அழகான ராட்சசியே!!-23

 




அத்தியாயம்-23

டுத்து வந்த  வாரம் படு பிஸியாக இருந்தது மகிழனுக்கு..

புது ப்ராஜெக்ட் ஆரம்பித்து விட, அதில் டெவ் டீம் ற்கு எல்லாம் விளக்கி அவர்கள் மண்டையில் தன் திட்டத்தை ஏத்தி அவர்கள்  கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து ஒவ்வொருவரையும் பார்ம்க்கு கொண்டு வர என நேரம் றெக்கை கட்டி பறந்தது..

தினமும் இரவு தாமதமாகத்தான் வீடு திரும்பி வந்தான் மகிழன்.. அந்த பிஸியில் அதற்கு பிறகு சந்தியாவிடம் எதுவும் வம்பிழுக்கவில்லை.. சந்தியாவுமே பிஸியாகி விட தற்காலிகமாக அந்த மங்கியை மறந்து தன் வேலையில் ஈடுபட்டாள்..

ஆனால் வழக்கம் போல வழியில் எங்காவது அவனை சந்திக்கும் பொழுதும் அவன் பெயர் தாங்கி வந்திருக்கும் இமெயிலை பார்க்கும் பொழுதும் கொஞ்சம் உள்ளே படபடப்பாக இருக்கும்..

ஆனால் உடனே அவனை முறைத்து விட்டு சென்று  விடுவாள்..

அவனுமே அவளை தனியாக பார்க்கும் வேளையில் மட்டும் உதடு குவித்து முத்தமிட்டு கண் சிமிட்டி குறும்பாக சிரித்தவாறு அவளை சீண்டி செல்வான்..

ன்று வெள்ளிகிழமை..

வழக்கம் போல  வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு கிளம்பி  சந்தியா படி வழியாக செல்ல, அதை கண்ட  மகிழனும் தன் பேக் ஐ எடுத்து கொண்டு அவசரமாக ஓடி வந்தான்..

வேகமாக படிகளில் இறங்கியவன் அவள் அவனை விட வேகமாக சென்று கொண்டிருப்பதை கண்டவன்

“ஹோய் பொண்டாட்டி.. கொஞ்சம் நில்லு.. “ என்று  கத்த  அவளோ அவனை கண்டு கொள்ளாமல் வேகமாக படிகளில் இறங்கி கொண்டிருந்தாள்..

அவனும் விடாமல்  வேகமாக படிகளில் இறங்கி,  சென்ற வாரத்தை  போலவே இந்த வாரமும் அவள் முன்னால் வழி மறித்து நின்று கொண்டான்..

அதை கண்டவள் கடுப்பாகி

“ஹலோ மங்கி... கொரில்லா.. இப்ப எதுக்கு என்னை வழி மறிக்கிற.. இங்க பார்.. இப்படியே போன நான் நேரா  HR கிட்டயே போய் உன் மேல Harassement கேஸ் பைல் பண்ணிடுவேன்.. ஜாக்கிரதை.. “என்று விரல் நீட்டி மிரட்ட, அவள் விரலை  எட்டி பற்றியவன்

“ஹீ ஹீ ஹீ தாராளமா பண்ணு டார்லிங்.. என் பொண்டாட்டிகிட்ட தான் நான் கொஞ்சறேன் னு  HR  கிட்ட சொல்றேன்.. பொண்டாட்டிய கொஞ்சறது தப்புனு  எந்த Harassement ல வருதாம்.. ? “ என்று தன் புருவத்தை  உயர்த்தினான் இன்னும் அவள் விரலை விடாமல்..

அவளோ தன் கையை இழுக்க போராடி கொண்டே

“ஹலோ.. நீயா பொண்டாட்டி னு சொன்னா ஆய்டுமா..?  நானும் ஒத்துக்கணும்.. எங்க வீட்லயும் ஒத்துக்கணும்.. “ என்று முறைத்தாள்

“அவ்வளவு தான..இப்பயே வந்து என் மாமனார் கிட்டபேசவா? அவர் எப்படா உன்னை என்கிட்ட தள்ளி விடறதுனு வெயிட்டிங் பேபி.. நீ மட்டும் சரினு சொல்லு.. அடுத்த  முகூர்த்தத்துலயே சட்டபடி பொண்டாட்டி ஆக்கிக்கறேன்.. என்ன சம்மதமா? “ என்றான் ஒரு மாதிரி குரலில் அவள் அருகில் நெருங்கி வந்து...

“அது இந்த ஜென்மத்துல நடக்காது மங்கி... ஐ ஹேட் யூ... “ என்று தன் கையை இழுத்து கொண்டு  அவனை பிடித்து தள்ளி விட்டு முன்னே செல்ல எட்டி அவள்  கையை பிடித்தான் மகிழன்.. 

“லுக் தியா... இந்த  ஜென்மத்துல எனக்கு பொண்டாட்டினா அது நீதான்  பேபி.. எப்பவோ என் மனசுல பொண்டாட்டியா உட்கார்ந்துட்ட.. சீக்கிரம் உன்னை முறைப்படி சட்டபடி பொண்டாட்டி ஆக்கி காட்டறேன்.. " என்று சவால்  விட்டான்..

"அதை செஞ்சு காமி முதல்ல.. அப்புறம் பெருசா மார் தட்டிக்கலாம்.. "என்று  உதட்டை  சுளித்து அழகு காட்டியவள் தன் கையை விடுவிக்க முயல அவன் பிடி இன்னும் இறுகியது

"ஏன் டி? .. இப்படி என்னை படுத்தற.. உன் மனசுல நான் இருக்கேன் னு  எனக்கு தெரியும்.. அதை  ஏன் ஒத்துக்க மாட்டேங்கிற? " என்றான் அடிபட்ட பாவத்துடன்

"ஹலோ.. அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நீயா  எதையாவது கற்பனை பண்ணிக்காதிங்க.. நான் முன்ன சொன்ன மாதிரி  ஐ ஹேட் யூ.. ஐ ஹேட் யூ.. ஐ ஹேட் யூ..  "  என்று சொல்லி மீண்டும் முறைத்தாள்..

"ஹ்ம்ம்ம் நம்பிட்டேன்...என்னை பிடிக்காமலா நீ இதுவரைக்கும் என் மீது கம்ப்ளெய்ன்ட் எதுவும் பண்ணாமல் இருக்க?.. உனக்கும் என்னை பிடிக்க போய்த்தானே நீ அமைதியா இருக்க?

உன் மனம் எனக்கு தெரியும் பேபி... அதனால் தான் நான் என் காதலை அலுவலகத்தில் அதுவும் இப்படி மாடிப்படி என்று கூட பார்க்காமல் சொன்னது..

நீயும் என்னை விரும்புற தியா..முதல்ல உன்னை நீ புரிஞ்சுக்க...அப்பதான் இந்த மாமாவோட லவ் உனக்கு புரியும்.. “ என்றான் குறுநகையுடன் கண் சிமிட்டி சிரித்தவாறு...

“நினைப்புத்தான் பொழப்பை கெடுத்துச்சாம்... நீயா ஏதாவது கற்பனை பண்ணிகிட்டு கனவு கண்டுகிட்டு இருக்காத மங்கி...நான் ஏன் கம்ப்ளெய்ன்ட் பண்ணலைனா அவங்க உன் மீது எதுவும் ஆக்சன் எடுத்து விடக் கூடாது என்பதால் தான்.... “ என்றாள் முறைத்தவாறு..

“ஹா ஹா ஹா.. அப்படி என் மீது ஆக்சன் எடுக்க கூடாதுனு உனக்கு ஏன் அவ்வளவு அக்கறை  டார்லிங்? இதுல இருந்தே தெரியலை.. நீ என்னை விரும்பறனு.. “ என்று மடக்கினான் மகிழன்...

அதை கேட்டு ஒரு நொடி திகைத்துத் தான் போனாள் சந்தியா...

“ஆமா.. நான் ஏன் இவன் மீது கம்ப்ளெய்ன்ட் எதுவும் பண்ணலை? இது மாதிரி தன்னிடம் வாலாட்டிய எத்தனையோ பேரை மாட்டி விட்டு சிவியர் பனிஸ்மென்ட் வாங்கி கொடுத்திருக்கிறேனே.. ஆனால் இந்த நெட்டையனை மட்டும் ஏன் விட்டு வைத்தேன்..?   “ என்று அவசரமாக யோசித்தாள்..

அவள் இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து யோசித்து இருந்தால் அவள் ஆழ் மனதில் இருப்பது புரிந்திருக்கும்...

அதற்குள் மகிழன் குறுக்கிட்டு

“என்ன பேபி.. இப்பயாவது உண்மை புரிந்ததா? நீயும் என்னை லவ் பண்றதான.. “ என்றான் மகிழன் அதே குறும்பு சிரிப்புடன்..

அவன்  முகத்தில் இருந்த நக்கல் சிரிப்பை கண்டதும் உடனே சிலிர்த்து கொண்டவள்

“ஹலோ மங்கி... அது ஒன்னும் உங்க மேல இருக்கிற அக்கறையால இல்லை... இந்த கம்பெனி மேல இருக்கிற அக்கறையால... இந்த கம்பெனி ஒரு நல்ல எம்ப்ளாய் ஐ இழந்து விடக் கூடாதே என்ற அக்கறையால....

எல்லாருமே நீ ஒரு நல்லவன் வல்லவன் பயங்கர ஜீனியஸ் னு சொல்லி கொண்டாடறாங்க இல்ல.. அந்த நல்ல பெயரை கெடுக்காமல் அதோட உன் சேவை இந்த கம்பெனிக்கு தேவை என்பதால் தான் விட்டு வைத்திருக்கிறேன்..

அதுக்குனு ஓவரா போன, ரியல் சந்தியாவை பார்க்க வேண்டி வரும்.. ஜாக்கிரதை..” என்று மிரட்டினாள்...

“ஹா ஹா ஹா நீ இப்படி முறுக்க முறுக்க தான் உன் மேல இன்னும் லவ் அதிகமாகுது பேபி.. உன் மேல பைத்தியம் ஆகிடுவேன் போல... " என்றான்  சிறு வேதனையுடன் ஆனால் சிரித்தவாறு..

“ஹ்ம்ம் அப்படியாவது பைத்தியமாகி சட்டையை கிழுச்சிகிட்டு சுத்தறியானு பார்க்கறேன்..ஆல் தி பெஸ்ட்... பை கொரில்லா.. " என்று  நக்கலாக சிரித்தவள் வேகமாக தன் கையை இழுத்து கொண்டவள் பக்கவாட்டில்  குனிந்து அவனிடம் இருந்து லாவகமாக நழுவி அவனை தாண்டி படிகள் வழியாக வேகமாக இறங்க ஆரம்பித்தாள்..

அவனோ சிரித்து கொண்டே தன் தலையை பின்னால்  தடவியவாறு

உன் பார்வையில் பைத்தியமானேன்!

உன் வார்த்தையில் வாக்கியமானேன்!

உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்!

 

ஒரு ஞாபக அலை என வந்து…

என் நெஞ்சினை நனைத்தவள் நீயே!

என் வாலிப திமிரினை உன்னால் மாற்றினேன்!

பெண்ணாக இருந்தவள் உன்னை

நான் இன்று காதல் செய்தேன்!

 

உன்னோட அறிமுகத்தாலே நான்

உன்னில் மறை முகமானேன்!

நரம்பெல்லாம் இசை மீட்ட குதித்தேன் நானே!

 

உன் பார்வையில் பைத்தியமானேன்!

உன் வார்த்தையில் வாக்கியமானேன்!

 

என்று விசில் அடித்தபடி மெதுவாக பாடி கொண்டே உதட்டில் புன்னகையுடன்  இறங்கி வந்தான்..

அவன் பாட்டும் விசில் சத்தமும் அவள் காதில் விழுந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் தன் தோளை குலுக்கியவள்

“பெரிய மன்மதன் இல்லைனா ரோமியோ னு நினைப்பு.. இவன் இப்படி எல்லாம் சீன் போட்டா நாங்க  இவன் காலடியில் விழுந்திடனும்ம்.. ராஸ்கல்.. " என்று திட்டி கொண்டே வேகமாக இறங்கி சென்றாள் சந்தியா..

வீட்டை அடைந்ததும் வண்டியை வேகமாக நிறுத்தியவள் சென்ற வாரத்தை போலவே இன்றும் செருப்பை வாயிலிலயே உதறி கழட்டி வீசி எறிந்து விட்டு அதே வேகத்துடன் உள்ளே வந்தாள்..

வழக்கம் போல தன் அறைக்கு சென்று முகத்தை நீரில் அடித்து கழுவியும் கந்த சஷ்டி கவசத்தை சொல்லியும் தன்னை ஆசுவாச படுத்தினாள்..

பின் தன்னை மறைத்து கொண்டு சிரித்தவாறே வெளியில் வர, அவள் தந்தை உணவு மேஜையில் அமர்ந்து எதையோ சீரியஸாக யோசித்து கொண்டிருந்தார்...

சந்தியா அங்கு செல்லவும் சமையல் அறையில் இருந்து அவள் அன்னை பாத்திரங்களை போட்டு உருட்டி கொண்டிருப்பது தெரிந்தது..

வேண்டும் என்றே எல்லா பாத்திரத்தையும் எடுத்து டொங் டொங் என்று வைத்து கொண்டிருந்தார் ருக்மணி...

தன் தந்தையின் அருகில் சென்றவள் அவர் அருகில் அமர்ந்து

“என்னாச்சு மணி ? . உன் பொண்டாட்டி ரொம்ப கொதிக்கிறாங்க போல இருக்கு? “என்றாள் ரகசியமாக சிரித்தவாறு

அவரும் மெதுவாக

“ஹீ ஹீ ஹீ வழக்கம் போல சும்மா கொஞ்சம்  சீண்டினேன் பாப்பா.. உடனே பொங்க ஆரம்பிச்சிட்டா.. “ என்று சிரித்தார்..

அதை கேட்டதும் தன்னை அடிக்கடி சீண்டும் மகிழன் கண் முன்னே வந்தான்...

“அந்த மங்கி  சீண்டும் பொழுது எனக்கு எப்படி கொதிக்கிறதோ அதே போலத்தான்  இந்த அம்மாவும் அப்பாவோட சீண்டலில்  கொதிப்பாங்களோ ? ..” என சம்பந்தமே இல்லாமல் சம்பந்த படுத்தி பார்த்தவள் தன் அன்னை மீது சிறு இரக்கம் தோன்ற

“உனக்கு வேற வேலையே இல்லையா மணி.. சும்மா சும்மா ஏன் உன் பொண்டாட்டியை சீண்டற? “என்று  தன் அன்னைக்கு வக்காலத்து வாங்கினாள்...

அதை கண்ட வேல்மணி தன்  மகளை ஆச்சர்யமாக பார்த்தார்..

எப்பவும் அவருக்கு தான் சப்போர்ட் பண்ணுவாள் சந்தியா...  அவருடன் இணைந்து தன் அன்னையை கலாய்ப்பாள்.. இன்று வழக்கத்துக்கு மாறாக தன் பொண்டாட்டிக்கு அவள் சப்போர்ட் பண்ணவும் யோசனையாக தன் மகளை பார்த்தார் வேல்மணி..

அதற்குள் தன் தந்தையின் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டவள் உடனே  தன்னை சமாளித்து கொண்டவள்

“ஹீ ஹீ ஹீ சும்மாதான் மணி.. பாவம் இல்ல உன் பொண்டாட்டி.. அதான்.. “ என்று  அசட்டு சிரிப்பை சிரித்து வைத்தாள். பின் சமையல் அறை பக்கம் பார்த்து

ருக்குமணி ருக்குமணி...

அந்த  பக்கம் எந்த சத்தம்...
காது ரெண்டும் கூசுதடி...

கண்டுபுடி என்ன சத்தம்...

 

என்று  மேஜையில் கையால் தாளமிட்டவாறு பாடலை சிறிது மாற்றி பாட அடுத்த நொடி கையில் கரண்டியுடன் வெளியில் வந்தார் ருக்மணி

“அடியேய்.. என்ன பாட்டு இது டீ ? .. இப்படியா பாடுவ? “ என்று  முறைத்தார்..

“ஏன் ? இந்த பாட்டுக்கு என்ன ருக்கு?.. இது தான் சிட்சுவேசன் சாங் ருக்கு... சூப்பரா செட் ஆகுது பார்.. ஒரு வேளை ஸ்ருதி எதுவும்  சரியில்லையா ? .. சரி  இப்படி வச்சுக்கலாம்.. “என்று மீண்டும் தன் குரலை மாற்றி ஏற்ற இறக்கத்துடன் பாட

“கருமம் கருமம்... உன்னை எல்லாம் திருத்தவே முடியாது டீ.. “ என்று தன் சிரிப்பை மறைத்து கொண்டே  தலையில் அடித்து கொண்டவாறு  தன் மகளின் பாடலுக்கு சிரித்து கொண்டிருந்த தன் கணவனை ஒரு முறை முறைத்தவாறு மீண்டும் சமையல் அறைக்குள் புகுந்து கொண்டார் ருக்மணி...

சந்தியாவும் சிரித்து கொண்டே அவள் தந்தைக்கு ஹைபை கொடுத்தாள்...

“எப்படி பாப்பா..??  எப்படி கொதிச்சாலும் என் பொண்டாட்டியை உடனே ஆப் பண்ணிடற? “ என்றார்  ஆச்சர்யமாக

“ஹீ ஹீ ஹீ அதெல்லாம் தொழில்  ரகியம் மணி.. அதெல்லாம் வெளில சொல்ல மாட்டேனே.. “ என்று கண் சிமிட்டினாள் சிரித்தவாறு..

சிறிது நேரத்தில் சமைத்ததை எல்லாம் கொண்டு வந்து அந்த மேஜை மீது  டங் டங் என்று வைத்து விட்டு தட்டை  எடுத்து இருவருக்கும் வைத்து

“அப்பனும் மவளும் நல்லா கொட்டி கிட்டு இன்னும் தெம்பா என்னை வம்பு இழுங்க..”  என்று  முகத்தை நொடித்தவாறு உணவை எடுத்து தட்டில் வைத்தார்....

அவர் தட்டில் வைத்த உணவை கண்டு அதிர்ந்தாள் சந்தியா...

“என்னது உப்புமாவா? என்ன ருக்கு.? . நான் கூட நீ  ஒரு பன்னீர் பட்டர் மசாலா ஆலு கோபி மாதிரி பண்ணி அசத்தி  இருப்பனு வந்தால் இப்படி உப்புமாவை கிண்டிட்டியே....!! ” என்று தலையில் கை வைத்தாள் சந்தியா..

“ஹ்ம்ம்ம் சொரணையா செஞ்சு போட்டாலும் நாக்க சப்பு கொட்டி  உள்ள கொட்டிகிட்டு என்னை குறை சொல்றீங்க இல்ல.. அதான் இன்னைக்கு உப்புமாவோட போட்டேன்.. அப்படியாவது  வாய் அடங்குதானு பார்க்கலாம்.. “என்று  தன் கணவனை பார்த்து முறைத்தார்..

அவரும் நமட்டு சிரிப்பை சிரிக்க

“மணி.. எல்லாம் உன் வேலை தானா? சே.. உன்னால் பார் நானும் இந்த கலியை திங்க வேண்டியதா போய்டுச்சு. உன் சீண்டலை எல்லாம் உன் பொண்டாட்டி சமைச்சதுக்கு பின்னாடி வச்சுக்க கூடாதா.. பார்.. உன் பிரிய சகி இப்ப பிரிய சதியாக மாறி  இப்படி பழி வாங்கிட்டாங்க. “ என்று  முறைத்தாள்..

“சரி விடு பாப்பா.. இன்னைக்கு ஒரு நாள் தான அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.. “ என்று  சிரித்தவாறு  உப்புமாவை  எடுத்து வாயில் போட்டார்... 

சந்தியாவும் ஒரு வாய் அதை  எடுத்து வாயில்  வைக்க, புரை ஏறியது அவளுக்கு.. அதற்குள் அருகில் அமர்ந்து இருந்த ருக்மணி அவள் தலையை  தட்டி

“ஏன் டி எரும... வேகமா கொட்டிக்காத டீ.. “ என்று சொல்ல வந்தவர் சந்தியா வழக்கமாக  சொல்லும் டயலாக் நினைவு வர

“என்ன டீ ?  என் மருமகன் நினைச்சுகிட்டான் போல... “ என்று கண் சிமிட்டி  சிரித்தார்..

அதை கேட்டதும் திக் என்றது சந்தியாவுக்கு..

அதே நேரம் மகிழன் கண் முன்னே வந்து குறும்பாக கண் சிமிட்டி சிரித்தான்..அதில் இன்னும் கடுப்பானவள்

“மா... அவனை பத்தி மட்டும் பேசாத.. நான் அவன் மேல செம கோபத்துல இருக்கேன்... “ என்று  தன்னையும் மீறி உளறி விட, பாதியில்தான் தான் என்ன சொன்னேன் என்றது நினைவு வர பாதியில் உதட்டை கடித்து நிறுத்தி கொண்டாள்..

அதை  கண்ட ருக்மணி தங்கள் சண்டையை மறந்து தன் கணவனிடம் கண்ணால் ஜாடை காட்டி  என்ன?  என்று கேட்க அவருக்குமே ஆச்சர்யமாக இருந்தது சந்தியா உளறியதை கேட்டு..

அவரும் தோளை குலுக்கி உதட்டை பிதுக்கி எதுவும் தெரியாது என சொல்லி சாப்பாட்டை தொடர்ந்தார்...

ருக்மணி “நல்ல அப்பன்..” என்று அவரை  முறைத்து விட்டு

“என்னடி சொல்ற? “ என்றார் தன் மகளை  ஆராயும் பார்வையோடு..

அதற்குள் தன்னை சமாளித்து கொண்டவள்

“ஹீ ஹீ ஹீ... உன் மருமகன் னு சொன்னியா.. அதுக்குத் தான் அப்படி சொன்னேன்.. நீ தட்டை பார்த்து சாப்பிடு மா.. உப்புமா சூப்பர் ருக்கு.. இனிமேல் இதே மாதிரி தினமும் கூட கிண்டி வை.. நான் எதுவும் சொல்லாமல் அப்படியே சாப்ட்டிடுவேன் .. “என்று அவசரமாக  பேச்சை மாற்றினாள் சந்தியா..

ருக்மணியும் அதை  புரிந்து கொண்டு

“ஹ்ம்ம்ம் கத்தரிக்காய் முத்தினா கடை தெருவுக்கு வந்துதான ஆகணும்.. வரட்டும்..வரட்டும்...  தானாகவே அவளே சொல்லட்டும்.. “என்று நமட்டு சிரிப்புடன் தன் சாப்பாட்டை கவனித்தார்...

பின் தன் கணவனை பார்த்து கண்ணால் ஜாடை காட்டி ஏதோ சைகை செய்ய அவரும் அதை கண்டு கொண்டு மெல்ல தயங்கியவாறு

“பாப்பா... உன் கல்யாணத்துக்கு நீ சொன்ன மாதிரி கன்டிசன்ஸ் மேட்ச் ஆகிற மாதிரி சில ஜாதகம் வந்திருக்கு.. நானே அவங்ககிட்ட பேசிட்டேன்.. எல்லாரும் ஓகே ன்றாங்க... ஆனால் அந்த செல்வி பாப்பாவை பற்றி  சொன்னால் மட்டும்  எல்லாரும் தலை தெறிக்க ஓடறானுங்க..

வேணா அந்த  பாப்பா வை பத்தி எதுவும் சொல்ல வேண்டாமே.. நாங்களே அவளை பார்த்துக்கறோம்.. இல்லையா நீ கல்யாணத்துக்கு பிறகு மெதுவா மாப்பிள்ளை கிட்ட சொல்லிக்கோயேன்.. “ என்றார் தயங்கியவாறு..

“நோ நோ நோ.. மணி.. அது தப்பு.. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை பண்ணலாம்னு சொல்லுவாங்க.. ஆனா என்னை பொறுத்தவரை எல்லா உண்மையையும் சொல்லி என்னை புடிச்சிருந்தால் மட்டும் தான் கல்யாணம்..

எதையும் மறச்சு வச்சு பண்ற கல்யாணம் ரொம்ப நாளைக்கு நிலைக்காது.. அதனால நான் சொன்னதையெல்லாம் அப்படியே சொல்லியே மாப்பிள்ளை தேடுங்க.. “ என்றாள் சந்தியா அவசரமாக..

“ஹ்ம்ம்ம் அப்படி பார்த்தால் ஒரே ஒரு ஜாதகம் தான் செட் ஆகுது பாப்பா... பையனும் பெரிய இடம்.. சொந்தமா பிசினஸ் பண்றார்.. சீக்கிரம் இன்டஸ்ட்ரியில பெரிய ஆளா வந்திடுவார்... பத்தாததுக்கு சொத்தும் நிறைய இருக்கு.. அப்ப அந்த பையனையே  பார்க்கலாமா? “ என்றார் ஆர்வமாக

அதை கேட்டதும் இன்று மாலை மகிழன் சவால் விட்டது நினைவு வந்தது..

“டேய்.. மங்கி என்கிட்டயா நீ சவால் விடற... பார்க்கறேன் நீ எப்படி என்னை பொண்டாட்டி ஆக்கி காமிக்கறனு.. இதுக்குனே எங்கப்பா காமிக்கிற மாப்பிள்ளைய ஒத்துகிட்டு கல்யாண பத்திரிக்கை அடிச்சு உனக்குத் தான் முதல் பத்திரிக்கை வைக்க போறேன்..

அப்ப உன் மூஞ்சி இஞ்சி தின்ன மங்கியாக இல்லை இல்லை இஞ்சி தின்ன கொரில்லா வாக  மாறப் போவதை  பார்த்து ரசிக்கணும்...

அப்படியே கல்யாணத்தை பண்ணி கிட்டு என் புருசனோட உன் முன்னாடி வந்து நின்னு காமிக்கறேன்.. அப்ப தெரியும் இந்த சந்தியா யார் னு.. வெய்ட் அன்ட்  ஸீ.. “ என்று உள்ளுக்குள்  கொக்கரித்தவள்

“ஹ்ம்ம் சரிப்பா.. அப்ப அவனையே முடிச்சிடுங்க.. “என்றாள்..

அதை கேட்டு அவள் பெற்றோர் மயக்கம் போடாத குறைதான்..

மெல்லா சுதாரித்தவர்

“பாப்பா... நீ என்ன சொல்ற ? .. அப்ப உண்மையிலுமே உனக்கு அந்த பையனை கட்டிக்க சம்மதமா? “ என்றார் நம்பாமல்

“ஆமாம் மணி... ஏன் உனக்கு தமிழ் தெரியாதா? .. எனக்கு சம்மதம்..சம்மதம்.. சம்மதம்...  போதுமா.. “என்று சிரித்தாள்..

“ஏன் டி.. நீ இன்னும் பையனோட போட்டோவையே பார்க்கலையே..  பையனை பத்தி ஒன்னும் கேட்கலை.. அதுக்குள்ள இப்படி பட்டுனு சம்மதம் னு சொல்லிட்ட..எங்களை வச்சு காமெடி கீமடி பண்ணலையே..  “என்றார் ருக்மணி நம்பாமல்.. 

“ஐயோ ருக்கு.. நிஜமா தான் சொல்றேன்.. நான் மாப்பிள்ளைய பார்க்காட்ட என்ன? அதான் நீங்க இரண்டு பேரும் போட்டோல பார்த்துட்டிங்க இல்ல.. நீங்க பார்த்தால் போதும்.. எப்படியும் அந்த மாப்பிள்ளையப் பற்றி விசாரிக்காமலா நீங்க ஒத்துக்குவீங்க..

அதனால் நீங்க பார்த்து எந்த கழுதைக்கு கழுத்தை நீட்ட சொன்னாலும் நீட்டறேன்.. ஆனால் என் கன்டிசன்ஸ்க்கு ஒத்து வரணும்.. “ என்றாள் சீரியஸாக..

“பாப்பா.. சீரியஸாதான் சொல்றியா? அப்புறம் பேச்சு மாற மாட்டியே ?

“இல்ல மணி.. அதெல்லாம் மாற மாட்டேன்.. எனக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகணும்.. அதுக்கான ஏற்பாட்டை பாருங்க.. “ என்றாள்

“ஹ்ம்ம் ரொம்ப சந்தோஷம் டா.. அப்ப அந்த மாப்பிள்ளையவே  பொண்ணு பார்க்க வரச் சொல்லவா?  “ என்றார் ஆர்வமாக

“பொண்ணெல்லாம் எதுக்குப்பா பார்க்கணும்..?  என் போட்டோவை காமிங்க.. அவனுக்கு பிடிச்சிருந்தால் நேராவே நிச்சயத்தை  வச்சுக்கலாம்.. எதுக்கு பொண்ணு பார்த்து உறுதி பண்ணி நிச்சயம் பண்ணி  டைம் வேஸ்ட் பண்ணிகிட்டு..

நேராகவே கல்யாணம் னா கூடஎனக்கு சம்மதம் தான்... “ என்றாள் கண் சிமிட்டி சிரித்தவாறு

அதை கேட்டு ருக்கு வாயை பிளந்தார்...

“ஆங்.. அடிப்பாவி... இப்படி டப்புனு விழுந்திட்டியே..!! நான் கூட நீ போட்ட கன்டிசன்ஸ்க்கும்  இழுக்கற இழுப்பையும்  பார்த்து எத்தனை தரம் இந்த பொண்ணு பார்க்கும் படலத்தை நடத்தணுமோ?

எத்தனை  பேருக்கு பஜ்ஜி சொஜ்ஜி செஞ்சு போடணுமோனு கவலையா இருந்தேன்.. நீ பட்டுனு சம்மதம் சொல்லி, இப்படி பொண்ணு  பார்க்கும் செலவை கூட வைக்காமல் நேராகவே நிச்சயத்தை வச்சுக்கலாம் னு சொல்லிட்டியே..

என் ராசாத்தி.. “ என்று சிரித்தவாறு அவளுக்கு நெட்டி முறித்தார் ருக்மணி..

“சரி பாப்பா... அப்ப நான் மாப்பிள்ளை வீட்ல உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம்னு சொல்லிடறேன்.. நல்ல நாள் பார்த்து நிச்சயத்தை  வச்சுக்கலாம்.. சரியா.. பேச்சு மாற மாட்டியே.. “என்று மீண்டும் ஒரு முறை உறுதி படுத்தி கொண்டார்...

அவளும் உறுதியாக சொல்ல மன மகிழ்ச்சியுடன் சாப்பாட்டை முடித்து தன் அலைபேசியை எடுத்து கொண்டு சென்றார்  தன் மகள் சம்மதத்தை சொல்ல..

தன் அறைக்கு திரும்பிய  சந்தியாவும் படுக்கையில் விழுந்தவள் 

“டேய் மங்கி...  என்கிட்டயா சவால் விடற.. எப்பவும் எதுலயும் இந்த சந்தியாதான் ஜெயிப்பா... உன்னை  தோற்கடித்து காமிக்கறேன் பார்.. “என்று வெற்றி சிரிப்பை  சிரித்து கொண்டாள்..

மகிழனை தோற்கடிக்க வேண்டும் என்ற வேகத்தில் விளையாட்டு தனமாக ஆரம்பித்த அவள் விளையாட்டு அவளுக்கே வினையாக போவதை அறியவில்லை அவள் அப்பொழுது...!

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!