண் மண் தெரியாமல் பறந்து கொண்டிருந்தாள்.. அவள் உள்ளே பொங்கிய கோபம் ஆத்திரம் எல்லாம் அந்த ஸ்கூட்டியில் காட்டி முறுக்கி கொண்டிருந்தாள்...

பாவம் அதுவும் அவள் கோபத்துக்கு ஈடு கொடுத்து முடிந்தவரை சமாளித்து வந்தது...

நல்ல வேளை வாகனம் அதிகம் இல்லாததால் பத்திரமாக ஓட்ட முடிந்தது.. இல்லையென்றால் அவள் உள்ளே பொங்கும் ஆத்திரத்துக்கு கண் மண் தெரியாமல் ஓட்டும் வேகத்துக்கு இந்நேரம் யார் மீதாவது இடித்திருப்பாள்..

முன்னால் வாகனம் எதுவும் அவ்வளவாக இல்லாததால் நேர் கோட்டில் வேகமாக முறுக்கி கொண்டிருந்தாள் தன் ஸ்கூட்டியை..

கைகள் தானாக வண்டியை முறுக்கினாலும் மனம் என்னவோ சற்றுமுன் நடந்த நிகழ்ச்சியை யே திருப்பி திருப்பி பார்த்து கொண்டிருந்தது..

“சே..எவ்வளவு தைர்யம் அந்த மங்கி நெட்டையனுக்கு..?  அவன் தான் உலகத்திலயே ஆணழகன் னு நினைப்பு.. அவன் கண் அசைச்சா  எல்லாம் அவன் பின்னாடியே  போய்டனுமாக்கும்..

எவ்வளது  திமிர் இருந்தால் என்னை பொண்டாட்டினு சொல்வான்? அதோட லவ் யூ னு சொல்லி புரபோஸ் பண்ணுவான்? ..  ராஸ்கல்..இந்த சந்தியாவை பத்தி  இன்னும் அவனுக்கு டீடெய்லா தெரியலை.. சீக்கிரம் தெரிய வச்சிடறேன்..” என்று பல்லை கடித்தவாறு பறந்து கொண்டிருந்தாள்...

அதே ஆத்திரத்தில் வீட்டை அடைந்தவள் தன் ஸ்கூட்டியை அதன் இடத்தில் நிறுத்தி விட்டு வீட்டு வாசலில் வேகமாக செருப்பை உதற, அது அங்கொன்றும் இங்கொன்றுமாக பறந்து போய் விழுந்தது..

அதை கூட கண்டு கொள்ளாமல் விடுவிடுவென்று உள்ளே நுழைந்தவள் அங்கு வரவேற்பு அறையில் அமர்ந்திருந்த  தன் அன்னையை கூட கண்டு கொள்ளாமல் வேகமாக தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்..

குளியல் அறைக்கு சென்று முகத்தை குளிர்ந்த நீரால் பல முறை அடித்து கழுவ, அவள் கோபம் கொஞ்சம் குறைந்த மாதிரி இருந்தது...

ஓரளவுக்கு தன்னை சமாதான படுத்திக் கொண்டவள் பின்  இரவு உடைக்கு மாறியவள் தன் அறையில் இருந்து வெளி வந்தாள்..

அவள் தந்தையும் வீடு திரும்பி இருக்க, உணவு மேஜையில் ருக்மணி சாப்பிட எல்லாம் எடுத்து  வைத்து கொண்டிருந்தார்...

வீடு திரும்பிய தன் மகள் எதுவும் பேசாமல் குறிப்பாக அவரை எதுவும் சீண்டாமல் நேராக தன் அறைக்கு சென்று விட,

“என்னாச்சு இந்த பொண்ணுக்கு? “ என்று எண்ணியவாறு அவள் அறையில் இருந்து வெளி  வந்த தன் மகளையே ஆராய்ச்சியுடன் பார்த்தார் ருக்மணி..

அதற்குள் மாலையில் நடந்த நிகழ்ச்சியை பின்னுக்கு தள்ளி தன்னை இயல்பாக்கி கொண்ட சந்தியா நேராக அங்கு சென்றவள்

“என்ன ருக்கு? இன்னைக்கு என்ன  ஸ்பெஷல் ? “ என்று இளித்தவாறு ஒரு நாற்காலியை இழுத்து அமர்ந்தாள் சந்தியா...

“வாடி.. உனக்கு பிடித்த மஸ்ரூம் கிரேவியும் சப்பாத்தியும் தான்.. வந்து கொட்டிக்க..” என்றவர் அவள் தட்டை எடுத்து வைத்து ஹாட் பாக்சில் இருந்த சப்பாத்தியை  எடுத்து வைத்தார்...

“வாவ்.. சூப்பர் ருக்கு.. அப்ப ஒரு 10 எடுத்து வை.. இன்னைக்கு ஒரு பிடி பிடிக்கலாம்..” என்று சிரித்தவாறு தட்டை தன் பக்கம் நகர்த்தினாள்..

“பாப்பா... 10 சாப்டிடுவியா? உன் ஆத்தா பண்ணி இருக்கிற வறட்டி இல்ல இல்ல  சப்பாத்தி ஒன்னை  காலி பண்ணவே எனக்கு நாக்கு தள்ளுது.. சப்பாத்தி பண்ணுடி னா நம்ம ஊர்ல சுவத்துல தட்டி வச்சிருப்பாங்களே வறட்டி.. அது  மாதிரி தட்டி வச்சிருக்கா...

ஒன்னை உள்ள தள்ளங்கேட்டியே மனுசனுக்கு மூச்சு வாங்குது... “ என்று சிரித்தார் அருகில் அமர்ந்து இருந்த அவள் தந்தை வேல்மணி...

“ஆமா..இவர் அப்படியே சப்பாத்திலயே பொறந்து சப்பாத்திலயே வளர்ந்தவர்..சப்பாத்தி எப்படி செய்யறதுனு எனக்கு சொல்லி கொடுக்கறார்... மூனு நேரமும் வெறும் நெல்லஞ்சோத்தை  சாப்பிட்டு வளர்ந்தவர்..

என் அத்தைக்கு ஒரு இட்லி தோசை கூட  ஒழுங்கா செய்ய தெரியாது.. எப்பவும் சோத்தைதான் வடிச்சு கொட்டும்... போனா போகுதேனு நான் விதவிதமா சமைச்சு போட்டா, வக்கனையா நாக்கை சப்பி கொட்டி சாப்டிட்டு பேச்சை பார்...” என்று தன் கணவனை முறைத்தவாறு  முகத்தை நொடித்தார் ருக்மணி..

“ஆமாமாம்.. உன் அப்பன் வீட்ல நீ மட்டும் தினமும் சப்பாத்தி யும் புரோட்டாவுமா சாப்ட்ட.. நானாவது மூனு வேளையும் சுடச்சுட  நெல்லஞ்சோறு சாப்டேன்.. உன் ஆத்தா ஒரு நேரம் சோறாக்கி அதையே மூனு வேளையும் போடலை..

பாதி நாள்  உனக்கு பழைய சோத்தை போட்டு தான்டி  வளர்த்துச்சு..எப்பயாவது என் அத்தையை பார்க்கணும் னு நான்  வந்தா தான் என் அத்தை அவசர அவசரமா அடுப்பை பத்த வச்சு சுடு சோறாக்கும்..  “ என்று சிரித்தார்..

அதை கேட்டதும் புசுபுசுவென்று  முகம் சிவக்க மூக்கு விடைக்க  அவரை பார்த்து முறைத்தார் ருக்மணி..

அதை கண்ட சந்தியா

“ஐயோ.. போதும் நிறுத்தறீங்களா உங்க புராணத்தை..பாஸ்ட் இஸ் பாஸ்ட்.. இப்படியே எத்தனை வருசத்துக்குத்தான் பழசையே பேசி பேசி அறுப்பீங்க.. கேட்டு கேட்டு என் காது புளிச்சு போச்சு...

இனிமேல் நடக்கறதை  பாருங்க.. அப்படியும் ஒத்து வரலைனா ஈசி.. இரண்டு பேரும் டைவர்ஸ் வாங்கிட்டு தனித் தனியா போய்டுங்க..

ஒரு வாரம் அப்பா வீட்ல ஒரு வாரம் அம்மா வீட்ல னு எனக்கும் ஜாலியா பொழுது போகும்..எப்புடீடீடீ? “ என்று இருவரையும் பார்த்து கண்ணடித்து சிரித்தாள் சந்தியா..

“அடிப்பாவி... பெத்த மவளாச்சே.. எங்க சண்டையை தீர்த்து  வைப்பனு பார்த்தா என் மாமனை என்கிட்ட இருந்து பிரிக்கவா பார்க்கிறா.. சக்களத்தி..” என்று முறைத்தவாறு  சந்தியாவின் காதை பிடித்து செல்லமாக  திருகினார் ருக்மணி..

“மிஸ்டர் மணிவேல்... நோட் தி பாய்ன்ட்... நீங்க அவங்களுக்கு மாமனாம்..உங்களை அவங்ககிட்ட இருந்து பிரிக்க கூடாதாம்....

இப்ப நீங்க என்ன சொல்ல வர்ரீங்க..? உங்களுக்கு டைவர்ஸ்க்கு விருப்பமா? இன்னுமே நீங்க யூத் தான்.. நிறைய சித்திங்க உங்களுக்காக வெய்ட்டிங்.. எப்படி வசதி? “ என்று தன் தந்தையை பார்த்து கண்ணடித்தாள் சிரித்தவாறு..

“ஹீ ஹீ ஹீ நான் ரெடி பாப்பா.. ஆனால் பாவம் என் அத்தை.. இந்த வயசுல இவள பொறந்த வீட்டுக்கு அனுப்பினா அப்புறம் என் மாமன்  என் அத்தையை எங்க வீட்டுக்கு அனுப்புனாலும் அனுப்பிடுவார்..

அப்படி பட்ட கிருக்கன் தான் அவள் அப்பன் என் அரும மாமன்.. அதனால போனால் போகுது.. என் அத்தைக்காக அவள நம்ம கூடவே வச்சுக்கலாம்.. “ என்று கண் சிமிட்டி சிரித்தார் மணி..

“யோவ்.... போனா போகுதுனு என்ன வச்சுக்கறியா.. இதுக்குனே இனிமேல் நான் உனக்கு வடிச்சு கொட்ட மாட்டேன்...இவளை பெத்த  பாவத்துக்கு அவளுக்கு மட்டும் தான் சமைப்பேன்..

இனிமேல் உனக்கு வேண்டியத  நீயே செஞ்சுக்க.. “ என்று கோபமாக முறைத்து  முகத்தை நொடித்தவர் வேகமாக சமையல் அறைக்குள் புகுந்து கொண்டார் ருக்மணி...

என்ன மணி..?  உன் பொண்டாட்டி திடீர்னு இப்படி முறுக்கி கிட்டு போறாங்க.. அப்ப நாளையில் இருந்து நிஜமாலுமே நீ பட்டினிதானா..? “ என்றாள் சந்தியா பாவமாக

“ஹீ ஹீ ஹீ.. அத விடு பாப்பா.. அவளை பத்தி எனக்கு தெரியாதா?? அவளை எப்படி  வழிக்கு கொண்டு வர்ரதுனு எனக்கு தெரியும்.. நீ சாப்டு.. “ என்று  சிரித்தவர் பின் தன் மகளுடன் உரையாடி கொண்டே சாப்பிட்டார்..

மறக்காமல் இன்னும் நாலு சப்பாத்திகளை எடுத்து போட்டு ருசித்து சாப்பிட்டார்...

பின் சாப்பிட்டு முடித்து கை கழுவ எழுந்திருக்க

“ஏய் சந்தியா.. உன் அப்பனை இன்னும் இரண்டு எடுத்து போட்டு சாப்பிட சொல். அப்புறம் பாதி ராத்திரியில எழுந்து உட்கார்ந்து கிட்டு  பசிக்குது னு என் உயிரை வாங்குவார் ..” என்று சமையல் அறையில் இருந்து குரல் கொடுத்தார் ருக்மணி..

அதை கண்டு தன்  புருவத்தை  உயர்த்தி எப்புடி என்று சிரித்தார் மணி..

“வாவ்... சூப்பர் மணி.. நல்ல பொண்டாட்டிகிட்ட தான் நீ வாழ்க்கை பட்டிருக்க.. பார்..  கிச்சன் உள்ளே இருந்தாலும் உன் பொண்டாட்டி கண்ணெல்லாம் நீ சரியா சாப்டியானு உன்னையே பார்த்துகிட்டு தான் இருந்திருக்கு..

உன் கண் எதிர்லயே இருக்கேன்.. எனக்கு தெரியலை நீ எத்தனை சாப்ட னு.. “ என்று சிரித்தாள் சந்தியா

அவரும் சிரித்து கொண்டே தன் மனைவிக்காக இன்னொன்றையும் எடுத்து  போட்டு சாப்பிட்டு முடித்து  எழுந்து கை கழுவியவர் சமையல் அறை உள்ளே சென்றார் தன் மனைவியை சமாதான படுத்த.. 

சந்தியாவுக்கு தன் பெற்றோர்களை நினைத்து பெருமையாக இருந்தது..

ஒருவரை ஒருவர் அப்பப்ப சண்டை இட்டு  வம்பு இழுத்து  கொண்டாலும் ஒருவர் மீது ஒருவர் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என அவளுக்கு தெரியும்... ஒரு நாளும் இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து இருந்ததில்லை..

அவள் தந்தை அவர் கிராமத்துக்கு சென்றாலும் ஒரு நாள் மேல் அங்கு  தங்க மாட்டார்.. அதுக்குள்ளயே ஆயிரம் முறை தன் மனைவியிடம்  போன் பண்ணி பேசி விடுவார்..

அடுத்த நாளே ஓடி வந்து விடுவார் தன் மனைவியையும் மகளையும் பார்க்க..

“இந்த மாதிரி நானும் என் புருசன் கூட அன்னிியோன்யமாக இருக்க வேண்டும்..” என்று  எண்ண அடுத்த நொடி மகிழன் கண் முன்னே வந்து குறும்பாக சிரித்தான்...

உடனே அதுவரை  மட்டு பட்டிருந்த அவள் கோபம் மீண்டும் பொங்கி எழ ஆரம்பித்தது..உடனே எழுந்து  கை கழுவியவள் வேகமாக தன் அறைக்கு சென்று விட்டாள்..

படுக்கையில் விழுந்தவள் உள்ளே மீண்டும் பொங்க ஆரம்பிக்க  தன் ஆத்திரத்தையெல்லாம் யாரிடமாவது கொட்ட வேண்டும் போல இருந்தது..

தன் அலைபேசியை எடுத்து அதில் மந்தி என்ற பெயரை செர்ச் பண்ணி மது எண்ணிற்கு  அழைக்க போக, அடுத்த நொடி ஏனோ  தயக்கமாக இருந்தது

“என்னவென்று  சொல்வது அவளிடம்? ஒருத்தன் என் இடுப்பை புடிச்சான்.. அப்புறம் பார்த்தால் ஐ லவ் யூ சொல்றான்.. பொண்டாங்கிறான் என்றா?

அவ்வளவு தான்..  அவ என்னை ஓட்டியே காலி பண்ணிடுவா.. பத்தாதக்கு அப்பாகிட்ட சொல்லி நேரா அவனையே மாப்பிள்ளையா பார்க்க சொன்னாலும் சொல்லிடுவா...

இவரும் உடனே பையை தூக்கிட்டு கிளம்பிடுவார்...

இல்லை.. இதை அவ கிட்ட சொல்ல கூடாது.. நாமலே  அவனை ஹேண்டில் பண்ண வேண்டியது தான்...என்ன செய்யலாம்? “ என்று  தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தாள் சந்தியா...

அதே நேரம்

“ஹாய் பொண்டாட்டி.. சாப்டியா? “ என்று வாட்ஸ்அப் மெசேஜ் வந்தது புது எண்ணில் இருந்து...

மகிழன் எண்ணை  அவள் சேவ் பண்ணி வைத்திருக்கவில்லை.. இதுவரை அவனுடன் உரையாட அவசியம் இல்லை என்பதால் அவன் எண் அவளுடைய கான்டாக்ட் ல் இல்லை..

புது எண்ணாக இருந்தாலும் அது யாரென்று தெரிந்து விட மீண்டும் உள்ளுக்குள் கொதிக்க ஆரம்பித்தாள் சந்தியா..

ன்று மாலை தன் காதலை தன்னவளிடம் சொல்லி விட்டவன் அவள் அவனை திட்டிவிட்டு வேகமாக வெளியேறி சென்றாலும் அதை கண்டு கொள்ளாமல்  சிரித்து கொண்டே தன் கார்க்கு வந்தவன் அதை எடுத்து வீட்டிற்கு கிளம்பினான் மகிழன்..

கைகள் ஸ்டியரிங் ஐ பிடித்திருந்தாலும் கால்கள் ஆக்ஸிலேட்டரையும் பிரேக் ஐயும் மிதித்து கொண்டிருந்தாலும் அவன் மனம் சற்றுமுன் நிகழ்ந்த அந்த நிகழ்ச்சியையே அசை போட்டு கொண்டிருந்தது...

“ஒரு வேளை அவசரபட்டுட்டமோ? இன்னும் கொஞ்ச நாள் அவளுடன் பழகி அதற்கு பிறகு தன் காதலை சொல்லி இருக்க வேண்டுமோ ?

நானே இப்படி பட்டுனு போட்டு உடைப்பேனு எதிர்பார்க்கலை.. அந்த நேரத்தில் அவளை சீண்ட என ஆரம்பித்தது  அப்படியே மனதில் இருப்பது வெளியில்  வந்து விட்டது..

வாட் டு டூ? எனிவே என்னைக்கு இருந்தாலும் ஒரு நாள் சொல்லித் தான் ஆகணும்.. அது இன்னைக்கே ஆய்டுச்சு..” என்று எண்ணி சிரித்து கொண்டான்..

“ஆனால் மகிழா... நீ காதலை சொன்ன விதம் தான் சகிக்கலை..  எத்தனை ரொமான்ஸ் சீன் பார்த்திருப்ப.. அவன் அவன் எப்படி எல்லாம் உருகி தன் காதலை புரபோஸ் பண்றானுஙக..

நீ என்னடான்னா பட்டுனு ஐ லவ் யூ னு சொல்லிட்ட.. ஒரு ரொமாண்டிக் ஏ  இல்லாமல் போச்சு.. அதுவும் மாடிப்படியில வச்சா உன் காதலை சொல்லுவ மடையா?

அந்த புள்ள பாவம் பயந்து போய் பேயை பார்த்த மாதிரி அரண்டு போச்சு.. அதான் உன்னை திட்டிட்டு போய்டுச்சு.. “ என்று  முறைத்தது மனஸ்..

“ஹீ ஹீ ஹீ அதான் சொன்னேனே நண்பா.. நானே இதை ப்ளான் பண்ணலைனு.. ஏதோ ஒரு வேகத்துல உள்ள இருக்கறது வெளில வந்திடுச்சு.. என்னை அறியாமலயே இப்படி சொதப்பிடுச்சு....“ என்றான் பாவமாக..

“சரி சரி.. ரொம்ப ஃபீல் பண்ணாத.. உன் மூஞ்சை பார்க்க சகிக்கலை.. எப்பவும் கெத்தா இருக்கணும்.. சரி விடு அந்த புள்ளைய எப்படி வழிக்கு கொண்டு வர்ரது யோசிக்கலாம்.. “ என்று  தன் நண்பனுக்கு ஆறுதல் சொல்லியது அவன் மனஸ்..

அவனும் சிரித்து கொண்டே தன் காரில் இருந்த எப்.எம் ஐ ஆன் பண்ண.

ரௌடி பேபி.. சாங் ஓடி கொண்டிருந்தது..

ஹே என் கோலி சோடாவே

என் கறி  குழம்பே

உன் குட்டி பப்பி  நான்

டேக் மீ டேக் மீ...

 

ஹே என் சிலுக்கு சட்ட

நீ வெயிட்டு கட்ட..

லவ்வு சொட்ட சொட்ட

டாக் மீ டாக் மீ

 

மை  டியர் மச்சான் நீ மனசு வச்சா...

நம்ம ஒரசிக்கலாம் நெஞ்சு ஜிகு ஜிகு ஜா

 

மை  டியர் ராணி என் ட்ரீம்ல  வா நீ

நம்ம ஒண்ணா சேர  பையர் பத்திகிருச்சா...

 

ரா நம்ம பீச்சு பக்கம் போத்தாம்

ஒரு டப்பாங்குத்து வேஷ்த்தாம்

நீ என்னுடைய ரவுடி பேபி

 

ரா யூ ஆர் மை ஒன்லி கேர்ள் பிரண்டு..

ஐ வில் கிவ் யூ பூச்செண்டு.

வி வில் மேக் அஸ் ந்யூ ட்ரென்டு பேபி....

 

என அந்த பாடலுக்கு தகுந்த மாதிரி உல்லாசமாக விசில் அடித்த  படியே அந்த ஸ்டியரிங் ல் தாளமிட்டவாறு உற்சாகமாக காரை ஓட்டி கொண்டிருந்தான் மகிழன்..

கூடவே அந்த பாடலின் நாயகி கெட்டப்புக்கு சந்தியாவை கற்பனை பண்ணி பார்த்தவனுக்கு அது அவளுக்கு பக்கவாக செட் ஆனது...

தன்னை மாரி ஸ்டைலில் எண்ணி பார்க்க, அது சரியாக பொருந்தவில்லை என்றாலும் அட்ஜஸ்ட் பண்ணி அந்த பாடலை மனதில் அவர்கள் இருவரையும் வைத்து ஓட்டி பார்க்க, படு உற்சாகமாக உணர்ந்தான்... 

வீட்டை அடைந்ததும் காரை அதன் ஷெட்டில் விட்டு விட்டு அதே உற்சாகத்துடன் துள்ளலுடன் கையில் கார் சாவியை சுழற்றிய படி வீட்டிற்கு   உள்ளே வந்தவன் எதிரில் வந்த மது கையில்  இருந்த நித்திலா குட்டியை தூக்கி தலைக்கு மேல சுத்தினான் சிரித்தவாறு..

அந்த குட்டியும் சந்தோஷமாக கிலுக்கி சிரித்தாள்..

அதை கண்ட சிவகாமி பதறி போய்

“டேய் டேய்..டேய்..  புள்ளைய இப்படி தலைக்கு மேல தூக்க கூடாது டா.. அவ இன்னும் கொஞ்சம் வளரணும்.. அவளுக்கு ஏதாவது  ஆகிட போகுது.. “என்று  அவன் அருகில் ஓடி வந்தார்..

“அதெல்லாம் என் பிரின்ஸஸ்க்கு ஒன்னும் ஆகாது சிவகாமி தேவி... அவ யார் புள்ள..?  தி கிரேட் மிஸ்டர்  என்கவுண்டர் நிகிலன் ஐ.பி.எஸ் பொண்ணாக்கும்.” என்று  அவர் கன்னத்தை பிடித்து செல்லமாக கிள்ளி அவளை அவர் கையில் கொடுத்து விட்டு துள்ளலுடன் மாடி ஏறி சென்றான்..

அதை கண்ட சிவகாமி ஆச்சர்யமாகி,

“என்னாச்சு மது இவனுக்கு? இரண்டு நாளாவே ஆள் சரியில்லையே... “ என்றார் யோசனையுடன் மதுவை பார்த்து..

“ஹ்ம்ம்ம் எனக்கும் அதே சந்தேகம் தான் அத்தை.. மகி பழைய மாதிரி இல்லை.. அப்பப்ப தானா சிரிக்கிறார்.. அப்பப்ப வெட்கபட்டு  தலையை பின்னால் தடவிக்கிறார்..

கேட்டால் ஒன்னும் இல்லைனு மழுப்பிடறார்..எனக்கு என்னவோ யார்கிட்டயோ கமிட் ஆய்ட்டார்னு தோணுது   “ என்றாள் மதுவும் யோசனையாக

“ஆங்.. கமிட் ஆவறதா? அப்படீனா? “என்றார் சிவகாமி புரியாமல்..

“ஹீ ஹீ ஹீ .. நமக்கு வேலை வைக்காமல் உங்க மகனே  சின்ன மருமகளை கண்டு புடிச்சிட்டார் னு அர்த்தம்..அப்ப சீக்கிரம் உங்க கூட சண்டை போட வாயாடி மருமக வரப் போறானு அர்த்தம்.. பி ரெடி  என் செல்ல மாமியாரே .. “ என்று  அவர் கன்னத்தை பிடித்து செல்லமாக  கிள்ளி சிரித்தாள் மது..

“ஹ்ம்ம்ம் சீக்கிரம் அப்படி எவளையாவது கூட்டிகிட்டு வந்தா சந்தோஷம் தான்.. எனக்கும் உன் மூஞ்சியவே பார்த்து பார்த்து போரடிக்குது.. “ என்று கண்ணடித்து சிரித்தார் சிவகாமி..

“அத்த... “ என்று மது செல்லமாக சிணுங்க, அதே நேரம் உள்ளே வந்திருந்த நிகிலன் தன் மனைவியின் செல்ல சிணுங்களை ரசித்தவாறு அப்படியே நின்று கொண்டான்..

எதேச்சையாக திரும்பிய மது காதலுடன் தன்னை இமைக்காமல் பார்த்து கொண்டிருக்கும் தன் கணவனை கண்டதும் கன்னங்கள் செம்மையுற தன் உதட்டை கடித்து கொண்டு தரையை பார்த்தாள்..

அதுவரை  வாயடித்த தன் மருமகள் திடீர் என்று அமைதியாகி விட

“என்னாச்சு டா மது குட்டி..? “ என்றவர் தன் மருமகள் முகத்தை  காண அவளோ நெளிந்து கொண்டு நிக்க, தானாக அவர் பார்வை வாயில் பக்கம் சென்றது..

தன் அன்னையை கண்டதும் தன்னை சமாளித்து கொண்டவன் ஒரு அசட்டு சிரிப்பை சிரித்தவாறு உள்ளே வந்தான் நிகிலன்..

“ஓ.. இதுதான் என் மருமக வாய அடைக்கிற பூட்டா... ? “ என்று சிரித்தவர்

“வாடா பெரியவா.. ஏன் இன்னைக்கு இவ்வளவு நேரம்?  “ என்று  விசாரிக்க அதற்குள் சிரித்தவாறு மது சமையல்  அறைக்குள் புகுந்து கொண்டாள்..

தன் மனைவியையே கண்களால்  அள்ளி பருகியவாறு தன் அன்னையின்  அருகில் வர அவனிடம் தாவிய தன் மகளை அள்ளி கொஞ்சி கொண்டே

“கொஞ்சம் வேலை மா.. அதான் லேட் ஆய்டுச்சு.. “ என்றவாறு  தன் மகளை கொஞ்ச ஆரம்பித்தான்..

தன் அறைக்கு சென்ற மகிழனும் ரெப்ரெஸ் ஆகி இரவு உடைக்கு மாறி கீழிறங்கி வர, அதற்குள் நிகிலனும்  ரெப்ரெஸ் ஆகி இரவு உணவுக்காக மேஜையில் அமர்ந்து இருந்தனர்...

மகிழன் நேராக அங்கு செல்ல, அவனை பிடித்து கொண்டனர் சிவகாமியும் மதுவும்...கூடவே அகிலாவும் சேர்ந்து கொள்ள, கலகலப்பாக சென்றது அந்த உணவு நேரம்..

எப்படியோ எல்லாரையும் சமாளித்தவன் அவசரமாக இரவு உணவை முடித்து வழக்கமாக தன் குடும்பத்தாருடன் அமர்ந்து அரட்டை அடித்து கொண்டிருக்காமல் வேலை இருப்பதாக சொல்லி தன் அறைக்கு வந்து விட்டான்...

அவன் மாடிக்கு செல்வதையே பார்த்த மற்றவர்கள் கண்ணால் ஜாடை சொல்லி சிரித்து கொண்டனர்...

ன் அறைக்கு வந்த மகிழன் படுக்கையில் விழ, அன்றைய நாளை மனதில் ஓட்டி பார்த்தான்..

அதில் ஹைலைட் ஆக மாலை நிகழ்வு தான் கண் முன்னே வந்தது..

அவன் தன்னவளிடம் காதலை சொல்லிய தருணம் நினைவு வர, உடனேயே அவளை பார்க்க வேண்டும் போல இருந்தது...

உடனே  தன் அலைபேசியை எடுத்தவன் அதில் இருந்த  அவர்கள் இருவரும் ஜோடியாக இருந்த  அந்த ஷோ புகைப்படத்தை பார்த்தான்..

பின் சந்தியாவின் ஸ்கைப் புரபைல் போட்டோவை தன் அலைபேசியில் மாற்றி வைத்திருக்க அதை திறந்தவன் அதை பெரிது படுத்தி  பார்த்தான்..

அதிகாலை பனியில் மலர்ந்து சிரிக்கும் ரோஜாவை போல இருந்த அவள் முகத்தையே ஆசையுடன் பார்த்திருந்தான்..

பின் அவளுடைய  குண்டு கன்னங்களை தன் கைகளால் வருடினான்... அப்படியே அவன் கை கீழிறங்க, அடுத்ததாக அவளின் திரண்ட இதழ்க்கு சென்று நின்றது அவன் கை..

சிவந்த ஆரஞ்சு சுளை போல திரண்டிருந்த அவளுடைய இதழை தன் கையால் வருட உள்ளுக்குள் அப்படி ஒரு பரவசம்..

நிழல் படத்தில் வருடும் பொழுதே இப்படி சிலிர்க்குதே.. இன்னும்  அவள் நேரில் இருந்தால் எப்படி இருக்கும் ? என எண்ணியவன் அவன் மார்பில் அவள் தஞ்சம் புகுந்திருக்க, அவள் செவ்விதைழை வருடுவதை போல கற்பனை பண்ணியவனுக்கு உடல் எல்லாம் மின்சாரம் பாய்ந்ததை போல இருந்தது...

அவனை நினைத்து அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது.

“இத்தனை நாட்களாக எந்த பெண்ணிடமும் மயங்காத நான் இவளிடம் மட்டும் எப்படி இப்படி சரணடைந்தேன்? “என்று  யோசிக்க விடை தான் கிடைக்க வில்லை அவனுக்கு...

“இது தான் காதலின் மகிமையோ?.. எப்படிபட்டவனையும் அடித்து சாய்த்து விடுகிறது இந்த காதல்.. “ என எண்ணி சிரித்து கொண்டான்.. 

அந்த அலைபேசியையே ஆசையுடன் வருடியவன் அவள் குண்டு கன்னத்தில் தன் இதழை பதித்தான் அந்த அலைபேசி வழியாக..

அதே நேரம் சந்தியாவும் அலைபேசியை கையில் வைத்து கொண்டு தன் படுக்கையில் படுத்தவாறு மது க்கு போன் பண்ணலாமா ?  வேண்டாமா ?  என்று  யோசித்து கொண்டிருக்க, திடீரென்று யாரோ அவள் கன்னத்தில் முத்த மிட்டதை போல சிலிர்த்தது..

அதில் திடுக்கிட்டவள் அவசரமாக சுற்றிலும் தேடி  பார்க்க, யாரும் அவள் அருகில் இல்லை..

“சே என்ன இது? ஏன் எனக்கு அப்படி தோன்றியது? நேரில் முத்தமிட்டதை  போல அல்லவா இருந்தது? “ என்று சிறிது நேரம் யோசித்தாள்

“ஹா ஹா ஹா.. எல்லாம் உன் மன பிராந்தி சந்தி.. நீ ரொம்பவும் கெட்டு போய்ட்ட.. சீக்கிரம் உன் அப்பா கிட்ட சொல்லி இந்த மாப்பிள்ளை தேடற படலத்தை முடுக்கி விட சொல்லணும்..

காலா காலத்துல உனக்கு ஒரு கால் கட்டு  போட்டாதான் இப்படி தத்து பித்துனு யோசிக்காம இருப்ப.. “என்று  முறைத்தது அவள் மனஸ்..

அவளும் அதை  முறைத்து கொண்டே தன் அலைபேசியை நோண்டி கொண்டிருதாள்..

மகிழனோ அவளுக்கு முத்தமிட்டதில் கிறங்கியவன் அவளை சீண்டி பார்க்க ஆசை வந்தது..

அதனால் ராட்சசி.. என்று சேவ் பண்ணி வைத்திருந்த  அவள்  எண்ணை தேடி “ஹாய் பொண்டாட்டி..  சாப்டியா? “ என்று மெசேஜ் அனுப்பினான்..

அதை கண்டதும் அவன் எண்ணை சேவ் பண்ணி வைக்க வில்லை என்றாலும்  மெசேஜ் அனுப்பியது மகிழன் தான் என தெரிந்து விட,  மீண்டும் பொங்கி எழுந்தாள் சந்தியா..

“ஹலோ மங்கி... நான் ஒன்னும் உன் பொண்டாட்டி இல்லை.. இன்னொரு தரம் இப்படி சொன்ன, இல்ல  டைப் பண்ணின, சொல்றதுக்கு வாயும் டைப் பண்ண கையும் இருக்காது ஜாக்கிரதை.. “ என்று பதில் அனுப்பி கூடவே முகம் சிவந்த அந்த டெவில் இமோஜியையும் அனுப்பி வைத்தாள் சந்தியா..

“ஹா ஹா ஹா யூ ஆர் லுக்கிங் சோ க்யூட் பொண்டாட்டி...” என்று கண் சிமிட்டும் இமோஜியை அனுப்ப

“டேய் கொரில்லா... உனக்கு ஒரு தரம் சொன்னா புரியாது.. வேற எவ கிட்டயாவது  வச்சுக்க உன் ஆட்டத்தையெல்லாம்.. உன் பேச்சுக்கெல்லாம் மயங்க மாட்டா இந்த சந்தியா...

இன்னொரு தரம் இப்படி தத்து பித்துனு ஏதாவது  உளறின அடுத்து என் கை பேசாது.. செருப்பு தான் பேசும்... “ என்று பொரிந்தவள் மீண்டும் முறைக்கும்  பொம்மையை அனுப்பி வைத்தாள்..

“ஹீ ஹீ ஹீ .பொண்டாட்டி கையால செருப்படி வாங்க கொடுத்து வச்சிருக்கணும் டார்லிங்.. நீ எதுல அடிச்சாலும் ஓகே தான்.. ஆனால் எதுனாலும் நாலு சுவத்துக்குள்ள செஞ்சுக்கோ.. யாராவது  பார்த்தால் என் இமேஜ் டேமேஜ் ஆய்டும்.... “ என்று  மீண்டும் கண் சிமிட்டினான் மகிழன்..

“ஐயயோ.. டேய் மகிழா... நீயா இது? எப்படி இருந்தவன் எப்படி டா இப்படி  மாறின? செருப்படி வாங்க கூட ரெடி ங்கிற..

டேய் கொஞ்சம் யோசிச்சு பார்.. எப்படி கெத்தா ஸ்டைலா காலேஜ் லயும் சரி ஆபிஸ்லயும் சரி ஒரு ரோமியோவா இல்ல மஜ்னுவா சுத்திகிட்டு இருந்த..

உன்  காலடியில் விழ அத்தனை புள்ளைங்க ரெடியா இருக்காளுங்க.. அவங்களை எல்லாம் விட்டுட்டு போயும் போயும் இந்த ராட்சசி கிட்ட கவுந்திட்டியே...

அவ என்னடான்ன என்னவோ அவதான் பெரிய ரதி மாதிரி, கிளியோபாட்ரா மாதிரி பிகு பண்ணறா.. பத்தாததுக்கு செருப்பால அடிப்பேன் ங்கிறா.. இதெல்லாம் தேவையா உனக்கு..

டேய். நான் சொன்னா கேள்.. இந்த புள்ள இல்ல ராட்சசி  வேண்டாம் உனக்கு.. உனக்கு ஏத்த மாதிரி உன் கண் பார்வைக்காக  காத்து கொண்டிருக்கிற ஒருத்திய பார்த்து ஓகே பண்ணிடு..

உன் வாழ்க்கையும் சொர்க்கமாகும்.. இந்த ராட்சசி வேண்டாம்.. வேண்டவே வேண்டாம்.. “ என அலறியது அவன் மனஸ்..

“ஹீ ஹீ ஹீ டேய் நண்பா.... நான் முன்ன சொன்னது தான் இப்பயும்.. இந்த மகிழன் அப்ப ஒரு பேச்சு இப்ப ஒரு பேச்சு கிடையாது.. எப்பவும் ஒரே பேச்சுதான்...இந்த ஜென்மத்துல இந்த ராட்சசி தான் என் பொண்டாட்டி..

ஏனா நான் ஒரு தரம் முடிவு பண்ணிட்டா... “ என்று  இழுக்க

“டேய்...டேய்.. டேய்.. போதும் நிறுத்து.. இதே டயலாக்கை கேட்டு கேட்டு காதுல இரத்தம் வருது...நீயெல்லாம் சொன்னா திருந்த மாட்ட.. பட்டாதான் திருந்த போற.. எப்படியோ அந்த புள்ள கிட்ட செருப்படி வாங்கறது கன்பார்ம்.. அனுபவி..ஆல் தி பெஸ்ட்..  “ என்று  தலையில் அடித்து கொண்டது மனஸ்..

அவனும் சிரித்து கொண்டே தன் வாட்ஸ்அப் ஐ பார்க்க, அங்கு சந்தியோவா உலகத்தில இல்லாத எல்லா கெட்ட வார்த்தைகளை எல்லாம் சேர்த்து திட்டி கொண்டிருந்தாள்...

அதை கண்டவன் சிரித்தவாறு

“ஐ லவ் யூ பொண்டாட்டி...  உம்மா...” என்று  உதடு குவித்து முத்தமிடும் இமோஜியை அனுப்ப, அதற்கு அவள் பல நூறு டெவில் பொம்மையும் செருப்பு, விளக்குமாறு  என தேடி தேடி இமோஜியை அனுப்பி விட்டு அவன் எண்ணை உடனே ப்ளாக் பண்ணினாள்..

அவனும் சிரித்து கொண்டே மீண்டும் ஏதோ டைப் பண்ண அவன் எண் ப்ளாக் ஆகி இருப்பது புரிந்தது..

“ராட்சசி...அதுக்குள்ள என் நம்பரை ப்ளாக் பண்ணிட்டாளே... இப்படி படுத்தறாளே.. இவளை வழிக்கு கொண்டு வருவது கொஞ்சம் கஷ்டம் தான் போல... ஹ்ம்ம் பார்க்கலாம்.. எவ்வளவு தூரம் முறுக்கி கிட்டு போவானு... “ என்று  சிரித்து கொண்டவன்

அருகில் இருந்த தலையணையை எடுத்து தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டவன்

“ஐ லவ் யூ பேபி... ஐ லவ் யூ வாயாடி.. ஐ லவ் யூ கேடி.. ஐ லவ் யூ மை ஸ்வீட் அன்ட் அழகான ராட்சசி....” என்று உருகியவன் அந்த தலையணைக்கு முத்த மழை பொழிந்தான்..

பின் மெல்ல அந்த  தலையணையை அணைத்தவாறே உதட்டில் மலர்ந்த புன்னகையுடன்  உறங்கி போனான் மகிழன்...!

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!