அழகான ராட்சசியே!!-32

 



அத்தியாயம்-32

ங்க பையனை கட்டிக்க எனக்கு சம்மதமில்லை..   என்று  சந்தியா தன் முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு சொல்ல, அதை கேட்டு திடுக்கிட்டு அதிர்ந்து அனைவரும் முழித்தனர்..

மகிழனோ இன்னுமாய் அதிர்ந்து போய்

“அடிப்பாவி..திடீர்னு இப்படி ப்ளேட் ஐ மாத்திட்டாளே..மறுபடியும் நான் முதல்ல இருந்து ஆரம்பிக்கணுமா?  அப்பா.. முருகா.. என்னால முடியல.. நீயே அவ மண்டைல உரைக்கிற மாதிரி கொஞ்சம் எடுத்து சொல்லேன்.. “  என்று உள்ளுக்குள் புலம்பியவாறு கலவரமானான்..!

உடனே வேல்மணி தன் மகள் அருகில் வந்து

“என்ன பாப்பா சொல்ற?  ஏன் மாப்பிள்ளையை பிடிக்கலைங்கிற ? “   என்றார் அதே கவலையுடன்.. மற்றவர்களும் அதிர்ச்சியுடன் அவளையே பார்த்து கொண்டிருக்க,  

“எனக்கு என் புருஷனத்தான் புடிச்சிருக்கு..இந்த அத்தையோட சின்ன மகனை அல்ல..  என் புருஷன கட்டிக்க எனக்கு சம்மதம்.. “  என்று கண் சிமிட்டி சொல்ல அப்பாடா... என்று எல்லார் முகத்திலும் ஒரு நிம்மதி வந்து பரவியது..

“ஹா ஹா ஹா.. எல்லாரும் ஒரு நிமிஷம் ஷாக் ஆகிட்டிங்க இல்ல.. இத்தனை பேர் சேர்ந்து என்னை எப்படி அழ வச்சீங்க.. அதான் உங்களுக்கு ஒரு ஷாக் கொடுத்தேன்...ஒரு நொடினாலும் சும்மா அதிருது இல்ல..எல்லாரும் ஆடி போய்ட்டீங்க இல்ல... இந்த சந்தியாகிட்டயே வா..!!  “ என்று இல்லாத காலரை தூக்கி விட்டு கொண்டாள் சந்தியா....

“நல்லா ஷாக் கொடுத்த போ டீ.. என் மருமகன் முகத்துல ஈ ஆடல..

மருமகனே !!  இது வெறும் சேம்பிள் தான்..வெறும் ட்ரெய்லர் தான்.. இன்னும் மெயின் பிச்சர் பார்த்தா ஆடிடுவீங்க.. இது மாதிரி சில பல ஷாக் எல்லாம் கொடுப்பா.. எல்லாத்துக்கும் உடம்பையும் மனசையும்  தயாரா வச்சுக்கங்க..” என்று சொல்லி சிரித்தார் ருக்மணி..

அதை கேட்டு மகிழனும் ஒரு அசட்டு சிரிப்பை சிரித்து வைக்க,

“ஹலோ ருக்கு.. இப்பயே ஏன் என் புருஷனை பயமுறுத்தற? “ என்று முறைக்க, அவள் வாய்க்கு வாய் என் புருஷன் என்று சொல்வதில் சந்தேகமான   சிவகாமி திரும்பி மகிழனை பார்த்தவர்

“என்னடா.. சின்னவா.. என் மருமக இப்பயே வாய்க்கு வாய் புருஷன் னு சொல்றா? எனக்கு தெரியாம முன்னாடியே இவளை கல்யாணம் எதுவும் பண்ணிகிட்டியா? “  என்று தலையை சரித்து ஆராய்ச்சியோடு பார்த்தார்..

“ஐயயோ.. அப்படி எல்லாம் இல்ல மா.. நீ வேற இப்படி லுக் விடாத.. அதெல்லாம் உனக்கு தெரியாம நான் போய் கல்யாணம் பண்ணிப்பனா.. அவ சும்மா சொல்லிட்டு இருக்கா..”  என்று தன் அன்னையை  சமாதானப் படுத்தினான் மகிழன்..   

“யோவ்..  நீ தான என்னை பொண்டாட்டி பொண்டாட்டி னு கூப்பிட்ட.. அதுக்குள்ள உன் ஆத்தாவை பார்த்ததும் பேச்ச மாத்தற..என் வாட்ஸ்அப் ல அதற்கான சாட்சி இருக்கு...என்னை ஒன்னும் ஏமாத்த முடியாது..”  என்று சொல்லி மகிழனை பார்த்து முறைத்தாள்..

“ஐயோ!! இந்த கேடி இப்படி எல்லார் முன்னாடியும் மானத்தை வாங்கறாளே.. இதுல யோவ் னு ரொம்ப மரியாதையா வேற கூப்பிடறா.. மகிழா.. உன் மாமியார் சொல்ற மாதிரி நீ சீக்கிரம் எல்லாத்தையும்  தாங்கறதுக்கு தயாராகிடு..

உன்னை அவ ரெஞ்சுக்கு ரொம்ப ஸ்டெடி பண்ணனும் போல.. “ என்று மனஸ் அவனை பார்த்து சிரிக்க, அவனும்  தலையை சொரிந்தவாறு அசட்டு சிரிப்பை சிரித்தான்..அதை கண்ட சிவகாமி

“எப்படியோ.. என் வீடு இனிமேல் கலகலனு இருக்க போகுது.. “ என்று சிரித்து கொண்டே

“நீங்க வாங்க அண்ணி.. நாம அடுத்து ஆக வேண்டியத பார்க்கலாம்.. நல்ல நேரம் வேற போய்கிட்டிருக்கு..” என்று ருக்மணியை அழைத்தார் சிவகாமி..

அதற்கு பிறகு பெரியவர்களும் சிரித்துக் கொண்டே நிச்சயத்திற்கான ஏற்பாட்டை கவனித்தனர்..

சிவகாமி ஒரு தட்டில் மங்கள பொருட்களை எடுத்து வைத்து, நிகிலனயும் மதுவையும்  அழைத்து  தட்டை பொண்ணு வீட்டாரிடம் கொடுக்கச் சொல்ல,  மது மறுத்துவிட்டாள்..

சிவகாமி அமங்கலி என்றுதான் தயங்குகிறார் என புரிந்து கொண்ட மது  

“அத்தை..  அந்த ஃபார்மாலிட்டீஸ் எல்லா இல்ல..  நீங்கதான் பெரியவங்க நீங்கதான் கொடுக்கணும்.. “  என்று சொல்லி விட ஒரு பக்கம் சிவகாமியும் நிகிலனும் நின்றிருக்க, மறுபக்கம் மணிஸ் (வேல்மணி, ருக்மணி )  தம்பதியினர்   நின்று கொண்டு தட்டை மாற்றி கொண்டனர்..

உடனே சிவகாமி தன் கைப்பையை திறந்து  பெரிய மருமகளுக்கு வாங்கி வைத்த மாதிரியே சின்ன மருமகளுக்கும் செய்து வைத்திருந்த அந்த நெக்லஸை  எடுத்து தன் சின்ன மருமகளுக்கு போட்டுவிட்டு  அவள் கன்னம் வருடினார் ஆசையாக...  

பின் இருவரையும் மோதிரம் மாற்றிக் கொள்ளச் சொல்ல, மகிழன் தன் ஒற்றைக் காலை மடக்கி வெளிநாட்டு பாணியில் சந்தியா  முன்னால் அமர்ந்து  அவளுடைய கையை பிடித்து மோதிரத்தை போட்டு “ஐ லவ் யூ பொண்டாட்டி..”  என்று சொல்லி அவள் கையில் முத்தமிட சந்தியாவுக்கு வெட்கமாகி போனது

“ஐயோ.. இவ்வளவு பேர் முன்னாடி மானத்தை வாங்கறானே.. “  என்று  கன்னங்கள் சிவக்க எல்லாரையும் பார்த்து அசட்டு சிரிப்பு சிரித்தாள் சந்தியா..

பின் சந்தியா வின் கையில் ஒரு மோதிரத்தைக் கொடுத்து மகிழனுக்கு போட சொல்ல அவளும் அவன் கையை நீட்ட சொல்ல மகிழன் மறுத்து விட்டான்..  

“அதெல்லாம் இல்ல.. நான் எப்படி போட்டனோ அதே மாதிரியே நீயும் ஐ லவ் யூ சொல்லி போட்டாதான் வாங்கிப்பேன்.. “  என்று தன் கையை பேன்ட் பாக்கெட்டில் விட்டு கொண்டு சந்தியாவிடம் நீட்டாமல்  பிகு பண்ண, சந்தியாவும் வெட்கபட்டு லேசாக சிரித்தாலும் ஓரக்கண்ணால் அவனை பார்த்து முறைத்தாள்..  

மற்றவர்களும் வாய்விட்டு சிரிக்க அருகிலிருந்த அகிலாவும்

“சின்ன அண்ணி.. சும்மா வெட்க படாம போட்டு விடுங்க..பாவம் மகி அண்ணா.. ரொம்ப நேரமா இதற்காக காத்துகிட்டு இருக்கான்.. “  என்று கண் சிமிட்டி  சிரித்தாள்  அகிலா..

உடனே சந்தியாவும் மகிழனை பார்த்து “ஐ லவ் யூ மகிழ்... “ என்று அவன் கண்களை நேராக பார்த்து மையலுடன் நோக்கி அவன் பேன்ட் பாக்கெட்டில் விட்டிருந்த கையைப் பிடித்து முன்னால் இழுத்து அவன் விரல் பிடித்து அந்த மோதிரத்தை அணிவிக்க அவளுடைய அந்த பார்வையில் முழுவதும் தொலைந்து போனான்  மகிழன்..

இருவருமே அந்த நொடியில் ஒருவருக்கொருவர் அவர்களுக்குள் கலந்து கொண்டிருந்தனர்..அந்த காட்சியை அழகாக பதிவு செய்து கொண்டிருந்தாள் மது..  

சிறிது நேரம் பொறுத்துப் பார்த்தவர்கள் இருவரும் இன்னுமே ஒருவரை ஒருவர் ரசித்து பார்த்துக் கொண்டிருக்க

“ம்ம்கூம்.. “  என்று தொண்டையை செருமிய அகிலா

“கட் கட் கட் பப்ளிக் பப்ளிக்.. மீதி ரொமான்ஸ் ஐ  எல்லாம் நீங்க தனியா வச்சுக்கங்க..இங்க நாங்களும் இருக்கோம்..”   என்று கண் சிமிட்டி சிரித்தாள் அகிலா..   

மகிழனும்  வெட்கப் பட்டு தன் தலையை பின்னால் தடவி கொண்டான்..  அதை கண்டு சந்தியாவும் வெட்கப்பட்டு சிரித்தவாறு மகிழனிடம் இருந்து சற்று  நகர்ந்து நின்று கொண்டாள்..

அதன் பிறகு இருக்கையில் அமர்ந்தவர்கள் திருமணத்தை எப்ப வைத்துக் கொள்ளலாம் என்க, மகிழன் பெரியவர்களை பார்த்து

“ஒரு சின்ன ரிக்வெஸ்ட்..  அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை வச்சுக்கலாம்.. “  என்றான் லேசாக வெட்கபட்டு ..

அதைக் கேட்டு திடுக்கிட்டாள் சந்தியா..

“அன்று பேருந்தில் மகிழன் இதைத் தானே சொல்லி சவால் விட்டான்..  ஒரு வேளை அவன்  சவால் விட்டதற்காக இப்படியெல்லாம் நடிக்கிறானோ? “  என்று தோன்ற மகிழனை ஓரக் கண்ணால் பார்த்து ஏதோ ஜாடையில் கேட்டாள்..

அவனோ அவளை கண்டு கொள்ளாமல்  மற்றவர்களை பார்த்துகொண்டு  இருக்க, சண்முகம் 

“என்ன சின்ன மாப்பிள்ளை? அதுக்குள்ள  அவ்வளவு அவசரமா? “  என்று சிரித்தார்.. மற்றவர்களும் இணைந்து சிரித்தனர்..

சந்தியா வும்  பேருக்கு சிரித்து வைக்க பின் அனைவரும் அடுத்த முகூர்த்தத்திலேயே திருமணத்தை நடத்துவதாக முடிவு செய்தனர்

தன் பின் ருக்மணியம் சாரதாவும் அங்கிருந்த இருக்கைகளை ஒரு பக்கமாக நகர்த்தி வைத்து விட்டு சமைத்து வைத்திருந்த பதார்த்தங்களை எல்லாம் கொண்டு வந்து  ஹாலில்  வைத்தனர்.. ஏற்கனவே வாங்கி வைத்திருந்த வாழை இலைகளை எடுத்து வந்தனர்..  

எல்லாரும் சந்தோஷத்தில் சிரித்து கொண்டிருக்க சந்தியாவிற்கு மட்டும் மனதிற்குள் அரித்துக் கொண்டே இருந்தது..  

உடனே ஓரமாக நின்றிருந்த மகிழன் அருகில் சென்றவள்

“கொஞ்சம் உள்ள வாங்க.. “  என்று மகிழன் காதுக்குள் ரகசியமாக  சொல்லி அவனை கைபிடித்து அருகில் இருந்த தன்  அறைக்குள் அழைத்துச் சென்றாள்..  

உள்ளே சென்றவள்  கதவை மூடியதும் மகிழனை நேராக பார்த்து

“மகிழ்.. நீங்க உண்மையாகவே என்னை லவ் பண்றிங்க தான.. ஒரு வேளை நான் ஃபங்சன் அன்று உங்கள் கன்னத்தில் அடித்ததற்காக என்னை பழி வாங்க இது  மாதிரி செய்யலையே.. “  என்றாள் தவிப்புடன்..  

அதைக் கேட்டவன் கண்கள் இடுங்க

“ஏன் அப்படி கேட்கிற தியா? “  என்றான் யோசனையாக..  

“இல்ல...  வந்து... உன்னை விடமாட்டேன் என்னுயிரே என்று ஒரு கதை படித்தேன்.. அதில் ஹீரோயின் ஹீரோ  கன்னத்தில அறைஞ்சிடுவா..அதற்காக ஹீரோ அவளை கல்யாணம் பண்ணி பழிவாங்குவது மாதிரி இருக்கும்..

அது மாதிரி நீங்க எதுவும் என்னை பழி வாங்க இந்த கல்யாணம் பண்ணலையே ?” என்று சந்தேகமாக கேட்டாள்..

அதைக் கேட்டவன் வாய்விட்டு சிரித்தான்..  

“அடிப்பாவி..சினிமா பார்த்துதான்  கெட்டு போவாங்கனு  சொல்லுவாங்க..வர வர இந்த மாதிரி கதைகளை எல்லாம் படிச்சு ரொம்ப கெட்டு போய் இருக்க.. “  என்று சிரித்தான்..

“அதெல்லாம் இல்லடி..  நான் உன்னை சின்சியரா லவ் பண்றேன்..போதுமா ?  “ என்று சிரித்தான்..

“அப்ப ஏன்  அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை வச்சுக்கணும் னு  கண்டிப்பா சொன்னிங்க? அன்னைக்கு பஸ்  ல நீங்க  விட்ட உங்க சவால் ல ஜெயிக்கத்தான? “  என்றாள் இன்னும் தன் சந்தேகம் விலகாமல்..

“அடியே.. என்  லூசு பொண்டாட்டி..அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்த வச்சிக்கலாம் னா,  என்னால உன்னை பிரிஞ்சு இருக்க முடியல னு அர்த்தம்.. அதுவும் இந்த மேக்கப்பில் இந்த கெட்டப்ல  உன்னை பார்த்ததும் என்னால முடியல டீ.. 

அதனால் தான் சீக்கிரம் உன்னை என்னிடம் கொண்டு வர, உன்னை என்னவளாக்கி  கொள்ளத்தான்  அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை வைக்கச் சொன்னேன்.. இப்ப புரிஞ்சுதா? “  

என்று சொல்லியவன் பார்வை,  அவள் புடவை கொஞ்சமாக விலகி இருந்த இடைவெளியில் அவளின் வெண்ணிற  இடையில் பட, அடுத்த நொடி தன் கையை எடுத்து அவளின் அந்த மெல்லிய வெண்ணிற இடையில் வைத்தவன் அவள் இடையோடு சேர்த்து அவளை முன்னே இழுத்து இறுக்கி அணைத்துக் கொண்டான்..

இதை எதிர்பார்க்காத சந்தியா திக்கு முக்காடிப் போனாள்..

அவனுடைய  இறுகிய அணைப்பில் உருகி போனாலும் சிறிது நேரத்தில்  தன்னை சமாளித்து கொண்டவள்

“விடுங்க மகிழ்.. எல்லாரும் வெளியில வெயிட் பண்றாங்க.. இப்படியா பண்ணுவீங்க.. “ என்று சிணுங்கினாள்..

“ஹா ஹா ஹா சும்மா ஓரமா நின்னுகிட்டு இருந்தவனை நீ தான் டி உள்ள கூட்டிட்டு வந்த.. ஏற்கனவே நீ  பார்த்த அந்த பார்வையில் பிளாட் ஆகிட்டேன்..  அப்ப இருந்தே  வெளியில வர தவித்துக் கொண்டிருந்தேன்..  எரியற நெருப்புல நெய்யை ஊத்தின மாதிரி   இப்படி என்னை தனியா தள்ளிகிட்டு வந்திட்ட..

எனக்கு கிடைத்த இந்த பொன்னான சான்ஸை விட முடியுமா..!! “  என்று தாபத்துடன் அவளை மேலும் இறுக்கி அணைக்க, அவளோ கன்னம் சிவக்க, அவனை பார்த்து முறைத்தாள்..

இத்தனை நாட்களாக அவள் முறைக்கும் பொழுது எல்லாம் வளைந்து அவனை இம்சித்து வந்த  அவளின் திரண்ட செவ்விதழை கண்டவன் உடனே குனிந்து அவளின் செவ்விதழை சிறைப் பிடித்தான்..

அதில் இன்பமாய் அதிர்ந்த சந்தியாவின் இமைகள்  படபடக்க ஆரம்பித்தன..  

“ஐயோ !!  தெரியாம வந்து மாட்டிக்கிட்டேனே..”  என்று உள்ளுக்குள் புலம்பினாலும் அவனுடைய அந்த அழுத்தமான முத்தத்தை ரசிக்கவும் செய்தாள்..  

நீண்ட நேரத்திற்கு பிறகு மனமே இல்லாமல் அவளை விட்டவன்

“செம டேஸ்ட் டி இந்த  இதழ் ஹனி.. இனிமேல் காலையில் காஃபிக்கு பதிலாக உன் இதழ் ஹனி தான்.. “ என்று குறும்பாக அவளைப் பார்த்து கண் சிமிட்டி சொல்ல சந்தியாவுக்கு உடலெல்லாம் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது..  

ஏதோ ஒரு புதுவிதமான மாற்றங்கள் உள்ளுக்குள் நிகல, தானாக கன்னங்கள் சிவக்க உடனே

“சீ... போடா மங்கி... “ என்று சிணுங்கியவள் அவனை பிடித்து தள்ளிவிட்டு கதவை திறந்து கொண்டு வெளியே ஓடினாள் சந்தியா..

“ஹே..  போகாதடி.. “  என்று அவள் கையை எட்டிப் பிடிக்க முயல அவளோ   அவன் கைக்கு கிடைக்காமல்  நழுவி அவனுக்கு நாக்கை துருத்தி  பழிப்பு காட்டி விட்டு  வேகமாக ஓடிவிட்டாள்...

மகிழனும் சிரித்துக் கொண்டே தன் தலையை பின்னால் தடவியவாறு ஒரு கையை தன் பேன்ட் பாக்கெட்டில் விட்டுக்கொண்டு அந்த அறையில் இருந்து  வெளியில் வந்தான்..  

அப்போது அங்கு வந்த ருக்மணி அவனைப் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தவாறு சமையலறைக்குள் புகுந்து கொண்டார்.. அதை கண்டவன் திகைத்து   

“என்னாச்சு இந்த அத்தைக்கு? ஏன் ஒரு மாதிரி சிரிச்சிட்டு போறாங்க.. " என்று யோசித்தவாறு வரவேற்பறைக்கு வந்தான்..    

அங்கு எல்லாரும் இலை போட்டு அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க சாரதா மற்றவர்களுக்கு பரிமாறிக் கொண்டிருந்தார்..  

“அடப்பாவிங்களா..  எல்லாம் எங்களை விட்டுட்டு நீங்க மட்டும் தனியா சாப்பிட ஆரம்பிச்சிட்டீங்களா? “  என்று செல்லமாக முறைத்தான்..  உடனே மது தலையை நிமிர்ந்து மகிழனை பார்த்தவள் அவளும் நமட்டு சிரிப்பை சிரித்தவள் 

“என்ன கொழுந்தனாரே..!!  உங்களுக்குத் தான் உங்க பொண்டாட்டி சாப்பிட ஸ்பெஷலா கொடுத்தா போல இருக்கு.. அதுக்குத்தான் உங்களை தனியா தள்ளிகிட்டு போனாளா? நீங்க சாப்பிட்டது இன்னுமே உதட்டில ஒட்டி இருக்கு பாருங்க.. “  என்று கண் சிமிட்டி நமட்டு சிரிப்பு சிரித்தாள்..  

அப்பொழுதுதான் அவன்  சந்தியாவிற்கு முத்தமிட்டது நினைவு வந்தது..  அவசரமாக தன் அலைபேசியை எடுத்து அதில் இருந்த ஃப்ரண்ட் கேமிரா வழியாக அவன் முகத்தை பார்க்க அவன் உதடுகளில்  சந்தியா போட்டு இருந்த லிப்ஸ்டிக் ஒட்டி இருந்தது...

“ஐயோ..  இத வேற லிப்ஸ் ல போட்டு வச்சிருந்தாளாபோச்சு..மானம் போச்சு.. இனிமேல் சில பல டெஸ்ட் பண்ணிதான் கிஸ் பண்ணனும் போல இருக்கு.." என்று அவசரமாக தன் உதட்டை கை குட்டையால்  துடைத்து கொண்டான்..

அதைக் கண்ட அகிலா

“மகி.. அப்படி என்ன சின்ன அண்ணி உனக்கு மட்டும் ஸ்பெஷலா  கொடுத்தாங்க.. உன் லிப்ஸ் எல்லாம் இவ்வளவு கலரா இருக்கே..!!   எனக்கும் கொஞ்சம் கொடேன் " என்று வெகுளியாக கேட்க மகிழனுக்கு புரை ஏறியது..

மதுவை பார்த்து முறைத்தான் மகிழன்.. மதுவோ வாயை பொத்தி கொண்டு குலுங்கி குலுங்கி  சிரித்தாள்.. பெரியவர்களும் தலையை குனிந்தவாறு சிரித்து கொண்டிருந்தனர்..

அப்பொழுது அங்கு வந்த சந்தியா

"என்ன?  எல்லாரும் சிரிச்சுகிட்டே இருக்கீங்க?  எனக்கும் கொஞ்சம் சொன்னா  நானும் சிரிப்பேன் இல்ல.. “ என்றாள்..

உடனே அகிலா

“அண்ணி..  நீங்க ஏதோ அண்ணனுக்கு ஸ்பெஷலா  சாப்பிட கொடுத்தீங்களாம்... அவன் லிப்ஸ் எல்லாம் கலரா இருந்தது.. அதான் எனக்கும் அது வேணும்னு கேட்டா அதுக்கு போய் எல்லாரும் சிரிக்கறாங்க.. “ என்று அகிலா மற்றவர்களை பார்த்து முறைக்க, இங்கு  சந்தியாவோ கன்னம் சிவக்க மகிழனை பார்த்து முறைத்தாள்..  

மகிழனும் வெட்க பட்டு  சிரித்து கொண்டிருந்தவன் முறைக்கும் அவள் இதழ்களை  கண்டதும் மீண்டும் தாபத்துடன் நோக்கி அலுவலகத்தில் செய்வது போல அவளை பார்த்து கண் சிமிட்டி குறும்பாக சிரித்து உதடு குவித்து முத்தமிட, அதை கண்டவள் உள்ளுக்குள் படபடக்க,  அவனை  முறைக்கிறது மறந்து போய் உடனே வெட்கத்துடன் முகத்தை திருப்பிக் கொண்டாள்..

பெரியவர்களும் இவர்களின் விளையாட்டை கண்டும் காணாதது போல தங்களுக்குள் கதை பேசிக் கொண்டே சாப்பிட்டு கொண்டிருந்தனர்..

எல்லாரும் சாப்பிட்டு முடித்து இருக்க மகிழனையும் சந்தியாவையும் அருகே அமர்த்தி அவர்களுக்கு சாப்பாடு போட்டனர்..  

சிவகாமி தன் பேத்திக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டே பெரியவர்கள் கதை அடிக்க செல்ல மது அவர்களை ஓட்டிக் கொண்டே அவர்களுக்கு  பரிமாறி முடித்தாள்

இருவரும் சாப்பிட்டு முடித்ததும் பாத்திரங்களை எல்லாம் சமையலறையில் எடுத்து வைத்து முடிக்க சமையல் அறைக்கு உள்ளே வந்த மதுவை  சந்தியா பிடித்து இழுத்துக் கொண்டு தன் அறைக்கு  சென்றாள்..  

உள்ளே சென்றதும் கதவை தாளிட்டு மதுவின்  கையை விட்டாள்..

“ஹே.. இப்ப எதுக்குடி என்னை இப்படி கைய புடிச்சி இழுத்துட்டு வந்த? “  என்று முறைத்தாள் மது..

“போதும் டீ.. இதுக்கு மேல என்னால தாங்க முடியாது.. ஒழுங்கா சொல்லு.. என்ன  நடந்தது?  எப்படி எல்லாருக்கும் எங்க மேட்டர் தெரிஞ்சது? “ என்று  ஆர்வமாக கேட்டாள் சந்தியா..

“ஹா ஹா ஹா .. ஆசை தோசை அப்பள வடை..  அவ்வளவு சீக்கிரம் சொல்லிடுவேனா?  நீ என்னை திட்டியதுக்கு மன்னிப்பு கேளு..   அதுவும் என் காலை பிடித்து மன்னிப்பு கேள்..  அப்புறம் சொல்றேன்.. “  என்று பிகு பண்ணினாள் மது..

“அட முருகா... இந்த மந்திக்கு வந்த வாழ்வ பார்..  புள்ள பூச்சியாட்டம் நான் சொல்றதுக் கெல்லாம் தலை ஆட்டிகிட்டு இருந்தவ..  இவ  எல்லாம் இந்த ஆட்டம் ஆடறாளே..!!  இவ காலையெல்லாம் புடிக்க வேண்டியிருக்கே..!!  எல்லாம் அந்த மங்கியால.. அவனுக்கு இருக்கு.. “  என்று முனகியவாறு

“சாரி டி..  ஐம் ரியலி சாரி..  இனிமேல் உன்னை திட்ட மாட்டேன்.. என் செல்ல மந்தி இல்ல.. என்ன நடந்ததுனு சொல்லுடா செல்லக்குட்டி... “  என்று மதுவின் கன்னத்தை பிடித்து கிள்ளி அவள் மோவாயை பிடித்து செல்லமாக ஆட்டி அவள்  கன்னத்தில் முத்த மிட்டாள் சந்தியா சிரித்தவாறு..  

உடனே மதுவும் தன் கோபத்தை எல்லாம் மறந்து சந்தியாவின் கை பிடித்து அங்கிருந்த படுக்கையில் அமர வைத்து நேற்றைய கதையை சொல்ல ஆரம்பித்தாள்..... 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!