அழகான ராட்சசியே!!-28

 


அத்தியாயம்-28

ன்பழகி  அதற்குள் குளித்து முடித்து விட்டு வேற உடைக்கு மாறி இருந்தவள் சந்தியாவை நோக்கி வந்தாள்..

சந்தியா அருகில் வந்ததும் அவளை கண்ட சந்தியா ஆச்சர்யபட்டு

“என்னடி வம்பு? அதுக்குள்ள தண்ணிய விட்டு வெளில வந்திட்ட? தண்ணிய கண்டா  எரும மாதிரி அதில விழுந்து புரண்டு எழுந்து வரவே மாட்டியே.. என்னாச்சு? சீக்கிரம் வந்திட்ட? “ என்றாள் சந்தியா சிரித்தவாறு

“ப்ச்... நீ இல்லாம போர் அடிச்சது டீ.. ஒரு இன்ட்ரெஸ்ட் ஏ இல்ல.. அதான் வந்திட்டேன்.. ஆப்பு இன்னும் உள்ளயே கிடக்கறா.. “ என்றவாறு சந்தியாவின் அருகில் இருந்த மற்றொரு சாய்வு இருக்கையில் அமர்ந்தாள் அன்பு..

பின் சந்தியாவை பார்த்தவள் ஏதோ கேட்க வர, பின் வேண்டாம் என்று கேட்காமல் விட என கலவையாக அவள் முகத்தில்  தோன்றி மறைந்தது..

அதைக் கண்ட சந்தியா

“ஏன் டி..  என் கிட்ட ஏதாவது கேட்கணுமா? ஏன்  தயங்கி நிக்கிற ? “  என்றாள் சந்தியா

உடனே அன்பு தைரியத்தை வரவழைத்துக் கொண்டே

“வந்து... கேட்கறேனு தப்பா நினைக்காத.. சந்தி.. உனக்கும் மகிழனுக்கும்  நடுவுல ஏதாவது சம்திங்.. சம்திங் ? “   என்றாள்  சந்தியாவை ஆராய்ச்சி பார்வையுடன்

அதைக் கேட்டு ஒரு நொடி அதிர்ந்து போனாள் சந்தியா..  உடனே தன்னை சமாளித்து கொண்டவள்

“அதெல்லாம் எதுவும் இல்லையே..  ஏன் அப்படி கேட்கிற ? “  என்றாள் சந்தியா 

“வந்து...  சில இதெல்லாம் பார்க்கிறப்போ எனக்கு அப்படி தோன்றியது..  அதான் உன்கிட்ட நேரடியா கேட்கிறேன். என்கிட்ட மறைக்காமல் சொல்லு டி. “   

“நான்தான் சொன்னேனே..  அதெல்லாம் ஒன்னும் இல்ல டி..  ஆமா எதெல்லாம் பார்த்து உனக்கு அப்படி தோணுச்சு ? ...  எங்க சொல்லு பாக்கலாம்.. “  என்று தன் தோழியிடம் பிட் ஐ போட்டாள் சந்தியா

“ஹ்ம்ம்ம் எப்பவும் தண்ணில ஆடறவ  இன்று மகிழன் இருக்கிறதால தான குளிக்க வரல..அதோடு கேமரா வழியா நீ அவரையே பார்த்துக் கொண்டிருந்ததை நானும் பார்த்தேன்..

அப்புறம் மகிழன் பக்கத்துல நிக்க கூடாதுன்னு தானே பிறந்த நாளை மாற்றி சொன்ன... எல்லாம் எனக்கு தெரியும் டீ.. “  என்று கண் சிமிட்டி சிரித்தாள் அன்பு..

அதை கேட்டவள் ஒரு நொடி திகைத்தாலும் தன்னை வெளி காட்டி கொள்ளாமல் சமாளித்தவள்

“ஹ்ம்ம் காமாலைக் கண்ணுக்கு  கண்டதெல்லாம் மஞ்சளா  தெரியுமாம் !!  அது மாதிரி உன்னுடைய இந்த நொல்ல கண்ண  வச்சிக்கிட்டு எல்லாத்தையும் தப்பா பார்த்தா உனக்கு எல்லாமே தப்பா தான் தெரியும் டீ..

நான் ஏன் அந்த மங்கியை கேமரா வழியா பார்த்தேன் தெரியுமா? “  என்றவள்  சற்று முன் நடந்த நிகழ்ச்சியை விளக்கினாள்..

அதைக் கேட்ட அன்பு

“ஐயோ டா.. இப்படியெல்லாம் கூட இருக்காங்களா..  நல்ல வேளை  மகிழன் அவங்களுக்கு நல்லா  டோஸ் கொடுத்துட்டார்.. “ என்று ஆச்சர்யமானாள் அன்பு..

“ஹ்ம்ம்ம் இப்ப புரியுதா? நான் என் கேமரா வழியா அந்த பொண்ணுங்களைத்தான் பார்த்து கிட்டிருந்தேன்.. எங்கயாவது அவனை எதுவும் மாட்டி விட்டுடுவாங்களோ என்று... “ என்று சிரித்தவள்  அன்பு ன் கன்னத்தை பிடித்து கிள்ளினாள்...  

“ஹ்ம்ம்ம் அப்படி னா உங்களுக்குள்  எதுவும் இல்லையா? “  என்றாள்  அன்பு ஏமாற்றத்துடன்

“ஆமா டீ.. அதைத்தானே நான் முதலிலிருந்தே சொல்லி கேட்டு இருக்கேன் அதெல்லாம் ஒன்னும் இல்லை.. “  என்று சமாளித்தாள் சந்தியா..

அதை கேட்ட அன்பு சிறிது நேரம் எதையோ யோசித்தவள்

“இல்லை டி... கண்டிப்பா மகிழன் உன்னை லவ் பண்றார் னு  தான் தோனுது.. “ என்றாள்  அன்பு யோசனையாக..

அதைக் கேட்ட சந்தியா  மீண்டும் உள்ளுக்குள் அதிர்ந்து போனாள்.. ஆனாலும் தன்னை மறைத்துக் கொண்டு

“எதை வைத்து அப்படி சொல்ற டீ ? “  என்றாள் தன் ஆர்வத்தை மறைத்து கொண்டு

“ஹீ ஹீ ஹீ.. நம்ம ஆபிஸ்லயே எத்தனை காதல் ஜோடிகளை நான் கண்டுபுடித்து உன் கிட்ட சொல்லி இருக்கேன்..அது என்னுடைய டேலன்ட் டீ.. ஒருத்தங்களை பார்த்தாலே அவங்க லவ்வர்ஸ் ஆ இல்லையானு  நான் கண்டுபுடிச்சிடுவேனாக்கும் .. “ என்று காலரை தூக்கி விட்டு கொண்டாள் அன்பு..

“போதும் நிறுத்து டீ.. ரொம்பதான் பெரிய டேலன்ட்.. வெளில சொல்லிடாத.. அப்புறம் ஊர்ல இருக்கிற எல்லா அப்பா அம்மாவும் அவங்க பொண்ணு யாரையாவது லவ் பண்றாளானு பார்த்து சொல்லுனு  உன் வீட்டு வாசல்ல வந்து நின்னுட போறாங்க.. “ என்று சிரித்தாள் சந்தியா..

அவளை முறைத்த அன்பு விடாமல்

“இல்ல டீ..  நீ இன்னைக்கு காலையில லேட் ஆ வந்த இல்லை.. அப்ப மகிழன் உன்னை காணாமல் எவ்வளவு டென்ஷனா இருந்தார் தெரியுமா?  அதோடு உன்னை அவள் என்று உரிமையோடு அழைத்தார்..

யாரையும் குறிப்பாக பெண்களை மரியாதை  குறைவாக அவர் அழைக்க மாட்டார்.. ஆனால் உன்னை சொல்றப்ப மட்டும்  அவள் என்று தான் உரிமையோடு அழைத்தார்.. அதுவும்  நீ வரவில்லை உன் வீட்டு போன் நம்பர் எங்ககிட்ட இல்லை   என்றதும்  எங்க கிட்ட எப்படி  எரிஞ்சு விழுந்தார் தெரியுமா?..

அவர் எப்பவும் யார் கிட்டயும் அப்படி நடந்துகிட்டதில்லை.. எப்பவும் எல்லார்கிட்டயும் ஜாலியாதான் இருப்பார்..

அப்புறம் நீ தொலைவில் நிற்கும் பொழுதே  அது நீதான் என்று கண்டு கொண்டார்.. அவருக்கு உன் மீது விருப்பம் இல்லை என்றால் உன்னை எப்படி தூரத்தில் இருந்தே  அவருக்கு தெரிந்ததாம்??

உன் கூடவே  சுத்திக்கிட்டு இருக்கோம் நாங்க..  எங்களுக்கே  அங்கு நிற்பது  நீதான் என்று தெரியவில்லை.. ஆனால் அவர் சரியாக பார்த்து விட்டார்

அதுவுமில்லாமம்  பேருந்துல்  அவர் பாடும் பொழுது அடிக்கடி அவர் பார்வை உன்னிடமே வந்து நின்றது அதிலிருந்தே  நானும் உன்னை கவனிக்க ஆரம்பித்தேன்..

அவர் பார்க்கும் பொழுதெல்லாம் நீ  அவரை  முறைத்துக் கொண்டிருந்த..  அதிலிருந்தே எனக்கு டவுட்  தான்..  கன்ஃபார்ம் பண்ற மாதிரி க்ரவுண்ட்ல நீ அவரை வேண்டும் என்றே  தவிர்ப்பதும்  புரிந்தது

அதுவும் கடைசியா நீ மகிழன் உடன் பேட்மிண்டன் விளையாண்ட பொழுது  அவர் உன்னிடம் தோற்றது என்னால் நம்பவே முடியவில்லை..  

அவர் ஒரு  நேஷனல் ப்ளேயர் தெரியுமா ?  அப்படிப்பட்டவர் உன்னிடம் தோற்றார்  என்றால் கன்டிப்பாக உன்னிடம் மயங்கிப் போய் இருக்கத்தான் தோற்றிருக்க வேண்டும்

அப்படி இல்லை என்றால் உனக்கு விட்டு கொடுப்பதற்காக தோற்று  இருக்க வேண்டும்.. இதில் இருந்தே அவர் மனம் எனக்கு புரிந்து விட்டது..  கன்டிப்பாக அவருக்கு உன் மீது ஒரு இதுதான்..  

உண்மையை  சொல்லு டி.. மகிழன்  உன்னிடம் எதுவும் புரபோஸ் பண்ணினாரா?  “ என்றாள் அன்பு ஆர்வமாக

அனைத்தையும் கேட்டு சந்தியா திகைத்தாள்..

“நிஜமாகவே இந்த மங்கிக்கு  என் மீது அவ்வளவு லவ் ஆ? “ என்று அவசரமாக யோசித்தவள் அன்பு இன்னும் அவளையே பார்த்து கொண்டிருக்க,

ஏனோ அவளிடம் மகிழன் தன்னிடம் புரபோஸ் பண்ணியதை  சொல்ல மனம்  வரவில்லை.. உடனே முயன்று  தன்னை மறைத்துக் கொண்டவள்

"வாவ்..  சூப்பரா கதை சொல்ற வம்பு.. பேசாம உன் கதையை,  கற்பனையே எழுதி சினிமா க்கு அனுப்பு..  சூப்பர் ஹிட்டாகும்..”   என்று தன் தோழியின்  தலையில் ஒரு குட்டு வைத்தாள் சந்தியா..

 அன்பு அவளை முறைத்து கொண்டே

“அப்ப நிஜமாகவே நான் நினைக்கிற மாதிரி எதுவும் இல்லையா?  என்றாள்  ஏமாற்றத்துடன்

“சந்தியா.. மகிழன் இதுவரை புரபோஸ் பண்ணலைனாலும் கன்டிப்பா சீக்கிரமே உன்னிடம் புரபோஸ் பண்ணுவார் பார்...அப்படி அவர் உன்னிடம் புரபோஸ் பண்ணினால்  உடனே அதை ஏற்றுக் கொள்.. மகிழன் மாதிரி ஒருத்தர் ஹஸ்பண்ட் ஆ  வர கொடுத்து வச்சிருக்கணும்.. “ என்று சிரித்தாள் அன்பு..

அவள் மகிழனை புகழ்ந்து சொன்னதில் கடுப்பான சந்தியா

“போதும் நிறுத்துடி உன் மகிழன் புராணத்தை..அப்படி என்ன இருக்காம் அவன் கிட்ட?  “ என்று முறைத்தாள் சந்தியா..

“ஹ்ம்ம் போடி.. கழுதைக்கு தெரியுமாம்  கற்பூர வாசம்..  உனக்கெல்லாம் அவரைப் பற்றி தெரியாது டி..  இந்த காலத்துல இப்படி ஒரு ஜென்டில்மேன் ஐ  எங்க பார்க்க முடியும்?

எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் கொஞ்சம் கூட அலட்டிக்காம எவ்வளவு இயல்பா எல்லாருடனும் பழகறார்.. அதோடு அவர் குடும்பத்தோடு ரொம்ப அட்டாச்ட் டி...

வார விடுமுறையில கூட மற்ற பசங்க மாதிரி  ஊரை சுற்றாமல் அவர்  தன் குடும்பத்துடன் தான்  நேரத்தை செலவிடுவாராம்..  எந்த ஒரு ஆண் தன் குடும்பத்தில அட்டாச்ட் ஆ இருந்தால்  தனக்கு வரப்போகும் மனைவியையும்  அன்பாக பார்த்துக் கொள்வான்..

எத்தனை பொண்ணுங்க அவரிடம் புரபோஸ் பண்ணி இருக்காங்க தெரியுமா?  அவ்வளவு ஏன் நம்ம  மனநிலை ஆலோசகர் ரோகிணி அவர்  மீது பைத்தியமாக சுற்றிக் கொண்டிருக்கிறாள்..

அவள் எவ்வளவு அழகு.. நீயெல்லாம் அவ கால் தூசிக்கு கூட சமமாக மாட்ட.. எத்தனை பேர் ரோகிணியை சுற்றி வர, அவளோ மகிழனுக்காக காத்து கொண்டிருக்கிறாள்..

அப்படி பட்ட அழகியை கூட கண்டு கொள்ளாமல் மகிழன் எல்லாருக்கும் பொறுமையாக எடுத்துச் சொல்லி அவர்களுக்கு அட்வைஸ் பண்ணி எல்லாரையும் மறுத்து விட்டார்..

இந்த காலத்துல இப்படி கூட  ஒரு ஆளை பார்க்க முடியுமா ? “  என்று சிலாகித்தாள் அன்பு..

“போதும் நிறுத்துடி.. உனக்கு அவர் மீது அவ்வளவு அக்கறை இருந்தா நீயே அவரை கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே.. “  என்று முறைத்தாள் சந்தியா..

"ஹ்ம்ம்ம்  எனக்கு அந்த கொடுப்பினை இல்லையே..நானும் ஸ்கூல் டைம் ல இருந்து எவனாவது லவ் லெட்டர் கொடுப்பானானு பார்த்து காத்து  கிட்டிருக்கேன்.. ஒருத்தனும் இதுவரைக்கும் ஒரு பேப்பரை கூட நீட்டலை..

அதுக்கெல்லாம் ஒரு முகராசி வேணும் டீ.. எனக்கெல்லாம் ஊர்ல கருப்பையா சுப்பையானு எவனாவது பொறந்திருப்பான்.. அவனை கட்டிகிட்டு வாழ்க்கை வண்டியை ஓட்ட வேண்டியதுதான்...

ஆனால் நீ அப்படி இல்லை டி.. உன் அழகுக்கும் அறிவுக்கும் நிறைய ராஜகுமாரன்கள் காத்துகிட்டிருப்பாங்க...எனக்கு என்னவோ நீ மகிழனை  கல்யாணம் பண்ணிக்கிட்டால்  சூப்பரா இருக்கும் னு தோனுது..

உன் கேரக்டருக்கு அவர்தான் பெர்பெக்ட் மேட்ச்..  நான் சொல்றதை கேள்.. அவர் உன்னிடம் எதுவும் புரபோஸ் பண்ணினால் பிகு பண்ணாம உடனே ஏற்றுக் கொள்..”  என்றாள் அன்பு..

சந்தியாவும் அவளுக்கு ஏதோ பதில் சொல்ல வர,  அதற்குள்  மயில் சற்று தொலைவில் இருந்து இவர்களை அழைத்தான்..

“அன்பு..  சந்தியா... ஸ்நாக்ஸ் ரெடி... சீக்கிரம் வாங்க.. “ என்று அழைத்தான்...

அவன் ஸ்நாக்ஸ் என்றதும் வாயெல்லாம் பல்லாக தன் தோழியை மறந்தவள் உடனே வேகமாக எழுந்த  அன்பு

“ஐ ஸ்நாக்ஸ் ... சீக்கிரம் வாடி போகலாம்.. “ என்று  சந்தியாவின் கை பிடித்து இழுத்து சென்றாள்..

சந்தியாவும் சிரித்தவாறு  எழுந்து அவள் பின்னே சென்றாள்..

ல்லாருமே தங்கள் குளியலை முடித்து வேற உடைக்கு மாறி அங்கு கூடி இருந்தனர்...

சந்தியாவும் ஒரு தட்டில் சிற்றுண்டியை எடுத்து கொண்டு மற்றொரு கப் ல்  காஃபி யையும் எடுத்து கொண்டு ஓரமாக சென்று நின்று கொண்டாள்..

ஆனால் அவள் கண்களோ மகிழனை தேடியது.. தொலைவில மனோ மற்றும் வினித் நின்று பேசி கொண்டிருக்க, மகிழன் மட்டும் மிஸ்ஸிங்..

“எங்க போய்ட்டான் இந்த மங்கி? “  என்று அவள் கண்கள் அவனை  தேட

தேடும் கண் பார்வை தவிக்க... “ என்று பாடிகொண்டே  சிரித்தவாறு அங்கு வந்தாள் அன்பு..

உடனே கன்னம் சிவக்க தன்னை மறைத்து கொண்டவள் புருவத்தை உயர்த்தி என்ன என்று கேட்டு முறைத்தாள் சந்தியா..

“ஹே. நீ இப்ப மகிழனைத்தான தேடின ? “ என்றாள் அன்பு குறும்பாக சிரித்தவாறு...

“போடி.. நான் ஆப்பு ஐ தேடினேன்.. “ என்று சமாளித்தாள் சந்தியா..

“ஹ்ம்ம் நம்பிட்டேன் மேடம்.. நீ ஆப்பை தேடினாள் இங்க பார்.. அவ உன்  பக்கத்திலயே தான் இருக்கா.. அவ டீம் மேட்ஸ் கூட கடலை போட்டுகிட்டு இருக்காளே.. உன் கண்ணுக்கு ஏன் மேடம் தெரியலை? “ என்று கண் சிமிட்டி சிரித்தாள் அன்பு

“ஓ.. இங்கதான் நிக்கறாளா? ஹீ ஹீ ஹீ .. இப்ப அவ வேற ட்ரெஸ் போட்டிருக்கிறதால எனக்கு அடையாளம் தெரியலை டீ..!!  “ என்று அசட்டு சிரிப்பை சிரித்து சமாளித்தாள் சந்தியா..

“ஹ்ம்ம்ம் நல்லா சமாளிக்கிற டி சந்தி... என்னைக்காவது என்கிட்ட மாட்டத்தான போற.. அன்னைக்கு வச்சிக்கிறேன் உன்னை.. “ என்று முறைத்தவள் தன் சாப்பாட்டு வேலையில் பிஸியாகி போனாள் அன்பழகி..

ல்லாரும் சிற்றுண்டியை முடித்திருக்க, மனோ எல்லாரையும் அழைத்து க்ரூப் போட்டோ எடுக்க வரிசையாக நிற்க சொன்னான்..

எல்லாரும் அசெம்பில் ஆக, சந்தியாவும் முதல் வரிசையில் கடைசியில் ஓரமாக நின்றிருந்தாள்..

அந்த ரிசார்ட் லயே க்ரூப் போட்டோ எடுத்து ப்ரேம் போட்டு கொடுப்பது வழக்கமாகும்.. அதனால் அந்த புகைப்படக்காரர் எல்லாரையும் அட்ஜஸ்ட் பண்ணி நிற்க வைத்து கொண்டிருந்தார்..

எல்லாரும் வந்திருக்க மகிழன் மட்டும் இன்னும் வரவில்லை.. யாரும் அவனை பற்றி சொல்லி காத்திருக்கவும் சொல்லவில்லை..

சந்தியாவின்  கண்களோ மகிழனை தேடியது..

“எங்க போனான் இந்த மங்கி..? ஒரு வேளை அந்த பெண்ணை அடித்தது எதுவும் ப்ராப்ளம் ஆய்டுச்சோ? எங்க போய்ட்டான்..?  “ என்று கண்களால் தேடி கொண்டிருக்க, அன்பு சந்தியாவை பார்த்து குறும்பாக சிரிக்க, உடனே தன் தேடலை நிறுத்தி கொண்டாள்..

“இவ ஒருத்தி.. என்னையே வேவு பார்த்துகிட்டிருக்கா.. “ என்று உள்ளுக்குள் புலம்பி கொண்டாள்.

அந்த புகைப்படக்காரரும் எல்லாரையும் நிற்க வைத்த பின்

“ரெடி ஸ்டார்ட் ஒன், டூ.. “ என்க சந்தியாவுக்கு தவிப்பாக இருந்தது...

இந்த அவுட்டிங் ஐ ஏற்பாடு செய்ததே மகிழன்தான்.. அப்படி இருக்க அவனை விட்டுவிட்டு இந்த க்ரூப் புகைப்படம் எடுக்க என்னவோ போல் இருந்தது.. ஆனால் எப்படி அதை இவர்களிடம் சொல்வது என்று தெரியாமல் தவித்து கொண்டிருந்தாள்...

அவர் மூன்று சொல்ல ஆயத்தமாக, அதே நேரம் அந்த ரிசார்ட் ன்  ஆபீஸ் ரூம் ல் இருந்து மகிழன் வெளிவந்தான்..

அந்த ரிசார்ட் ற்கு பணத்தை கட்டி ரசீதை வாங்கி கொண்டு  வெளிவந்து கொண்டிருந்தான்..

அவனை கண்டதும் தன்னையும் மறந்து

“மகிழ்... “ என்று  கை அசைத்து கத்தினாள் சந்தியா..

தொலைவில் இருந்தாலும் சந்தியாவின் குரலை கண்டு கொண்டவன் நிமிர்ந்து பார்க்க,  அவள் தன்னை பார்த்து கை அசைத்ததும் அதுவும் அவள் தன்னை மகிழ் என்று அழைத்ததும் தெளிவாக கேட்க, திகைத்து போய் அப்படியே நின்று விட்டான்..

உடனே சந்தியா தன் உதட்டை கடித்து கொண்டு கீழ குனிந்து கொண்டாள்..

மகிழனை கண்ட மனோ வும் அந்த புகைப்படக்காரரை வெய்ட் பண்ண சொல்லி மகிழனை பார்த்தவன்

“மகி.. கம் பாஸ்ட்... “ என்று அழைத்தான்..

உடனே மகிழனும் தன்னை சமாளித்துக் கொண்டு வேகமாக அவர்களை நோக்கி ஓடிவந்தான்..

குளித்து முடித்திருந்தவன் வேற ஒரு த்ரீ போர்த் ட்ராயரும் ஒரு இளமஞ்சள் நிற  டீசர்ட் ம்  அணிந்திருந்தான்..

அவன் ஓடி வரும்போது முன்னால் இருந்த முடிக்கற்றைகள் அழகாக குதித்து ஆடின...

வேகமாக ஓடி வந்தவன் முதல் வரிசையில் நின்று கொண்டிருந்த சந்தியாவின் அருகில் சென்று  யாருக்கும் சந்தேகம் வராமல் எதார்த்தமாக அவள் அருகில் நின்று கொண்டான்..

ஏற்கனவே எல்லாரையும் சரியான பொசிசனில் வைத்திருந்த அந்த புகைப்படக்காரர் உடனே தன் கேமராவை கிளிக்கினார்.. இரண்டு மூன்று முறை எடுத்து கொண்டார்..

உடனே மகிழனும் தன் அலைபேசியை எடுத்து அவரிடம் கொடுத்தவன் அதில் ஒரு புகைப்படத்தை எடுக்கச் சொன்னான்..

அவரும்  அந்த அலைபேசியை அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டிருக்க அப்போதுதான் சந்தியாவிற்கு அவள் மகிழன் அருகில் நின்று கொண்டிருப்பது  உரைத்தது..

அவனின் அந்த நெருக்கம்,  உருண்டு திரண்டிருந்த அவன் வலிய புஜங்கள்,  அவன் கையில் தெரிந்த அந்த ஆண்மை, உள்ளே பனியன் இல்லாமல் வெறும் டீசர்ட் மற்றும் போட்டிருக்க, அதன் வழியாக வெளியில் தெரிந்த அவன் திரண்ட மார்பு என அவனை ஓரக் கண்ணால்  காண  உள்ளே படபடப்பாக இருந்தது சந்தியாக்கு..  

அவன்  தலையிலிருந்து இன்னுமே நீர் சொட்டிக் கொண்டிருக்க அதை கவனித்தவள்

“பார்..  தலையைக் கூட துவட்டாமல் அப்படியே வந்துவிட்டான்.. “  என்று உள்ளுக்குள்  பதற ஒரு டவல் கொண்டு அவன் தலையை செல்லமாக துடைத்துவிட  துடித்தன  அவள்  கரங்கள்..

கூடவே அருகில் நெருங்கி நின்றிருந்தவன் வலிய  கரங்கள் அவள் அருகில் இருக்க, அதனுடன் தன் கரங்களை பிணைத்து கொள்ள அவள் உள்ளே துடிக்க, உடனே கன்னங்கள் தானாக சிவந்தன...

அவனையே ஓரக்கண்ணால் ரசித்து   பார்த்திருந்தாள் சந்தியா..

அவள்  தன்னை பார்ப்பது தெரிந்தும் அவளை பார்க்காமல் உள்ளுக்குள் சிரித்தவாறு நேராக பார்த்து கொண்டிருந்தான் மகிழன்...

சந்தியா வுக்கு இன்னுமே படபடப்பாக இருந்தது..  எப்படா இந்த ஆள் போட்டோவை  எடுத்து முடிப்பான் என்று இருந்தது..

அவரும் அந்த அலைபேசியை சரி செய்து புகைப்படத்தை எடுத்து முடிக்க, மகிழன் ஓடிச் சென்று அதை வாங்கி ஒரு முறை சரி பார்த்து திருப்தியுற்றவனாய் அதை  தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்..

பின் மனோ முன்னால் வந்து  எல்லாரும் உற்சாகத்துடன் அந்த டீம் அவுட்டிங் ல் கலந்து கொண்டதற்கு நன்றி சொல்லி பாராட்டினான்..

 கூடவே டீம் அவுட்டிங் ஐ ஏற்பாடு பண்ணி அதை பொறுப்பேற்று வெற்றிகரமாக  நடத்தியதற்கு மகிழனுக்கும் நன்றி சொன்னான் மனோ.. உடனே அதை கேட்டு  அஜய்

“எல்லாரும் தலைக்கு ஒரு  ஓ போடுங்க.. “  என்று சொல்ல, எல்லாரும் ஓ வென்று கத்தி ஆர்பரித்தனர்...

கூடவே மனோக்கும் ஒரு ஓ போட்டு கலாய்க்க, பின் அனைவரும் சிரித்தவாறு கலைந்து அவரவர் பேருந்திற்கு சென்றனர்..

பேருந்தில்  திரும்பும் பொழுதும் அதனுள்ளே ஆட்டம் பாட்டம், கலாட்டா என்று எல்லோரும் படு உற்சாகமாக இருந்தனர்..

மகிழனும் தன் இருக்கையில் அமர்ந்திருந்தவன் தன் அலைபேசியை எடுத்து சற்று முன் எடுத்த அந்த புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தான்..அதில் அந்த புகைப்படக்காரர் மூன்று நான்கு ஸ்டில் போட்டோ எடுத்து இருந்தார்

முதலில் எடுத்திருந்த போட்டோவை உற்று பார்க்க, அதில் சந்தியா மகிழனை ஓரக் கண்ணால் பார்த்தது தெளிவாக பதிவாகி இருந்தது..அதை கண்டு கொண்டவன்

“ராட்சசி... எப்படி பார்த்து வச்சிருக்கா பார்.. ஆனா நேர்ல மட்டும் அவ மனசில் இருப்பதை ஒத்துக்க மாட்டா.. சரியான ப்ராடு.. கேடி.. இவளை எப்படி வெளி கொண்டு வருவது? “ என்று யோசனையுடன்   உள்ளுக்குள் சிரித்து கொண்டே   அதை மட்டும் தனியாக சேவ் பண்ணி வைத்துக் கொண்டான்..

சந்தியாவும் தன் சகாக்களுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாமல்  ஓரக் கண்ணால் மகிழனை அப்பப்ப பார்த்து வந்தாள்  

அவன் அவனுடைய  அலைபேசியில்  சற்றுமுன் எடுத்த அந்த புகைப்படத்தை தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று புரிய  அது எப்படி வந்திருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது.. ஆனால் அவனிடம் எப்படி கேட்பது என்று தயக்கமாக இருந்தது..

அதனால் எதுவும் கேட்காமல் அமைதியாகி விட்டாள்..

ரு வழியாக பேருந்து அலுவலகத்தை அடைய மணி ஒன்பதை தாண்டியிருந்தது.. அதற்குப் பின் ஒவ்வொருவரையும் பத்திரமாக வீட்டிற்கு  அனுப்பி வைத்தான் மகிழன்..

சந்தியா வும் தன் கேங் இடம் விடைபெற்று தன் ஸ்கூட்டி நிறுத்தி இருந்த இடத்தை நோக்கி சென்றாள்.. அதற்குள் அவள்  அருகில் வந்த மகிழன்

“தியா.. ரொம்ப லேட் ஆகிடுச்சு..  நீ எப்படி போவ? இரு  நான் உன்னை  ட்ராப் பண்றேன் " என்றான்..

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்..எனக்கு ஒன்னும் பயமில்லை..  நானே போய்க்கிறேன்.. நிறைய முறை 10 மணிக்கு மேல கூட போய்ருக்கேன்.. நீங்க கிளம்புங்க.. “ என்று சொல்லி முறைத்து  விட்டு தன் ஸ்கூட்டியை நோக்கி சென்றாள்..

ஆனால் மகிழனுக்கு அவளை  தனியாக அனுப்ப மனம் வரவில்லை..  காலையிலேயே வேகமாக வண்டியை ஓட்டி வந்திருந்தாள்.. இப்ப இரவில் எங்கயாவது சென்று  இடித்து விட்டால் என்று மனம் பதைக்க, வேகமாக சென்று அவன் காரை எடுத்து வந்தவன் எக்சிட் கேட் அருகே அவளுக்காக காத்திருந்தான்..

சந்தியாவும் தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் பண்ணி கிளம்பி  செல்ல  அவளை  தன் காரில்  பின் தொடர்ந்தான் மகிழன்.. சந்தியா சிறிது தூரம் சென்றதும் மகிழன் தன் பின்னால் வருவது தெரிந்ததும்  வண்டியை வேண்டும் என்றே வேகமாக ஓட்டினாள்.. 

அதை கண்டவன் லேசாக அதிர்ந்து

“ராட்சசி.. வேணும்னே வேகமா போறா பார்... இவளை என்ன பண்ணலாம்? எப்படிதான் இவ வீட்ல வச்சு சமாளிக்கிறாங்களோ? “ என்று உள்ளுக்குள் புலம்பியவாறு தன் காரின் வேகத்தை அதிகபடுத்தினான் அவளை தவற விட்டுவிடக்கூடாது என்று..

சந்தியாவும் சிறிது நேரம் தன் ஸ்கூட்டியின் வேகத்தை அதிக படுத்தியும் பின் குறைத்தும் என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டே  மாறி மாறி மகிழனுக்கு போக்கு காட்டியவள் அவள் இருக்கும் ஏரியாவை அடைந்ததும்  ஓரமாக  வண்டியை நிறுத்தினாள்..

மகிழன் கார் ம்  வந்து அங்கு  நிற்கவும் தன் ஸ்கூட்டியில் இருந்து ஹெல்மெட் ஐ கழட்டியவாறு  இறங்கியவள்  விடுவிடுவென்று மகிழன் கார் அருகில் சென்றவள்

“ஹலோ மங்கி.. இப்ப எதுக்கு என்னை ஃபாலோ பண்றீங்க ? “  என்று  முறைத்தாள் சந்தியா.. அதற்குள் அவள் தன்னிடம் சண்டைக்கு வரப்போகிறாள் என்று அவசரமாக தன்னை தயார் படுத்தி கொண்டவன்

“ஹா ஹா ஹா லுக் பொண்டாட்டி..  இது கவர்மென்ட் ரோட்.. இதுல யார் வேண்டுமானாலும் எங்க வேண்டுமானாலும் போகலாம்..அதற்காக இந்த வழியில் வரும் எல்லாரும் உன்னை ஃபாலோ பண்ணுவதாக அர்த்தமில்லை.. “ என்று  கண் சிமிட்டி சிரித்தான்..  

“ஹ்ம்ம்ம் நக்கலு?.. எனிவே எனக்கு பாடிகார்டா  வந்ததுக்கு ரொம்ப நன்றி..  இது  என் ஏரியா.. இனிமேல் நான் போய்க்கிறேன்.. நீங்க கிளம்புங்க.. “ என்று அவனை விரட்டினாள்..

“ஓகே பேபி.. பார்த்து  பத்திரமா போ..  குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ் அன்ட் ஹேவ் எ  குட் வீக் என்ட்.. “ என்று உதடு குவித்து முத்தமிட்டு கண் சிமிட்டி சிரித்தான்..

அதில் கன்னம் சிவந்தாலும் தன்னை மறைத்து கொண்டவள்

“ஹலோ.. நீங்க சொல்லாட்டியும் எனக்கு எல்லா வீக் என்ட் ம்  குட் வீக் என்ட் தான். நீங்களும் பத்திரமா போய் சேருங்க... வயசு  பசங்களை புடுச்சிக்கணு நிறைய மோகிணி இந்த பக்கமா  சுத்திகிட்டிருக்காம்..

பயப்படாம அந்த மோகிணிக்கிட்ட சிக்கிடாம  பத்திரமா வீடு  போய் சேருங்க..  பை மங்கி..” என்று அவளும் முறைத்தவாறு பின் நக்கலாக சிரித்து  தன் வண்டியை ஸ்டார்ட் பண்ணி வேகமாக கிளம்பி சென்றாள்...

மனமெல்லாம் உற்சாகத்துடனும் துள்ளலுடனும் செல்லும் சந்தியா அறியவில்லை. அந்த வீக் என்ட் அவளுக்கு ஒரு மோசமான   வீக் என்ட் ஆக இருக்க போவதை.....

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!