நிலவே என்னிடம் நெருங்காதே!!-24

 


அத்தியாயம்-24

நிலவினி- தேவநாதனுக்கு சொந்தமான ஜமீனுக்கு உட்பட்ட கிராமங்களில் ஒன்றில் பிறந்தவள்.. அவள் தாத்தா ராமசாமி தேவநாதனுக்கு பள்ளி தோழன்...

பள்ளியில் படிக்கும் பொழுது தேவநாதன் தான் ஒரு ஜமீன் வாரிசு என்று பெருமை பாராட்டாமல் எல்லாருடனும் இயல்பாக பழகுவார்.. அப்படித்தான் அவர் வகுப்பு தோழன் ராமசாமி மீது அவருக்கு நட்பு மலர்ந்தது..

சிறுவயதில் இருந்தே இருவரும் ஒன்றாக படித்தவர்.. பத்தாம் வகுப்புக்கு பிறகு மேல படிக்க வசதி இல்லாமல் ராமசாமி பள்ளியை விட்டுவிட்டார்...

ஒரு நாள் தன் நண்பனை காண ராமசாமி வீட்டிற்கு சென்றவர் அவரின் ஏழ்மையை கண்டு மனம் வருந்தி தன் தந்தையிடம் சொல்லி ராமசாமி தந்தை விவசாயம் செய்யும் வகையில் ஒரு சென்ட் நிலத்தை வாங்கி கொடுத்தார்..

ராமசாமியும் தன் நண்பனை கட்டி கொண்டு அவருக்கு நன்றி சொன்னவர் தன் தந்தையுடன் இணைந்து விவசாயத்தில் ஈடுபட்டார்..

தேவநாதன் வளர்ந்து ஜமீன் பொறுப்பை ஏற்று கொண்ட பிறகும் தன் பால்ய சிநேகிதனை மறந்துவிடவில்லை.. நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் சென்று ராமசாமியை பார்த்து வருவார்...

இருவரும் வளர்ந்து அவர்களுக்கு என குடும்பம் வந்துவிட்ட போதும் அவர்கள் நட்பு தொடர்ந்தது..

ராமசாமிக்கு ஒரு மகன்..அவனும் தன் தந்தைக்கு உதவ விவசாயத்தை பார்த்து கொண்டு இருக்க, அவனுக்கு தன் தங்கையின் மகளையே மணமுடித்து வைத்தார் ராமசாமி..

அழகான குடும்பம்.. சந்தோஷமான நிறைவான வாழ்க்கை என வண்டி ஓடிகொண்டிருக்க, யார் கண் பட்டதோ அந்த சின்ன குடும்பத்துக்கு வந்து சேர்ந்தது அந்த சோதனை காலம்..

திருமணம் முடித்த அடுத்த வருடமே அவர் மருமகளும் நிலவினியை பெற்றெடுத்தாள்.. ஆனால் பிரசவத்தில் சிக்கலாகி போய்விட தன் மகளை இந்த உலகுக்கு அறிமுகபடுத்திவிட்டு கண்ணை மூடிவிட்டாள் நிலவினியின் அன்னை..

நிலவினியின் தந்தையோ தன் மனைவி மேல் உயிராய் இருந்தவர் தன் மனைவியின் இழப்பை தாங்க முடியாமல் நடைபிணமாகி போனார்.. தான் பெற்ற மகளை கூட தொட்டு தூக்கவில்லை..

ராமசாமிதான் துவண்டு போனார்.. பச்சிளம் குழந்தையை வைத்து கொண்டு ரொம்பவுமே தடுமாறி போனார்.. அவர் மகனும் எதுவும் கண்டு கொள்ளாமல் விட்டேத்தியாய் எப்பொழுதும் விட்டத்தை பார்த்துகொண்டு அமர்ந்து விட, ஒன்டியாய் விவசாயத்தையும் பார்த்து கொண்டு தன் பேத்தியையும் வளர்த்து வந்தார்..

அந்த நிலையிலும் தேவநாதன் அவருக்கு உதவினார்... அடிக்கடி வந்து பார்த்து சென்று ராமசாமி கையில் பணத்தையும் கொடுத்து  சென்றார்.. கூடவே பக்கத்து வீட்டில் இருந்த பெண்மணியிடம் அந்த குழந்தையை அப்பப்ப பார்த்துக்க சொல்லிவிட்டு செல்ல, ஜமீன்தார் ஐயாவே சொல்லி விடவும் அங்கு இருந்தவர்கள் அதன்பிறகு நிலவினியை தங்கள் மகள் போல பார்த்து கொண்டனர்...

நிலவினியின் தந்தையோ அடுத்த ஆறு மாதத்தில் அவள் மனைவியை காண அவர் சென்ற இடத்திற்கே சென்று விட்டார்..

எப்படியோ கஷ்டபடுட்டு தன் பேத்தியை ஆளாக்கி வளர்த்துவிட்டார் ராமசாமி..

இந்த நிலையில் திடீரென்று வயலுக்கு சென்று இருந்தவர் எப்படியோ வரப்பில் வழுக்கி விழுந்துவிட, இடுப்பு ஒடிந்து படுக்கையாகி விட்டார்..

அப்பொழுது தேவநாதனுக்கும் வீட்டில் பல பிரச்சனைகள்.. அவர் பேத்தி அமுதினி திருமணம் நடந்ததில் இருந்து அவர் பேரனும் வீட்டை விட்டு சென்று விட, அவருமே தனி ஆளாக நின்று விவசாயத்தையும் தொழிலையும் பார்த்துக் கொள்ள கடந்த சில வருடங்களாக தன் நண்பனை வந்து சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்காமல் போய்விட்டது..

சமீபத்தில் அவர் பேரன் வேறு ஒரு பட்டணத்துக்காரியை காதலிப்பதாக சொல்லி ஜமீனுக்கு அழைத்து  வந்து ஒரு ஆட்டம் ஆடி விட்டு போயிருந்தான்.. அவன் முன்னால் தன் வருத்தத்தை வெறுப்பை காமிக்காமல் கட்டு படுத்தி  கொண்டவருக்கு அவன் வாழ்க்கையை பற்றிய கவலையே உள்ளுக்குள் சுழன்று கொண்டிருந்தது.

இளங்கன்று பயம் அறியாது என்பது போல தன்னை ஜெயிக்கும் வேகத்தில் அவன் வாழ்க்கையில் தோற்றுவிடக்கூடாது.. தவறான ஒரு துணையை தேர்ந்தெடுத்து தவறான பாதைக்கு சென்று விடக்கூடாது..

ஏனேன்றால் வாழ்வில் ஒரு ஆணின் முதல்பகுதி எப்படி வேணாலும் இருந்திருக்கலாம்.. பின் பகுதியை வாழ ஒரு பெண்ணின் துணை வேண்டும்.. அந்த  துணை நல்லவளாக இருந்தால் மட்டும்தான் வாழ்க்கை பயணம் நன்றாக ஓடும்.. இல்லையென்றால் புதை குழியை தேடி நாமளே விழுந்த மாதிரி ஆகிவிடும்..

தன் பேரனையும் அவன் அழைத்து வந்த மெலுகு சிலையையும் பார்த்த உடனே அவர் மனதில் தோன்றிவிட்டது அவள் அவனுக்கு சரியான இணை இல்லை என்று..

ஆனால் அவர் கண்ணுக்கு அது தெரிந்து என்ன செய்ய? தெரிய வேண்டியவன் கண்ணுக்கு அது தெரியவில்லையே... அவனுக்கு தெரியவிடாமல் அந்த பெண் மயக்கி வைத்திருக்கிறாள் என்பது புரிந்தது அவருக்கு..

அதனால் அதிலிருந்து அவனை எப்படி வெளிக்கொண்டு வருவது என்றுதான் தெரியாமல் தவித்து கொண்டிருந்தார்..

அவர் மனதில் பல குழப்பங்கள் வாட்டி கொண்டிருந்தது..

கிட்டதட்ட மூன்று வருடங்கள் தன் நண்பனை பார்க்க வரவில்லை. இப்பொழுது அவன் படுத்த  படுக்கையாகி விட, அவனை பார்த்துவிட்டு செல்லலாம்.. கொஞ்சம் அவர் மனம் பாரம் தீரும் என்று கிளம்பி    வந்திருந்தார்..

அவர் வீட்டுக்குள்ளே வர, அப்பொழுது ராமசாமியின் வீட்டில் இருந்து ஒரு பெண் சரசரக்கும் காஞ்சி பட்டுபுடவையில் தழைய பின்னலிட்டு அவளின் நீண்ட சடை முழுவதும் மல்லிகை சரத்தால் சுற்றி இருக்க, கலீர் என்று சிரித்த வண்ணம் உள்ளே இருந்து ஒடி வந்தாள்..

வந்த வேகத்தில் உள்ளே வந்து கொண்டிருந்த தேவநாதனை கவனியாமல் அவர் மீது இடித்து கொள்ள, அவரும் சமாளித்து கொண்டு மெல்ல அந்த மெல்லியளை பிடித்து விழுந்து விடாமல் நிறுத்த, அவளோ திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தவள் தேவநாதனை கண்டு கண்கள் விரிய

“ஓ... சாரி தாத்தா... தெரியாமல் இடிச்சுட்டேன்.. நீங்க வந்ததை பார்க்கவில்லை..  எப்படி தாத்தா இருக்கறிங்க? “ என்று கன்னம் குழிய  சிரித்தவள் தேவநாதனை நலம் விசாரித்தாள்..

அவளைக் கண்டு திகைத்து நின்றவர்

"நான் நல்லா இருக்கிறேன் மா நீ யாரு? “   என்று புருவங்கள் முடிச்சிட யோசனையுடன் அவளை ஏற இறங்க பார்த்தார்..  

“என்ன தாத்தா?  என்னை தெரியலையா?  அது சரி வயசாயிடுச்சு இல்ல !  அதுதான் என்னை உங்களுக்கு தெரியலை.. நல்ல ஒரு கண் டாக்டரை போய் பாருங்க.. “ என்று கண் சிமிட்டி குறும்பாக சிரித்தவள்

“நான்தான் நிலா தாத்தா... உங்க ஃப்ரெண்ட்  ராமு பேத்தி... இப்பயாவது என்னை தெரியுதா? “  என்று மீண்டும் கண் சிமிட்டி தலை சரித்து குறும்பாக வினவினாள்..  

அதை கண்டதும் தேவநாதனுக்கு ஆச்சரியமாக இருந்தது.. எப்பொழுதுமே அவரைக் கண்டால் எல்லோரும் மரியாதை நிமிர்த்தமாக கொஞ்சம் பயபக்தியுடன் தான் பழகுவார்கள்..

அவர் வீட்டிலேயே கூட அவர் பேத்திகள், மகன் மற்றும் மருமகள் எப்பொழுதும் கொஞ்சம் பயம் கலந்த மரியாதையுடன் தான் அவரிடம் நெருங்கினார்கள்..  ஆனால் பால் நிலா முகத்தை போல பளிச்சென்று நின்றிருந்தவள் தன்னிடம் ஜோவியலாக பேசி சிரிப்பதை கண்டு ஆச்சர்யமாக பார்த்தார் தேவநாதன்..

அவரை அறியாமல் அவர் மனம் தன் பேரனை அவள் அருகில்  நிறுத்தி பார்த்து பொருத்தம் பார்த்தது..  

தேக்கு போன்ற உறுதியான உடல் வலிமையுடன் அதுவும் விறைத்துக்கொண்டு நிற்பவன் அருகில் வஞ்சிக்கொடி போன்று மெல்லியவளாய் பால் நிலா முகத்துடன் குறும்பு மின்ன சிரித்துக்கொண்டு நிற்பவளின் தோற்றம் உடனே தன் பேரனுக்கு அம்சமாக பொருந்தியது..

உயரத்திலும் நெடு நெடுவென்று அவனுக்கு நிகராக தோள் வரை வளர்ந்திருப்பாள்  என்று தோன்றியது...அவர்கள் ஜோடி பொருத்தத்தை மனக்கண்ணால் கண்டவருக்கு மனம் குளிர்ந்து விட, அடுத்த நொடி அவசரமாக சில  கணக்குகளை போட்டார் தேவநாதன்..  

அவர் வீட்டை விட்டு வரும் பொழுது தன் பேரனை எப்படி திசை மாற்றுவது?  அவனை மாய வலையிலிருந்து எப்படி வெளிக்கொண்டு வருவது?   என்று   குழப்பத்துடன் வந்தவருக்கு அவர் மனைவி மணியம்மை வழி காட்டி   இருப்பதை போல தோன்றியது..

தேவநாதன் நிலவினியை யே இமைக்க மறந்து ரசித்து பார்த்து கொண்டு நிற்க  அவர் முன் கைநீட்டி சொடக்கு போட்டவள்

“என்ன தாத்தா?  பகல்லயே தூங்கறீங்களா? இல்ல பகல் கனவா? “  என்று கிளுக்கி சிரித்தாள்..

தேவநாதன் ஒரு அசட்டு சிரிப்பை   சிரித்தவர் தன்னை சமாளித்து கொண்டு

"அடடே.. நிலா பொண்ணா இது? குட்டி நிலாவா இருந்த ராமு பேத்தி இப்போ பௌர்ணமி நிலாவா வளர்ந்துட்டாளே..!  

எப்படி மா இருக்க? " என்று  அவள் தலையை வாஞ்சையுடன் தடவினார்..  

“நான் நல்லா இருக்கேன் தாத்தா.. நீங்கதான் இவ்வளவு நாளா இந்த பக்கமே வரலை.. அதுதான் நான் பௌர்ணமி நிலவா வளர்ந்தது கூட உங்களுக்கு தெரியலை..     ஏன் தாத்தா இவ்வளவு நாளா உங்க ஃப்ரெண்ட் ஐ பார்க்க வரலை..? “ என்று செல்லமாக சிணுங்கினாள்.. 

அப்பொழுது பக்கத்து வீட்டில் இருந்து

"நிலா.. ரெடியா? போலாமா? " என்ற குரல் வர அங்கு திரும்பி பார்த்தவள்

"சாரி தாத்தா.. நான் எதித்த வீட்டு அக்கா கல்யாணத்துக்கு போய்ட்டு வந்திடறேன்.. தாத்தா உள்ளேதான் இருக்கார்.. நீங்க அவர் கூட பேசி கிட்டு இருங்க.. " என்று சொல்லி அவரை உள்ளே அனுப்பி விட்டு சிட்டாக ஓடினாள் வெளியில்..

அவளின் அந்த துள்ளலான நடையும் கள்ளம் கபடமற்ற சிரிப்பும் தைர்யமாக நிமிர்ந்து நின்று நேர்பார்வை பார்த்து பேசும் கண்களும் அவர் போட்டிருந்த திட்டத்தை செயல் படுத்த உறுதி படுத்தியது...

மெல்ல சிரித்து கொண்டே உள்ளே சென்றவர் தன் நண்பனை பார்த்து நலம் விசாரித்து சிறிது நேரம் பேசி கொண்டிருந்த பிறகு மெல்ல ஆரம்பித்தார்..  

"ராமு... எனக்கு ஒரு உதவி வேண்டும்.... " என்று இழுத்தார் தேவநாதன்...

அதை கண்டு திடுக்கிட்ட ராமு

"என்னது இது தேவா? உதவி அது இதுனு.. என்ன செய்யணும் னு கட்டளை இடு.. உடனே நிறைவேற்றி விடுகிறேன்.. நீ எனக்கும் என் குடும்பத்துக்கும் செய்திருக்கிற,  செய்து கொண்டிருக்கிற உதவிக்கு என்ன கைமாறு செய்வது என்று புரியாமல்  திகைத்து கொண்டிருக்கிறேன்... " என்று தழுதழுத்தார்..

அவரின் கையை மெல்ல அழுத்தி கொடுத்தவர்

“எனக்கு உன்னிடம் இருந்து ஒன்று வேண்டும்.. “  என்றார் பீடிகையுடன்..

“உனக்கு கொடுக்குமாறு என்கிட்ட என்ன தேவா இருக்கு..?  இந்த குடிசை வீடும் நீ கொடுத்த நிலமும்தான் இருக்கிறது...” என்றார் யோசனையுடன்..

“ஹ்ம்ம் இதை விட பெரிய சொத்து ஒன்னு உன்கிட்ட இருக்குடா.. " என்று கண் சிமிட்டி சிரித்தார் தேவநாதன்...

அதை கேட்டு திகைத்த ராமு

“என்னிடம் சொத்தா? அது என்னது? “  என்று மீண்டும் யோசித்தவர்

“அப்படி எதுவுமே இல்லையே...!  இப்ப எனக்கு இருக்கிற ஒரே சொத்து என் பேத்திதான்... " என்று தயக்கத்துடன் இழுக்க

"அதே... அதே... அதேதான்... உன் பேத்திதான் வேணும்.. " என்று சிரித்தார் தேவநாதன்..

அதை கேட்டு திடுக்கிட்டு முழித்த ராமு யோசனையுடன் தேவநாதனை பார்க்க

"டேய்... தப்பா எதுவும் எடுத்துக்காத... உன் பேத்தியை என் ஜமீன் வீட்டு மருமகளாக்கணும்... என் பேரன் ரதனுக்கு உன் பேத்தியை கட்டி கொடுப்பியா? " என்றார் சிரித்தவாறு..

அதை கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்த ராமு

"தே.... தே... தேவா... நீ என்ன சொல்ற? உண்மையாதான் சொல்றியா?  “ என்றார் நம்ப முடியாமல்  நா தழுதழுக்க..

“இதுல போய் யாராவது விளையாடுவார்களா?  உண்மையாகத்தான் கேட்கிறேன்..  குட்டி நிலா வா நான் கையில் தூக்கி வைத்திருந்த உன் பேத்தி நெடுநெடு னு  இவ்வளவு உசரம் வளர்ந்து நிற்கிறது இப்பதான் கண்ணுக்கு தெரியுது..

அவளை பார்த்தவுடனே முடிவு பண்ணிட்டேன்.. அவள்தான் இந்த ஜமீனின் மருமகள் என்று.. உன் சம்மதத்தை சொல்.. மற்றதை நான் பார்த்து கொள்கிறேன்..  என்றார் தன் மீசையை தடவிக்கொண்டே சிரித்தவாறு..

அதைக் கேட்ட ராமு இன்னும் மகிழ்ந்துபோய்

“இதைவிட பாக்கியம் எனக்கு வேற என்ன இருக்க முடியும் தேவா ! நான் இப்படி விழுந்து கிடக்க,  எனக்கு என் பேத்தியை பற்றிய கவலைதான்..  அவளுக்காக தான் என் உசுர கையில் பிடித்துக் கொண்டிருக்கிறேன்.. அவளுக்கு நல்லபடியாக ஒரு வாழ்க்கை அமைந்து விட்டால் நிம்மதியாக கண்ணை மூடி விடுவேன்.. “  என்று மீண்டும் தழுதழுக்க,   தேவநாதன் அவரை  கண்டித்தார்..

“அப்புறம் இன்னொரு விஷயம் ராமு.... “ என்று தயக்கத்துடன் தன் பேரனை பற்றி எடுத்துச் சொன்னவர்

“நீ ஒன்னும் பயந்துக்காத... அவனை திருத்தி விடலாம்...திருத்துவதற்காகத் தான் உன் பேத்தியை கேட்கிறேன்..”  என்றார்..

அதை கேட்டு ராமசாமி அதிர்ந்துபோய் பார்க்க

“அப்படி பார்க்காதே ராமு..! நான் முன்பே சொன்ன மாதிரி உன் பேத்திக்கு எந்த கெடுதலும் நேராது.. அவளுக்கு சந்தோஷமான ஒரு வாழ்க்கையை  அமைத்துக் கொடுப்பது என் கடமை.. என்னை நம்பி உன் பேத்தியை கொடு.. நான் அவளை   பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன்.. “  என்று கெஞ்சுதல் பார்வை வீச  அதைக் கேட்ட ராமு உருகிபோய் உடனே சம்மதம் சொல்லி விட்டார்...

“அப்புறம் ராமு.. இந்த விஷயம் நமக்குள் இருக்கட்டும்.. நிலாவுக்கு இப்பொழுது தெரிய வேண்டாம்.. நான் இன்னும் கொஞ்சம் தயார் செய்ய வேண்டியிருக்கு.. எல்லாம் முடிந்த பிறகு அவளிடம் சொல்லிக் கொள்ளலாம்.. எதுவும் விடை தெரியாமல் சின்ன புள்ள மனதில் ஆசையை வளர்க்கக் கூடாது.. “ என்று சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றார்..

டுத்து ஒரு வாரம் தேவநாதன் தன் பேரனைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார்.. அவனை எப்படி இந்த திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பது?  என்று தான் யோசித்துக் கொண்டிருந்தார்..  

அதேநேரம் அவருக்கு அந்த செய்தி பேரிடியாய் வந்து சேர்ந்தது.. ராமசாமி தன் பேத்தியை தேவநாதன் இடம் ஒப்படைத்து விட்ட சந்தோசத்தில்  அடுத்த ஒரு வாரத்தில் இந்த உலகை விட்டு பிரிந்து சென்றுவிட்டார் என்ற செய்தி வந்தது..

அதைக்கேட்டதும் பதறியடித்து ஓடினார் தேவநாதன்.. அங்கே நிலா அவள்  தாத்தா அருகில் அமர்ந்து அழுது கொண்டிருக்க,  அவளை அனாதையாக பார்க்க தேவநாதன் மனம் பிசைந்தது..

மூன்றாவது நாள் காரியத்துக்காக சென்றிருந்தவர் நிலாவை தனியாக அழைத்து தன் பேரனை மணக்க  சம்மதமா?  என்று கேட்டார்..  

அவளோ தன் தாத்தாவின் மறைவில்  இருந்து இன்னும் வெளிவராத பொழுது தேவநாதன் இப்படி கேட்க குழப்பத்துடன் அவரைப் பார்த்தாள்..

“அம்மணி.. நான் உன் தாத்தனிடம் ஏற்கனவே பேசிய விஷயம்தான்..  இன்னும் கொஞ்ச நாள் போனதும் உங்கள் திருமணத்தை நடத்துவதாக இருந்தது..  அதற்குள்  ராமு அவசரப்பட்டு போய்விட்டான்..

யாரும் இல்லாமல் உன்னை இங்கே அனாதையாக விட்டுச்செல்ல எனக்கு மனம் வரவில்லை.. அதனால்தான் சீக்கிரம் திருமணத்தை முடித்து முறைப்படி எங்கள் வீட்டு மருமகளாக உன்னை அழைத்துச் சென்று விடுகிறேன் தயவுசெய்து எதுவும் யோசிக்காதே.. “  என்று நிறுத்தினார்..

“அப்புறம் இன்னொரு விஷயம் நிலா மா.. இதைக் கேட்டு  அதிர்ந்து விடக் கூடாது.. “ என்று அவளை தயார் படுத்தியவர்  தன் பேரனின்  காதல் வாழ்க்கையை பற்றி சுருக்கமாக எடுத்துச் சொன்னார்..

அதைக்கேட்டு நிலா அதிர்ந்து போனாள்..

“தாத்தா...  இது எப்படி சரியா வரும்?  உங்க பேரன் ஏற்கனவே ஒரு பொண்ணை விரும்புகிறார் இல்லையா.. அப்புறம் எப்படி ? “ என்று தயக்கத்துடன் இழுத்தாள்..

“அதெல்லாம் நான் வேற ஒரு நாள் சொல்கிறேன் அம்மணி.. அவன்  வாழ்க்கையை பற்றி எனக்கு அக்கறை உண்டு.. அதேபோல நீயும் எனக்கு பேத்திதான்.. உன்  வாழ்க்கை நல்லபடியாக அமைத்துக் கொடுக்கிறேன் என்று  உன் தாத்தனிடம் நான் வாக்கு கொடுத்திருக்கேன்.. அந்த வாக்கின் மீது நம்பிக்கை இருந்தால் நான் சொல்லும் திட்டத்துக்கு ஒத்துக்கொள்..

உனக்கு நல்லதுதான் நடக்கும்... மகாராணி போல எங்க ஜமீனில் நீ வாழப்போகிறாய்.. யோசித்து சொல்.. " என்று அவளை சிறிது நேரம் யோசிக்க விட்டார்..

நிலாவுக்கோ குழப்பமாக இருந்தது..

“தாத்தா வேற உதவி என்று கேட்டிருந்தால் உடனே செய்துவிடலாம்.. இது இரு மனங்கள் இணையும் திருமணம் அல்லவா? இதில் அவள் மட்டும் சம்மதம் சொல்லி அவர் பேரனுக்கு பிடிக்காமல் போய்விட்டால்?

போய்விட்டால் என்ன? அதுதான் சொல்லிவிட்டாரே.. அவன் இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள மாட்டான் என்று..அப்படி பிடிக்காத திருமணத்தை அவனுக்கு பண்ணி வைக்கலாமா? இது தப்பில்லையா ? “ என்று யோசிக்க அப்பொழுது அவர் சொன்ன அவன் நண்மைக்காகத்தான் என்பது நினைவு வந்தது..

“இந்த தாத்தா எப்பொழுதும் எல்லாருக்கும் நல்லதுதான் செய்திருக்கிறேன்.. செய்வேன் என்ற நம்பிக்கை இருந்தால் சம்மதம் சொல். என்றாரே..

அவர் பேரனை பற்றி யோசிக்காமலயா இருந்திருப்பார்? அவரே இவ்வளவு தூரம் சொன்ன பிறகு அவர் வார்த்தையை தட்ட முடியாதே..” என்று யோசித்தாள்

கூடவே அவள் தாத்தாவுக்கு கொடுத்த வாக்கும் நினைவு வந்தது..

சாகும் கொஞ்ச நேரத்துக்கு முன் அவளை சைகையால் அழைத்தவர் மெல்ல வாய் திறந்து

“நிலா மா... தேவா எது சொன்னாலும் கேட்டுக்க.. என்ன உதவினாலும் அவனுக்கு செஞ்சு கொடு.. அவன் உன்னை நல்லா பார்த்துக்குவான்..அவன் ஆசையை நிறைவேற்று. இது என் கடைசி ஆசை... அதை நிறைவேத்தி வை மா.. .அவன் என்ன கேட்டாலும் மறுக்காமல் சரி சொல்லிவிடு.. “ என்று அவள் தலையை வாஞ்சையுடன் தழுதழுத்தார்

“சரி தாத்தா.. நான் ஜமீன் தாத்தா சொல்றமாதிரியே  நடந்துக்கறேன். உங்களுக்கு வாக்கு தருகிறேன்.. “ என்று  அவர் கையை பிடித்து வாக்கு கொடுக்க, அடுத்த நொடி நிம்மதியாக கண்ணை மூடி இருந்தார்...

அவருக்கு கொடுத்த வாக்கு நினைவு வர, மறுபேச்சு பேசாமல் தேவநாதனுக்கு சம்மதம் சொல்லி விட்டாள்..

அவரும் மகிழ்ந்து போய் மகிழ்ச்சியுடன் ஜமீனுக்கு திரும்பினார்.. நிலாவை தனியாக விட முடியாது என்பதால் அடுத்த பதினைந்தாவது நாள் அவளுக்கு  திருமணம்  நடத்துவதாக திட்டமிட்டவர் அதையே எல்லாரிடமும் சொல்லி வைத்தார்....

ஆனால் மாப்பிள்ளை மட்டும் யார் என்று யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று நிலாவிடம் சொல்லிவிட்டார்.. அதே போல அவர் திட்டமிட்டிருந்த அவர் திட்டத்தையும் நிலாவிடம் விளக்கினார்..

அதைகேட்டு நிலா அதிர்ந்தாலும் தேவநாதன் அவளை பேசியே சம்மதிக்க வைத்துவிட்டார்... அதன்படி நிலாவுக்கு அவரே முன்னின்று திருமண ஏற்பாடுகளை கவனிித்து கொண்டார்.. ஆனால் மாப்பிள்ளை யார் என்று மட்டும் சொல்லவில்லை..

“வெளி ஊரில் இருக்கிறான்.. தெரிந்த பையன்.. “என்று சொல்லி வைத்தார்..

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!