அழகான ராட்சசியே!!-33
அத்தியாயம்-33
சனிக்கிழமை..
வார
நாட்களில் வேலைக்கு செல்லும் பொழுதெல்லாம் காலை ஒன்பது மணி வரைக்கும் இழுத்துப்
போர்த்தி தூங்குபவள் வார விடுமுறை அதுவும் சனிக்கிழமை என்றால் அதிகாலையிலேயே
எழுந்து விடுவாள் சந்தியா..
அன்றும்
காலையில் சீக்கிரம் எழுந்தவள் தன் காலை ஓட்டத்தை முடித்துக் கொண்டு திரும்பி வந்தவள்
வழக்கம் போல தன் பெற்றோருடன் கொஞ்ச நேரம் வம்பு
இழுத்து விட்டு குளிக்க சென்றாள்..
குளித்து
முடித்ததும் ஒரு சுடிதாரை எடுத்து அணிந்துகொண்டு குட்டையான முடியை தூக்கி போனி
டெய்ல் போட்டுக் கொண்டு லேசான ஒப்பனை செய்தவள் தன் ஸ்கூட்டியின் சாவியை எடுத்து கையில் சுழற்றியபடி வெளியில்
வந்தாள்..
அதற்குள்
ருக்மணி காலை உணவை அவளுக்கு தயாராக எடுத்து வைத்திருக்க அதையும் குறை சொல்லிக் கொண்டே
சாப்பிட்டு முடிந்தவள் அவர் கட்டிக் கொடுத்த
மதிய உணவு டப்பாவை வாங்கி தன் கேன்ட்பாக்கில் வைத்துக் கொண்டு அவர்கள்
இருவருக்கும் கையசைத்து டாட்டா காட்டி விடைபெற்று துள்ளலுடன் தன் ஸ்கூட்டியை நோக்கி நடந்தாள் சந்தியா..
அன்று
ஒரு காது கேளாதவர் பள்ளிக்கு சென்று அங்கிருக்கும் குழந்தைகளுக்கு சிறிது நேரம்
அவர்கள் பாடங்களில் இருக்கும் சந்தேகங்களை விளக்கி பின் ஜாலியாக அரட்டை அடிக்க திட்டமிட்டிருந்தாள்..
இந்த
மாதிரி காது கேளாத குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பதற்காகவே அந்தப் படிப்பையும்
ஆர்வத்துடன் கற்றுக் கொண்டிருந்தாள் சந்தியா.. அவளுக்கு நேரம் கிடைக்கும்
பொழுதெல்லாம் இந்த மாதிரி பள்ளிக்குச் சென்று அவர்களுக்கு ஏதாவது சந்தேகமிருந்தால்
விளக்குவாள்.
இல்லையென்றால்
அவர்களுக்கு புரியும்படி அவர்கள் மொழியில் ஏதாவது கதை பேசி சிரித்து விளையாடி அவர்களை
உற்சாகப் படுத்துவாள்..அதனாலேயே சந்தியா என்றால் எல்லாருக்குமே மிகவும் பிடிக்கும்..
ஓரளவுக்கு எல்லா பள்ளிகளுக்குமே இது மாதிரி நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சென்று
வருவாள்..
காலையில்
நேரத்தை அந்த குழந்தைகளுடன் செலவிடுபவள் மதியம் தன் வளர்ப்பு மகள் செல்வியை
பார்க்க சென்று விடுவாள்.. ருக்மணி இருவருக்குமே சேர்த்து மதிய உணவை தயாரித்து
சந்தியாவிடம் கொடுத்து விடுவார்...
தன்
அன்னை கட்டிக் கொடுக்கும் மதிய உணவை செல்வியுடன் சேர்ந்து சாப்பிடுவாள்.. சிலநேரம்
அவளையும் அழைத்துக் கொண்டு எங்காவது வெளியில் சாப்பிட சென்று விடுவாள்..மாலை வரைக்குமே அவளுடனே செலவிடுவாள்.. வீட்டிற்கு திரும்பி வர மணி
பத்தாகும்..
அவள்
தந்தை வேல்மணி அவள் விருப்பப்படி விட்டு விடுவார்..
ஆனால் ருக்மணி தான் அவளைத் திட்டிக் கொண்டே இருப்பார் இவ்வளவு நேரம் கழித்து வீடு
வருவதற்காக.. ஆனாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஏதாவது தன் அன்னையை வம்பு
இழுத்து பேச்சை மாற்றி விடுவாள் சந்தியா...
இன்று காலையில் கிளம்பி
தன் ஸ்கூட்டியில் அமர்ந்தவள் அதை அந்தப் பள்ளியை நோக்கி ஓட்டிக் கொண்டிருந்தாள்..
பாதி தூரம் சென்றதும் அப்பொழுதுதான் மதுவின் வீட்டை தாண்டி தான் அந்த பள்ளிக்கு
செல்ல வேண்டும் என்று உரைத்தது..
உடனே
அவளுக்கு தன் தோழியையும் அந்த நித்தி குட்டியையும் பார்க்க வேண்டும் போல இருந்தது
“எத்தனை
நாளாச்சு இந்த மந்தியையும் அந்த குட்டியையும் பார்த்து? “ என்று எண்ணி கொண்டவள்
“சரி..
நம்ம மந்தி வீட்டுக்கு ஒரு ரவுண்ட்
அடிச்சுட்டு வரலாம்.. “ என்று தன்
ஸ்கூட்டியை மதுவின் வீட்டை நோக்கி திருப்பினாள் சந்தியா..
வீட்டை
அடைந்ததும் வாசலில் நின்றிருந்த செக்யூரிட்டிக்கு சந்தியாவை தெரியும் என்பதால் அவளைப் பார்த்து
புன்னகைத்து கேட்டைத் திறந்து விட்டார்..சந்தியாவும் அவரிடம் நலம் விசாரிப்பு
சிரித்துவிட்டு வண்டியை உள்ளே ஓட்டினாள்..
பின்
தன் வண்டியை நிறுத்தியவள் சாவியை எடுத்து கையில் சுழற்றிக் கொண்டு துள்ளலுடன்
வீட்டிற்கு உள்ளே சென்றாள்.. அப்பொழுது வரவேற்பறையில் அமர்ந்து கொண்டு சிவகாமி ஏதோ
ஒரு சீரியலை பார்த்துக் கொண்டிருந்தார்..
அவரை
கண்டவள் சிரித்தபடி சத்தமில்லாமல் மெதுவாக பூனை நடை நடந்து அவர் அருகில் சென்றவள் அவர் பின்னாலிருந்து அவர் கண்ணைப்
பொத்திக் கொண்டாள்..
அதில்
திடுக்கிட்ட சிவகாமி பின் சுதாரித்து அவள் கையைப் பிடித்து பார்த்து
“வாடி
என் மருமகளே.. இந்த மாமியார பார்க்க
இப்பதான் உனக்கு நேரம் கிடைத்ததா? “ என்று சிரித்துக் கொண்டே அவள்
கையை பிடித்து முன்னால் இழுத்தார்..
அதைக்
கண்ட சந்தியா அதிசயித்து தன் கையை விலக்கி கொண்டவள்
“எப்படி
மாமியாரே..!! கண்ண திறக்காமலே நான்தான் னு கரெக்ட் ஆ கண்டுபுடிச்சீங்க ? “ என்று சிரித்தவாறு
முன்னால் வந்து அவர் அருகில் சென்று அமர்ந்தவள் உரிமையுடன் சிவகாமியின் கழுத்தில்
கையைப் போட்டுக் கொண்டாள் சந்தியா..
“ஹா
ஹா ஹா நான் போலீஸ்காரன் அம்மாடி.. எனக்கேவா? “ என்று சிரித்தவர்
“என்கிட்ட
இது மாதிரி உரிமையா விளையாடுவதற்கு உன்ன விட்டா வேற யாருக்கு தைரியம் வரும்? அதனால் தான் உடனே கண்டுபுடிச்சிட்டேன்.. எப்பூடி? “ என்று தன்
காலரை தூக்கி விட்டு கொண்டார் சிவகாமி...
“ஹ்ம்ம்ம்
சூப்பர் மாமியாரே.. பின்றீங்க.. அதெல்லாம்
சரி.. அது என்ன காலங் காத்தாலேயே நாட்டாமை
மாதிரி நடுவீட்டில கால் மேல கால் போட்டு உட்கார்ந்துகிட்டு இந்த வீணாப் போன சீரியலை
பாத்துக்கிட்டு இருக்கீங்க.. உங்க மூத்த மருமக
ஒன்னும் சரியில்லை..
உங்களுக்கு
ஓவரா செல்லம் கொடுத்து இப்படி கெடுத்து வச்சிருக்கா...நான்
மட்டும் உங்களுக்கு சின்ன மருமகளா வந்தேன் உங்க கிட்ட வேலை வாங்கி கொண்டே
இருப்பேன்...
ஒரு
நிமிஷம் கூட உட்கார விடமாட்டேன்.. நான் சட்டமா இப்படி உடகார்ந்து கிட்டு உங்களை ஓட
ஓட விரட்டிகிட்டிருப்பேன்.. இந்த மந்திக்கு அறிவே இல்லை.. உங்களை இப்படி விட்டு
வச்சிருக்கா... “ என்று சிரித்தாள்
சந்தியா..
அதைக்
கேட்ட சிவகாமி சிரித்துக் கொண்டே
“நான்
மட்டும் உனக்கு மாமியாரா வந்தேன் இப்படி வாய் அடிக்கிற உன் வாயை அடக்கி
மாமியாருக்கு அடங்கின மருமகளா மாத்திடுவேனாக்கும்.. “ என்று அவள் கன்னத்தை
பிடித்து செல்லமாக கிள்ளினார்..
“ஹா
ஹா ஹா... அதெல்லாம் என்கிட்ட பப்பு வேகாது மாமியாரே.. இதுக்குனே ஓடிப்போன உங்க சின்ன மவன மயக்கி உங்க வீட்டுக்கு
நானே சின்ன மருமகளா வந்து காமிக்கிறேன் பாருங்க..நான் காலடி எடுத்து வைத்த அடுத்த
நாளே உங்களுக்கு இந்த ராஜமாதா சிவகாமி தேவி பதவி போய் அடுப்படி சிவகாமியா மாத்திடுவேனாக்கும்... “ என்று சிரித்தாள் சந்தியா...
“பார்க்கலாம்...
பார்க்கலாம்.. அதையும்தான் பார்க்கலாம்.... நீயே என் சின்ன மருமகளா
வர்ரியானு பார்க்கலாம்... “ என்று பொடி
வைத்து சொல்லி கண் சிமிட்டி சிரித்தார் சிவகாமி..
சந்தியாவின்
குரல் கேட்டு வெளியில் தோட்டத்தில் இருந்து தன் மகளை தூக்கிக் கொண்டு உள்ளே வந்தாள் மது.. கூடவே அகிலா வும் சிரித்த படி உள்ளே
வந்தனர்...சந்தியா அருகில் வந்த மது
“வாடி
சந்தி... என்ன இப்பதான் உனக்கு எங்களை எல்லாம் பார்க்க நேரம் கிடைச்சதாக்கும்..
“ என்று முறைத்தவாறு சந்தியாவின் அருகில் வந்து அவள் கையை கிள்ளினாள் மது..
“ஆமா...உன்ன
மாதிரி காலாகாலத்துல கல்யாணம் ஆகி ஒரு புள்ளையும் பெத்துகிட்டு, அந்த புள்ள பேர சொல்லி வீட்டிலேயே உக்கார்ந்திருந்தேனா
எனக்கும் நேரம் கிடைக்கும்.. ஜாலியா ஊரை சுத்தலாம் தான்...
எங்க? இந்த மணி எனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வைங்க னா கேட்க
மாட்டேங்கிறார்.. “ என்று நீட்டி
முழக்கியவள் மதுவிடம் இருந்த அந்த குட்டியை நோக்கி கையை நீட்ட, அவளும் சிரித்தவாறு சந்தியாவிடம் தாவி வந்தாள்...
“வாடி..
என் குட்டி தங்கம்... உன் அம்மா என்னை கண்டுக்கலைனாலும் நீதான் டீ இந்த சித்தி
மேல பாசமா இருக்க..” என்று சிரித்தவாறு
நித்தி குட்டியை அள்ளி அணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்..
மதுவும்
சிரித்தவாறு சமையலறைக்கு சென்று அவளுக்கு சாப்பிட கொண்டு வந்து கொடுத்தாள்..
அகிலாவும் அவர்களுடன் அமர்ந்து கொண்டு நான்கு பெண்களும் அரட்டை அடித்துக்
கொண்டிருந்தனர்..
பேச்சு
மீண்டும் சந்தியாவின் கல்யாணத்தை பற்றி வந்து நிக்க, திடீரென்று அகிலா சந்தியாவை பார்த்து
“சந்தியா
அக்கா... பேசாமல் நீங்களே எங்க வீட்டுக்கு சின்ன அண்ணியா வந்திடுங்களேன்.. நாம்
தினைக்கும் இந்த மாதிரி உட்கார்ந்து அரட்டை அடிக்கலாம்.. ஜாலியா இருக்கும்... “ என்று
சிரித்தாள்...
அதைக்
கேட்டு மற்றவர்கள் திகைத்தனர்.. உடனே
சந்தியாவும் சமாளித்து கொண்டு
“யாரு? மந்தி கல்யாணத்துல
பாதியில் ஓடிப் போன உன் சின்ன அண்ணனையா? சே.. சே.. அவனெல்லாம்
எனக்கு செட்டாக மாட்டான்.. “ என்று தோளை
குலுக்கினாள் சந்தியா...
அதைக்
கேட்ட சிவகாமி
“ஏன்
டீ... என் பையனுக்கு என்ன குறைச்சல்? என் பையன் ராஜகுமாரனாக்கும்..
எத்தனை பொண்ணுங்க வரிசையில நிக்கிறாளுக
தெரியுமா? நீ அவனை கட்டிக்க கொடுத்து வச்சிருக்கணும்... “ என்று சந்தியாவின் காதைப் பிடித்து திருகினார்
சிவகாமி..
“ஐய..
ரொம்பத்தான்...அப்படி வரிசையில் நிக்கிறவளுகள்ள எதையாவது ஒன்னை புடிச்சு கட்டி வைக்க வேண்டியது தான உங்க அருமை
மகனுக்கு.. அவனுக்கும் இப்ப கழுதை
வயசாயிடுக்குமே.. ஏன் இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்கீங்களாம்.. “ என்று சிரித்தாள் சந்தியா..
“ஹ்ம்ம்ம்
நாங்களும் பொண்ணு பார்த்துகிட்டுதான் இருக்கோம்.. எங்க இந்த பய யாரை சொன்னாலும்
வேண்டாம்னு மறுத்திடறான்..” என்று லேசாக வேதனையுடன் சிரித்தார் சிவகாமி..
இன்னும்
தன் சின்ன மகன் திருமணத்துக்கு ஒத்துக்க மாட்டேங்கிறானே என்று வருத்தமாக இருந்தது
சிவகாமிக்கு... அவரும் நிறைய பொண்ணுங்க போட்டோவையும் காட்டி பார்த்திட்டார்...
முன்பாவது ஏதாவது சொல்லி வந்தவன் இப்ப இந்த பேச்சை எடுத்தாலே நழுவறானே என்று
யோசனையாக இருந்தது... அந்த வருத்தம்தான் அவர் பேச்சில் வந்திருந்தது...
அவர்களுடன்
அமர்ந்து அரட்டை அடித்து கொண்டிருந்த அகிலா எதேச்சையாக மேலே நிமிர்ந்து பார்த்தவள்
திடுக்கிட்டாள்...
அங்கு
மாடியில் நின்று கொண்டு சற்று முன்னே குனிந்து கைப்பிடிச் சுவரை இரு கையிலும் பிடித்துக்
கொண்டு வரவேற்பறையில் அமர்ந்து அரட்டை அடித்து கொண்டிருந்த சந்தியாவையே இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்
மகிழன்..
சந்தியாவும்
சிவகாமியும் அவனுக்கு முதுகு காட்டி அமர்ந்திருக்க, அவர்களுக்கு எதிர்ப்புறம் மதுவும்
அகிலாவும் அமர்ந்திருந்தனர்.. அதனால் அகிலா தன் பார்வையை மேலே நிமிர்ந்து பார்க்க
அங்கு மகிழன் மாடியில் நின்று கொண்டு
சந்தியாவை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்தது...
உடனே
அகிலா அவசரமாக ஏதோ யோசித்தாள்..
மீண்டும்
ஓரக் கண்ணால் தன் அண்ணனை பார்க்க அவனோ நின்ற இடத்திலிருந்து அசையாமல் சந்தியாவை
வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்..
இதுவரை
அவன் இந்த மாதிரி எந்த பெண்ணையும் ரசித்து
பார்த்ததில்லை.. அகிலா அவனுடன் வெளியில் செல்லும் நேரங்களில் ஏதாவது அழகான பெண்ணை காட்டி
அவனைப் பார்க்கச் சொல்லி வம்பு இழுப்பாள் ..
அவனும்
அகிலாவை முறைத்து விட்டு யாரையும் ரசித்து பார்த்தது இல்லை.. அப்படியிருக்க தன் சின்ன அண்ணன் இன்று சந்தியாவை
மட்டும் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருப்பதை கண்ட அகிலாவுக்கு ஏதோ புரிவது போல இருந்தது..
தனக்கு
பின்னால் நின்று கொண்டிருப்பவனை கவனிக்காமல் சந்தியாவும் சிவகாமியின் கழுத்தில்
கையை போட்டுக் கொண்டு உரிமையாக கதை அடித்துக் கொண்டிருந்தாள்..
திடீரென்று
சந்தியாவை பார்த்த அகிலா
“அப்புறம்
சின்ன அண்ணி... நீங்க எந்த ஆபீஸ்ல வேலை
செய்றீங்க? “ என்று அப்போதைய பேச்சுக்கு சம்பந்தமே இல்லாமல் கேட்டாள்..
இதுவரை
சந்தியாவை அக்கா என்று தான் அழைத்து வந்தாள் அகிலா.. திடீரென்று அவளை சின்ன அண்ணி
என்று அழைக்கவும் மது யோசனையாக அகிலாவை பார்த்தவள்
“என்ன
அகி... திடீர்னு சந்தியாவை சின்ன அண்ணிங்கிற? “ என்று ரகசியமாக கேட்டாள் மது....
“ஆமா
மது அண்ணி... எனக்கு என்னவோ அம்மா கூட இப்படி ஒட்டிகிட்டு அரட்டை அடிக்கிற இவங்கதான் சின்ன அண்ணியா வருவாங்கனு தோணுது..
அதான் இப்பயே சின்ன அண்ணினு மரியாதையா
கூப்பிட்டு ஐஸ் வச்சுக்கறேன்.. பின்னாடி என்னைய வந்து நாத்தனார் கொடுமை பண்ணிடக் கூடாது
இல்ல.. அதுக்குத் தான்.. “ என்று கண் சிமிட்டி சிரித்தாள் அகிலா.
திடீரென்று
அகிலா சம்பந்தமே இல்லாமல் பேசுவதை கண்ட மற்றவர்கள் குழப்பமாகி அவளை பார்த்தனர்..
“அது
எப்படி சொல்ற அகி? “ என்று மது விடாமல் நோண்டினாள்..
சிவகாமியும்
சந்தியாவும் அகிலா பேசுவதை மேலோட்டமாக கேட்டாலும் அவர்கள் வேற ஏதோ கதை பேசிக்
கொண்டிருந்தனர்.. அதனால் அகிலா மதுவிடம் ரகசியமாக பேசுவதை கண்டு கொள்ளவில்லை...
மதுவின்
அருகில் நெருங்கி அமர்ந்த அகிலா
“அண்ணி...
கண்டிப்பா பாருங்க.. இவங்க தான் எனக்கு சின்ன அண்ணியா வரப்போறாங்க..அப்படினு மேல இருக்கறவன்
சொல்றான்..” என்று பூடகமாக சொல்லி அவள் பார்வையை உயர்த்தி மேல ஜாடை காட்டினாள்
அகிலா..
அதைக்
கண்ட மது
“என்ன
இந்த லூசு.. இதுவரைக்கும் நல்லாதானே இருந்தா.. திடீர்னு இப்படி பேசறாளே..
பத்தாததுக்கு மேல இருக்கிறவன் சொல்றான் னு மேல ஜாடை காட்டறா?
“ என்று உள்ளுக்குள் யோசித்தவாறு சந்தேகமாக அகிலாவை பார்க்க, அவளோ மீண்டும் கண் சிமிட்டி மேல பார்க்க சொல்லி ஜாடை காட்டினாள்...
மதுவும்
ஓரக் கண்ணால் மேல பார்க்க, ஓரே ஆச்சரியம் அவளுக்கு...இன்னும்
மகிழன் அங்கேயே நின்றுகொண்டு சந்தியாவையே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தான்..அவன்
கண்களிலும் முகத்திலும் பெரிய வித்தியாசம்..
முகம்
எல்லாம் பூரித்திருக்க, கண்களில் காதல் மின்ன சந்தியாவையே ஒரு மாதிரி கிறக்கத்துடன் பார்த்து
கொண்டிருந்தான் மகிழன்..
அதை
கண்ட மது உடனே ஆச்சர்யமாகி அவளுடைய குட்டி மூளையை கசக்கி பிழிந்து அதுவரை சந்தியா
தன்னிடம் அவள் அலுவலகத்தில் வேலை
செய்தவர்கள் பற்றி அடித்த கதைகளை எல்லாம் ரிவைன்ட் பண்ணி பார்த்தாள்..
ஒருத்தனை
மட்டும் பிடிக்காது என்று அடிக்கடி அவளிடம் புலம்பி இருக்கிறாள்..
அதே
போல மகிழன் அடிக்கடி வீட்டில் வந்து புலம்பிய அந்த ராட்சசி பற்றிய
நிகழ்ச்சிகளையும் ஒன்றாக சேர்ந்து பார்க்க இருவரும் கிட்டத்தட்ட ஒரே நாளில்
அவளிடம் புலம்பியது புரிந்தது...
“அப்படி
என்றால்??? 1+1=2 “ என்று ஏதோ அவசரமாக கணக்கிட்டு யோசித்தவளுக்கு
ஓரளவுக்கு எல்லாம் விளங்கியது... ஆனாலும் தன் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள சந்தியாவை
பார்த்தவள்
“ஹே
சந்தி... அகிலா கேட்டா இல்ல.. நீ எந்த
ஆபீஸ்ல வேலை செய்யற? “ என்றாள் ஆர்வமாக....
“என்னங்கடி
ஆச்சு உங்க ரெண்டு பேருக்கும் ? நான் எந்த ஆபீஸ்ல வேலை செஞ்சா
உங்களுக்கு என்ன ? ஏன் அதையே நோண்டி நோண்டி கேட்கறீங்க..” என்று
முறைத்தவள் அவள் வேலை செய்யும் அலுவலகத்தின்
பெயரை சொல்ல அது மகிழன் வேலை செய்யும் அதே
அலுவலகம் என்று புரிந்தது..
உடனே
அகிலாவும் மதுவும் கண்ணால் ஜாடை சொல்லி சிரித்துக் கொண்டனர்.. அதை கண்டு கொண்ட சந்தியா
“இப்ப
எதுக்கு டீ ரெண்டு பேரும் இப்படி சிரிக்கிறீங்க? “ என்றாள் அவர்களை முறைத்தவாறு..
உடனே
அகிலா வாயில் கையை வைத்து வாயை மூடிக் கொண்டு குலுங்கி குலுங்கி சிரிக்க, சந்தியா
“சரியான
லூசுங்க ரெண்டு பேரும்.. “ என்று பழிப்பு
காட்டியவள் தன் மீதி கதையை சிவகாமியுடன்
தொடர்ந்தாள்..
சிறிது
நேரம் ஓரக் கண்ணால் மகிழனை கவனித்து வந்த மது அவன் இன்னும் அங்கயே நின்று கொண்டு
சந்தியாவை சைட் அடித்து கொண்டிருக்க, அவனுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக
திடீரென்று மேலே நிமிர்ந்து பார்த்தாள் மது..
அவளை
கண்டு கொண்ட மகிழன் உடனே கைப்பிடியில் இருந்த தன் கையை எடுத்து கொண்டு பின்னால்
நகர்ந்து நின்று தன் தலையை பின்னால்
தடவியவாறு வெட்கப் பட்டு சிரித்தான்..
உடனே
மதுவும் கண் சிமிட்டி சிரித்தவள் தன் ஆட்காட்டி விரலை நீட்டி கொன்னுடுவேன் உள்ள
போ.. என்று சைகை செய்ய அவனோ மீண்டும் வெட்கப் பட்டு சிரித்தவாறு தன் அறைக்குள் சென்று விட்டான்..
அப்பொழுது
தன் கதையை எல்லாம் பேசி முடித்தவள்
“ஓகே
மாமியாரே... உங்க கூட பேசிக்கிட்டே இருந்தா நேரம் போறதே தெரியாது.. எனக்கு இன்னும் வேற வேல நிறைய இருக்கு.. இந்த
குட்டியை பார்க்கத்தான் ஓடோடி வந்தேன்.. என் பட்டு குட்டி.. சமத்தா இருக்கடி.. “ என்றவள் தன் மடியில் அமர்த்தி வைத்திருந்த அந்த
குட்டியை தூக்கி அவளின் கன்னத்தில்
முத்தமிட்டு மதுவிடம் கொடுத்தவள் எழுந்து கிளம்ப தயாரானாள்..
சிவகாமி
மதியம் சாப்பிட்டுட்டு போகலாம் என்று அவளை தடுத்தார்..
“இல்ல
அத்த..ருக்கு மத்தியான சாப்பாட்டையும் கட்டி கையில கொடுத்துட்டாங்க.. நான் போய்
என் பொண்ணு கூட சேர்ந்து சாப்பிட்டுக்கறேன்.. வரட்டுமா.. “ என்று சொல்லி கிளம்பி சென்றாள்..
சந்தியா
பொண்ணு என்கவும் சந்தேகமாக மதுவை பார்க்க அதை புரிந்து கொண்ட மது
“அத்தை..
அது.. அவ ஒரு பொண்ணை எடுத்து வளர்க்கிறா.. ஆசிரமத்தில்
இருக்கா.. “ என்று சந்தியாவையும் செல்வியையும்
பற்றி சுருக்கமாக எடுத்துக் கூறினாள்
மது..
அதைக்
கேட்டதும் சிவகாமிக்கு ஆச்சர்யமாகவும் பெருமையாக இருந்தது.. வாய் அடிச்சாலும் எவ்வளவு
பொறுப்பானவளா இருக்கா.. என்று உள்ளுக்குள் மெச்சி கொண்டார்..
சந்தியா
கிளம்பி சென்றதும் சிவகாமியின் அருகில் வந்த மது
“அத்தை...
உங்க கூட கொஞ்சம் பேசணும்.. “ என்றவள் அருகில் இருந்த அகிலாவை பார்த்தாள்..
அகிலாவும்
ஆர்வமாக அவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டிருக்க மது அவளை பார்த்தவள்
“அகி..இதுவரைக்கும்
எங்க வாய பார்த்தது போதும்..நீ போய் எக்ஸாமுக்கு படி..
“ என்று அவளை விரட்டினாள்...
“அண்ணி...
நீங்க ரொம்ப மோசம்.. என்கிட்ட இருந்து மேட்டர வாங்கிட்டு இப்ப என்னையவே
கழட்டி விடறீங்களே.. “ என்று செல்லமாக முறைத்தாள்...
“ஹீ
ஹீ ஹீ.. நான் உனக்கு அப்புறமா எல்லாம் சொல்றேன் அகி குட்டி.. நீ போய் இப்ப சமத்தா படிப்பியாம்.. “ என்று சொல்லி சிரித்து அகிலாவை அவள் அறைக்கு
அனுப்பி வைத்தாள்..
பின்
சிவகாமியின் அருகில் வந்து அமர்ந்து
அவருடைய கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டு
“உங்ககிட்ட
ஒரு விஷயம் கேக்கணும் அத்தை... “ என்று இழுத்தாள் தயக்கத்துடன்...
“சொல்லுடா
மது.. என்ன கேட்கணும்? இது என்ன புதுசா
இப்படி தயங்கற? தயங்காமல் கேள்.. “ என்றார் சிரித்தவாறு...மதுவும் சிறிது தயங்கி
விட்டு
“இல்ல..
சந்தியாவை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? “ என்று அவரின் கருத்தை அறிந்து கொள்ள கேட்டாள்..
“ஹ்ம்ம்
நல்ல பொண்ணுதான்.. டபடப னு வாய்
அடிச்சாலும் இவ்வளவு பொறுப்பா இருக்காளே.. இந்த வயசுலயே தைரியமா ஒரு பொண்ணை தத்து எடுத்து வளர்க்கிறானா
எவ்வளவு பெரிய காரியம்..அதையெல்லாம் அசால்ட்டா செய்யறாளே.. எனக்கு அப்படியே சின்ன
வயசுல என்னை பார்க்கிற மாதிரி இருக்கு.. “ என்றார் பெருமையாக
“அப்படி
னா சந்தியாவை நம்ம மகி க்கு பார்க்கலாமா? “ என்றாள் லேசாக தயங்கியவாறு... அதை கேட்டு முகம்
மலர்ந்த சிவகாமி
“அடடா..
நானும் அதையேதான் ரொம்ப நாளா மனசுல நினைச்சுட்டு இருக்கேன் மது.. இந்த பய தான் புடி
கொடுக்க மாட்டேங்கறானே..அதனால்தான் இந்த பேச்சை எடுக்கல..
ஒரு
தடவை சந்தியா பத்தி சொல்றதுக்கு வந்தா உடனே என் வாயை அடைத்து விட்டான்.. அதுக்கப்புறம்
அவன் இஷ்டத்துக்கு விட்டுட்டேன்.. “ என்றார் சிறு வருத்தம் இழையோட..
“இல்ல
அத்த.. இப்ப கண்டிப்பா சந்தியாவை கட்டிக்க மகி ஒத்துக்குவார்.. நான் அவர் கிட்ட பேசறேன்..நீங்க உங்க சம்மதத்தை சொல்லுங்க..
“ என்றாள் ஆர்வமாக.. அவரும் உடனே யோசிக்காமல்
“சந்தியா
மாதிரி ஒரு மருமக வந்தா நல்லா தான் இருக்கும்..உனக்கும் உன்னுடைய நெருங்கிய
சிநேகிதியே கூட இருக்கற மாதிரி இருக்கும்..அப்புறம் இந்த சின்னவன் சொல்ற கன்டிஷனும்
ஒத்து போயிடும்.. எனக்கு சம்மதம் தான்..” என்றார் சிரித்தவாறு...
அதை
கேட்டு மதுவும் மகிழ்ந்து போனாலும் மதுவுக்கு தயக்கமாக இருக்க
“அத்த..சந்தியாவை
பற்றி தெரியும் இல்ல..கொஞ்சம் வாய் ஜாஸ்தியா பேசுவா.. மத்தபடி மனசுல ரொம்ப நல்லவ.. அவ அப்படி வாய் அடிக்கிறதால உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே.. “ என்று இழுத்தாள்..
நாளைக்கு
சந்தியாவின் வால் தனத்தை கண்டு சிவகாமி முகம் சுளித்து விட கூடாது என்று முன்னரே
அவளை பற்றி விளக்கி சொன்னாள் மது..
அதை
கேட்டு சிரித்தவர்
“அப்படியாவது
என் சின்ன மருமக வாயடிக்கறவளா வந்தால் எனக்கு
டபுல் சந்தோஷம்... வாய் பேசாத உன்னை வச்சு என்னால காலத்தை ஓட்ட முடியல.. இப்பயே
வாழ்க்கை ரொம்ப போரடிக்குது எனக்கு... அதனால்தான் காலையிலேயே டிவியை போட்டுகிட்டு
உட்காந்துக்கறேன்.. “
என்று
கண் சிமிட்டி சிரிக்க, அவரை முறைத்தவள்
“அந்த
சந்தி சொல்றது கரெக்ட் தான் அத்தை... உங்களுக்கு ரொம்ப செல்லம் கொடுத்து வச்சிருக்கேன்.. மத்த மருமக மாதிரி
உங்க கூட தினைக்கும் குடுமி பிடி சண்டை போட்டிருந்தா வாழ்க்கை போரடிக்காம இன்னும்
சூப்பராதான் இருந்திருக்கும்.. “ என்று
செல்லமாக முறைத்தாள் மது..
சிவகாமியும்
சிரித்துக் கொண்டே
“சும்மா
விளையாட்டுக்கு சொன்னேன் டா மது குட்டி...நீ இந்த வீட்டுக்கு வந்ததுக்கு பிறகுதான்
வீடு வீடா இருக்கு.. இப்பதான் நிம்மதியா சந்தோஷமா இப்படி உட்கார்ந்துகிட்டு
இருக்கேன்..எல்லாம் உன்னாலதான் மது குட்டி.. ” என்று அவளின் கன்னம் வருடி
தழுதழுத்தார்...
“ஹ்ம்ம்ம்
போதும் போதும்...ரொம்ப ஐஸ் வைக்காதிங்க.. அப்படியே கரஞ்சு போய்ட போறேன்.. “ என்று
சிரித்தவள்
“சரி..
இப்ப சந்தியா மேட்டர்க்கு வாங்க.. உங்களுக்கு ஓகே தான..? “ என்றாள்..
“நீதான்
இப்ப எல்லாத்தையும் பொறுப்பா பார்த்துகறயே மது கண்ணா... உனக்கு எப்படி தோணுதோ
அப்படி செய்.. எனக்கு இதுல
சம்மதம்தான்..சின்னவன் கிட்டயும்
கேட்டுக்க.. “ என்று முழு
அதிகாரத்தையும் தன் மூத்த மருமகளிடம் கொடுத்தார் சிவகாமி..
“ஹ்ம்ம் சரிங்க அத்த.. அப்ப நானும் மகி கிட்ட பேசறேன்.. அவர் ஓகே னா உங்களுக்கு இதுல சம்மதம் தானே.. “ என்று மீண்டும் ஒருமுறை கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டாள் மது..
Comments
Post a Comment