அழகான ராட்சசியே!!-26

 


அத்தியாயம்-26

சென்னையிலிருந்து ரொம்ப தூரம் தள்ளி  ஒதுக்குப்புறமாக இருந்தது அந்த ரிசார்ட்..

மகிழன் குழுவினர் சென்ற பேருந்து அந்த இடத்தை அடையவும் பேருந்து நிறுத்துவதற்கான இடத்தில் அந்த ஓட்டுனர் பேருந்தை நிறுத்த எல்லோரும் உற்சாகத்துடன் கீழே குதித்து இறங்கினர்..

மகிழன்  முதலாவதாக இறங்கி நின்றிருக்க மனோ  அவனை தேடி வந்தான்..

“என்னாச்சு மகி? ஏன் இவ்வளவு நேரம்? ஆன் தி வே எனி ப்ராப்ளம் ? உன் மொபைலும் நாட் ரீச்சப்ல்  ஆ இருந்தது “  என்றான் மனோ

“நத்திங் மனோ.. சந்தியா வர கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.. அதோட வழியில் பசங்க கொஞ்ச நேரம் செல்ஃபி எடுத்துட்டு விளையாடிக்கிட்டு இருந்தாங்க அதான் கிளம்பி வர நேரமாகி விட்டது.. நெட்வொர்க் கிடைக்காமல் இருந்திருக்கும்.. அதான் போன் லைன் கிடைக்கலையா இருக்கும்..”  என்று சமாளித்தான்

ஏனோ மனோவிடம் சந்தியாவினால் தான் தாமதமாகிவிட்டது என்று முழு காரணத்தையும் சொல்லாமல் வெறுமனே சாதாரணமாக ஏதோ சொல்லி சமாளித்து வைத்தான்..

அதே நேரம் சந்தியாவும் பேருந்திலிருந்து கீழே இறங்க மகிழன் அவளால் தான் தாமதமானது என்று சொல்லாமல் மறைத்து கொஞ்சம் மாற்றி கூறியதை குறித்து கொண்டாள்

கீழ இறங்கியவர்கள் நேராக அந்த ரிசார்ட்  உள்ளே செல்ல அனைவருக்கும் வெல்கம் ட்ரிங்  கொடுத்து வரவேற்றனர் பணியாளர்கள்.. அனைவரும் அதை எடுத்து குடித்துக்கொண்டே அந்த பகுதியை சுற்றிலும் நோட்டமிட்டனர்

அந்த ரிசார்ட் ஐ சமீபத்தில்தான் ஆரம்பித்து இருந்தனர்..IT ல்  வேலை பார்ப்பவர்களுக்கு இந்த டீம் அவுட்டிங் என்பது ஒரு வடிகாலாகி போய்விட, அதை பயன்படுத்தி கொள்ள நிறைய ரிசார்ட்ஸ் சென்னையை சுற்றிலும் முளைக்க ஆரம்பித்து இருந்தன..

முன்பு மாந்தோப்பாக இருந்த இடத்தை கொஞ்சம் மாற்றி பொழுது போக்கிற்கு வசதியாக சில வசதிகளை செய்து அந்த இடத்தை  ஒரு ரிசார்ட் ஆக மாற்றி இருந்தார்கள்.. 

ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது அந்த இடம்.. இன்டோர் கேம், அவுட்டோர் கேம், மற்றும் சில நீரில் விளையாடும் விளையாட்டுக்கள் என எல்லா விதமான  பொழுது போக்கு விளையாட்டுகளும் அங்கே இருந்தன..  

இரண்டு பேருந்தில் வந்தவர்களும் இப்பொழுது ஒன்றாக சேர்ந்து இருக்க மகிழன் அவர்களை எல்லாம் அழைத்துக்கொண்டு ஒரு பெரிய ஹாலுக்கு சென்றான்..

அங்கு ஏற்கனவே காத்து கொண்டிருந்த ஒரு நபரை சுட்டி காட்டி,

“கைஸ்..இவர்தான் மிஸ்டர் ராஜா..இன்னைக்கு நம்மளோட டீம்க்கு கைட் இவர்தான்.. இன்றைய நிகழ்ச்சிகளை இவர் விளக்குவார்..எல்லாரும் கவனமா கேட்டுக்கங்க. ப்ளீஸ் கோ அகெட் மிஸ்டர் ராஜா.. “ என்று புன்னகைத்தவன் ராஜா வை அழைத்தான்..

அந்த ராஜாவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அந்த நாள் நிகழ்ச்சிகளை அனைவருக்கும் விளக்கி கூறினான்..  

பின் காலையில்  சில team-building ஆக்டிவிடீஸ் இருப்பதாக கூறி  அவர்களை எல்லாம் அருகில் இருந்த ஒரு மைதானத்திற்கு அழைத்துச் சென்றான்.. எல்லாரும் உற்சாகத்துடன்  அவனை பின் தொடர்ந்து செல்ல, அனைவரையும் வட்டமாக நிற்க சொன்னான்..

ஒவ்வொருவரும் அவர்களுடைய கேங் உடன் பேசி சிரித்த படி வட்டமாக நின்றனர்...

“இப்பொழுது மூன்று குழுக்கலாக பிரிக்க போகிறேன்.. “ என்று ராஜா சொல்லவும் அருகில் நின்றிருந்த சந்தியா கேங் ஏதோ அவசரமாக ஆலோசித்து அருகருகில் நிற்காமல் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டனர்.. 

குழுவை பிரிக்கும் பொழுது சந்தியா அவசரமாக தன் நண்பனை அழைத்தவள்

“வேல்ஸ்.. நான் மட்டும் அந்த மங்கி இருக்கும் டீம் க்கு போய்டக்கூடாது..நான் வேற டீம் அவன் வேற டீம் ஆ வரணும்...  நீதான் என்னை காப்பாற்றணும்.. “ என்று அவசரமாக வேண்டிக் கொண்டாள்..

குழுவை பிரிப்பதற்கு எல்லாரையும் ஒன்று இரண்டு மூன்று என சொல்ல சொல்ல, மகிழன் நின்றிருந்த இடத்தை வைத்து அவன் டீம் ல் வராமல் இருக்கிற மாதிரி அவசரமாக எண்ணை கணக்கிட்டவள் ஒரு நபருக்கு முன்னால் மாறி நின்று கொண்டாள் சந்தியா..

ஒவ்வொருவராக நம்பரை சொல்லி கொண்டே வர, சந்தியாவின் முறை வருவதற்கு சற்று முன்னால்  திடீரென்று மயில் ஓடி வந்து சந்தியா அருகில் முன்னால் நின்று கொள்ள, அவள் கணக்கு தப்பாகி போனது..

கடைசியில் சந்தியா மகிழன் இருந்த குழுவிலயே வந்திருந்தாள்.. அதை கண்டதும் மயிலை முறைத்தவள்

“டேய்.. வாகனம்.. இவ்வளவு நேரம் எங்கடா போயிருந்த? இப்ப எதுக்கு திடீர்னு வந்து எனக்கு முன்னால நின்ன? நின்னதும் நின்னியே எனக்கு அடுத்து நின்று தொலைய வேண்டியதுதான? “ என்று முறைத்தாள்..

மயிலும் ஒரு அசட்டு சிரிப்பை சிரித்தவன் தன் ஆட்காட்டி விரலை நீட்டி

“ரெஸ்ட் ரூம் போயிருந்தேன் சந்தியா..ஏன்? என்னாச்சு? “ என்றான் புரியாமல்..

“ஹ்ம்ம்ம் குழந்தை அழுதுச்சாம்.. மூடிகிட்டு கம்முனு நில்..இங்க பார்.. உனக்கு என்ன நம்பர் வந்தது ? “  என்றாள்..

“ஒன்னு.. “ என்று விரலை நீட்டினான் மயில்..

“இல்ல.. உனக்கு வந்தது இரண்டு.. நான் தான் ஒன்னு .. புரிஞ்சுதா?

“ம்ஹூம் .. புரியலையே.. நான்தான ஒன்னு னு சொன்னேன்.. இப்ப ஏன் இரண்டு னு மாத்தி  சொல்ல சொல்ற? “ என்றான் குழப்பமாக..

“டேய்... நான் சொல்றதை மட்டும் கேள்.. அந்த ராஜா ஒன்னு எல்லாம் முன்னால வாங்கனு சொன்னா நான் போய்டறேன்.. அவர் இரண்டை  கூப்பிடறப்போ நீ போ..” என்று  அவசரமாக விளக்கினாள்..

அவனும் தலையை சொரிந்தவாறு மண்டையை ஆட்டி வைத்தான்..

அதே போல ராஜா “ஒன்று எல்லாம் முன்னால் வாங்க. “ என்று அழைக்க, மயில் சந்தியா சொல்லியிருந்த இன்ஸ்ட்ரக்ஷனை மறந்து போய் அவசரமாக முன்னால் போக. உடனே சந்தியா பின்னால் இருந்து  அவன் பின்புற  சட்டையை பிடித்து இழுத்து தடுத்து நிறுத்தியவள் அவசரமாக அவள் முன்னே வந்தாள்..

மயிலை பார்த்து ஒரு முறை முறைத்து கண்ணால் ஜாடை செய்து மிரட்டினாள்....

அவள் முறைப்பதையும் மயில் தலையை சொரிந்து கொண்டு நிற்பதையும் கண்ட ராஜா அவளின் தில்லு முல்லு புரிந்து விட

“மேடம்.. நோ சீட்டிங்... உங்களுக்கு இரண்டு தான வந்தது.. இரண்டை கூப்பிடறப்போ நீங்க வாங்க.. இப்ப நீங்க பின்னால் போங்க.. “ என்று  சந்தியாவின் ப்ளானை சொதப்பினான்..

அதை கேட்டதும் ஒரு அசட்டு சிரிப்பை சிரித்தவள் மயிலை முறைத்தவாறு பின்னால் செல்ல, மயில் முன்னால் வந்தான்.. பின் எல்லாரையும் பொதுவாக பார்த்த ராஜா

“ஸாரி.... பிரண்ட்ஸ்.. நாம் இப்ப மூன்று டீம் ஆக பிரித்து விளையாட போகிறோம்.. உங்க பிரண்ட்ஸ் இருக்கிற டீம் ல தான் நீங்களும்   போவேணு  யாரும் அடம்பிடிக்காதிங்க..

அவங்க கூடத்தான் எப்பவும் சுத்தி கிட்டு இருக்கிங்களே.. இன்னைக்கு ஒரு நாள் நெருங்கிய நண்பர்களை விட்டு மற்றவர்களுடனும் கலந்து கொள்ளுங்க..அப்பதான் மற்றவர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கும்..  ஒன்றாக நின்று கொண்டிருந்த நண்பர்களை பிரிப்பதற்காகத்தான் இந்த ஒன் டூ த்ரீ விளையாட்டு..

இப்ப ஒன்றாக நின்று கொண்டிருந்த எல்லாரும் வேற வேற டீம் க்கு போய்ட்டீங்க இல்ல.. அதான் இந்த ட்ரிக்.. “ என்று கண் சிமிட்டி சிரித்தான் ராஜா..

“ஆமா.. பொல்லாத ட்ரிக்.. இதத்தான் எத்தனையோ முறை பார்த்திருக்கிறமே!! .. அதனால்தான் நாங்க ப்ளான் பண்ணி  வம்பு ம் ஆப்பு ம் என்கூட பக்கத்துல நிக்காம தள்ளி நின்னுகிட்டாளுங்க.. நாங்க மூன்று பேரும் ஒரே டீம் ல வரணும்னு... எங்களுக்கேவா? “ என்று உள்ளுக்குள் நக்கலடித்து சிரித்து கொண்டாள் சந்தியா..

அந்த ராஜா அவளை நன்றாக பார்த்து வைத்து கொண்டதால் அவளால் அடுத்து அவளுக்கு வந்திருந்த எண்ணை மாற்றி சொல்ல முடியவில்லை..

மயில் முதல் குழுவிலும் அடுத்து ராஜா இரண்டை அழைக்க, சந்தியா நொந்து கொண்டே முன்னால் வர, மகிழனும் அதே குழுவில் இருந்தான்...

அதை கண்டு மயிலை  மீண்டும் முறைத்தாள்..

மயில் வராமல் இருந்திருந்தால் அவளுக்கு எண் ஒன்று வந்திருக்கும்.. அவள் அந்த மங்கி இருக்கிற குழுவில் இருந்திருக்க மாட்டாள்..அவன் இடையில் வந்து புகுந்ததால் அவனுக்கு எண் ஒன்று சென்று விட, சந்தியாவிற்கு இரண்டாகி போனது.. மகிழனும் அதே எண் என்பதால் இருவரும் ஒரே குழுவில் இருந்தனர்.. 

“எல்லாம் இந்த வாகனத்தால் வந்தது.. இவனை யார் இப்ப ஒன்னுக்கு போக சொன்னா? டீம் பிரிச்சதுக்கு பிறகு போய் தொலைய வேண்டியதுதான.. “ என்று மீண்டும் அவனுக்கு அர்ச்சனை பண்ணினாள்...

சந்தியா கேங் போட்ட கணக்கு கொஞ்சம் மாறி இருக்க, அன்பு மற்றும் சந்தியா ஒரே டீம் ல் இருக்க, மயில் ஒரு குழுவிலும் அபர்ணா மற்றொரு குழுவிலும் நின்று போயினர்...

மூன்று குழுக்களை பிரித்த பிறகு ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு கேப்டனை நியமித்து  பின் சில குழு விளையாட்டுக்களை ராஜா  சொல்லிக் கொடுக்க அனைவரும் உற்சாகத்துடன் ஒவ்வொருவரையும் கலாய்த்துக் கொண்டும் மற்ற டீம் ஐ டீஸ் பண்ணியும் உற்சாகத்துடன் விளையாடினர்

சந்தியா மட்டும் எந்த ஒரு விளையாட்டிலும் ஆர்வமாக கலந்து கொள்ளவில்லை.

“எப்படி விளையாண்டாலும் அந்த மங்கி பக்கம் போய் நிக்க வேண்டியதா இருக்கும்..அவன் அருகில் செல்லக் கூடாது.. “ என்று திட்டமிட்டவள்  அவனையே பார்த்து கொண்டு அவன் இருக்கும் இடத்தில் அவள் இல்லாமல் பார்த்து தள்ளி நின்று கொண்டாள்..

மகிழன் இருந்த டீம் ற்கு அவனே கேப்டனாக இருக்க, தன் டீம் மெம்பர்களை உற்சாக படுத்தியவாறு எல்லா விளையாட்டிலும் ஆர்வத்துடன்  பங்கெடுத்து கொண்டாலும் ஓரக் கண்ணால் சந்தியாவை  கவனித்துக் கொண்டே இருந்தான்..

அவள் வேண்டும் என்றே தன்னை தவிர்ப்பது புரிய,  உள்ளுக்குள் சிரித்தவாறு அவளையே நோட்டமிட்டுக் கொண்டிருந்தான்..

சில விளையாட்டுக்கள் முடிந்திருக்க, இறுதியாக ஒரு விளையாட்டை விளக்கினான் ராஜா..

மூன்று டீமிற்கும் ஒவ்வொரு வடம்(மொத்தமான கயிறு) ஐ கொடுத்து அதை வட்டமாக்கி முடிந்து அதை கீழ வைத்து அதன் மீது மூன்று டீம் ஐயும் நிற்க சொன்னான்..

"என்ன விளையாட்டா இருக்கும்? "   என்று அனைவரும் தங்களுக்குள் ஏதேதோ கெஸ் பண்ணி சிரித்து கொண்டே அதன் மீது நின்றனர்...

"ஓகே பிரண்ட்ஸ்.. இந்த கேம்.. ஒவ்வொரு டீம் லும் எப்படி collaboration  இருக்கு மற்றும் டீம்வொர்க் (teamwork) ஐ   டெஸ்ட் பண்ற கேம் இது..” என்றான் புன்னகைத்தவாறு..

“அடப்பாவி...இங்கயும் டெஸ்ட்டிங் ஆ.. அது வேண்டாம்னுதான இந்த அவுட்டிங் க்கு வந்தது.. இங்கயுமா? “ என்று  சந்தியாவின் காதை கடித்தாள் அன்பு..

சந்தியாவும் அவளை பார்த்து சிரிக்க, ராஜா அவள் பக்கம் திரும்புவது தெரியவும் உடனே ஆப் ஆகினாள் சந்தியா...

அந்த ராஜா அந்த விளையாட்டின் விதிமுறைகளை விளக்கினான்..  

“இந்த கேம் என்னன்னா எல்லாரும் அவங்களுடைய பிறந்த மாதம் மற்றும் தேதி படி வரிசையாக நிக்கணும்.. ஆனால்  யாரும் வாயை திறந்து தங்கள் பிறந்த நாளை அடுத்தவங்க கிட்ட  சொல்லக்கூடாது..

அப்புறம் இந்த கயிற்றில் இருந்து காலை எடுக்காமல் உங்களுக்குள் கம்யூனிகேட் பண்ணி உங்களுடைய பிறந்த தேதி படி நகர்ந்து சென்று பிறந்த தேதி வரிசைப்படி நிக்க வேண்டும்..

எப்பொழுதும் வாயை திறந்து எதுவும் பேசக்கூடாது.. கயிற்றில் இருந்து காலையும் எடுக்க கூடாது..

எந்த குழு மிக குறைவான நேரத்தில் சரியாக அசெம்பல் ஆகிறார்களோ அந்த குழு வெற்றி பெற்றதாக கருதப்படும். எனி குவஸ்டின்ஸ்? " என்று நிறுத்தினான்..

சிலர் சில கேள்விகளை கேட்க, அதற்கு விளக்கமளித்து விளையாட்டை ஆட ஆரம்பித்தனர்..

அனைவருக்கும் அது ஒரு சேலஞ்ஜிங் டாஸ்க் ஆக இருந்தது..மகிழனே அவன் இருந்த அந்த டீமை வழி நடத்தியதால் விளையாட்டு ஆரம்பிக்கும் முன்னரே தன் குழுவை அழைத்து சில ஸ்ட்ராடிஜியை தன் குழுவிற்கு விளக்கி சொன்னான்...

“ஒவ்வொருவரும் கையால் ஆக்சன் செய்து அவர்களுடைய பிறந்த மாதத்தை முதலில் தெரிவிக்க, அந்த மாதத்தின் அடிப்படையில் ஒவ்வொருவரும் நகர்ந்து அவர்களுக்கு உரிய இடத்தில் நின்று  கொள்ளவேண்டும்..

அடுத்ததாக தேதி படி நிற்க வேண்டும்.. இதை வேகமாக செய்ய வேண்டும்.. " என்று அறிவுறுத்தி இருந்தான்..

அதன்படி ஒவ்வொருவரும் அருகில் இருந்தவர்களிடம் அவர்களுடைய  பிறந்த மாதத்தை கேட்டு அதற்கு தகுந்த மாதிரி நகர ஆரம்பித்தனர்..

சந்தியாவும் அவள் பிறந்த மாதத்திற்கு தகுந்த மாதிரி நகர்ந்து கொண்டே வந்தாள்..

ஏதேச்சையாக நிமிர்ந்து பார்க்க, சற்று தொலைவில்  ஒவ்வொருவரும் தங்கள் பிறந்த மாதத்தை கையால் சைகை காட்டிக் கொண்டிருக்க மகிழன் பிறந்த மாதம் எட்டு என காட்டி கொண்டிருந்தான்..

அதைக் கண்டு திடுக்கிட்டாள் சந்தியா..

அவள் பிறந்த மாதமும் ஆகஸ்ட் தான்.. அப்படி என்றால் அவன் அருகில் சந்தியா சென்று நிற்க வேண்டும்..

“அந்த மங்கி பக்கத்தில் நான் போய் நிற்பதா? நோ வே..அதோடு அவனுக்கு என் பர்த்டே வையும் சொல்லும் படி இருக்கும்.. அவன் கிட்ட நான் எதுக்கு சொல்லணும்?

என்று அவசரமாக யோசித்தவள் அவள்  அருகில் இருந்தவனிடம் அவன்  என்ன மாதம் என்று சைகையால் கேட்க அவன் 6 என்பதை காட்டி சொல்ல அவளும் அவள் பிறந்த மாதம் ஜூன் என்று சொல்லி அதற்கு மேல் நகராமல்  அங்கேயே நின்று கொண்டாள்..

அதே குழுவில் இருந்த அன்பு நவம்பர் மாதம் என்பதால் அந்த வட்டத்தில் கடைசி இடத்திற்கு செல்ல வேண்டியதாக இருந்தது.. மகிழனின் வழி நடத்தலில் ஒரு வழியாக எல்லாரும் வேகமாக நகர்ந்து அவர்கள் பிறந்த மாதத்தின் அடிப்படையில் வரிசையாக நின்று கொண்டனர்..

அடுத்து அவர்கள் பிறந்த தேதியை சொல்லி அந்த மாதத்திற்குள் தேதி படி வரிசையாக நிற்க வேண்டும் என்று மகிழன் சொல்லி இருக்க, அதன் படி எல்லாரும் அட்ஜஸ்ட் பண்ணி நின்று கொண்டனர்..

எல்லாரும் சரியாக நின்று கொண்டதாக சொல்ல, மகிழன் ராஜாவை அழைத்தான் சரி பார்க்க..

அன்புக்கு சந்தியாவின் பிறந்த தேதி தெரியும் என்பதால் அவள் ஆகஸ்ட் மாதத்தில் நிற்காமல். ஜூன் மாதத்தில் நிற்பதை கண்ட  அன்பு சந்தியாவிற்கு சைகை செய்து மாறி நிற்க சொன்னாள்..

சந்தியாவும் அவளை முறைத்தவாறு எதுவும் சொல்லாதே என்று கண்ணால் ஜாடை காட்டி அவளை மிரட்டினாள்..

அன்பும் குழப்பமாக

“இவள் ஏன்  ஜூன் மாதத்தில் நிற்கிறாள்? “  என்று யோசித்துக் கொண்டே அமைதியாகி விட்டாள்..

ஓரளவுக்கு எல்லாரும் செட்டில் ஆகி இருக்க, அங்கு வந்த  அந்த ஒருங்கிணைப்பாளர் ராஜா அனைவரையும் பிறந்த மாதம் மற்றும் தேதியை சொல்ல சொன்னான்  அவர்கள் சரியாக நிற்கிறார்களா என சரி பார்ப்பதற்காக..

ஒவ்வொருவரும் தங்கள் பிறந்த மாதம் மற்றும் தேதியை  சொல்லிக்கொண்டே வர, சந்தியாவின் அருகில் நின்று இருந்தவன் ஜூன் 29  என்று சொன்னான்..  

அடுத்து சந்தியா முறை..

அவளுக்கு  முன்னால் நின்றிருந்தவன் ஜூன் மாதத்தில் சொல்ல, அடுத்து அவளும் ஜூன் மாதத்தில் ஏதாவது ஒரு தேதியை சொல்ல வேண்டும்..

உடனே அவசரமாக கணக்கிட்டவள் அவன் சொன்ன தேதியில் இருந்து தோராயமாக  இரண்டு நாட்களை கூட்டி ஜூன் 31 என்றாள்..

சற்று தள்ளி நின்றிருந்த மகிழன் அவள் சொல்ல போகும் நாளை, தன்னவளுடைய பிறந்த நாளை தெரிந்து கொள்ள ஆர்வமாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..

திடீரென்று அவள்  ஜூன் 31 என்று சொல்ல அனைவரும் சிரித்தனர்..  அப்போதுதான் சந்தியாவுக்கும் உரைத்தது.. ஜூன் மாதத்தில் 30 நாட்கள் மட்டுமே என்று..

உடனே சமாளித்து கொண்டவள்

“சாரி.. டங் ஸ்லிப்பிங்..  ஜூன் 30.. “ என்று ஏதோ சொல்லி சமாளித்தாள்..

அதை கண்ட ராஜா

“பார்த்து மேடம்.. உங்க  பிறந்த நாளை கூடவா உங்களால் ஞாபகம் வைத்திருக்க முடியவில்லை?  இனிமேலாவது நல்லா ஞாபகம் வச்சுக்கங்க. “  என்று சொல்லி சிரித்தவாறு மற்றவர்களிடம் நடந்து சென்றான்..

சந்தியாவுக்கு அவமானமாகி விட

“போடா.. கூஜா.. என்னுடைய பிறந்த நாளை மறக்க முடியுமா? இது திடீர்னு கண்டுபுடித்த ஃபேக் பிறந்த நாள் அதான்..” என்று உள்ளுக்குள் திட்டியவாறு தன்  தோளை குலுக்கி கொண்டு அருகில் நின்றிருந்தவனிடம் அரட்டை அடிக்க ஆரம்பித்தாள்..

ஒரு வழியாக எல்லாரும் அவர்களுடைய பிறந்த நாளை சொல்லி முடிக்க,  சந்தியா குழுவினர் எல்லாரும் வரிசையாக இருப்பதாக சொல்லி அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவித்தான் ராஜா..

மற்ற இரண்டு குழுக்களும் நடுவில் இரண்டு பேர் சரியாக நிற்க தவறி விட்டதால் அந்த இரண்டு குழுக்களும் வெற்றி பெறவில்லை என அறிவித்தான் ராஜா..  

அதை கேட்டதும் சந்தியா குழுவினர் ஓ வென்று கத்தி ஆர்பரித்தனர்.. சந்தியாவும் தன் பங்குக்கு  கைதட்டி அந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டாள்..

பின் காலை விளையாட்டுக்கள் அத்துடன் முடிவடைய,  அனைவரும் மதிய உணவிற்காக உணவு கூடத்தை நோக்கி சென்றனர்..பஃபே  முறையில் இருந்த உணவு வகையில் சிலதை தன் தட்டில் எடுத்து வைத்து கொண்டு ஒரு இடத்தில் அமர்ந்தாள் சந்தியா..

அன்பழகியும் தன் உணவை எடுத்து கொண்டு அங்கே வந்து சந்தியாவின் அருகில் அமர்ந்தவள் சுற்றிலும் பார்த்து விட்டு

“ஹே சந்தி...உன் பர்த்டே ஆகஸ்ட் மாதம் தான.. நீ ஏன் ஜூன் 30 னு சொன்ன? “  என்றாள் குழப்பமாக..

“ஹீ ஹீ ஹீ  எல்லாம் ஒரு காரணமாகத்தான் வம்பு.. “  என்று கண் சிமிட்டி சிரித்தாள் சந்தியா..

“அது என்னடி காரணம்? எனக்கும் சொல்லேன்.. “ என்றாள் ஆர்வமாக..

“அதான.. உனக்கு அடுத்தவங்க விஷயத்தை பற்றி தெரிஞ்சுக்காட்டி தலையை வெடிச்சிடுமே.. உனக்கு வம்பு னு நான் பெயர் வச்சது சரியான பெயர் தான்  டீ.. “ என்று சொல்லி சிரித்தாள் சந்தியா...

அதை கேட்டு அவளை முறைத்த அன்பு

“ஹ்ம்ம்ம் நக்கலு.. சரி.. அத விடு.. நீ மேட்டர்க்கு வா? நீ ஏன் உன் பிறந்த நாளை மாற்றி சொன்ன? “ என்று மீண்டும் அதிலயே வந்து நின்றாள் அன்பு.

“ஹீ ஹீ ஹீ... அது வந்து வம்பு...நானும் கொஞ்ச நேரம் அந்த கயிற்று மேலயே தான் ஒத்த காலை வச்சு நடந்துகிட்டிருந்தேன்.. திடீர்னு கால் சுளுக்கிடுச்சு..

சுளுக்குன காலை வச்சுகிட்டு அவ்வளவு தூரம் நகர்ந்து நகர்ந்து போக முடியுமா? அதான் நான் ஒரு இடத்துல நின்னு கிட்டு அந்த இடத்துக்கு தகுந்த மாதிரி  சும்மா தேதியை மாற்றி சொன்னேன்..

அந்த ஆளு அதான் அந்த கூஜா என்ன பர்த் சர்டிபிகேட் வாங்கியா செக் பண்றான்.. அதான் வாயில வந்த தேதியை சொன்னேன்.. எப்பூடி? “ என்று தன் இல்லாத காலரை தூக்கி விட்டு கொண்டாள் சந்தியா..

அதை கேட்டு வாயை பிளந்தாள் அன்பு..

“அடிப்பாவி..  இப்படி கூட தில்லு முல்லு பண்ணுவியா? “  என்று அதிசயித்தவள்

“ஹே சந்தி..ஒரு கதை ஞாபகம் வருது டீ.. நம்ம வேலனுக்கும் கணேசனுக்கும் ஞானபழத்திற்காக போட்டி வச்சப்ப, வேலன் கஷ்டபட்டு இந்த உலகத்தை சுற்றி வர, கணேசன் நின்ற  இடத்திலயே இருந்து கொண்டு தன் அப்பா அம்மாவை சுற்றி வந்து அந்த பழத்தை வாங்கி கொண்டானாம்... 

அது மாதிரி மகிழன் எவ்வளவு கஷ்டபட்டு ஒரு ஸ்ட்ராடஜியை கண்டு புடிச்சு அதை பாலோ பண்ண வச்சு நம்ம டீமை ஜெயிக்க வச்சார்..

ஆனால் அதை விட உன் ஸ்ட்ராடஜி சூப்பர் டீ.. எங்கயும் நகராமல் நின்ன இடத்திலயே இருந்து கிட்டு சும்மா பர்த்டே வை மட்டும் வரிசையாக  எல்லாரும் மாற்றி அட்ஜஸ்ட் பண்ணி சொல்லி இருந்தால் போதும் போல..

வாவ்.. சூப்பர் டீ.. உன் அறிவுக்கு நீயெல்லாம் இந்நேரம் நாசா ல இருக்க வேண்டியவ.. தெரியாதனமா நம்ம டெஸ்ட்டிங் டீம் ல வந்து மாட்டிகிட்ட.. “ என்று சிரித்தாள் அன்பு..

சந்தியாவும் அவளுடன் இணைந்து சிரித்தாள்..

அவர்கள் பேசிக் கொண்டிருந்தது அவர்களுக்கு பின் இருக்கையில் அமர்ந்து இருந்த மகிழன் காதிலும்  விழுந்தது.. அதை கேட்டதும்

“அடேங்கப்பா.. இவ சாதாராண கேடி னு நினைச்சா உலக மஹா  கேடியாதான் இருப்பா போல..ஏதோ ஒரு தேதியை அவள் பிறந்த நாள் னு சொல்லி எல்லாரையும் முட்டாளாக்கிட்டாளே..!!

நான் வேற இவ பிறந்த நாள் னு நினைத்து அந்த ஜூன் 30 ஐ மனப்பாடம் பண்ணி வச்சுகிட்டேன்..” என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டான்..

“அப்ப அவ உண்மையான பிறந்த நாள் என்னவாக இருக்கும்? “ என்று யோசித்தான்..

ஆனால் அவன் அறியவில்லை அவள் பிறந்த தேதி அவனுக்கு தெரிந்து விடக்கூடாது என்றும் மேலும் அவனருகில் வந்து நிற்க அவளுக்கு தயக்கமாக இருக்கவும் தான் அவள் தள்ளி நின்று கொண்டாள்.. பிறந்த தேதியையும்  மாற்றிக் கொண்டாள்..

ஏனோ அதை அன்புவிடமும் மறைத்து ஏதோ ஒரு காரணத்தை சொல்லி சமாளித்தாள்..

திய உணவு கலகலப்பாக  முடிய சந்தியா  ஒரு  கப் நிறைய ஐஸ்க்ரீமை வாங்கிக் கொண்டு அதன் அருகில் இருந்த ப்ரூட்ஸ் ஐ  எடுத்து அதன் மீது  போட்டுகொண்டு  தன் டேபிலுக்கு எடுத்து வந்தவள்  ஆசையாக அதை ரசித்து  சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்..

மகிழனும் அப்பொழுது எழுந்து வேற உணவு எடுக்க  செல்ல, அவனை அழைத்து தன் பக்கத்தில் உட்கார வைத்து கொண்டான் மனோ..

சந்தியாவின் மேஜையில் இருந்து சற்று தொலைவில் அமர்ந்து இருந்தான் மகிழன்.. அவன் வாய் மனோ விட பேசிக் கொண்டிருந்தாலும் அவன் பார்வை அடிக்கடி சந்தியாவின்  பக்கம் வந்து சென்றது..

அதுவும் அவள் அந்த ஐஸ்கிரீமை ரசித்து சுவைத்து சாப்பிடுவதையும் சாப்பிடும் பொழுது  அவள்  உதட்டில் ஒட்டி இருந்த துளி  ஐஸ்கிரீமை காணவும் அவனுக்குள் ஏதோ புரள்வதை போல இருந்தது..

ஐஸ்கிரீமால் சில்லிட்டு இன்னுமே ஐஸ்கிரீம் துளிகள் ஆங்காங்கே ஒட்டி இருக்கும் அவளின் இதழ்களை  தன் இதழால் வசபடுத்தி அவள் இதழில் ஒட்டி இருந்த அந்த  ஐஸ்கிரீமை சுவைக்க தவித்தன அவன் இதழ்கள்..

அவள் சாப்பிடும் அழகில் கிறங்கி போனவன் முயன்று  தன்னை கட்டுபடுத்தி கொண்டிருந்தான்.. ஒரு கட்டத்திற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் போக, மனோவிடம் சொல்லிவிட்டு உடனே எழுந்து மறுபக்கம் சென்றான் மகிழன்..

“சே.. ஏன் இப்படி இவளை பார்த்தால் மட்டும் நான் தடுமாறி போகிறேன்..? நான் நானாக இருக்க முடியலையே.. என்னை இப்படி ஆட்டி வைக்கிறாளே இந்த ராட்சசி...!!  இனிமேல் ரொம்ப நாள் காத்திருக்க முடியாது.. சீக்கிரம் இவளை என்னவளாக்கி கொள்ள வேண்டும்... “ 

என்று யோசித்தவாறு மார்புக்கு குறுக்காக கைகளை கட்டி கொண்டு இங்கும் அங்கும் நடந்து தன்னை கட்டு படுத்தினான் மகிழன்..! 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!