என்னுயிர் கருவாச்சி-1
என்னுயிர் கருவாச்சி
அன்பான வாசகர் தோழமைகளே!!!
மீண்டும் ஒரு புத்தம் புதிய தொடர்கதையை
உங்களுடன் இந்த தளத்தில் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். இது நான் தற்பொழுது எழுதும்
புதிய தொடர்கதை. அதனால் உங்கள் கருத்துக்களை மறக்காமல் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..!
இதுவும் உங்கள் மனதுக்கு பிடித்த
இனிமையான, கலகலப்பான,
ஜாலியான காதல் கதைதான். தொடர்ந்து படித்து மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன்
பகிர்ந்து கொள்ளுங்கள். Happy Reading!!!- அன்புடன்
பத்மினி செல்வராஜ்!
அத்தியாயம்-1
காமாட்சிப்பட்டி..!
திருச்சி மாவட்டம், முசிறி வட்டத்தில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள
சிறிய கிராமம். காவிரி நீர் வாய்க்கால்
வழியாக நேரடியாக அந்த ஊருக்கு வருவதால் நன்செய் விவசாயம் செழித்து இருக்கும் ஊர்.
ஆற்றில் நீர் வராத சமயங்களில் சோம்பி
இருக்காமல், புன்செய் விவசாயத்தை கையில்
எடுத்துக்கொள்வர் அந்த ஊர் மக்கள்.
நன்செய்யும் ,
புன்செய்யுமாய் வருடம் முழுவதும் செழிப்பாக விளங்கும் கிராமம்...
எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று மிளிரும்
நெற்பயிர்களும், குலை குலையாக காய்த்து
குழுங்கும் வாழை தோட்டங்களும், சாலையின் இரு புறமும் நன்கு உயர்ந்த தென்னை மரங்களும்,
பாக்கு மரங்கள் என எங்கு திரும்பினாலும் மனதை
கொள்ளை கொள்ளும் அழகு மிகுந்த ஊர்.
இயற்கை வளம் மிகுந்த அந்த ஊரின் பிரதான தொழில் விவசாயம்.
முந்தைய தலைமுறையில் முக்கால்வாசி பேர் விவசாயத்தை தான்
நம்பியிருந்தனர். அரிதாக ஒரு சிலர் மட்டுமே வெளியில் சென்று படித்து வேற ஊருக்கு
வேலை தேடி சென்றுவிட்டனர்.
இப்பொழுது இருக்கும் தலைமுறையினருக்கு விவசாயத்தில் நாட்டம்
குறைந்து வருவது வருத்தப்படவேண்டிய
ஒன்றாகும்.
முந்தைய காலகட்டத்தை போல் அல்லாமல், இப்பொழுது எல்லாருக்கும் வேலை எளிதாக கிடைத்துவிடுவது ஒரு
காரணம் என்றால், விவசாயத்தில் இருக்கும் நிலையில்லாத வருமானமே
மிக முக்கிய காரணம்.
முக்கால்வாசி பேர் விவசாயத்தில் இருக்கும் நெளிவு சுழிவுகளை
அறிந்துகொண்டு பருவத்திற்கு ஏற்ப பயிர் செய்யும் முறையை பின்பற்றாமல் போனதும்
நிலையில்லாத வருமானத்திற்கு ஒரு முக்கிய காரணம்.
அதோடு இப்பொழுது இருக்கும் நவீன பொழுதுபோக்குகளிலும், ஆடம்பர வசதிகளின் ருசியையும் அறிந்தவர்களுக்கு வயலில் இறங்கி
உடலை வருத்தி உழைப்பது என்பது முடியாமல் போய்விட்டது.
அதனாலயே இன்றைய தலைமுறையினர் குலுகுலு ஏ.சியில் அமர்ந்து கொண்டு, பகட்டாக உடை அணிந்து கொண்டு, அலுக்கு படாமல், நோகாமல் செய்யும் வேலைக்காக பட்டணத்தை நோக்கியோ, வெளிநாட்டை நோக்கியோ படையெடுத்து வருகின்றனர்.
முந்தைய தலைமுறையினர் வேறு வழியில்லாமல், தங்கள் உயிராய் மதிக்கும் விவசாயத்தை கைவிட முடியாமல் போராடிக்
கொண்டிருக்கின்றனர்.
***
அப்படிப்பட்ட முந்தைய தலைமுறையினரை சேர்ந்தவர் தணிகாசலம்..! அவர் உடைய மனைவி சிலம்பாயி. மனம் ஒத்த தம்பதிகள்.
இருவருமே ஊரில் அவர்களுக்கு என்று இருந்த ஒரு ஏக்கர் நிலத்தில்
விவசாயம் செய்து வருகின்றனர்.
அவர்கள் இருவருக்கும் மணம் முடிந்ததும் அடுத்த வருடமே ஒரு பெண்
குழந்தை பிறந்து விட்டாள். இருவருமே மகாலட்சுமி தங்கள் வீடு தேடி வந்துவிட்டாள் என்று
பூரித்து போயினர்.
அடுத்து ஆஸ்திக்கு ஒன்றாய் ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று காத்திருக்க, இரண்டாவது பெண்ணாக பிறந்துவிட்டாள். அதில் கொஞ்சம் வருத்தப்பட்டாலும் எப்படியும் தங்களுக்கு
ஒரு மகன் வேண்டுமென்று மீண்டும் காத்திருக்க, அடுத்ததும் பெண்ணாக
பிறந்து விட, சிலம்பாயி மனம் ஒடிந்து போனார்.
அதற்குமேல் இனி குழந்தையே வேண்டாம் என்று தணிகாசலம் கறாராக
கூறிவிட, சிலம்பாயிக்கு மட்டும் மனம் தாங்கவேயில்லை.
அவரும் போகாத கோயில் இல்லை. வேண்டாத தெய்வம் இல்லை. எப்படியோ
அவரின் வெண்டுதல் பலித்துவிட, ஒரு ஆண்மகனை
பெற்றெடுத்தார்.
தங்களுக்கு கொல்லிபோட பையன் வந்துவிட்டான் என்று பெருமை பட்டுக் கொண்டாலும் பெரிதாக
சந்தோஷபடமுடியவில்லை.
வரிசையாக மூன்று பெண் பிள்ளைகள். அதுவும் கடைசியாக பையன் பிறக்கும் தருவாயில் மூத்த
மகள் திருமண வயதை அடைந்துவிட்டாள். அப்பொழுதுதான் அவர்களுக்கு தாங்கள் செய்த தவறு
புரிந்தது.
இரண்டு பிள்ளைகளோடு நிறுத்தியிருந்தால், எந்த பிக்கல் பிடுங்கல் இல்லாமல், ரெண்டு பேரையுமே நன்றாக வளர்த்து, சீர் செனத்தி செய்து, விமரிசையாக கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கலாம்.
இப்பொழுது நான்கு பிள்ளைகளை எப்படி கரை சேர்ப்பது என்ற கவலை
மனதை அழுத்த, கையை பிசைந்தார் தணிகாசலம்
ஆனாலும் நடந்ததை மாற்றவா முடியும்? எப்படியாவது கஷ்டப்பட்டுத்தான் கரை சேர்க்க வேண்டும் என்று
தீர்மாணித்தவர் இன்னுமே அயராது உழைத்தார்.
அருகில் இருக்கும் வயலையும் குத்தகைக்கு எடுத்து அதிலும்
விவசாயம் செய்து வந்தார்.
தன் பிள்ளைகளுக்கு குறைந்தது அடிப்படை கல்விஅறிவாது
இருக்கவேண்டும் என்று மூன்று பெண் பிள்ளைகளையும் பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.
***
மூத்தவள் பொற்கொடி..!
அவள் அன்னை சிலம்பாயியை போன்று நல்ல சிவப்பானவள். ஜோடித்து
வைத்த அம்மன்சிலைபோல மிளிர்பவள். பத்தாம் வகுப்பு வரைக்கும் மட்டும் கஷ்டபட்டு
படித்துவிட்டு, படிப்பில் நாட்டம் இல்லாமல் போய்விட, பள்ளிக்கூடத்துக்கு முழுக்கு போட்டுவிட்டாள்.
இரண்டாவது பிறந்தவள் பூங்கொடி. இவள்தான் நம் கதையின்
நாயகி.
அடுத்த மாதம் பதினெட்டு வயது முடியப்போகும் பருவத்தில் இருந்தாள்.
அருவடைக்கு காத்திருக்கும் நெற்கதிரை போல பருவப்பெண்ணிற்கே உரித்தான வனப்புடன் மிளிர்ந்தாள்
பூங்கொடி.
பெயருக்கேற்றாற்போல கொடி போன்ற தேகம். கொஞ்சமும்
சதைபிடிப்பில்லாமல் சிக்கென்று இருக்கும் சிற்றிடை.
சுண்டி விட்டால் ரத்தம் வரும் நிறமல்ல. மாநிறம்தான். அதில்
அவளுக்கு பெரிய வருத்தம்.
அவள் அக்காவும், தந்க்கையும் அவள்
அன்னையைப்போல நல்ல கலராக இருக்க, அவள் மட்டும் அவள்
தந்தை தணிகாசலத்தின் சாயலில்
பிறந்துவிட்டாள்.
அவரைப்போலவே நெடுநெடுவென்று உயரமாகவும் வளர்ந்து நின்றாள். மற்ற
இருவரும் நிறத்தில் வெள்ளையாக இருந்தாலும் உயரத்தில் அவளில் பாதிதான்.
அவளின் உயரத்தை பார்த்து பொறாமை கொண்டே அவள் அக்கா பொற்கொடி
அவளை மட்டம் தட்ட எண்ணி, பூங்கொடியை
கருவாச்சி என்று அழைத்து டென்ஷன் படுத்துவாள்.
பூங்கொடிக்கு கோபம் புசுபுசுவென்று பொங்கிவரும். அவள் அக்கா
மட்டும் அல்ல... ஊரில் இருக்கும் எல்லா முறைப்பையன்களும், மாமா வகை சொந்தக்காரங்க எல்லாரும் அவளை சீண்ட, கருவாச்சி என்று
அழைத்து வைப்பர்.
அப்பொழுதெல்லாம் கோபம் பொங்கி வரும்.
அவளுக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை கருவாச்சி யாக்கும்.
யாராவது அப்படி அழைத்துவிட்டால் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு செல்வாள்.
இனிமேல் அப்படி கூப்பிட மாட்டேன் என்று ஒத்துக்கொள்ளும்
வரைக்கும் விடமாட்டாள்.
நிறம் கருப்பாக இருந்தாலும் பார்ப்பதற்கு கலையாக இருப்பாள்.
எப்பொழுதும் ஒரு இடத்தில் நிக்காமல் இங்கேயும் அங்கேயும் ஓடிக் கொண்டிருக்கும்
அழகிய கருவிழிகள், கிளிமூக்கு
போன்ற எடுப்பான நாசி, குண்டு கன்னங்கள்...உருண்டு திரண்டிருந்த
செம்பவள இதழ்கள்.
என பார்ப்பவர்கள் முதலில் அவளை திரும்பி பார்க்காவிட்டாலும், இரண்டாவது முறை திரும்பி பார்க்க வைக்கும் கருப்பழகிதான்.
முசிறி அரசினர் கலைக்கல்லூரியில் முதலாமாண்டு படித்து
வருகிறாள்.
மூன்றாவதாக
பிறந்தவள் மலர்க்கொடி. ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறாள். பொற்கொடியை
போன்ற நல்ல நிறம். அவ்வபொழுது தன் மூத்த தமக்கையுடன் சேர்ந்து கொண்டு பூங்கொடியை வம்பு
இழுப்பதில் கெட்டிக்காரி.
கடைசியாக பிறந்தவன். அன்பரசன். இப்பொழுதுதான் ஒன்றாம் வகுப்பு
படித்துக் கொண்டிருக்கிறான். தன் அக்காக்களின் மீது எல்லையில்லா பாசம் கொண்டவன்.
அதுவும் பூங்கொடி மீது கொள்ளைப்பிரியம். பின்ன இருக்காதா?
அவனை பெத்துப்போட்டது மட்டும்தான் சிலம்பாயி. அவனை வளர்த்தது
எல்லாம் பூங்கொடிதான்.
காலையில் எழுந்ததும், பிள்ளைகளுக்கு வேண்டியதை
செய்து வைத்துவிட்டு அவள் அன்னை வயலுக்கு சென்றுவிட, தன் தம்பியை
குளிப்பாட்டி, சோறு ஊட்டி, அவனுக்கு
விளையாட்டு காட்டி என பார்த்துக்கொண்டவள் பூங்கொடிதான்.
அதனாலயே அவனுக்கு நடுஅக்கா மீது தனிப்பிரியம்.
***
மூன்று வருடங்களுக்கு முன்பு, பொற்கொடிக்கு பதினெட்டு வயது முடிந்து இருந்தது.
அவளை ஒரு திருமணத்தில் பார்த்துவிட்டு, அவளின் அழகில் சொக்கிப்போன தினேஷ், அடுத்தவாரமே பெண் கேட்டு தன் பெற்றோர்களை அழைத்துக் கொண்டு
வந்துவிட்டான்.
முசிறி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியனாக பணி புரிந்து
வருகிறான். பொற்கொடியின் நிறத்திற்கு ஏற்ப நல்ல கலராகவும் உயரமாகவும் பார்ப்பதற்கு
சினிமா ஹீரோ போல இருக்க, பொற்கொடிக்கும்
அவனை பார்த்ததும் பிடித்துவிட்டது.
அதுவரை தன் மூத்த மகளின் திருமணத்தை பற்றியெல்லாம் யோசித்திராத
தணிகாசலம், திடீரென்று மாப்பிள்ளை வீட்டிலிருந்து வரவும் என்ன
செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்தார்.
மாப்பிள்ளையிடம் குறை சொல்லும்படியும் ஒரு குறையுமில்லை. ரொம்ப
தூரம் இல்லாமல் பக்கத்தில் இருக்கும் முசிறியில்தான் வசிக்கிறான்.
தன் பெண் ரொம்ப தூரமும் செல்லத் தேவையில்லை.
அதோடு ஒரே பையன்...சர்க்கார் உத்யோகம். கை நிறைய சம்பளம்.
சொத்து பத்தும் ஏகத்துக்கு இருந்தது. தங்கல் வசதியோடு ஒப்பிடும்பொழுது பெரிய
இடம்தான்.
அவர்களே விரும்பி வந்து பெண் கேட்க, மீண்டும் என்ன சொல்வது என்று யோசித்தார். அவரின் குழப்பத்தை கண்ட அவர் அன்னை பாக்கியம் தன் மகனை தனியாக அழைத்து எடுத்து
சொன்னார்.
“என்னடா இன்னும் யோசனை?. நல்ல வரன் தானா
வீடு தேடி வந்து இருக்கு. நாமளா தேடினா கூட இப்படி ஒரு மாப்பிள்ளையை
கண்டுபிடித்திருக்க முடியாது.
எதுவும் யோசிக்காம சம்மதத்தை சொல்லிபுடு. எப்படியோ ஒருத்தியை
தாட்டிபுட்டா அப்புறம் இருக்கறது ரெண்டுபேர்தான. இனிமேல் சம்பாதிக்கிறதை வச்சு
அவளுங்களையும் கரை சேர்த்திடலாம்...” என்று எடுத்து சொல்லி சம்மதிக்க வைத்தார்.
தணிகாசலம் சம்மதம் சொல்லிவிட, அடுத்த சிக்கல்
வந்து நின்றது..!
திருமணத்திற்கு சீர் என்ன செய்ய போறிங்க என்று மாப்பிள்ளை
வீட்டில் கேட்க, அதுவரை பெரிதாக ஒன்றும் சேர்த்து
வைத்திருக்கவில்லை தணிகாசலம்...
உழுதவன் கணக்கு பார்த்தால் உலக்கும் மிஞ்சாது என்பதுபோல
விவசாயத்தில் வரவுக்கும் செலவுக்குமே சரியாக இருந்தது.
அப்படியும் மீதி செய்ததை பிள்ளைகளின் படிப்பு செலவு, துணிமணி, என்று எப்படியும்
கரைந்து போனது.
எப்படியோ திரட்டி பத்து பவுன் போடுவதாக சொல்ல, மாப்பிள்ளையின் தாய் அதை ஒத்துக்கொள்ளாமல் அங்கலாய்ந்தார்.
“ஒரே பையன்...கை நிறைய சம்பளம்...உங்கள மாதிரி விவசாயமா
பார்க்கிறான்? உங்க பொண்ணுக்கு எந்த வேலையும் இல்லாம ராணி
மாதிரி வச்சு பார்த்துக்க போறான்.
அம்பது பவுன் போட இப்பவே பொண்ணு ரெடியா இருக்கு. இவன் என்னவோ
உங்க பொண்ணை பார்த்து மயங்கி, கட்டினா உங்க பொண்ணைத்தான்
கட்டுவேன் னு ஒத்தக்கால் ல நிக்கறான்.
எங்களுக்கும் வேற வழியில்லை... இதெல்லாம் என்ன நாங்களா
புடுங்கிக்க போறோம். எல்லாம் உங்க பொண்ணுக்குத்தானே செய்றீங்க?” என்று நீட்டி முழக்கி, தணிகாசலத்தை கொஞ்சம் குழப்பி, இறுதியாக இருபது
பவுன், மாப்பிள்ளைக்கு ஒரு மோதிரம், ஹீரோ ஹோண்டா பைக் என்று பேரத்தை முடித்தார் மாப்பிள்ளையின் அன்னை
வடிவு.
அதைக்கேட்டு பொற்கொடியை தவிர மற்ற அனைவரும் அதிர்ந்து போயினர்.
தங்களால் இவ்வளவு செய்ய முடியாது என்று தவிப்புடன் சிலம்பாயி
தன் கணவனை பார்க்க, பூங்கொடியும் அதையே தான் எண்ணிக்கொண்டிருந்தாள்.
அவள் தந்தையின் நிலை அவள் அறிந்ததே...அவரின் நிலைக்கு பத்து பவுன்
போடுவதே அதிகம். இதில் இருபது பவுன்...பத்தாதற்கு பைக் வேற என்று பல்லைக்
கடித்தாள்.
இப்படி கூசாமல் தன் மகனை வைத்து பேரம் பேசும் இந்த மாமியார்களை
எல்லாம் ஜெயில்ல போடணும் என்று உள்ளுக்குள் பொங்கி கொண்டிருந்தாள்.
இதை எப்படி இந்த அக்கா எதிர்த்து கேட்காமல் இருக்கிறாள் என்று
தன் தமக்கையை பார்க்க, அவளோ கன்னங்கள்
சிவப்பேற, முகம் பூரிக்க, மெல்லிய
புன்னகையுடன் கனவுலகத்தில் மிதந்து கொண்டிருந்தாள்.
அதைக்கண்ட பூங்கொடிக்கு எரிச்சலாக இருந்தது.
நைசாக நழுவி, தன் தந்தையிடம்
சென்றவள், மாப்பிள்ளை வீட்டார் மீதான தன் அதிருப்தியை
சொல்ல, அவள் தந்தையோ
“நீ சின்ன பொண்ணு பாப்பா...உனக்கு நாட்டு நடப்பு தெரியாது. இத
நாங்க பார்த்துக்கிறோம்...” என்று புன்னகைத்து அவள் தலையை வாஞ்சையுடன் தடவி
கொடுத்தார்.
அதைக்கண்டு கோபம் பொங்கி வந்தது பூங்கொடிக்கு..!
“நானும் வளர்ந்துட்டேன். இப்ப பத்தாம் வகுப்பு படிக்கிறேன். ஏன்
நான் என் கருத்தை சொல்லக்கூடாதா? இந்த பெரியவர்கள்
எல்லாம் என்னத்த யோசிக்கிறாங்க?
அந்த மாமியார் வில்லி தன் பையனை விலைபேசிகிட்டிருக்கு. அதை
எதிர்த்து யாரும் கேள்வி கேட்காம மண்டைய மண்டைய ஆட்டிகிட்டு இருக்காங்களே..” என்று
உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தாள்
ஆனால் அவளால் உள்ளுக்குள் புலம்ப மட்டும்தான் முடிந்தது.
எப்படியோ பேசிபேசியே தணிகாசலத்தை சம்மதிக்க வைத்துவிட்டார்
வடிவு.
அவர் கேட்ட சீர்வரிசை எல்லாம் தடபுடலாக செய்து கல்யாணத்தை
நடத்தி வைத்தார் தணிகாசலம்.
அதோடு மூத்தமகளுக்கு செய்ய வேண்டியது முடிந்து விட்டது. இனி
அடுத்து இருக்கும் பிள்ளைகளுக்கு சேர்க்கலாம் என்று நிம்மதி மூச்சுவிட, அதன் பிறகுதான் அவருக்கு தலைவலி ஆரம்பமானது.
கல்யாணம் முடிந்ததும் அடுத்து தலைதீபாவளிக்கு மாப்பிள்ளைக்கு
சீர் செய்ய வேண்டும், தலைப்பொங்கள், தலைஆடி என அடுத்தடுத்து பண்டிகைகளும், அதுக்கு பொண்ணுக்கு செய்ய வேண்டிய சீர் வரிசையும் வரிசையாக வந்து
நிக்க, முழி பிதுங்கி போனார் தணிகாசலம்.
ஆனால் அதை எல்லாம் வெளிக்காட்டிக்கொள்ளாமல் தன் மகள் புகுந்த
வீட்டில் எந்த தொந்தரவும் இல்லாமல் சந்தோஷமாக வாழவேண்டும் என்று அவர்கள் கேட்டதை
எல்லாம் செய்து வந்தார்.
பத்தாதற்கு சீமந்த செலவு, பிள்ளைபேருக்கான
செலவு என அது வேற வந்து சேர்ந்து போனது. எப்படியோ இப்பொழுதுதான் கொஞ்சம் ஆசுவாசமாக
மூச்சுவிட முடிந்தது.
***
அன்று திங்கட்கிழமை..!
தெருவில் விளையாடிக்கொண்டிருந்த அன்பரசன் வேகமாக வீட்டிற்குள் ஓடி வந்தான்.
“அக்கா....பஸ் வந்திடும்...சீக்கிரம் வா...” என்று அழைக்க, சமையல் கட்டில்
தயிர்சாதத்தை கிளறி முடித்து, அதை டிபன்பாக்சில் அடைத்துக் கொண்டிருந்த
சிலம்பாயி வேகமாக அதை எடுத்துக்கொண்டு முற்றத்திற்கு விரைந்தவர்,
“அடியே...பூவு...எப்ப இருந்து நானும் கத்திகிட்டு இருக்கேன்.
இன்னும் கிளம்பாம என்னடி பண்ணிகிட்டிருக்க?” என்று தன் வெண்கலக் குரலில் ஹை பிச்சில் கத்தினார் சிலம்பாயி.
“இதோ ரெடியாயிட்டேன் மா...” என்று அறைக்குள் இருந்து குரல்
கொடுத்தாள் பூங்கொடி.
“ஏன் டி..ஒரு மணிநேரமா இதையேதான் சொல்ற. என்னமோ எட்டு மொழச்சீலையை இழுத்துக் கட்டறதைப் போல, இந்த தாவணியை மேல போட்டு இடுப்பில் சொருக இம்புட்டு நேரமா? “ என்று சிடுசிடுத்தார்.
“தாவணியை சொருகினா
மட்டும் போதுமா? காடு மாதிரி வளர்த்து வச்சிருக்க இந்த கூந்தலை
என்ன பண்றதாம்? இதுக்குத்தான் நான் முடியை வெட்டிக்கிறேன்றேன்.
நீதான் வெட்டவே கூடாதுனு தடா போட்டுட்ட. இதை சீவி சிக்கெடுத்து
ஜடை போடங்கேட்டி எனக்கு நாக்கு தள்ளுது....” என்று தன் அன்னைக்கு பதில் கொடுத்தவாறு, அவசர அவசரமாக இடைதாண்டி தொங்கிய தன் நீண்ட கூந்தலை, பின்னி சடையை போட்டவள், நுனியில் கொஞ்சமாக விட்டு
ஒரு ரப்பர் பேண்ட் ஐ போட்டுக்கொண்டாள்.
பிறகு சுற்றும் முற்றும் பார்த்து விட்டு யாரும் வரவில்லை என்று
தெரிந்து கொண்டு, அவளுடையை ட்ரங்க் பேட்டியை திறந்தாள்.
அதனுள் கை விட்டு எதையோ தேடி எடுத்தாள். அதை பார்த்ததும் அவள்
முகம் செந்தாமரையாய் மலர்ந்தது.
ஃபேர் அன்ட் லவ்லி ஐந்து ரூபாய் பாக்கெட்..!
இதை வாங்குவதற்கு அவள் எவ்வளவு சிரமப்பட்டாள் என்று அந்த
ஆண்டவனுக்குத்தான் தெரியும்.
பள்ளியில் இடைவேளையில் ஏதாவது தின்பண்டம் வாங்கி சாப்பிடவே காசு
இல்லை என்று ராகம் பாடும் சிலம்பாயி, ஃபேர் அன்ட் லவ்லி
வாங்கவேண்டும் காசு கொடு என்றால் கொடுத்துவிடுவாரா?
விளக்குமாறுதான் பறந்து வரும். அதனாலயே எப்படியாவது சொந்தமாக
காசு சேர்த்து தானாகவே அந்த அழகு கிரீமை வாங்கவேண்டும் என்று திட்டமிட்டாள்.
அதன்படி பென்சில் வாங்கவேண்டும், பேனா வாங்கவேண்டும்
என்று காசு கேட்டு அதை வாங்கும்பொழுது மீதியாகும் சில்லறையை தன் உண்டியலில் போட்டு
வைத்துக்கொள்வாள்.
சிலம்பாயி ஏதாவது மளிகை சாமான் வாங்க சொல்லி கடைக்கு அனுப்பினால், அதில் வரும் பத்து பைசா, ஐம்பது பைசா
சிலம்பாயி கைக்கு திரும்பாது.
பூங்கொடி உண்டியலுக்கு சென்று விடும். எப்படியோ இவ்வாறாக ஒரு
ஐந்து ரூபாய் சேர்க்கவே ஒரு வருடம் ஆகிவிட்டது.
சென்றவாரம்தான் தன் கல்லூரியை ஒட்டி இருந்த பெட்டிக் கடையில்
இதை வாங்கி கொண்டு வந்து யாருக்கும் தெரியாமல் அவளுடையை பெட்டியில் போட்டு பூட்டி
வைத்துக்கொண்டாள்.
யாரும், அதுவும் குறிப்பாக அவளை அடுத்து பிறந்த
குட்டிசாத்தான் மலர்க்கொடி கண்ணில் படவே கூடாது என்று ஒருமுறைக்கு இருமுறை அந்த
ட்ரங்க் பெட்டியை இழுத்து பார்த்து பூட்டி வைத்துக்கொள்வாள்.
இப்பொழுது அந்த க்ரீமை எடுத்துக்கொண்டு வேகமாக வந்தவள், அங்கிருந்த சிறிய, ரசம் போன முகம்
பார்க்கும் கண்ணாடியை எடுத்து பார்த்தவாறு, அந்த க்ரீமை கொஞ்சமாக பிதுக்கி முகத்தில்
பூசிக்கொண்டாள்.
கண்ணாடியை உற்று பார்க்க, உடனே அவள்
திடீரென்று வெள்ளியாகி விட்டதைப்போல பூரித்து போனாள்.
அதே நேரம் வெளியில் இருந்து அவள் அன்னை சிலம்பாயின் அர்ச்சனை
இன்னும் ஹைபிச்சில் கேட்க, அவசர அவசரமாய் நேற்று நெற்றியில் இருந்து பிய்த்து எடுத்து சுவற்றில்
ஒட்டி வைத்திருந்த ஸ்டிக்கர் பொட்டை எடுத்து தன் நெற்றியில் ஒட்டிக்கொண்டாள்.
பழைய செய்தித்தாளில் மடித்து வைத்திருந்த கருப்பண்ணசாமி
திருநீற்றை எடுத்து பொட்டுக்கு மேலாய் சிறு கோடாக வைத்துக்கொண்டாள்.
கழட்டி வைத்திருந்த கண்ணாடி வளையல்களையும் அணிந்து கொண்டு, மேல கிடந்த தாவணியை சரியாக போட்டுக்கொண்டு, பின் கண்ணாடியில் இப்படியும் அப்படியுமாக தன் உருவத்தை திருப்பி
பார்த்தாள் பூங்கொடி.
அவள் கண்ணுக்கு அழகாகத்தான் தெரிந்தாள்..!
ஆனாலும் ஏனோ அவளின் தோற்றத்தை , அதுவும் கரிய நிறத்தை
கண்டு அவளுக்கு கஷ்டமாக இருந்தது.
அதுவும் கல்லூரியில் அவளின் தோழிகள் எல்லாருமே நல்ல நிறம்.
அவர்களுடன் சேர்ந்து செல்லும்பொழுது, இவள் மட்டும்
தனியாக தெரிவதை போல இருக்கும்.
அதற்கு தகுந்தாற்போல எல்லா ஜொல்லு மன்னன்களும் இவளின் தோழிகளை
பார்த்து ஜொல்லுவிட, இவளை யாரும் கண்டு
கொள்வதில்லை.
அதை பார்க்கும்பொழுது அழுகை பொங்கி வரும்.
“எல்லாம் என் கலரால்தான். சை...நான் ஏன் அந்த வெள்ளச்சி
பொற்கொடியை போல, அந்த குட்டச்சி மலரைப்போல பிறந்து தொலைத்திருக்க
கூடாது? “ என்று
தனக்குள்ளே நொந்து கொள்வாள்.
அதனாலேயே இப்பொழுதெல்லாம் தன் தோழிகளுடன் வெளியில் செல்வதை
தவிர்த்து விடுகிறாள். இல்லையென்றால் வகுப்பறைக்குள்ளயே இருந்து கொள்வாள்.
எப்படியாவது மற்றவர்களைப்போல தானும் சிவப்பாகிவிட வேண்டும்
என்று வேண்டாத தெய்வம் இல்லை.
அந்த தெய்வங்கள் கண்ணை திறந்து பார்த்துவிட, அப்பொழுதுதான் இந்த அழகு கிரீமை பற்றிய விளம்பரத்தை அவங்க ஊர்
பஞ்சாயத்து டி.வியில் பார்த்தாள்.
அதை பார்த்ததும் அவளுக்குள் மின்னல் வெட்டியது.
தானும் இந்த கிரீமை போட்டுக்கொண்டாள் சிவப்பாகிவிடுவோம் என்று
எண்ணியவள் அதை எப்படி வாங்குவது என்று ஒரு ஐந்தாண்டு கால திட்டத்தை தீட்டி, அதை இப்பொழுது நிறைவேற்றியும் விட்டாள்.
முன்னால் வந்து விழுந்த முடிக்கற்றைகளை ஒதுக்கி
காதோரம் சொருகிக்கொண்டவள் மீண்டும் தன் முகத்தை கண்ணாடியில் பார்க்க, அழகு கிரீமின் உபாயத்தால் பளிச்சென்று ஒளிர்ந்தது அவள் முகம்.
மீண்டும் ஒரு முறை தாவணியை சரி பண்ணிக்கொண்டு இப்படியும்
அப்படியும் திருப்பி பார்த்தவள்
“சும்மா சொல்லக்கூடாது...நானும் பார்க்கிற மாதிரி நச்சுனுதான்
இருக்கிறேன்...” என்று வெட்கப்பட்டு சிரித்துக்கொள்ள, அந்த நேரம் திடீரென அறைக்குள் ஓடிவந்தாள் மலர்க்கொடி
அதே நேரம் கட்டிலில் கிடந்த அந்த அழகு கிரீமையும் பார்த்துவிட்டாள்.
அடுத்த கணம் அதிர்ந்துபோய்,
“அம்மா....” என்று அலற, அதைக்கேட்டு திடுக்கிட்டு திரும்பி பார்த்த பூங்கொடி, தன் தங்கையையும், அவள் பார்வை சென்ற
இடத்தையும் கண்டு கொண்டவள், நொடியில் அவள்
அம்மா என்று அலறியதற்கான காரணத்தை யூகித்து விட்டாள்.
அடுத்த நொடி தன் தங்கையின் வாயை கப் பென்று பொத்தியவள்,
“ஏய் குட்டச்சி...இப்ப எதுக்குடி இப்படி அலற? “ என்று முறைக்க, தன் வாயை இறுக்கி
மூடியிருந்த தன் தமக்கையின் கரத்தை பலம் கொண்ட மட்டும் போராடி விலக்கியவள்
“அக்கா... அம்மாக்கு இதெல்லாம் பிடிக்காது இல்ல. நீ எதுக்கு இதை
வாங்கின? அதுவும் எனக்கு தெரியாம ஒளிச்சு
வச்சிகிட்ட...இரு அம்மாகிட்டயே போட்டு கொடுக்கறேன்...” என்று இடுப்பில் கை வைத்து
முறைத்து பார்த்தாள் மலர்க்கொடி.
“ஐயோ..கருப்பண்ண சாமி...போயும் போயும் என்னை இந்த
குள்ளவாத்துகிட்ட மாட்ட வச்சிட்டியே..இவளை எப்படி சமாளிக்க? “ என்று மனதுக்குள் புலம்பியவள்,
“ஹீ ஹீ ஹீ நேத்துதான் டி வாங்கினேன். காலேஜ் விட்டு வந்த பொறவு
உன்கிட்ட காட்டலாம்னு இருந்தேன். அதுக்குள்ள நீயே பார்த்துட்ட... “ என்று கோபத்தை
விடுத்து அசட்டு சிரிப்பை சிரித்து வைத்தாள் பூங்கொடி.
“இதெல்லாம் ஏமாத்தற வேலை...இது தப்பு...நான் அம்மாகிட்ட
சொல்லுவேன்..” என்று எகிறினாள் தங்கை.
“அடியே...நீ மட்டும் இதை யாருக்கிட்டயும் சொல்லாம இருந்தினா
நான் இன்னைக்கு காலேஜ் விட்டு வரும்பொழுது உனக்கு குச்சி மிட்டாய் வாங்கிட்டு
வரேன்.. ஓகே? “ என்று
பேரம் பேசினாள் பூங்கொடி.
முதலில் அதை உதாசினபடுத்தினாலும், சென்றமுறை எதிர்த்து
விட்டுக்காரர் தோட்டத்தில் மாங்காய்
திருடி தன்னிடம் மாட்டிக்கொண்ட பூங்கொடி, தான் திருடியதை
வீட்டில் சொல்லக்கூடாது என்று மலர்க்கொடியிடம் பேரம் பேசி சொன்னதைப் போல குச்சி மிட்டாய்
வாங்கி கொடுத்தாள்.
நாக்கை சப்பு கொட்டி சாப்பிட்ட அந்த டேஸ்ட் மீண்டும் கண் முன்னே
வர, நாக்கில் எச்சில் ஊறியது சிறியவளுக்கு.
உடனே தன் அக்காவின் பேரத்துக்கு படிந்தாள். ஆனாலும் உள்ளுக்குள்
சந்தேகம் எழ,
“கண்டிப்பா வாங்கித்தருவ இல்ல? “ என்றாள் மீண்டும்
ஒருமுறை உறுதி செய்து கொள்ள...
“கண்டிப்பா வாங்கி தருவேன் டி...”
“ப்ராமிஸ் ? “ என்று மலர் தன்
கையை நீட்ட,
“உன்மேல சத்தியமா வாங்கி தர்ரேன்...போதுமா? “ என்று தன் தங்கையின் தலையில் அடித்து சத்தியம் செய்த பிறகுதான்
மலர்க்கொடி சமாதானம் ஆனாள்.
“அடியே...பஸ் போயிடும்...இன்னுமா சீவி சிங்காரிச்சு முடியல? “ என்று சிலம்பாயி மீண்டும்
ஹை பிச்சில் கத்த, உடனே அவசரமாக ஆங்காங்கே சிதறி கிடந்த நோட்டுப்
புத்தகங்களையும், ஒரு ஜாமென்ட்ரி டப்பாவையும், எடுத்துக்கொண்டு வேகமாக அறையை விட்டு வெளியில் வந்தாள்
பூங்கொடி.
பார்வை அனிச்சையாய் அங்கு சுவற்றில் மாட்டி வைக்கப்பட்டிருந்த, பழைய சுவர்கடிகாரத்திற்கு செல்ல, அது எட்டரை என காட்ட, அதிர்ந்து போனாள்.
இந்நேரம் அவள் பேருந்து நிறுத்தத்தில் நின்று இருக்க வேண்டும்.
எட்டறைக்கு முசிறி செல்லும் டவுன்பஸ் பேருந்து நிறுத்தத்திற்கு
வந்துவிடும்.
எப்பொழுதும் இந்நேரம் பேருந்து நிறுத்தத்தில் நின்று இருப்பாள்.
“இன்று கொஞ்சம், இந்த சிலம்பா சொல்லியதை
போல சீவி சிங்காரிக்க நேரம் ஆய்டுச்சோ..
இடையில் இந்த குட்டிச்சாத்தான் வேற வந்து அம்மாகிட்ட
சொல்லிடுவேனு ஷாக் கொடுத்துட்டா...அவ கிட்ட பேரம் பேசினதில் கொஞ்ச நேரம் போச்சு.
இப்ப எப்படி போவது? “ என்று அதிர்ந்து
போனாள் பூங்கொடி.
அவள் வீட்டிலிருந்து பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து செல்ல
வேண்டும், எப்படியும் பத்து நிமிஷம் ஆகும். ஓடிப்போனால்
கூட அஞ்சு நிமிஷம் ஆகும்.
இந்த பஸ் ட்ரைவர் வேற டான் னு எட்டறைக்கு எல்லாம்
வந்துவிடுவான். இப்ப எப்படி செல்வது அன்று கையை பிசைந்தாள் பூங்கொடி.
தன் மகளின் முகத்தில் வந்து போன அதிர்ச்சியை கண்டு கொண்ட
சிலம்பாயி, அவள் கையில் தயிர்சாத டப்பாவை திணித்தவள், மீண்டும் தன் அர்ச்சனையை முதலில் இருந்து ஆரம்பித்தார்.
“ஏன் டி...எரும மாடே... எப்ப இருந்து பஸ்க்கு நேரமாச்சுனு காட்டு
கத்து கத்திகிட்டிருந்தேன்..கொஞ்சமாவது காதுல வாங்கினியா?
இப்ப பார் பஸ்சுக்கு நேரமாச்சு...நீ ஆடி அசஞ்சு பஸ் ஸ்டாப்பிங்
போகறதுக்குள்ள , பஸ் போய்டும்...” என்று முறைத்தவர்
“அதுவும் நல்லதுக்குத்தான்...நீ காலேஜ்க்கு லீவ் போடு.
இன்னைக்கு நெல்லங்காட்டுல களை எடுக்க ஒரு ஆள் குறையுது, பேசாம இந்த வேஷத்தை எல்லாம் கலச்சுபுட்டு என்னோட களை எடுக்க
வயக்காட்டுக்கு வா...” என்று வில்லி சிரிப்பை சிரிக்க, அதைக்கேட்டு திடுக்கிட்டு போனாள் பூங்கொடி.
“ஐயையோ... களை எடுக்கறதா? அதுக்கு நான் நடந்தே
கூட காலேஜ்க்கு போயிடுவேன்...” என்று
சொல்லி முகத்தை சுளித்தபடி, வேகமாக வாயிலுக்கு ஓடி
வந்தாள்
அதே நேரம் டுப்டுப்டுப் என்று கரிய புகையை வெளித் தள்ளியவாறு, அந்த கிராமமே அதிரும்படி, சத்தமாக ஓசை எழுப்பியபடி
அங்கு வந்து நின்றது புல்லட் ஒன்று.
அனிச்சையாய் பூங்கொடியின் பார்வை அந்த புல்லட்டிற்கு செல்ல, அதில் தொடை வரைக்கும் ஏற்றி மடித்து கட்டிய அலுக்கு கைலி..., சாயம்போன அரைக்கை
சட்டையும்...எண்ணையே காணாத பரட்டை தலை... முறுக்கிவிடப்பட்ட கொடுவா மீசை.
பரந்து விரிந்த மார்பு... முறுக்கேறிய வலிய புஜங்கள்...உருட்டு கட்டையை போன்று உருண்டு திரண்டிருந்த இறுகிய வலிய கால்கள்... என வாட்ட சாட்டமாய் அமர்ந்திருந்தவனை கண்டதும், தன்னை மறந்து அருவருப்பில் முகத்தை சுருக்கினாள் பூங்கொடி....!
Comments
Post a Comment