நிலவே என்னிடம் நெருங்காதே!!-22

 


அத்தியாயம்-22

டுத்த நாள் மாலை ஐந்து மணி அளவில் தேவநாதன் அறைக்குள் பதுங்கி பதுங்கி நுழைந்தாள் நிலவினி..

தேவநாதன் அருகில் இருந்த தோட்டத்தில் காலார நடந்து கொண்டிருக்க அவருக்கு தெரியாமல் மெதுவாக பூனை நடை நடந்து அந்த அறைக்குள் வந்து கதவை லேசாக மூடியவள் கண்களால் அந்த அறையை துழாவினாள்...

அறையின் மூளையில் இருந்த அலமாரி தட்டுபட, அவள் கண்கள் மலர்ந்தது.. மெதுவாக நடந்து சென்று அந்த அலமாரியை திறந்து அவள் முந்தானையில் மறைத்து எடுத்து வந்ததை அந்த அலமாரியில் அவரின் ஆடைக்கு அடியில் வைத்தாள்..

மீண்டும் ஒரு முறை அது வெளியில் தெரிகிறதா என்று திருப்பி பார்த்து திருப்தியுடன் அதை மூடி விட்டு அதே பூனை நடையுடன் வெளியேறி சென்றாள்..

வரவேற்பறைக்கு வந்தவள் மீண்டும் ஒரு முறை கண்களால் துழாவ, அந்த அறை நிசப்தமாக இருந்தது.. எல்லாரும் அவரவர் அறையில் முடங்கி இருந்தனர்..மாலை ஆறு மணிக்குத்தான் வெளியில் வருவர்..

தேவநாதன் மட்டும் இந்த நேரத்தில் தோட்டத்தில் நடந்து கொண்டிருப்பார்.. அதனால் இந்த நேரத்தை பயன்படுத்தி கொண்டு அவள் திட்டட்த்தை செயல் படுத்த காத்திருந்தாள்...

திட்டமிட்டது என்னவோ சுலபமாகத்தான் இருந்தது.. ஆனால் அதை நிறைவேற்றுவது தான் இமயமலையையே புரட்டுவதை போல இருந்தது..

உடலை வருத்தி செய்யும் எவ்வளவு கடினமான வேலையை கூட அசால்ட்டாக செய்திருக்கிறாள் அவள்.. ஆனால் இது மனதால் செய்யும் வேலை.. அதுதான் அவளை வதைத்தது..

எவ்வளவு ஆசையாக தேவநாதன் தாத்தா  அவளை இங்கே அழைத்து வந்தார்.. எவ்வளவு கஷ்டப்பட்டு திட்டமிட்டு அவளை மருமகளாக்கி இந்த ஜமீன் உள்ளே  கொண்டு வந்தார்..

ஆனால் இன்று அவள் அவர் திட்டத்தில் தோற்றுவிட்டு அதையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு வெளியேற போகிறாள்.. அவர் பட்ட கஷ்டம் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போல வீணாக போய்விடுமே என்று மனதை பிசைந்தது..

அடுத்த நொடி அவள் கணவனாகியவன் முகமும் அந்த முகம் தெரியாத நிலா முகமும் சிரித்தபடி அவள் கண் முன்னே வர அவர்களின் சிரிப்பை அழிக்க நான் காரணமாகி விடக் கூடாது என்று மீண்டும் தன் மனதை இறுக்கிக் கொண்டாள் நிலவினி..

ஓரக்கண்ணால் தோட்டத்தை பார்க்க தேவநாதன் தோட்டத்தில் மறுபக்கம் நடந்து கொண்டிருந்தார்.. இதுதான் சரியான நேரம் என்று  மீண்டும் தனக்குள்ளே சொல்லிக் கொண்டவள் வேகமாக நடந்து அந்த வீட்டின் வாயிலை கடந்து  வெளியில் வந்து நடை பாதையின் வழியாக வெளிப்புற கேட்டை நோக்கி வேகமாக நடந்தாள்..

கிட்டத்தட்ட பாதி தூரம் நடந்திருப்பாள்.. அதுக்குள்ளயே அவளுக்கு வேர்த்து கொட்டியது.. கால்கள் அதற்கு மேல் நகர மறுத்தன.. அவளோடு வர மறுத்து அடம்பிடித்த கால்களை ஒருவாறு இழுத்து கொண்டு கேட்டை நோக்கி முன்னேற, அப்பொழுது கேட்டது அந்த குரல்..

“நிலா... அம்மாடி நிலா.... இங்க செத்த வாம்மா... " என்ற குரல்.. .தேவநாதன் தாத்தாவின் கணீர் குரல் அது..

அதைக் கேட்டு திடுக்கிட்டு அப்படியே  நின்றுகொண்டான் நிலா... 

“ஐயோ.. போச்சு... தாத்தா பார்த்துவிட்டாரே!! அவர் கண்ணில் படாமல் எப்படியாவது வெளியேறி விட வேண்டும் என்று எண்ணி இருக்க அதுக்கு தகுந்த மாதிரி அவரும் அந்த பக்கம் தானே இருந்தார்..

அப்புறம் எப்படி என்னை அதற்குள் கண்டுகொண்டார்.? இப்ப இவருக்கு என்ன பதில் சொல்லுவது?  இப்ப எப்படி வெளியேறுவது?” என்று புலம்பியவாறு திரும்பி அவர் இருந்த பக்கம் பார்க்க இவளைப் பார்த்து கையசைத்தவர் இவளை நோக்கி வேக நடையுடன் நடந்து வந்து கொண்டிருந்தார் தேவநாதன்..  

அதற்குமேல் கால்கள் தயங்காமல் அவரை நோக்கி நகர்ந்தன.. வேகமாக எட்டு வைத்து நடந்து அவரை அடைந்தவள்

“சொல்லுங்க தாத்தா... ஏதாவது செய்யுதா? ஏதாவது வேணுமா ? “  என்று தன்னை மறைத்துக் கொண்டே வினவினாள்..

அவளை ஒரு முறை ஊடுருவி பார்த்தவர்

“ஹ்ம்ம் நான் கொடுத்த எல்லா பொருளையும் பத்திரமா வச்சிட்டியாமா? “ என்று அவள்   கண்களை நேராக பார்த்து வினவினார்.. அதைக் கேட்டதும் தூக்கி வாரிப்போட்டது நிலவினிக்கு..  

நாக்கு ஒட்டிக்கொள்ள, கைகள் வெடவெடுக்க, தந்தி அடித்த உதடுகளை கஷ்டபட்டு இயல்பாக்கி

“தா.... தா.......தாத்தா..... அது வந்து...... “ என்று  இழுத்தாள்

“ஹ்ம்ம்ம்ம் சொல்லுமா... எல்லாத்தையும் பத்திரமா வச்சுட்டியா?  “ என்றார் புருவத்தை உயர்த்தி..

அவளோ தலையை குனிந்து கொள்ள

“இல்லையே.. இன்னும் ஒன்னு பாக்கி இருக்கே... அதையும் எடுத்து வச்சுட்டு போய்டுமா. “ என்றார் அவளை நேராக பார்த்து..

அதை கேட்டு திடுக்கிட்டவள்

“தாத்தா கொடுத்த நகைகள் எல்லாத்தையும் வச்சுட்டுத்தானே போறோம்.. வேற எதை சொல்றார்? “ என்று புரியாமல் அவர் முகம் நோக்க,

“என்னம்மா... எல்லாத்தையும் வச்சிட்டேனு சொன்ன.. ஆனால் உன் கழுத்துல தொங்குதே மாங்கல்யம்... அது இந்த ஜமீன்க்கு சொந்தமானது... இந்த ஜமீன் மருமகளுக்கு மட்டுமே சொந்தமான மாங்கல்யம்... அதை கழட்டி வைக்காமல் போறியே.. அதோட விலை என்னனு உனக்கு தெரியுமா?

இது இந்த ஜமீனின் பரம்பரை தாலி.. இந்த மாதிரி வேற எங்கயும் கிடைக்காது.. இதுக்கு மார்க்கெட்ல பயங்கர ரேட்டு.. ஓ அதனால்தான் இதை எடுத்துகிட்டு போறியா?? இதை  வித்தால் இந்த தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்னு நினைப்பாக்கும் ! “ என்று நக்கலாக சிரித்தார்..

“தாத்தா.... “  என்று கோபமாக அவரை முறைத்து பார்த்தாள் நிலவினி..

“எதுக்குமா கோவப்படற? உனக்கு இந்த பொருள் மீது ஆசை இல்லைனா அதையும் கழட்டி கொடுத்துட்டு போ... “ என்றார் மிடுக்குடன்...

அவளுக்கோ அதை கழட்ட கை வரவில்லை...

“விரும்பி கட்டினானோ பிடிக்காமல் கட்டினானோ அத்தனை பேர் முன்னிலையில் அக்னியை சாட்சியாய் வைத்து இன்ப துன்பங்களில் இணை பிரியாமல் அவனுடன் என்றும் இருப்பேன்.. புகுந்த வீட்டின் பெருமையை காப்பாற்றுவேன் என்று உறுதி மொழி எடுத்து கொண்டு அத்தனை பேர் முன்னாடியும் தலை தாழ்த்தி இந்த தாலியை வாங்கி கொண்டேனே !!...

அப்படி  இருக்க, அந்த உறுதிமொழியை நான் கொடுத்த வாக்கை நான்கே நாட்களில் எப்படி உடைப்பதாம்..??

அவன்  தாலியை கழட்டி எப்படி கொடுப்பதாம்? கை வரவில்லை அவளுக்கு...

“என்னமா இன்னும் தயக்கம்? அது வெரும் தங்க செயின் மட்டும்தானே.. நான் கொடுத்த பல கோடி மதிப்புள்ள வைரத்தையே வேண்டாம்னு வச்சுட்ட.. இது வெறும் சில லட்சங்கள் மட்டுமே போகும்.. இதை வைத்து என்ன செய்ய போகிறாய்.

கழட்டி கொடுத்து விடு... “ என்றார் அதே மிடுக்கு + நக்கல் பார்வையுடன்..

அவள் தலை தாழ்ந்தது..

“சாரி..... தாத்தா...... இதை மட்டும் என்னால் கழட்ட முடியாது... “ என்றாள்  இறங்கிய குரலுடன்.

“ஹ்ம்ம்ம் அப்பனா இந்த தாலியை மதிக்கிற? அப்பனா இந்த  ஜமீன் கௌரவத்தை பத்தியும் கொஞ்சம் உன் மண்டையில உறைச்சிருக்கணுமே...! 

ஏம்மா நிலா.. நீ புத்திசாலினு நினைச்சேன்... ஆனால் அது இல்லைனு நிரூபிச்சிட்டியே.. “ என்றார் வருத்தத்துடன்...

“தாத்தா.... அது வந்து....... அவர் பாவம் தாத்தா... நான் எங்கயாவது போய்டறேன்.. “ என்றாள் தயக்கத்துடன்...

“ஹ்ம்ம்ம் ஏன் திடீர்னு இந்த முடிவு? “ என்றார் அவளை ஆராய்ந்தவாறு..

“இல்ல... உங்க பேரன் ஏற்கனவே ஒரு பொண்ணை காதலிக்கிறார்... இரண்டு காதலர்களை பிரிப்பது பாவம் தாத்தா...நீங்க எவ்வளவு நல்லவர்.. எல்லாருக்கும் நல்லது தானே செய்யறீங்க.. உங்க பேரன் விசயத்துல மட்டும் ஏன் தாத்தா இப்படி நடந்துக்கறீங்க..

அவர் மனசுக்கு புடிச்ச பொண்ணையே அவருக்கு கட்டி வச்சிருக்கலாம் இல்ல... ஏன் இப்படி பிடிவாதமா வரட்டு கௌரவத்தை பார்த்துகிட்டு காதலை வெறுத்து ஒதுக்கறீங்க.. காதலிப்பது ஒன்னும் தப்பில்லை தாத்தா... மனசுக்கு புடிச்சவங்களை காதலிப்பது கௌரவ குறைச்சலா நினைச்சு ஏன் இப்படி நடந்துக்கறீங்க..

இன்னும் பழைய பஞ்சாங்கமாவே இருக்காதிங்க.. இந்த ஜெனரேசனுக்கு தகுந்த மாதிரி மாறுங்க... “ என்று படபடவென்று பொரிந்து தள்ளினாள் நிலா..

லேசாக கோபத்தில் அவள் முகம் சிவந்து போய் கிடந்தது... அநீதியை கண்டு பொங்கி எழுபவளை போல மூக்கு விடைக்க உதடு துடித்தது.. அவளின் அந்த சிவந்த முகத்தையே ரசனையுடன் பார்த்தவர்

“பரவாயில்லையே..! இந்த தேவநாதன் தேர்வு ஜோடை போவல.. என் பேரனுக்கு ஏத்த ஜோடியத்தான் தேடி புடிச்சிருக்கேன்..என்னை எதிர்த்து என் முகத்துக்கு நேரா நீ செய்யறது தப்புடா மடையானு சொல்ற தைர்யம் என் பேரனுக்கு மட்டும்தான் இருக்கு...

அவனுக்கு சரி சமமா அவன் பொண்டாட்டியும் என் முகத்துக்கு நேரா என்னை எதிர்த்து சொல்றானா ??  என்னனனன  ஒரு ஜோடி பொருத்தம். !!.

டேய் தேவநாதா.. உன் கணிப்பு எப்பவும் தப்பாகாது ...உன் பேரனுக்கு சரியான இணையைத்தான் சேர்த்திருக்க... “ என்று  தனக்குத்தானே வாய் விட்டு மெச்சி கொண்டவர் எதிரில் இருந்தவளை பார்த்து

“ஹ்ம்ம்ம் சூப்பர் அம்மணி.. இப்படி இப்படி இப்படித்தான் நிக்க வச்சு கேள்வி கேக்கோணும் யாரா இருந்தாலும்... எனக்கு பிறகு உன் புருசனையும் உன்னாலதான் கட்டு படுத்த முடியும்னு இந்த நொடியே உறுதி ஆய்டுச்சு... “ என்று மீசையை தடவி விட்டு கொண்டு சிரித்தார் தேவநாதன்...

“தாத்தா... நான் என்ன சொல்லிகிட்டிருக்கேன்.. நீங்க என்ன உளறி.... “ உளறிகிட்டிருக்கிங்க என்று சொல்ல வந்தவள் அப்படியே நாக்கை கடித்து பாதியில் நிறுத்தி கொண்டாள்..

அவர் எவ்வளவு பெரிய ஆள்.. அவர் பேச்சுக்கு எட்டு பட்டியும் அடங்கி போகும்.. அவர் எதிரில் நின்று பேசவே தயங்குவர் என்பது அவளுக்கும் தெரியும்.. அப்படி பட்டவரை உளறல்.. என்று சொல்ல எப்படி தைர்யம் வந்தது என்று அவசரமாக தன்னையே திட்டி கொண்டாள்..

அவரோ அவள் சொல்ல வந்ததை புரிந்து கொண்டு

“ஹா ஹா ஹா என் பேச்சை உளறல் என்று சொன்னதும்  என் பேரனுக்கு அடுத்து நீதான் அம்மணி.. அதுலயும் நீ உன் புருஷனை விட்டு கொடுக்கல.. அவனுக்கு சமமாதான் இருக்க... “ என்று உல்லாசமாக சிரித்தார்...

அதை கண்டு திகைத்து போனாள் நிலவினி....

அவள் உளறியதற்கு கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் கோபம் கொண்டு அவளை திட்டாமல் ஜோவியலாக எடுத்து கொண்டு குறும்பாக சிரித்து கொண்டிருக்கும் அந்த தலை நரைத்த ஜமீன்தாரை காண அவளுக்கு வியப்பாக இருந்தது..

கொஞ்சம் கொஞ்சமாக அவளும் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தாள்...

“ஸாரி.. தாத்தா... நான் அந்த அர்த்தத்தில்... அப்படி சொல்ல வில்லை.... “ என்றாள் தயக்கத்துடன்..

“ஹா ஹா ஹா இதுக்கு எதுக்கு மன்னிப்பு கேட்கற அம்மணி..?  இப்படித்தான்  தைர்யமா மனசுல பட்டத முகத்துக்கு நேரா நேர்ல கேட்கோணும்... அதை விட்டுபோட்டு யாருக்கும் தெரியாமல் புற முதுகிட்டு வீட்டை விட்டு ஓடக்கூடாது. “ என்று நாசுக்காக அவள் தலையில் ஒரு குட்டையும் வைத்தார்...

அதை கேட்டு அவள் முகம் வாடிவிட

“ஹ்ம்ம்ம் சாரி தாத்தா.. அது வந்து.... என்னவோ என்னால் இங்க எல்லாருக்கும் கஷ்டம் னு பீல் ஆச்சு.. எதுக்கு எல்லாருக்கும் பாரமா இருக்கணும்னு கிளம்பிட்டேன்... நான் பண்ணினது தப்புதான்.. “ என்றாள் வேதனையுடன்..  

“ஹா ஹா ஹா பிரச்சனையை கண்டு ஓடி ஒளிஞ்சுக்க கூடாது அம்மணி.. அதை தைர்யமா எதிர்த்து நின்னு ஜெயிக்கோணும்.. பிரச்சனைக்கே பிரச்சனை கொடுக்கோணும்...

ஹ்ம்ம்ம் எனக்கொரு பிர்ச்சனைனா அதை நான் தைர்யமா எதிர்த்து பேஸ் பண்ணுவேன் தாத்தா .. இது அடுத்தவங்க பிரச்சனை.. என்னால அடுத்தவங்களுக்கு வந்திருக்கும் பிரச்சனை..

அதை கண்டு நான் ஓடி ஒளியலை.. என்னால் அடுத்தவங்களுக்கு தொல்லை வேண்டாம்.. பிரச்சனை வேண்டாம் என்று விட்டு கொடுக்கிறேன்.. விலகி போறேன்... “ என்றாள் அவரை நேராக பார்த்தவாறு மிடுக்குடன்...

“ஹ்ம்ம் பரவயில்லை.. உன் தாத்தன் உன்னை நல்லா பேசற மாதிரிதான் வளத்தி வச்சிருக்கான்.. என் பேரனுக்கு இணையா  வாய்க்கு வாய் பேச, வாய் சண்டையிட பொருத்தமானவ தான் நீ அம்மணி.. என் பேரன் வாழ்க்கை இனிமேல் அமோகமா இருக்கும்.. “ என்று கண் சிமிட்டி உல்லாசமாக சிரித்தார்...

“ப்ச்.... தாத்தா... நான் என்ன சொல்லிகிட்டிருக்கேன்.. நீங்க என்ன பேசிகிட்டிருக்கீங்க.. உங்க பேரனுக்கு பொருத்தமான துணை நான் இல்லை.... அது... அவருக்கு பொருத்தம் அவர் விரும்பும் அந்த நிலா பொண்ணுதான்..

ப்ளீஸ் தாத்தா என்னை விட்டுடுங்க.. அவர்  விரும்பற பொண்ணையே அவருக்கு கட்டி வைங்க... இவ்வளவு விவரமா பேசற நீங்க ஏன்தான் காதலை பற்றி மட்டும் புரிஞ்சு மாட்டேங்கறீங்க? காதலுக்கு ஏன் எதிரியா இருக்கீங்களோ... ? “ என்றாள் பாவம் மற்றும் வருத்தத்துடன்..

“ஹா ஹா ஹா... நான் காதலுக்கு எதிரியா? நல்ல ஒரு அடைமொழி அம்மணி.. நின்னுகிட்டே இருக்க கால் வலிக்குது... வா.. அப்படி செத்த உட்கார்ந்து பேசலாம்... “ என்றவர் அவள் பதிலுக்கு நிற்காமல் முன்னே நடக்க, அவளும் அவரை பின் தொடர்ந்தாள்..

அருகில் அமர்வதற்காக போட்டு இருந்த நாற்காலிகள் இருக்க, அதில் ஒன்றில் அமர்ந்தவர் அவளையும் அமர சொன்னார்...

பின் அவளை நேராக பார்த்தவர்

“என்ன அம்மணி சொன்ன? காதலுக்கு நான் எதிரியா?

ஓ.. ஜமீன்தார் ன உடனே உனக்கு அந்த படிக்காத பண்ணையார் தோற்றம் வந்துவிட்டதாக்கும்... கௌரம் பார்த்துகிட்டு  இப்ப எல்லாம் வேற ஜாதியில் தங்கள் ஜாதியை விட  கீழ் ஜாதி பையனையோ பொண்ணையோ கல்யாணம் பண்ணிகிட்டா அவங்களை தேடி பிடிச்சு  கௌரவ கொலை செய்யற பழங்காலத்து ஆள் னு நினைச்சுபுட்டியாக்கும்....

அம்மணி... இந்த தேவநாதன் ஜமீன்தார் பொறந்தது வேணா இரண்டு தலைமுறை தள்ளி இருக்கலாம்... ஆனால் நானும் இப்ப இருக்கிற மில்லேனியல்ஸ்க்கு சம்மா அப்க்ரேட் ஆகி இருக்கிறவன் தான் அம்மணி..

உலகத்துல டாப் டென் பிசினஸ் மேன்ஸ் பத்தியும் தெரியும்.. நம்ம நாட்டுல புகழ்பெற்று விளங்கும் பிசினஸ் மேன்ஸ் முகேஸ் அம்பானி , ரத்தன் டாட்டா , ஷிவ் நாடார் போன்றவங்களை பற்றியும் இப்ப இருக்கிற கம்யூட்டர் துறையில் புகழ்பெற்ற பில்கேட்ஸ், சுந்தர் பிச்சை பத்தி எல்லாம் எனக்கும் கொஞ்சம் ஞானம் இருக்கு  அம்மணி..

அப்புறம் சொன்னியே காதல் பத்தி என்ன தெரியும்னு? நான் காதலுக்கு எதிரினு..  

நான் இளைஞனா இருந்தப்பயே  சேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் ஐ கரைச்சு குடிச்சிருக்கேன்...

ரோமியோ ஜூலியட் இருவரும் முதன் முதலில் பார்த்து மனதை பறிகொடுத்த சீன் ஐ மட்டும் அத்தனை தரம் படிச்சிருக்கேன்.. அதே போல அவர்கள் பிரியும் அந்த கடைசி சீன் மட்டும் இன்னும் என் மனதில் அப்படியே பதிஞ்சிருக்கு..

அவ்வளவு ஏன் ? இன்றைய கண்டதும் காதலுக்கு உதாரணமாக சொல்லும் நம்ம இதிகாசமான ராமாயணத்துல வரும் அன்னலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள் என்று கம்பர் வர்ணித்த ராமன் சீதாவின் காதலை பற்றி தெரிந்தவன்..

இன்றைய கண்ணும் கண்ணும் நோக்கியா ல இருந்து ஐயோ பத்திகிச்சே, ரௌடி பேபி னு இன்றைய தலைமுறை காதல் னு கொண்டாடும் கன்றாவதி வரைக்கும் எனக்கும் கொஞ்சம் தெரியும் அம்மணி...

அப்புறம் காதல் னாலே ஞாபகத்துக்கு வருவது  வைரமுத்துவின் கவிதைகள்.. அதில் உனக்கு எந்த கவிதை சொல்லணும்.. சொல்லு.. அத்தனையும் எனக்கு மனப்பாடம்..

காதலித்து பார் கவிதை மட்டும் பல நூறு முறை படித்திருக்கிறேன்....

 

காதலித்து பார்...

உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும்…
உலகம் அர்த்தப்படும்... ராத்திரியின் நீளம் விளங்கும்….

உனக்கும் கவிதை வரும்…
கையெழுத்து அழகாகும்….தபால்காரன் தெய்வமாவான்…!!

 

என்ன ஒரு எழுத்து அவருடையது.. அதே போல இன்னொரு கவிதை..

 

காதலுக்கு கண் இல்லை என்பது  பொய் !

உனது கண்களை பார்த்த பிறகுதான் காதலிக்கவே தொடங்கினேன் !!

 

இதுவும் வைர முத்து கவிதைதான்..

இப்படி காதலை கரைத்து குடித்த என்னை பார்த்து நான் காதலுக்கு எதிரி னு சொல்லிட்டியே அம்மணி... குட் ஜோக்..

உனக்கு ஒன்னு தெரியுமா? நானும் காதலித்தவன் தான்.. இன்னும் காதலித்து கொண்டிருக்கிறவன் தான்..

என் பொண்டாட்டி மணிகண்ணை.. திகட்ட திகட்ட காதலித்தவன்.. அவளை பார்த்த உடனேயே காதலில் விழுந்து அவளையே கை பிடித்து இன்று வரை காதலித்து கொண்டிருக்கிறவன் இந்த தேவநாதன் ஜமீன்தார் அம்மணி...

அப்படி பட்ட என்னை போய் இப்படி ஒரு வார்த்தை சொல்லிபுட்டியே.. “ என்றார் வருத்தமாக.

அவர் பேசியதை எல்லாம் கேட்டு வாயடைத்து அமர்ந்து இருந்தாள் நிலா...

அவருக்குள் இப்படி ஒரு ஞானம் இருக்கும் என்று அறிந்திருக்கவில்லை அவள்...

அவள் தாத்தா ஒரு பழமை வாதி... இந்த காலத்து ஜெனரேசனை பற்றி  எல்லாம் அவ்வளவாக தெரிந்திருக்காது.. அவள் தன் தாத்தாவை போலவே இவரையும் எண்ணி இருந்தது எவ்வளவு பெரிய மடத்தனம் என்று புரிந்தது...

அவரின் பேச்சை கேட்டு பேச்சிழந்து போனவள் மெல்ல இதழ் திறந்து

“வாவ்... சூப்பர் தாத்தா.... அப்புறம் ஏன் உங்க பேரன் காதலை மட்டும் ஏத்துக்க மாட்டேங்கறிங்க? “ என்றாள் யோசனையுடன்..

“ஹா ஹா ஹா.. .என் பேரன் காதலித்து இருந்தால் முதலில் சந்தோஷபடுவது நான்தான் நிலா பொண்ணே.. அவள் விரும்பியவளையே அவனுக்கு கட்டி வச்சிருப்பேன்.. “

“என்ன தாத்தா சொல்றீங்க? எனக்கு ஒன்னும் புரியலையே தாத்தா? “ என்றாள் குழப்பமாக.

“ஹா ஹா ஹா உனக்கு மட்டும் இல்ல அம்மணி.. இந்த காலத்து பசங்க எல்லாருமே குழப்பத்துலதான் சுத்திகிட்டு இருக்குதுங்க...

நான் காதல் னு சொன்னது காதலை.... உண்மையான காதலை அம்மணி..

என் பேரன் உண்மையா அந்த பட்டணத்துக்காரியை காதலித்து இருந்தால் நானே முன்னின்று அவன் கல்யாணத்தை நடத்தி வைத்திருப்பேன்.. “ என்றார்

அதை கேட்டு அதிர்ந்து போனாள் நிலா..

“என்ன உளறார் இவர்..?  உண்மையா காதலிக்கவில்லையா? தினம் தினம் இருவரும் அப்படி கொஞ்சி கொள்கிறார்களே ? ஒருவருக்கு ஒருவராய் உருகி கொள்கிறார்களே..நான் தான் என் கண்ணாலயே பார்த்தும் காதலயும் கேட்டு கொண்டிருக்கிறேனே.

அப்படி பட்டவர்களிடம்  காதல் இல்லை என்றால் என்ன அர்த்தம்? இவருக்கு மூளை குழம்பி விட்டதோ?  “ என்று அவசரமாக ஆராய்ந்தாள்..

“என்ன அம்மணி...?  இந்த கிழவனுக்கு மூளை குழம்பி விட்டதா? “ என்று  யோசிக்கிறியா? அதெல்லம் தெளிவாகத்தான் இருக்கேன்..உனக்கும் தெளிவா சொல்றேன் கேள்..

உன் புருஷன் அந்த கிறுக்கு பய காதலிக்கிறேன் னு சொல்றானே... அவன் கண்ண பார்த்திருக்கியா? அதுல கொஞ்சமாவது காதலிப்பதற்கான ஜாடை தெரியுதா? “ என்று  புருவத்தை உயர்த்தினார்..

“ம்ம்ம்ஹூம்.. நான் எங்க அந்த நெட்ட கொக்கு கண்ண பார்த்தேன்...?  என்னை பார்த்தாலே எரித்து விடற மாதிரி பார்க்கறான். அவனை  கண்டாலே எனக்கு உதறுது.. இதுல அவன் கண்ணு எப்படி இருந்தது? மூக்கு எப்படி இருந்தது? முளி எப்படி இருந்தது என்றா பார்க்க முடியும்? “ என்று உள்ளுக்குள் நொடித்து கொண்டாள் நிலா..

“சரி விடு.. உனக்கு புரியற மாதிரியே இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்றேன்... உன் புருஷன் அந்த பட்டணத்து  புள்ளைய காதலிக்கல நிலா பொண்ணே... அந்த பொண்ணோட அழகுலயும் கவர்ச்சியிலும் மயங்கி கிடக்கறான்..

தாத்தா சொல்றேனு தப்பா எடுத்துக்காத... பச்சையா சொல்லணும்னா அந்த புள்ளையோட வழவழனு இருக்கற இடுப்பையும் வாரம் ஒரு தரம் ப்யூட்டி பார்லருக்கு போய்ட்டு மசாஜ் செய்து பளபளனு வச்சிருக்கிற உடம்பையும் பார்த்து மயங்கி போய் கிடக்கறான்...

அதுக்கு காதல் னு வேற சொல்லிக்கிறான்.. இவன் னு இல்ல.. இன்னைக்கு பல பேர் இப்படித்தான் சுத்திகிட்டு இருக்காங்க.. ஒரு பொண்ணையோ பையனையோ பார்த்த உடனே அவங்க அழகுல மயங்கி தலை குப்புற விழுந்திடறாங்க..

உடனே  அதுதான் காதல் னு முத்திரை குத்திடறங்க.. அதுக்கு தகுந்த மாதிரி இந்த சினிமா படத்துலயும் கையை தொட்ட உடனே சாக் அடிக்கிற மாதிரியும் கண்ணுல பார்த்த உடனே காதல் வந்திட்ட மாதிரியும் காட்ட அதை இந்த பயலுவளும் புடிச்சிக்கிறானுங்க..

உண்மையான காதல் மனசை பார்த்து வரணும் அம்மணி...உடம்பை பார்த்து வரக்கூடாது.. அதுக்கு பேர் காதல் இல்லை.. காமம்... கவர்ச்சி.. அட்ராக்சன்.. எப்படி வேணா சொல்லலாம்..

கவர்ச்சியோ, காமமோ உடம்புல வேகம் இருக்கிற வரைக்கு நம்ம கூட இருக்கும்.. உடம்புல ரத்தம் சுண்டி வேகம் குறைஞ்சாலோ இல்ல கொஞ்ச நாள் ஆனாலோ அது சலிப்பு வந்திடும்..

அதனால்தான் உருக உருக காதலிச்சேனு சொன்ன முக்கால்வாசி புள்ளைகதான் கல்யாணம் ஆகி ஒரு வருசத்துலயே டைவர்ஸ் னு கோர்ட்ல நின்னுகிட்டிருக்குதுக..

என் பேரன் மட்டும் என்ன இதுக்கு விதி விலக்கா? அந்த வெள்ளத்தோல்க்காரிய, வழவழனு மெலுகு சிலையை பார்த்த உடனே தொட்டு பார்க்கணும்னு உள்ளே சூடு ஏறி இருக்கும்...

அதை காதல் னு புடிச்சு தொங்கிகிட்டிருக்கான்.. அப்புறம் இன்னொன்னு அம்மணி..  அவன் காதலிக்கிறேன் னு சொல்றதுக்கு இன்னொரு காரணம் என்னை ஜெயிக்க..” என்று சொல்லி சிரித்தவாறு நிறுத்தினார்..  

“உங்களை ஜெயிக்கவா? அது ஏன் தாத்தா? “ என்றாள்  இன்னும் குழப்பத்துடன்..

அருகில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்தவர்

“ஹ்ம்ம்ம் அது ஒரு குட்டி கதை நிலா மா.. அதை இன்னொரு நாள் சொல்றேன்.. அவன் என்கிட்ட சபதம் செஞ்சிருக்கான்.

அந்த சபதத்தை நிறைவேற்றத்தான் அந்த பட்டணத்து புள்ளைய காதலிக்கிறேனு சொல்லி  என் கண் முன்னாடி நிறுத்தினான்..

அதுக ரெண்டு பேர் கண்ணை பார்த்ததுமே கண்டு புடிச்சிட்டேன் .. அது நீயின்றி நான் இல்லை னு சொல்லும் ஆழமான காதல் இல்லை.. ஐயோ பத்திகிச்சேனு சொல்ற மின்சார காதல் னு..

மின்சாரம் நின்னு போச்சுனா அந்த காதலும் கவர்ச்சியும் காணாம போய்டற கவர்ச்சி காதல் னு புரிஞ்சுகிட்டேன்..

அந்த புள்ளையுமே இவனை உருகி ஆத்மார்த்தமா காதலிக்கல.. என் பேரனுடைய வளமான பின்புலத்தையும் வனப்பபான அவன் தேகத்தையும் பார்த்து இவனை புடிச்சிகிட்டா.. அதுக்கு காதல் னு ம் பேர் சொல்லிக்கிதுங்க.. “ என்றார் ஒரு வெறித்த பார்வையுடன்...

“அம்மணி.. நான் காதலுக்கு எதிரி னு சொல்றியே.. ஒன்ன யோசிச்சு பார்த்தியா... என் மவன் உன் மாமனார்.. அவனோடது காதல் கல்யாணம்தான்.. போன தலைமுறையிலயே அவன் காதலை ஏத்துகிட்டு அவனுக்கு புடிச்ச உன் மாமியார் மனோகரிய கல்யாணம் பண்ணி வச்சேன்..

ஏன்னா அவன் உண்மையா காதலிச்சான்..

மனோகரியும் ஆரம்பத்தில் என் பையன் மீது மதில் மேல் பூனையா அதாவது பிப்டி பிப்டி.. காதல் இருக்கா இல்லையானு தெரியாம ஜமீன் வாழ்க்கைக்கும் பகட்டுக்கும்  ஆசைபட்டுதான் என் பையன் கூட சுத்திகிட்டிருந்தானு தெரிஞ்சுகிட்டேன்.. அதுக்குத்தான் என் மவனை அந்த பொண்ணு வேண்டாம்னு முதல்ல தடுத்தேன்..

ஆனால் அவன் காதல் உண்மையானது.. அவன் தைர்யமா என்னை எதிர்த்து நின்னான்.. அந்த புள்ளைய கட்டிக்கலைனா என் சம்மதம் இல்லாமல் வீட்டை விட்டு போய்டுவேனு உண்ணாவிரதம் இருந்தான்..

இவன் காதல் உண்மை.. இந்த காதல் என் மருமவளையும் மாத்திடும்னு துணிஞ்சு ரெண்டு பேருக்கும் கண்ணாலத்தை பண்ணி வச்சேன்..

என் மருமவளும் ஆரம்பத்துல கொஞ்சம் அப்படி இப்படி பகட்டா ஆடம்பரமா இருந்தாலும் அவ கேட்டதை எல்லாம் கொடுகக போக அவளுக்கும் அது எல்லாம் திகட்டி போச்சு.. புருசனோட உண்மையான அன்பை புரிஞ்சுகிட்டு அவனோட சந்தோஷமா வாழ ஆரம்பிச்சா...

இதுல அதிசயம் என்னன்னா என்னை எதிர்த்து பேசாத என் மவன் அவன் காதலுக்காக என்ன எதிர்த்து நின்னு சாதிச்சான்.. ஆனால் என்னை எப்பவும் எதிர்த்து நிக்கும் என் பேரன் நான் கொஞ்சம் கிடுக்கி பிடி போடவும் அவன் காதலை மறந்து மறுபேச்சு பேசாம உன் கழுத்துல தாலைய கட்டிட்டான்..

இதுல இருந்தே தெரியல உன் புருஷன் காதல் எவ்வளவு ஆழமானது என்று..? .

அவன் உண்மையா காதலிச்சிருந்தா காதலித்தவளை தவிர வேற ஒருத்தி கழுத்துல தாலி கட்ட கை வராது அம்மணி.. மண மேடையில் கூட எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு எழுந்து போய்ருக்கலாம்..

ஜமீன் கௌரவம் மரியாதை என்று பார்த்துகிட்டு தான் காதலித்தவளை மறந்து  வேற ஒருத்திக்கு தாலி கட்டவும் அவள் கரம் பிடிக்கவும் அக்னி சாட்சியா காலை பிடித்து மெட்டி போடவும் கை வந்திருக்காது.

ஆனால் அவன் அதை  எல்லாம் செய்தான்.. அதில் இருந்தே தெரியலை அவன் காதல் எவ்வளவு ஆழமானது என்று..  

வடிவேல் காமெடியில் சொல்ற பில்டிங் ஸ்ட்ராங்.. பேஸ்மென்ட் வீக் னு மாதிரி உன் புருஷன் காதலுக்கு பில்டிங் ம் வீக்.. பேஸ்மென்ட் ம் வீக்.. இப்படி பட்ட காதல் எத்தனை நாளைக்கு நிலைத்து நிக்கும்...

சீட்டு கட்டு மாளிகை மாதிரி லேசா காத்தடிச்சாலே போதும்.. எல்லாம் சரிஞ்சு போய்டும்.. ஆனால் அப்படி சரிஞ்சு விழறப்ப, வாழ்க்கையை தொலச்சுட்டு உட்கார்ந்து புலம்பி ஒரு புரயோஜனும் இல்லை..

அவன் வாழ்க்கை அப்படி ஆய்டக்கூடாது என்ற அக்கறையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தேன்..

அவன் நல்ல முறையில் சொன்னால் கேட்க மாட்டான்.. இன்னும் தலைக்கு மேல ஏறி உட்கார்ந்துக்குவான்.. அதான் சொன்னே னே ஆடற மாடு பாடற மாடு னு... அவன அவன் வழிக்கே போய்தான் திறுத்த முடியும்.. அதுக்குத்தான் என் ராணியா உன்னை இந்த ஆட்டத்துக்கு உள்ள கொண்டு வந்திருக்கேன்..

உன் மாமனார் கண்ணுல இன்னும் உன் மாமியாரை பார்த்தால் காதல் பொங்கி வழியும்.. அதே உன் புருசன் கண்ணுல பார்.. துளி காதல் இருக்காது.. மாறாக என்னை ஜெயிக்க வேண்டும் என்ற வெறி தான் இருக்கும்.

தகரத்துக்கும் தங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாம தகரத்தை தங்கம்னு நம்பிகிட்டிருக்கான் அந்த மடையன்.. உண்மையான தங்கத்தை அவனுக்கு காட்டத்தான் இந்த அவசர கல்யாணம் அம்மணி..

நீ ஒரு உண்மையான தங்கம்னு உன்னை பார்த்த உடனே கண்டுகிட்டேன்...

அதனால் தான் உன்னை அவன் முன்னால் கொண்டு வந்தது.. இந்த பய சீக்கிரமே இந்த தங்கத்தை கண்டுக்குவான் அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருக்கணும்.. என்ன புரிஞ்சுதா? “ என்று பொறுமையாக விளக்கி கூறினார்...

அதை கேட்டு திகைத்து போனாலும் அவளுக்கு இன்னும் அவர் சொல்லுவதை நம்பமுடியவில்லை.. அப்படி எல்லாம் சும்மா டைம் பாஸ்க்கு காதலிக்க முடியுமா? போனிலயே அப்படி உருகி கொள்கிறார்களே.. “ என்று யோசனையாக இருந்தது..

அவள் முகத்தில் இருந்த குழப்ப ரேகைகளை கண்டவர்

“என்ன நிலா பொண்ணே...இன்னும் இந்த தாத்தா சொன்னதை ஏத்துக்க முடியலையா? என் கணிப்பு கரெக்ட் னா நேத்து நைட் அவன் உன்னை வெறுப்பேத்ததான் அப்படி அந்த புள்ளை கிட்ட பேசி இருக்கிறான்.. நீயும் அதுக்கு தகுந்த மாதிரி மூஞ்சை சுருக்கி இருப்ப..

உடனே உன் நல்லவ மனசு எனக்கு எதிரா திருப்பி கிட்டு அவனுக்கு சாதகமா உன்னை இந்த வீட்டை விட்டு  ஓட வச்சிருக்கு.. சரியா?” என்றார் சிரித்தவாறு..

நடந்ததை நேரில் பார்த்த மாதிரி சொல்லும் அவரையே இமைக்க மறந்து பார்த்தவள்

“எப்படி தாத்தா... நடந்ததை நேரில் பார்த்த மாதிரி அப்படியே சொல்றிங்க..” என்றாள் ஆச்சர்யமாக..

“ஹா ஹா ஹா அதுதான் இந்த தேவநாதன் ஜமீன்தார்.. நீ ஒன்னு செய்.. இன்னைக்கு நைட் அவன் அந்த புள்ளைய கொஞ்சறப்ப நீ ஒரு ரியாக்சனும் காட்டாம சிரிச்சுகிட்டே இரு..

உன்னை அப்படி பார்த்ததும் அவன் மூஞ்சு போகும் போக்கை பார்... அதுல இருந்தே தெரிஞ்சிடும் அவன் உன்னை வெறுப்பேத்தத்தான் அப்படி கொஞ்சறான் னு “ என்று கண் சிமிட்டி சிரித்தார் தேவநாத ஜமீன்தார்..! 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!