அழகான ராட்சசியே!!-29

 


அத்தியாயம்-29

ன்று ஞாயிற்றுக்கிழமை..!

மணி ஏழரையை தாண்டியும் இன்னும் இழுத்து போர்த்தி உறங்கிக் கொண்டிருந்தாள் சந்தியா..

அப்பொழுது அவளுடைய அறை கதவை  திறந்துகொண்டு உள்ளே வந்தாள் மது..சந்தியா இன்னும் உறங்கிக் கொண்டிருப்பதை கண்டவள் நேராக அங்கே சென்று

“ஏய் எரும மாடு.. என்னடி இன்னும்  தூங்கிட்டு இருக்க?  சீக்கிரம் எழுந்திரு? “ என்று  அவள் முதுகில் ஓங்கி அடித்தாள் மது..

திடீரென்று யாரோ தன்னை அடிக்கவும்  திடுக்கிட்டு விழித்தாள் சந்தியா..

“எவ அவ?   காலங்காத்தாலேயே என்னை டிஸ்டர்ப் பண்றது ?   என்று திட்டிக்கொண்டே கண்ணை திறந்தாள் சந்தியா..

அவள் எதிரில்  தன் இடுப்பில் கையை வைத்துக் கொண்டு அவளை பார்த்து முறைத்தவாறு நின்று கொண்டிருந்தாள் மது..

“என்னது?  இந்த மந்தி இப்ப கனவுலயும் வர ஆரம்பிச்சிட்டாளா? வந்ததும் வந்தாளே அழகா சிரிச்சுகிட்டு வரக்கூடாது.. அந்த ரியல் மந்தி மாதிரியே வந்து இப்படி முறைச்சுக்கிட்டு நிற்கிறாளே..!!

கனவுல கூட என்னை வந்து தொல்லை பண்றா..பேசாம போடி.. “ என்று சிணுங்கியவள் மீண்டும் திரும்பி படுத்து போர்வையை இழுத்து தலைவரை மூட முயல,

உடனே மது அவள் மேல் இருந்த போர்வையை பிடுங்கியவள்

“இது கனவல்ல நிஜம் னு இப்ப காட்டறேன் டீ.” என்றவள் சந்தியாவின்  கையில்  நறுக்கென்று கிள்ளினாள்..

அதில் ஆ வென்று அலறியவள்

“ஹே மந்தி.. பிசாசு.. எரும.. எதுக்குடி இப்படி கிள்ளற? .. நீ வேணா போலீஸ்க்காரன் பொண்டாட்டியா இருக்கலாம்.. மாம்ஸ் இப்படி எல்லாம் உனக்கு ட்ரெயினிங் கொடுத்து வச்சிருக்கலாம்..அதையெல்லாம்  உன் புருஷன் கிட்ட காட்டுடி.. என்கிட்ட ஏன் காட்டற? “ என்று முறைத்தவாறு எழுந்து அமர்ந்தாள் சந்தியா...

 “ஏன் டி..  மணி என்னாகுது? இன்னும் இழுத்து போர்த்தி தூங்கிட்டு இருக்க.. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்ர நேரம் ஆச்சு.. சீக்கிரம் எழுந்து குளிச்சிட்டு ரெடியாகு.. “ என்று முறைத்தாள் மது.

“என்னது?  மாப்பிள்ளை வீட்டுக்காரங்களா? யார் டி அது? அவங்க எதுக்கு என் வீட்டுக்கு வர்ராங்க. ? “ என்று முழித்தாள் சந்தியா...

“ஹ்ம்ம் உன் வீட்ல உன் அக்கா ஒருத்தி இருக்கா இல்ல.. அவளுக்கு இன்னைக்கு நிச்சயமாம்.. அதுக்குத்தான் மாப்பிள்ளை வீட்ல இருந்து வர்ராங்க.. “ என்று நக்கலாக சிரித்தாள் மது

“என்னது? எனக்கு தெரியாம எனக்கு அக்காவா? மணி... சொல்லவே இல்லை.. எனக்கு தெரியாம சின்ன வீடு செட் பண்ணிட்டியா? இல்ல இல்ல  எனக்கு அக்கானா அப்ப அது பெரிய வீடா இருக்கும்.. மணி... தி இஸ் நாட் ஃபேர்...என் ருக்குக்கு நீ துரோகம் செய்யலாமா?  “ என்று புலம்ப

அதற்கு மேல் தாங்க முடியாமல் மது கடுப்பாகி

“ஏய்.. போதும் நிறுத்துடி.. உனக்குத்தான்  அக்கா தங்கச்சி னு  யாரும் இல்லை இல்ல..அப்புறம் உன் வீட்டுக்கு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்ராங்கனா அப்ப  இந்த வாயாடிய  பார்க்கத்தானு தெரியாதா?

அதைக் கூட புரிஞ்சிக்க முடியாத நீயெல்லாம் பையை தூக்கிட்டு வேலைக்கு போறேனு கிளம்பிடற? உன்னை எல்லாம் எவன் வேலைக்கு சேர்த்தது ? “   என்று நக்கலாக சிரித்தாள் மது..

அதைக் கேட்டு லேசாக அதிர்ந்த சந்தியா

“என்னது ? என்னை பார்க்க வர்ரானா? எவ அவன்? “ என்று மீதி இருந்த தூக்கமும் விலகி விட நன்றாக எழுந்து அமர்ந்தாள்..

“ஹ்ம்ம்ம் என்னை கேட்டா ? .. அத நீதான் சொல்லணும்.. உனக்குத்தான நிச்சயம்?

“வாட்? நிச்சயமா? யார்க்கு நிச்சயம்? எதுக்கு நிச்சயம் ? “ என்று மீண்டும் திருதிருவென்று முழித்தாள் சந்தியா..

“ஐயோ.. முருகா.. காலங்காத்தாலயே இப்படி என்னை இவ கிட்ட கோர்த்து விட்டுட்டியே.. இவளை பற்றி தெரிஞ்சுதான் ருக்கு ஆன்டி என்னை காலையிலயே வர சொன்னாங்களா? இவளை என் தலையில் கட்டிட்டு நைஸா எஸ் ஆகிட்டாங்களே..!! 

இவளை சமாளிக்கிறதுக்கு நான் 50 பேர்க்கு சமைச்சிடலாம்.. நான் போய் கிச்சன் வேலையை பார்த்துகிட்டு அவங்களையே அனுப்பறேன். “ என்று மது வெளியேற முயல சந்தியா எட்டி அவள் கையை பிடித்து நிறுத்தினாள்.

“ஏய் மந்தி.. சும்மா உளறாம தெளிவா சொல்லு... என் வீட்ல என்ன நடக்குது? நீ எதுக்கு இப்படி காலங்காத்தால இங்க வந்து காளியாட்டம் ஆடிகிட்டிருக்க? “ என்று முறைத்தாள் சந்தியா..

“ஹ்ம்ம்ம் சொல்லுவ டி சொல்லுவ.. இதுவும் சொல்லுவ.. இன்னமும் சொல்லுவ.. ருக்கு ஆன்டியும் வேல் அங்கிளும் கெஞ்சி கேட்டதால் தான் நானே வந்தேன்.. இல்லைனா உன் மேல இருக்கிற கோபத்துக்கு உன் கல்யாணத்துக்கு கூட வந்திருக்க மாட்டேன்... “ என்று முறைத்தாள் மது..

“ஐயோ.. கொஞ்சம் புரியற மாதிரி சொல்லித் தொல டீ.. யார்க்கு கல்யாணம்? “ என்று தன் முடியை பிய்த்து கொண்டாள் சந்தியா

“ஆங்.. எனக்கும் என் புருஷனுக்கும்..” என்று  சொல்லி நக்கலாக சிரித்தாள் மது..

உடனே வேகமாக எழுந்தவள்  மது கழுத்தில் கையை  வைத்து லேசாக நெறித்த சந்தியா

“ஹோய்.. இப்ப சுத்தி வளைக்காம  நேரா  மேட்டர மட்டும் சொல்லு டீ .. இல்லைனா இப்படியே உன்னை சுவத்தோடு வச்சு தூக்கிட்டு என் மாம்ஸ் க்கு நானே இரண்டாந்தரமா போய்டுவேன்..ஒழுங்கா என்ன நடக்குதுனு சொல்..  “ என்று மிரட்ட, மதுவும்

“ஏ ராட்சசி.. கையை எடுடி... கழுத்து வலிக்குது.. “ என்று கெஞ்சினாள்.. அதில் சந்தியா அவள் கையை விலக்க, தன் கழுத்தை தடவி கொண்டே

“பாவி.. இப்படியா கழுத்தை நெறிப்ப? பாவம்.. இல்ல இல்ல ரொம்ப ரொம்ப பாவம் உன் புருஷன்.. உன்கிட்ட மாட்டிகிட்டு என்ன முழி முழிக்க போறானோ? “ என்று அவள் முடிக்கும் முன்னே சந்தியா மீண்டும் மதுவை முறைக்க

“ஓகே ஒகே.. சில் டி... மறுபடியும் என் கழுத்தை புடிச்சிடாத..ஒரு நேரம் போல ஒரு நேரம்  இருக்காது.. நான் பாட்டுக்கு பொட்டுனு போய்ட்டா என் புருஷன் பாவம்.. “ என்று மது மீண்டும் நீட்டி முழக்கினாள்..

அதில் இன்னும் கடுப்பான சந்தியா

“ஐயோ.. எப்ப இருந்து டீ இப்படி எல்லாம் பேச ஆரம்பிச்ச..?  இந்த மாம்ஸ் ரொம்ப மோசம்.. இப்படி உன்னை பேச விட்டு கெடுத்து வச்சிருக்கார்... அவருக்கு இருக்கு ஒரு நாளைக்கு.. “ என்று முறைத்தாள் சந்தியா...

“என் மாமா பத்தி அப்படி எல்லாம் சொல்லாதடி “  என்று வெட்க பட, சந்தியாவோ தலையில் அடித்துக் கொண்டாள்

“ஓகே ஓகே டென்ஷன் ஆகாத.. இன்னைக்கு  உனக்குத் தான் நிச்சயமாம்..  நேத்து நைட்டு தான் வேல் அங்கிள்  போன் பண்ணி என்கிட்ட சொன்னார்..

ஏன் டி மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் பண்ற  அளவுக்கு வந்திருக்கு.. ஆனா நீ என்கிட்ட ஒரு வார்த்தை கூட மூச்சு விடல.. நீ எல்லாம் என்னுடைய உயிர் தோழி..  வெளியில் சொன்னால் வெட்கக் கேடு.. “  என்று முறைத்தாள் மது..

அதைக்கேட்டு அதிர்ந்த  சந்தியா

“என்னது? நிச்சயமா? யார் டீ சொன்னா? “  என்றாள் அதிர்ச்சியுடன்

“ஏய் சந்தி..போதும் நீ நடிச்சது.. என் கிட்ட அடி  வாங்க போற..   என்னை வச்சு காமெடி பண்ணினது  போதும்..  ஒழுங்கா போய் குளிச்சிட்டு ரெடியாகு.. தெரியாத்தனமா  உன்னை ரெடி பண்ற இந்த கஷ்டமான வேலையை நான் ஏத்துகிட்டேன்.. “ என்று முறைத்தாள் மது..

அதை கேட்டு இன்னும் குழம்பிய சந்தியா மதுவிடன் ஏதோ கேட்க வர அதற்குள் அங்கே வந்தார் ருக்கு..

“என்னடா மது குட்டி.. இந்த எரும எழுந்தாளா இல்லையா? “ என்றவாறு கரண்டியுடன் உள்ளே வந்தார் ருக்கு...

“அப்பாடா.. வாங்க ஆன்டி.. நீங்களே வந்து சொல்லுங்க.. என்னமோ யார்க்கு நிச்சயம் யார்க்கு கல்யாணம் னு என்கிட்ட ஆக்ட் பண்ணி கிட்டிருக்கா.. நீங்களே இவ மண்டையில உரைக்கிற மாதிரி நங் னு ஒரு குட்டு வச்சு தெளிவா  சொல்லுங்க..

வேணும்னா நம்ம ட்யூட்டியை எக்சேன்ஜ் பண்ணிக்கலாமா?  நான் சமையலை கவனிக்கறேனே.. நீங்க இவளை கவனிங்க..  இவ  கூட என்னால போராட முடியாது.. “ என்று சிரித்தாள் மது..

அதை கேட்டு இன்னும் குழம்பிய சந்தியா

“வாட் ருக்கு? எனக்கே தெரியாம என்ன நடக்குது நம்ம வீட்ல?  யாருக்கு நிச்சயம்? எதுக்கு நிச்சயம்? யார்க்கு கல்யாணம்? “ என்று மீண்டும் அதே பாட்டை பாடினாள்  சந்தியா

 அதைக் கேட்டதும் கடுப்பான மது

“பாருங்க ஆன்டி.. இவ மண்டைல நட்டு கழன்டு போச்சு போல.. முன்ன இருந்து இதே பாட்டைத்தான் திரும்ப திரும்ப பாடிகிட்டு இருக்கா.. நீங்களே என்னானு கேளுங்க.. “ என்று முறைத்தாள் மது

“ஏன் டீ .. நேற்று நைட் உன் அப்பா நாளைக்கு உனக்கு நிச்சயம் பண்ண வர்ராங்கனு சொன்னதுக்கு மண்டைய மண்டைய ஆட்டிட்டு உள்ள போன.. அதுக்குள்ள எல்லாம் மறந்து போச்சா..?  “ என்று தன் மகளை பார்த்து   முறைத்தார் ருக்மணி..

“வாட்? நிச்சயமா? நான் இன்னும் மாப்பிள்ளையவே  பார்க்கலையே? அதுக்குள்ள எப்படி? “ என்று தலையை சொறிந்தாள் சந்தியா..

“என்கிட்ட நல்லா வாங்கி கட்ட  போற டீ... போன வாரம் தான் மாப்பிள்ளை போட்டோவை காட்டினோம்.. நீ என்ன சொன்ன? நாங்க பார்த்தா போதும் னு சொன்ன.. அதுவும் பொண்ணெல்லாம் பார்க்க வேண்டாம்.. நேரா நிச்சயத்தை வச்சுக்கலாம் னு சொன்ன இல்ல..

உன்னை நம்பிதான் நாங்களும் மாப்பிள்ளை வீட்ல பேசிட்டு இன்னைக்கு நிச்சயம் பண்ண வரச் சொல்லிட்டோம்... இப்ப என்னடி ப்ளேட் ஐ மாத்தற?  “ என்று  முறைத்தார் ருக்கு..

 அப்பொழுது தான் சந்தியாவிற்கு நினைவு வந்தது.. அன்று அந்த மங்கி மேல் இருந்த கடுப்புல அவள் அப்பா சொன்ன மாப்பிள்ளைக்கு அவள் சரி என்று தலை அசைத்தது நினைவு வந்தது..

அதைத்தான் அவளின் சம்மதமாக எடுத்துக் கொண்டு உடனே அவர்  நிச்சயம் ஏற்பாடு செய்தது புரிந்தது..

அன்று ஒரு வேகத்தில் அவர் சொன்ன மாப்பிள்ளைக்கு  சரி என்று தலை ஆட்டியவள்  இன்று ஏனோ அதை ஒத்துக்க முடியவில்லை..

தன் அன்னையை  பாவமாக பார்த்தவள்

“மா... கல்யாணத்துக்கு அதுக்குள்ள என்ன அவசரம் ? இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே.... “  என்று இழுத்தாள் சந்தியா

அதைக் கண்ட ருக்கு கடுப்பாகி

“ஏன் டீ.. நீ தான எனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைங்கனு நச்சரிச்ச? உன்கிட்ட கேட்டுத்தான எல்லா ஏற்பாடும் பண்ணினது? இப்ப என்ன இப்படி குண்டை தூக்கி போடற? “ என்று முறைத்தார்...

“அது அப்ப.. ஆனால் இப்ப என்னவோ...  இப்ப கல்யாணம் வேண்டாம் னு தோனுது... ப்ளீஸ் ருக்கு.. இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே.. “ என்றாள் பாவமாக..

“ஹ்ம்ம் இதத்தான் சிறுபிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராது னு சொல்வாங்க.. என்னைக்கும் சின்ன புள்ளைங்க பேச்சை கேட்டு எதுவும் ப்ளான் பண்ண கூடாதுங்கிறது.. 

அடியேய்...  நீயாச்சு..  உன் அப்பனாச்சு.. நீ அவர்கிட்டயே எதுனா பேசிக்க..மது குட்டி.. நீ வாடா நாம சமையலை பார்க்கலாம்.. “ என்று  மதுவை இழுத்து கொண்டு சமையல் அறை பக்கம் சென்றார் ருக்மணி..

அவர் சென்ற சில நொடிகளில் வேல்மணி உள்ளே வந்தார்...

“என்ன பாப்பா? என்னாச்சு? உன் ஆத்தா என்னவோ உளறா ? உன்கிட்ட கேட்டுத்தான இந்த நிச்சயத்தை ஏற்பாடு பண்ணினேன்? இப்ப என்னடா?  “ என்றார் பரிவாக..

அவர் குரலில் இருந்த கனிவை பரிவை கண்ட   சந்தியாவிற்கு கஷ்டமாக இருந்தது

“இல்லப்பா... கல்யாணத்துக்கு அதுக்குள்ள என்ன அவசரம்? .. இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே.. “  என்றாள்  தயங்கியவாறே

“அதனால் என்னடா .. இப்ப நிச்சயம் மட்டும் பண்ணிக்கலாம்..  கல்யாணத்த ஆறு மாசம் கழிச்சு வச்சிக்கலாம்..” என்று அவள் தலையை வாஞ்சையுடன் தடவினார்...

அதில் நெகிழ்ந்து  அவர் மார்பில் சாய்ந்து கொண்டவள்

“இல்லப்பா.. என்னமோ கஷ்டமா இருக்கு.. என்னனு சொல்ல தெரியல.. இந்த நிச்சயம் எல்லாம் இப்ப வேண்டாமே.. இன்னும் கொஞ்ச நாள் தள்ளி வச்சுக்கலாம்.. “ என்று  சிணுங்கினாள்..

“பாப்பா.. உன் கிட்ட கேட்டு தானே நானும் மாப்பிள்ளை வீட்ல பேசினேன்.. இப்ப அவங்களும் இங்கு வர கிளம்பிட்டாங்க..திடீர்னு  இப்ப போய் எப்படிடா வேணாம்னு சொல்றது?  சரி அவங்க  வரட்டும்..  சும்மா பார்த்துட்டு போகட்டும்..  அதுக்கு பிறகு பேசிக்கலாம்..

நீ போய் சீக்கிரம் ரெடியாகுடா.. அவங்க வர்ர  நேரம் ஆயிடுச்சு..  உனக்கு பொருத்தமான மாப்பிள்ளையத்தான் அப்பா பார்த்திருக்கேன்..

ஒரு வேளை உனக்கு மாப்பிள்ளை ய  பார்த்து பிடிக்கலைனா விட்டுடலாம்.. உனக்கு பிடிக்காதது எதுவும் நடக்காது..கவலை படாதடா...”  என்று மீண்டும் அவள் தலையை வாஞ்சையுடன் தடவினார்  மணி..

ஒருவேளை அவர் தன் அன்னையை போல

“நீ சொல்லிதானே இதை ஏற்பாடு செய்தேன்.. இப்ப ஏன் மாத்தற.. அதெல்லாம் உன் பேச்சை கேட்க முடியாது.. நீ வந்து சபைல நிக்கணும்..  “  என்று அவளை அதட்டி மிரட்டி சொல்லி இருந்தாலாவது அவரை எதிர்த்து பேச வந்திருக்கும் சந்தியாக்கு..  

ஆனால் அவரோ தன் மகள் விருப்பம் தான் பெருசு என்ற ரீதியில் கனிவாக அவளிடம் பேச அதற்கு மேல்  பிடிவாதம் பிடித்து அவருக்கு  மறுத்து சொல்ல மனம் வரவில்லை சந்தியா க்கு...

தன் தந்தையிடமிருந்து விலகியவள் 

“சரிப்பா.. நான் போய் ரெடியாகிறேன்.. " என்று சொல்லி குளியலறைக்குள் சென்றாள்..

உள்ளே சென்றவள் பல்லை துலக்கி கொண்டு குளிப்பதற்காக ஷவரை திறந்து விட்டு அதன் அடியில் நிற்க, அந்த நீர் அவள்  மேனியில் பட்டு தெரிக்க,  அடுத்த நொடி மகிழன் கண் முன்னே வந்து நின்றான்...

“ஹோய் பொண்டாட்டி.. “ என்று  அவளை குறும்பாக பார்த்து கண் சிமிட்டி சிரித்தான்...

அதில் திடுக்கிட்டவள் அவளையும் மீறி அவனை பற்றிய  நிகழ்வுகள் எல்லாம் அவள் மனதில் ஓடியது..

அவன் காதலை அவளிடம் புரபோஸ் பண்ணியதும்,  பேருந்தில் அவளுக்காக உருகி பாடியதும் அதை தொடர்ந்து அவன் அவளிடம் சவால் விட்டதும் நினைவு வர உடனே சிலிர்த்து கொண்டவள் தலையை சிலுப்பி கொண்டாள்.

“டேய் மங்கி..கொரில்லா... என்கிட்டயா சவால் விட்ட.. இப்ப பார்.. நான் சொன்ன மாதிரி இந்த வாரமே எனக்கு நிச்சயம்.. அடுத்த முகூர்த்தத்திலயே என் கல்யாணத்தை வச்சுக்க சொல்றேன்..

நீ எப்படி அடுத்த முகூர்த்தத்தில கல்யாணத்தை பண்ணுவ?.. இந்த சந்தியாதான் எப்பவும் ஜெயிப்பா.. “ என்று உள்ளுக்குள் கொக்கரித்தவள்,  அடுத்த நொடி அவள் முகம் வாடி போனது அவளையும் அறியாமல்...

எதையோ இழப்பதை போல மனதை பிசைந்தது..

கூடவே  அன்பு மகிழனை பற்றி சொல்லியதெல்லாம் மனதில் ஓடியது..  எதை எதையோ நினைத்துக் கொண்டு அப்படியே நின்றிருக்க வெளியே குளியலறை கதவை வேகமாக தட்டினாள் மது..!

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!