அழகான ராட்சசியே!!-36

 


அத்தியாயம்-36

ந்தி சாயும் பொன் மாலை நேரம்..!

ஆதவனின் பொன்னிற கதிர்கள் பூமி மகளை சீண்டி கொண்டிருக்க, அதில் நாணி முகம் சிவந்து கொண்டிருந்தாலும் அந்த ஆதவன் தன்னை விட்டு நீங்குவதையே ஏக்கத்துடன் பார்த்து கொண்டிருந்தாள்..

அந்த பொன் மாலை பொழுது முடியும் நேரத்தில் சென்னையின் பிரபலமான VIP க்களுக்கான அந்த திருமண மண்டபம் வண்ண விளக்குகளாலும், அலங்கார தோரணங்களாலும் ஜொலித்து கொண்டிருந்தது...

சந்தியா வெட்ஸ் மகிழன் என்று மலர்களால் அலங்கரிக்கபட்டிருந்த அந்த திருமண விழா வரவேற்பு பதாகை கூட அன்றைய விழாவின் நாயகன் நாயகியை போலவே சந்தோஷத்தில் சிரித்து கொண்டிருந்தது.. 

மண்டபத்தின் உள்ளே எங்கு திரும்பினாலும் அழகழகான பெண்கள் வண்ண வண்ண பட்டுபுடவையும் அதற்கு பொருத்தமாக தங்க வைர  நகைகளும் அணிந்து ஜொலித்தனர். எல்லார் முகத்திலும் திருமணத்திற்கே உரித்தான  மகிழ்ச்சி நிறைந்து இருந்தது..

திருமண வரவேற்பு விழாவை முதல் நாள் இரவும் மறுநாள் திருமணத்தையும் வைத்துக் கொள்ள  ஏற்பாடு செய்திருந்தனர் இரு வீட்டு பெரியவர்களும்..  அதன்படி இன்று சந்தியா மற்றும் மகிழனின்  வரவேற்பு விழா..

வழக்கமாக,  வரவேற்பு விழாவிற்கு  வந்திருக்கும் உறவினர்களையும் நண்பர்களையும் காக்க வைத்து தங்கள் அலங்காரத்தை ஆற அமர முடித்து தாமதமாக வந்து சேரும் மணமக்களை போல் அல்லாமல் முன்னதாகவே தயாராகி மணமக்கள் இருவரும் மண்டபத்திற்கு வந்திருந்தனர்...

மாலை  ரிசப்ஷனுக்கு மதியம் மூன்று மணியில் இருந்தே தன் மகளை தயார் படுத்த ஆரம்பித்து விட்டார் ருக்மணி..

இல்லையென்றால் தாமதமாக மேக்கப்  போட ஆரம்பித்து அப்புறம் இவள் அதில் குறை இதில் குறை என்று நீட்டி முழக்க ஆரம்பித்தால் அவர் பாடு திண்டாட்டம் ஆகி விடும் என்பதால் முன்னதாகவே அழகு நிலைய பெண்களை வரவழைத்து அவளுக்கு மேக்கப் போட ஆரம்பிக்க சொல்லிவிட்டார் ருக்மணி...

அன்பழகி காலையிலயே வந்து விட, வந்தவள் சந்தியாவை ஓட்டி ஒரு வழி பண்ணி விட்டாள். அதன் பிறகு தோழியர் இருவரும் கதை அடித்து கொண்டே நேரம் ஓடிப்போனது...

மது மூத்த மருமகளாக தன் வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினர்களை கவனிக்க வேண்டி இருந்ததால் சந்தியாவிற்கு உதவ வர முடியாது என்று சொல்லி அன்பழகியை வந்து சந்தியாவுடன் இருக்க சொல்லி இருந்தாள்..

சந்தியாவும் மதுவை திட்டி கொண்டே அன்புவிடம் வம்பு பேசி கொண்டிருந்தாள்.. மதியம் மூன்று மணிக்கு ஆரம்பித்த மேக்கப் கிட்டதட்ட 6 மணிக்கு முடிய, அனைவரும் கிளம்பி மண்டபத்திற்கு சென்றனர்..

அங்கு மகிழன் குடும்பத்தார் ஏற்கனவே வந்து காத்திருப்பதாக போன் வர, ருக்மணி தன் மகளை முறைத்து கொண்டே வந்தார் அவளால் தான் தாமதமாகி விட்டது என்று..

சந்தியாவோ அதை கண்டு கொள்ளாமல் தன் தோழியிடம் கதை அடித்து கொண்டு வந்தாள்...

பொதுவாக திருமணம் என்றால் எந்த ஒரு பெண்ணுக்கும் உள்ளுக்குள் படபடப்பாக இருக்கும்..அவளை அறியாமலயே வெட்கம் வந்து குடி கொள்ளும்.. மற்றவர்களை பார்த்து பேச தயங்குவர்..

ஆனால் சந்தியாவோ கொஞ்சம் கூட அலட்டி கொள்ளாமல் அவள் ஊரிலிருந்து வந்திருந்த சொந்தக்காரர்கள், மற்றும் அவள் மாமன் பொண்ணு தேன் மொழியிடம் அரட்டை அடித்தபடி யாருக்கோ திருமணம் என்ற மாதிரி   படு கேசுவலாக இருந்தாள்..

அவளுக்கு தோழியாக மணமேடையில் நிற்க வேண்டும் என்று சந்தியா சொல்லி இருந்ததால் அதை நினைத்து அன்புக்குத்தான் படபடப்பாக இருந்தது..அவள் டென்ஷனாக இருப்பதை கண்டு கொண்ட சந்தியா

“ஹே வம்பு... உனக்கு எதுக்குடி இப்படி வேர்த்து கொட்டுது? என்னமோ உனக்கு கல்யாணம் மாதிரி இவ்வளவு டென்ஷனா இருக்க.. சில் டீ... “ என்று சிரித்தாள்..

அதை கண்ட அன்பு அவளை முறைத்த படி

“ஹே.. சந்தி.. நிஜமாகவே உனக்கு ஒரு மாதிரி பயமா இல்லையா? எப்படி  டீ இவ்வளவு கேசுவலா இருக்க? “ என்றாள் வியந்தவாறு..

“ஹா ஹா ஹா பயமா? எனக்கா? எதுக்கு பயந்துக்கணும்? ஏன் பயந்துக்கணும்? நான் என்ன அந்த மங்கியை முதல் முறையாவா பார்க்க போறேன்?  பார்த்து நடுங்க.. அப்படியே முதல் தரம் பார்த்தால் கூட அவன்தான் என்னை பார்த்து நடுங்கணும்.. “ என்று சிரித்து கொண்டாள்..

“ஹ்ம்ம் பாவம் டீ நம்ம தல.. இப்படி ஒருத்தி கிட்ட வந்து மாட்டிகிட்டாரே... இதுக்குத்த்தான் காதலுக்கு கண் இல்லைனு சொல்வாங்க போல.. கண்ணை திறந்து வச்சுகிட்டே பாழும் கிணத்துல குதிச்சிட்டாரே.. என்னத்த சொல்ல ? “ என்று அன்பு வருத்தப்பட

“ஹோய்... ரொம்பதான் உனக்கு கொழுப்பு டீ.. “ என்று கையை மடக்கி அவளை அடிக்கும் ஆக்சனில் வர, அன்பு பயந்தவளை போல நடுங்க தேன்மொழி அவர்களை பார்த்து சிரித்து கொண்டிருந்தாள்...

அவர்கள் சென்ற கார் மண்டபத்தை அடைய,  அங்கு ஏற்கனவே மகிழன் குடும்பத்தார் வந்து காத்திருந்தனர்..இவர்கள் கார் வந்து நின்றதை  கண்டதும் மது கார் அருகில் ஓடி வந்து

“ஏன்டி சந்தி... இந்த கவுனை மாட்டி இந்த குட்டியூண்டு முடியை அள்ளி முடிய இவ்வளவு நேரமா? எவ்வளவு நேரம் நாங்க வந்து காத்திருக்கிறது? கொஞ்சம் கூட மாப்பிள்ளை வீட்ட பார்த்து பயமே இல்லை உனக்கு.. “ என்று முறைத்தாள் சிரித்து கொண்டே..

“அடிங்க...இதுதான் கலிகாலம் ங்கிறது... விரல் சூப்பிகிட்டிருந்த  நண்டு சிண்டெல்லாம் மூத்த மருமகனு தலைய தூக்கிட்டு அதிகாரம் பண்ண வந்துடுச்சுப்பா..

ஹோய் மந்தி.. நீ எல்லாம் மூத்த மருமக கெட்டப் க்கு செட் ஆக மாட்டா.. ஒழுங்கா என் ப்ரண்ட் மந்தியா இரு.. இல்லைனா நான் என்ன பண்ணுவேன் னு உனக்கே தெரியும்.. “ என்று விரல் நீட்டி மிரட்டினாள் சிரித்தவாறு..

அதற்குள் சிவகாமி அருகில் வர, தோழியர் இருவரும் பேச்சை நிறுத்தி கொள்ள, மற்றவர்கள் முன்பே இறங்கி இருக்க அடுத்து  சந்தியா கீழ இறங்கினாள்.. 

சற்று தொலைவில் நின்று பேசி கொண்டிருந்தாலும் சந்தியா வந்திருந்த காரையே ஓரக்கண்ணால் பார்த்து கொண்டிருந்தான் மகிழன்.. ஒவ்வொருவராக இறங்க, சந்தியா மட்டும் இறங்கினபாடில்லை..

கடைசியாக கதவை திறந்து கொண்டு இறங்குவதற்காக  ஒரு காலை வெளியில் கீழ நீட்ட அதில் கணுக்காலில் அவள் கொலுசு தவழ, அதை கண்டதுமே அவன் உள்ளே சில்லென்ற பனிமழை பொழிய ஆரம்பித்தது மகிழனுக்கு...

அடுத்த காலையும் வெளியில் நீட்டி இறங்கி நிக்க, வெட்டிங் கவுனில் முடியை ப்ரியாக சுருள் சுருளாக விட்டிருந்த  அவளின் மணப்பெண்ணிற்கான அந்த அலங்காரத்தை கண்டு அப்படியே சொக்கி போனான் மகிழன்..

கீழ இறங்கியவள் தன்னை யாரோ உற்று பார்ப்பதை போல இருக்க, எதேச்சையாக திரும்பி பார்க்க, அங்கு சற்று தொலைவில்  நின்றுகொண்டு அவளை விழுங்கி விடுபவனை போல பார்த்து கொண்டிருந்த மகிழனை கண்டதும் உள்ளே படபடக்க ஆரம்பித்தது...

அதுவரை இயல்பாக கதை அடித்து கொண்டு வந்தவளுக்கு இப்பொழுது படபடப்பாக இருக்க, வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் பறப்பதை போல இருக்க, கன்னம் சிவக்க, அவள் தலை தானாக கீழ தாழ்ந்தது..

அதை கண்டு கொண்ட அன்பு அவள் அருகில் வந்து

:ஹோய்.. சந்தி.. இதுவரைக்கும் என்னமோ டயலாக் எல்லாம் விட்டுட்டு வீர வசனம் பேசிகிட்டிருந்த.. எங்கடி போச்சு அந்த தைர்யம் எல்லாம்.? இப்ப ஏன் இப்படி தரையை பார்க்கற? “ என்று காதை கடித்தாள் ரகசியமாக நக்கலாக சிரித்தவாறு...

“சீ.. போடி... “ என்று சந்தியா சிணுங்க அதை கண்டு அன்புக்கு மயக்கம் வராத குறைதான்..

“ஐயோ!! நீ கூட வெட்க படறயா? என்னால நம்பவே முடியலையே.. நிஜமாலுமே இது நினைவா இல்லை கனவா? எதுக்கும் இருடீ கிள்ளி பார்த்துக்கறேன்.. “ என்று சந்தியா கையை கிள்ள அவளோ அன்பை முறைத்து

“ஹ்ம்ம்ம் இது கனவல்ல நிஜம்தான்.. இப்ப தெரியும் பார். “ என்று அன்புவின் கையில் கிள்ளினாள்..

அதற்குள் பெண் வீட்டாரை வரவேற்கும் விதமாக நிகிலன் அந்த காரை நோக்கி வர, மகிழனும் கூடவே வந்தான்..

பெண் வீட்டில் இருந்து வந்திருந்தவர்களை எல்லாம் நிகிலன் மற்றும் மகிழன்  இருவருமே கை குவித்து வரவேற்றனர்..

மகிழன் வந்திருந்தவர்களிடம் பேசினாலும் பார்வை நொடிக்கொருதரம் தன்னவளிடம் வந்து சென்றது..

சந்தியா எதேச்சையாக மகிழனை பார்க்க, அவனோ கண் சிமிட்டி குறும்பாக சிரித்து கண்ணாலயே செமயா இருக்க டீ என்று சைகை செய்தான்.. அதை கண்டதும் அவள் கன்னங்கள் மேலும் ரோஜாக்களை பூத்தன..

அனைவரும் இறங்கியதும் மணமக்கள் இருவரையும் அழைத்து சென்று அருகில் இருந்த விநாயகர் கோவிலில் பூஜை செய்தனர்..மகிழன் வேண்டும் என்றே சந்தியாவின் அருகில் வந்து நெருங்கி நின்று கொண்டவன் அவளை முழங்கையால் இடித்து மீண்டும் அவளை சீண்டினான்..

இந்த முறை திரும்பி அவனை முறைக்க, அடுத்த நொடி அவளின் முறைத்த இதழையே தாபத்துடன் பார்க்க, அந்த பார்வையில் திக்கு முக்காடி போனவள் உடனே முறைக்க மறந்து தலையை குனிந்து கொண்டாள்..

மகிழனும் உல்லாசமாக சிரித்து கொண்டே அந்த கணேசனை வணங்க, பின் மணமக்கள் இருவரையும் மேடைக்கு அழைத்து சென்றனர்...

மண்டபத்தின் நுழைவாயிலுக்கு வந்ததும் மகிழன் ஆங்கிலேயர் பாணியில் கையை நீட்ட, மந்திரத்துக்கு கட்டு பட்டவளை போல சந்தியாவும் தன் கையை நீட்ட இருவரும் ஒருவர் கைகளுக்குள் மற்றவர் கையை விட்டு பிடித்து கொண்டு ஜோடியாக அந்த மேடையை நோக்கி சென்றனர்...

அங்கு அமர்ந்திருந்தவர்கள் எல்லாரும் எழுந்து நின்று அவர்கள் வருவதையே பார்த்து ரசித்தனர்...

மேடையை அடைந்ததும் இருவர் கையிலும் மாலையை கொடுத்து மாத்திக்க சொல்ல, மகிழன் அந்த மணமாலையை கையில் எடுத்து அதை இதயம் வடிவில் வைத்து  பிடித்து கொண்டு அதன் வழியாக சந்தியாவை பார்க்க, அவளோ வெட்க பட்டு கன்னம் சிவக்க தலையை குனிந்து கொண்டாள்..

அங்கிருந்த புகைப்படக்காரர்களும் வீடியோவும் எல்லா நொடிகளையும் பதிவு செய்து கொண்டிருந்தனர்...

மகிழன் மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் அந்த மாலையை அவளுக்கு அணிவிக்க, சந்தியாவும் தன் கையில் இருந்த மாலையை தன் நுனிக்காலில் நின்று எக்கி அவனுக்கு போட்டாள்..

பின் இருவரும் பார்வையாளர்கள் பக்கம் பார்த்து வந்திருந்த அனைவருக்கும் வணக்கம் சொல்லி புன்னகைத்தனர்..பின் அலங்கரிக்கபட்டிருந்த அந்த திருமண மேடையில் நடுவில் நின்று கொண்டு அனைவரின் ஆசிக்காகவும் வாழ்த்துக்கள் வேண்டியும்  அருகருகே நின்று கொண்டனர்..

ற்கனவே ஆறடி உயரமும் கம்பீரமான தோற்றமும் கொண்டு விளங்கும்  மகிழன் இன்று மணமகனுக்கான உடையில் இன்னுமே கலக்கலாக இருந்தான்..

வெந்நிற சட்டையின் மீது கருப்பு நிற ப்ளேசர் அணிந்து அதன்  பாக்கெட்டில் இளஞ்சிவப்பு ரோஜாவை வைத்திருந்தான்..தன் மனம் விரும்பியவளையே மணக்க போகும் கர்வமும் சந்தோஷமும்,  அவன்  முகத்தில் குடிகொண்டிருக்க குறும்பு தவழும் புன்னகையோடு நின்றிருந்தான்..

அவனுக்கு கொஞ்சமும் சளைக்காமல் அவன் விரும்பியவளும்  அவன் அணிந்திருந்த ஆடைக்கு பொருத்தமான அலங்காரத்தில் இருந்தாள் சந்தியா..

அடர்சிவப்பு நிறத்தில் வேலைப்பாடு மிக்க வெட்டிங் கவுனில் ஆங்காங்கே கற்கள் பதித்து அவள் திரும்பும் பொழுதெல்லாம் ஒளியை வாரி இரைக்க தலை முடியை ஃப்ரியாக சுருள் சுருளாக விட்டிருக்க பார்ப்பதற்கு பார்பி டாலை போல  அழகு தேவதையாக நின்றிருந்தாள்..

அந்த உடைக்கு பொருத்தமான அணிகலன்களை  அணிந்திருந்தாலும் அந்த அணிகலன்களின்  பளபளப்பை விட அடிக்கடி தன்னவனின் விழுங்கி விடும் பார்வை அவளிடம் வந்து செல்வதை உணரும் போது எல்லாம் சிவந்த அவள் கன்னங்கள் இன்னும் பளபளவென்று மின்னின...

முகத்தில் பூரிப்பும் கண்ணில் குறும்பும் தன்னவன் மீதான காதலும் கலந்து பிரதிபளிக்க, அவளை அப்படி பார்க்கவும்  கொள்ளை அழகாக இருந்தது..  அவள் முகத்திலும்  தன் மனம் விரும்பியவனையே கைபிடிக்கும் சந்தோஷம் நிரம்பி வழிந்தது..

இருவரும் ஜோடியாக நெருங்கி இணைந்து நின்று கொண்டு அனைவரையும் புன்முறுவலுடன் வரவேற்று கொண்டிருந்தனர்..

உடனே அவர்களுக்காகவே  காத்து கொண்டிருந்தவர்கள் ஒவ்வொருவராக மேடை ஏறி தங்கள் பரிசை கொடுக்க ஆரம்பித்தனர்..

மணமக்களும் மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் மேடையை நோக்கி வருபவர்களை கை குவித்து வரவேற்று அவர்களின் பரிசையும்  வாழ்த்துக்களையும் ஏற்றுக் கொண்டிருந்தனர்...

திருமண மண்டபம் நுழைவாயிலில் மாப்பிள்ளை வீட்டார் சார்பாக நிகிலன், அகிலா மற்றும் மது நின்று கொண்டு வருபவர்களை வரவேற்று கொண்டிருந்தனர்..

அவர்கள் அருகில்  மணிஸ் தம்பதியினரும் நின்றுகொண்டு பெண் வீட்டார் சார்பாக அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்று கொண்டிருந்தனர்..

அழகான இளந்தளிர் பச்சை  வண்ணத்தில் பிங் வண்ண பார்டர் வைத்த  பட்டுப்புடவையில், நீண்ட பின்னலிட்டு தலை அலங்காரம் செய்து இடுப்புக்கு ஒட்டியாணமும் முன் நெற்றியில் நெத்திச்சுட்டி அணிந்து மணமகளுக்கு இணையான அலங்காரத்தில் மிளிர்ந்த தன் மனைவியை கண்டதும் அவளை விட்டு கண்ணை அகற்ற முடியாமல் தவித்து போனான் நிகிலன்..

நுழைவாயிலில் நின்று கொண்டு வருபவர்களை வரவேற்று கொண்டிருந்தாலும் அடிக்கடி அவன்  பார்வை தன்  மனைவியிடமே வந்து நின்றது..அவன் பார்வையை கண்டுகொண்ட மதுவோ கன்னம் சிவந்து அடிக்கடி அவனைப் பார்த்து செல்லமாக முறைத்து கொண்டிருந்தாள் மது..

நிகிலனும் ஒரு குறும்பு புன்னகையை செலுத்தி உதடு குவித்து முத்தமிட்டு  அடிக்கடி அவளை சிவக்க வைத்து கொண்டிருந்தான்..

மதுவின் புடவை கலருக்கு பொருத்தமாக அகிலாவும் பட்டு பாவாடை தாவணி அணிந்து இடுப்பில் சிறிய ஒட்டியாணமும் நெத்தி சுட்டியும் அணிந்து குஷியாக வருபவர்களை பெரிய மனுஷியாக வரவேற்று கொண்டிருந்தாள்..   

மண்டபத்தின் உள்ளே அனைத்து விதமான மக்களும் குழுமி இருந்தனர்..

நிகிலன் தன் திருமணத்திற்கு அழைக்க முடியாதவர்களை எல்லாம்  தன் தம்பியின் திருமணத்தை முன்னிட்டு அழைத்திருந்தான்..  

நமது இல்லத்தில் இருந்தவர்களுக்கு ஒவ்வொருவருக்குமே பட்டுப் புடவை பட்டு வேஷ்டியும் வாங்கிக் கொடுத்து அவர்களையும் திருமணத்திற்கு அழைத்து வந்து  அங்கு அமர வைத்திருந்தான்..  

அதே போல சந்தியாவின் பக்கமிருந்து அவள் செல்லும் ஒவ்வொரு அனாதை இல்லங்களில் இருந்தும் சில ஆஸ்ரமங்களில் இருந்தும் அவள் திருமணத்தை பார்க்க விரும்புவர்கள் அனைவரையும் அவளே பேருந்து ஏற்பாடு பண்ணி அழைத்து வர ஏற்பாடு செய்திருந்தாள்..

அதனால்  அந்த மக்கள் எல்லாம் ஒரு புறம் அமர்ந்து இருந்தனர்..நிகிலன் அவன் பணிபுரியும் காவல்துறையில் தெரிந்தவர்களை எல்லாம் அழைத்திருக்க, கமிஷ்னர் முதற்கொண்டு  கொஞ்சம் பெரிய மனிதர்களும் மற்றும் மகிழன் அலுவலகத்தில் இருந்து மற்ற பெரிய மனிதர்கள் எல்லாம் மறுபுறம் அமர்ந்து  இருக்க திருமண மண்டபமே இரண்டு தர மக்களையும் ஒரே நேரத்தில் பார்த்து பூரித்துக் கொண்டிருந்தது..

நிகிலனின் நண்பர்கள் ஆதித்யா மற்றும் வசீகரனும் முன்னதாகவே வந்து நிகிலனுக்கு உதவி கொண்டிருந்தார்கள்.. ஆதி மேடையை விட்டு இறங்குபவர்களை சாப்பிடும் இடத்திற்கு அழைத்து கொண்டு சென்றான்..

வசீகரன் சாப்பிடும் இடத்தில் நின்று கொண்டு அனைவரையும் கவனித்து கொண்டிருந்தான்..அன்பழகி மேடையின் ஓரத்தில் நின்று கொண்டு மணமக்களுக்கு வரும் பரிசுகளை வாங்கி வைத்து கொண்டிருந்தாள்..

இப்படி ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் உதவி புரிய, அதை கண்ட சிவகாமிக்கு மனம் நிறைந்து போனது..

தன் கணவன் இருந்து செய்ய வேண்டிய காரியங்களை எல்லாம் பெரியவனும் மூத்த மருமகளும்  பொறுப்பாக எடுத்து செய்ய, கூடவே இப்படி பழகியவர்களும் எடுத்து செய்ய, அதை கண்டவர்க்கு தன் கணவன் இல்லாத குறை தீர்ந்த மாதிரி இருந்தது..

மனம் எல்லாம் பூரிப்புடன் வந்தவர்களை எல்லாம் சிரித்த முகமாக வரவேற்று கொண்டிருந்தார் சிவகாமி..

அப்பொழுது ரமணி அங்கு வர, ஓடி சென்று அவரை கட்டி கொண்டு வரவேற்றார் சிவகாமி.. வசந்தி இப்பொழுது கற்பமாக இருக்க அவளுக்கு துணையாக கௌதமும் இருந்து விட , ரமணி மட்டும் வந்திருந்தார்..

ரமணியின் முகத்திலும் பூரிப்பும் பெருமையும் இருக்க கொஞ்சம் எடை போட்டிருந்தார்.. அவரை அப்படி காண சிவகாமிக்கும் மனம் நிறைந்து விட, இருவரும் ஒன்றாக நின்று கொண்டு வருபவர்களை வரவேற்றவாறு கதை பேசி கொண்டே நின்று கொண்டிருந்தனர்..

பார்வையாளர்களின் முதல் வரிசையில் சந்தியாவின் அம்மா வழி தாத்தா பாட்டியும் அவள் அப்பா வழி  தாத்தா பாட்டி மற்றும் அவள் ஊரிலிருந்து வந்திருந்த பெரியவர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர்..  

மேடையில் ஜோடியாக நின்று கொண்டிருந்த மணமக்கள்  இருவரையும் காண அவர்களுக்கு பெருமையாக இருந்தது..இருவருமே ஒருவருக்கொருவர் அவ்வளவு பொருத்தமாக இருக்க அதை  கண் குளிர பார்த்திருந்தனர்..

ஒவ்வொருவராக மேடை ஏறி வந்து மணமக்களை சந்தித்து வாழ்த்தி விட்டு செல்ல, சந்தியாவின் தாத்தாஸ் மற்றும்  பாட்டிஸ் ம் மேடையேறினர் ..

பெரியவர்களை கண்டதும் மணமக்கள் இருவரும் அந்த பெரியவர்கள்  காலில் விழுந்து வணங்கினர்..

அவர்களும் மகிழ்ந்து போய் மணமக்களை தூங்கி ஆசீர்வதித்து அவர்கள் கையில் ஒரு வெற்றிபாக்கு வைத்து அதில் பணத்தை வைத்து அவர்கள் பரிசாக இருவருக்கும் கொடுத்தனர்..

பின் சந்தியாவை பார்த்து

“சந்தியா குட்டி..  உன் மாப்பிள அந்த ராஜகுமாரன் மாதிரி ஜம்முனு இருக்காரு.. உன் அப்பன் நல்லா தேடி சீமைத்துரை மாதிரி ஒரு மாப்பிள்ளையை கண்டுபுடிச்சிட்டானே... கெட்டிக்காரன் தான்...

பேராண்டி....  எங்க பேத்தியை பத்திரமா பார்த்துக்கோங்க அவ கண்ணுல ஒரு சொட்டு தண்ணி வரப்படாது.  ஆமா.. சொல்லிபுட்டோம்.. “  என்று கோபி  தமிழில் பேச மகிழனும் சிரித்துக் கொண்டே

“சரிங்க பாட்டீஸ் அன்ட் தாத்தாஸ்..இதே புத்திமதியை உங்க பேத்திகிட்டயும் சொல்லிவைங்க.. இந்த பேராண்டியை கண் கலங்காம பார்த்துக்க சொல்லி,  சொல்லி வைங்க...  “ என்று சொல்லி  சிரித்தான்..

அவர்களும் அதை கேட்டு சிரித்தவாறு

“குறும்புக்கார பேராண்டி.. “  என்று சொல்லி  வேல்மணியின் அன்னை அவன் கன்னத்தை பிடித்து நறுக்கென்று கிள்ளினார்..

“ஆத்தி.. குடும்பமே டெரர் குடும்பமா இருக்கும் போல..உன் பொண்டாட்டிதான் வயலன்ட் ஆ ரியாக்ட் பண்ணுவானு பார்த்தா அவ பாட்டி கூட இப்படி வயலன்ட் ஆ இருக்கே.. மகிழா..நீ வாழ்க்கை பட்டு போற குடும்பம் சூப்பர் குடும்பம் தான் போ... “ என்று நக்கலாக சிரித்தது அவன் மனஸ்..

மகிழனும் ஒரு அசட்டு சிரிப்பை சிரித்து அவர்களை நிக்க வைத்து புகைப்படம் எடுத்து கொண்டு பின் அவர்களை கைதாங்களாக அழைத்து சென்று மேடையில் இருந்து கீழ இறக்கி விட்டான்..

அவன் பொறுப்பாக தங்களை பார்த்து கொண்டதை கண்டவர்களுக்கு இன்னும் உச்சி குளிர்ந்து போனது... தங்களுக்குள் மெச்சி கொண்டே சாப்பிடும் இடத்தை நோக்கி சென்றனர்..

சிறிது நேரம் கழித்து அவர்களின் அலுவலக கும்பல் மேடையேறியது.. சந்தியா மற்றும் மகிழனுக்கு எல்லாருமே அலுவலகத்தில் தெரிந்தவர்கள் என்பதால் அனைவரையுமே திருமணத்திற்கு அழைத்திருந்தனர்..

மகிழன் அந்த அலுவலகத்தில் எல்லாருக்குமே பெரிய லெவலில் தெரிந்தவன் என்பதால் சி.இ.ஓ  முதற்கொண்டு அனைவரையுமே அழைத்திருந்தான்..

அவர்களும் மறக்காமல் வந்திருக்க,  அந்த அலுவலகத்தின் சி.இ.ஓ  மற்றும் இன்னும் பல பெரிய தலைகள் முதலில் மேடையேறி வந்தனர்..

அவர்களை கண்டு சந்தியாவுக்கு பெருமையாக இருந்தது...தான் எட்டி நின்று பார்த்தவர்களெல்லாம் தன் திருமணத்திற்கு வந்திருக்கிறார்கள் என்று பெருமையாக இருந்தது...

அனைவருமே இருவருக்கும் கை குலுக்கி வாழ்த்து சொல்லி கீழே இறங்க, வருபவர்களை வரவேற்று உணவு இடத்திற்கு அழைத்து சென்று கொண்டிருந்த ஆதி வந்து அவர்களை சாப்பிட அழைத்து சென்றான்...

அடுத்து மேடையேறியது மகிழனின் டீம்..  மனோகரன் மற்றும் வினித்  முதலாவதாக வந்து மகிழனுக்கும்  சந்தியாவுக்கும் வாழ்த்து சொல்லி இருவருக்கும் கை குலுக்க, அதன் பின்  ஒவ்வொருவரும் அருகில் வந்து கைகுலுக்கி இருவருக்கும் வாழ்த்துக்களை சொல்லினர்..

இறுதியாக வந்த அஜய் கோஸ்டி மகிழன் அருகில் வந்தனர்.. மகிழனை பார்த்து 

“தல.. சொன்ன மாதிரியே பெட் ல ஜெய்ச்சிட்டீங்களே..!!   சொன்ன மாதிரியே அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்த பண்ணிட்டீங்களே.. நீங்க பெரிய ஆள் தான்..”  என்று சிரித்தான்..

உடனே அருகில் இருந்த சந்தியாவை பார்த்து

“ஹோய்..  சந்தி..  இப்பயாவது ஒத்துக்கிறயா?  எங்க தல சொன்னதை செஞ்சு காமிப்பார் னு.. “ என்று சிரிக்க, சந்தியாவும் உதட்டை கடித்து கொண்டு சிரித்து வைத்தாள்..  பின் மகிழனிடம் திரும்பியவன்

“ தல?  எப்படி அது இந்தப் பூனையும் பால் குடிக்குமா?  என்று ஒன்னுமே தெரியாத மாதிரி இருந்தீங்க..போயும் போயும் இந்த ராட்சசி கிட்ட கவுந்திட்டிங்களே.. “ என்று இழுத்தான்..

அதைக் கேட்ட சந்தியா

“ஹோய்.. ஆச்சி... “  என்று கையை மடக்கி அவனை அடிக்கும் ஆக்ஷன் பண்ண, அதை கண்டவன்

“ஆத்தி... நான் கூட பொண்ணு அதிசயமா வெட்கப்பட்டு சிரிச்சுகிட்டு இருக்கா..நம்ம கலாய்ச்சா ஒன்னும் சொல்ல மாட்டானு பார்த்தா  மேடையிலேயே என்ன அடிக்க வர்ராளே.. “  என்று வாய்விட்டு புலம்பியவன்

"ஹீ ஹீ ஹீ சாரி.. சந்தி..டங் ஸ்லிப்பிங்...  நீ ராட்சசி இல்ல..  அழகான ராட்சசி.. "  என்று சிரித்தான் அஜய்..

அதை கேட்டு சந்தியா மீண்டும் அவனை முறைக்க அதை கண்ட ப்ரவின்  

“தல..  எப்படி தல?  எங்களால ஒரு நிமிஷமே  இவளை சமாளிக்க முடியாது..  ஆயுள் முழுக்க நீங்க எப்படி சமாளிக்க போறீங்க? .. “  என்று சிரித்தான்..  

“தம்பிகளா...  உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்..  ஏன் இவ்வளவு வாய் அடித்து சேட்டை பண்ற  உங்களையே நான் வச்சு சமாளிக்கலையா?  அது மாதிரி என் பொண்டாட்டிய சமாளிக்கவும் நான் ஒரு ஸ்ட்ராடஜி வச்சிருக்கேன்.. அதை வச்சி சமாளிச்சிருவேன்... " என்று சிரித்தான் மகிழன்..     

“ஆங்... ஸ்ட்ராடஜி ஆ? என்ன ஸ்ட்ராடஜி  தல..? எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்... “  என்று சிரித்தான் அடுத்து நின்ற கதிரேசன்..  

“ஹா ஹா ஹா அதெல்லாம் உங்களுக்கும் கல்யாணம் ஆனா தானா புரியும்... “ என்று கண் சிமிட்டி சிரித்தான் மகிழன்..

“ஹ்ம்ம்ம்ம் என்னமோ சொல்றீங்க.. பார்க்கலாம்.. அது சரி தல..ஆபீஸ்ல இவ  எப்பவும் உங்க கிட்ட முறச்சுகிட்டே இருப்பாளே..அப்புறம்  எப்படி உங்க லவ் ஸ்டோரி ஸ்டார்ட் ஆச்சு? “  என்றான் அஜய் சிரித்துக் கொண்டே...

அதைக் கேட்டு மகிழனும் லேசாக வெட்கபட்டு சிரித்தவாறே

“டேய்...  இது  ஒன்னும் லவ்  மேரேஜ்  இல்ல.. அரெஞ்ட் மேரேஜ் தான்... மது...  ஐ மீன் என்னோட அண்ணியோட ஃப்ரெண்டு தான் சந்தியா..  அதனால பேமிலில  பெரியவங்களா பார்த்து ஏற்பாடு பண்ணியது தான்... “  என்று சிரித்தான்..

“2020  யோட கிரேட் ஜோக் இது தான் தல.. எங்களுக்கு எல்லாம் ஏற்கனவே மொட்டை அடிச்சி காது குத்திட்டாங்க.. நீங்க  ஒன்னும் புதுசா குத்த வேண்டாம்..  

நீங்க சொல்ற மொக்க கதையெல்லாம் கேட்டு மண்டைய ஆட்டறதுக்கு இது ஒன்னும் நீங்க பண்ற சாப்ட்வேர் ஆர்க்கிடெக்சர் டிசைன் இல்ல.. நீங்க எது சொன்னாலும் நாங்களும் மண்டைய ஆட்டிகிட்டு அப்படியே ஒத்துகிட்டு போறதுக்கு..

இது லவ் மேட்டர் தல..  இதுல நாங்க தான் சீப் ஆர்க்கிடெக்ட்.. இல்ல இல்ல அதுக்கும் மேல  CTO ( Chief Technology Officer ).. எங்களுக்கு எப்படி பட்ட லவ் மேட்டர் எல்லாமே அத்துபடியாக்கும்..  எங்களுக்கே வா??  ஒழுங்கா மறைக்காம உண்மையான மேட்டரை சொல்லுங்க.. “  என்று காலரை தூக்கி விட்டுக் கொண்டனர்..

அதை கண்டு மீண்டும் வெட்கபட்டு அசட்டு சிரிப்பை சிரித்தவன்

“அதான... உங்களையெல்லாம் ஏமாத்த முடியுமா?  தம்பிகளா..  என் லவ் ஸ்டோரி எல்லாம் வேற ஒரு நாளைக்கு சொல்றேன்..இன்னும் உங்களுக்கு பின்னாடி மத்தவங்க வெய்ட் பண்றாங்க இல்லையா.. அதனால இப்ப எல்லாரும் போய்  நல்லா சாப்டுங்க..மத்தவங்களுக்கும் வழி விடுங்க..” என்று  சிரித்தான் மகிழன்..

“தல...  பந்திக்கு முந்திக்கோ... படைக்கு பிந்திக்கோ..  என்ற பழமொழியை  நாங்கள் தவறாமல் கடை பிடிக்கிற ஆளுங்க..அதனால் தான் வந்த உடனே போய் சாப்பாட்டு வேலையை முடிச்சுட்டுதான் மேல வந்தோம்..” என்று சிரித்தான் கதிரேசன்...

உடனே அருகில் இதுவரை அமைதியாக அவங்க கலாய்க்கிறதை சிரித்து கொண்டே  வேடிக்கை பார்த்து கொண்டிருந்த  சந்தியா

“டேய் காகா.. நீதான் எங்க சோறு போட்டாலும் முதல்ல அத  கண்டுபிடிச்சு போயிடுவியே.. “  என்று சிரிக்க அதில் கடுப்பான கதிரேசன் அவளை முறைத்தவாறு

“ஹோய்.... சந்தி..  ஏதோ என் தலைக்கு பொண்டாட்டி ஆயிட்ட .. எனக்கு அண்ணி ஆயிட்ட.. அதனால பொறுமையா இருக்கேன்..  என்னை இன்னொருதரம் காகா னு  ஓவரா கலாய்ச்ச அவ்வளவுதான்.. சொல்லிட்டேன்.. “  என்று முறைத்தான்..

“ஹா ஹா ஹா போடா டேய்..  உன்னை பத்தி எனக்கு தெரியாதா காகா.. “ என்று சந்தியாவும் முறைத்தவாறு அவனை ஓட்ட ஆரம்பித்தாள்..

அதைக் கண்ட அஜய் மகிழன் அருகில் வந்து

“தல... ஒரு சின்ன ரிக்வெஸ்ட்.. புதுசா வேலைக்கு சேர்ந்தாலோ இல்ல பெரிய பதவிக்கு வந்தாலோ அவங்களுக்கெல்லாம் 30 நாட்கள் ப்ளான் , 60 நாட்கள் ப்ளான் அப்படீனு ஒன்னு வச்சிருப்பாங்க இல்ல..

அது மாதிரி உங்களுக்கு  கல்யாணம் ஆன முதல்  30 நாள் டார்கெட்.. இந்த சந்தி வாயை அடைக்கிறதும் இப்படி அடிக்கடி முறைக்கிறத  மட்டும் ஆப் பண்ணிடுங்க தல... இவ முறைச்சா அப்படியே அந்த காளி ஆத்தாவே  நேர்ல வந்து முறைக்கிற மாதிரி இருக்கு...” என்று சிரித்தான் அஜய்..  

அதைக் கேட்டு சந்தியா அஜய் ஐ முறைத்து ஒரு எரித்துவிடும் பார்க்க, அடுத்த நொடி அவளையும் அறியாமல் அவள் பார்வை மகிழனிடம் செல்ல, அவனோ வழக்கம் போல அவள் முறைக்கும்பொழுது வளைந்திருந்த அவளின் இதழ்களையே தாபத்துடன் பார்த்திருக்க, அவள் பார்வை தன்னிடம் வந்த நொடியில் கண் சிமிட்டி உதடு குவித்து முத்தமிட்டு குறும்பாக சிரிக்க,  உடனே அவன்  பார்வையின் அர்த்தம் புரிந்தவள் கன்னம் சிவக்க உதட்டை கடித்து கொண்டு முறைப்பதை உடனே நிறுத்திக் கொண்டாள் சந்தியா..

ஒரு நொடியில் இத்தனையும் நடந்து விட,  அதைக் கண்டு கொண்ட  அஜய் வியந்து

“வாவ்... சூப்பர் தல... உங்களுக்கு ஒரு மாசம் டைம் எல்லாம் வேண்டாம்.. ஒரு நொடியிலயே  இந்த சந்தி வாய அடச்சிட்டீங்களே.. உங்க ஸ்ட்ராடஜி சூப்பர் தல.. தலைவா...  யூ ஆர் கிரேட்... “ என்று நண்பன் படத்தில்  வருவதைப் போல முன்னால் குனிந்து கைகளை மார்புக்கு குறுக்காக கட்டி கொண்டு மகிழனிடம் சரணடைவதை போல ஆக்சன் பண்ண,  மேடையில் நின்றிருந்த அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்..

பின் மீண்டும் ஒருவரை ஒருவர் மேடையிலயே கலாய்த்து கொண்டிருக்க, மனோ மற்றும் வினித்  முன்னால் வந்து சந்தியா மற்றும் மகிழனுக்கு அவர்கள் ஹனிமூனுக்காக சுவிட்சர்லாந்த் சென்று வருவதற்கு ஃப்லைட் டிக்கெட் மற்றும் தங்குவதற்கான ஹோட்டல் செலவு எல்லாமே ஏற்பாடு செய்திருந்த வவுச்சரை பரிசாக இருவருக்கும் வழங்கினர்..

அதைக் கண்டு மகிழன் மகிழ்ந்து போய் அனைவரையும் கட்டி அணைத்துக் கொண்டு நன்றி சொன்னான்.. பின் அனைவரும் வரிசையில் நின்று கொண்டு மகிழன் மற்றும் சந்தியாவை நடுவில் நிறுத்தி க்ரூப் போட்டோ   எடுத்துக் கொண்டனர்..

ஒரு வழியாக எல்லாம் கலாய்த்து  முடிந்து சிரித்து கொண்டே மேடையை விட்டு கீழே இறங்கினர்..அவர்கள் கீழே இறங்கவும் அடுத்து அந்த குழுவில் இருந்து பிரிந்து சந்தியா கேங் மட்டும் மீண்டும் தனியாக வந்து மணமக்களை வாழ்த்தினர்..  

அவர்களும் அவர்கள் மட்டும் தனியாக வாங்கி இருந்த  தங்கள் கையில் இருந்த பரிசை கொடுத்து இருவரையும் வாழ்த்தினர்..

இதுவரை சந்தியாவின் அருகில் நின்று கொண்டு பரிசு பொருட்களை வாங்கி வைத்து கொண்டிருந்த அன்பழகியும் முன்னதாக வந்த குழுவிலும் இப்பொழுதும் வந்து சேர்ந்து கொண்டாள்..

ஏற்கனவே சந்தியாவை ஓட்டி கொண்டிருந்தாலும் மீண்டும் ஒரு முறை  சந்தியாவை பிடித்துக் கொண்டு

“ஹோய் சந்தி.... கடைசி வரைக்கும் உண்மையை ஒத்துக்காம போயிட்டியே..  நான் அப்பவே சொன்னேன் இல்லை..தல தான் உனக்கு பெர்பெக்ட் மேட்ச் னு சொன்னேன் இல்ல.. என் வாக்கு பழிச்சிடுச்சு பார்த்தியா..”  என்று சொல்லி சிரித்தாள்..

சந்தியாவும் வெட்கபட்டு  இணைந்து சிரிக்க, மகிழனை பார்த்தவள்

“தல..  எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.. இவள வச்சு சமாளிக்க.. இவ வாய் ஓயாம பேசற பேச்சை கேட்கவும் அப்பப்ப வயலன்ட் ஆகி அடிக்கிற அடியையும், கடிக்கிற கடியையும்,  கிள்ளற கிள்ளையும் தாங்கிக்க இப்பயே உடம்பையும் காதையும் நல்லா ஸ்ட்ராங்கா வச்சுக்கங்க..”  என்று சொல்லி சிரிக்க,  சந்தியா மீண்டும் அவளை முறைத்து அன்பு கையில்   நறுக்  என்று கிள்ளினாள்..

அன்பு அலறியவாறு மீண்டும் அவளை கலாய்த்தவாறு இருவருக்கும் மீண்டும் மனமார வாழ்த்தி  கீழ இறங்கினர்.. மேடையில் இருந்த இருவருக்குமே மனம் பூரித்து இருந்தது…

(இன்னும் இரண்டு அத்தியாயங்களுடன் இந்த கதை நிறைவு பெரும்... )

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!