நிலவே என்னிடம் நெருங்காதே!!-17

 


அத்தியாயம்-17

றுநாள் மதியம் தேவநாதனை டிஸ்சார்ஜ் பண்ணி இருந்தனர்.. அதிரதனே மருத்துவமனையில் எல்லாம் பார்மாலிட்டிஸ் ஐயும்  முடித்து எல்லாம் முன்னின்று பார்த்துக் கொண்டான்..  

ஜமீன் க்கு வந்தவரை மனோகரி ஆரத்தி எடுத்து  வரவேற்க நிலாவோ அவளுக்கு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு தலையை குனிந்துக் கொண்டாள்..

தேவநாதனும் அவளை பார்த்து கண்சிமிட்டி ரகசியமாக சிரித்தார்.. இவர்கள் இருவரின் பார்வை பரிமாற்றத்தை புருவங்கள் முடிச்சிட யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அதிரதன்

ஆனாலும் அதற்குமேல் அவனால் யோசிக்க முடியாமல் வேலை பிடித்து இழுக்க தாத்தாவை வீட்டிற்கு கொண்டு வந்து விட்ட உடனே அலுவலகத்திற்கு சென்று விட்டான்...

ன்று இரவு  மற்றவர்கள் உணவு மேஜையில் அமர்ந்து இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்க நிலவினி சமையலறைக்கு சென்றவள் ஒரு பெரிய தட்டில் உணவுப் பதார்த்தங்களை வைத்து மூடி எடுத்துக் கொண்டு  தாத்தாவின் அறைக்கு சென்றாள்..

அவருக்கு இன்னும் ஓய்வு வேண்டும் என்று பெட் ரெஸ்ட் எடுக்க  சொல்லியிருந்ததால் உணவை அவர் அறைக்கே எடுத்து சென்றாள்.. அவரின் அறைக்குள் வந்தவளை கண்டதும்

"வா... வா.. நிலா பொண்ணே... நான் சொன்னது எல்லாம் கொண்டு வந்தியா? " என்றார் ஆர்வமாக..

அவளும் சிரித்துக் கொண்டே அவர் அருகில் சென்றவள் அவர் அறையில் இருந்த மேஜையில் சாப்பிடும் தட்டை வைத்தவள் அதன் மூடியை திறக்க எல்லாம் அசைவ உணவுகளாக இருந்தன..

அதை கண்டதும் தேவநாதன் முகம் மலர்ந்தார்..

“ரொம்ப தேங்க்ஸ் அம்மணி.. நேற்று நைட் ல இருந்து ஒரே சைவத்தையே சாப்பிட சொல்லி போர் அடிச்சிட்டாங்க எல்லாரும்.. ஒரே நாள் ல நாக்கு செத்து போச்சு..

இப்படி வகை வகையா அசைவமா சாப்டிட்டு இருந்துட்டு திடீர்னு மூணு நேரமும் இலை, தலை காயா சாப்பிடணும்னா  எப்படி இருக்கும்? அதான் உன்னை இப்படி தெரியாதனமா கொண்டு வரச் சொன்னேன்.. " என்று கையை கழுவி கொண்டு வந்தவர் அந்த உணவை ரசித்து சாப்பிட ஆரம்பித்தார்..

"ஆனாலும் நீங்க ரொம்ப மோசம் தாத்தா.. இப்படியா ப்ராட் பண்ணுவிங்க? " என்று சிரித்தாள் நிலா...

"ஹா ஹா ஹா இதெல்லாம் ஜுஜுபி நிலா பொண்ணு.. இதை விட பெரிய விசயம் எல்லாம் அசால்ட்டா பண்ணி இருக்கேன்.. " என்று அவர் பண்ணின குறும்புகளை எல்லாம் பட்டியலிட, நிலா ஆச்சர்ய்பட்டு கேட்டு கொண்டவள் விழுந்து விழுந்து சிரித்தாள்...

ன்று இரவு அவள் அறையில் படுக்கையை தரையில் விரித்து அதன் மீது தலையணையை வைத்து படுத்து கொண்டு தன் அலைபேசியை நோண்டி கொண்டிருந்தாள் நிலவினி...

கை அலைபேசியின் பட்டன்களை தட்டி கொண்டிருந்தாலும் கண்கள் அதன் திரையை பார்த்து கொண்டிருந்தாலும் மனம் என்னவோ அங்கு இல்லை..

அவள் எண்ணம் எல்லாம் அவளுடைய இரண்டு நாள் கணவனை சுற்றி இருந்தது..

அதிரதன் இன்னும் வீட்டிற்கு வந்திருக்கவில்லை.. அலுவலகத்தில் நிறைய வேலை பாக்கி இருந்ததால் அதை பார்த்து கொண்டு இருந்துவிட்டான்...அவன் வீட்டிற்கு இன்னும் வந்திராதது என்னவோ மனதை உறுத்தியது...

ஆரம்பத்தில் எனக்கென்ன என்று தோளை குலுக்கி விட்டு அவள் வேலையில் கவனம் செலுத்தினாலும் அவ்வபொழுது  அவன் வராதது என்னவோ போல இருந்தது..

ஆனால் அவளுக்கோ யாரிடம் அவனை பற்றி கேட்பது என்று புரியாமல் தேவநாதனிடம் மெல்ல மறைமுகமாக விசாரிக்க அவர்தான் அவனுக்கு வேலை இருக்கும் வர தாமதமாகும் என்று சொல்லி இருந்தார்..

ஆனாலும் மனம் ஏனோ ஒரு ஓரத்தில் அடித்து கொண்டே இருந்தது..

சற்று நேரத்தில் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் அதிரதன்... அவனை கணடதும் அவள் கண்களில் ஒரு பளபளப்பு..

முகத்தில் ஒரு நிம்மதி வந்து பரவியது.. அதுவரை அவளையும் அறியாமல் உள்ளே இருந்த ஏதோ ஒன்று விலகியதை போல இருக்க, நிம்மதி மூச்சு விட்டவள் உடனே படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து கொண்டாள்..

அவனோ அவளை கண்டு கொள்ளாமல் உள்ளே வந்தவன் தன் ப்ரீப்கேஸ் ஐ அதன் இடத்தில் வைத்து விட்டு குளியலறைக்குள் சென்றான்..

படுக்கையில் அமர்ந்து இருந்தவள் அலைபேசியை நோண்டி கொண்டிருந்தவள் அவன் குளித்து முடித்து வெளி வரவும் கண்கள் அனிச்சையாக குளியலறை வாயில் பக்கம் சென்றது..

குளித்து முடித்து வெற்று மார்புடன் ஒரு த்ரீ போர்த்  ட்ராயர் மட்டும் அணிந்தவாறு தலையை ஒரு கையால் துவட்டியவாறே வெளி வந்தான்..

பரந்து விரிந்த மார்பும் உறுதியாக உருண்டு திரண்டிருந்த புஜங்களும், மஞ்சத்தில் ஆண்மைக்கே உரித்தான கொஞ்சம் நீண்ட ரோமங்களும் கழுத்தில் அந்த ஜமீனின் பரம்பரை சங்கிலி கொஞ்சி கொண்டிருக்க, அவனையே இமைக்க மறந்து பார்த்திருந்தாள் நிலவினி...

அவள் இதுவரை எந்த ஒரு ஆண்மகனையும் இப்படி நெருக்கத்தில் பார்த்ததில்லை..

அவளுக்கு எல்லாமே அவள் தாத்தாதான்.. அவள் நட்பு வட்டத்திலும்  ஆண்கள் அவ்வளவாக இல்லை.. அதுவும் இப்படி வெற்று மார்புடன் யாரையும் இதுவரை பார்த்ததில்லை...

ஒரு ஆண்மகனை அதுவும் தனக்கு உரியவனை அந்த மாதிரி பார்க்க அவள் உள்ளே இருந்த பெண்மை விழித்து கொண்டது.. பெண்களுக்கே உரித்தான ஆசைகள் தலை தூக்க ஆரம்பிக்க அதை முளையிலயே கிள்ளி எரிவதை போல உறுமினான் அதிரதன்

“ஏய்... என்ன லுக்கு? ஓ.. என்னை பார்த்து சைட் அடிக்கிறியா? இப்படி வழவழப்பான தேகமும் வனப்பான ஆளை பார்த்ததும் இவனை எப்படி மயக்கறதுனு திட்டம் போடறியாக்கும்..

லுக்.. இந்த மாதிரி ஓரக்கண்ணால் பார்ப்பது , மையலுடன் சிரிப்பது , என் தாத்தா கிட்ட சிரித்து சிரித்து பேசறது.. இதை எல்லாம் நிறுத்திக்க.. என்னதான் நீ நல்லவளா காட்டிகிட்டாலும் உன் வலையில் நான் விழமாட்டேன்...

அந்த மனுசன் பேச்ச கேட்டு முன்ன பின்ன யோசிக்காமல் கழுத்தை நீட்டின இல்ல.. அதுக்கெல்லாம் நீ அனுபவிப்ப.. இப்படியே என்னை ஏக்கமா பாத்துகிட்டே உன் காலத்தை கழிக்க வேண்டியதுதான்...

நீ எதிர்பார்த்து வந்த என் மனைவிக்கான எந்த சுகமும் உனக்கு கிடைக்காது...இப்படியே என்னை பார்த்து ஏங்கி போகத்தான் வேண்டும்.. பேசாம எனக்கு டைவர்ஸ் கொடுத்திட்டு யார்க்கும் தெரியாம ஓடி போய்டு.. உனக்கு புடிச்ச்ச வாழ்க்கைய நான் அமைச்சு தர்றேன்...

உன்னை பார்த்தாலும் நல்லவ மாதிரிதான் இருக்க.. எவ்வளவு  பணம் வேணும்னாலும் கேள் தர்ரேன்..ஆனா என்னை விட்டு போய்டணும்.. ஏன்னா எனக்கு என் நிலா பொண்ணு....”  என்று சொல்ல வந்தவன் நிறுத்தி கொண்டு

“என் டார்லிங், என் ஹனிதான் எனக்கு பொண்டாட்டி..அவளை தவிர வேற யார் கிட்டயும் என் மனம் படறாது... அவர் என்னதான் சதி பண்ணினாலும் இந்த அதிரதன் விலாங்கு மீன் . நலுவி சென்று விடுவான்...அவர் கிட்டயும் சொல்லி வை...” என்று இன்னும் ஏதேதோ சொல்லி அவளை திட்டி கொண்டிருக்க, அதே நேரம் அவனுடைய பெர்சனல் அலைபேசி ஒலித்தது..

அந்த ரிங்டோனில் இருந்தே அழைப்பது யார் என்று புரிந்து விட, அதுவரை முகத்த்ல் எள்ளும் கொள்ளும் வெடித்தது மாதிரி அப்படி கொதித்து கொண்டிருந்தவன் முகத்தில் உடனே  ஒரு கனிவு வந்து ஒட்டி கொண்டது..

முகம் இளகி விட கண்ணில் காதல் வந்து ஒட்டி கொள்ள, உதட்டில் குறுநகை தவழ உற்சாகத்துடன் தன் அலைபேசியை எடுத்து காதில் வைத்தவன்

“ஹாய் டார்லிங்... “ என்று கொஞ்சலுடன் ஆரம்பித்தான்..

இதுவரை  அவன் திட்டியதில் காது வலி எடுத்திருக்க,  அப்பாடா தப்பிச்சேன் என்று  நிம்மதி மூச்சு விட்டாள் நிலவினி.. ஆனால் அவள் நிம்மதி அடுத்த நிமிடத்தில் பறிபோவதை அறியவில்லை..

நிலா படுக்கையில் அமர்ந்து கொண்டு தலையை குனிந்து கொண்டு தன் அலைபேசியை நோண்டி கொண்டிருக்க, அவனோ துவட்டி முடித்த டவலை அதற்கான இடத்தில் போட்டு விட்டு படுக்கையில் காலை நீட்டி அமர்ந்து கொண்டு ஒரு தலையணையை எடுத்து முதுகுக்கு பின்னால் வைத்து கொண்டு இன்னொன்றை எடுத்து தன் மடியில் வைத்து கொண்டு தன்னை அழைத்து இருந்தவளிடம் சிரித்து சிரித்து பேசி கொஞ்சி கொண்டிருந்தான்...

முதலில் எதுவும் கண்டு கொள்ளாமல் அலைபேசியை நோண்டி கொண்டிருந்தவள் காதுகளில் அவர்கள் இருவரின் கொஞ்சல்களும் காதல் மொழியில் பிதற்றுவதும் அவள் காதில் வந்து தானாக விழுந்தன...

எவ்வளவு முயன்று  அதை எல்லாம் காதில் விழ விடாமல் தடுத்தாலும் அவளையும் மீறி அவள் காதை வந்து அடைந்தன..

அதுவும் கொஞ்ச நேரத்திலயே அவர்கள் பேச்சு அந்தரங்கமாக மாறி இருக்க, கணவன் மனைவி போல போனிலயே முத்தம் கொடுத்தும் கட்டி அணைத்தும் அதுக்கு ஒரு படி மேல போய் அலைபேசியிலயே குடும்பம் நடத்துவதை போல இருக்க, அதை கேட்டவளுக்கு முகம் சிவந்து போனது...

அலைபேசியில் கூட இப்படி காதலர்கள் கொஞ்சி கொள்வார்களா? இந்த அளவுக்கு பேசுவார்களா என்ற அதிர்ச்சி ஒரு பக்கம் இருக்க, அலைபேசியிலயே இப்படி கொஞ்சி கொள்கிறவர்கள் நேரில் எப்படி நடந்து கொள்வார்கள் என்று இன்னொரு பக்கம் யோசிக்க அவளுக்கு அருவருப்பாக இருந்தது..

அதுவரை பால் நிலா போன்று பளிச்சென்று இருந்த அவள் முகம் அப்பொழுது இறுகி போனது.. நெஞ்சில் ஏதோ வந்து அடைக்க, கண்களில் அவளையும் மீறி நீர் திரையிட, அதற்கு மேல் அவளால் அதை எல்லாம் கேட்க முடியாது என தோன்ற, தரையில் விரித்திருந்த படுக்கையில் படுத்து போர்வையை இழுத்து போர்த்தி கொண்டு இரு காதுகளிலும் தன் கையை வைத்து இறுக்கி அடைத்து கொண்டாள்...

அலைபேசியில் எதிரில் இருந்தவளிடம் கொஞ்சி கொண்டிருந்தாலும் தன் எதிரில் தரையில் அமர்ந்து இருந்தவளையே ஓரப் பார்வை பார்த்து கொண்டிருந்தான் அதிரதன்....

அவன் பேச பேச அவள் முகம் மாறுவதை கண்டவன் உள்ளம் குளிர்ந்து போக அவளை இன்னும் வெறுப்பேற்ற அவனுமே இன்று இன்னும் கொஞ்சம் கீழறங்கிதான் கொஞ்சினான்..

எப்பவும் அவன் நிலா தான் காதல் போதையில் எதையாவது சொல்லி பிதற்றி கொண்டிருப்பாள்.. இவனோ அவளின் கொஞ்சல்ஸ் ஐயும் உருகலையும் கேட்டு ரசித்து கொண்டிருப்பான்..

இன்று தன் எதிரில் இருப்பவளை வெறுப்பேற்ற என்று அவனுமே அவளை கொஞ்சம் அந்தரங்கமாக கொஞ்சினான்.. அதை கேட்டுதான் நிலவினிக்கு தாங்க முடியவில்லை..அவள் முகம் மாறியதையும் இறுகி போனதையும் கண்டவன் உள்ளுக்குள் துள்ளி குதித்தான்..

“யெஸ்.... இது இது இதுதான் வேண்டும்...

அடுத்த பெண்ணை விரும்புகிறவனை, அடுத்த பெண்ணை கட்டி அணைத்தவனை எந்த பெண்ணும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டாள்.. “ என்று திட்டமிட்டவன் தன் மனம் கவர்ந்த அவன் நிலா பொண்ணை அலைபேசியிலயே கட்டி அணைத்திருந்தான்...

அதுக்கும்  மேலயும் சென்றிருந்தான் அவனுக்கும்  பிடிக்காமல்தான்... எல்லாம் தன் எதிரில் அமர்ந்து இருப்பவளை அவனிடம் இருந்து விலக்க வேண்டும்.. அதுவும் அவளாகவே விலகி சென்று விடவேண்டும் என்றுதான் தன் மனதை கல்லாக்கி கொண்டு கொஞ்சம் அதிகமாக நடந்து கொண்டான்..

இன்றைய பேச்சிலிருந்தே எப்படியும் அவள் திட்டம் எதுவும் பலிக்காது என்று அவளுக்கு தெரிந்திருக்கும்.. அவளாகவே சீக்கிரம் பிரிந்து சென்று விட வேண்டும் அப்படி சென்று விட்டால் என் வேலை சுலபம்.. சீக்கிரம் இவளை சட்டபடி விலக்கி விட்டு என்  நிலா பொண்ணை சட்டப்படி மனைவியாக்கி கொள்ளலாம்..

அன்று, இரண்டு நாட்கள் முன்பு மட்டும் இந்த அறிவு வேலை செய்திருந்தால் அந்த தாத்தா மிரட்டியதற்கு அடிபணியாமல் இருந்திருந்தால் இவள் கழுத்தில் இந்த தாலியை கட்டாமல் இருந்திருந்தால் இன்று இவ்வளவு பிரச்சனையே இல்லை..

நேராக என் நிலா பொண்ணை மணந்து கொண்டு வந்திருப்பேன்.. அதற்குள் இவர் சதி பண்ணி இப்படி என்னை சிக்கலில் மாட்ட வைத்து விட்டாரே..

அவர் எப்படி திட்டம் போட்டு காயை நகர்த்தினாரோ என்னை அவர் வலையில் சிக்க வைத்தாரோ அதே போல நானும் திட்டம் போட்டு காயை நகர்த்த வேண்டும்..

என் ஆட்டத்தில் ராணியே இவள்தான். இவளை வைத்துத்தான் அந்த கிழட்டு ராஜாவை ஜெயிக்க வேண்டும்.. அதுக்கு முதல்படிதான் இன்றைய பேச்சு..

இங்கு இருக்கும் நாட்களிம் இதை தொடர்ந்தாலே போதும்.. சீக்கிரம் வெறுத்து ஓடி விடுவாள்.. “ என்று உள்ளுக்குள் குரூரமாக சிரித்து கொண்டான் அதிரதன்..

பெட்ஷீட்டை மூடி படுத்தவளுக்கு அழுகை வெடித்து கொண்டு வந்தது... கண்களில் நீர் கட்டி கொள்ள சற்றுமுன் அவள் காதில் ஒலித்த அந்த காதலர் இருவரின் கொஞ்சல்களே திரும்ப திரும்ப ஒலித்து கொண்டிருந்தது...

காதலை பற்றி அவ்வளவாக அவளுக்கு தெரியாது.. அவள் யாரையும் காதலித்ததில்லை.. அப்படி ஒரு உணர்வு யாரிடமும் வந்ததில்லை.. ஆனால் காதலித்தவர்களை பார்த்து இருக்கிறாள்...

பள்ளி, கல்லூரியில் மட்டும்தான் காதல் வரும் என்று இல்லாமல் பள்ளிக்கூடமே போகாத  அவள் பக்கத்து வீட்டு அக்கா,  கூட வயலில் வேலை செய்யும் பொழுது வேலைக்கு வந்த பக்கத்து ஊர்க்கார அண்ணாவை காதலித்து ஊரை எதிர்த்து கொண்டு ஓடிப்போய் கல்யாணம் பண்ணி கொண்டாள்..

பெற்றவர்களை எதிர்த்து , வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்வது என்றால் அந்த காதல் அவ்வளவு பெரியதா என்ற கேள்வி அவ்வபொழுது வந்து போகும் அவள் மனதில்..

அவளுக்கும் காதல் மீது ஒரு ஆச்சர்யம் இருக்கும்.. இன்று அப்படிபட்ட இரு காதலர்களை , அவர்கள் ஒருவருக்கு ஒருவராய் உருகுவதை கண்டவளுக்கு மனதை பிசைந்தது..

ஒருவேளை தான் எடுத்த முடிவு தவறோ? இப்படி ஒருவருக்கு ஒருவராய் உருகுபவர்களை பிரிப்பது பாவம்...

நிறைய திரைப்படங்களிலும் கதைகளிலும் காதலின் புனிதத்தை பற்றியும் காதல் கை சேர வில்லை என்றால் அவர்கள் படும் வலியும் வேதனையும் அவள் பார்த்து இருக்கிறாள்.. கதைகளில் படித்தும் இருக்கிறாள்..

“அப்படி ஒரு வேதனையில் தான் இவன் இருக்கிறானோ? அதனால்தான் எனக்கு தாலி கட்டிய உடனேயே எங்கயோ சென்று விட்டான்.. அவன் மனம் எப்படி வலித்திருக்கும்? காதலித்தவளை விட்டு விட்டு அடுத்தவளை கரம் பிடிக்க எவ்வளவு துடித்திருப்பான்.. அதனால்தான் திருமணத்தன்று அவன் முகம் இறுகி கிடந்ததோ?

சே... நான் ஒரு மடச்சி.. இதை எல்லாம் யோசிக்காமல் விட்டு விட்டனே.. தேவநாதன் தாத்தா தன் பேரனை பற்றி அதுவும் அவன் ஒரு பெண்ணை விரும்புகிறான் என்று சொன்ன உடனேயே இந்த ஆட்டத்திற்கு ஒத்து கொண்டிருக்க கூடாது..

தன் கணவன் குடிகாரன் சூதாடுகிறவன் என்றால் கூட சகித்து கொண்டு இருந்திருக்கலாம்.. ஆனால் அவன் மனதில் வேற ஒரு பெண் இருக்கிறாள் என்று தெரிந்த பிறகு அவன் வாழ்க்கையில் விளையாடுவது ரொம்பவும் தவறு..

அவனை அவளிடம் இருந்து பிரிப்பது பாவம்.. போன ஜென்மத்தில் என்ன பாவம் பண்ணினனோ  இந்த ஜென்மத்தில் தாய் தந்தையை இழுந்து உறவினர்களை இழந்து அனாதை போல நின்று கொண்டிருக்கிறேன்..

இந்த ஜென்மத்திலும் இப்படி ஒரு பாவத்தை நான் செய்ய வேண்டாம்..

அவன் தாத்தாவின் கிடுக்கி பிடியால் அவருக்கு அடி பணிந்து ஏதோ அவசரத்துல என் கழுத்துல இந்த தாலியை கட்டிவிட்டான்..

அவனும் இதில் இருந்து எப்படி வெளி வருவது என்று முழித்து கொண்டிருக்கிறான்.. அவனுக்கு சங்கடத்தை கொடுக்காமல் நாமளாகவே பிரிந்து சென்று விடவேண்டும்... “ என்று எண்ணியவளுக்கு தேவநாதன் கண் முன்னே வந்து இடுப்பில் கை வைத்து அவளை பார்த்து முறைத்தார்...

“இதுக்கா நான் இவ்வளவு கஷ்டபட்டேன்...?  “ என்று கோபமாக பார்த்தார்..

உடனே அதை கண்டு அதிர்ந்தவள்

“ஐயோ ! இவருக்கு நான் என்ன பதில் சொல்வது? எல்லாருக்கும் நன்மையே செய்து வரும் இவர், தேவநாதன் தாத்தா தன் பேரன் விசயத்தில் மட்டும் ஏன் பிடிவாதமா இருந்து விட்டார்..

அவர் பேரன் விரும்புகிறவளையே அவனுக்கு மனைவி ஆக்கி இருந்தால்  இந்நேரம் இந்த ஜமீனே சந்தோஷத்தில் நிறைந்திருக்கும்..

எல்லாரும் சிரித்த முகமாக புது மருமகளை வரவேற்று இருப்பர்.. இதோ இந்த அறையில் அவளும் அவனுடன் இருந்திருப்பாள்... இவனும் உல்லாசமாக தன் திருமண வாழ்க்கையை அனுபவித்திருப்பான்..

எல்லாம் என்னால் தடை பட்டு போனது... தாத்தாக்கு இந்த காதலின் மகத்துவம் புரியவில்லை.. அவர் இரண்டு தலைமுறை பின் தங்கிய ஆள். அந்த காலத்தில் எளிதாக காதலர்களை பிரித்து வேறு திருமணம் செய்து வைத்திருக்கலாம்.

ஆனால் இந்த காலத்தில் காதலர்களை பிரிப்பது எவ்வளவு கடினம்.. அதனால் தானே வீட்டுக்கு தெரியாமல் ஓடி போவதும் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணி கொண்டு வீட்டுக்கு தெரியாமல் வாழ்வதும்.

அதனால் தான் தன் பேரனின் காதலை பற்றி இவர் கண்டு கொள்ளவில்லை.. ஆனால் நான் அப்படி இல்லை.. இந்த தலைமுறையை சேர்ந்தவள்.. இரு காதலர்களை பிரித்தால் அவர்கள் மனதில் வரும் வலி வேதனையை பற்றி அறிந்தவள்.

அந்த பெண்ணுக்கு இன்னும் உண்மை தெரிந்திருக்காதா இருக்கும்... அதை சொல்லத்தான் சென்றிருப்பானோ? அதற்குள் தாத்தா ப்ராட் பண்ணி அவனை இங்கு வரவழைத்து விட்டார்...  

நானும் தெரிஞ்சோ தெரியாமலோ இதில் நுழைந்து விட்டேன்... இப்படி ஒரு தப்பை நான் செய்திருக்க கூடாது..அந்த பெண்ணின் மனதில் எவ்வளவு ஆசை காதல் இருந்திருக்க வேண்டும்.. ஒரு பெண்ணுக்கு பெண்ணே எதிரியாக வரக்கூடாது...

ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையில் நானும் அறிவு இழந்து இந்த ஆட்டத்திற்கு ஒத்து கொண்டுவிட்டேன்.. ஆனால் இதை நிறுத்தியாகணும்..இதை இந்த தப்பை சரி செய்வது எப்படி என்று யோசிக்க வேண்டும்..”  என்று சற்று நேரம் தனக்குள்ளே புலம்பியவள் சிறிது நேரம் என்ன செய்யலாம் என்று மண்டையை குடைந்து யோசிக்க கடைசியில் ஒரு வழி கிடைத்தது.

சற்று முன் அவன் சொன்னதுதான்...

இந்த வீட்டை,  அவனை விட்டு சென்று விட வேண்டும்.. அதுவும் தாத்தாவிற்கு தெரியாமல்  சென்று விடவேண்டும்.. அவருக்கு என் முடிவு தெரிந்தால் எப்படியாவது தடுத்து விடுவார்.. எதையாவது பேசி என் மனதை கலைத்து விடுவார் அதில் கில்லாடி அவர்..

அதனால் அவருக்கு தெரியாமல் தான் சென்று விட வேண்டும்..நானே முன் வந்து டைவர்ஸ் கொடுத்துவிட்டால் அவன் விரும்பியவளையே எந்த பிரச்சனையும் இல்லாமல் மணந்து கொள்வான்..

ஆம் நான் வெளியேறி  விட வேண்டும்... அதுவும் நாளையே! “ என்று முடிவு செய்து கொண்டு கண்ணை மூட ஏனோ பெரும் பாரம் வந்து நெஞ்சை அடைத்து கொண்டதை போல இருந்தது..

ஆனாலும் அதை பின்னுக்கு தள்ளி கண்களை இறுக்க மூடி உறங்க முயன்றாள் நிலவினி...!

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!