அழகான ராட்சசியே!!-27

 


அத்தியாயம்-27

திய உணவை முடித்த பிறகு ஒவ்வொருவரும் அவரவர்க்கு பிடித்த விளையாட்டை விளையாடலாம் என சொல்லி விட ஆண்கள் பாதி பேர் கிரிக்கெட் விளையாட சென்று விட பெண்களும் அவர்களுக்கு பிடித்த விளையாட்டில் மும்முரமாக இறங்கினர்..

மகிழன் ம் மனோ வும்  பேட்மிண்டன் ராக்கெட் ஐ எடுத்து கொண்டு விளையாட சென்றனர்.. சிறிது நேரம் விளையாண்டு கொண்டிருக்க, இன்னும் இரண்டு பேர் வந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டனர்..

அப்பொழுது மனோ க்கு போன் கால் வர, அவன் மகிழனை மட்டும் விளையாட சொல்லி நகர்ந்து சென்றான்..

மகிழன் ஒரு பக்கமும் மற்ற இருவரும் மறுபக்கம் நின்று விளையாட ஆரம்பித்தனர்...

மகிழன் ஒரு நேஷனல் ப்ளேயர் என்பதால்  எதிரில் இருந்தவர்களை அசால்ட்டாக தோற்கடித்து கொண்டிருந்தான்..

அந்த விளையாட்டில் லயித்து  விளையாடிக் கொண்டிருந்தவன் எதேச்சையாக  திரும்பிப் பார்க்க பக்கத்து கோர்ட்டில் சந்தியாவும் மற்றொரு பெண்ணுடன்  பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தாள்..

அவளையே  ஓரக்கண்ணால் பார்த்து ரசித்தவாறு தன் விளையாட்டில்    கவனத்தை செலுத்தி ஆடினான் மகிழன்..

எல்லா சுற்றிலும் மகிழனே வெற்றி பெற அதை கண்ட எதிர் அணியினர்  

“போங்க தல.. நீங்களே எல்லா பாய்ன்ட்ஸ்ம் எடுக்கறீங்க..நேஷனல் ப்ளேயர் நீங்க.. உங்க கூ ட போய் நாங்க  விளையாட முடியுமா? நாங்க  வர்ரோம்.. “ என்று புலம்பியவாறு நழுவி  சென்றனர்...

அருகில் விளையாண்டு கொண்டிருந்த  பெண்களும் தங்கள் ஆட்டத்தை முடித்து இந்த பக்கம் வர, அங்கு மகிழன் மட்டும் தனியாக நின்று கொண்டிருப்பதை கண்ட சந்தியாவுடன் விளையாண்ட பெண் ஷீலா வேகமாக  அவன் அருகில் வந்தவள் சற்று தொலைவிலயே மகிழனை அழைத்து

“மகிழன்.. எங்க கூட ஒரு மேட்ச் விளையாடுங்க? “ என்றாள் ஆர்வமாக..

அதை கேட்டு திடுக்கிட்ட சந்தியா அவள்  கையை பிடித்து கிள்ளி கண்ணால் வேண்டாம்  என்று  ஜாடை செய்து சொல்ல,  அதை கண்டு கொள்ளாமல்

“ஹே சந்தியா.. நீ வா.. நாம மகிழன் கூட ஒரு மேட்ச் விளையாடலாம்.. அவர் சூப்பரா விளையாடுவார் தெரியுமா?  “ என்று சந்தியாவின் காதில்  கிசுகிசுத்தவள் சந்தியாவை  இழுத்துக் கொண்டு இன்னும் கொஞ்சம்  மகிழன் அருகில் வந்தாள்..

மகிழனும் சந்தியாவை பார்த்து திகைத்து நின்றான்.. இவள் உடன் எப்படி விளையாடுவது என்று யோசித்து கொண்டிருக்க

அதே நேரம் ஷீலாவின் செய்கையால் திடுக்கிட்ட சந்தியா

“ஷீலா.. நீ மட்டும்  போய் விளையாடு..என்னை ஆள விடு..  நான் வர்ரேன்..” என்று ஷீலாவின் கையில் இருந்த அவள் கையை விடுவிக்க  முயன்றாள் சந்தியா..

ஆனால் ஷீலாவோ சந்தியாவின் கையை விடாமல்

“சும்மா வாடி.. மகிழன்  சூப்பரா விளையாடுவார்.. என்னால தனியா அவரை  சமாளிக்க முடியாது..  நீயும் வந்தா எனக்கு கம்பெனி கொடுப்ப இல்ல..  சும்மா வந்து கோர்ட் ல நில்..அப்பப்ப எனக்கு ஹெல்ப் பண்ணு.. மற்றதை நான் பார்த்துக்கறேன்.. “ என்று சொல்லி சந்தியாவின்  வாயை அடைத்து விட்டாள் ஷீலா..

பின் மகிழனை பார்த்தவள்

“என்ன மகிழன் விளையாடலாமா ? “   என்று ஷீலா கேட்க சந்தியாவின் முகத்தில் இருந்து அவளுக்கு தன்னுடன் விளையாட விருப்பமில்லை என புரிந்து கொண்டவன்

“இல்ல ஷீலா..  நான் ஆடி முடிச்சிட்டேன்.. நீங்க இரண்டு பேரும் விளையாடுங்க..”  என்று சொல்லி நழுவ பார்த்தான.. அதை கேட்டு  சந்தியாவுக்கும் அப்பாடா என்று நிம்மதியாக இருந்தது..

ஆனால் ஷீலா அவனை விடுவதாக இல்லை...

“மகிழன்.. இது ரொம்ப மோசம்..  மத்தவங்க கூட மட்டும் விளையாடறீங்க..  எங்க கூட விளையாட மாட்டிங்களா?  அதெல்லாம் முடியாது.. நீங்க இப்ப எங்க கூட ஆடித்தான் ஆகணும்.. “ என்று சிணுங்கி அவனை வற்புறுத்தினாள் ஷீலா. 

என்ன சொல்வதென்று தெரியாமல் மகிழன் சந்தியாவை பார்க்க அவளோ அவனை முறைத்தாள்.. உடனே அவனுக்கும் அவளை சீண்டி பார்க்க ஆசை வர,

“ஓகே ஷீலா.. உங்க பிரண்ட் க்கு ஓகே னா வாங்க விளையாடலாம்..”  என்று  சொல்லியவன்   அந்த கோர்ட்டின் ஒரு பக்கம் சென்று நின்று கொண்டான்..

 உடனே ஷீலாவும் துள்ளி குதித்தவாறு சந்தியாவை பிடித்து இழுத்து   கொண்டு அந்த கோர்ட்டின்  மறு பக்கம் சென்று நின்றாள்..  

இருவரும் ஆட்டத்தை ஆரம்பிக்க முதலில் ஷீலாவும் மகிழன் மட்டுமே விளையாடிக் கொண்டிருந்தார்கள்..

சந்தியா பேருக்காக நின்று கொண்டு அவர்கள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்..  ஒவ்வொரு பந்தயும் மகிழன் அழகாக எதிர் கொண்டு  விளையாட ஒவ்வொரு முறையும் ஷீலாவே  தவறவிட்டாள்..  

அதைக் கண்ட  ஷீலா

“ஹே சந்தியா... நீயும் கூட வந்து ஆடுடி..  மகிழன் பால் ஐ என்னால் சமாளிக்க முடியலை...  நீ என்கூட ஹெல்ப் பண்ணு.. “ என்று  அழைத்தாள்..

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் .. நீயே ஆடு.. “ என்று மறுத்தாள் சந்தியா..

அதை கண்ட மகிழன்

“ஷீலா.. உன் பிரண்டுக்கு என்னை  கண்டால் பயம் போல .. அதான் என் கூட விளையாட வர மாட்டேங்கறாங்க “ என்று அவளை  சீண்ட, அதில் வெகுண்டு எழுந்தவள்

“ஹலோ.. எனக்கா? பயமா? அதுவும் உங்களை பார்த்து ?  “ என்று உதட்டை சுளித்து நக்கலாக சிரித்து கழுத்தை வெட்டினாள்...  

“ஹ்ம்ம்ம் அப்ப என் கூட வந்து ஆடு  பார்க்கலாம்.. “  என்றான் மகிழனும் சிரித்துக் கொண்டே..

சந்தியாவும் சிலிர்த்துக் கொண்டு தன் பேட்மிண்டன் ராக்கெட் ஐ எடுத்து கொண்டு  ஷீலாவுடன் களம் இறங்கினாள்...

மகிழனும் சிரித்து கொண்டே மறுமுனையில் இருந்து செர்வ் பண்ண ஆரம்பித்தான்..  முதல் சில பந்துகள் ஷீலாவிடம் செல்ல அவளும் அதை எதிர்த்து விளையாட பின் சில பந்துகளை சந்தியாவின் பக்கம் வருமாறு மாற்றி அடித்தான்...

அவளும் அதை லாவகமாக எதிர்கொண்டு ஆடினாள்.. இவர்களின் ஆட்டத்தை பார்த்து  சற்று தொலைவில் உள்ளவர்கள் அனைவரும் அங்கு வந்தனர்..   

சந்தியா கேங் ம் அந்த மேட்ச் ஐ பார்த்துவிட்டு அந்த கோர்ட் அருகே ஓடி வந்தனர்..அவள் கேங் சந்தியாக்கு சப்போர்ட் பண்ண, மற்ற சிலர் மகிழனுக்கு சப்போர்ட் பண்ணினர்...   

இரண்டு பக்கமும் கைதட்டி அவர்களை உற்சாகப்படுத்தினர்.. அங்கு கேட்ட சத்தத்தால் அஜய், ப்ரவின் மற்றும் சிலரும் ஆர்வத்துடன் ஓடி வந்தனர்.. 

மகிழன் முதலில் இரண்டு பெண்களும் நன்றாக விளையாடட்டும் என்று அவர்களுக்காக விட்டு கொடுத்து மெதுவாக அடித்தும் சில  பந்துகளை வேண்டும் என்றே தவற விட்டு அவர்களை ஜெயிக்க வைத்து உற்சாக படுத்தினான்....

சிறிது நேரத்தில் சந்தியாவும் தன் காலரை தூக்கி விட்டுக் கொண்டு சிரித்தவாறே அவனுடன் உற்சாகமாக ஆடினாள்...அவர்கள் ஆட்டத்தை வேடிக்கை பார்த்த அஜய் கேங்

“தல... ஜாலி கேம் போதும்.. இப்ப ஒரு சின்ஸியர் கேம் ஆடுங்க பார்க்கலாம்... பாய்ன்ட்ஸ் வச்சு ஆடுங்க.. யார் வின் பண்றாங்கனு பார்க்கலாம்.. “ என்றான் சிரித்தவாறு...

ஏற்கனவே மகிழனை ஜெயித்திருந்ததால் அவனை ஜெயிப்பது சுலபம் தான் என எண்ணி சந்தியாவும் ஷீலாவுடன் சேர்ந்து ஒத்து கொண்டாள்...

இந்த முறை மகிழன் சீரியஸாக விளையாட, பெண்களால் ஒரு பாய்ன்ட் கூட எடுக்க முடியவில்லை.. அனைத்து பந்தையும் லாவகமாக எதிர்த்து ஆடியும் பந்து அவர்கள் கைகளுக்கு கிடைக்காமல் அடிக்க, இரண்டு நிமிடத்திலயே மகிழன் எல்லா பாய்ன்ட் ஸ் ஐயும் எடுத்து  முதல் சுற்றில் வெற்றி பெற்றிருந்தான்..

அதை கண்ட அஜய் கேங் கை தட்டி ஆரவரித்து சந்தியாவை பார்த்து நக்கலாக சிரித்து அவளை வெறுப்பேத்தினர்...

மகிழன் ஆடியதை கண்ட சந்தியா வும் திகைத்து நின்றாள்..

“இவ்வளவு நன்றாக விளையாடுபவன் முன்பு ஏன் அப்படி விளையாண்டான் ? “  என யோசிக்க,

“அப்படியென்றால் இதுவரை அவன் அவர்களுக்காக விட்டுக் கொடுத்திருக்கிறான் அவர்களை உற்சாக படுத்த.. “  என புரிந்தது..

அப்பொழுது அஜய் மற்றும் ப்ரவின் வேண்டும் என்றே அவளை சீண்ட அதை கண்ட  சந்தியாவுக்கு உள்ளே  கொதிக்க ஆரம்பித்தது

“எப்படியாவது இந்த மங்கியை  நான் ஜெயிக்க வேண்டும்.. இவனுங்க மூஞ்சியில கரியை பூசணும்... “  என்ற வெறி கொண்டு வெகுண்டு  எழுந்தாள் சந்தியா..

இதுவரை சும்மா விளையாட்டுக்காக விளையாடிக் கொண்டிருந்தவள் இப்பொழுது அடுத்த சுற்றில்  சீரியஸாக அவனுடன் ஆட ஆரம்பித்தாள் ..

அவனுடைய பந்துகளை தடுத்து எதிர்கொண்டு ஆடினாள் சந்தியா...

ஆனால் மகிழன் ஒரு நேஷனல் பிளேயர் என்பதால் அவளுடைய பந்துகளை லாவகமாக கையாண்டு தடுத்தான்.. சந்தியாவும் ஷீலாவும்  விடாமல் முயற்சித்தாலும் அவனை எதிர்க்க முடியவில்லை..

மகிழன் ஏற்கனவே ஐந்து புள்ளிகளை எடுத்திருக்க, எப்படியாவது அவனை  ஜெயித்து விட வேண்டும் என்று அவசரமாக ஒரு திட்டத்தை தீட்டினாள் சந்தியா..

அடுத்து சந்தியா பக்கம் செர்வ் பண்ண வேண்டும் என்றதால் பந்தை எடுத்து கொண்டு கார்னருக்கு சென்றாள் சந்தியா...

சந்தியா கேங் அவளை பார்த்து

“ஹே.. சந்தி.. நாமதான்  ஜெயிக்கணும்.. பார்த்து விளையாடு.. “ என்று கத்தினர்..

மறுபக்கமோ

“தல.. நாமதான் ஜெயிக்கறோம்.. விட்டுடாதிங்க.. “ என்று கத்தினர்..

சந்தியாவும் மகிழனை  நேராக பார்த்தவள் திடீரென்று கண் சிமிட்டி உடனே செர்வ் பண்ணினாள்..

அவளின் அந்த திடீர் செய்கையை கண்டு திகைத்து நின்றான் மகிழன்.. அதனால் சந்தியாவின் பந்தை தவற விட்டான்.. உடனே அதை கண்டு யெஸ் என்று கையை மடக்கி எக்கி துள்ளி குதித்தாள் சந்தியா..

அதை கண்டு இன்னுமே கவிழ்ந்து போனான் மகிழன்..

இதுவரை விளையாட்டை சீரியஸாக விளையாண்டு கொண்டிருந்தவனை சந்தியாவின் அந்த கண் சிமிட்டல் புரட்டி போட்டது...

மீண்டும் சந்தியாவே செர்வ் பண்ண, இப்பொழுது அவள் கையை மேலே தூக்கி பேட்டால் அடிக்க, அந்த நொடியில் அவளின் வெண்ணிற இடை கொஞ்சமாக தெரிய, அதில் இன்னும் இன்பமாய் அதிர்ந்தவன் அடுத்த பாலையும் தவறவிட்டான்..

அதைக்கண்டு சந்தியா குழுவினர் ஓ வென்று கத்தி  ஆர்ப்பரித்தனர்..

அதை கண்ட அஜய் குழுவினர் அவர்களை பார்த்து  முறைத்தனர்..

“தல...  பார்த்து விளையாடுங்க.. நாம ஜெயிக்கணும்..  இந்த சதி..  சந்திக்கிட்ட  தோற்க கூடாது.. “  என்று கத்தினர்

அதைக் கண்ட சந்தியா திரும்பி அவர்களை பார்த்து முறைத்தவள் மீண்டும் பந்தை செர்வ் பண்ண முதல் பந்தை போலவே இந்த முறையும் கண்சிமிட்டி செர்வ்  பண்ணினாள்..  

இந்த முறையும் மகிழன் தவறாமல் அந்த பந்தை தவற விட்டான்..  அதைப் போலவே அடுத்து வந்த எல்லா பந்தயும் சந்தியா  ஏதாவது குறும்பு பண்ணி செர்வ் பண்ணினாள்..

அவளின் ஒவ்வொரு ஆக்சனையும் கண்டு தடுமாறி போனான் மகிழன்..

எத்தனையோ கோர்ட்டுகளில் எத்தனையோ எதிராளியை போராடி தோற்கடித்திருக்கிறான் மகிழன்..  

ஆனால் இங்கே தன்னவளின் ஒவ்வொரு ஆக்சனையும் அதில் கலந்திருந்த அவளின் குறும்பையும் கண்டவனால் மனம் தடுமாறி  போய் விட அவள் குறும்பை ரசிக்க மட்டுமே முடிந்தது அவனால்..

அவளை எதிர்த்து போட்டியிட்டு விளையாட முடியவில்லை..

உடனே அன்றொரு நாள் அவன் அண்ணன் நிகிலன் அவனுடைய மனைவி மதுவிடம் தோற்றது நினைவு வந்தது...

“அப்படி என்றால் மதுவும் அன்று இது மாதிரி ஏதாவது குறும்பு செய்திருக்க வேண்டும்..” என்று சிரித்து கொண்டவன்

“இந்த பொண்ணுங்க எல்லாம் பயங்கர கேடிங்கதான் போல.. எப்படி எல்லாம் எங்களை மடக்கிடறாளுங்க.. “ என்று சிரித்தவாறு சந்தியாவின் அடுத்த பந்தை எதிர் நோக்கினான்..

இந்த முறை  சந்தியாவை பார்த்து அவன் குறும்பாக கண் சிமிட்டி சிரித்து வைக்க அவளோ அதில் கொஞ்சம் தடுமாறினாலும் உடனே சமாளித்து கொண்டு அவனை முறைத்தவாறு பந்தை போட்டாள்..

இந்த முறை வேண்டும் என்றே அந்த பந்தை தவற விட்டான்...

இப்படியாக இறுதியில் மிக குறைவான ஸ்கோரில் சந்தியாவிடம் கேவலமாக தோற்று போனான் மகிழன்..

சந்தியா அவனை பார்த்து நாக்கை துருத்தி பழிப்பு காட்டி கட்டை விரலை கீழாக காட்டி ஆட்டியும் தலையில் இரண்டு கையையும் கொம்பு போல வைத்து ஆட்டி சிரித்தும் அவனை சீண்டினாள்..

அதை கண்டு மகிழனும் அவளை ரசித்து  சிரித்து கொண்டே தன் தலையை இட வலமாக ஆட்டி கொண்டு, ஒரு கையால் தன் தலையை பின்னால் தடவியவாறு லேசாக வெட்கபட்டு சிரித்து கொண்டே  அந்த கோர்ட் ஐ தாண்டி சென்று கொண்டிருந்தான்..

பெண்கள் எல்லாரும் ஓடி வந்து சந்தியாவை தூக்கி சுற்ற, அதை கண்ட   அஜய் தலையில் அடித்து கொண்டே மகிழன் அருகில் ஓடி வந்தான்..

“என்ன தல.. இப்படி கவுத்திட்டிங்களே!!  நீங்க ஒரு நேஷனல் ப்ளேயர்.. எப்படி இவ்வளவு மோசமா விளையாண்டிங்க.?  உங்களை நம்பி நான் வேற அந்த காக்கா கிட்ட பெட் கட்டி வச்சிருந்தேன்..பார் இப்ப அந்த காக்கா ஜெயிச்சிட்டான்..

உங்களால எனக்கு 100 ரூபா  லாஸ்.. என்னாச்சு தல? நல்லாத்தான விளையாடுவிங்க? இன்னைக்கு என்னாச்சு ?  “என்றான் அஜய் சந்தேகமாக

“ஹா ஹா ஹா விடு டா  அஜய்.. சின்ன புள்ளைங்க..அவங்கள உற்சாக படுத்தத்தான் விட்டு கொடுத்தேன்..

நம்ம வீரத்தை எல்லாம் போயும் போயும் இந்த புள்ளைங்க கிட்டயா காண்பிக்கிறது ? பொழச்சு போகட்டும் விடு.. “  என்று சிரித்தான்

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதை போல ஏதோ சொல்லி அஜய் ஐ சமாளித்தான் மகிழன்..

தற்கு பிறகு எல்லோரும் நீச்சல் குளத்தில் இறங்க ஆயத்தமானார்கள்..  மகிழனும் அவன் அணிந்திருந்த டீசர்ட் ஐ கழற்றி விட்டு வெறும் பனியனுடன் த்ரீ போர்த்  ட்ராயருடன் நீச்சல் குளத்தில் குதித்திருந்தான்..

அங்கு பெண்கள் ஒரு பகுதியிலும் ஆண்கள் ஒரு பகுதியிலும் நின்று குளித்து விளையாடி கொண்டிருந்தனர்..

அன்பு மற்றும் அபர்ணா வந்து சந்தியாவையும் நீரில் இறங்க அழைக்க, ஏனோ அந்த மங்கி முன்னால் நனைந்த உடையில் நிற்க அவளுக்கு மனம் வரவில்லை..

“இல்லடி நான் வரலை..  நீங்க போங்க.. “  என்றாள்  இரண்டு பேரையும் பொதுவாக  பார்த்து..

அதைக் கேட்டு இரு பெண்களும் அதிசயத்தில் வாய் பிளந்து பார்த்தனர்...

எப்பொழுதும் தண்ணீரை கண்டால் துள்ளி குதிப்பாள் சந்தியா.. முதல் ஆளாக நீருக்குள் இறங்கியிருப்பாள்.. எத்தனையோ முறை அன்பும் அபர்ணாவும்  வர மாட்டேன்  வேண்டாம் என்று  மறுத்து சொல்லியும் அவர்கள் பேச்சை கேட்காமல் அவர்களையும் சேர்த்து நீருக்குள் இழுத்து சென்றிருக்கிறாள் சந்தியா..

அப்படிபட்டவள் இன்று வரவில்லை என சொல்ல அதை  கேட்டு ஆச்சர்யமாக இருந்தது இருவருக்கும்..

“ஹே.. நிஜமாகத்தான் சொல்றியா? ஏன் டி.. என்னாச்சு? “ என்றாள் அன்பு...

“வந்து.. நான் மாத்திக்க ட்ரெஸ் எடுத்துட்டு வரலை டீ.. “ என்று ஏதோ சொல்லி சமாளித்தாள்..

“அவ்வளவுதான.. நான் இரண்டு செட் எடுத்து வந்திருக்கேன் டி.. அதை போட்டுக்கலாம்.. நீ இப்ப வா..நிறைய வாட்டர் கேம்ஸ் இருக்கு டீ.. அதுவும் வேவ் பூல் கூட இருக்கு பார்.. ஜாலியா இருக்கும்.. பிகு பண்ணாம வாடி.. ”  என்று சந்தியாவின்  கை பிடித்து இழுத்தாள் அன்பு..

“ம்ஹூம்... நான் வரலை டீ.. எனக்கு என்னவோ போல இருக்கு.. நீங்க போங்க..நீங்க போய் என்ஜாய் பண்ணுங்க..” என்று மறுத்துவிட்டாள்..

அதற்கு மேல் அவளை கட்டாயபடுத்த முடியாமல் இரு பெண்களும்

“என்ன ஆச்சு இவளுக்கு ?.. திடீர்னு மூட் அவுட் ஆன மாதிரி இருக்கா..” என்று யோசித்துக் கொண்டே அந்த வேவ் பூலை  நோக்கி சென்றனர்.

அவர்கள் செல்வதையே பார்த்திருந்த சந்தியாவுக்கு எரிச்சலாக வந்தது..

"சே.. எல்லாம் இந்த மங்கியால் வந்தது.. இவன் வந்ததால் தான் என்னால்  ஜாலியாக என்ஜாய் பண்ண முடியவில்லை..” 

என உள்ளுக்குள் அவனை திட்டி கொண்டே நீச்சல் குளத்தின்  ஓரமாக  போட்டிருந்த சாய்வு இருக்கையில் சென்று சாய்ந்தவாறு  அமர்ந்தவள் தன் அலைபேசியை எடுத்து நோண்ட ஆரம்பித்தாள் சந்தியா...

சிறிது நேரம் கழித்து

“ஹே.. அங்க பார் டி.. ஒரு ஆள் செம ஹேண்ட்ஸம் ஆ இருக்கான்..சோ க்யூட்..  என்ன ஹைட்.. என்ன பாடி.. பாடி பில்டர் போல இருக்கான் பார்.. கன்டிப்பா நம்ம ஆபிஸ் இல்ல.. வாடி..அவன் கிட்ட போய் கொஞ்சம் விளையாடலாம்.. “ என்று  சந்தியாவின் அருகில் நின்றிருந்த  இரண்டு பெண்கள் பேசிக் கொண்டிருந்தனர்...

தன் அலைபேசியில் கவனத்தை வைத்திருந்தாலும் அந்த பெண்கள் பேசியது அவள் காதிலும் விழ,

“யாரை சொல்கிறார்கள்..? ” என்று ஓரக் கண்ணால் அவர்களை பார்த்தவள் அவர்கள் பார்வை போகும் திசையை பார்க்க, அங்கு மகிழன் அந்த நீச்சல் குளத்தில் தன் சகாக்களுடன்  பந்தை வைத்து விளையாடி கொண்டிருந்தான்..

அந்த பெண்கள் மகிழனைத்தான் பார்த்து சைட் அடித்து கொண்டிருந்தார்கள்..

அதை கண்டதும் உள்ளுக்குள் கொதிக்க ஆரம்பித்தது சந்தியா க்கு..

வாவ்.. நீ சொன்னது கரெக்ட் தான் டி.. செமயா இருக்கான்...சரி வா.. அவன்கிட்ட போய் கொஞ்சம் விளையாண்டு பார்க்கலாம்.. “ என்று இரண்டு பெண்களும் அந்த நீச்சல் குளத்தை நோக்கி சென்றனர்...

அவளுக்கு முன்னே நடந்த அவர்கள் உடையை பார்த்ததும் திக் என்றது சந்தியாவுக்கு..

இருவருமே நீச்சல் உடையில் இருந்தார்கள்.. அவர்கள் பேசியதில் இருந்து அவர்கள் வேற ஒரு அலுவலகத்தை சேர்ந்தவர்கள் என்று புரிந்தது..

“ஐயோ.. இந்த பிசாசுங்க போய் அவனை என்ன வம்பு இழுக்க போகுதுங்களோ? இந்த மங்கியும் இப்படியா பொது இடத்துல வந்து ஆடுவான் ? “ என்று கருவி கொண்டே அந்த பெண்கள் செல்வதையே பார்த்திருந்தாள்..

அவர்களும் அந்த நீச்சல் குளத்தில் இறங்கி நீந்துவதை போல பாவணை செய்தாலும் அவர்கள் பார்வை  மகிழனையே மொய்த்தது..

தூரத்தில் இருந்து சந்தியாவும் அவர்களையே தான் பார்த்து கொண்டிருந்தாள்.. மகிழனின் கவனத்தை கவர அந்த பெண்கள் என்னென்னவோ செய்து கொண்டிருக்க, மகிழன் அவர்களை கண்டு கொள்ளவேயில்லை..

ஆனால்  அவர்கள் அருகில் இருந்த மற்ற ஆண்கள் தானாக வந்து அந்த பெண்களிடம் வழிந்து கொண்டு என்னவோ பேசி கொண்டிருந்தார்கள்..

அதே நேரம் அருகிலிருந்த வேவ் பூலில் செயற்கை அலையை  தோற்றுவிக்கும் அறிகுறியாக விசில் அடித்து அனைவரையும் அங்கு அழைத்தார் அந்த பகுதியின் பொறுப்பாளர்..

அதை கண்டதும்   மகிழனுடன் விளையாடிக் கொண்டிருந்த அவன் சகாக்கள் வேவ் பூலை  நோக்கி சென்றனர்..

மகிழனுக்கு அதில் ஆர்வம் இல்லை என்பதால் அவன்  அந்த நீச்சல் குளத்தில் தன் நீண்ட கால்களை இன்னும் நீட்டி அந்த நீச்சல் குளத்திலயே அழகாக நீச்சல் அடித்து கொண்டிருந்தான்..

அந்த பெண்களும் விடாமல்  அவர்களுக்குள் ஏதோ சைகை செய்து பின் நீரின்  அடியில் மூழ்கினர்..

அதை கண்டதும் சந்தியாவிற்கு திக்கென்றது..

“ஐயோ..  இப்ப என்ன செய்யப் போறாளுங்களோ?  என்று பதற்றபட்டவள் தன் அலைபேசியை எடுத்து அதில் இருந்த  கேமரா வழியாக அங்கு நடப்பதை சூம் பண்ணி கவனிக்க ஆரம்பித்தாள்..

அவனின் நீண்ட கால்களுக்கு அந்த நீச்சல் குளமே குட்டையாக தெரிந்தது.. அந்த குளத்தில் நிக்காமல் அதை சுற்றி வந்தவாறு நீச்சல் அடித்து கொண்டிருந்தான் மகிழன்..

நீரின் அடியில் சென்றிருந்த பெண் ஒருத்தி திடீரென்று மகிழன் முன்னே எழுந்து அவனை இடித்தபடி நெருக்கமாக நின்றாள்..

திடீரென்று தன் முன்னே  வந்தவளை கண்டதும்  திடுக்கிட்டு தன் நீச்சலை நிறுத்தியவன் காலை ஊன்றி நின்றான்  மகிழன்..

ஆனால் அந்த பெண்ணோ அவனை ஒரு மாதிரி பார்த்தவாறு  வேண்டும் என்றே அவன் மீது உரச வர,  அதைக் கண்ட மகிழன் உடனே பின்னால் நகர்ந்து நின்று கொண்டவன் அடுத்த நொடி தன் கையை ஓங்கி அந்த பெண்ணின் கன்னத்தில் அறைந்திருந்தான்...

நல்ல வேளையாக எல்லாரும் வேவ் பூலில் பிஸியாகி விட, அந்த நீச்சல் குளத்தில் யாரும் இல்லை.. அதனால் மகிழன் அந்த பெண்ணை அடித்ததை யாரும் கவனிக்கவில்லை...

அடித்ததோடு அந்த பெண்ணை ஒரு எரித்து விடும் பார்வை பார்த்தவன் ஏதோ சொல்லி திட்டி கொண்டிருந்தான்..

தன் கேமரா வழியாக அந்த காட்சியை பார்த்து கொண்டிருந்த சந்தியாவுக்கு நிம்மதியாக இருந்தது... ஏனோ அவள் மனம் எல்லாம் சந்தோஷம் நிரம்பி வழிந்ததை போல இருந்தது..

அவன் வாய் அசைவில் இருந்து அவன் பேசுவதை புரிந்து கொள்ள முயன்றாள் சந்தியா..

“இந்த மாதிரி இன்னொரு தரம்  யார்கிட்டயாவது விளையாண்ட தொலச்சுடுவேன்.. ஜாக்கிரதை.. “ என்று விரல் நீட்டி மிரட்டி எச்சரித்தவன் மீண்டும் ஒரு உஷ்ணப் பார்வையை பார்த்து விட்டு வேகமாக அந்த நீச்சல் குளத்தில் இருந்து வெளியேறி உடை மாற்றும் இடத்திற்கு சென்றான்...

அந்த பெண்களும்  முகம் கன்றிப் போய் தலை குனிந்தவாறு வெளியேறினர்..

அதை கண்டதும் துள்ளி குதித்தாள் சந்தியா..

“சபாஸ் டா மங்கி.. அவளுக்கு நல்லா டோஸ் விட்ட.. “ என்று தனக்குள் சொல்லி கொண்டவள்

“இத்தனை பேர் இருக்க இவளுங்க எதுக்கு இந்த மங்கியை டார்கெட் பண்ணினாளுங்க ? “  என்று யோசித்தவள் அப்பொழுது தான் அந்த பெண்கள் மகிழனை வர்ணித்தது நினைவு வந்தது...

உடனே தன் அலைபேசியில் இருந்த கேமரா வை  மகிழன் பக்கம் திருப்பினாள்..

அவனும் இன்னும் அந்த பெண்ணின் மீது  இருந்த கோபத்தில் உடல் விரைக்க, கை முஷ்டிகள் இறுகி,  கோபம் கொப்புளிக்க விடுவிடுவென்று நடந்து சென்று கொண்டிருந்தான்..

சந்தியா அவனை உற்று பார்த்தாள்..  இதுவரை அவள்  அவனை  ஒரு பொருட்டாக மதித்ததில்லை.. அதனால் அவன் எப்படி இருக்கிறான் என்ன ட்ரெஸ்  போடுகிறான் என்று கூட கவனித்ததில்லை அவள்..

இன்று முதல் முறையாக அவனை உற்று பார்க்க,  தினமும் உடற்பயிற்சி செய்வதால் கட்டான அவன் உடல்  கோப்பும் உருண்டு திரண்டிருந்த  அவன்  புஜங்களும் அவனின் ஆறடி உயரமும் பார்க்க  ஒரு போர் வீரனை போல இருந்தான்..

அதுவும் சற்றுமுன் நடந்த நிகழ்ச்சியால் இறுகி முகத்தில் கோபம் கொப்புளிக்க,  எதிரில் வருபவரை துவம்சம் செய்யும் அளவுக்கு ஆவேசத்துடன் நடந்து கொண்டிருந்தவனை  கண்டவளுக்கு படபடக்க ஆரம்பித்தது..

 ஒரு ஆண்மகனின் அத்தனை இலக்கணமும் அவனிடத்தில் கண்டாள் சந்தியா..  அதோடு அவனுடைய டேலன்ட் ம்   மேலும் பெண்களிடத்தில் காட்டும்  மரியாதை + ஒதுக்கம் அவள்  கண் முன்னே வந்தது...

எந்த பெண்ணிடமும் சென்று  அவன் வழிந்து நின்றதில்லை.. இப்பொழுது கூட அந்த பெண் ஆபாசமாக போஸ் கொடுத்து அவன் முன்னே தோன்றிய பொழுது கூட அவன் பார்வை தப்பாக அந்த பெண்ணின் மீது படரவில்லை..

மாறாக கோபம் கொண்டு அவளை அறைந்ததை  எண்ணியவளுக்கு

“அப்படிபட்டவன் என்னிடம் மட்டும் ஏன் அப்படி நடந்து கொள்கிறான்? “ என்று யோசிக்க ஆரம்பித்தாள்..

அவன் அவளிடம் காதலை புரபோஸ் பண்ணிய அந்த நிமிடங்கள் கண் முன்னே வர, அவனின் குறும்பு பார்வையும் கண் சிமிட்டலும் அவனுடைய சீண்டலும் தன்னிடம் மட்டும் தான் என புரிய அவளுக்கு ஏனோ கர்வமாக இருந்தது அவளையும் அறியாமல்..

“இவ்வளவு பெரிய ஹீரோ.. எல்லா பொண்ணுங்களும் அவனையே சுற்றிவர, அவர்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் என் காதலை யாசித்து என்னிடம் கெஞ்சி கொண்டிருக்கிறானே இந்த மங்கி... “  என்று தோன்ற, உள்ளுக்குள் பெருமையாகவும் கர்வமாகவும் இருந்தது சந்தியாவுக்கு...

உடனே தன் எண்ணம் போகும் போக்கை கண்டு திடுக்கிட்டாள் சந்தியா..

“என்னாச்சு எனக்கு? நான் ஏன் இந்த மங்கியை,  நெட்டையனை  பற்றி யோசித்து கொண்டிருக்கிறேன்? “ என்று அவசரமாக தன்னையே ஆராய்ந்தாள்..

அவள் இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாம்.. அதற்குள் விதி சதி செய்ய, வேகமாக அவளிடம் வந்தாள் அன்பு... ! 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!