அழகான ராட்சசியே!!-31

 


அத்தியாயம்-31

ன் எதிரே நின்றிருந்த மகிழனை கண்டதும் அடுத்த நொடி மகிழ் என்று கத்தியவாறு வேகமாக  எழுந்தவள் பாய்ந்து சென்று அவனை இறுக்கி கட்டிக் கொண்டாள் சந்தியா...

மகிழனும் மகிழ்ந்து போய் தன் மார்பின் மீது முகம் புதைத்து இருந்தவளை மென்மையாக அணைத்துக் கொண்டான்..  

அவளோ எங்கே தான் விலகினாள் மகிழன் தன்னவன் தன்னை விட்டு பிரிந்து விடுவானோ என்ற அச்சத்தில் அவனை இன்னும் இறுக்கி கட்டிகொண்டு அவன்  மார்பில் முகத்தை புதைத்துக் கொண்டாள்..

அவனுள்ளே புதைந்து விட வேண்டும் என்ற வேகம் இருந்தது அவள் அணைப்பில்.. அதை கண்ட மகிழன்  பூரித்துப் போனான்..இந்த உலகத்தையே வென்று விட்டது போல மகிழ்ச்சியாக இருந்தது அவனுக்கு..

சிறிது நேரம் அப்படியே விட்டவன் அவள் முதுகை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தான்..சிறிது நேரத்தில் சுதாரித்துக் கொண்டவள்  அவனிடமிருந்து விலகாமல் தலையை மட்டும் நிமிர்த்தி அவனை அண்ணாந்து பார்த்து

“ஆமா.. நீங்க எப்படி இங்க வந்தீங்க? என்று யோசனையுடன் கேட்டாள் சந்தியா..

“ஹ்ம்ம் என் பொண்டாட்டியை வேற யாரோ வந்து  பொண்ணு பார்க்க விட்டுடுவேனா? அதான் உன்னை யாரோ பொண்ணு பார்க்க வந்த செய்தி கேட்டு உடனே சக்திமான் மாதிரி எங்க வீட்ல இருந்து பறந்து வந்து உன்னை பார்க்க வந்தவனை தூக்கிட்டு  என் பொண்டாட்டியை பார்க்க  வந்துட்டேன்.. எப்பூடி? " என்று  கண் சிமிட்டி குறும்பாக சிரித்தான் மகிழன்....

மற்ற நேரமாக இருந்தால் அவளும் அவனுக்கு திருப்பி  ஏதாவது சொல்லியிருப்பாள்..ஆனால் அவள் இருந்த மனநிலையில் விளையாடும் எண்ணம் வரவில்லை..

உடனே அவனைப் பார்த்து

“இந்த கதையெல்லாம் வேற யார்கிட்டயாவது போய் சொல்லுங்க.. என்கிட்ட விளையாடாமல் உண்மையை சொல்லுங்க மகிழ்.. என்ன நடக்குது இங்க?  என்ன நடந்தது? என்று குழப்பத்துடன் கேட்டாள்..

“ஹா ஹா ஹா இதுக்குத்தான் புத்திசாலி பொண்டாட்டி அமையக் கூடாதுங்கிறது.. நான் சொல்ற வீர தீர சாகஷ  கதையெல்லாம் நம்ப மாட்டேங்கிறாளே.. “  என்று சிரித்தவன், 

“தியா குட்டி...

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.

எது நடக்கிறதோ,அது நன்றாகவே நடக்கிறது.

எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்!!! “

 

என்று  கீதா உபதேசம் செய்ய,  கொஞ்சம் கொஞ்சமாக பழைய சந்தியா திரும்பிக் கொண்டிருந்தாள்..  

உடனே அவனை முறைத்தவள் அவன் சட்டையை பிடித்து

“டேய் மங்கி.. இப்ப சொல்லப் போறியா? இல்லையா ? என்று முறைத்தாள்..

அதை கண்டவன் குறும்பாக சிரித்தவாறு

“சில் பொண்டாட்டி.. ஓவர் டென்ஷன் உடம்புக்கு ஆகாதாம்..” என்று  சிரித்துக் கொண்டே

“எல்லாம் சொல்றேன் பேபி.. அதுக்கு முன்னாடி உன் மாமியார் உன்னைப் பார்க்கணும்னு வெளியில வெயிட் பண்ணிட்டு இருக்காங்க..நீ கொஞ்சம் வந்து உன் திருமுகத்தை காட்டிவிட்டு வந்து விடுகிறாயா..அதற்குப் பிறகு எல்லாம் உட்கார்ந்து ஆற அமர பேசலாம்.. “  என்று சிரித்தான் மகிழன்..

அதைக் கேட்ட சந்தியா திடுக்கிட்டாள்.. உடனே அவன் சட்டையை விட்டு கையை வேகமாக எடுத்து கொண்டவள்

“ஐயோ.. அப்ப வெளியில வெயிட் பண்றது உங்க அப்பா அம்மா வா? என்று கலவரமானாள்..

“சாரி மகிழ்..உங்க பேமிலிதான் வந்திருக்குனு தெரியாமல் நான் பாட்டுக்கு ஏதேதோ திட்டிகிட்டு இருந்தேன்..எல்லாமே  வெளில கேட்டுடுச்சா? என்றாள்  பாவமாக

“ஹா ஹா ஹா கேட்டுடுச்சா வா ?  நீ போட்ட கத்தலில்  உன் மாமியார் அரண்டு போய்ட்டாங்க.. எங்கடா நீ வந்து அவங்களை கழுத்தை பிடித்து வெளியில தள்ளிடுவியோனு பயந்து அவங்களாகவே வெளியில எழுந்து ஓடறதுக்கு ரெடியா இருந்தாங்க..

ஐயா தான் அவங்க கிட்ட எடுத்து சொல்லி உட்கார வச்சுட்டு நானே உன்னைப் பார்க்க வந்தேன்.. “  என்று சிரித்தான்..  

“ஐயோ போச்சு போச்சு.. மானம் போச்சு.. இப்ப எப்படி நான் அவங்க முகத்துல முழிக்கிறது..என் கிட்ட ஒரு வார்த்தை போன் பண்ணி சொல்லி இருக்கலாம் இல்லை நீங்கதான் வர்ரீங்க னு “  என்று சிணுங்கினாள் சந்தியா..  

“அடிப்பாவி.. என் போன் நம்பரைத்தான் இன்னுமே பிளாக் பண்ணி வச்சிருக்கியே.. உன்கிட்ட நான் எப்படி சொல்ல முடியும்? என்று அவள் தலையை பிடித்து செல்லமாக ஆட்டினான்..

“ஆமால்ல.. “  என்று அசட்டு சிரிப்பு சிரித்தாள் சந்தியா..  அவளையே காதலுடன் பார்த்தவன்

“என்ன தியா..? இப்பயாவது உன் மனம் உனக்கு புரிந்ததா ?  எங்கே ஒரே  ஒரு தரம் இந்த மாமாவை பார்த்து ஐ லவ் யூ சொல்லு பார்க்கலாம்..”  என்று கண் சிமிட்டினான்..

அதை கண்டவள் கன்னம் சிவக்க,

“அதெல்லாம் சொல்ல மாட்டேன்.. “  என்று வெட்கபட்டு நாணி சிரித்தவள் மீண்டும் அவனை கட்டிக் கொண்டு அவன் மார்பில் முகத்தை புதைத்துக் கொண்டாள்..

வாய் திறந்து சொல்லாத அவள் காதல் அவளின் அந்த உரிமையான அணைப்பில் தெரிந்தது அவனுக்கு..

அவ்வளவுதான்.. அதில் கிறங்கியவன் இன்னும் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்..

சிறிது நேரம் கழித்து அவளை  விட்டவன்  

“ஹே.. பொண்டாட்டி..  செமையா இருக்க டீ இந்த மேக்கப் ல.. பேசாமல் நிச்சயத்தை  கேன்சல் பண்ணிட்டு டேரக்டா கல்யாணம் பண்ணிக்கலாமா? என்றான் தாபத்துடன் அவளை ஒரு மாதிரி பார்த்தவாறு..

அதைக் கேட்டவளுக்கு  அப்பொழுது தான் மது சொல்லியது நினைவு வந்தது.. அவளும் இதையேதான் சொல்லி சிரித்தது நினைவு வர, உடனே கன்னம் சிவந்தவள் தன்னை மறைத்து கொண்டு

“போங்க மகிழ்.. அந்த மந்தியும் இதையே தான் சொன்னாள்.. “  என்று சிரித்தாள் சந்தியா..

“மந்தியா? அது யார் ? “ என்று புரியாமல் மகிழன்  சந்தியாவை பார்க்க

“ஹீ ஹீ ஹீ  என் பிரண்ட்..  பேர் மதுவந்தினி..  நான் செல்லமா மந்தி னு தான்  கூப்பிடுவேன்..அவ தான் எனக்கு இந்த மேக்கப் எல்லாம் போட்டு விட்டாள்.. “ என்று சிரித்தாள்..  

அதைக் கேட்டதும்

“ஆகா..  மதுவிற்கு மந்தினு நல்ல பெயரா தான் வச்சிருக்கா.. இது முன்னாடியே  தெரியாம போச்சே..மதுவ நல்லா ஓட்டி இருக்கலாமே..   என்று உள்ளுக்குள் சொல்லி சிரித்துக் கொண்டான்..

அப்பொழுது  வெளியில் கதவு தட்டும் சத்தம் கேட்டது.. உடனே சந்தியா  அவனிடமிருந்து விலகி நின்று கொண்டாள்..

அவசரமாக கதவை திறக்க வெளியில் வேல்மணி நின்று கொண்டிருந்தார்..

“என்ன பாப்பா?  உனக்கு மாப்பிள்ளையை பிடிக்கலைனு சொல்லி போகச் சொல்லிட்டேன்.. உனக்கு சந்தோஷமா இப்ப? “ என்று குறும்பாக சிரித்தவாறு   உள்ளே வந்தார்..

“மணி..  யூ டூ? நீங்களும் என்னை இப்படி ஏமாத்திட்டீங்களே..  ரொம்ப பேட் மணி..”  என்று தன் தந்தையின் மீசையை பிடித்து செல்லமாக இழுத்தவள் தன் தந்தையின் இடையோடு சேர்த்து  கட்டிக் கொண்டாள்..

அவரும் மகிழ்ந்து போய் அவள் தலையை வாஞ்சையுடன் தடவியவர்

“சரி டா.. எல்லாரும் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.. முகத்தை துடைத்து கொண்டு  வெளியில வா.. நான் வெயிட் பண்றேன்.. மாப்பிள்ளை.. நீங்களும் வாங்க.. “ என்று  நமட்டு சிரிப்புடன்  வெளியில் சென்றார்..

மகிழனும்

“சரி டி பொண்டாட்டி..  சீக்கிரமா வா.. உன்னை பார்க்க எல்லாரும் காத்துகிட்டு இருக்காங்க..நான் முன்னால் போகிறேன்..” என்று நகர முயன்றவனை தடுத்து நிறுத்தியவள்

“மகிழ்.. வந்து ... உங்க பேரண்ட்ஸ் என்னை  தப்பா எடுத்துக்க மாட்டாங்களே !! “ என்றாள் பாவமாக..

சந்தியாவுக்கு இன்னும் மகிழன் யாரென்று தெரியாது..அதனால் அவள் கவலை சற்று முன் காச் மூச் னு கத்தி விட்டு இப்ப தன் வருங்கலா மாமியார் முகத்துல  எப்படி முழிப்பது என்பது தான்..

உடனே மகிழனு சிரித்து கொண்டே      

“நான் இருக்கேன் தியா.. எல்லாம் பார்த்துக்கிறேன்..  நீ பாட்டுக்கு எந்த பயமும் இல்லாமல் வெளியில வா.. அப்புறம் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்துகிட்டிருக்கு.." என்று கண் சிமிட்டினான்..

“சர்ப்ரைஸ் ஆ? என்ன சர்ப்ரைஸ் ?  " என்றாள் ஆர்வமாக..

“ஹா ஹா ஹா அதை வெளில வந்து தெரிஞ்சுக்க.. இப்ப நான் வெளில போகலைனா அடுத்து என் மாமியார் கரண்டியோட வருவாங்க.. பரவாயில்லையா? சீக்கிரம் வாடி..மீ வெயிட்டிங்.." என்று சிரித்தவாறு அவள் கன்னம் தட்டி வெளியேறி சென்றான்..

சந்தியாவுக்கோ படபடப்பாக இருந்தது ..

“எப்படி எல்லார் முன்னாடியும் போய் நிற்பது..?  இந்த நேரத்துல இந்த மந்தி வேற என் கூட இல்லாமல் மூஞ்ச தூக்கி வச்சுக்கிட்டு வெளில போய்ட்டாளே.. ஐயோ.. எப்படி அங்க போய் நிற்பது? வேல்ஸ்... ப்ளீஸ் ஹெல்ப் மீ... “ என்று தன் நண்பனை அவசரமாக அழைத்தவள் பின் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து அந்த வரவேற்பறையை நோக்கி சென்றாள்..

ருக்மணி சற்றுமுன் சந்தியா தராமல் கொண்டு வந்த காஃபியை  ஏற்கனவே எடுத்து போய் அனைவருக்கும் கொடுத்திருந்தார்..அதனால் இப்பொழுது காஃபி ட்ரேயும் இல்லை.. அது இருந்தாலாவது அந்த தட்டை பிடித்துக் கொண்டு நடுக்கத்தை மறைத்துக் கொண்டு இருந்திருக்கலாம் என்று எண்ணியவளுக்கு

“ஓ... இதுக்குத்தான் எல்லாரும் பொண்ணு கையில காஃபி டம்ளரையோ ட்ரேயையோ கொடுத்து அனுப்பறாங்களா?.. மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை பார்க்க போற பயத்துல  கை கால் உதற ஆரம்பிச்சா அந்த  காஃபி இருக்கும் ட்ரேயை கெட்டியாக பிடித்து கொள்ளலாம்..

சே.. இது தெரியாம கிடைச்ச சான்ஸை மிஸ் பண்ணிட்டனே..இந்த ருக்கும் முந்திரி கொட்டையாட்டம் நான் வைத்த காஃபி ஐ கொண்டு போய் எல்லாருக்கும்  கொடுத்திட்டாங்களே..

இப்படி உதறும்னு தெரிந்திருந்தால்  முன்னாடியே கொண்டு போய் கொடுத்து எல்லாரையும் பார்த்து ஒரு கும்பிடு போட்டு விட்டு ஓடி வந்திருக்கலாம்.. இப்ப இப்படி தனியா புலம்ப வச்சுட்டனே.. “  என்று தன்னைத் தானே நொந்து கொண்டவள்  மீண்டும் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து அந்த வரவேற்பறையை நோக்கி சென்றாள்..

முன்பு வரும்பொழுது மனமெல்லாம் குழப்பமாக இருக்க தயங்கி தயங்கி அடி எடுத்து வைத்து வந்தாள்.. ஆனால்  இந்த முறை மனமெல்லாம் அளவில்லா மகிழ்ச்சியில் திளைத்தது..  

அவள்  மனம் விரும்பும் மகிழனே அவன் மனாளனாக வந்திருப்பது மகிழ்ச்சியை  தர,  மனம் கொள்ளா பூரிப்புடன் வரவேற்பறையை அடைந்தவள்  தலையை குனிந்தவாறு கண்களால் அங்கு அமர்ந்து இருந்தவர்களை பார்வையிட்டாள்..

முதலில் அமர்ந்திருந்தவர்களை  கண்டதும் அதிசயித்தாள்..

மதுவின் பெற்றோர்  சாரதாவும் சண்முகமும் அமர்ந்திருந்தனர்.. அவளை   கண்டதும் புன்னகைத்தார் சாரதா..

அதற்குப் பின் கண்களைச் சுழற்ற அடுத்து நிகிலன் அமர்ந்திருந்தான்..  தன் மடியில் அவனுடைய மகளை வைத்து கொஞ்சிக் கொண்டு இவளைப் பார்த்து முறுவலித்தான்..  

அதைக் கண்டதும் திகைத்து போனாள் சந்தியா..

“அட..!!  இது என்ன அதிசயமா நம்ம மாம்ஸ் கூட வந்திருக்காரே.. “  என்று உள்ளுக்குள் திகைத்து கொண்டு அடுத்து பார்வையை சுழற்ற நிகிலன் அருகில் மது அமர்ந்து கொண்டு அவளை பார்த்து முறைத்தாள்..

எற்கனவே முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருந்தவள் இன்னும் அப்படியே முறைத்து கொண்டிருந்தாள்..அவளை பார்த்ததும்  சந்தியா  கண்களால் சாரி சொல்லி பின் மீண்டும் அடுத்த இருக்கையை  பார்க்க அங்கே அகிலா அமர்ந்திருந்தாள்..  

அகிலா சந்தியாவை பார்த்து குறும்பாக சிரித்துக் கொண்டிருந்தாள்..அதை கண்டு திகைத்தவள்

“இந்த லூசு ஏன் இப்படி சிரிக்கிறா? “ என்று யோசித்தவாறு  பதிலுக்கு சிரித்து அடுத்த இருக்கையை நோக்க அங்கு சிவகாமி அமர்ந்திருந்தார்..

அவரைக் கண்டதும் இன்னும் ஆச்சர்யமாகி போனது சந்தியாவுக்கு..

“அட..  சிவா அத்தை கூட வந்திருக்காங்களே.. நம்ம மந்திக்கு என் மேல் எவ்வளவு பாசம்!!  என் நிச்சயத்துக்கே அவ பொறந்த வீடு புகுந்த வீடு னு அவ இரண்டு வீட்டு குடும்பத்தை எல்லாம் கூட்டிகிட்டு  வந்திருக்காளே. !!

நான் தான் அவளை  புரிஞ்சுக்காம ஏதோ திட்டிட்டேன்.. சாரி டீ.. “ என்று  உள்ளுக்குள்ளேயே எண்ணி கொண்டவள்

“ஆமா.. எங்க நம்ம புருஷனோட பேரன்ட்ஸ் யாரையும் காணோம்..? நம்ம வீட்டில இருக்கிற இடம்  அவ்வளவு தானே..  இதுல அவங்க எல்லாம் வேற எங்க உட்கார்ந்து  இருக்காங்க..? ஒருவேளை நான் போட்ட கூச்சலில் இந்த மருமக வேண்டாம்னு கோவிச்சுகிட்டு எழுந்து போய்ட்டாங்களோ?

இப்ப எப்படி அவுங்களை கவுக்கறது? என்று யோசித்தவாறு அடுத்த இருக்கையை பார்க்க, அங்கு மகிழன்  இவளையே இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்..  

அவன் பார்வையின்  தாக்கத்தில் அவள் கண்கள் தானாக சிவந்தன.. உடனே மீண்டும் பார்வையை மாற்றிக் கொண்டு மறுபக்கம் தேட அங்கு யாரும் இல்லை.. எங்க மத்தவங்க யாரையும் காணோமே? என்று குழப்பத்துடன் மகிழனை பார்த்தாள்..

அவனோ வாயை மூடி சிரித்து கொண்டிருந்தான்.. அவனை பார்த்து மது கண்களால் சொல்லாதே என்று ஜாடை சொல்லி தன் ஆட்காட்டி விரலை ஆட்டி “கொன்னுடுவேன்.. “ என்று சைகை செய்து முறைத்து கொண்டிருக்க, கஷ்டபட்டு தன் சிரிப்பை அடக்கி கொண்டிருந்தான் மகிழன்..

சந்தியா முழிப்பதை கண்டு அவளை மேலும் குழப்ப வேண்டாம் என்று எண்ணி சிவகாமி சிரித்து கொண்டே எழுந்து வந்து

“வாடி..  என் வாயாடி மருமகளே!! நான்  சொன்ன மாதிரியே எனக்கு சின்ன மருமகளாகவே   வந்திட்ட பாத்தியா.. கெட்டிக்காரிதான்.. “  என்று  அவள் கன்னத்தை பிடித்து செல்லமாக கிள்ளினார்..

அதை கண்டதும் திருதிருவென்று முழித்தாள் சந்தியா..  

“என்ன சொல்றாங்க இந்த அத்தை? சின்ன மருமகள் என்றால்? “ என்று  அவசரமாக யோசிக்க அப்போதும்  மகிழன் சிரித்துக் கொண்டே இருந்தான்..

அதை கண்டவள்  அவனையும் அவன் அருகில் நின்று கொண்டிருந்த சிவகாமி  இருவரையும் ஒன்றாக சேர்த்து பார்க்க இப்பொழுது அவளுக்கு எல்லாம் விளங்கியது..

அப்படியே சிவகாமி ஜாடையில் இருந்தான் மகிழன்..

அதுவரை அவன்  முகத்தை நன்றாக உற்றுப் பார்த்தது இல்லை சந்தியா..  அவனை  இப்பொழுது தயக்கம் இல்லாமக்  நன்றாக பார்க்கவும் கூடவே சிவகாமி அருகில் நின்று கொண்டிருக்க இருவரையும் ஒப்பிட்டு பார்த்தவளுக்கு அவர்களுக்குள்ளே  இருந்த ஜாடை பொருத்தம் புரிந்தது..

“அப்படி என்றால் இந்த மங்கி சிவா அத்தையோட பையனா? அப்ப நான் அந்த மந்தி இருக்கிற வீட்டுக்குத்தான் வாழ்க்கை பட்டு போறனா?  என்ற உண்மை புரிய உடனே தன் அருகில் நின்றிருந்த சிவகாமியை பார்த்தவள்

“சிவா அத்த...அப்ப நீங்கதான் என் மாமியாரா?    என்று வியந்தவள் “ ஐம் ஸோ ஹேப்பி நௌ...” என்று சிரித்து அவரை இடையோடு சேர்த்து இறுக்கி கட்டிக் கொண்டாள் சந்தியா..

அதை கண்ட சிவகாமியும் மகிழ்ந்து போய் அவளை கட்டி அணைத்து அவள் முன் உச்சி நெற்றியில் முத்தமிட்டார்  சிரித்தவாறு..  

“அடடா..  எல்லா வீட்டு நிச்சயத்திலும் பொண்ணு மாப்பிள்ளை  கட்டிப் பிடிச்சுப்பாங்கனு பார்த்திருக்கிறேன்.. இங்க தான்  மாமியாரும் மருமகளும் கட்டிப் புடிச்சு கொஞ்சறத பார்க்கறேன்..

மாமியாரை கட்டி பிடித்து கொஞ்சிய முதல் மருமகள்  என்று வரலாறு உன்னைப் போற்ற போகிறது சந்தியா..”  என்று சொல்லி சிரித்தான் நிகிலன்..

 உடனே அவளும் சிரித்தவாறு சிவகாமியிடம் இருந்து  விலகி நிகிலனை பார்த்தவள்  

“மாம்ஸ் நீங்களா ?  உங்களுக்கு இப்படி எல்லாம் கூட ஜோக் அடிக்க தெரியுமா?  உங்க பொண்டாட்டி தான்  நல்லா பேச ஆரம்பிட்டானு நினைத்தால்  நீங்க அவளுக்கு மேல தேறிட்டிங்களே..!!  இது தப்பாச்சே..!!   என்று தன் தாடையில் கை வைத்து யோசனையாக பார்த்தாள் சந்தியா..

“ஆங்.. அப்படிச் சொல்லுங்க சின்ன அண்ணி..  மது அண்ணி வர வர ரொம்ப பேசறாங்க.. இப்ப பெரிய அண்ணனும் ரொம்ப பேச ஆரம்பிச்சுட்டான்.. இவங்களுக்கு என்னால கவுண்டர் கொடுக்க முடியல..

நீங்க சீக்கிரம் நம்ம வீட்டுக்கு வந்திடுங்க.. நீங்க  வந்தா தான்  இவங்களை யெல்லாம் அடக்கி வைக்க முடியும்.. “  என்று எழுந்து வந்து சந்தியாவை கட்டிக் கொண்டாள் அகிலா..    

“டோன்ட் வொர்ரி அகி குட்டி.. நானும்  உன் கட்சியில சேர்ந்துக்கறேன் எதிர்க்கட்சியை உண்டு இல்லைன்னு பண்ணிடலாம்.. “  என்று கண் சிமிட்டி சிரித்தாள்

அதைக் கண்டு அனைவரும் சிரிக்க அப்பொழுது தான் மதுவின் பெற்றோரை கண்டு அவர்கள் அருகில் சென்றவள்

“ஆன்டீ.. சண் அங்கிள்.. நீங்க எப்ப வந்தீங்க? நீங்க  கூட  என்கிட்ட சொல்லாம மறச்சிட்டிங்களே.. திஸ் இஸ் நாட் ஃபேர்”  என்று செல்லமாக சிணுங்கினாள் சந்தியா..

உடனே சண்முகம்

“அப்படி இல்லடா சந்தியா குட்டி.. உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டாங்க..  நாங்க வந்த உடனே உன்னை பார்க்க உள்ள வந்தோம்.. ஆனா மதுதான்  உன்னை பார்க்க உள்ள விடமாட்டேனுட்டா “  என்று சிரித்தார் சண்முகம்..

“ஆமான்டா சந்தியா கண்ணா..  இங்கு நடந்த டிராமா க்கு  கதை, திரைக்கதை வசனம், டைரக்ஷன் எல்லாம் உன் ஆருயிர் தோழி மதுதான்.. அவள  புடிச்சு நல்லா நாலு சாத்து சாத்து.. “  என்று சிரித்தார் சாரதா..

அதைக் கேட்டதும் திகைத்து போய்

“என்னது? இந்த மந்தியா இவ்வளவும் பண்ணி இருக்கா? “ என்று   திரும்பி மதுவை  பார்த்து முறைத்தாள் சந்தியா..  

தன் மாமியார் சொன்னதை  கேட்ட நிகிலன்

“சந்தியா... என் மாமியார் பேச்சை கேட்டு  நீ பாட்டுக்கு  என் பொண்டாட்டியை எதுவும் பண்ணிடாத..அப்புறம் நான்தான் அவளுக்கு கை கால் அமுக்கி விடணும்..என் மேல பாவப்பட்டு அவளை மன்னித்து விட்டு விடு..  எதுவும் பண்ணிடாத.. “  என்று சிரித்தான் நிகிலன்..

அதை கேட்டு மது நிகிலனை முறைக்க, சந்தியாவும்  சிரித்துக் கொண்டே மது அருகில் வர, தன் தோழியை கண்ட மது தனக்கு வந்த சிரிப்பை கஷ்டப் பட்டு அடக்கிக் கொண்டு சந்தியாவை பார்த்து முறைப்பது போல் ஆக்ஷன் பண்ணிக் கொண்டு இருந்தாள்..  

அவளிடம் வந்த சந்தியா மதுவின் இடுப்பில் கை வைத்து கிச்கிச் மூட்ட மது உடனே துள்ளிக் குதித்து எழுந்து நின்றவள் தன் தோழியை பார்த்து முறைக்க முயன்று தோற்று போய் சிரித்து விட்டாள்..

சிறிது நேரம் சிரித்து முடித்தவள்  மீண்டும் சந்தியா தன்னை திட்டியது நினைவு வர  தன் தோழியை பார்த்து முறைக்க,  உடனே சந்தியாவும் மதுவை கட்டிக் கொண்டு

“சாரி டி..  உன்ன அப்படி திட்டி இருக்கக் கூடாது..ஏதோ அப்ப எனக்கு இருந்த கோபத்த உன்கிட்ட கட்டிட்டேன்..நீ என் செல்ல மந்தி இல்ல.. நான் திட்டியதை  எல்லாம் மறந்துடுவியாம்.. “  என்று அவள் கன்னத்தை பிடித்து செல்லமாக கிள்ளினாள்..  

“அதெல்லாம் இல்ல..நான் உன் மேல கோவமா தான்  இருக்கேன்.. “  என்று மது முறைக்க முயன்று மீண்டும் சிரித்து வைத்தாள்..  

மகிழன் மட்டும் அங்கு நடப்பதை எல்லாம் பார்த்து ஙே என்று விழித்துக் கொண்டு அமர்ந்து இருந்தான்..

“இந்த ராட்சசி..  நான்  இவ்வளவு நேரமா அவளையே பார்த்துகிட்டு இருக்கேனே.. என்னை கண்டுக்காம விட்டுட்டு மற்ற எல்லார் கூடயும் கதை அடிக்கிறத பார்.. உள்ள மட்டும் அப்படி  என் கிட்ட கொஞ்சினா.. இங்க வந்து ஏதாவது கண்டுக்கறாளா பார்..தனியா மாட்டுவா இல்ல.. அப்ப வச்சுக்கறேன்.. “என்று உள்ளுக்குள் புலம்பிக் கொண்டிருந்தான்..

உடனே சந்தியாவிற்கு என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ள வேண்டும் போல ஆர்வமாக இருந்தது.. சிவகாமியிடம் சென்றவள்

“மாமியாரே...  நீங்களே சொல்லுங்க.. என்ன நடந்தது? எப்படி நீங்க எல்லாம் திடீர்னு வந்து நின்னிங்க? “ என்றாள் ஆர்வமாக..

“அதெல்லாம் பொறுமையா உன் பிரண்டு கிட்ட கேட்டுக்க சின்ன மருமகளே.. இப்ப நல்ல நேரம் முடியறதுக்குள்ள  தட்ட மாத்திக்கலாம்.. என்ன?  இப்ப என் பையனை கட்டிக்க உனக்கு சம்மதம் தானே.. “  என்று குறும்பாக சிரித்தார் சிவகாமி.. அதை கேட்ட சந்தியா

“இல்ல..எனக்கு சம்மதமில்லை.. உங்க பையனை கட்டிக்க எனக்கு சம்மதமில்லை.. “ என்றாள் சந்தியா இறுகிய முகத்துடன்...


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!