நிலவே என்னிடம் நெருங்காதே!!-13

 


அத்தியாயம்-13

முதினி அந்த ஜமீனின் நீண்ட வருடங்களுக்கு பிறகு பிறந்த பெண் வாரிசு..

தேவநாதன் மற்றும் அவர் மகன் நெடுமாறன் மற்றும் அதற்கு முந்தைய தலைமுறையில் எல்லாருமே ஒத்த பையனோடு நின்று விட பெண் பிள்ளைகளின் சத்தம் இல்லாமல் இருந்தது அந்த ஜமீன்..

அதை மாற்றும் விதமாக வந்து பிறந்தவள் அமுதினி..

நீண்ட நாட்களுக்கு பிறகு பெண் குழந்தையின் வருகை அந்த ஜமீனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.... அதுவும் தன் மனைவி மணியம்மையை  உரித்து வைத்து பிறந்திருக்க தேவநாதனுக்கு தன் பேத்தியை கண்டதும் பெரும் மகிழ்ச்சி..

தன் பேரன் பிறந்த பொழுது எப்படி கொண்டாடினாரோ அதே போலவே பேத்தியின் வருகையையும் கொண்டாடி மகிழ்ந்தார் தேவநாதன் .. 

எல்லாருக்கும் புது ஆடைகள் வாங்கி கொடுத்தும் அன்று மூன்று வேளையும் அன்னதானம் செய்தும்  தன் மகிழ்ச்சியை வெளிகாட்டினார்..

அதிரதனுக்கும் தன் தங்கையை கண்டதும் பயங்கர சந்தோஷமாகி விட்டது..குட்டி ரோஜாவாய் கண் சிமிட்டி சிரிக்கும் தன் தங்கையை கண்டதும் அவனுக்கு ரொம்பவும் குஷியாகி போனது...

அந்த பட்டு ரோஜாவை தொட்டு பார்ப்பதும் தூக்கி வைத்து கொஞ்சுவதும் என்று அவளையே சுத்தி வர ஆரம்பித்தான் அதிரதன்

அமுதினி உருவத்தில் அவள் பாட்டியை போல இருந்தாலும் குணத்தில் அவள் தந்தை நெடுமாறனை போல பயந்த சுபாவமாக இருந்தாள்..

யாரிடமும் அவ்வளவு எளிதாக சென்றுவிட மாட்டாள்.. கூடவே அவ்வளவாக கலகலவென்று பேசுவதும் இல்லை.. ஆனால் அவளுக்கு நேர்மாறாக அவள் வாயையும் சேர்த்து வைத்து பேசினாள் அவளுக்கு பிறகு பிறந்த அவள் தங்கை யாழினி...

அமுதினிக்கு படிப்பில் அவ்வளவாக ஆர்வம் இல்லை... பன்னிரண்டாம் வகுப்பு முடிந்ததும் கல்லூரிக்கு செல்ல மாட்டேன் என்று அடம் பிடிக்க, தேவநாதன் தான் அவளை கட்டாயபடுத்தி கோயம்புத்தூரில் இருந்த மகளிர் கல்லூரியில் சேர்த்துவிட்டார்..

அவள் வெளி உலகத்தையும் தெரிந்து கொள்ளவேண்டும்.. நாளைக்கு ஒரு குடும்பத்தையே தாங்க போகிறவள் .. அவளுக்கும் வெளி உலகமும் மற்றவர்களுடன் எப்படி பழகுவது என்று தெரிந்து கொள்ள வேண்டும் எடுத்து கூறி அவளை கல்லூரியில் சேர்த்திருந்தார்...

முதலில் கொஞ்சம் பயத்துடன் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்த அமுதினிக்கு அங்கு எல்லாமே அவள் வயதை ஒத்த பெண்கள் மட்டுமே இருப்பதை காணவும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.. அதுவும் எல்லாருமே கலகலவென்று சிரித்து பேசி கிண்டல் அடித்து மகிழ்வதை கண்டவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது..

அந்த ஜமீன் கோட்டைக்குள்ளயே இருந்துவிட்டவளுக்கு முதல் முதலாக வெளி உலகத்தை அதுவும் கண்களில் கனவுகளுடன் வண்ண வண்ண விதவிதமான ஆடைகளில் பட்டாம்பூச்சிகளாய் சுற்றி திரியும் அத்தனை பெண்களை பார்த்ததும் அவளுக்கும் கொஞ்சம் தைர்யம் வந்தது..

அவளும் மற்றவர்களுடன் கலந்து பேசி சிரிக்க ஆரம்பித்தாள்.. பெரிய இடத்து பெண் என்ற பந்தா இல்லாமல் இயல்பாக பழகும் அமுதியை மற்றவர்களுக்கும் பிடித்துவிட விரைவிலயே அவளுக்கும் நட்பு வட்டம் உருவாகியது...

காலை மாலை என இருவேளையும் அவளை  கல்லூரியில் விட்டு செல்லவும் கல்லூரி முடிந்ததும் அழைத்து செல்ல என்று தனியாக கார் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் தேவநாதன்..

அதனால் எந்த ஒரு அசௌகரியமும் இல்லாமல் கல்லூரி சென்று வந்தாள் அமுதினி.. தன் தோழிகளிடமும் உற்சாகமாக பேச ஆரம்பித்தவளின் முகத்தில் எப்பொழுதும் ஒரு புன்னகையும் நடையில் ஒரு துள்ளலும் வந்து சேர்ந்தது..

அந்த பருவத்திற்கே உரித்தான் துள்ளலுடன் தன் பேத்தி உலா வருவதை கண்ட தேவநாதனுக்கு மகிழ்ச்சியே.. எப்படியோ தன் பேத்தி வெளி உலகத்தையும் பார்க்க ஆரம்பித்து விட்டாள்.. மற்றவர்களுடன் சிரித்து பேச ஆரம்பித்து விட்டாள்..

தான் கட்டாயபடுத்தி அவளை கல்லூரிக்கு அனுப்பி வைத்தது நல்ல முடிவுதான் என்று மீசையை முறுக்கிவிட்டு கொண்டார்..

ஆனால் வெளி உலகத்தை பார்க்க சொல்லி அனுப்பி வைத்த பட்டாம்பூச்சிக்கு வெளி உலகில் இருக்கும் ஆபத்துக்களை சொல்ல மறந்து விட்டார் அந்த பெரியவர்..

அவருமே அதை எல்லாம் உணர்ந்து இருக்கவில்லை... அவர் காலத்தை போலவே இப்பொழுதும் எல்லாரும் நல்லவர்களாக இருப்பார்கள் என்று எண்ணி விட்டாரோ?

அதனால் தான் பின்னாலில் பெரும் சிக்கல் வந்து சேர்ந்தது...

முதினி கல்லூரி படிப்பில் மூன்றாம் வருடத்தில் இருந்தாள்.. அதிரதனும் அப்பொழுது தன் மேல்படிப்பை முடித்து விட்டு தாத்தாவின் தொழிலை பார்த்து கொண்டிருந்தான்...

மூன்றாம் வருடம் நடுவில் வரும்  செமஸ்டர் கடைசி தேர்வு எழுதிய அமுதினியின் தோழிகள்  அவர்கள் படித்து களைத்து விட்டதை கொண்டாட, திரைப்படத்திற்கு செல்லலாம் என்று திட்டமிட்டனர்...

இதுவரை அமுதினி அப்படி எதுவும் அவர்களுடன் வெளியில் சென்றதில்லை.. முதல் இரண்டு வருடங்கள் அவள் தோழிகள்  அவளை அழைத்திருந்தாலும் வெளியில் செல்ல பயந்து கொண்டு அவள் மறுத்துவிட்டாள்..

ஆனால் இது கடைசி வருடம்.. இதை விட்டால் இந்த மாதிரி ஜாலியாக சுத்த முடியாது என அவளை கட்டாயபடுத்தி அழைத்து செனறனர்..

அவளுக்கும் தன் வீட்டில் சொல்லாமல் செல்வது மனதுக்கு உறுத்தலாக இருந்தது.. ஆனால் அவள் தோழிகள் ஏதேதோ சொல்லி அவள் மனதை மாற்றி திரைப்படத்திற்கு அழைத்து சென்றனர்..

அவளுக்கும் அதை எல்லாம் அனுபவிக்க வேண்டும் போல இருந்தது...ஆனாலும் தாத்தாவிடம் சொல்லாமல் செல்வது ஏதோ மனதுக்கு உறுத்தலாக இருந்தது..  அதனால் அரை மனதுடன் கிளம்பி சென்றாள்..

ஆனால் தியேட்டருக்கு சென்ற பிறகுதான் வாழ்க்கையில் இதுவரை எவ்வளவு மிஸ் பண்ணி இருக்கிறோம் என்று புரிந்தது அவளுக்கு.. அவர்கள் கேங் ஐ போலவே பல பெண்கள் கும்பல் கும்பலாக அந்த திரை அரங்கில் குழுமி இருந்தனர்..

அனைவருக்கும் அன்று கடைசி தேர்வு என்பதால் எல்லாருமே அந்த திரை அரங்கை மொய்த்தனர்.. திரைப்படம் ஆரம்பித்ததும் விசில் சத்தமும் கலர் கலர் பேப்பர்களும் ராக்கெட்டுகளும் பறக்க பல பெண்கள் எழுந்து டான்ஸ் ஆட, அந்த அரங்கமே அதிர்ந்து கொண்டிருந்தது..

அதை எல்லாம் கண்ட அமுதினிக்கு ஆச்சர்யமாக இருந்தது.. அவளும் திரைப்படத்திற்கு வந்திருக்கிறாள் தான்.. அவள்  குடும்பத்துடனும் இல்லை என்றால் சில நேரம் அவள் தங்கை,  சித்தி மகள், மாமன் மகள் என அவள் வீட்டு பெண்களுடன் அதிரதன் அழைத்து வந்திருக்கிறான்..

அப்பொழுதெல்லாம் இந்த தியேட்டர் ரொம்பவும் அமைதியாக இருக்கும்.. சும்மா ஏதாவது கதை அடித்து கொண்டே அந்த படத்தை பார்த்துவிட்டு இடைவேளையில் அவள் அண்ணன் வாங்கி தரும் பாப்கார்ன், பஞ்சுமிட்டாய் என்று சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாகவே சென்றிருக்கிறாள்..

ஆனால் இந்த மாதிரி என்ஜாய் பண்ணியதில்லை என்று உறைத்தது..இதனால் தான் பெண்கள் கல்லூரியை கட் அடித்துவிட்டு இப்படி அடிக்கடி வந்து ஆட்டம் போடுகிறார்களோ என்று  வியந்தவாறு திரைப்படத்தை விட அங்கு ஆடும் பெண்களை ரசித்து கொண்டிருந்தாள் அமுதினி...

ஆனால் அவள் அறியாமல் அவளை இரண்டு கண்கள் ஆர்வத்துடன் ரசித்து கொண்டிருந்தன..

இந்த பெண்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தை எல்லாம் மிரட்சியுடனும் ஆச்சர்யத்துடனும் பார்த்து கொண்டிருந்த அவளின் மருட்சியான அந்த மான் விழிகளையே அடிக்கடி ரசித்தன அந்த கண்கள்...

எப்படியோ இடைவேளை வந்திருக்க, அமுதினி தோழிகள் அவளை சென்று அனைவருக்கும் ஸ்நாக்ஸ் வாங்கி வர சொன்னார்கள்..

அவள் முதன்முறை திரைப்படத்திற்கு வந்திருப்பதால் அவளுடைய ட்ரீட் என்று சொல்லி அவள் தலையில் கட்டிவிட, அவளுக்கோ உள்ளுக்குள் உதற ஆரம்பித்தது.

“நான் காசு கொடுத்து விடுகிறேன்.. நீங்களே போய் வாங்கி கொள்ளுங்கள்.. “ என்று கெஞ்ச அவள் தோழிகள் விடவில்லை...

“இப்படியே இருந்தால் எப்படி அம்மு...?  இதெல்லாமும் கத்துக்கோ..”  என்று சொல்லி மற்றொரு தோழியையும் அவள் உடன் அனுப்பி அவளை கட்டாயபடுத்தி அனுப்பி வைத்தனர்..

அவளும் வேற வழி இல்லாமல் எழுந்து சென்று  அவள் தோழிகள் கொடுத்த  லிஸ்ட் ல் இருந்த ஐட்டங்களை வாங்கி கொண்டிருந்தாள்..  மற்றொருத்தி அருகில் இருந்த அடுத்த கடையில் சில தின்பண்டங்களை வாங்கி கொண்டிருந்தாள்..  

அமுதினி தனக்கு வேண்டியதை கடைக்காரரிடம் சொல்லி விட்டு நின்று பேசி கொண்டிருக்க அவளை உரசியபடி வந்து நின்றான் ஒருவன்...

அவனும் ஏதோ வாங்க வந்திருக்கிறான் போல.. கடைக்காரரிடம் அவனுக்கு வேண்டியதை சொல்லி விட்டு திரும்பும் பொழுது வேண்டும் என்றே அமுதினியை இடித்தான்...

இதுவரை இந்த மாதிரி பொது இடங்களில் தனியாக சென்றதில்லை அவள்.. எங்கு சென்றாலும் கூட அதிரதன் இருப்பான்.. இல்லையென்றால் அவள் தாத்தா, அப்பா என்று யாராவது ஒருத்தர் கூட இருப்பார்கள்.. இந்த மாதிரி ஏதாவது வாங்கவேண்டும் என்றால் அவர்கள்தான் வாங்குவார்கள்..

அப்படி பழகியவள் திடீரென்று முதன் முதலாக வெளியில் வந்து கடையில் பயத்துடனே நின்று வாங்க, கூடவே இப்படி ஒருத்தன் வந்து அவள் மீது இடிக்கவும் திக் என்றது அவளுக்கு..

ஒரு வேளை அவன் தெரியாமல் எதுவும் இடித்திருப்பானோ என்று  எண்ணுகையிலயே அவள் அண்ணன் அதிரதன் சொல்லி கொடுத்திருந்த பாடம் நினைவு வந்தது...

அமுதினி,  யாழினி இருவருமே கொஞ்சம் பெரியவர்களாக வளர்ந்த பொழுது ஒருநாள் அதிரதன் அவர்கள் இருவரையும் கூப்பிட்டு வைத்து பெண்கள் வீட்டிலும் சரி வெளியிலும் சரி எப்படி பத்திரமாக இருக்கவேண்டும் என்று பெண்களின் பாதுகாப்பு பற்றி சொல்லி கொடுத்திருந்தான்..

அதுலயும் குட் டச், பேட் டச் பற்றி அவர்களுக்கு விளக்கி சொல்லி இருக்க, அவள் அருகில் நின்றிருந்தவன் இடித்ததில் வித்தியாசத்தை உணர முடிந்தது அவளால்..

அடுத்த நொடி அவளுக்குள் பயம் வந்து சூழ்ந்து கொள்ள, கண்கள் கலங்க ஆரம்பித்தன.. அவளுடன் வந்தவள்  இன்னும் அருகில் இருந்த ஐஸ்கிரீம் கடையில் ஐஸ்க்ரீம்  வாங்கி கொண்டிருக்க அமுதினி வாங்க வேண்டியதை அந்த  கடைக்காரர் இன்னும் எடுத்து கொண்டிருக்க, அடுத்து என்ன செய்வது என்று முழித்தாள்..

உடனே அவன் அருகில் இருந்து சற்று தள்ளி நின்று கொண்டாள் தலையை குனிந்த படி அவள் கண்ணில் வழியும் நீரை மறைக்க.

அவனும் அடுத்த முயற்சியாக அவன் பாக்கெட்டில் இருந்த அவனுடைய அலைபேசியை எடுக்கும் சாக்கில் கொஞ்சமாக அவள் பக்கம் நகர்ந்து கையை மடக்கி முழங்கையால் அவளின் அந்தரங்கமான பகுதியை இடிக்க வந்தான்..

நொடிப்பொழுதில் அவனின் செய்கையை கண்டு கொண்டவளுக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் மூளை வேலை நிறுத்தம் செய்துவிட, அதிர்ந்து உறைந்து போய் அசையாமல் அப்படியே நின்று விட, ஒரு நூல் அளவு இடைவெளியே அவன் முழங்கைக்கும் அவன் டார்கெட் பண்ணின பகுதிக்கும்..

அந்த நேரம்   எங்கிருந்தோ புயலென வந்தான் அவன்... அமுதினியை இடிக்க வந்தவன் முழங்கையை நொடியில் பிடித்து அப்படியே சுழற்ற, அவனோ வலியால் அலறினான்....

பின் தன் கையை மடக்கி இறுக்கி அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டவன்

“ஏன்டா பொறுக்கி ராஸ்கல்.. ஒரு பொண்ணு தனியா நின்னா இப்படித்தான் உன் வீரத்தை காண்பிப்பியா..?  எங்க இப்ப இடிடா பார்க்கலாம்..!  இப்ப எடுடா உன் போனை.. உன் கை எவ்வளவு நீளத்துக்கு வருதுனு நானும் பார்க்கறேன்..

பொறுக்கி ராஸ்கல்.. “ என்று திட்டி மீண்டும் அவனை ஓங்கி குத்த வர, அவனோ முதல் குத்திலயே மூக்கு உடைந்து ரத்தம் கொட்டி கொண்டிருக்க, அதற்குமேல் அடி தாங்க மாட்டாதவனாய்

“சார்.... சார்.... சார்.... விட்டுடுங்க சார்.. ஏதோ தெரியாமல் இடிச்சிட்டேன்.. “ என்று  முடிக்குமுன்னே  

“என்ன தெரியாம இடிச்சியா? நானும் நீ வந்ததில் இருந்து பார்த்துகிட்டே இருக்கேன்.. அவங்க உனக்கு பயந்துகிட்டு  நகர்ந்து நின்னாலும் விடாமல் இடிக்க வந்துட்டு தெரியாமல் இடிச்சியா...?

ராஸ்கல்.. இனிமேல் இப்படி தெரியாமல் இடிச்சேன்.. தெரிஞ்சு இடிச்சேன் னு எங்கயாவது வால் ஆட்டின தொலச்சிடுவேன்.. ஜாக்கிரதை “ என்று உறுமி கொத்தாக பற்றி இருந்து அவன் சட்டையை விட்டான் அந்த நெடியவன்..

அடுத்த நொடி அவனும் அமுதினியிடம் மன்னிப்பு கேட்டு விட்டு விட்டால் போதும் என்று அங்கிருந்து ஓடி விட்டான்..

அமுதினியோ இன்னும் பேயறைந்தவள் மாதிரி அதிர்ந்து போய் நின்று கொண்டிருந்தாள்..

“ஹலோ... ஹலோ மிஸ்.... “ என்று அவள் முன்னால் சொடக்கு போட்டான் அந்த நெடியவன்..

அதில் விழித்து கொண்டவள் மீண்டும் திருதிருவென்று முழிக்க

“என்ன?  சினிமா தியேட்டருக்கு பர்ஸ்ட் டைம் வந்திருக்கிங்களா? “ என்றான் ஊடுருவும் விழிகளில்..

அவளோ நாக்கு ஒட்டி கொள்ள என்ன சொல்வது என்று தெரியாமல் தலையை மட்டும் ஆமாம் என்று ஆட்டி வைத்தாள்..

“அதான் அந்த பொறுக்கி எந்த நோக்குல வந்தானு புரிஞ்சுக்க முடியல. பொண்ணுங்க எங்க போனாலும் விழிப்புணர்வுடன் இருக்கணும்.. யாராவது கொஞ்சம் வித்தியாசமாக நெருங்கி வந்தாலும் உடனே சுதாரிச்சுக்கணும்.. இனிமேல் பத்திரமா இருங்க....

அப்புறம் எதுக்கு அவனை பார்த்ததும் இப்படி பயந்து முழிக்கணும்..?  முதல் தரம் இடிச்சப்பவே அந்த பொறுக்கிய ஓங்கி கன்னத்துல அறைஞ்சிருக்க வேண்டியதுதான.. அதுக்கப்புறம் வாலை சுருட்டிகிட்டு ஓடியிருப்பான்..

நீங்க இப்படி திருவிழாவில் காணாமப்போன புள்ள மாதிரி முழிச்சதனாலதான் அவனுக்கு இன்னும் துணிச்சல் வந்திருக்கு.. இனிமேலாவது கவனமா இருங்க.. “ என்று  சொல்லி இரண்டே எட்டில் அந்த இடத்தை விட்டு மறைந்து சென்றான் அந்த நெடியவன்..

அமுதினிக்கோ தான் காண்பது கனவா என்று இருந்தது..

ஒரு நிமிடத்தில் எல்லாம் நடந்து முடிந்திருந்தது...

அவன் அந்த நெடியவன்  மட்டும் வராமல் இருந்திருந்தால் அந்த பொறுக்கி அசிங்கமா இடிச்சிருப்பான்... என்று  எண்ணும்பொழுதே அவள் உடல் நடுங்கியது.. கைகள் வெடவெடுக்க, அதற்குள் பக்கத்து கடையில் இருந்த அவள் தோழி இந்த பக்கம் சத்தம் கேட்டு வேகமக வந்துவிட,

“என்னாச்சு அம்மு? “ என்று கேட்க அவ்வளவுதான்

அதுவரை  அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்து வர, தன் தோழியை கட்டி கொண்டு ஓ வென்று அழுதாள் அமுதினி..

அருகில் இருந்தவர்கள் எல்லாரும் அவளையே பார்க்க, அந்த தோழிக்கு சங்கடமாக இருக்க, பதறியவள்

“ஹே.. அம்மு அழாத.. என்னாச்சு? எதுக்கு இப்படி அழுவற? “ என்று பதட்டமாக கேட்க இன்னும் அவளை கட்டிகொண்டு அழுதாள் அமுதினி..

ஒருவாறு அவளை சமாதானம் படுத்தி தியேட்டருக்குள் அழைத்து வந்தாள் அவள் தோழி.. இருக்கையில் அமர வைத்து அவள் அருகிலயே அமர்ந்து கொண்டு நடுங்கும் அவள் கைகளை கெட்டியாக பிடித்து கொண்டாள்...

திரைப்படம் ஆரம்பித்து இருக்க, மற்றவர்கள் எல்லாம் அந்த திரைப்படத்தை ரசித்து பார்க்க அமுதினிக்கு சற்று முன் நடந்த நிகழ்ச்சியே கண் முன்னே வந்து வந்து போனது...

கூடவே அந்த நெடியவனின் முகமும்..

யாரவன்? கிட்ட தட்ட அவள் அண்ணன் அதிரதனை போலவே இருந்தான்.. அவளுக்கு அண்ணன் தான் ஹீரோ.. அவன் நடை உடை ஸ்டைல் என்று எல்லாம் பார்க்க அவளுக்கு பெருமையாக இருக்கும்..

“அப்படி பட்ட ஹீரோ தன் அண்ணனைப் போலவே அவனும் இருக்கிறானே.. தனக்கு ஒரு ஆபத்து என்றதும் பதறி அந்த பொறுக்கி கிட்ட இருந்து என்னை காப்பாற்றிவிட்டானே? யார் அவன்? ஒரு நன்றி கூட சொல்லாமல் விட்டுவிட்டனே... மீண்டும் எப்பொழுது அவனை பார்ப்பது? “ என்று உள்ளுக்குள் தவித்து கொண்டு முன்னால் இருந்த ஸ்க்ரீனை பார்த்தாள் அமுதினி..

அன்று வீட்டிற்கு வந்தவள் இரவு படுக்கையில் விழுந்த பொழுது அவனின் ஞாபகமே..! அவன் தன் ஒரு கையாலயே அந்த பொறுக்கியை சுற்றி வளைத்ததும் அவனை குத்திய பொழுது தெரிந்த அவன் கையின் வலிமையும் திரும்ப திரும்ப கண் முன்னே வந்தது...


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!